குழந்தையற்றவள்
பொம்மை விற்கிறாள்
விதி
கவிஞர்: ரென்செண்ட்சு (1654 – 1707)
உமஸுமெனொ
ஹினாகஷிட்சுகுசொ
அவரெனரு
石女の
雛かしづくぞ
哀れなる
கிரிகோரியன் நாட்காட்டியின்படி ஒரு மார்ச் 3ம் தேதி, பழைய ஜப்பானிய நாட்காட்டியின்படி மூன்றாம் மாதத்தின் மூன்றாம் தேதி பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அதே நாள் ஹினா மட்சுரி என்னும் பெயரில் பொம்மைகள் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. ஹினா என்றால் பொம்மைக் குழந்தை (பெண்), மட்சுரி என்றால் திருவிழா, பண்டிகை. அந்த நாளில் ‘ஹினா’ பொம்மைகளை வாங்குவது ஜப்பானிய மரபு.
ஜப்பானில் பெண் குழந்தைகள் தினம் உள்ளதைப் போல, ஆண் குழந்தைகள் தினமும் உண்டு. அது மார்ச் மாதம் ஐந்தாம் தேதி கொண்டாடப்படுகிறது. சமகால அணுகுமுறையில் பெண் குழந்தைகள் தினம், ஆண் குழந்தைகள் தினம் இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டு குழந்தைகள் தினம் என மார்ச் ஐந்தாம் தேதி கொண்டாடப்படுகிறது.
ஜப்பானிய மொழியில் ‘ஹி’ என்னும் வார்த்தை தினத்தையும் குறிக்கும்.
ஒன்னா – பெண், ஹி – தினம், ஒன்னனொஹி – பெண் குழந்தைகள் தினம்.
ஒதோகோ – ஆண், ஒதோகோனொஹி – ஆண் குழந்தைகள் தினம்.
கொதொமோ – குழந்தை, கொதோமோனிஹி – குழந்தைகள் தினம்.
ஹினா – பொம்மைக் குழந்தை, மட்சுரி – திருவிழா, ஹினா மட்சுரி – பொம்மைத் திருவிழா
ஹினா மட்சுரியின் ஒரு காட்சியை இந்த ஹைக்கூ எழுதிக்காட்டுகிறது.
பெண் குழந்தைகள் தினமும், பொம்மைத் திருவிழாவும் இணைத்துக் கொண்டாடப்பட்ட அன்றைய ஜப்பானில், ஒரு பெண் விற்பதற்காகப் பொம்மைகளை அடுக்குகிறாள். குழந்தைகளை மகிழ்விக்கப் பொம்மைகளை விற்கும் அவள் பிள்ளையற்றவள். அவளை விதி, குழந்தைகள் சூழ்ந்திருக்கும் தொழிலைச் செய்யவைத்தது அவளுடைய குழந்தையின்மைக்கு ஆறுதல் அளிக்கவா அல்லது தனக்கு ஒரு குழந்தை இல்லையே என வருத்தப்படவா என்னும் கேள்விக்கு ஹைக்கூவில் விடையில்லை. விடையை வாசகனின் பார்வைக்கு விட்டபடி ஹைக்கூ ஹினா மட்சுரியின் ஒரு காட்சியைத் திரைப்பிடிப்புச் செய்துவிட்டு நகர்ந்துவிடுகிறது.
இந்த ஹைக்கூவின் முதல் வார்த்தை ஜப்பானிய காஞ்சி வரிவடிவத்தின் நுட்பத்துக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு.
石女の உம சுமெ னொ என ஐந்து எழுத்துகளைக் (அசைகளை) கொண்ட அடி. இதில் கடைசி எழுத்து னொ ‘இன்’ எனவும் ‘உடைய’ எனவும் பொருளேற்கும். அதற்கு முன் உள்ள 石女காஞ்சி எழுத்துகள் うま + ずめ என இரண்டு காஞ்சி வரிவடிவங்களின் கூட்டு. うஉ, まம = 石உம. ずசு, めமெ = 女 石 சுமெ.
உமசுமெ என்றால் பிள்ளையில்லாதவள்.
உமசுமெவில் இடம்பெறும் காஞ்சி வரிவடிங்கள் 石女 இரண்டும் இப்படி அடுத்தடுத்து நிற்கையில்தான் அது உமசுமெ எனும் சொல்லாகிப் பிள்ளையில்லாதவளைக் குறிக்கும். அதன் ஒலிப்புகளும் ‘உமசுமெ’ ஆகும். தனித்தனியாக 石 யும், 女 யும் வெவ்வேறு பொருள்களைக் குறிக்கும். அவை இணைந்துதான் பிள்ளையில்லாதவள் என்னும் சொல்லை உருவாக்குகின்றன.
