‘It is often said of a man that his work is autobiographical in spite of every subterfuge. It cannot be otherwise…even though it may be totally without reference to himself.
Wallace Stevens, Necessary Angel
உலகம் பிறந்தது எனக்காக…
கண்ணதாசன், பாசம் திரைப்படப் பாடல்
எண்பதுகளில் விட்டல் ராவ் தொகுத்த இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள் தொகுப்பில்தான் விமலாதித்த மாமல்லனை முதன்முதலாக வாசித்ததாக நினைவு. ’சிறுமி கொண்டு வந்த மலர்’-கதையை அப்போது வாசிக்கையில் விசித்திரமாக இருந்தது. யதார்த்தத்தின் மீது ஒரு நுட்பமான மாயப் படலம் போர்த்தப்பட்டது போல் இருந்தது அக்கதை. எண்பதுகளின் இறுதியில் டில்லியில் மாமாவின் வீட்டில் தங்கியிருக்கையில் முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது. பதின்பருவத்தின் விரக்தியில் ஆழ்ந்திருந்த என்னை புறப்பாடு கதையே மிகவும் வசீகரித்தது. மச்சியின் நகைச்சுவை மிளிரும் பேச்சு அந்த விரக்தியை தற்காலிகமாகவேனும் மறக்கச் செய்தது. பெட்டர் கால் சால் போன்றதொரு வெப்சீரீஸில் நாயகனாக இருக்க வேண்டியவன் மச்சி. பாவம் உலகம் கண்டுகொள்ளாத பழைய தமிழ்ச் சிறுகதையில் தன் ஜாலங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறான். அதன்பின், மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்ற பிறகு அவரை அனேகமாக வாசிக்கவே இல்லை என்று நினைக்கிறேன். சுந்தர ராமசாமியுடன் கடிதத் தொடர்பில் இருந்தபோது அவர் ஒருமுறை மாமல்லனை, அவர் இந்தியா நெடுக சைக்கிளில் பயணித்ததை, குறிப்பிட்டதாக நினைவு. படித்து முடித்து பணியாற்றிக் கொண்டிருக்கையில்தான், தமிழ் இலக்கியத்தை மீண்டும் வாசிக்கத் தொடங்கியபோதுதான், அவர் கதைகளை மீண்டும் வாசித்தேன், தொண்ணூறுகளின் ஆரம்பம் வரை அவர் எழுதிய அனைத்தையுமே வாசித்தேன் என்று நினைக்கிறேன்.
பெரும்பாலும் ஒற்றைச் சொல் தலைப்புகளைக் கொண்ட (குப்பை, இலை, சத்தம், வயிறு, வலி…) ஆரம்பகாலக் கதைகள் ஆயத்தங்களாகவே எனக்குப் பட்டன. கதைபோல் அல்லாத கதையை எழுதுவதற்கான ஆயத்தங்கள். யதார்த்தத்தின் ஒரு கீற்றை மிகத் துல்லியமாக எழுத்தில் கொணர்வதற்கான ஆயத்தங்கள். இலை போன்ற கதைகளில் அன்றாட பேச்சினூடே நுட்பமான, அங்கதம் தோய்ந்த ஒரு சமூக விமர்சனம் திரண்டு வருவது இவர் பாணிக்குக் கட்டியம் கூறுகிறது. வயிறு போன்ற கதைகளில் அசோகமித்திரனின் பாதிப்பையும் நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது. அந்தக் காலத்தில் இருந்த நவீனத்துவத்தின் பாதிப்பு, குறிப்பாக அதன் மினிமலிஸப் பாணி என்றும் இவற்றை வகைப்படுத்திக் கொள்ளலாம். சிற்றிதழ்களால் உந்தப்படும் இளைஞன் சுவீகரித்துக்கொள்ளும் பாணி.
உணர்வுரீதியாக வலி கதையில் ஒரு நகர்வு நிகழ்கிறது. பாத்திரத்துடன் ஒன்றுவதற்கான சாத்தியங்களைக் கதை லாகவமாகக் கட்டமைத்துக்கொள்கிறது. கு. அழகிரிசாமியை நினைவுபடுத்தியது. 1981-இல் கல்கி நினைவு சிறுகதைப் போட்டியில் பரிசு வென்ற கதை. சின்னப்பையன் பார்வையில் அவன் தோளில் கேமராவை வைத்து ஷூட் பண்ணியதுபோல் 2 1/2 அடியிலேயே நகரும் கதை என்று சுஜாதா சரியாகவே அவதானித்திருக்கிறார். கதையின் ஆரம்பத்தில் சிறுவன் எழுப்பிக்கொள்ளும் மனக்கோட்டைகளுக்கும் அதன் இறுதியில் நிகழும் அவற்றின் தகர்வுக்குமிடையே விரியும் கதையில் ஒரு நல்ல சிறுகதைக்கான அடர்த்தியும் இயல்பாக அமைந்திருப்பதே அதை ஒரு அழகான கதையாக நிலைக்கச் செய்கிறது.
இடைவெளி கதையில் அதே சிறுவன் அவனே அறியாது வேறு சில மனக்கோட்டைகளைக் கட்டிக்கொள்கிறான். பாலுணர்வின் துளிர்ப்பைக் கச்சிதமாகக் கைப்பற்றும் இக்கதையிலும் அம்மனக்கோட்டைகள் தகர்க்கப்படுகின்றன. இச்சிறுவன் பெரியவனானால் எப்படி இருப்பான் என்று யோசித்துப் பார்த்தேன். இடைவெளி கதைக்கு முன்னால் வந்த சத்தம் கதையில் பெண் என்கிற விஷயம் தன்னை மிகவும் கஷ்டப்படுத்துவதாகவும், அதைத்தாண்டி வரமுடியாது என்றும் ஆதங்கப்படும் வாலிபனை நினைத்துக்கொண்டேன்.
