Site icon சொல்வனம் | இதழ் 370 | 12 ஜூலை 2026

‘நவீனக் கண்ணன்’ – இந்திரா பார்த்தசாரதியின் கிருஷ்ணா, கிருஷ்ணா.

பரந்த இலக்கிய அனுபவமும், பிறமொழி இலக்கியத் தேர்ச்சியும் கொண்ட  தமிழ்ப்பேராசிரியரும், எழுத்தாளருமான திரு இந்திராபார்த்தசாரதி அவர்கள், நாவல், குறுநாவல், நாடகம் என்று படைப்பிலக்கியத்துறைகளில் குறிப்பிடத்தக்க சுவடுகளைப் பதித்திருப்பவர். அந்தப் பங்களிப்புக்காகவே சாகித்திய அகாதமி, சரஸ்வதி சம்மான், பத்மஶ்ரீ போன்ற விருதுகளைப் பெற்றிருப்பதோடு, தனித்துவம் மிக்க சாகித்திய அகாதமி ஃபெலோஷிப்புக்கும் சொந்தக்காரர்.

அவர் படைத்திருக்கும்  வித்தியாசமான ஒரு ஆக்கம் “கிருஷ்ணா கிருஷ்ணா”. வழக்கமான தனது   போக்குகளிலிருந்து சற்றே வேறுபட்டு, அ-புனைவா,புனைவா என்று இனம் பிரித்துச் சொல்ல முடியாதபடி மிகுந்த சுவாரசியத்தோடு அவர் இதை  உருவாக்கியிருக்கிறார்.  

பாகவதம், மகாபாரதம் என்ற இரண்டிலும் இடம்பெறும் கண்ணனின் பாத்திரத்தைப் பிரித்தெடுத்து, அவற்றில் வெளிப்படும் அவனது பன்முக ஆளுமையை அலசி ஆராய்வதோடு, மேலே குறிப்பிட்டுள்ள புராண, இதிகாசங்களின் முக்கியமான கட்டங்களையும் ஆங்காங்கே லாவகமாக இணைத்து அவற்றையும் தவறவிடாமல் படித்துவிட்ட உணர்வை வாசகர்களுக்கு ஏற்படுத்தக்கூடிய அரிய படைப்பு இது. கண்ணனை மையப்புள்ளியாக்கியபடி அந்த நூல்களின் முதன்மையான சாரத்தை- அவற்றின் அடிநாதமான உணர்வுப் போராட்டங்களையும், அறத்துக்கும் மறத்துக்கும் இடையிலான முரண்பாடுகளையும் நூலாசிரியர் வாசகர்களிடம் முழுமையாகக் கடத்தி விட்டிருப்பதே அதற்கான காரணம்.

நம் மனங்களில் ஒரு குழந்தையாகப் பதிவாகி இருக்கும் கண்ணனுக்குப் பல முகங்களும், பல  பரிமாணங்களும். உண்டு. இராமனைப் போன்றஒற்றைப்படைத் தன்மை கொண்டவன் அல்ல அவன்.  “ராமாவதாரத்தில் ஒருவழிப்பாதையிலேயே சென்று எனக்கு அலுத்துவிட்டது,இதற்கு மாறுதலாகத்தான் கிருஷ்ணாவதாரம் எடுத்தேன்” என்று அதை அவன் கூற்றாகவே சொல்லவும் வைத்திருக்கிறார் இ.பா. பாகவதத்தில் பெரும்பாலும் தீராத விளையாட்டுப் பிள்ளையாகத் திரியும் கண்ணன், பாரதத்திலோ அரசியல் விளையாட்டில் முக்கியமான அங்கம் வகிக்கும் மதியூகியாகத் திகழ்கிறான். கண்ணனின் செயல்பாடுகளில் ஐயங்களும், கேள்விகளும் தலை நீட்டும் இடங்கள் இந்த இரண்டு நூல்களிலுமே ஏராளமாக உண்டு. அவற்றிற்கெல்லாம் விடை தேடவும் இந்நூல் முயற்சித்திருக்கிறது. அந்த விடைகளை விறுவிறுப்பான நடையில், இலகுவான மொழியில், தனக்கே உரிய மெலிதான கிண்டலோடு இந்திராபார்த்தசாரதி  சொல்லிக்கொண்டு போவதால் நூற்றுக்கணக்கான கிளைக் கதைகளும், தத்துவ விளக்கங்களும் நூலில் இடம் பெற்றாலும் கூட அவை துருத்திக் கொண்டோ எளிதான வாசிப்புக்குத் தடையாக உறுத்திக்கொண்டோ நிற்காமல் ஒரு நாவலுக்குரிய விறுவிறுப்போடும், வேகத்தோடும் செல்கிறது ‘கிருஷ்ணா, கிருஷ்ணா’.  “உபதேசம் என்று எதுவும் இல்லாமல் கவனமாக எழுதி இருக்கிறேன்” என்று தன் முன்னுரையில் இ.பா,.வும் இதுபற்றிக் குறிப்பிடத் தவறவில்லை. 

