Site icon சொல்வனம் | இதழ் 371 | 26 ஜூலை 2026

இ .பா. ஒரு அறிவுக்கேணி

தன் ‘குருதிப்புனல்’ நாவலுக்காக  1977-ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற நவீன தமிழின் மூத்த படைப்பாளி  இந்திரா பார்த்தசாரதி அவர்களுக்கு 2021-ஆம் ஆண்டுக்கான  சாகித்ய அகாடமி நல்கை (Sahitya Akademi Fellowship) 2022-ஆம்   ஆண்டு மார்ச் திங்கள் 29-ஆம் நாள் வழங்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்ட நல்கையைப் போற்றும் முகமாக  ‘இலக்கியம் பேசுவோம்’ என்ற நிகழ்ச்சி, அகில இந்திய வானொலியால்  நிகழ்த்தப்பெற்றது.  இதில்  இ. பா பற்றிய தங்களது பார்வைகளை பல்வேறு விமர்சகர்கள் வெளிப்படுத்தினார்கள்.  இந்த நிகழ்ச்சி ‘சொல்வனம்’ இணைய இதழின் இ. பா.  பற்றிய சிறப்பிதழுக்காக திருத்தப்பட்ட உரைவடிவில் வெளியிடப்படுகிறது. 

நன்றி: அகில இந்திய வானொலி நிலையம்

அருணன்: தமிழினுடைய மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்களுக்கு சாகித்ய அகாடமியின் சீனியர் பெல்லோஷிப் வழங்கப்பெற்றுள்ளது. அதற்கான நிகழ்ச்சியும் சென்னையில் நடைபெற்றது.  இன்றைய இலக்கியம் பேசுவோம் நிகழ்ச்சி இந்திரா பார்த்தசாரதியின் படைப்புலகம் பற்றி பேச முயல்கிறது. இதைப்பற்றி நம்மிடையே பேசுவதற்கு  நம்முடன் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார் கவிஞர், சிறுகதை ஆசிரியர்  ராஜகோபாலன் அவர்கள். வணக்கம் ராஜகோபாலன் அவர்களே.   இந்திரா பார்த்தசாரதி என்ற ஒரு எழுத்தாளரைப்பற்றி பேசும்போது பல ஊர்கள் நம் மனக்கண்முன் வருகின்றன. சென்னை. கும்பகோணம். புதுதில்லி, போலந்து நாட்டின் தலைநகரம் வார்சா. அப்புறம் புதுச்சேரி, என்று அவருடைய படைப்புகள் வழியாகவும் சரி, அவர் இருந்து வாழ்ந்த இடங்களாகவும் சரி,  இதைப் பற்றி சொல்லுங்களேன்.

ராஜகோபாலன்: இந்திரா பார்த்தசாரதி 1930 ஜூலை 10ல் சென்னையில் பிறந்தவர். ஆனால் அவருடைய சொந்த ஊர் கும்பகோணம். கும்பகோணத்தில்தான் பள்ளிப்படிப்பு. கும்பகோணத்தில்   பள்ளியில் தி. ஜானகிராமன் அவருக்கு ஆங்கில ஆசிரியராக இருந்திருக்கிறார். அதற்குப் பிறகு அவர்  அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் படிக்கிறார். படித்து முடித்த பிறகு திருச்சிக்கு வந்து அங்கு நேஷனல் கல்லூரியில் பணியாற்றுகிறார் .  அப்படி பணியாற்றும் போது டெல்லியிலிருந்து வந்த ஒரு பிரமுகர் அவரைப் பார்த்து நீங்கள் டெல்லியில் இருக்க வேண்டியவர். அங்கே வாருங்கள் என்று கூப்பிடுகிறார். டெல்லிக்கு போகிறார்.  டெல்லியில்  ஒரு பள்ளியில் வேலை செய்கிறார். பள்ளியில் வேலை செய்யும்போது அதுவும் இவருடைய தகுதிக்கு கொஞ்சம் குறைவானது தான். இவர் பல்கலைக் கழகத்தில் தான் இருக்கவேண்டும் என்று டெல்லி பல்கலைக் கழகத்தில் ஒரு நேர்காணலுக்கு போகிறார். இவரை அங்கே தேர்ந்தெடுக்கிறார்கள். முப்பத்தாறு ஆண்டுகள் டெல்லி பல்கலைக் கழகத்தில் வேலை செய்கிறார், தமிழ்த்துறையில் பேராசிரியராக இருக்கிறார். பிறகு எண்பத்தி ஒன்றிலிருந்து எண்பத்தாறு வரைக்கும் இந்தியவியல் வருகைதரு பேராசிரியராக போலந்து நாட்டிலுள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். அதற்குப்பிறகு எண்பத்தெட்டிலிருந்து தொண்ணுத்திரண்டு வரைக்கும் பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் . சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலை மையம். Centre for Performing Arts. அதற்கு  நிறுவனராகவும் இயக்குநராகவும் இருக்கிறார்.  பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இவர் பேராசிரியராக பணியாற்றும்போது அந்த பிரிவில் நிறைய நாடகங்கள், குறிப்பாக விழிப்புணர்வு நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. ஏற்கனவே இவருடைய நாடகங்கள் எல்லாம் டெல்லியில ஹிந்தியில் நிகழ்த்தி இருந்தார்கள். அதற்குப்பிறகு இங்கு புதுச்சேரியில் முக்கியமான இரண்டு நாடகங்கள். ராஜு அவர்கள் தான் இயக்கினார்.    சிலப்பதிகாரம் “கொங்கைத்தீ” என்ற பெயரிலும் ஷேக்ஸ்பியரின் கிங் லியர் நாடகத்தின் தழுவல் தமிழாக்கம் “இறுதியாட்டம்” என்ற பெயரிலும் 1992 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்டன.   அதற்குப்பிறகு  அவர் சென்னையில் தான் வசிக்கிறார்.  இன்றைக்கு அவருக்கு தொண்ணூற்றி இரண்டு வயது ஆகிறது. ஆனால் இன்றைக்கும் அவர் எழுதிக்கொண்டே தான் இருக்கிறார்.  அவர் சொல்கிறார் நான் என்றைக்கும் எழுதிக்கொண்டே தான் இருப்பேன். எழுத்தை நிறுத்தவே மாட்டேன் என்று.

அருணன்: இந்த சாகித்ய அகடமி  நல்கை (Fellowship) வழங்கப்பட்டதைப்பற்றிய அவருடைய எண்ணங்களை பதிவு செய்வதற்காக அண்மையில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் அவருடைய வீட்டுக்கு போயிருந்தோம்.  