போர்வை கதையில் அன்றாடத்தின் நடைமுறைச் சிக்கல் ஒரு அபத்த வகை நாடகமாக விவரிக்கப்படுகிறது. கீழ்வீட்டில் சாவு விழுந்துவிடுகிறது. மேல்வீட்டில் வசிக்கும் ராவ்ஜி குடும்பத்துக்கு, இழவு வீட்டில் அடுப்பு பத்தவைக்கக் கூடாதென்றால், சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்ற பெரும் இருத்தலியச் சிக்கல். சிக்கலும் அதற்கான தீர்வும் மிக வேடிக்கையாக (திலீப் குமாரின் தீர்வு ஒரு கணம் மின்னி மறைந்தது) கதையை ஆக்கிரமித்தாலும் ராவ்ஜியின் அடிப்படைச் சிக்கல் கதையில் நுட்பமாகச் சுட்டப்படுகிறது. கதையின் இறுதியில் போர்வையை இழுத்துவிட்டுக்கொண்டு கண்களை இறுக மூடிக்கொள்வதே ராவ்ஜியின் தீர்வாக இருக்கிறது.
ஃபிலிப் லார்கினின் (Philip Larkin) பிரசித்தி பெற்ற “Talking in bed” கவிதை இப்படி ஆரம்பிக்கிறது: “Talking in bed ought to be easiest, /Lying together there goes back so far”; அறியாத முகங்கள் கதையை (மூர்த்தியின் கனவில்) படுக்கையில் ஆரம்பித்து வைக்கும் தம்பதியர் நிறையவே பேசிக்கொள்கிறார்கள், ஆனால் பொருளாதாரம் படுக்கையில் மூன்றாவது நபராகத் தன்னை இருத்திக்கொள்வதே பிரச்சினை. பணத்தட்டுப்பாடு வன்முறையில் சென்று முடிகிறது என்பது வெளிப்படை. ஆனால் கதையின் நுட்பம் இரண்டாம் பகுதியில்தான் பொதிந்திருக்கிறது. மூர்த்தியின் நனவு, அவன் குடும்பத்தில் அதிகம் பேசிக்கொள்வதில்லை. இங்கும் பல்பொடிக்குப் பதில் உப்பை உபயோகிக்க வேண்டிய தட்டுப்பாடு. குளித்து முடித்து விளக்குகளைத் தேய்த்துக்கொண்டிருக்கும் அம்மாவின் கண்கள் ஏன் சிவந்திருக்கின்றன என்று நாம் யோசிக்கிறோம். லார்கினின் கவிதையின் இறுதி வரிகளே நினைவுக்கு வருகின்றன:
Nothing shows why
At this unique distance from isolation
It becomes still more difficult to find
Words at once true and kind,
Or not untrue and not unkind.
அறியாத முகங்கள் நம் மனதில் பரிச்சயமான, நன்றாகவே அறிந்த, முகங்களை நிழலாடச் செய்கிறது.
சரிவு கதையில் தான் ஒரு பெரிய பொந்தில் வசித்துக் கொண்டிருப்பதாக இளைஞன் ஒருவன் ஒரு காஃப்கா தருணத்தில் உணர்ந்துகொள்கிறான். ஆனால் இறுதியில் வசிக்கும் இடத்தைக் காட்டிலும் இருண்மையான பொந்தாக தன் மனதை அவன் உணர்கையில் கதை ஒரு வெறுமையை விட்டுச்செல்கிறது.
தசாப்தங்களாகப் பணியின் செக்குமாட்டு நியமத்தில் உழன்றுகொண்டிருப்பவர்களுக்கு அதிலிருந்து ஒய்வு கிட்டுகையில் அன்றாடத்தில் ஏற்படும் நியமப் பெயரவு ஏற்படுத்தும் அதிர்வை நியமம் பதிவுசெய்கிறது. குமாஸ்தா வாழ்வைப் பகடி செய்தாலும் அந்த உப்புசப்பில்லாத வாழ்விலும் மனிதர்கள் தங்களை எப்படிப் பொருத்திக் கொள்கிறார்கள் என்பதையும் கதை பதிவுசெய்கிறது. சுந்தரம் ஐயர் தான் பார்க்கும் ஃபைல்களில் அர்த்தத்தையும் அன்னியோன்யத்தையும் கண்டடைகிறார். “வரைகின்ற ஓவியத்தை இடையில் நிறுத்தி விட்டு, சற்றுத்தள்ளி நின்று நோக்கும் சைத்ரீகனைப் போலப் பார்த்தபடி” இருக்கும் ஐயரையும் கதை சித்திரிக்கிறது. ஃபைல்களைப் புரட்டுகையில் கையெழுத்துடன் தம் நினைவுகளும் அவற்றில் பொதிந்திருப்பதை ஐயர் உணர்கிறார். இக்கதையிலும் போர்வைக்குள் ஒடுங்குவதே தீர்வாக இருக்கிறது.
இழப்பு கதையே இவர் எழுதிய சினிமாத்தனமான கதையாக இருக்கலாம். காதலி வேறொருவனைக் கல்யாணம் செய்துகொள்கிறாள், சொல்லிவைத்தாற் போல் அவன் சூதாடியாக இருக்கிறான். பிறகென்ன “இருபத்தியெட்டு வயதிலேயே நார்நாராகிவிட்ட” அவளை இவன் பார்க்க வருகிறான். அவள் குழந்தையுடன் இவன் கனிவாக இருக்கிறான் — புது செருப்பு, உடை, ஐஸ்க்ரீம் இத்யாதி… வீடு திரும்புகையில் கணவன் இருக்கிறான். வழக்கமான மோசமானவன் உதிர்க்கும் “வெளியே போடா” டயலாக். பெண் அழுகிறாள். காதலன் திரும்பிப் பார்க்காமல் வேகமாக நடக்கிறான். இழப்பு வாசகனுக்கே என்று நினைத்துக் கொண்டேன்! பெரியவர்கள் குறுநாவலில் கணவனிடம் அவதிப்படும் சக்குபாயை நினைத்துக் கொண்டேன். அதை எழுதியவரா இதை எழுதினார் என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டேன்.
ஜே ஜே சில குறிப்புகள்-ன் பாலு நோய்வாய்ப்பட்டு அறையில் படுத்திருக்கையில் மலையின் பின்னிருந்து எழுவது போல் எழுந்து அறையின் ஜன்னலோரத்தில் ஒலிக்கும் வீணையின் சோக மீட்டல்களின் மீதேறி அறையைவிட்டுப் பயணிக்க கற்பனையில் எத்தனிக்கிறான். பலாமரமும் ரோடு இன்ஜினும் கதையின் நோய்வாய்ப்பட்டிருக்கும் நாயகனும் ஜன்னலோரம் படுத்திருக்கிறான். ஆனால் இங்கு வெளியே தெரியும் காட்சிகளினூடே கற்பனை நினைவிலும் நனவிலும் பயணிக்கிறது. கதையின் இறுதியில் உடலின் கையாலாகாத்தனம் மனதில் படர்கையில் கதைக்கு ஒரு புதிய பரிமாணம் கிட்டுகிறது.
