ஓட்டம் தொடங்குமிடத்தில் மூன்று நாட்களாக இருந்த பரபரப்பு சற்றே குறைந்துதான் இருந்தது. 170 வீரர்கள் இருந்த இடத்தில் இப்பொழுது இரண்டே பேர். இருவரும் எழுபத்திரண்டு சுற்றுகள் ஓடி முடித்தாகிவிட்டது. அதிலும் கடைசிச் சுற்றை கிட்டத்தட்ட ஒரே நேரத்தில், சில வினாடிகள் இடைவெளியில்தான் இருவரும் முடித்திருந்தனர். எழுபத்து மூன்றாம் முறையாக மணி அடிக்கிறது. அடுத்தச் சுற்றை இருவரும் தொடங்கினர்.
நூற்றுக்கணக்கானோர் ஓடி ஓடிச் சுற்றுப்பாதையின் தன்மையே மாறிப் போயிருந்தது. போதாகுறைக்கு மழை வேறு. சில இடங்களில் பாதை இறுகிப் போய் இருந்தது. வேறு இடங்களில் சேறும் சகதியுமாய் ஆகி இருந்தது. இருவரும் தொடர்ந்து ஓடினர். பெரு வேகமெல்லாம் இல்லை. இயல்பாகவே இருவரும் சீரான கதியில் ஒவ்வொரு அடியாக முன்னேறத் தொடங்கினர்.
சற்று நேரத்தில் முடிவெல்லையை நோக்கி முதல் வீரர் ஓடி வருவது தெரிந்தது. குறித்த நேரத்திற்குள் இன்னுமொரு சுற்றை முடித்துவிட்டோமென்று பேருவகை எல்லாம் ஒன்றுமில்லை. தான் எடுத்துக் கொண்ட வேலையை முடிக்க வேண்டும் என்ற கவனம் மட்டும்தான் எல்லைக் கோட்டைத் தாண்டும் பொழுது அவர் முகத்தில் தெரிந்தது. ஆனால் இரண்டாவது வீரரை காணவில்லை. குறித்த நேரம் கடந்து போகப் போட்டி நிறைவுக்கு வந்தது. எழுபத்து நான்காம் முறையாக மணி அடிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது.
மூன்று நாட்களுக்கு மேல், முன்னூறு மைல்களைக் கடந்து ஓடி போட்டியில் ஒரே ஒரு வீரர் மட்டும் எஞ்சி இருக்கிறார். அவர் எல்லாரையும் விஞ்சி நிற்பவர்!
ஆஸ்டின் அருகேயுள்ள லிபர்டி ஹில் (Liberty Hill) என்ற ஊரில் இருக்கும் பேர் ரேஞ்ச்சில் (Bare Ranch) நடந்த ‘விஞ்சி நிற்பவன்’ (Last Man Standing) என்ற ஓட்டப் பந்தயத்தின் கடைசி நிமிடங்களின் வர்ணனைதான் மேலே இருப்பது. Bare Performance Nutrition என்ற நிறுவனத்தின் நிறுவுநர் நிக் பேர் (Nick Bare) புழக்கடைப் பேரோட்டம் (Backyard Ultra Marathon) என்ற வகை ஓட்டப் பந்தயத்தில் ஆர்வம் ஏற்பட்டு ‘Go One More Ultra’ என்ற பெயரில் ஒருங்கிணைக்கத் தொடங்கிய பேரோட்டப் பந்தயம் இது. சில வருடங்களே ஒருங்கிணைக்கப்பட்டு வந்தாலும் இந்த வகைப் பந்தயங்களில் புகழ் பெற்றவர்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொள்ள வரும் போட்டியா இது உருவாகி இருக்கிறது. நேரடியாகப் பார்க்கப் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றாலும் இதை இணைய வழியாகப் பல்லாயிரக்கணக்கானவர்கள் பார்த்து ரசிக்கிறார்கள்.
