அக்களூர் இரவியின் சிறுகதைகள் ‘ ரதியின் மன்மதன்”
அக்களூர் இரவியின் சிறுகதைத்தொகுப்பு ‘ரதியின் மன்மதன்’. பன்னிரெண்டு சிறுகதைகள் அடங்கிய எழுத்துப் படைப்பு. அக்களூர் இரவி ஆங்கிலம்- தமிழ், மொழிபெயர்ப்பில் உச்சம் தொட்டவர். கனவு நகரம் காஞ்சீபுரம் என்னும் அரிய கட்டுரை நூலைத்தந்தவர். வாசகர்கள் மத்தியில் உயர்வாகப் பேசப்பட்ட அந்த நூலை சந்தியா நடராஜன் வெளியிட்டார். சிறுகதைத் தளத்தில் அக்களூர் இரவி கூடுதலாய்ச் சாதிக்கமுடியும் என்பதை’ ரதியின் மன்மதன்’ வழி வாசகர்கள் அறிய வாய்க்கிறது. இப்படைப்பை நாற்கரம் வெளியிட்டிருக்கிறது. நாற்கரத்தின் நல்லு இதனை கவனத்தோடு கொண்டு வந்திருக்கிறார். இலக்கிய நட்பின் இமயம் தஞ்சாவூர்க் கவிராயரின் அணிந்துரையோடு இப்புத்தகம் வெளிவந்திருக்கிறது.’ ஜரிகை வேலைப்பாடுகளோ ஜோடனையோ இல்லாத, வாழ்வில் சந்திக்கின்ற மனிதர்களை எதிர்கொள்கிற நிகழ்வுகளைச் சொல்லும் கதைகள் இவை’ என்கிற அரியதொரு விளக்கத்தைத் தஞ்சைக் கவிராயர் வழங்கிருக்கிறார்.
முதல் சிறுகதை ‘விநியோகம்’. பிள்ளையாருக்குப் படைக்கும் குருக்கள் காலி நிவேதனத் தூக்கை சந்நதிக்குக் கொண்டு வருகிறார். பிள்ளையாருக்கு எதை வைத்துப் படைப்பது. தவறு நிகழ்ந்து விட்டது. அவசரத்தில் காலித்தூக்கை சைக்கிளில் மாட்டிக்கொண்டு கோவிலுக்கு வந்துவிட்டார். ஆபத்பாந்தவனாக உள்ளூர் பிரசிடெண்டின் மனைவி இரண்டு தூக்குகளில் சர்க்கரைப்பொங்கலும் கொத்துக்கடலை சுண்டலும் விநாயகரின் படையலுக்குக் கொண்டு தருகிறார். பிரசிடெண்டின் பையனுக்கு சிதம்பரம் காலேஜில் இடம் கிடைத்துவிட்டதாம். ஆகக் கடவுளுக்கு நன்றி சொல்லத்தான் அவர் வந்திருக்கிறார். ஆலய மணி வேக வேகமாக அடிக்கப்படுகிறது. கோவிலில் பசியோடு காத்துக்கொண்டிருந்த சேவார்த்திகளுக்குப் பிரசாத விநியோகம் உறுதிப்படுகிறது. தினம் தினம் பிள்ளையாருக்குத் தவறாமல் அபிஷேகம் செய்து , அமுது படைக்கும் குருக்கள்தானவர். ஒரே ஒரு நாள் தெரியாமல் நிகழ்ந்துவிட்ட தவறுக்காக அவர் தண்டிக்கப்படவில்லை. அன்று நிவேதனங்கள் அனைவருக்கும் வழங்கி அந்தக்கடவுளே குருக்களைக் காப்பாற்றி விடுகிறார். இப்படிப் போகிற ஒரு சுவாரசியமான கதை. விநாயகரையும் சிறுகதையில் அடிக்கடி பேச வைக்கிறார் இரவி.