எதிர்கொள்ளல் கதையில், கதையைவிடக் கதையின் களமே சுவாரசியமாக இருந்தது. நைட் ஷோ முடிந்து மவுண்ட் ரோடிலிருந்து கே.கே. நகருக்குக் கால்நடையாகச் செல்வதைக் காட்சிப்படுத்தும் கதை. அண்மையில் வெளிவந்த ஆபீஸ் நாவலில் இப்பாணி சென்னையின் பிற பகுதிகளுக்கு நம்மை வழிநடத்திச் செல்லும். ஜாய்ஸ் ஒருமுறை டப்ளின் ஒருக்கால் அழிந்துவிட்டதென்றால் அதைத் தன் நாவல்களிலிருந்து மீண்டும் கட்டமைக்க முடியும் என்று பெருமைப்பட்டுக் கொண்டார். Flaneur என்ற ஒரு பிரெஞ்சுப் பதமுண்டு, இலக்கின்றி பராக் பார்த்துக்கொண்டு உலவுபவன் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். ஆபீஸ் படைப்பில் சென்னையின் Flaneur-ஆக உருமாறும் மாமல்லனுக்குக் கட்டியம் கூறும் கதை.
குமாஸ்தாவாக இருந்தவர்கள், இருக்கிறவர்கள், இருக்கப்போகிறவர்கள், அவர்கள் குடும்பத்தார், அவர்கள் அன்றாடம் சந்திக்கும் நபர்கள், அவர்களின் அன்றாடப் பேச்சுமொழி, பொருளாதார இக்கட்டுகள், அவற்றால் ஏற்படும் உறவுச்சிக்கல்கள் இவையே பெரும்பாலும் இக்கதைகளில் மீண்டும் மீண்டும் வருகின்றன. மொழியின் துல்லியம், அன்றாடத்தைக் கதையாக உருவகித்தல், வாழ்வை ஒரு பொந்தாக உணர்ந்து கொள்ளும் ஒரு தருணம் என்று இக்கதைகளின் அம்சங்களாகப் பொதுமைப் படுத்தலாம். அப்பொந்திலிருந்து தப்பிப்பதற்கான விழைவுகள்கூட இக்கதைகளில் இல்லை என்பது சற்று சலிப்பூட்டுவதாக இருந்தது. சென்னையே No exit போடப்பட்டிருக்கும் சார்த்தின் நரகமாக மாறிவிட்டதோ என்று சந்தேகப்படவைக்கும் அளவிற்கும் அவநம்பிக்கையில் தோய்ந்திருக்கும் கதைகள். தெரிந்ததை எழுது என்பதைத் தாரக மந்திரமாக ஏற்றுக்கொண்டிருப்பவர் என்று தெரிகிறது. தெரிந்ததிலிருந்து தெரியாததை, கதை சொல்லும் பாணியிலாவது, வித்தியாசமாக முயன்று பார்க்கமாட்டாரா என்று ஏங்குகிறோம்.
அவ்வேக்கத்திற்கு செவிமடுத்தது போல் தாஸில்தாரின் நாற்காலி, உதிரிக்கூட்டம் கதைகளில் பாணியில் சில வித்தியாசங்களை முயன்று பார்க்கிறார். முன்னது அஃறிணைப் பொருள் தன்மையில் அரசு அலுவலங்களில் நிகழும் அவலங்களைப் பகடி செய்யும் கடிதமாக விரிகிறது. பேருந்தில் தன்னை நிகழ்த்திக்கொள்ளும் பின்னதில் முடியும் தருவாயில் கதை அதன் இலக்கிய மரபிற்கு, புதுமைப்பித்தனின் பொன்னகரத்திற்கு, ஒரு சலாம் வைக்கிறது.
அப்பா கருப்பு வெள்ளை டிவி வாங்கியிருந்த சமயத்தில் ஒளியும் ஒலியுமில் பி.பி..ஶ்ரீனிவாஸ் ஜானகி குரலில், பாலாஜி விஜயகுமாரி ஓவர் ஆக்டிங் செய்தைதைப் பார்த்ததாக நினைவு: “பொன் என்பேன் சிறு பூவென்பேன்” பாடல். மாமல்லன் என்றால் முதலில் ஞாபகத்துக்கு வருவது என்னும் அளவிற்கு பிரசித்திபெற்ற சிறுமி கொண்டுவந்த மலர் கதையில் பொன் பூவாக மாறுகிறது. முதல்முதலாக இவர் கதை நம்பிக்கையை வாசகனிடத்தே விட்டுச்செல்கிறது. மாய யதார்த்தக் கதை என்றும் வகைப்படுத்தலாம். எண்பதுகளில் பிரசித்தமாகி பின்னர் முறையற்ற புழக்கத்தால் மலினமாகிவிட்ட முறைமை. மாயத்தை யதார்த்தமாக நிறுவ அனைத்துமே கலையில் கச்சிதமாகக் கூடிவர வேண்டும். சேட்டும் அவர் கடையும் மிகத் தத்ரூபமாக நிறுவப்பட்டிருப்பதே அந்த மாயத்தை வாசகன் இயல்பாக ஏற்றுக்கொள்வதற்கு வழிவகுக்கிறது. நல்லகதை தன்னளவில் முற்றிலும் நிறைவான ஒரு உலகைக் கட்டமைக்க வேண்டும். அவ்வுலகில் அக்கதையின் விதிகள் இயல்பாகவே உணரப்படும். சிறுமி கொண்டுவந்த மலர்-ல் இது நிகழ்ந்திருப்பது ஒரு சாதனைதான். செல்மா லாகல்லொவின் பிரசித்தி பெற்ற கிருஸ்ட்மஸ் ரோஜா கதையின் அற்புதமான காட்டுத் தோட்டத்தையும் அதன் புத்துயிர்ப்பு குறியீட்டையும் நினைவுறுத்தும் கதை.
முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் மாமல்லன் பாணியிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக அமைந்திருக்கும் மாமல்லன் கதை. கதையை ஒரு குமாஸ்தா கண்டெடுக்கும் பின்புலம், பிரதியின் பௌதிக உருவாக்கம், கதையைக் குறித்து பின்சேர்க்கையாக வரும் ஆசிரியர் குறிப்பு என்று பின்நவீனத்துவப் பாணியில் அமைந்திருக்கும் கதை. சித்தாந்தங்களால் உருவாக்கப்படும் பேரியக்கங்களுக்கும் தனிமனிதச் சுதந்திரத்திற்குமிடையே விரியும் இடைவெளியில் கதை தன்னை நிகழ்த்திக்கொள்கிறது. மாமல்லனின் கச்சிதத்திற்கு மாறாக சில வளவளத்தனங்கள் தலைகாட்டும் கதை. அவற்றையும் மீறி கதை தன் முக்கியத்துவதை நிறுவிக்கொள்வதே அதன் வெற்றி. “முஷ்டி மைதுனம் செய்தேன், எனவே காலையில் சீக்கிரம் எழ முடியவில்லை என்கிற காரணத்தைவிட கதை எழுதினேன் என்பது அபத்தமாகப் படும் அவருக்கு. உண்மையில் இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்பது என் அனுபவத் தெளிவு,” என்ற அதிரடியான வரி இடம்பெறும் கதை என்பதும் குறிப்பிடத்தக்கது. அடையாளமற்றுப் போய்விடுமோ என்ற பயமே அடையாளமாகி விடுவதை அடையாளம் காட்டும் கதை. பின்தொடரும் நிழலின் குரல்-ன் சில பகுதிகளை வாசிக்கையில் அந்நாவலுக்கு முன்னால் வந்த இக்கதை ஞாபகத்துக்கு வரலாம். (“உன் மனசாட்சி புரட்சி நீ செய்துகொள்ளும் ஒரு வித சுயபோகம் என்கிறான் சுப்பையா” என்கிறது இந்நாவலின் குடிகாரன் குறிப்புகள் பகுதி)
நிழல் அந்தக் காலத்து லத்தீன் அமெரிக்கக் கதையைப் போல் இருந்தது. தகடு லோம்டே என்ற விசித்திரமான பெயர் கொண்ட நாயகனின் கனவில் ஆரம்பித்து, அக்கனவின் பாதிப்பினூடே பயணித்து அது நனவாகுவதில் முடிகிறது. Chronicle of a Death Foretold என்ற மார்கெஸ்சின் தலைப்பை நினைவுறுத்தும் நெடுங்கதை. சம்பத்தின் இடைவெளியையும். “கறுத்த பிராமணர் ஒருவர் பெரிய தாம்பாளத்திலிருந்து மைசூர் பாக்குகளை வரிசையாய் ஒவ்வொரு இலையிலும் வைத்துக்கொண்டே வந்தார். அவரது தாளகதியுடனான அசைவு நிறைவைத் தந்தது” என்ற வரியில் சற்று நிதானித்தேன். அரவிந்தாட்ச மேனன் பேனாவுக்கு மை ஊற்றுவதை நினைத்துகொண்டேன்.
ஆல்பெர் கமூவின் Myth of Sisyphus புத்தகத்திலிருந்து ஒரு வரி: “By the mere activity of consciousness I transform into a rule of life what was an invitation to death — and I refuse suicide…” வாழ்க்கை வாழ்வதற்கு லாயக்கல்ல என்று முடிவுக்கு வந்துவிட்ட ஒருவன் ஒளி கதையில் குன்றின் மீதிருக்கும் ஒரு பாழடைந்த கோவிலுக்குத் தற்கொலை செய்யும் நோக்கத்தோடு படிகளில் மேலேறிச் செல்கிறான். அதைச் செய்துகொள்ளாது எதனால் கீழிறங்கி வருகிறான் என்பதே கதை. தத்துவ விசாரம், சிறுவர்களின் கண்ணாமூச்சி விளையாட்டு, நாட்டுப்புறப் பாடல் என்று சுவாரசியமாக விரியும் கதையை அதன் துல்லியமான காட்சிப்படுத்தலே வெற்றிபெற வைக்கிறது. வாக்கியங்களின் சங்கிலியை ஒரு திரைப்படமாகவே வாசகன் உள்வாங்கிக் கொள்கிறான். அபாரமான கதை.
தாஸில்தாரின் நாற்காலி-ல் அஃறிணைப் பொருள் உயர்திணையாகக் கடிதம் எழுதினால் பந்தாட்டம் கதையில் ஊயர்திணை பியூன் ஒருத்தன் அஃறிணையாக, முதலில் செவ்வகமாக, பிறகு ஒரு பந்தாக மாற்றப்படுகிறான். அன்றாடத் தபாலை விநியோகிப்பதில் ஒரு சிக்கல், ஒரு குறிப்பிட்ட தபாலை அனைவரும் வாங்க மறுத்து அவனைப் பந்தாடுகிறார்கள். உவமையாய் விவரித்ததை வேடிக்கையாக நிஜமாக்கியபடியே அரசாங்க அலுவலகத்தின் பல குளறுபடிகளைக் கதை பகடிசெய்கிறது. சில பகுதிகளில் நகைச்சுவை சற்றே வலிந்து திணிக்கப்பட்டது போல் இருந்தாலும் இறுதியில் கீழே வாழும் கட்டிடத் தளத்தை நடுநாயகமாக பந்தாய் மாறிவிட்ட பியூன் தாங்கிக்கொண்டிருப்பதை வாசிக்கையில் கதை தன் இலக்கை எட்டிவிட்டது போல்தான் இருந்தது.
உதவி அதிஉயர் அதிகாரி அதிஉயர் அதிகாரி ஆவதற்கு என்ன செய்ய வேண்டும். குல்லா கதையின் சந்திர நாராயண் ராவ் ஒரு நூதனமான வழியைத் தேர்வு செய்கிறார். அவ்வழியில் வெற்றி பெற அவருக்கு ஒரு குட்டிச்சாத்தானின் உதவி தேவையாக இருக்கிறது. குட்டிச்சாத்தானை வசியப்படுத்தவோ ஒரு தேவாங்கு தேவைப்படுகிறது. இத்தனை தில்லாலங்கடிகளைச் செய்து அவர் வெற்றி பெறுகிறாரா இல்லையா என்பதே கதை. ஒவ்வொரு ஆணின் தோல்விக்குப் பின்னும்… எதுக்கு வம்பு. நகைச்சுவையான கதையை வாசித்து தெரிந்துகொள்ளுங்கள்.
