Site icon சொல்வனம் | இதழ் 371 | 26 ஜூலை 2026

இ.பா சார் 

வெய்யில் தாழ விசாரணைக் கமிஷன் கூடியது. மூன்று வைணவ அந்தணப் பெரியவர்கள்  கமிஷனின்  காரியங்களை நிறைவேற்ற நடந்தே வந்து விட்டார்கள்.  அந்த கமிஷன் உறுப்பினர்கள் நடந்த அடி கணையாழிக்குத் தோதாக நடந்த அடி. மூன்று தெய்வங்கள், மூவரசர்கள், தமிழ் மூன்று, இசைஞர் மூன்று. வாக்கேயக்காரர்கள் மூவர், புதுக்கவிதை முக்கவிஞர். எழுத்தில் நெல்லை மூவர். இங்கே கணையாழி மூவர்.  

கணையாழி எனும் இலக்கிய இதழை முப்பது வருடம் நடத்தித் தகுந்த கரங்களில் ஒப்படைக்கக்  காலம் கனிந்து வரவிருக்கிறது. அது வரும் வரை சில மாதங்களோ சற்றே அதிகமோ கணையாழி உயிர்த்திருக்க கணையாழி மூவர் செயல்படுகிறார்கள்.  கி. கஸ்தூரிரங்கன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா இந்த மூன்று பேரும் கூடவே இன்னும் சிலரும் அந்த மாதத்துக்கு முந்தைய கணையாழி இதழைப் பற்றி விவாதம் செய்யப்போகிறார்கள். இவர்களில்  எனக்குப்  பெருந்தலைவர் சுஜாதா  பழக்கமானவர், ராம்ஜிக்கு எல்லோரும் பழக்கம். 

கி..க என்கிற கஸ்தூரிரங்கன் பெற்று வளர்த்த கணையாழி கைமாறும் வரை அந்த அபூர்வமான இலக்கிய இதழுக்கு ஆசிரியராக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் என் மூத்த சக அதிகாரியும் சக இலக்கிய ஆர்வலருமான ராம்ஜி பொறுப்பு    ஏற்றுக் கொண்டார். அவரோடு கூட கணையாழி மூவரின் கனமான சிபாரிசுப்படி நானும் பெயர் குறிப்பிடப்படாத உதவி ஆசிரியர் ஆனேன்.

கணையாழி உதவி ஆசிரியர் என்றால் பத்ம விருது மாதிரி பெரிய கௌரவம் மட்டும் இல்லை.  தபாலில் வந்த படைப்புகளை ஒரு பருந்துப் பார்வையில் படித்து அச்சுக்குப் போக வேண்டியதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பாப்புலர் எழுத்தாளர் எழுதி அனுப்பியிருக்கும் கவைக்குதவாத படைப்பைத்  திருப்ப அனுப்புவதும்  உதவி ஆசிரியர் கடமைதான். இரண்டாவதாக சொல்லப்பட்ட காரியம் நிலைத்த நட்பில் ஊடாடுவதை எல்லாம் வம்சத் துரோகமாக்கி விடும்.

கி.க என் தோளில் தட்டி அன்போடு சொன்னது இந்த வகையில் இருந்தது – சிறுகதை, கவிதை இந்த ரெண்டும் கொட்டுகொட்டுன்னு கொட்டலேன்னாலும் கணிசமா வந்துண்டிருக்கு. நீங்க என்ன பண்றேள், பொறுமையா கவிதைகளை மட்டும் ஒண்ணு விடாமல் படிச்சுடுங்க. உங்களுக்கு நல்ல கவிதைன்னு படறதை எல்லாம் தேர்ந்தெடுத்துடுங்க. அதை மட்டும் நம்ப ஞானக்கூத்தன் படிச்சு செலக்ட் பண்ணிடுவார். கதைத் தேர்வை யார் கிட்டே ஒப்படைக்கலாம்னு அடுத்த வாரம் சொல்றேன், இப்ப ஸ்ரத்தைக்கு நீங்களே கொஞ்சம் முதல் சுற்றுக் கதைத் தேர்வைப் பண்ணிடுங்க.

இ.பா, சரி நான் கிளம்பட்டா வெளியே போகணும் என்று அவசரமாக எழுந்தார். எனக்கு மட்டும், ’வரேன், அப்புறம் பார்க்கலாம்’ என்று தகவல்  பகிர்ந்தபடி மெல்ல நடந்தார்.