கையெழுத்து என்று தலைப்பிட்ட ஒரு சிறுகதை. பள்ளியில் தரப்படும் ஸ்காலர்ஷிப் பணம் முப்பது ரூபாயை பெற்றுத் தன் தந்தையிடம் கொடுத்தனுப்ப வேண்டும். அதற்காகத் தந்தையும் மகனும் தலைமை ஆசிரியர் அறை முன்னர் கால் வலிக்க நிற்கிறார்கள். பையனுக்கோ வகுப்பில் பாடம் போய்க்கொண்டிருக்கிறது. ’வகுப்பைக் கவனிப்பதையும் விட ஸ்காலர்ஷிப் பணம் முக்கியமாகி விட்டதா உனக்கு’ எனத் தலைமை ஆசிரியர் அவனைத் திட்டுகிறார். முப்பது ரூபாய் பெரிய பணமாய் அவன் ஏழைத் தந்தைக்குப் பெரிய ஒத்தாசையாய் அமையுமே எனத் தீவிரமாய் யோசிக்கிறான். அவன் வகுப்பாசிரியர் அப்போது அங்கே வருகிறார். அவன்தான் வகுப்பில் முதல் ரேங்க் வாங்குபவன் என்பதை உறுதி செய்கிறார். உடன் தலைமை ஆசிரியர் ஆணையிடுகிறார். அவனுக்கு அந்த ஸ்காலர்ஷிப் பணம் பட்டுவாடா ஆகிறது . கையெழுத்துப்போட்டு அந்தப் பணம் பெற்றுக்கொள்ளத்தானே அப்பாவும் பள்ளிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். தந்தை தன் பெயரை ஒவ்வொரு எழுத்தாய் எழுதவே திணறிப்போகிறார். ’மூணாவது மட்டுமே படித்த அப்பா’ அந்த அப்பாவுக்கு மரியாதை செய்யும் மகன்.
அடுத்து ஒரு சிறுகதை..’ ரதியின் மன்மதன்’ இந்தத் தொகுப்பிற்குத் தலைப்பாக அமைந்து சிறக்கும் கதை. ஒவ்வொரு எழுத்தாளரும் வாசிக்கவேண்டிய அற்புதமான படைப்பு. படிக்கும் வாசகர்கள் நெகிழ்ந்து போவார்கள். இதனை ஒரு முத்திரைக் கதையாகவே சொல்லலாம்.படித்தவுடன் வாசகர் மனதில் அமர்ந்துகொள்ளும் தகுதி பெற்ற கதை. ஒவ்வொரு நிகழ்வையும் சித்திரமாய்ச் செதுக்கிய அக்களூர் இரவியை மனம் நிறைந்து பாராட்டலாம். ஐம்பது வயது முதியவர் சிறு கதையின் நாயகன். மணமாகாதவர்.மனம் விட்டுப்பேசவும் ஒரு ஆறுதல் கூறவும் அவருக்கு ஒரு துணை வேண்டும். அப்படி ஒரு பெண்ணும் அமைந்து விடுகிறாள். ஊரார் ஆயிரம் பேசுவர்தான். ஈவிரக்கமற்றது காலம். அவள் இறந்தும் விடுகிறாள். அம்முதியவர் அவளுக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு ஊர் திரும்புகிறார். அவரின் மன வலி யாருக்குத்தான் புரியும். அக்களூர் இரவி தத்ரூபமாக அந்த பாத்திரத்தை நம்மோடு அமர்ந்து பேச வைக்கிறார். உள்ளூரில் காமன் தீ உற்சவம் நிகழ்கிறது. அதனில் பாராளும் பரமன் ஈசனுக்குக் காதல் தீ மூட்ட முயன்று மன்மதன் தோற்றுப்போகிறான். ஈசனின் நெற்றிக்கண்ணின் தீயில் சாம்பலாகிறான். முக்கண்ணன் மன்மதனைச் சும்மா விடுவானா , மதுரையில் நக்கீரரை எரித்த நயனம்தானே அது.