石 தனியான காஞ்சி வரிவடிவத்தின் ஒலிப்பு இஷி – இ い, ஷி し. பாறை, கல், கூழாங்கல், நகைகளில் பதிக்கப்படும் கல், இப்படியாகப் பொருள்படும். கற்சிலை, பெட்ரோல், நிலக்கரி எனப் பலவும் பாறைகளுடன் தொடர்புள்ளவையாதலால் அந்த வார்த்தைகளிலும் 石 ‘இஷி’ இடம்பெறும்.
女 தனியான காஞ்சி வரிவடிவத்தின் ஒலிப்பு ஒன்ன – ஒ お, ன்ん, னな. பெண், மகள், பெண்குழந்தை, அரசி, கணவன்-மனைவி எனப் பெண்ணைக் குறிப்பிடும் அனைத்துச் சொற்களிலும்女 ‘ஒன்ன’ வெவ்வேறு ஒலிப்புகளில் இடம்பெறும்.
கல்லால் வடிக்கப்பட்டப் பெண்சிலையைக் குறிப்பிடவும் ஜப்பானிய மொழியில் இதே 石女 இரண்டு காஞ்சிகள்தான் பயன்படுகின்றன. ஆனால் அதன் ஒலிப்பு ‘செகிஜ்யோ’ அல்லது ‘ஷாகுனியோ’ என இடத்துக்கு இடம் மாறுபடும்.
இங்கு 石女 தரிசுப்பெண் (மலடி) எனப் பொருள்படுகிறது.
முதல் அடி 石女の உமெசுமெனொ, குழந்தையற்றவள்.
இரண்டாவது அடி 雛かしづくぞ. இதில் முதல் எழுத்து மட்டும் 雛 ஹி ひ, னா な ஹினா என்னும் காஞ்சி, மற்ற ஐந்தும் ஹிராகனா வடிவில் ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு அசை. 雛 ஹினா என்னும் இந்தச் சொல் இங்கு ஹினா மட்சுரி என்னும் பொம்மைத் திருவிழாவில் விற்கப்படும் பாரம்பரிய பெண் குழந்தைப் பொம்மையைக் குறிக்கும். இதே காஞ்சி வடிவம் பறவைக்குஞ்சு, இளந்துறவி, சிறிய மாதிரி வடிவங்கள் இவற்றையும் குறிப்பிடப் பயன்படும்.
கか, ஷிし, ட்சு づ, கு く, சோ ぞ, கஷிட்சுகுசோ – கவனமாகக் கையாள்வது. இங்கு பொம்மைகளை அடுக்கும் காட்சியைச் சொல்கிறது.
இரண்டாம் அடி 雛かしづくぞ, ஹினாகஷிட்சுகுசொ, பொம்மைகளை அடுக்குகிறாள்.
மூன்றாம் அடியின் முதற்சொல் அவரெ என்னும் கவலை. 哀れあわ ஒரு காஞ்சி ஒரு ஹிராகனா, முதல் எழுத்து காஞ்சி 哀 – அ あ, வ わ என இரண்டு ஹிராகனா வரிவடிங்களைய் உள்ளடக்கியது. அதனுடன் ரெ れ இணைந்து கவரெ என வார்த்தை முற்றுப்பெறும். ‘அவரெ’யின் பொருள் கவலை.
நரூ, நな, ரூる, ஆகுதல்.
கவரெநரூ – கவலையாகுதல்.
(1)
石女の
மசுமெனொ
பிள்ளையற்றவள்
(2)
雛かしづくぞ
ஹினாகஷிட்சுகுசோ
பொம்மைகளைக் கவனமாகக் கையாள்கிறாள்
(3)
哀れなる
அவரெநரூ
கவலையாகியது
இவை வார்த்தைக்கு வார்த்தை நெருங்கிய மொழிமாற்றம்.
ஹைக்கூவின் பொருளையும் ஹினாமட்சுரி திருவிழாப் பின்னணியையும், பாரம்பரியப் பொம்மை விற்பனையையும், குழந்தையற்றவளின் மனவோட்டத்தையும் உள்வாங்கிய மொழிமாற்றமெனில்,
குழந்தையற்றவள்
பொம்மை விற்கிறாள்
விதி