கிருஷ்ணாவதாரத்தின் முடிவு, ஜரா என்ற வேடன் எய்யும் அம்பால்  நிகழ்கிறது. அந்த இறுதிக் கட்டத்தில் அவன் கேட்கும் கேள்விகளுக்கு விடையாகக் கண்ணன் பல தன்னிலை விளக்கங்களை அளிக்கிறான். அதை நாரதர், தனக்கே உரிய பாணியில் விவரிப்பதாக இந்த நூல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தொடக்கம், நடு, முடிவு என்ற வழக்கமான நேர்கோட்டுக் கதைப்பாணியைத் தவிர்த்து விட்டுப் பாரதத்திலும் பாகவதத்திலும் கண்ணன் ஆற்றும் பங்கோடு அவனது தனிப்பட்ட வாழ்க்கையையும் இணைத்து,  ‘நான்லீனியர்’ முறையில் முன்னும் பின்னுமாய்த் தாவித் தாவிச் செல்லும் வகையில்  கதைப்பின்னலை அமைத்திருப்பது இந்திரா பார்த்தசாரதி அவர்களின் கதைக்கூறு உத்தியின் உச்சம், ‘கிருஷ்ணா கிருஷ்ணா’-வின் தனித்துவமும் அதுவே. 

இதன் கதைசொல்லியாகிய நாரதர், தகவல்களைக் கொண்டு செல்லும் ஒரு நபராக, எல்லாக் காலங்களிலும் சஞ்சரிக்கக் கூடிய ஒரு பத்திரிகையாளராகச் சித்தரிக்கப்பட்டிருப்பதால் பத்திரிகைக்காரருக்கே உரிய நையாண்டி, விமரிசனம் ஆகியவற்றோடு மாடர்னிசம், போஸ்ட்மாடர்னிசம், எக்ஸிஸ்டென்ஷியலிசம் என்று தற்காலப்போக்குகளைக்  கலந்து சொல்வதற்கான வாய்ப்பும் இந்தப் படைப்புக்குக் கிடைத்து விடுகிறது.

“ ‘நாராயணா, நாராயணா!’ என்று அடிக்கடி உச்சரித்துக் கொண்டே திரிவதாக உங்கள் திரைப்படங்களில் என்னை stereotype ஆக்கிவிட்டீர்கள். அந்த உருவத்துக்கும் எனக்கும் எந்தவிதச் சம்பந்தமும் கிடையாது.  நான் உங்கள் பத்திரிகைக்காரர்களைப் போல், ‘Hi! What’s happening?’ என்றுகேட்பவன்.. .எனக்கு அசுரர்கள், தேவர்கள் எல்லாருமே நண்பர்கள். எனக்கு Z category security எப்பொழுதுமே தேவைப்பட்டதில்லை’. என்கிறார் இதில் வரும் நாரதர். 