மன்மதனின் ரதியோ தன் கணவன் சாம்பலாகிய சோகத்தைக் கொட்டித்தீர்க்கிறாள். முக்கடவுளரையும் அழைத்து நடந்துவிட்ட அநீதிக்கு நியாயம் கேட்கிறாள். மன்மதனுக்கு ஒரு காமக்கணக்கு. அதற்கு பரமனின் பதிலா இது , எங்கேனும் அடுக்குமா சொல்லுங்கள் தேவர்களே என்கிறாள். ஒரு நியாயம் கிடைக்கிறது. அவள் கண்ணுக்கு மட்டுமே தென்படும் கணவன் மன்மதன் கிடைத்துவிடுகிறான். போயும் போயும் இவனைப்போய் அந்தப்பெண் காதலித்தாளே என்று ஊரில் புலம்புவோம். அவள் கண்ணுக்கு அவன் எப்படித்தெரிந்தான் என்பது நாம் அறியமாட்டோம். ஈசன் கட்டளை அல்லவா அது. காதல் குருடு. இன்றும் நாளையும் என்றும் தான்.
உள்ளூர் கோவிலில் காமன் தகனம் முடிந்தது. அம்முதியவர் தன் துணைவி விடைபெற்றதை நினைத்துப்பார்க்கிறார். ரதி தன் மன்மதனுக்குக் காட்டிய அதே சோகரசத்தைக் கொட்டித்தீர்க்கிறார். அற்புதமான பாடல் வரிகள்.
’திருக்கணைகள் தாம் தொடுக்க
சிவனுடைய கண்ணாலே
தீயா யெரித்தாரோத்
தேமொழியே தாதிகளா..
முல்லையரும்போ
முகமெல்லாம் பிஞ்சரும்போ
கொல்லையரும்போ
கூடுவது மெக்காலம்
யெள்ளுக்குள் எண்ணெய்போலே
இருந்தோம் சிலகாலம்…
பாடிப்பாடி கேவி அழுகிறார் அம்முதியவர்.
தனக்கென அங்கீகாரமோ மதிப்போ மரியாதையோ நல்லதொரு வாழ்க்கையோ இல்லை., தனக்கிருந்த ஒரு துணையின் இழப்பை இந்தச்சந்தர்ப்பத்தில் ஆற்றாமையோடு, ரதி மன்மதன் பாடல்களை, அந்த ஒப்பாரிப் பாடல்களைப் பாடி மனத்தை இலேசாக்கிக் கொள்கிறாரோ? என்கிறார் இரவி. அற்புதமாய் வந்திருக்கிறது சிறுகதை.
அப்படி இருக்கக்கூடாது – என்கிற தலைப்பில் ஒரு சிறுகதை. கதிருக்குக் கிருஷ்ணன் என்கிற கல்லூரி நண்பன். அவன் குடும்பத்தில் தொடரும் துயரங்கள். இப்படிக்கூட நடக்குமா என்று நம்மைத் திடுக்கிடவே வைக்கின்றன. கிருஷ்ணனின் அப்பா இறந்து போகிறார். கிருஷ்ணனின் சகோதரிகளுக்குத் திருமணங்கள் தள்ளிக்கொண்டே போனது. எல்லாம் இருந்தும் குடும்பத்தில் நல்லது எதுவும் நடைபெறவில்லை. ஒரு நாள் லட்சுமி என்கிற அக்கா இறந்து போனாள். பிறகு ஜெயா அக்கா விடை பெற்றுக்கொண்டாள். சில நாட்கள் சென்றன. கிருஷ்ணனின் அம்மாவும் இறந்து போகிறாள். கிருஷ்ணன் அங்கும் இங்கும் எனக்கடன் வாங்கி காலம் தள்ளுகிறான். பெயர் கெட்டுப்போகிறது. ஒரு நாள் அவன் தம்பி, கிருஷ்ணனுக்கு உடல் நிலை சரியில்லை ஆக மருத்துவ மனைக்குக் கூட்டிக்கொண்டு போனதாக அக்கம் பக்கத்தார் சொல்கிறார்கள். அவர்களிடமிருந்து எந்த செய்தியும் பிறகு வர இல்லை. கைக்குழந்தையோடு ஒரு பெண் அவர்கள் வீட்டு வாசலில் நின்று குய்யோ முறையோ என்று சத்தம் போட்டுவிட்டுச்சென்றதாயும் கதிர் கேள்வி.ப்படுகிறான். இப்படி துயரப்படமட்டுமே சபிக்கப்பட்ட ஒரு குடும்பம். ஈவிரக்கம் வரண்டுபோன இயற்கையின் தீண்டல். இது விண்டுணரமுடியாத புதிர் என்கிறார் இரவி. வழிமொழிகிறோம் நாமும்.