உயிர்த்தெழுதல் ஏதோ தமிழ் சினிமா காமெடி போல் – பாசக் கயிறு போல் ஆடி பயமுறுத்திக் கொண்டிருக்கும் பெர்முடாஸ் நாடாவை வெளியே விட்டபடி எருமைமாட்டை போல் பிதுங்கி வழியும் இடுப்புச் சதைகளில் கைகளை வைத்துக்கொண்டு பால்கனியில் மாமிச மலையாக நிற்கும் நாயகனின் பெரியப்பா பையனுடன் – ஆரம்பித்தாலும், உணர்வுரீதியாக இதுவே மாமல்லனின் மிக நெகிழ்வூட்டும் கதையாக இருக்கலாம். வீட்டில் ஒரு பறவை பறக்க முடியாமல் மூர்ச்சையாய்க் கிடக்கிறது. வீட்டில் அனைவரும் அதை இறந்துவிட்டதாகப் பாவிக்கிறார்கள். நாயகன் மட்டுமே அது இன்னமும் உயிருடன்தான் இருக்கிறது என்று நம்புகிறான். அதை மீண்டு பறக்கச் செய்வதற்காக அவன் மேற்கொள்ளும் ஆயத்தங்களே (டாக்டர், பாவா என்று முறையே அறிவியலுக்கும், ஆன்மீகத்துக்கும் அவன் திரும்புகிறான்) கதையை நகர்த்திச் செல்கின்றன. உணர்ச்சி நகைச்சுவையால் மட்டுப்படுத்தப்பட்டாலும் நாம் கதையை உணர்வுரீதியாகவே அணுகுகிறோம். “எல்லையற்ற வெளியில் எழுதிக் காட்டுவதைப் போல, இரண்டாய் இருபதாய் இருநூறாய்த் தோற்றம் கட்டியபடி கட்டற்ற வானத்தில் பறந்து கொண்டு இருக்கிறது பறவை,” என்ற வரியுடன் நாமும் அதனுடன் இறுதியில் பறக்கையில் நம் முகங்களில் முற்றிலும் வேறொரு சிரிப்பு படர்கிறது.
உயிர்த்தெழுதல் கதையில் இலக்கிய வானத்தில் பறந்த வாசகன் தாம்பத்தியம் கதையில் சடுதியில் வீழ்கிறான். குங்குமத்துக்காக எழுதப்பட்ட கதை என்று சமாதானப்படுத்திக் கொள்வதைத் தவிர செய்வதற்கு ஒன்றுமில்லை. வேண்டுமானால், ஜாதித் திமிர் மிக இயல்பாகவும் நகைச்சுவையாகவும் கதையில் வந்திருக்கிறது என்று அவன் சப்பைக்கட்டு கட்டலாம்.
விபத்து கதையை(?) படித்துவிட்டு ஒருக்கால் கதிரைக் காட்டிலும் தினமணி நாளிதழில் வந்திருந்தால் பொருத்தமாக இருக்குமோ என்று யோசித்துப் பார்த்தேன்!
பெரியவர்கள், சோழிகள் இரண்டுமே குறுநாவல்கள். இரண்டிலும் கணவனைப் பற்றி மனைவி நிமித்தம் கேட்பதே (குறி கேட்பது, சோழி பார்ப்பது) ஆரம்பப்புள்ளி ஆனால் அப்புள்ளியிலிருந்து அவை முற்றிலும் வெவ்வேறு பாதைகளில் செல்கின்றன.
முன்னர் பேசிய இழப்பு கதையின் களம்தான். கணவன் சூதாடி, பையனுடன் அவதிப்படும் மனைவி. ஆனால் முந்தைய கதையின் ஜமுனாவைக் காட்டிலும் பெரியவர்களின் சக்குபாய் சற்று தைரியமானவள் என்பதால் மணவாழ்க்கையின் மூர்க்கத்தின் மீது போடப்பட்டிருக்கும் பேண்டெய்டைப் பிய்த்து அம்மூர்க்கத்தை வெளிக்கொணர்வதற்கான சந்தர்ப்பம் இயல்பாகவே கதையில் அமைந்துவிடுகிறது. அறியாத முகங்கள்-ன் முதல் பகுதியில் நாம் எதிர்கொண்ட அதே மூர்க்கம். இங்கும் பொருளாதாரமே அடிப்படைக் காரணம். குறுநாவல் என்பதால் இக்குடும்பத்தின் உற்றார் உறவினர், சூழல், பின்புலம் இவற்றுக்கெல்லாம் கனத்தை அளிக்க ஆசிரியருக்கு அவகாசம் இருக்கிறது. கதைக்கு இவை வலுசேர்க்கின்றன என்பதில் சந்தேகமில்லை. வீட்டைவிட்டு தைரியமாக குழந்தையுடன் கிளம்பிவிட்டாலும் அவளது வருங்காலப் பாதை கதையின் முடிவிலும் “இருட்டாகவே” இருக்கிறது என்ற பட்சத்தில் யார் பெரியவர்கள் என்று நாம் யோசிக்கத் தொடங்குகிறோம். கூடவே குழந்தையின் “பயமா இருக்குமா” என்ற வரியும் பின்பாட்டாக நம் மனதில் ஒலிக்கிறது புள்ளிகள்-ன் டம்போவையும், இழப்பு-ன் பப்புவையும் உடனழைத்தபடி.