அதனால்தான் யாதவர்கள்,மதுராவிலிருந்து துவாரகைக்கு இடம் பெயர்வதை

 ‘எகிப்திலிருந்து யூதர்கள் வெளியேறிய exodus போல’ என்றும்,

பாஞ்சாலியின் சுயம்வர ஏற்பாட்டை, 

‘cricket விளையாட்டில் செய்யும் match fixing மாதிரி இருந்தது’ என்றும்,

யயாதி தன் மகனுடன் முதுமையை மாற்றிக்கொள்ள நினைப்பதை 

‘ஒரு மனிதனுடைய பருவங்கள் அந்தக் காலத்தில் transferable ஆகஇருந்திருக்கின்றன. இப்பொழுது clone செய்வதைப்பார்த்துக்கொண்டிருக்கும் நீங்கள் இதையும் நம்பித்தான் ஆக வேண்டும்’ என்றும்,

சமகாலப் போக்கில் அவர் சொல்லும்போது அவற்றைக் கால முரண் என்று கருதாமல்  ஏற்றுக்கொண்டு  ரசிக்க நம்மால் முடிகிறது.

 ‘பத்திரிகையாளன் என்றால் எல்லாத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருக்க வேண்டாமா’ என்று நாரதரே அதற்கு நியாயம் கற்பிக்கவும் செய்கிறார். பழங்கதைகளைப் புதிய தட்டில், புதிய அணுகுமுறைகளோடு பரிமாறும் இ.பாவின் நேர்த்தியான இந்த உத்தி நம்மை வியக்க வைப்பது .

“கிருஷ்ணன் ஒவ்வொரு காலத்துக்கும் அந்தந்தக் காலத்துக்கு ஏற்ப அர்த்தப்படும்படியான பல பரிமாணங்களை உடைய மகாபுருஷன். நீ இந்தக்கதையைச் சொல்லும்போது இந்த அர்த்தப் பரிமாணங்கள் கேட்கின்றவர்களுக்குப் புலப்பட்டால்தான் கிருஷ்ணனைப் புரிந்துகொண்டதாக அர்த்தம்” என்று ஜரா, நாரதரைப் பார்த்துச் சொல்வது, இந்த நூலை எழுதும்போது  இ. பா. தனக்குத்தானே வகுத்துக் கொண்ட நியதியாகவே ஒலிக்கிறது. அந்த நியதியை மிகவும் துல்லியமாக செயலாக்கி எல்லாக் காலங்களுக்கும் உரிய நாயகனாக இந்தப் படைப்பில் கண்ணனை நிலை நிறுத்தி இருக்கிறார் அவர்.

முழுமையான தீமை/நன்மை என்றோ, முழுக்க முழுக்க நல்லவர்/கெட்டவர் என்றோ கண்ணன் எந்த  வரையறையும் செய்து கொள்வதில்லை. அதுபோலவே இதுதான் தருமம் என்று எந்த இலக்கணம் வகுத்துக் கொள்வதுமில்லை. மல்யுத்த விதிகளுக்கு மாறாக துரியோதனனின் தொடையில் அடிக்குமாறு பீமனைத் தூண்டியது, கர்ணனின் தேர்ச்சக்கரங்கள் இறங்கிவிட்ட நிலையில் அவன் மீது அர்ஜுனனை அம்பு தொடுக்கச் செய்தது. ஜராசந்தனின் உடல் எப்படிக் கூறு போட்டாலும் ஒட்டிக்கொள்ளும் என்பதால், துரும்பைக் கிள்ளித் தலைகீழாக மாற்றிப்போட்டு சங்கேதம் காட்டியது என்று தர்மத்துக்கு மாறான பல  செயல்களைத் தான் செய்ய நேர்ந்ததற்கான காரணத்தைப் பலரிடமும் இவ்வாறு விளக்குகிறான் கண்ணன்.