அதென்ன புழக்கடைப் பேரோட்டம்? பெரிய அளவில் ஆயத்தங்கள் தேவையில்லாத ஓட்டப் பந்தயம் என்பதால் நம் வீட்டின் பின்னாடியே கூட ஓடிவிடலாம் என்பதைக் குறிப்பது போல இந்தப் பெயர். இதன் விதிமுறைகள் மிகவும் எளிமையானவை. 4.167 மைல்கள் நீளமுள்ள ஓடுபாதை. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இதைச் சுற்றி வர வேண்டும். ஒரு மணி நேரத்திற்குள் அந்தச் சுற்றை முடிக்கவில்லை என்றாலோ அடுத்த சுற்று ஆரம்பிக்கும் பொழுது ஓடத் தொடங்கவில்லை என்றாலோ போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவீர்கள். மற்ற ஓட்டப்பந்தயங்களைப் போல இவ்வளவு தூரம் ஓட வேண்டும் என்ற கணக்கெல்லாம் கிடையாது. இறுதியில் ஒருவர் மட்டும் எஞ்சி நிற்கும் வரை ஓடிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். அதனால் பந்தயம் ஒரு நாளில் முடியலாம், இரண்டு நாட்கள் தொடரலாம் அல்லது இந்த வருடம் நடந்தது போல நான்காம் நாள் வரைக் கூடச் செல்லலாம். இது வெறும் உடல் வலிமை மட்டுமே சார்ந்த போட்டி இல்லை, மனவலிமை, தூக்கமின்மை என்று எல்லா விதத்திலும் நம்மைச் சோதிக்கும் பந்தயம்.
நான்கு மைல்கள் என்றில்லாமல் ஏன் 4.167 மைல்கள் நீளம்? ஒரு நாளைக்கு நூறு மைல் என்ற கணக்கு. நூறு மைல்களை இருபத்து நான்கு மணி நேரம் கொண்டு வகுத்தால் மணிக்கு 4.167 மைல். அதனால்தான் ஒரு சுற்று அவ்வளவு தூரம். பொதுவாகப் போட்டியாளர்கள் இந்தத் தூரத்தை 45 முதல் 50 நிமிடங்களுக்குள் ஓடிவிடுவார்கள். மீதமிருக்கும் பத்து நிமிடங்களில் ஓய்வெடுப்பது, நீர் அருந்துவது, உண்பது, துணிமணி காலணிகளை மாற்றிக் கொள்வது, தேவைப்படும் பொழுது கோழித்தூக்கம் என்று எல்லாவற்றையும் செய்து கொள்ள வேண்டும்.
அடுத்தச் சுற்றுக்கான மணி அடிக்கும் பொழுது தொடக்கப் புள்ளியில் நின்றாக வேண்டும். இல்லையேல் போட்டியில் இருந்து விலக்கப்படுவார்கள். அந்தச் சுற்றுக்கான ஒரு மணி நேரத்திற்குள் அத்தொலைவை ஓடி முடிக்கவில்லை என்றாலும் அதேகதிதான். ஒவ்வொரு மணி நேரமும் ஓடத் தொடங்குவது, ஓடி முடிப்பது, ஓய்வெடுப்பது, அடுத்தச் சுற்றுக்குத் தயாராவது என்று மீண்டும் மீண்டும் அரங்கேறிக் கொண்டே இருக்கும். இறுதியில் ஒருவர் மட்டுமே எஞ்சி இருக்கும் வரை.
