- ஹைக்கூ – ‘அ’ (あ) முதல் ‘ன்’ (ん) வரை
- ஹைக்கூ – ‘அ’ (あ) முதல் ‘ன்’ (ん) வரை – 2
- புறாவின் அழைப்பு
- காகமும் அழகு
- வாளைத் துறந்த சாமுராய்
- நடவுப் பாடல்
- அறுந்த பட்டம்
- கிளைக்கு உயரும் மலர்
- படுக்கை வரையில் பனி
- பிள்ளையின்மை
- முதற்பனி
- தலைக்குடைகள்
- உடைபட்ட ஊன்றுகோல்
- மரமேறும் தவளை
- பிள்ளையிழப்பு
- தனிமையும் அழைப்பொலியும்
- தும்பியின் பிம்பம்
淋しさに
又銅鑼打つや
鹿火屋守
சபிஷிசனி
மதாதோராஉட்சுயா
கபியாமோரி
கவிஞர்: ஹாரா செக்கிதெய் (1886 – -1951)
அழைப்புமணி எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல் தீண்டவேயில்லை
கண்ணில் வெந்நீரை வார்ப்பேன்
‘பூவே பூச்சுடவா’ என்னும் திரைப்படத்தில், இளையராஜாவின் இசையில் உருவான வைரமுத்துவின் பாடல் இது. ஒரு கதாபாத்திரம் தனிமையில் இருப்பதையும், யாருக்காகவோ காத்திருப்பதையும் உணர்த்த ‘அழைப்பு மணி ஓசை’ பாடலில் ஒலித்தது. யார் வீட்டில் அழைப்பு மணி ஒலித்தாலும், அது தனிமையில் இருப்பவரைத் தன் வீட்டின் மணியாக இருக்குமோ என்னும் எதிர்பார்ப்பில் வாசலத் திறந்து பார்க்கவைக்கிறது. சில நேரங்களில் தனிமை கொடியது, யாரையேனும் எதிர்பார்ப்பதும், யாராவது வந்து தனிமையைப் போக்குவார்களா என்னும் நினைப்பில் காத்திருப்பதும் அதனினும் கொடியது, காத்திருந்து ஏமாறுவது அதனினும் கொடியது.
‘பூவே பூச்சூட வா’வில் திரைப்பாடலில் ஒலித்த அழைப்பு மணி, ஜப்பானில் தனிமையில் இருந்த ஒரு காவலாளிக்காக ஹைக்கூவில் ஒலித்திருக்கிறது.
வனத்தின் நடுவில் அமைந்திருக்கும் காவல் இல்லம். ஜப்பானிய மொழியில் அதன் பெயர் ‘கபியா’. தமிழில் அது பரண் என்னும் காவல் இல்லம். இது தமிழ் மொழியும் ஜப்பானிய மொழியும் கைகுலுக்கும் இடம் மட்டுமல்லாது, வயலில் விளைந்தவற்றை விலங்குகளும் பறவைகளும் உண்டு அழித்துவிடாதபடிக் காக்கும் குறிஞ்சி நிலத்து வயற்காவல் செயல்பாட்டிலும் ஜப்பானிய ‘கபியா’ காவல் இல்லம் கைகுலுக்கிக்கொள்ளும் இடம். பரண் மரத்தின் மீது, உயர்ந்த இடத்தின் மீது அமைக்கப்படுகிறது, கபியாவும் உயர்த்தப்பட்ட நிலத்தில் அமைக்கப்படுகிறது. இரண்டுக்கும் அமைப்பின் அடிப்படையில் உள்ள வேறுபாடு, பரண் தமிழ் நிலப்பரப்பின் தட்பவெப்பத்துக்கு ஏற்பத் திறந்த அமைப்பிலும், கபியா ஜப்பானிய நிலப்பரப்பின் சூழலுக்கு ஏற்ப காவல் வீடாகக் கதவுகள் கொண்ட அமைப்பிலும் இருக்கும்.