சோழிகள் ஜோசியம் கேட்பவளுக்குப் பதிலாக ஜோசியம் பார்ப்பவரின் சிக்கலில் மையம் கொள்கிறது. சுபிக்ஷத்தையே சொல்லிவரும் சோழிகள் முதல் முதலாய் துர்நிமித்தத்தைச் சொல்ல நேர்கையில், ராயர் மனது சஞ்சலப்படுகிறது. சஞ்சலம் ஆத்ம விசாரமாக விஸ்வரூபம் எடுக்கிறது. இதை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதை. ஜாதித்திமிர் இக்கதையிலும் வாய்விட்டுச் சிரிக்கும் வகையில் பகடி செய்யப்பட்டிருக்கிறது -சூனா மானா மீட்டிங்குக்கெல்லாம் போற பயலுக்கெல்லாம் ஏன் சோழி உருட்டறீர்? …. ஓய்ஓய் என்னங்காணும் நீர் பேசிண்டு போறதைப் பார்த்தா பிராம்மண நிந்தனைல நாயக்கரைத் தோக்கடிச்சுடுவீர் போல இருக்கே. வீணா இது வேற என்னத்துக்கு கழட்டிப் போட்டுற வேண்டியது தானே? என்று பட்டரும் ராயரும் பேசிக்கொள்ளும் இடங்கள் சுவாரசியமானவை. ஒரு ஆதர்ச இல்லற வாழ்க்கை முதல் முதலாக மாமல்லனின் கதையில் பரிணமிக்கும் கதையும் இதுவாகத்தான் இருக்கும். சுலோசனாபாயும் ராயரும் கதையில் அனேகமாக பேசிக்கொள்வதே இல்லை. ஆனால் அவர்களிடையே நிலவும் வார்த்தைகளற்ற ஆத்மார்த்த இணக்கத்தை வாசகனின் மனதில் கடத்தியிருப்பதும் கதையின் பலங்களுள் ஒன்று.
***
இக்கதைகளுக்குப் பிறகு நான் அவரை அதிகம் வாசிக்கவில்லை அவரும் இடையில் கதை எழுதுவதை விட்டுவிட்டார் என்று நினைக்கிறேன். இந்த முதல் சுற்றுக் கதைகளைப் பற்றி யோசிக்கையில் பல நல்ல கதைகளை, சில அபாரமான கதைகளை எழுதியவர் என்று தோன்றியது. நாவல் எப்போது எழுதுவார் என்ற கேள்வியும். அக்கேள்விக்கான மிகத் தாமதமான பதில் 2025 இறுதியில் ஆபீஸ் நாவலின் முன்பதிப்புத் திட்டத்துக்கான அறிவிப்பில் கிடைத்தது, அதை வாங்கவும் செய்தேன். தலைகாணி சைஸில் இருந்த அப்புத்தகத்தை முழுதாக வாசிக்கவும் செய்தேன். நடை சரளமாகவும், உள்ளடக்கம் காஸிப்பியாகவும் இருந்ததால் வேகமாகவே படிக்க முடிந்தது.
தன்வரலாற்று நாவல். ஆனால் படர்க்கையில் எழுதப்பட்டிருக்கிறது.
எண்பதுகளின் தொடக்கத்தில் இலக்கிய ஆர்வமிக்க ஓர் இளைஞன். தந்தை இறந்துவிட்டதால் அரசு அலுவலகத்தில் கருணை அடிப்படையில் கிடைத்த போஸ்டில் குமாஸ்தாவாக வேலைக்குச் சேர்கிறான். போரடிக்கும் வேலை ஆனால் தினப்படிக்கு வழிவகுப்பது. கட்டற்ற இலக்கியம் ஆனால் தம்படி பேராது. இரண்டையும் தக்கவைத்துக் கொள்வதற்கான போராட்டமே இந்நாவல். ஒரு விதத்தில் ரஸ்கோல்னிகோவ் போல் பிளவுபட்டவன் இவன். போதாக்குறைக்கு மூர்க்கமான சாலிப்சிஸ்டும்கூட, அனுபவத்தில் தான் கண்டறிந்த உண்மைகளுக்குப் புறம்பான அனைத்துமே மயிருக்குச் சமானம் என்ற ஆணவம்கொண்டவன். இப்படிப்பட்ட ஒருவனது மூன்று வருட (1980-83) மத்திய அரசு அலுவலக மற்றும் சிற்றிலக்கியச் சூழல் அனுபவங்களின் கதம்ப விவரணையே ஆபீஸ் நாவல். இளைஞன் சதா சர்வகாலமும் கால்நடையாகவும், சைக்கிளிலும் அலைந்து திரிந்துகொண்டிருப்பவன் என்பதாலும், அவன் அனுபவங்களை நாவலாக்கும் ஆசிரியர் கண்ணால் கண்டதையும் காதால் கேட்டதையும் இம்மியும் பிசகாது எழுத்தில் கைப்பற்றுவதைத் தன் இலக்கிய ஆதர்சமாகக் கொண்டிருப்பதாலும், இந்நாவல் அக்காலத்துச் சென்னையை மீளுருவாக்கும் ஒரு ஆவணமாகவும் அமைகிறது.
டெபுடி டைரெக்டர் ஒருவர் அலுவலகத்துக்கு வருவதைப் பகடிசெய்யும் வருகை கதையில் இப்படி ஒரு வரி வருகிறது: “காலங் காலமாக சிரிக்க மறந்து ஆள்பிடித்து, வால் பிடித்து, கோள் மூட்டி, வஞ்சித்து, நிம்மதியிழந்து, அபிலாஷைகள் நிறைவேறாத ஆதங்கத்தில் உத்வேகமின்றி, தாமஸத்தைத் தத்துவ மரபாய்க் கொண்டுவிடும் மாபெரும் குமாஸ்தாப் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டிருப்பவர்கள் மேற்படி மாஜி குமாஸ்தாக்கள்.” இவ்வரியின் சம்பவப்படுத்தலே ஆபீஸ் நாவலின் அலுவலகம் சார்ந்த பகுதிகள்.