‘வாழும் கலை’ சிறுகதை கலை வாழ்வதைப்பேசுகிறது. ஆயின் அக்கலைஞன் துயரத்தில் சுருங்கிப்போவதையும் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. ஒரு கலைஞன் ஒருத்திக்கு இரண்டு குழந்தைகளைக் கொடுத்துவிட்டு வேறு ஒருத்தியுடன் ஒடிப்போகிறான். அந்தத் தாயும் வேடம் கட்டி கூத்தாடுபவள்தான். அவள் பெற்ற மகன் தான் அந்த கிருஷ்ணமூர்த்தி. குறவன் குறத்தி டான்ஸ் பஃபூன் வேடம் என பல வேஷங்களைக் கட்டி ஆடுபவன். வள்ளித்திருமணம் நாடகத்தை முடித்துக்கொடுக்க மேடைக்குச் செல்கிறான். தன்னப்பெற்ற அன்னை இறந்து போகிறாள். கிருஷ்ணமூர்த்தி கலைத்தாயை வணங்கி அந்த நிகழ்வை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்கிறான்.அவன் அன்னையே தனக்கு இட்ட ஆணை இது என்கிறான்.
‘ஊசி மணி பாசிமணி ஐசலக்கா
விக்க விக்க வந்தோம் விக்க வந்தோம்
ஐசலக்கா லக்காடி
ஏமாத்தும் திருட்டும் ஐசலக்கா
எங்க மனதில் இருந்ததில்லை
ஐசலக்கா லக்காடி’
குற மக்களின் டால்டா டப்பாக்கள் மேடையில் ஒலியை ஓங்கி எழுப்புகின்றன. இரவிக்கு நாடகக்கலையில் ஆர்வம் இருக்கலாம் அப்படியும்கூட நமக்கு ஊகிக்க வாய்க்கிறது.
’நிலமென்னும் நல்லாள்’ என்கிற தலைப்பில் உள்ள சிறுகதைக்கு வருவோம். கிராமங்களில் வயல்களை விட்டு நகரங்களுக்கு வேலைக்கு வருகிறார்கள். ஒரு சாண் வயிற்றுப் பிழைப்புக்காக மக்கள் படும் துன்பங்களை எடுத்து வைக்கிறது இக்கதை. செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் ஒரு விவசாயி எத்தனை அவமானங்களை எதிர்கொள்கிறார் என்பதனை பிரத்யட்சமாகச் சொல்கிறார் இரவி. அவருக்கு டி்ப்ஸ் ஐம்பது ரூபாய் தர நினைக்கிறார் அது அவர் தன் மானத்தைக் காயப்படுத்திவிடுமோ என்று அஞ்சுகிறார். கொல்லானூரில் பத்து பேருக்குத் தன் வயலில் வேலை கொடுத்து வாழ்வளித்துக்கொண்டிருந்த காவிரி டெல்ட்டா விவசாயி ஒரு சாலையோர உணவு விடுதி வாயிலில் படும் அவமானங்கள் வாசகனை ரணப்படுத்துகின்றன.’ஊர்ல அவர் முன்னால நின்னு எவரும் பேசவே பயப்படுவாங்க’ என்று அந்தப்பெரியவரின் ஊர்க்காரர் சொல்லும் கொசுறு சேதி ஒரு விவசாயி சிறுத்துப் போய் நிற்பதை நம் கண்முன்னே காட்சியாக்குகிறது. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் சொன்ன பொய்யாமொழியாரைத்தான் வாசகன் எண்னிப்பாக்கிறான்.
யதார்த்தமான இயற்கை வருணனை. பிசிறில்லாத நடையழகு, சமுதாய உணர்வு கூடிய கதை மய்யம் என நகர்ந்து செல்லும் அக்களூர் இரவியின் சிறுகதைகள் வாசக மனதைச் சிறைப்பிடிக்கவே செய்கின்றன. ரதியின் மன்மதன் சிறுகதைத்தொகுப்பு அக்களூர் இரவியின் வெற்றிப்படைப்பாக அமைந்து சிறக்கிறது..