“யுத்தம் என்கிற போது தர்மம் அதர்மம் என்று எதுவும் இல்லை. நீ ஆடும் ஆட்டத்தைப் பார்த்து அதற்கேற்ப ஆட்ட விதிகளைப் புதுப்பித்துக்கொண்டு ஆடுகிறேன் நான். இதுதான் என்னுடைய தர்மம். உன் தர்ம விதிகளுக்கு ஏற்பத்தான் நான் என் தர்ம விதிகளை அமைத்துக் கொள்ளவேண்டியிருந்தது. வாழ்க்கை என்பது ஒரு சதுரங்க ஆட்டம். நீ காய்களை நகர்த்துவதற்கு ஏற்பத்தான் நானும் காய்களை நகர்த்தியாக வேண்டும். இதில் உணர்ச்சிகளுக்கு இடமே இல்லை ” என்பதே அவன் முன்வைக்கும் வாதம்.

எந்த தர்ம வரம்பையும் கடந்து தீமையை மாய்க்க வேண்டும் என்ற உத்வேகத்தைக் கண்ணனுக்கு அளிப்பது, கௌரவர் அவையில் பாஞ்சாலிக்கு இழைக்கப்பட்ட அநீதியே. மரணப் படுக்கையில் இருக்கும் பீஷ்மர்,

“நீ நினைத்திருந்தால் இந்தப் போரைத் தடுத்திருக்க முடியாதா” என்று கேட்கும் போது 

“அரை நிர்வாணத்துடன் ஒரு பெண் உன்னிடம் நியாயம் கேட்டபோது உன்னால் என்ன செய்ய முடிந்தது? பெண்களுக்குக் கொடுமை இழைத்துவிட்டு யாராலும் தப்பித்துக் கொள்ள முடியாது. இதைத் தவிர வேறு தர்மம் எனக்குத் தெரியாது” என்பதே கண்ணன் சொல்லும் விடையாகிறது.

நூல் முழுவதும் பெண்களின் உற்ற தோழனாகவே கண்ணன் வருகிறான்.  கணவன் மனைவியாக இருந்து… காதலுக்கு விளக்கம் காண்பது ஒருவகைப் பரிமாணம். சகோதரியாக, சிநேகிதியாக, தாயாக இன்னும் பல பரிமாணங்களில் காதலுக்கு விளக்கம் காணமுடியும். உணர்வுகளின் ஒத்த இசைவே காதல்… என் உதவி எப்பொழுது தேவைப்படுகிறதோ அப்பொழுது நான் அங்கிருப்பேன். இதுதான் உண்மையான காதல்’ என்று தன் மீதுகொண்ட காதலை வெளிப்படுத்தும் பாஞ்சாலி உட்பட அனைவருக்கும் புது விளக்கம் தருகிறான் கண்ணன். பெண்ணினத்தின் மீது கண்ணன் கொண்ட பெருங்கருணையே அவர்களுக்கு விடுதலை அளிக்கும் ராசலீலையாக மலர்கிறது.

ஒவ்வொரு கோபிகையும், குழலிசைத்து நடனமாடிய கிருஷ்ணனிடம் அவரவர் கற்பனையில் விரிந்த இலட்சிய புருஷனையே கண்டதாகச்  சொல்கிறார் இ.பா.