சென்ற வருடம் இறுதிக் கட்டத்தில் கோஸ்டா ரிக்காவைச் சேர்ந்த கெண்டல் பிகாடோ பாலஸ் (Kendall Picado Fallas) என்பவரும் ஜெர்மெனியைச் சேர்ந்த கிம் கோட்வால்ட் (Kim Gottwald) என்பவரும் தலா ஐம்பத்து ஆறு சுற்றுகளை முடித்து அடுத்தச் சுற்றை ஆரம்பித்திருந்த நேரத்தில் இடியும் மின்னலுமாய் பெருமழை பெய்ய நிகழ்ச்சியின் பொறுப்பாளர்கள் பந்தயத்தை நிறுத்தி அவர்கள் இருவரையும் இணை வெற்றியாளர்களாக அறிவித்தனர். இந்த வருடம் இவர்கள் இருவரும் மீண்டும் மோதுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அமெரிக்கரான மார்க் டௌடில் (Mark Dowdle) தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் ஓடி எழுபத்து மூன்று சுற்றுகளை முடித்து விஞ்சி நிற்பவன் என்ற பட்டத்தை வென்றார். கெண்டல் அவரை விட ஒரே ஒரு சுற்று குறைவாக முடித்து இரண்டாமிடத்தில் வந்தார். கிம் ஐம்பத்தெட்டு சுற்றுகள் ஓடினார். ஆனால் இது போன்ற புழக்கடைப் பேரோட்டங்களில் ஒருவர் மற்றுமே வெற்றியாளர் என்று அறிவிக்கப்படுவார். மற்றவர்கள் ஒரு சுற்று மட்டுமே ஓடினாலும் சரி, வென்றவரை விட ஒரே ஒரு சுற்றுக் குறைவாக ஓடினாலும் சரி, பந்தயத்தை முடிக்காதவர் என்றே அறிவிக்கப்படுவர். இது போன்ற பந்தயங்களில் உலகச் சாதனை ஆஸ்திரேலியாவில் அந்நாட்டைச் சேர்ந்த பில் கோர் என்பவரால் கடந்த ஜூன் மாதம் கைப்பற்றப்பட்டது. அவர் கிட்டத்தட்ட ஐந்து நாட்களில் 119 சுற்றுகள், அதாவது ஏறக்குறைய ஐந்நூறு மைல்கள் ஓடி இச்சாதனையை நிகழ்த்தினார்.
இப்பந்தயங்களில் கலந்து கொள்பவர்களுக்கு இன்றியமையாத துணை அவரது அணியினர். போட்டி விதிகளைப் பொருத்து போட்டியாளர் ஒருவர் முதல் மூவர் வரை தனக்கு உதவி செய்ய சேர்த்துக் கொள்ள முடியும். ஆஸ்டின் போட்டியில் மூன்று உதவியாளர்களுக்கு அனுமதி இருந்தது. இவர்களை பார்முலா ஒன் போட்டிகளில் இடம் பெறும் உதவி அணியினருக்கு இணையாகச் சொல்லலாம். பங்கேற்பாளர் ஒரு சுற்று ஓடி முடித்தவுடன் இவர்கள் அவரை முழுமையாக தம் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்கின்றனர். இருக்கும் பத்து நிமிடங்களில் அவருக்குத் தேவையான நீர் உணவு போன்றவற்றை அளிப்பது, துணிமணிகளை மாற்ற உதவுவது, அவரைச் சிறு தூக்கத்திற்குப் பின் எழுப்புவது, இவற்றை எல்லாம் விட முக்கியமாக உளவியல் ஆதரவை அளிப்பது எனப் போட்டியாளரை முழுமையாகப் பார்த்துக் கொள்வது இவர்கள் வேலை.
ஆனால் இவர்களின் வேலை அவர் அடுத்தச் சுற்றினை ஆரம்பிக்கும் வரைதான். ஓடத் தொடங்கி விட்டால் பங்கேற்பாளர் தனி மரம்தான். அவருக்கு வெளியில் இருந்து எந்த விதமான உதவியும் கிடைக்காது. அப்படி ஏதேனும் நடந்தால் அவர் போட்டியில் இருந்து விலக்கப்படுவார். ஓடும் பொழுது தனக்கு வேண்டிய நீர், ஏதேனும் தின்பண்டம் போன்றவற்றை அவர் தன்னுடன் எடுத்துக் கொள்ளலாம். மற்ற மாரத்தான் போட்டிகளைப் போல வழியில் தண்ணீர்ப் பந்தல் எல்லாம் இங்கு இருக்காது.