ஆக கதைத் தேர்வு, கவிதைத் தேர்வு ரெண்டு பெரிய   வேலை என்னிடம் வந்து சேர்ந்து விட்டது. 

ஒரு இலக்கியச் சிற்றிதழில் நோக்கராக இருந்த அனுபவம்  கைகொடுக்கும் என்று தோன்றியது. நோக்கர் என்றால் சாயா குடித்தபடி வேடிக்கை பார்ப்பது   என்று  தானே அர்த்தம். ஒட்டகத்துக்கு ஒன்பது கோணல் என்றது போல அந்த இலக்கிய ஏடு இங்கிலீஷில் சென்னையிலிருந்து வெளிவந்த தமிழ் சிற்றிதழ்.

பிற்காலத்தில் இந்த இதழில் இ.பா, அம்பை ஆகியோரோடு நானும் இங்கிலீஷில்  காலம் எழுதினேன். அது வேறு கதை. பொழச்சுக் கிடந்தால் அதை எழுதுகிறேன். இப்போது கி.க, இ,பா, சுஜாதா மற்றும் நானும் பங்குபெற்ற கணையாழிக்  கதை.

சுஜாதா இ.பாவிடம் அவசரமாகச் சொன்னது இது – சார், இன்னும் பதினைந்து நிமிஷத்திலே முடிச்சுடுவோம். என்றபடி அந்த தினத்தில் தபாலில் வந்திருந்த கதை கவிதைகளை தனித் தனியாக எடுத்து வைத்தார்,

கதை நாலு, கவிதை பதினைந்து. நான் கதைகளை எடுத்துக்கறேன். முருகன் கவிதை மட்டும் எடுத்துக்கட்டும். 

ஆபத்பாந்தவன் அனாதை ரட்சகனாக அன்றைய தினம் சுஜாதா தடுத்தாட்கொண்டபோது இ.பா சார் மௌனமாக வாழ்த்து சொன்னது – குட் லக் – நினைவில் திரும்ப திரும்ப வந்தது. நான் சந்திக்கப் போன இ.பா  இவரில்லை. அவர் இருக்கும் இடத்தை கலகலவென்று மாற்றும் நகைச்சுவை உணர்வு மிகுந்தவர். நான் சந்தித்த தினத்தில் அவர் பகடியை இல்லத்திலேயே விட்டுவிட்டு வந்திருப்பார். ச்விட்ச் போட்டதும் விளக்கு எரிவது போல்  நிமிடத்துக்கு ஒரு  நய்யாண்டியோ  பகடியோ உதிர்த்துக் கொள்ளாமல் கல்லூரியில் தத்துவம், நுண்கலை, இலக்கியம் என்று கற்பிக்கும் வித்வத்கர்வம் சற்றே நனைத்த பேராளுமை.

கவிதைகளோடு நான் கையாள ஆசிரியருக்குக் கடிதம் தலைப்பிட்டு இரண்டு  கடுதாசிகள். இரண்டும் வெவ்வேறு இடத்திலிருந்து வந்தவை. ஒரே கையெழுத்தும் பொருளடக்கமும்  கொண்டவை – கணையாழி போன மாதம் வெளிவந்த இதழில் கவிதைத் தேர்வு மகாமோசமாக இருக்கிறதைச் சொல்லாமல் முடியாது.  அய்யா மேலும் நான் மூன்று மாதம் முன்பு என் கவிதை…

வெள்ளிக்கிழமை சாயந்திரம் நானும் ராம்ஜியும் கணையாழி மூவரைச் சந்திக்கப் போய்ச் சேர்ந்தது இப்படித்தான்.  

சுஜாதா சட்டென்று விஷயத்துக்கு வந்து  விட்டார், இ.பா போஸ்ட் கார்டை – நாங்கள் கொடுத்தனுப்பியது – எடுத்து புதுசாக வாசிப்பது போல் சிரித்தபடி படித்தார். 