அருணன்: வணக்கம் இந்திரா பார்த்தசாரதி அவர்களே. உங்களை சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி. தமிழில்  சாகித்ய அகாதமி விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. ஆனால் சாகித்ய அகாதமி   பெல்லோஷிப் என்பது மிக சொற்பமான சிலருக்குத்தான் கிடைத்திருக்கிறது. அந்த தகுதி குறிப்பாக ஜெயகாந்தன், ராஜாஜி, தே. பொ. மீனாட்சி சுந்தரம், ஆகியோருக்கு கிடைத்திருக்கிறது. உங்களுக்கு இந்த சாகித்ய அகாதமி பெல்லோஷிப் கிடைத்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

இந்திரா பார்த்தசாரதி: எனக்கு இது பெரிய ஆச்சரியத்தைத் தந்தது.   இது எதிர்பாராத செய்தியாக இருந்தது. என்னுடைய முதல் ரியாக்ஷன் என்னவென்றால் இதை மறுத்து விடலாமா என்று. அப்புறம் நண்பர்கள் எல்லாம் சொன்னார்கள். எத்தனை வருஷம் கழித்து தமிழுக்கு கொடுக்கிறார்கள். நீங்கள் மறுக்கக்கூடாது என்று சொன்னார்கள். பிறகு  அகாதமியிலிருந்து  ‘நல்கை வழங்கும் நிகழ்ச்சியை டெல்லியில் எப்போது வைத்துக்கொள்ளலாம்?’என்று கேட்டார்களஂ  ‘இல்லை டெல்லிக்கு என்னால் வர முடியாது. நீங்கள் வந்து சென்னையில் ஒரு குறிப்பிட்ட நாளில் நடத்தினால் என்னால் வர முடியும்’ என்றேன். இது நடந்தது செப்டம்பரில்.  செப்டம்பருக்கு அப்புறம் ஏப்ரல். ஆறு மாதம். இதில் ஒரு வேதனை இருக்கிறது.   இத்தனை வயதானவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு வருஷம். ஆனாலும் என் உடல்நிலை எப்படி இருந்தாலும், அவர்கள் நான் சொன்ன  கண்டிஷனுக்கு ஒப்புக்கொண்டு விட்டதால் என்னால் போகாமல் இருக்க முடியவில்லை. ஆனால் கலந்து கொள்ளும் போதும் பேசும் போதும்,  என்னுடைய வயதான காரணத்தினால் இருக்கக்கூடிய உடற்குறைகள் எல்லாம் என்னால் மறக்க முடியாது. அந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொண்ட போது என்னை பற்றி பேச வந்திருந்த மேனாள் துணைவேந்தர் ம. ராஜேந்திரன் அவர்கள் ஒன்று சொன்னார். நான் அப்படி யோசிக்கவில்லை,  ஆனால் அவர் சொன்ன பிறகு அப்படித்தான் எனக்கும் பட்டது.  என்னவென்றால் ‘இந்த கௌரவம் முதன்முதலாக தமிழ்ப்பேராசிரியராகவும், அதேசமயத்தில் நவீன படைப்பாளியாகவும் நாடக ஆசிரியராகவும் இருக்கக்கூடிய ஒருவருக்கு கிடைத்திருக்கிரது’ என்று.  அதைக்கேட்டு நான் மகிழவே செய்தேன். எனக்கு பெல்லோஷிப் என்பது ஒரு கௌரவம் தான். மொழிக்கும்  கௌரவம். அதைப் பற்றி மகிழ்ச்சி அடைந்தேன்.

 அருணன்: ரொம்ப மகிழ்ச்சி இந்திரா பார்த்தசாரதி அவர்களே. இப்போது   உங்களிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது உங்க மேஜை மேல்  சில நூல்கள் இருக்கிறதை பார்க்கிறேன். அதில் தாரா ஷிகோ பற்றி ஒரு வரலாற்று நூல் கூட இருக்கிறது. தாரா ஷிகோ அவுரங்கசீப்புடைய சகோதரர். நீங்கள் அவுரங்கசீப் பற்றி ஒரு நாடகம் எழுதி இருக்கிறீர்களஂ  இப்போது தாரா ஷிகோ பற்றி படித்துக்கொண்டிருக்கிறீர்கள்.  அவுரங்கசீப்பை பற்றி சொல்லுங்கள். அப்படியே இந்த நூல்  தாரா ஷிகோ பற்றி என்ன சொல்லியிருக்கிறது? 

இந்திரா பார்த்தசாரதி:  அவுரங்கசீப் சின்ன வயதில் நிறைய கவிதைகள் எழுதி இருக்கிறார். சின்ன வயதில் அவருக்கு நிறைய இசையில் ஈடுபாடு உண்டு. இதையெல்லாம்  படித்த போது பின் ஏன் அவர் இப்படி மாறணும். ஏன் இப்படி ஒரு ஒரு தூய்மைவாதியாக மதவெறியராக மாறுவதற்கு என்ன காரணம்  அப்படியென்று பார்க்கிற போதுதான் எனக்கு தெரிந்தது. அவருக்கு எட்டு வயது இருக்கும்போது அவருடைய அப்பா ஷாஜஹான் தன் தந்தை ஜஹாங்கீரோடு போராடி இருக்கிறார். அந்தப் போராட்டத்தில் ஷாஜஹான் தோற்றுப் போனவுடன்  ஜஹாங்கீர் சொன்னாராம். ‘உன் பிள்ளைகளில் யாரையாவது ஒரு பிள்ளையை இங்கே ஆக்ராவுக்கு என்னிடம் உன் நன்னடத்தைக்கு ஜாமீனாக அனுப்பி வைக்கவும்.’  உடனே ஷாஜஹான் அவுரங்கசீப்பை அனுப்பிவைத்தாராம் அவுரங்கசீப்  ஷாஜஹானுக்கு மூன்றாவது பிள்ளை.  தாரா ஷிகோ முதல் பிள்ளை. ஆகவே அது ஒரு மனப்பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாமா? நாம் வேண்டாத பிள்ளை என்கிற மாதிரியான ஒரு எண்ணம் அவுரங்கசீப்பிற்கு ஏற்படுத்தி இருக்குமா என்று ஒரு உளவியல் ரீதியாக பார்க்கலாம் என்று கூட எனக்கு தோன்றியது.    இதைப்பத்தி நிறைய படித்தேன். அதே மாதிரி ஷாஜஹான் தாரா ஷிகோவை  தன்னுடைய கிரவுன் பிரின்ஸாக அறிவித்து விட்டார். அதாவது யுவராஜா மாதிரி. அவுரங்கசீப் தக்ஷிணபிராந்தியத்தில் அதாவது டெக்கன் பிரதேசத்திற்கு கவர்னராக நியமிக்கப்பட்டார். அவர்  அங்கே நிர்வாகம் செய்தபோது அரசாங்க பணத்தில் கைவைக்க மாட்டார். ஆனால் ஷாஜஹான் நிறைய ஊதாரித்தனமான செலவுகள் செய்தார்,   டெல்லியில் செங்கோட்டை,  ஆக்ராவில் தாஜ்மஹால் என்று. அவுரங்கசீப்பிற்கு இவற்றில் உடன்பாடு இல்லை  ‘இந்த  நாட்டு மக்கள் எல்லாம் ஏழையாக இருக்கிற போது நீங்கள் இப்படி செலவழிக்கலாமா?’ என்று கேட்டு அவர்  தன்  தந்தைக்கு கடிதங்கள் எழுதினார்  அந்த கடிகங்களை எல்லாம் படித்தேன். அவுரங்கசீப்  ஒரு சுவாரசியமான மனிதர். ஆனால் பின்னால் அவர் மதவெறியனா போவதற்கு இது ஒரு காரணமா இருந்திருக்கலாம். என்று நினைத்தேன்.

அருணன்:  தாரா ஷிகோ பற்றி சொல்லுங்க. அவர்  எல்லா மதத்தையும் ஆதரித்தார்.  பெரிய படிப்பாளி என்று சொல்கிறார்களே? 