சங்க இலக்கியமான நற்றிணையில் பரண், காவல் இல்லம், ‘கபியா’, இதணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘காரரும் பவிழ்ந்த கனிவாய் வேங்கைப்
பாவமை இதணம் ஏறிப் பாசினம்
வணர்குரற் சிறுதினை கடியப்
புணர்வது கொல்லோ நாளையும் நமக்கே’ (நற்றிணை)
குறிஞ்சி நிலத்துப் பாவையர் ‘இதணம்’ என்னும் பரணில் அமர்ந்து தாங்கள் விளவித்த தினைப்புனத்தைப் பறவைகள் கொத்திச் செல்லாதவாறு காவல் காத்தனர் என்பது செய்தி. இது பகலில் நடப்பது.
ஜப்பானிய ‘கபியா’ விலங்குகள், குறிப்பாக மான்களிடமிருந்தும் காட்டுப்பன்றிகளிடமிருந்தும் விளைநிலத்தைக் காப்பதற்குக் காவல் இருக்கப் போடப்படும் காவல் இல்லம். இரவில் அங்கு தனிமைச் சூழலில் காவலாளி இருப்பார்.
பரணில் குழுவாக அமர்ந்து மகளிர் காவல் காப்பதும், இரவில் கபியாவில் தனிமையில் காவலாளி இருப்பதும் அந்த இரண்டுக்கும் இடையில் உள்ள முக்கியமான வேறுபாடு. அந்த வேறுபாடான ‘தனிமை’ இந்த ஹைக்கூவில் சுட்டிக்காட்டப்படுகிறது.
இதன் முதல் அடி தனிமையில் என்று தொடங்குகிறது. 淋しい சபிஷியி என்னும் சொல் தனிமையைக் குறிக்கும். 淋 என்னும் காஞ்சியை விரித்து ஹிராகனாவில் எழுதினால் அது ச (さ), பி (び) சபி さび என ஈரெழுத்துகளாகும், அதனுடன் ஷி (し), யி (い) சேர்ந்து சபிஷியி – தனிமை. இதில் ‘யி’ திரிந்து ‘ச’ (さ) வாகி, அதனுடன் நி (に) என்னும் ‘இல்’ இணைகையில் அது தனிமையில் என்னும் வடுவம் பெறுகிறது.
淋しさに – さびしさに – ச பி ஷி ச னி – தனிமையில். தனிமையை முதல் அடியில் ஹைக்கூ காட்சிப்படுத்துகிறது.
யாருடைய தனிமை?
‘கபியாமோரி’யின் தனிமை என தற்கான விடை மூன்றாம் அடியில் கிடைக்கிறது.
கபியா – பரண், காவல் இல்லம், மோரி – காப்பாளர். கபியாமோரி – பரண் காவலன்.
மேற்சொன்னபடி, கபியா என்னும் ஜப்பானியச் சொல் எளிமையாகப் பரண், காவல் இல்லத்தைக் குறிப்பிட்டாலும், இதனுடைய காஞ்சி வரிவடிவம் மூன்று வெவ்வேறு குறியீடுகளால் உருவானது.
முதல் குறியீடு மான்களைக் குறிக்கும் 鹿 க (か) என்னும் ஹிராகனாவின் காஞ்சி வடிவம் மானைக் குறிப்பிடும் சொல்லாகும். இந்தக் காஞ்சி வடிவம் தனித்து நிற்கையில் மான் என்றே பொருள்படும். இரண்டாம் காஞ்சி 火 (び) பி (B அல்லது P) நெருப்பைக் குறிக்கும். இப்படிச் சொல்லில் இணையாமல் தனித்து நின்றால் இது நெருப்பையே சுட்டும். மூன்றாவது காஞ்சி வடிவம் 屋 யா (や) வீடு, கடை, கூரையுள்ள இடத்தைக் குறிக்கும்.