‘இபா புன்சிரிப்போடு கி.க-வைப்   பார்த்தார். ‘கஸ்தூரிரங்கன் சர்க்காரைப் பற்றிக் கவிதை எழுதி அதில் சர்க்காரை பழிப்பதை சொல்வார் –

சர்க்காரை பழிக்காதே பழித்தால்

இன்னொரு சர்க்கார் தான் வரும்

எனக்கு ஆசுவாசமாக அந்த நிமிடம் இருந்தது. மெதுவாக சொன்னேன் –

கவிதையை பழிக்காதீர் பழித்தால் 

இன்னும் பல கவிதைகள்   வரும்

அந்த மூன்று பெரியோர் ஒரே நேரத்தில் சிரிக்க அறையில் பத்து நூறு  வாட்ஸ்   பல்ப்கள் எரிந்தன.

 அவசரக் கூட்டம் நடந்த பிறகு கவிதைத் தேர்வு பெரிய குழு வசம் ஒப்படைக்கப் பட்டது. நானும் என் பங்குக்கு இதுவரை கணையாழியில் எழுதாத நல்ல கவிஞர்களை இனி எழுதக் கேட்டுக் கொண்டேன். ஜனவரி 1997 இதழில் கவிதாயினி கனிமொழி கவிதை வந்தது இப்படித்தான்.

ஓய்ந்து கிடந்த கணையாழி சுறுசுறுப்பாக நான் வெளியே வந்தேன். 24 × 7 வேலை நியமம் உள்ள கம்ப்யூட்டர் கம்பெனியில் சேர்ந்து இலக்கியத்தைப்   பின்னால் தள்ளினேன். ராம்ஜி இறந்தார். கணையாழி இருக்கிறது.

***

இரா. முருகன்

1953-ல் தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தவர். பன்னாட்டு நிறுவனங்களில் வங்கித் தொழில்நுட்பவியல், திட்ட மேலாண்மைத்  துறைகளில் பொது மேலாளராக இந்தியா, பிரிட்டன், தாய்லாந்து, அமெரிக்காவில் பணிபுரிந்து பணி ஓய்வுபெற்றுத் தற்போது சென்னையில் வசிப்பவர்.


தமிழ் இலக்கிய வெளியில் 1977 முதல் தீவிரமாக இயங்கும் இரா.முருகன் கவிதையிலிருந்து சிறுகதை, குறுநாவல் வழியே நாவலுக்கு வந்தவர். அபுனைவு, மேடை நாடக ஆக்கம், திரைக்கதை உரையாடல் ஆக்கம் என்றும் பங்களித்துள்ளார். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு நாவல், சிறுகதை, கவிதை மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். ஆங்கிலத்திலும் கவிதை, பத்திரிகை பத்தி எழுதி வருகிறார்.


இரா.முருகனின் மாய எதார்த்த இலக்கிய முயற்சிகளில் முக்கியமானது ‘அரசூர் நாவல்கள்’ என்ற 1850 – 1960 காலகட்டத்தில் நிகழும், தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் வேர்விட்டுப் பரவிய ஒரு குடும்பத்தின் புனைவு கலந்த நான்கு புதினங்கள் – அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரே. ஒன்றிலிருந்து நீண்டு மற்றொன்றாகி அதுவும் நீட்சி கொள்ள இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பக்கங்களில்  நிறைந்திருப்பவை இவை. 


விஷ்ணுபுரம் விருது, இலக்கியச் சிந்தனை ஆண்டிறுதி விருது, கதா விருது, பாரதி பல்கலைக்கழக விருது போன்றவை பெற்றவர் இரா.முருகன். அரசூர் வம்சம் நாவலின் ஆங்கிலப் பதிப்பான தி கோஸ்ட்ஸ் ஓஃப் அரசூர், இந்திய புக்கர் விருது என்று சிறப்பிக்கப்படும் க்ராஸ்வேர்ட் விருதுக்கான குறும்பட்டியலில் இடம் பெற்றது. 2019-ஆம் ஆண்டில் ‘பீரங்கிப் பாடல்கள்’ நூலுக்காகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது (மலையாளத்திலிருந்து தமிழ்) கனடா நாட்டின் ‘இலக்கியத் தோட்டம்’ அமைப்பால் இவருக்கு வழங்கப்பட்டது. 2019-இல், மலையாள மகாகவி உள்ளூர் பரமேஸ்வர ஐயர் நினைவுப் பரிசு, மலையாளம் – தமிழ் இலக்கியப் பரிமாற்றத்துக்காக இவருக்கு திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தால் வழங்கப்பட்டது.

Exit mobile version