இந்திரா பார்த்தசாரதி:   பெரிய படிப்பாளி.   அவர் சொன்னதில் நாம் இந்த காலத்துக்கு அவசியமாக எடுத்துக்கொள்ள வேண்டியது ஒன்று இருக்கிறது ‘கிறிஸ்துவர்கள் இடையே. நான் ஒரு யூதனாக இருக்க விரும்புகிறேன். இந்துக்களிடையே நான் ஒரு முஸ்லிமாக இருக்க விரும்புகிறேன். முஸ்லிம்களிடையே நான் ஒரு இந்துவாக இருக்க விரும்புகிறேன்’ என்ற அவர் கூறியிருக்கிறார். அதாவது மதவெறி இருக்கக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக. நம் குமரகுருபரனார் காசியில் மடம் கட்டுவதற்கு தாரா இடம் கொடுத்ததாக ஒரு தகவல் உண்டு. தாரா நிறைய படித்திருக்கிறார், குறிப்பாக இசையைப்பற்றி்.   தாரா அரசனாக இருந்திருந்தால் நம்முடைய சரித்திரம் மாறி இருக்குமா என்பது ஒரு சுவாரசியமான கேள்வி. ஆனால் அவர் நல்ல அரசராக இருந்திருக்க முடியுமா?  ஒரு நல்ல நிர்வாகியாக இருந்திருக்க முடியுமா? தெரியவில்லை.  

அருணன்: அக்பர் ‘தீன் இலாஹி’  என்ற பெயரில் எல்லா மதங்களையும் அரவணைத்துப் போகிற மாதிரியான ஒரு போக்கு கொண்டு வந்தார். தாராவும் அப்படி செய்தார் என்று சொல்ல முடியுமா?

இந்திரா பார்த்தசாரதி: ஆமாம் அப்படித் தான் இருந்தார்.  ஆனால் அவுரங்கசீப்பைப் பற்றி எந்த சரித்திரத்திலும் இல்லாத ஒரு நிகழ்வை என்னுடைய நாடகத்தில் புகுத்தி இருக்கிறேன். வரலாற்று செய்தியின்படி அவுரங்கசீப் தாராவை துரத்தி துரத்தி பிடித்து அவரை டெல்லிக்கு கொண்டு வந்து சிரச்சேதம் பண்ணி அந்த தலையை ஆக்ராவில் இருந்த தன் தந்தைக்கு அனுப்பினார். இது ஒரு சரித்திர செய்தி. எவ்வளவு ஒரு குரூரமான செயல்! அந்த அளவுக்கு அவரை வெறுத்தாரா? ஆனால்  இன்னொரு விஷயம். எட்டு வருஷம் ஷாஜஹான் ஆக்ரா சிறையில் இருந்திருக்கிறார், அவர் உயிருடன் இருந்தவரைக்கும் அவுரங்கசீப் தன்னை சக்கரவர்த்தியாக அறிவித்துக்கொள்ளவில்லை்  அவர் இறந்துபோன பிறகுதான் அப்படி அறிவித்துக்கொண்டார் . இது ஒரு முரண்பாடுகள் நிறைந்த  காலமாக தெரிதிறது.

அருணன்: ரொம்ப நன்றி இந்திரா  பார்த்தசாரதி அவர்களே. உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. 

  *   *   *

அருணன்: ராஜகோபாலன் அவர்களே. இந்திரா பார்த்தசாரதியுடைய “குருதிப்புனல்” நாவலுக்காக அவருக்கு 1977-ஆண்டில் சாகித்ய அகாதமி விருது கொடுத்தார்கள்.  1968-இல் கீழவெண்மணி கிராமத்தில்  தலித் மக்கள் கூலி பிரச்சனைக்காக எரித்துக் கொல்லப்படுகிறார்கள். இதை மையமாக வைத்து அவர் எழுதிய  நாவல் அது. அதில்லாமல்  “ஏசுவின் தோழர்கள்”, “சுதந்திர பூமி”, “தந்திர பூமி”, “ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன”, இப்படி பல நாவல்கள் எழுதியுள்ளார். அந்த நாவல்கள் பற்றி உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதை சொல்லுங்களேன்.

ராஜகோபாலன்: “ சுதந்திர பூமி”, “வேதபுரத்து வியாபாரிகள்” இதையெல்லாம் அரசியல் நையாண்டிஎன்று கூறலாமஂ.  பாம்பே நகரம் பற்றி சொல்லும்போது money is power என்றுசொல்கிறோம் அப்படீன்னா பாருங்க. டெல்லியில்  power is money.  அவர்  அங்கே இருந்ததனால் அதைப் பற்றி நிறைய எழுதுகிறார். “வேதபுரத்து வியாபாரிகள்” பொதுவாக அரசியல் நையாண்டி அது. அது கல்கியில் வெளி வந்தது.  டெல்லியிலிருந்து வெளிவந்த தமிழ் மாத சஞ்சிகை கணையாழி.  கஸ்தூரி ரங்கன் தான் அதன் ஆசிரியர். அவர் நியூயார்க் டைம்ஸ் நிருபராக இருந்தார். இங்கே என்ன ஒரு ஆச்சரியம் என்றால் அந்த நேரத்தில் அங்கே டெல்லியில் சு. ஆதவன், சுஜாதா, வாஸந்தி, இ. பா. எல்லாரும் இருந்தார்களஂ.  மாதத்தில் ஒரு நாள் நிச்சயமாக இவர்கள் இலக்கியம் பற்றி பேசுவார்கள்.  அது  கணையாழியில் வரும். இங்கு சென்னையில் கணையாழி பொறுப்பாசிரியர் அசோகமித்திரன். கணையாழியில் தொடர்ந்து இவர்கள் எல்லாம் எழுதிக்கொண்டே இருந்தார்கள்.  ஒரு விஷயம் சொல்லணும்னா இதில் மூன்று பேர் மூன்று ஆளுமைகள். ஒன்று தி. ஜானகிராமன். இரண்டாவது ஜெயகாந்தன். மூன்றாவது இந்திரா  பார்த்தசாரதி. இவர்கள் மூன்று பேருமே  வெறும் தீவிரமான இலக்கிய பத்திகளை மட்டுமே  எழுதி வந்தவர்கள் அல்ல. இவர்கள் எல்லாருமே வெகுஜன பத்திரிகைகளிலும் எழுதி மக்களை தீவிர இலக்கிய ரசிகர்களாக மாற்றினார்கள். அதை நாம் குறிப்பிடணும். முக்கியமாக இ.பா.வை பொறுத்தவரைக்கும் இவர் முதலில் கதைகள்  எழுதும் போது ஆனந்த விகடனில் தான் எழுதினார். அவை ஆனந்த விகடனில் முத்திரை கதைகளாக தொடர்ந்து வந்தன.

அருணன்: ராஜகோபாலன் அவர்களே, இ.பா. பல சிறுகதை தொகுப்புகள் வெளியிட்டு இருக்கிறார்.  “ நாசகாரக் கும்பல்”, “மனித தெய்வங்கள்”, “யுகதர்மம்” உள்ளிட்ட பல தொகுப்புகள்  வந்திருக்கின்றன.  நீங்கள்  தொடர்ந்து அவருடன்  பழகி, அவருடைய படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்கான முயற்சிகளையும் நீங்கள் மேற்கொண்டு இருக்கிறீர்கள். மேக்மில்லன் பதிப்பகத்தின் Routes என்ற தலைப்பில் வந்துள்ள சிறுகதைத் தொகுப்பில் சிஂ.டி. இந்திரா அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட இ.பா.வுடைய “நியாயங்கள்” என்ற சிறுகதையும் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த அனுபவத்தைப் பற்றி சொல்லுங்கள்.  “நியாயங்கள்” என்ற கதையைப் பற்றியும் சொல்லுங்களேன்.