போரடிக்கும் குமாஸ்தாக்களைப் பற்றி போரடிக்காமல் எப்படி எழுதுவது என்பதே ஆபீஸ்-ன் சவால். துல்லியமான நினைவுகூரல், பேச்சுமொழியின் சுவாரஸ்யத்தைக் கைப்பற்றும் சரளமான நடை, நகைச்சுவையுணர்வு இவற்றைக் கொண்டே இச்சவால் எதிர்கொள்ளப்படுகிறது. வெல்லப்படுகிறது. நகைச்சுவை சில அலுவலகச் சம்பவங்களை அபத்த வகை நாடங்களாக மாற்றுகிறது. ஈரோட்டுக்கு வலுக்கட்டாயமாக மாற்றல் வாங்கிவருகையில் லாஸ்ட் பே செர்டிபிகேட்டை வாங்கிவர இளைஞன் மறந்துவிடுகிறான். மறதி என்பதைவிட அதைப்பற்றி எல்லாம் அவனுக்கு அக்கறை இல்லை என்று சொல்வதே சரி. மேலதிகாரி இதற்காக சென்னைக்கு ஒரு டிரங்க் கால் போடுகிறார். ஸ்லாப் ஸ்டிக் காமெடி ரீதியில் கனெக்ஷ்ன் குளறுபடிகள் நிகழ்கின்றன. “விபத்து நடந்த இடத்தில் அனைவரும் குனிந்துவிட்டிருந்தனர். விபத்துக்கு உள்ளானவரைப் போல் ஃபோன் நடுவில் இருந்தது” என்று அலுவலகம் ஒரு ஹரொல்ட் பிண்டர் நாடகம் நடக்கும் அரங்கமாக மாறிவிடுகிறது. பின்டரின் நாடங்களைப் போல் அபத்த நகைச்சுவைக்குப் பின்னே மூர்க்கமும் அவ்வலுவலகத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறது என்பதை நாவலை வாசிக்கையில் நாம் உணர்ந்துகொள்கிறோம்.
ராஸ் லீலாவின் கண்ணாயிரம் மெருமாள் ஆபீஸ் கூட…(வேண்டாம், ஏற்கனவே ஜெயமோகன வேற பேசியாச்சு!)
வாக்கிய அமைபைப் பற்றியெல்லாம் கவலைப்படாத ஒரு எழுத்துச் சூழலில் இவ்வளவு பெரிய நாவல் முழுவதிலும் வாக்கிய அமைப்பு சீராக அமைந்திருப்பதும் சாதனைதான். நீண்ட வாக்கியங்களில் தாமதித்து அதன் பொருத்தப்பாடுகளை ரசித்தேன். உதாரணமாக:
“அவனுக்கென்னவோ, சீனாஜி, சீனா மாமா என்று அழைக்கப்பட்ட, மைலாப்பூரில் ரீட்டா ஐஸ்கிரீம்கடைக்குப் பக்கத்தில், உள்ளே ஒதுங்கி இருந்த அறையில், பெண்டாட்டி இல்லாமல் தனியாக நாராயணனுடன் தங்கியிருந்த குதிரை ரேஸ் கோஷ்டியான, அம்மாவின் பெரிய அண்ணன் போல், பார்க்க சாதாரணமாகத்தான் இருந்தார் ஜானகிராமன்.”
தி.ஜா சீனா மாமாவைப் போல் சாதாரணமாக இருந்தார் என்று சொல்லியிருக்கலாம்தான். நாமும் அவ்வாக்கியத்தைப் பொருட்படுத்தாது சீனா மாமாவை மறந்திருப்போம். ஆனால், இங்கு சீனா மாமா வசித்த இடம், அதன் ஒடுக்கம், அவர் வீட்டிற்கு பக்கத்தில் இருந்த கடையின் பெயர், அதில் விற்பனை செய்யப்படும் பொருள், அவரது பிரம்ச்சரிய நிலை, அவருக்கு ரூம்மேட் இருந்தார் என்ற தகவல், ரூம்மேட்டின் பெயர், அவரது ரேஸ் பித்து, மாமா என்றால் அம்மாவுக்கு அண்ணனா, தம்பியா என்ற தெளிவுபடுத்தல், இப்படிப் பல தகவல்களை ஒருங்கிணைத்து நமக்குப் பரிச்சயமான தி.ஜா நமக்குப் பரிச்சயமில்லாத ஒருவரால் அடையாளப்படுத்தப்படுகிறார். கிராஃப்டுக்கு இந்த ஆசிரியர் எவ்வளவு முக்கித்துவத்தை அளிக்கிறார் என்பதற்கு இவ்வாக்கியமே சான்று.
சில சமயங்களில் ஒரு சிறு வாக்கியத்தில் வரும் பொருத்தமான உவமானம் அதை நினைவுகொள்ளத்தக்கதாக மாற்றுகிறது:
“எதிரில் இருந்த முத்துமாரியம்மன் கோவிலில், பால் ஏனத்தைக் கவித்துப் போட்டதைப்போல் இருக்கிற கோபுரம் தெரிந்தது” ,
நீளமும் உவமானமும் கூடி மகிழ்விக்கும் இடங்களும் உண்டு:
“ஸ்டவ் அடியில் இருக்கும் தகர டப்பாவில் மண்ணெண்ணெயை ஊற்றி, அதல் மேல் நாடாளுமன்றம் போல் வட்டமாக இருக்கும் கூண்டில் தூண்களைப் போல் சுற்றி நிற்கும் குழாய்களில், திரிகளை கெரோசினில் முக்கி நனைத்துக்கொண்டு, ஒவ்வொரு குழாயிலும் நுழைத்துத் திருகித் திருகி மேலே கொண்டு வருவதற்குள் அம்மாவுக்குப் பிராணன் போய்விடும்.”
வாழ்நாள் முழுதும் குமாஸ்தாவாக இருந்து, குமாஸ்தாவாக மட்டுமே நினைவுகொள்ளப்படுவதே இளைஞனைப் பீதியடையச் செய்கிறது. இதிலிருந்து விடுபட அவன் இலக்கியத்தை ஒரு பற்றுக்கோடாகப் பற்றிக்கொள்கிறான். நீல. பத்மனாபனின் தேரோடும் வீதி-ன் ஆரம்பத்தில் வரும் சிறுவன் கதிரேசன் நினைவுக்கு வருகிறான். (தலைமுறைகள் குறித்த ஒரு நக்கல் வரியும் ஆபீஸ்-ல் வருகிறதோ?) எண்பதுகளின் இலக்கியச் சூழல், பூசல்கள், பொறாமைகள், சிற்றிதழ் கலாச்சாரம், பதிப்புத் துறை நுணுக்கங்கள் இவை எல்லாம் மிக அபாரமாக இப்புத்தகத்தில் மீட்டெடுக்கப்படுகின்றன. க்ஷணச்சித்தம் க்ஷணப்பித்தம் என்று கால்போன போக்கில் அவன் ஆசிரியர்களைத் தேடிப் போகிறான். சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், ஜானகிராமன், அசோகமித்திரன் குறித்த பகுதிகள் மிக அழகானவை. அவற்றுக்காகவே இப்புத்தகத்தை வாசிக்கலாம்.