இதில் இன்னுமோர் ஆச்சரியமான விஷயம், இப்போட்டிகளில் பெரிதாகப் பரிசுப்பணம் ஏதும் கிடையாது. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு பதக்கமோ அல்லது ஒரு சிறு பரிசுப் பொருளோ கிடைக்கும். அவ்வளவுதான். தங்களுக்குக் கிடைக்கும் பெயருக்காகவும் புகழுக்காகவும் மட்டுமே இவர்கள் இப்போட்டியில் கலந்து கொள்கிறார்கள். இதில் மிகப் பிரபலமான சிலருக்கு வேண்டுமானால் வணிக நிறுவனங்களின் ஆதரவு கிடைக்கலாம். ஆனால் இவர்களுக்கு அது இரண்டாம் பட்சம்தான். தம்மால் எவ்வளவு முடியும் என்பதை உணர்ந்து கொள்வது மட்டுமே இவர்களின் உந்துதலாக இருக்கிறது.
தரப் பட்டியலில் உயரத்தில் இருப்பவர்களுக்குப் போட்டியில் பங்கு கொள்ள அமைப்பாளர்கள் அழைப்பு விடுக்கிறார்கள். அது போக பொதுப்பட்டியலில் தங்கள் பெயர்களைச் சேர்ப்பவர்களில் இருந்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களும் போட்டியில் பங்கு பெற அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த வருடப் போட்டியில் 170 பேர் பங்கேற்றனர். அவர்களில் ஒருவர் நகுல் ராவ். முதன் முறை இது போன்ற பேரோட்டத்தில் பங்கு பெற்ற இவர் பத்தொன்பது மணி நேரத்தில் கிட்டத்தட்ட எண்பது மைல்கள் ஓடி முடித்தார். இந்த வகைப் பேரோட்டத்தில் இது இவருக்கு முதல் முறை என்றாலும் நீண்ட தூர ஓட்டம் இவருக்குப் புதிதில்லை. இதற்கு முன் அரை மாரத்தான், முழு மாரத்தான், நீச்சல் ஓட்டம் சைக்கிள் ஆகிய மூன்றும் சேர்ந்த டிரயாத்தலான், ஐயர்ன்மேன் போட்டிகள் என்று இவர் பல வகைப் போட்டிகளில் பங்கேற்றவர்தான்.
அவருடன் பேசிய பொழுது பங்கேற்பாளர்களின் கோணத்தில் இருந்து இப்போட்டி குறித்து அறியக் கிடைத்தது. எதற்காக இப்படி தன்னையே வருத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் இவரிடம் கேட்கப்படும் முதல் கேள்வி என்றார். அதற்கு எளிமையான பதில் ஒன்றினையும் வைத்திருக்கிறார். ஏன் வருத்திக் கொள்ளக் கூடாது என்பதுதான் அது. இப்படி தன் உடலை வருத்திக் கொள்வது தன்னை உடல் ரீதியாக மட்டுமின்றி தன்னை மொத்தமாகவே மேம்படுத்திக் கொள்ள ஒரு வழியாக இருக்கிறது. இதன் மூலம் தன் வாழ்வில் சோதனையான கட்டங்களில் நிதானமாகச் செயல்பட முடிகிறது என்கிறார் இவர். இப்போட்டிகளில் கலந்து கொள்வதும், அவற்றிற்காகப் பயிற்சி செய்வதும் தன் வாழ்வில் எத்தனையோ சுவாரசியமான சம்பவங்களைத் தந்திருக்கிறது. இந்தக் கதைகளைப் பகிர்ந்து கொள்வதும் கூட தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
இப்போட்டியில் கலந்து கொள்ளும் பொழுது தனக்கு இரண்டு குறிக்கோள்கள் இருந்தன. ஒன்று தன்னால் முடியாமல் போகும் வரை ஓடுவது, இரண்டாவது இருபத்து நான்கு மணி நேரங்கள் ஓடி நூறு மைல்களை நிறைவு செய்வது. இவற்றில் முதல் குறிக்கோளை அடைந்தது தனக்குத் தனிப்பட்ட முறையில் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. எத்தனையோ சமயங்களில் போதும் என்று நினைத்த பொழுது இன்னும் இன்னும் என்று தொடர முடிந்தது தனக்கே ஆச்சரியமளித்தது. நூறு மைல்கள் ஓட முடியாவிட்டாலும் ஒரே நாளில் கிட்டத்தட்ட எண்பது மைல்கள் ஓட முடிந்தது கூட தனக்கு மனநிறைவை அளித்தது என்று பெருமையாகச் சொன்னார்.