ராஜகோபாலன்:  இந்திரா  பார்த்தசாரதி ஒரு பன்முகக் கலைஞர்.  அவர் தொட்ட இலக்கிய வகைமைகள் எல்லாம் துலங்குகின்றன. சிறுகதை, நாவல், நாடகம், இலக்கிய விமர்சனம் . எதுவாயினும். தமிழிலும் பழந்தமிழ் இலக்கியம் முதல் நவீன தமிழ் வரை ஆழங்கால் பதித்தவர் அவர். ஆங்கில, மேற்கத்திய இலக்கியங்களில் கரை கண்டவர். அவர் எழுதுவதை எப்படி வகைப்படுத்தலாம்? இலக்கியம் ஒரு சமூகச் செயல்பாடு. ஏன் எல்லாக் கலைவடிவங்களுமே சமூகச் செயல்பாடு தான் என்பதே இ. பா.வின் கோட்பாடு. நகைச்சுவை. அங்கதம். உணர்ச்சி வெளிப்பாடு. அறிவார்ந்த பார்வை. வித்தியாசமான அதே வேளையில் கனமான, தர்க்க ரீதியான கண்ணோட்ட அடிப்படையில் வாழ்க்கை பற்றிய ஒரு நோக்கு. இவை பற்றி இங்கு குறிப்பிடப்பட வேண்டும்.

அருணன்: “நியாயங்கள்” கதையைப்பற்றி கொஞ்சம் சுருக்கமாக சொல்லுங்களேன். இது அவர் வார்சா பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராக இருந்த போது எழுதப்பட்ட கதை.

ராஜகோபாலன்: ஆமாம் , இந்தக் கதையின் களம் வார்சா தான்.  வார்சாவைப் பற்றி, போலந்து பற்றி நமக்கு ஒரு கதை கிடைத்தது நல்ல விஷயம் தான். ஏனென்றால், இ.பா. போன்ற ஒரு இலக்கிய ஆசிரியர்  ஒரு இலக்கிய விற்பன்னர். வெளிநாட்டுக்கு போகும்போதோ, வசிக்கும் போதோ நமக்கு  அந்த நாட்டினுடைய பண்பாடு, மற்றும் வரலாறு, அப்புறம் மக்கள் எப்படி இருக்கிறார்கள்,  இதையெல்லாம்  தெரிந்துகொள்வதற்கு ஒரு பெரிய வாய்ப்பு நமக்கு கிடைக்கிறது.  இது தவிர இந்த கதையில் வேற சிறப்புகளும் நாம் பார்க்கிறோம்.

அருணன்: “நியாயங்கள்” கதையில் வரும் ஒரு கதாபாத்திரம் கூட ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருப்பவர் போலத்தானே வருகிறது?

ராஜகோபாலன்: ஆமாம்.  இந்த கதையில் முக்கியமாக ஐரோப்பிய வரலாற்றிலேயே ரொம்ப மோசமான தருணமாக கருதப்படுகிற  ஹிட்லரின் வதை முகாம் பற்றிய ஒரு உபகதை  தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கிறது. இது தவிர போலந்து, இந்தியா  இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள பண்பாட்டுக் கூறுகள், வித்தியாசங்கள் இவை எல்லாமே இவருடைய மெல்லிய நகைச்சுவை இழையோடும் அங்கதத்துடனும் கூறியிருக்கிறார்.

அருணன்: இந்தக் கதையில் கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒரு அம்சம் அவருடைய வசனங்கள் இல்லையா? அந்த வசனங்களில் அவருக்கே இயல்பான எள்ளல்,வாத விவாதங்கள் . . .

 ராஜகோபாலன்: தர்க்கரீதியாக.

 அருணன்: தர்க்க ரீதியாக வந்து மனிதர்களை  அவர்களுடைய வார்த்தைகள் மூலமாகவே நமக்கு அடையாளம் காட்டுகிறார்.

ராஜகோபாலன்: உணர்ச்சிபூர்வமாக இருந்தால் கூட இந்த அறிவுபூர்வமான விவாதங்கள் ரொம்ப தூக்கலாக இருக்கும். மற்ற ஆசிரியர்கள் இவ்வளவு cerebral ஆக இருப்பார்களா என்று தெரியாது. ஆனால இந்திரா பார்த்தசாரதியிடம நாம் பேசும்போதே நமக்கு அது தெரியும். அது இந்தக் கதையில ரொம்ப சிறப்பாக வந்திருக்கிறது.

 *   *   *

அருணன்: ஒரு  சிறுகதை ஆசிரியராக, நாவலாசிரியராக,  கட்டுரையாளராக,  மொழிபெயர்ப்பாளராக இருந்தாலும் தமிழ் நவீன நாடக இலக்கியத்திற்கு இந்திரா பார்த்தசாரதி அவருடைய பங்களிப்பு மிகமிக குறிப்பிடத்தக்கது.  அவரது நாடகங்களில் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள, சென்னை பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையின்  தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் சி. டி. இந்திரா அவர்களிடம் இ. பா.வுடைய நாடகங்களைப் பற்றி கேட்டோம். 