அடிப்படையில் இந்தச் சொல் ‘மான் + நெருப்பு + வீடு’ என மூன்றும் ஒன்றாகச் சேர்ந்து, மான்களை விரட்ட நெருப்புப் புகை உண்டாக்கப்படும் இல்லம் என்னும் நீண்ட பொருளைக் காஞ்சி எழுத்துருவால் சுட்டி, ஹிராகனாவிலும் ஒலிப்பிலும் ‘கபியா’ என ஈரசையில் காவல் இல்லம் அல்லது ‘பரண்’ என்பதை எளிமையாகக் குறிக்கிறது.
கபியாவைத் தொடர்ந்து வரும் காஞ்சி வடிவம் 守 மோரி காவலரைக் குறிக்கும். குழந்தைகளைப் பராமரிப்பவரும் ‘மோரி’, ஒன்யோமி என்னும் ஒலிப்புமுறையில், மமோரி, மோரி என இரண்டு வகையில் இந்த காஞ்சி எழுத்துரு ஒலிக்கப்படுகிறது. காப்பு கட்டுவதையும் ஜப்பானியர்கள் மமோரி என்றே குறிப்பிடுவர். மரியாதைக்குரிய விகுதியாக ‘ஓ’ சேர்த்து ‘ஓமமோரி’ எனக் காப்பு கட்டுவதைச் சொல்வர். காப்பு, தாயத்து, மாலை, மோதிரம் என மந்திரித்தோ, நம்பிக்கையின் அடிப்படையிலோ ஆபத்திலிருந்து காப்பதற்கு அணியும், வைத்திருக்கும் அனைத்தும் ‘மமோரி’. மோரி, இந்த ஹைக்கூவில் காப்பாளர் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கபியாமோரி – காவல் இல்லக் காப்பாளர்.
முதலடியும் மூன்றாம் அடியும் உணர்த்துவது,
தனிமையில்
. . .
காவல் இல்லக் காப்பாளர்.
இரண்டாம் அடியில், அழைப்பு மணி ஒலிக்கிறது. மூன்று சொற்களைக் கொண்ட அடி இது. மீண்டும் (மாதா) + அழைப்புமணி (தோரா) + அடிக்கிறது (உட்சு) யா.
又 மாதா – ‘ஒன்ஸ் மோர்’ – ரிப்பீட் – மீண்டும், ம (ま), த (た) என இரண்டு ஹிராகனாக்களைக் கொண்ட சொல்.
銅鑼 சிக்கலான அமைப்புள்ள காஞ்சிகள். முதல் காஞ்சி 銅 ஒன்யோமி ஒலிப்பு முறையில் தோ (ど) என ஒலிக்கும். இதன் பொருள் தாமிரம் (copper). இரண்டாவது காஞ்சி 鑼 ரா (ら) ஒன்யோமி முறையில் ஒலிக்கும். இதன் பொருள் மணி. 銅鑼 -どら – தோரா, தாமிர மணி. இது வீட்டிலிருக்கும் அழைப்புமணியல்ல, காவல் இல்லத்திலிருக்கும் தாமிர மணி.
打つ – இது சிக்கல்கள் இல்லாத எளிமையான காஞ்சி எழுத்துரு. 打 உ (う) + ட்சு (つ) – உட்சு – அடித்தல், அடிக்கும். யா (や) அசைச்சொல்.
இரண்டாம் அடி, மாதாதோராஉட்சுயா. மாதா – மீண்டும், தோரா – தாமிர மணி, உட்சுயா – அடித்தது. மீண்டும் தாமிரமணி ஒலித்தது அல்லது மீண்டும் தாமிரமணி அடித்தது என இரண்டு வகையாக மொழிபெயர்க்கலாம்.
இரண்டாம் அடியில்தான் ஹைக்கூவின் கரு இருப்பதாக ஜப்பானிய உரையாசிரியர்கள் கருதுகின்றனர். அழகியலை மட்டும் பேசாமல் வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கும் ஹைக்கூக்களை உரையாசிரியர்கள் அல்லது அன்றைய ஜப்பானிய வாழ்க்கைமுறை அறிந்தோர் விளக்காதவரையில் அவை வார்த்தைகளாக மட்டும் நிற்கும் வாய்ப்பு உண்டு.