700 ஸ்லோகங்களாக விரியும் கீதையைப் போர்முனையில் சொல்லிக்கொண்டிருக்க முடியுமா என்பதற்கும் விளக்கம் தருகிறது இந்த நூல்.  “வார்த்தைகள் உதவியின்றி மனமும் மனமும் வெறும் எண்ண மொழியில் பேசினால் இந்த உரையாடல் நிகழ அதிகபட்சம் ஐந்து நிமிஷங்கள் ஆகும்….நீங்கள் இப்போது சொல்கிறீர்களே அதுவே தான் கிருஷ்ணன் சொல்லும் ‘எண்ண மொழி’- டெலிபதி” என்று நாரதர் அதை வியாக்கியானம் செய்கிறார். போர்முனைக்கு வந்தபோது அர்ஜுனனுக்கு நேர்வது ஒரு ‘எக்ஸிஸ்டென்ஷயலிஸ்டிக் டைலமா’ என்று கூறும் இ.பா., “செய்கைதான் எல்லாவற்றுக்கும் தீர்வு, மனப்போராட்டம் என்பது காரியம் மேற்கொள்ளாமல் இருப்பதற்கான மனச்சமாதானம்” என்பதையே கண்ணன் கீதையாக  உரைப்பதால் அது எந்த காலத்துக்கும் பொருந்தி வரும் ஒரு அரசியல் ‘மேன்யுவல்’ ஆவதையும் அதனாலேயே கம்யூனிஸ்ட் தோழர் டாங்கே  போன்றவர்களும் கூட அதிலிருந்து மேற்கோள் காட்டுவதையும் சுட்டிக்காட்டிச் செல்கிறார்.

‘’உலகச் சரித்திரத்தில் மகோன்னதமான மகாபுருஷர்களின் கதைகளைப் பார்க்கும்போது, அவர்களைச் சுற்றிக் கண்ணுக்குப் புலப்படாத ஒரு துன்பியல் வலை சூழ்ந்திருப்பதை நாம் உணரலாம். அவர்கள் விதியின் குழந்தைகள்” என்று சொல்லும் கண்ணன், கர்ணன், பீஷ்மன்  இருவரையும் கிட்டத்தட்ட ஒரே தட்டில் வைத்து நிறுக்கிறான். இருவருமே சூழ்நிலைக் கைதிகளாகித் தங்கள் மனசாட்சியின் உட்குரலைக் கடந்து செல்பவர்கள். அநீதியான செயல் என்று உணர்ந்தாலும் அரச நீதியைக் காப்பதற்காகவே பிறந்தவனாகத் தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் பீஷ்மன், அநீதியின் பக்கம் நின்று போராடுகிறான். அதேபோல நட்புக்காக அநியாயத்தின் பக்கம் சேரவேண்டியதாகி விடுகிறது கர்ணனுக்கு. கிரேக்கத் துன்பவியல் நாடகங்களில்வரும் கதாநாயகர்களோடு அவர்களை ஒப்புநோக்கிப் பார்க்கிறார் இ.பா.

கண்ணனின் கதை ஜராவின் அம்பினால் முடிவதற்கு முன்பு, தன் அன்புக்காதலி ராதாவை இறுதியாகத் தேடிப் போகிறான் கண்ணன். அங்கே அவன் காண நேர்வது ராதைப் பாட்டியைத்தான். இளமைப் பருவத்தில் அவனோடு கொஞ்சி விளையாடி,மழலை பேசி மகிழ்ந்திருந்த அந்த இளைய ராதையை அல்ல. அவனுள் நீக்கமற நிறைந்திருக்கும் அந்த இளம்பெண்ணைத் தொலைத்துக் கொள்ள விரும்பாமல் அவளைப் பார்க்காமலே திரும்பிவிடுகிறான் அவன்.  ‘மூப்பு இளமை இதையெல்லாம் சரீரத்துக்குத்தான், ஆத்மாவுக்கு இல்லை’ என்று அர்ஜுனனுக்கு உபதேசித்துவிட்டுத் தானே இவ்வாறு நடந்துகொண்டுவிட்டதை ஒரு கணம் நினைத்துப் பார்க்கவும் செய்கிறான். இந்த இறுதிக் கட்டம், துண்டு துண்டான நிகழ்வுகளும் குட்டிக்கதைகளும் நிறைந்த இந்த நூலின் ஒருமைப்பாட்டுக்கு உதவுவதோடு, இதற்கு நாவல் என்ற முழுமையான வடிவு தரவும் உதவுகிறது.