சி. டி. இந்திரா :  இந்திரா பார்த்தசாரதி ஒரு பன்முகம் கொண்ட படைப்பாளி என்றாலும் எனக்குப் பிடித்த நாடகத்துறையில் அவர் கையாளும் அறிவு சார்ந்த உத்திகளை கவனமாக பார்க்க விரும்புகிறேன்.   இந்திரா பார்த்தசாரதியின் நாடகப் பாங்கும் பார்வையும் வித்தியாசமானவை.  ஒரு வரலாற்று நிகழ்ச்சி அல்லது வரலாற்று ஆளுமை மற்றும் தொன்மம் சார்ந்த –தொன்மம் என்றால்  myths, legends– வரலாறு அல்லது நிகழ்வு அல்லது  ஆளுமை இவற்றை ஒரு பரம்பரை பரம்பரையாக வந்த சரித்திர வடிவத்திலோ இல்லை சாதாரண மக்கள் புரிந்து கொண்ட வகையிலோ அவர் பார்க்க மாட்டார். அதற்கு எதிர்நிலையில் மையம் கொண்டு  அவற்றைப் படைப்பார். இதை ஆங்கிலத்தில் ‘Reading against the Grain’ என்று கூறுவர். அனேகமாக இந்த பாணி இடதுசாரி மனப்போக்குள்ள எழுத்தாளர்கள் கையாளும் வழி. உதாரணமாக  இந்திரா பார்த்தசாரதி அவர்களின் நந்தன் கதை ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தாறில் (1976) தமிழில் வெளிவந்தது. அதை இரண்டாயிரத்து மூன்றில் (2003) நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததை ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி ப்ரெஸ்  (Oxford University Press) வெளியிட்டது.  இந்த நாடகத்தில் இ.பா. தில்லை நடராஜனிடம் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட ஒரு தூய சிவபக்தனின் வரலாற்றை அல்லது திருத்தொண்டர் வரலாற்றை விவரிக்கும் மூலநூல்களில் உள்ளே பொதிந்து கிடக்கும் முரண்பாடுகளை வெளியே கொணர்ந்து நம்மை ஒரு புது நோக்கப் பார்வையில் காணச் செய்கிறார். நந்தன் என்ற சமூகத்தில் தாழ்த்தப்பட்ட சிவபக்தனின் கொலை புனிதப்படுத்தப்பட்டு அந்த கொடூரத்தை வரலாற்றியல் — வரலாற்றியல் என்றால் ஹேஜியோகிராஃபி, ஹிஸ்டாரியோகிராஃபி (hagiography, historiography)– மறைத்துவிடுகிறது என்று விவாதிக்கிறார், எடுத்துக்காட்டுகிறார். சேக்கிழாரின் பெரிய புராணத்தில் “திருநாளைப்போவார்” நந்தனின் ஆழ்ந்த பக்தியையும், கடமை உணர்ச்சியையும் உயர்வாக பேசப்பட்டுள்ள ஒரு வரலாறு. ஆனால் இ.பா. அந்த சித்தரிப்பை புறந்தள்ளிவிட்டு கோபாலகிருஷ்ணபாரதியின் “நந்தனார் சரித்திரம்” கூறும் வித்தியாசமான வரலாற்றை இன்னும் மேலே ஒருபடி கொண்டு போய்  ஒரு ‘யுடோபியா’ வை (utopia) ‘டிஸ்டோபியா’ வாக (dystopia ) மாற்றி அமைத்து பார்வையாளர்களை  சிந்திக்க வைக்கிறார். யுடோபியா என்றால் கற்பனையான perfect உலகம். டிஸ்டோபியா என்றால் யுடோபியாவுக்கு நேர்மாறான, மிகவும் மோசமான உலகம். இ.பா.வின் கண்ணோட்டம் வரலாற்றியலின் ஆதார சுருதியையே அசைத்து, ஆணிவேரையே ஆட்டிப் பார்க்கும் தன்மை உடையது. இதற்கு அவருடைய ஔரங்கசிப் மற்றும் ராமானுஜரை எடுத்துக்காட்டாக கூறலாம். ஔரங்கசிப்பின் வரலாறு ஒரு டிஸ்டோபியாவாக பொதுவாக பார்க்கப்படுகிறது. இ.பா.வோ அதை ஒரு யுடோபியா போல மாற்ற முயற்சிக்கிறார்.  அரச குடும்பத்தில் வஞ்சிக்கப்பட்டவன், அதனால் மனதளவில் பாதிக்கப்பட்டவன் என்ற ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மனிதனாக அவனை சித்தரிக்கிறார். சரித்திரப் பார்வையை தாண்டி, உளவியல் பார்வையில் ஔரங்கசிப்பை படைக்கிறார்.   இ. பா. ராமானுஜர்  நாடகத்தை ஆயிரத்துத் தொள்ளாயிரத்து  தொண்ணூற்று ஏழில் (1997)  வெளியிட்டார். இந்த நாடகத்தின் பிரதான பகுதியில் இடைக்கால வைணவ ஆசார்யர் ராமானுஜர் அவர்களை ஒரு ‘பப்ளிக் பர்சனாலிட்டியாக’ (public personality) அதாவது பொது ஆளுமையாக படைக்கிறார். சரித்திரத்திலும் பெரும்பாலும் அவ்வாறே கூறப்படுகிறது. ஆனால் பல ஆண்டுகள் கழித்து இ. பா. இந்த நாடகத்திற்கு ஒரு ‘எபிலாக்’ ( Epilogue) என்று சொல்லப்படும் நாடக இறுதிக்காட்சி எழுதினார். அவர் அதை ‘தொடர்ச்சி’—‘சீக்குவல்’ (sequel) — என்று அழைத்தார். இரண்டாயிரத்து பதினாறில் எழுதினார் என்று நினைக்கிறேன். உலகத்தைத் துறந்து சமூக மாற்றத்தை செயல்படுத்தி காண்பித்த ஆசார்யனை அவர் எப்போதோ விட்டுச் சென்ற மனைவி தஞ்சம்மா முன்னால் நிற்க வைக்கிறார். அந்த சந்திப்பில்  ராமானுஜர் அவளது கேள்விக் கணைகளை நெஞ்சில் சுமந்து  சிந்திக்கிறார். இன்றைய காலகட்டத்தில் இந்த இறுதிக்காட்சியின் வரவேற்பு பின்புலம், அதாவது Reception context, கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்த காட்சியின் முடிவில் மடத்தில் உள்ள ஒரு சீடன் ஆசாரியரை கேட்கிறான், “யார் சுவாமி இந்த தஞ்சம்மா?” ஏனென்றால்  பல ஆண்டுகளாக அவர் மடாதிபதியாக இருக்கும்போது தஞ்சம்மா என்ற பெயரை எவரும் சொன்னதே இல்லை. ராமானுஜரின் ஆயிரம் ஆண்டு கொண்டாட்டம் தொடர்பாக பல நிகழ்ச்சிகள் இரண்டாயிரத்து  பதினேழில் (2017) நடத்தப்பட்டன. அவருடைய நாடகம் ராமானுஜரும் அரங்கேற்றப்பட்டது. நம் சமூகம் ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஏழிலிருந்து (1997) அதன் கோட்பாடுகளிலிருந்து மிகவும் விலகி  மாறுபட்ட நிலையில் இப்போது உள்ளது. குறிப்பாக பாலின பிரச்சினைகள், பால் சமநிலை நோக்கு இவற்றில் தீவிர மாற்றுக் கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. குரு பரம்பரை பிரபாவத்தில் ராமானுஜர் துறவு மேற்கொண்ட பிறகு   அவர் மனைவி என்ன ஆனார் என்ற குறிப்பு எதுவும் இல்லை. இந்த சந்தர்ப்பத்தில் இ. பா. தானே  தன் நாடகத்தின் மூடப்பட்ட நிலையை படாரென்று  திறந்து தஞ்சம்மாவை நம் முன்பு நிறுத்தி ராமானுஜரை கேள்வி மேல் கேள்வி கேட்கச் செய்கிறார். அவர் கேட்கும் கேள்விகள் probing questions எனலாம். துருவித்துருவி கேட்கப்படும் கேள்விகள். அந்த கேள்விகள் தஞ்சம்மா என்ற ஒரு தனிப்பட்ட பெண்மணியைப் பற்றி மட்டுமல்ல. சமுதாயத்தில் பெண்ணின் அந்தஸ்து என்ன? அவளுக்கும்  துறவறம் பூணும் உரிமை இருக்கின்றதா? அவள் கருத்துக்கு என்ன வலு இருக்கிறது? சமூகத்தில் கைவிடப்பட்ட பெண்ணின் நிலைமை என்ன? இப்படி பலதரப்பட்ட கேள்விகள் நம்மைத் தொடர்கின்றன. இதனால் ராமானுஜர் ஒரு பெண் வெறுப்புவாதி, ‘மிசோஜினிஸ்ட்’ (misogynist) என்று பொருள் கொள்ளக்கூடாது. அவருடைய மடத்தில் பல பெண்கள் இருந்தனர். பலருக்கு அவர் மந்திர தீட்சை  கொடுத்திருக்கிறார் என்று குருபரம்பரை கூறுகிறது. இ. பா. இந்த இறுதிக்காட்சியில் ராமானுஜர் என்ற ஒரு ஆளுமை இன்னும் வளர்ச்சி பெற்றுக் கொண்டே வருகிறது என்றும், அதை முன் கூட்டியே இழுத்து  மூடல்—closure– செய்ய முடியாது என்றும் நம்மை சிந்திக்க வைக்கிறார். இரண்டாயிரத்து பதினேழாம் ஆண்டு , சென்னை நாரதகான சபாவில் இந்த முழு நாடகம், சேர்க்கப்பட்ட இறுதிக்காட்சி உட்பட, நடத்தப்பட்டது, இ.பா முன்னிலையில். ராமானுஜரும் தஞ்சம்மாவும் சந்தித்து விவாதிக்கும் கொள்கை பிரச்சனைகளை அங்கு அரங்கத்தில் அமர்ந்து நாடகம் பார்த்த கூட்டம் ஆழ்ந்து கேட்டுக்கொண்டிருந்தது என்று புரிந்தது. சரித்திரமாகிவிட்ட அவரது மகத்தான சமுதாய வெற்றி வாழ்க்கை அவர் வாழ்விலிருந்து அவள் இல்லாமல் இருந்ததனால் தானே என்று தஞ்சம்மா கேட்கிறாள். Was it her absence from his life which enabled him to achieve so much?, என்று கேட்கிறாள்.  இரண்டாயிரத்து பதினெட்டில் அந்த நாடகத்தைப் பார்த்தபின் சில விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதாவது, அவ்வளவு கழிபேர் இரக்கமும் சமுதாய சிந்தனையும் கொண்ட ராமானுஜர் அந்த இளம் மனைவியை பக்குவப்படுத்தி தன் சீர்திருத்த நெறியை புரிந்து கொள்ளும்படி செய்திருக்கலாம்; அவளைக் கைவிட்டு காஷாயம் தரித்திருக்க முடிவு செய்திருக்க வேண்டாமோ, என்பது போன்ற கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இ. பா. தன் ராமானுஜரை இந்த வகையில் சிந்திக்க வைத்திருக்கிறார்.