இரவுக் காவல் பணியிலிருக்கும் பரண் காப்பாளர்களின் காவல் முறை அறிந்த வாசகர்கள் இரண்டு பார்வைகளில் இரண்டாம் அடியை அணுகுகின்றனர்.
முதல் பார்வை, காவல் இல்லக் காப்பாளன் தனிமையில் இருக்கிறான். மான்களை விரட்டுவதற்காக நெருப்பு உண்டாக்கிப் புகை வெளியிட்டு அதன் மணத்தால் வயலிலிருந்து மான்களை விரட்டியும் அவை வயலுக்குள் நுழைந்துவிடாமலும் காக்கிறான். யாருமில்லாமல் அவன் மட்டும் வனத்தில் தனிமையில் இருக்கையில் தாமிர மணி ஒலிக்கிறது.
இரண்டாவது பார்வை, காவல் இல்லக் காப்பாளன் தனிமையில் இருக்கிறான். மான்களை விரட்டுவதற்காக நெருப்பு உண்டாக்கிப் புகை வெளியிட்டு அதன் மணத்தால் வயலிலிருந்து மான்களை விரட்டியும் அவை வயலுக்குள் நுழைந்துவிடாமலும் காக்கிறான். யாருமில்லாமல் அவன் மட்டும் வனத்தில் தனிமையில் காவல் காத்திருக்கையில் தனக்கு உறக்கம் வராமலிருப்பதற்காகக் குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் தாமிர மணியைத் தானே அடித்து ஒலியை உண்டாக்குகிறான்.
வரிக்கு வரி ஹைக்கூவை மொழிமாற்றினால்,
தனிமையில்
மீண்டும் தாமிர மணி அடிக்கப்படுகிறது
காவல் இல்லக் காப்பாளன்
கவிதையை உள்வாங்கித் தமிழ் மொழிக்கு ஏற்ப மொழிமாற்றினால்,
தனிமையில்
மீண்டும் அழைப்பு மணி
வனக்காவலர்
என்றோ, அல்லது
தனிமையில்
மீண்டும் அழைப்பொலி
வனக்காவலர்
என்றோ மொழி பெயர்க்கலாம். காவல் இல்லமும் அதன் அழைப்பு மணியும் இரவில் புகையிடுதலும் தமிழில் இந்த ஹைக்கூவை மொழிமாற்றம் செய்வதற்கு சவாலாக நிற்கின்றன.
தனிமையில்
வனக்காவலர்
அழைப்பொலி
எனத் தமிழ் சூழலுக்கும் புரிதலுக்கும் ஏற்ப இதனை மொழிமாற்றினால், அத்தனை காஞ்சி வரிவடிவங்களில் காடு, மான், தீ, புகை, காவலாளி, தாமிர மணி, மணியடித்தல் எனக் காட்சிப்படுத்திய ஹைக்கூவின் ஜீவனைத் தமிழ் வாசகருக்குக் கடத்தாமற்போன குற்றத்துக்கு ஆளாகலாம்.
சில ஹைக்கூக்கள் காஞ்சியில் வாசித்துப் பொருளை உள்வாங்கி ரசிப்பதற்கு மட்டுமே உள்ளவை. தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் பொதுவான சில பண்புகள் இருந்தாலுமே, சில ஹைக்கூக்களைத் தமிழில் விளக்கலாமேயன்றி ஹைக்கூ வடிவில் மொழிமாற்றுதல் இயலாது.
ஹாரா செக்கிதெய்யின் தனிமையும் அழைப்பொலியும் என்னும் இந்த ஹைக்கூவும் அவற்றுள் ஒன்று.
இரவு முழுவதும் அந்தத் தாமிர மணியோசை காட்டில் கரைகிறது. அதன் பின்னர் எஞ்சுவது காவலனின் தனிமை மட்டும்.