மற்ற பந்தயங்களைப் போலில்லாமல் இங்கு பங்கேற்பாளர்கள் இடையே எந்த விதமான போட்டி மனப்பான்மையும் இல்லை. ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்தார்கள். மற்றவர்களை இன்னும் ஒரு சுற்று ஓட உற்சாகப்படுத்தினார்கள். தம்மைப் பார்த்து மற்றவர்கள் ஓடுவார்கள் என்றெண்ணி தம்மையும் முனைந்து ஓட இதை வழியாகக் கொண்டார்கள். எல்லாரிடமும் உற்சாகப்படுத்தும் சொற்களும், புன்சிரிப்பும் எப்பொழுதும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. தனியாக ஓடும் பொழுது மற்றவர்கள் ஓடும் காலடிச் சத்தம் கூட உற்சாகப்படுத்தும் ஒலியாக இருந்தது என்று அவர் விவரித்த பொழுது ஆச்சரியமாக இருந்தது.
நகுல் இப்போட்டியில் தான் பெற்ற படிப்பினைகள் பற்றியும் பேசினார். இப்போட்டிக்கு தயார் படுத்திக் கொள்ள தனக்கு பத்து வாரம் கூட நேரம் கிடைக்கவில்லை. அந்நேரத்தில் ஒரு சிறிய வட்டத்தில் தொடர்ந்து ஓடுவது, பல மணி நேரம் ஓடுவது, போட்டியைப் போன்ற சூழல் அமைத்துக் கொண்டு ஓடுவது, செயல்திறனை அதிகரிக்கும் வகையில் ஓடப் பழகுவது என்று தன்னைத் தயார் செய்து கொண்டதாகச் சொன்னார். அடுத்த முறை இன்னும் என்னவெல்லாம் செய்ய வேண்டும், எப்படித் தன்னை இன்னும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் பெற்ற பாடங்களில் முக்கியமானது என்றார். இவ்வருடத்தில் இன்னும் பல போட்டிகளில் பங்கேற்கப் போவதாகவும் முக்கியமாக ஜியார்ஜியா மரணப் பந்தயம் என்று அழைக்கப்படும் போட்டியில் கலந்து கொள்ளப் போவது குறித்து விவரித்தார். மலைகளில் எழுபத்து நான்கு மைல்கள் ஓட வேண்டும், கிட்டத்தட்ட பதினாறாயிரம் அடி உயரம் ஏறி இறங்க வேண்டும் என்று அவர் விவரித்த பொழுது எனக்கு வியர்த்து விறுவிறுத்து விட்டது.
நமக்கு அவர் சொல்லும் அறிவுரை, நம்மைத் தன்னம்பிக்கை இழக்கும் வகையில் பலரும் பேசுவர், அறிவுரை தருவர். ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் நாம் வளரத் திட்டங்களைத் தேர்ந்தெடுத்துச் செயல்படுத்த வேண்டும். ஓட்டம் மட்டும்தான் என்றில்லை. உங்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதைச் செய்யுங்கள். ஆனால் காலம் தாழ்த்தாமல் செய்யத் தொடங்குங்கள். வட்டிக்கு வட்டி என்பது நிதி மேலாண்மை மட்டுமில்லை நம் பழக்க வழக்கங்களுக்கும்தான். என்ன செய்கிறீர்களோ, உங்களால் முடியும் வரை அதைச் செய்யுங்கள். நிறுத்த நினைக்கையில் இன்னும் ஒரு சுற்று ஓடுங்கள் என்று அவர் சொன்னது எழுச்சியூட்டும் சொற்களாக இருந்தது.
இந்தப் புழக்கடைப் பேரோட்டத்தின் அடிநாதமும் அதுதானே.