இ.பாவின் சமூக  நாடகங்களுள் ஒன்றான பசி என்ற நாடகத்தை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டேன். அந்த நாடகம் ஐரோப்பிய  ‘அப்சர்ட் தியேட்டர்’ (Absurd Theatre) என்ற ஒரு பாணியில் எழுதப்பட்ட நாடகம். சாமுவேல் பெக்கெட்டின் (Samuel  Beckett)  புகழ்பெற்றவெயிட்டிங் ஃபார் கோடோ’ (Waiting for Godot) நாடகம் மனித வாழ்க்கையின் அர்த்தமற்ற நிலைமையை சித்தரிக்கிறது. இ.பாவும் தன் நாடகத்தில் குழந்தைப்பேறு இல்லாத ஒரு கணவன்-மனைவி தங்கள் வாழ்க்கையின் வெறுமையை ஒரு ‘அபத்த’ நாடக பாணியில் (Comic/ Absurd பாணியில் ) நடித்துக் காட்டுகின்றனர். உயர்ந்த தத்துவ கொள்கைகள் பேசப்படுகின்றன. அவற்றின்  எல்லையை வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள். ஆனால் இ.பா இந்த ஐரோப்பிய நாடக பாணியை முழுக்க முழுக்க இந்திய மயமாக்கி –nativising the European  theatre and its technique—அவருக்கே உரித்த  ‘இண்டெலெக்சுவல்’ பார்வையை ( intellectual outlook) புகுத்தி நம்முடைய தமிழ் பாசுரங்கள், சைவசித்தாந்த கோட்பாடுகள், வேதாந்த கருத்துக்கள், பாரதியாரின் கவிதை,  கும்மிப்பாட்டு போன்ற பல உத்திகளைக் கையாண்டு அந்த கணவன்-மனைவி தங்கள் வாழ்க்கையின் அர்த்தமற்றுப் போன காலத்தைப் பற்றி சிந்திக்க வைக்கிறார். இதில் ‘இன்டர்டெக்சுவாலிட்டி’ (Intertextuality) என்ற உத்தியை  இ.பா. ஆச்சரியப்படும் விதத்தில் கையாள்கிறார்.  இன்டர்டெக்சுவாலிட்டி என்றால் ஒரு புத்தகத்தின் ஒரு பகுதியையோ  சொல்லாடலையோ அங்கிருந்து பெயர்த்து எடுத்து ஒரு புது களத்தில், வேறு ஒரு புத்தக பகுதியில் ஆழ்த்துவது, எடுத்து ஆள்வது, அதன் மூலம் ஒரு புது “த்வனி” அல்லது ‘ரெசொனன்ஸ்’ (dhwani — resonance)  ஏற்படுத்துவது. இந்த பசி நாடகம் farce type காமெடியாக, அதாவது நையாண்டி நாடகம் அல்லது கேலிக்கூத்து வகையில் அமைந்திருப்பது அதன்  கருத்தாழ்ந்த தகைமை, அதாவது , ‘சீரியஸ்னசை’ (seriousness) இன்னும் ஆழப்படுத்துகிறது என்று நான் எண்ணுகிறேன்.  பெரும்பான்மையான இ. பா.வின் நாவல்களிலும் சிறுகதைகளிலும்  அங்கதச்சுவை, அதாவது ‘ satire, மேலிட்டு இருக்கும். ஆனால், அவர் நாடகங்கள் ஒரு அறிவுபூர்வமாக நம்மை சிந்திக்கத் தூண்டும்படியாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

அருணன்: பேராசிரியர் சி. டி. இந்திரா அவர்களோடு இணைந்து இந்திரா பார்த்தசாரதியினுடைய நாடகங்களில் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள ஹைதராபாத் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆங்கிலப் பேராசிரியர்  தி. ஸ்ரீராமன் இ. பா.வின் நாடகங்கள் பற்றி என்ன நினைக்கிறார்?