இயல்பிலேயே ஒரு நல்ல கதை சொல்லியான இந்திரா பார்த்தசாரதியின் எழுத்துக்கு வாய்த்த வரங்கள் எள்ளலும், எளிமையான  கதை மொழியும். அவற்றோடு கண்ணனின் கதைகளும் சேர்ந்து கொள்ள ரசனைக்குப் பஞ்சமே இல்லாமல் விரைவான வாசிப்புக்கேற்றபடி ஓட்டமெடுத்துச் செல்கிறது ‘கிருஷ்ணா கிருஷ்ணா’. எந்தவிதமான ஆக்கிரமிப்பாக இருந்தாலும் அதை எதிர்க்கின்ற கலகக்காரனாகத் தன்னைப் பிரகடனம் செய்து கொள்ளும் கண்ணனின் கதைகள் முழுவதையும் ஒரு புதிர் விளையாட்டைப் போலக் கலைத்துப் போட்டுச்  சமகால நோக்கில் அவற்றை மறுவாசிப்பு செய்திருக்கிறது இந்தப் படைப்பு. ‘எந்தக் கோட்பாடாக இருந்தாலும் சரி, அது காலத்துக்கு ஏற்றவாறு தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும்’ என்று நூலின் ஓரிடத்தில் சுட்டிக்காட்டுவது போல், மரபார்ந்த கதைகளை  அடிப்படையாகக்கொண்டபடி, அவற்றிலிருந்து வேறுபட்ட ஒரு நவீன, பின்நவீனத்துவ கண்ணனைக்  ‘கிருஷ்ணா கிருஷ்ணா’-வில் கண்டுகொள்ள வைத்திருக்கிறார்  இந்திரா பார்த்தசாரதி.


எம் ஏ சுசீலா 

எழுத்தாளரும்,மொழிபெயர்ப்பாளருமான  எம் ஏ சுசீலா, மதுரை, பாத்திமாக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருப்பவர். ஐந்து  சிறுகதைத் தொகுப்புக்கள், ‘யாதுமாகி’, ‘தடங்கள்’ ‘ அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்..’ என்ற மூன்று நாவல்கள், ஆறு கட்டுரைத் தொகுப்புகள், ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’, ‘அசடன்’, ‘வெண்ண்ணிற இரவுகள்’ ‘சிறுமைகளும் அவமதிப்புகளும்’ உள்ளிட்ட 14 மொழிபெயர்ப்புக்கள் ஆகிய 28 நூல்கள் தமிழ் இலக்கியத்துக்கான இவரது  பங்களிப்புகள். ‘அசடன்’ நாவலின் மொழிபெயர்ப்புக்காக 2013 ஆம் ஆண்டில் கனடா இலக்கியத் தோட்ட விருது, நல்லி- திசை எட்டும் விருது, எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கும் ஜி யூ போப் விருது ஆகிய மூன்றும் இவருக்கு வழங்கப்பட்டன. மணல் வீடு இலக்கிய வட்டம் வழங்கிய அமரர் ராஜம் கிருஷ்ணன் வாழ்நாள் சாதனையாளர் விருது (2018), விஷ்ணுபுர இலக்கிய வட்டமும் சென்னை ரஷ்ய கலாச்சார மையமும் நடத்திய பாராட்டு விழாவில் ‘தஸ்தயெவ்ஸ்கியின் தமிழ்க்குரல்’ என்னும் பாராட்டுத் தகுதி (2018), கோவை விஜயா வாசகர் வட்டம் வழங்கும் மொழியாக்கத்துக்கான விருது (2022) ஆகியவற்றையும் பெற்றிருக்கிறார். சொல்வனம் இணைய இதழில் தொடர்ந்து சிறுகதைகளும், கட்டுரைகளும், மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும் எழுதி வருகிறார்.

Exit mobile version