ஸ்ரீராமன்: நான் இந்திரா பார்த்தசாரதியின் நாடங்களால் ஈர்க்கப்பட்டு அவற்றில் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளேன். அந்த ஈர்ப்புக்கு என்னுடைய ஆங்கில இலக்கிய பின்னணியும் ஒரு காரணம். அவருடைய நாடகங்களில் நான் ஆங்கிலத்திலோ அல்லது ஆங்கில மொழிபெயர்ப்பு என்றோ வாசித்த ஆங்கில, ஐரோப்பிய நாடகங்களின் தாக்கம் இருந்தது. பதினாறு பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஷேக்ஸ்பியர் இருந்து ஆரம்பித்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஹென்ரிக் இப்சன், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் பெர்னாட் ஷா, இருபதாம் நூற்றாண்டின் மத்திய பின்பகுதியில் புகழ்பெற்ற நாடகாசிரியர்களான பெர்ட்டோல்ட் பிரெக்ட், யூஜீன் ஐயனெஸ்கோ, சாமுவெல் பெக்கெட், ஜான் பால் ஸார்த்ர் ஆகியவர்களுடைய தாக்கத்தையும் பார்த்தசாரதியின் நாடக உருவாக்கங்களில் கண்டேன். நாடக ஆசிரியர்கள் மட்டுமல்ல நவீன சிந்தனையாளர்களின் செல்வாக்கையும் இவற்றில் காணலாம். இ. பா. அவர்கள் தன்னுடைய நாடகங்களின் முழுத் தொகுப்பில் அவற்றை ஐந்து விதமாக வகைப்படுத்தியிருக்கிறார். அவை ஒன்று சமூகம். social drama. இரண்டு தொன்மம்.  mythology. மூன்று வரலாறு  historical plays. நான்கு தழுவலாக்கம் adaptation.  ஐந்து ஓரங்க நாடகங்கள். இவற்றில்  தொன்மம், வரலாறு, தழுவலாக்கம் ஆகிய வகைகளைச் சேர்ந்த நாடகங்களை retellings அல்லது மறுவாசிப்பு அல்லது மறு ஆக்கம் என்று அழைக்கலாம். இவை எல்லாவற்றிலும் இ.பா. ஒரு புதிய புரட்சிகரமான perspective ஐக் கொண்டு வருகிறார். உதாரணமாக, அவருடைய தமிழ்நாடு அரசு பரிசு பெற்ற வரலாற்று நாடகம் அவுரங்கசீப்பை எடுத்துக்கொள்ளலாம். இதில் அவர் அவுரங்கசீப்பை ஒரு மதவெறியனாகவும், fundamentalist அடிப்படைவாதியாகவும், சர்வாதிகாரியாகவும் சித்தரிப்பதற்கு பதிலாக தனிமைப்படுத்தப்பட்டு, தந்தை ஷாஜஹானால் புறக்கணிக்கப்பட்டு, வெறுக்கப்பட்டு, பாசத்திற்காக ஏங்கும் தனிமனிதனாக பார்க்கிறார். ஷாஜஹானுடைய கலாரசனையுடைய மறுபக்கமும் இங்கு தெரிகிறது. அவர் தாஜ்மஹலுக்கு பிறகு ஒரு கருப்பு தாஜ்மகால் நிர்மாணிக்க திட்டம் செய்து கொண்டிருந்தார். இந்த திட்டங்களினால் சாதாரண மக்களுக்கு நேர்ந்த பொருளாதார அநீதி, கொடுமை இவற்றையும் காண்கிறோம். இ.பா.வின் நாடகங்களில், அவை சரித்திரமாக இருந்தாலும் சரி, தொன்மக் கதைகளாக இருந்தாலும் சரி அவை நமக்கு இப்போது, இன்றைய சமூக, பண்பாட்டு சூழ்நிலையில் நமக்கு என்ன செய்தி சொல்கின்றன? அவற்றின் contemporary relevance என்ன என்பதைப் பார்க்கிறார்.

அருணன்: இ.பா.வின் தழுவலாக்கங்கள் பற்றி சொல்லுங்களேனஂ.

ஸ்ரீராமன்:  இ. பா. ஷேக்ஸ்பியரின் King Lear, The Tempest என்ற இரண்டு நாடகங்களை  தழுவலாக்கம் செய்திருக்கிறார். தழுவலாக்கம் செய்யும்போது இ. பா.அந்த கதைகளையும் கதாபாத்திரங்களையும் nativize, indigenize செய்கிறார். அவர்களுக்கு தமிழ்ப்பெயர்கள் கொடுத்து தமிழர்கள் ஆக்குகிறார். அதுமட்டுமல்லாமல் வேறு சில குறியீடுகளையும் சேர்த்து மறு ஆக்கம் செய்கிறார். உதாரணமாக ஷேக்ஸ்பியருடைய The Tempest நாடகத்தைத் தழுவி “சூறாவளி” என்ற நாடகத்தை எழுதி இருக்கிறார். ஷேக்ஸ்பியரின் நாடகமே முதலில் ஒரு tragi- comedy அல்லது romance ஆக கருதப்பட்டு இருபதாம் நூற்றாண்டில் ஒரு பின்காலனிய postcolonial text ஆக புரிந்து கொள்ளப்பட்டு வந்தது. இ. பா. அவருடைய தழுவலாக்கத்தில் இந்த பின்காலனிய நோக்கையே பின்பற்றுகிறார். அதே சமயம் ஒரு  சூழலியல் (ecological) நோக்கையும் சேர்க்கிறார். ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் ஒரு wedding mask வருகிறது. அவற்றில் கிரேக்க கடவுள்கள் வருகிறார்கள். இவற்றிற்கு பதில் இ. பா. தன்னுடைய மறு ஆக்கத்தில் மஹா விஷ்ணுவின் வராக அவதாரத்தை ஒரு இசை நடன நாட்டிய நாடகமாக சித்தரிக்கிறார். அத்துடன் நம்மாழ்வார் திருவாய்மொழியில் இருந்து ஒரு பாசுரத்தையும் சேர்க்கிறார். இதில் சொல்லப்படுவது பின்காலனிய கொள்கையையும் தாண்டி மண்ணை மீட்பது. மண் யாவருக்கும் சொந்தம் என்ற கருத்து. இயற்கையின் விதிகளை மீறுபவர்களை அசுரர்களாக நினைக்க வேண்டும். இறைவனுக்கு துரோகிகளாக நினைக்க வேண்டும் என்ற செய்தியைச்  சொல்லி. மண்மகள் வாழி என்று வாழ்த்தி இந்தக் காட்சி முடிகிறது. இ. பா.வினுடைய சமூக நாடகங்களில் ஒரு மனோதத்துவ ரீதியான psycho analytical approach ஐ கையாள்கிறார். “மழை” என்ற நாடகம் இதற்கு உதாரணம். ஆனால் இதிலும் அவர் சமூக நீதி, மனித நேயம் என்ற கூறுகளை சேர்க்கிறார். இ. பா.வின் நாடகங்களில் மிகவும் முக்கியமான ஒரு அம்சம் என்னவென்றால் உரையாடல்களின்  வேகம், Rapid fire exchanges என்று சொல்வோமே அந்த மாதிரி. கூரிய சொற்கள், உடன் மறுப்புகள், இவற்றை “நந்தன் கதை”, “ராமானுஜர்”, “அவுரங்கசீப்” எல்லா நாடகங்களிலும் காணலாம்.

  *   *   *         

அருணன்: முனைவர் ராஜகோபாலன் அவர்களே. இந்த நிகழ்ச்சி முழுவதும் இந்திரா பார்த்தசாரதி அவர்களுடைய பல்வேறு படைப்புகள் பத்தி நீங்கள் பேசினீர்கள். மற்றவர்களும் அவருடைய நாடகங்களைப் பற்றி அவர்களுடைய கருத்துக்களை சொன்னார்கள்.  பொதுவாக இந்திரா பார்த்தசாரதி  அவர்களுடைய மொழியைப் பற்றி சொல்லுங்களேன்.

 ராஜகோபாலன்: இந்திரா பார்த்தசாரதியை பொறுத்தவரைக்கும் படைப்பு என்பதே ஒரு சமூக செயல்பாடு என்று அவர் கருதுகிறார். ‘நான் தமிழில் எழுதுவதற்கு காரணம் பண்பாட்டு ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் நெருக்கமாக கருதுவதும், தமிழில் என்னால் என்னுடைய உணர்வுகளை, கருத்துக்களையும் சரியாக வெளிப்படுத்த முடியும் என்பதுதான். நான் எழுத வந்ததன் காரணம்’  என்று அவர் சொல்கிறார். ‘என்னுடைய அடையாளத்தைத் தேடுகிறேன். அது மட்டுமல்ல அதுவே எனக்கும் சமூகத்துக்கும் ஆன பொறுப்பாகும். ஒவ்வொருவரும் தங்களை சரியா தெரிந்துகொள்வதே முக்கியமான விஷயமாக இருக்க வேண்டும்’ என்கிறார்.

அருணன்:  ஒரு அடையாளத் தேடல்தான் தன்னுடைய எழுத்துகளுக்கான அடிப்படையான ஒரு காரணம் என்கிற மாதிரி சொல்கிறார்.

ராஜகோபாலன்:  ‘படைப்பு ஒரு சமூக செயல்பாடு. இது இயற்கையிலேயே தனிமனித, சமூக தார்மீகக் கடமையாகும். ஒரு எழுத்தாளருக்கு இது இன்னமும் முக்கியம். இரக்க உணர்வு, ஈடுபாடு, தெளிவு என்னிடம் இருக்க வேண்டும். ஒரு எழுத்தாளனாக என்னிடம் இதெல்லாம் இருக்கணும்’ என்று சொல்கிறார். இ. பா.வின் படைப்புகளில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது அவரது எளிமையான நடை.  இதை அவரே சொல்லும்போது அந்தக் காலத்தில் பண்டிதர்களின் கரடு முரடான நடைக்கு மாற்றாக இதைப் பார்க்க வேண்டும். அவர் படைப்புகள் வாசகர்களை மனதில் வைத்து எழுதியவை.  உண்மையில் சொல்வதென்றால் எளிமையாக எழுதுவதுதான் மிகவும் சிரமமானது. சிக்கல்களைக் கொண்டது. ஆனால் விளைவு? வாசகர்களுக்குக் கிடைக்கும் அற்புதமான படைப்புகள்.

அருணன்: ரொம்ப அழகாக சொன்னீர்கள் ராஜகோபாலன் அவர்களே. இந்திரா பார்த்தசாரதி என்கின்ற ஒரு எழுத்தாளர் தமிழ் இலக்கிய உலகிற்கு பல வகைகளில் பங்காற்றி இருக்கிறார். சாகித்ய அகாடமி பெல்லோஷிப் அவருக்கு வழங்கப்பட்டு இருக்கின்ற இந்த தருணத்தில் அகில இந்திய வானொலி சார்பாக இந்திரா பார்த்தசாரதியின் எழுத்துக்களைப் பற்றி எங்கள் நேயர்களுக்கு எடுத்து சொல்லுவதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு வாய்ப்பாக இருந்தது. நீங்கள் அவருடைய படைப்புகளை பற்றியும், குறிப்பாக அவருடைய சிறுகதைகளைப் பற்றியும், அவருடைய  மொழிநடையை பற்றியும் மிக அழகாக எடுத்துச் சொன்னீர்கள். ரொம்ப நன்றி. வணக்கம்.

ராஜகோபாலன்:  இந்திரா பார்த்தசாரதி பற்றி பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்த வானொலிக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


பங்கேற்றவர்கள்: 

அருணனஂ திரு 

முப்பது ஆண்டுகள் அகில இந்தியா வானொலியில் நிகழ்ச்சி அமைப்பாளராக பணிபுரிந்தவர்.  இலக்கிய விமர்சனங்களும், மொழிபெயர்ப்புகளும் செய்திருக்கிறார்.  தமிழ் சிறுபத்திரிகைகளிலும், நவீன தமிழ் நாடகங்களிலும் பங்களி்த்துள்ளார்.  ஆங்கிலம், ஃ பிரெஞ்ச், தெலுங்கு, மலையாளம் மொழிகள் அறிந்தவர்.  

ஆர. ராஜகோபாலனஂ 

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நவீன இலக்கிய பரப்பில் சிறுகதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு போன்ற தளங்களில் இயங்கிவரும் மூத்த எழுத்தாளர்.  ‘இயந்திரமாலை’ என்னும் சிறுகதைத் தொகுப்பையும், ‘அன்பெனும் விதை’ ‘கால்நடைக் கவிதைகள்’, ‘ஊழ்’ என்னும் மூன்று கவிதைத் தொகுப்புகளையும், ‘கவிதையும் புனைகதையும்’ என்னும் விமர்சனநூலையும் எழுதியவர்.  கவிஞர் ரவிசுப்பிரமாணியனின் தேர்ந்தெடுத்த கவிதைகளை ‘That was a Different Season’ என்னும் தலைப்பில்  ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்.   ‘ழ’, ‘கவனம்’ இலக்கிய இதழ்களுக்கு இணையாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.  முனைவர் பட்டம் பெற்றுள்ள ஆங்கிலப் பேராசிரியரான இவர் ‘ழ’ வெளியீடு மூலமாக நகுலன், ஞானக்கூத்தன், ஆத்மாநாம், ஆனந்த-தேவதச்சன் அவர்களுடைய கவிதைகளை பதிப்பித்த ஆசிரியர்களில் ஒருவர். 

சி. டி. இந்திரா

சென்னை பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையின்  தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர்.  இந்திரா பார்த்தசாரதியின்  ‘நந்தன் கதை’ யை ‘The Legend of Nandan’ என்ற ஆங்கிலத் தலைப்பிலும், ‘பசி’ யை ‘’Comfortable Illusions’ என்ற தலைப்பிலும் மொழிபெயர்த்துள்ளார்.  இவருடைய மற்ற மொழிபெயர்ப்புகள்: தமிழச்சி தங்கபாண்டியனின் கவிதைகளை ‘Internal Colloquies’ என்ற தலைப்பில்,  (பிரேமா ஜகந்நாதனுடன்) பேராசிரியர் மணவாளனின் ஆய்வு நூல் ‘இராமகாதையும்’ ராமாயணங்களும்’ ‘Ramayana: A Comparative Study’ என்ற தலைப்பில்,  ந. கோவிந்தராஜனின் ஆய்வு நூல் ‘அதிகாரமும் தமிழ்ப்புலமையும்’ ‘Colonial Authority and Tamil Scholarship’ என்ற தலைப்பில், பி. சிவகாமியின் குறுநாவல் ‘குறுக்கு வெட்டு’ ‘Cross Section’  என்ற தலைப்பில்,   (தி. ஸ்ரீராமனுடன்)  ஆர் சூடாமணியின் சிறுகதைகள் ‘The Solitary Sprout’ என்ற தலைப்பிலஂ.  இவருடைய சமீபத்திய மொழிபெயர்ப்பு,  ராஜம் கிருஷ்ணனின் பெண்ணிய ஆய்வு நூல் ‘காலம் தோறும் பெண்’, ‘Woman through the Ages’ என்ற தலைப்பில் Oxford University Press-ஆல் வெளியிடப்படவுள்ளது. 

தி. ஸ்ரீராமன்:  ஹைதராபாத் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆங்கிலப் பேராசிரியர் .  இந்திரா பார்த்தசாரதியின் ‘ராமாநுஜர்’, ‘அவுரங்கசீப்’, ‘மழை’, ‘போர்வை போர்த்திய உடல்கள்’ ஆகிய நாடகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளாரஂ   இவருடைய மற்ற மொழிபெயர்ப்புகள்: கிருத்திகாவின்  நாவல் ‘வாஸவேச்வரம்’, கே. பாரதியின்  நாவல் ‘ரங்கநாயகி’ ‘The Stone in the Backyard’ என்ற ஆங்கிலத் தலைப்பில்,  (பேராசிரியர் சி.டி. இந்திராவுடன்) ஆர் சூடாமணியின் சிறுகதைகள் ‘The Solitary Sprout’ என்ற தலைப்பிலஂ.      

Exit mobile version