குமாஸ்தாவாகப் பணியாற்றும் அவலத்தைப் போக்கிக்கொள்ள இலக்கியவாதி என்ற பட்டத்தை ஒரு பேட்ஜ ஆஃப் ஹானராக மாட்டிக்கொண்டு அவன் வளையவருகிறான். கொகோலின் (Gogol) ஒரு பிரபலமான கதையில் அகாகி என்ற கடைநிலை அரசு ஊழியன், ஆவணங்களை நகல்படுத்தும் பணியைச் செய்துகொண்டிருப்பவன், ஒருநாள் கந்தலாகிவிட்ட தன் ஓவர்கோட்டைத் தன் வாழ்க்கையின் குறியீடாக உணர்கிறான். அதன்பின் அவ்வாழ்வுக்கு அர்த்தமளிக்கும் வகையில் புது ஓவர்கோட் ஒன்றைத் தைத்துக்கொளவ்தில் முழுமூச்சாகத் தன்னை அர்ப்பணித்துக்கொள்கிறான். நாம் அனைவருமே கோகோலின் ஓவர்கோட்டிலிருந்து வந்தவர்கள்தாம் என்ற தாஸ்தாயெவ்ஸ்கி வரியை ஜும்பா லஹிரியின் Namesake நாவலின் திரைப்பட வடிவத்தில் கேட்டது நினைவுக்கு வருகிறது. மாமல்லனின் கதாநாயகன் கண்டிப்பாக கொகோலின் ஓவர்கோட்டிலிருந்து வந்தவன்தான். இலக்கியமே அவன் ஓவர்கோட்.
அதை எப்போதுமே அணிந்துகொண்டிருப்பதே அவன் பிரச்சினை. அதைக் கழட்டிவைத்து விட்டு அலுவலகத்துக்கு வர அவன் பழகிக்கொள்வதில்லை. அலுவலக விதிமுறைகள் ஓவர்கோட் அணிபவனுக்குப் பொருந்தாது என்ற மமதையில் உழல்பவன் அவன். தவிர்க்கவியலாத வகையில் அவற்றுக்கு அடிபணிய தேரிடும் சமயங்களில் பணிசெய்ய மறுக்கிறான் அல்லது பணியைத் துறந்துவிடப் போவதாக பாவ்லா செய்கிறான். Bartleby the Scrivener என்ற மெல்வில்லின் (திமிங்கிலத்தைப் பற்றி எழுதினாரே, அவரேதான்) கதையொன்று; அதில் வால் ஸ்ட்ரீட் அலுவலகத்தில் பணிபுரியும் பார்டெல்பீ ஒரு கட்டத்தில் யாராவது வேலை குடுத்தால் “I’d prefer not to” என்று அமைதியாகப் பதிலளிப்பார். இறுதியில் பணிசெய்வதேயே துறந்து, ஆபீஸை விட்டு வெளியேற மறுத்து, அதிலேயே தனிமையில் மரிவார். ஓவர்கோட் மட்டும் இல்லாதிருந்தால் நம் இளைஞனும் பார்டெல்பீயைப் போல்தான் ஆகியிருப்பான். ஓவர்கோட்டுக்கும் பார்டெல்பீக்கும் இடையே பிளவுபட்டு நிற்பவன் அவன்.
ஓவர்கோட்டை கழட்டிவிட்டால் அவன் நமக்கு இணக்கமானவன் அல்ல. கயவன். ஆனால் சில சந்தர்ப்பங்களில் பெருந்தன்மையாகவும் இருக்கக்கூடியவன், தனக்கு அனுகூலமில்லையெனில் உறவுகளைத் துண்டிக்கத் தயங்காதவன். அலுவலகத்தில் தப்பித்தால் தப்பில்லை என்று சில சமயங்களில் நடந்துகொள்ளக் கூடியவன், தாயை அடித்து தரக்குறைவாக நடத்துபவன். மிஸாஜினி என்று வகைப்படுத்தும் அளவுக்குப் பெண்களைப் பெரும்பாலும் உடல்ரீதியாகவே மதிப்பிடுபவன். (“பெண் என்றாலே ஆண்களுக்கு ஒரே விஷயம்தான்” என்று மற்றொருவரைக் குறித்த அவதானிப்பில் அவன் சௌகரியமாக பொதுமைப்படுத்திக் கொள்கிறான்.) இப்படிப்பட்டவனோடு எப்படி இவ்வளவு நேரம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் செலவழித்தோம் என்று நாம் ஆச்சரியப்படுகிறோம்.
இத்தனைத் தரக்குறைவுகளையும் மீறி அவனிடம் ஏதோ ஒன்று நம்மை வசீகரிக்கிறது. அவன் அணிந்திருக்கும் ஓவர்கோட் மீது அவன் வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கை. அது அபூர்வமானது, இந்நூற்றாண்டில் அனேகமாக காலாவதியாகி விட்டதென்றே நினைக்கிறேன். அரிதாகிவிட்டதும் அதன் வசீகரத்தை அதிகரித்துக் காட்டுவதாக இருக்கலாம். தன் அவலத்தைப் பொதுமைப்படுத்த நாம் அனைவருமே குமாஸ்தாக்கள்தான் என்று அவன் கைகொட்டிச் சிரிக்கிறான். உண்மைதான், நமக்கும் ஒரு ஓவர்கோட் தேவையாக இருக்கிறது. அதை இவ்வளவு இறுக்கமாக, சருமமாகிவிடும் அளவுக்குப் பற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கைக்காகவே நாம் அக்கயவனுடன் பயணிக்கிறோம். இதுவே ஆபீஸின் வெற்றியும்கூட.
சம்பவங்களின் நினைவுக்கோவைகளாக விரியும் இப்புத்தகம் ஒரு நாவலா என்ற கேள்வியும் எழுகிறது. முதல் பக்கத்தில் வரும் இளைஞனே கடைசிப் பக்கத்தில், பெரும்பாலும் (அலுவலகத்தில் சில சமரசங்களைச் செய்துகொள்ள பழகிவிட்டான் என்பதைத் தவிர) மாற்றத்துக்கு உட்படாமல் நம் முன் நிற்கிறான். பாத்திரம் தன்னைப்பற்றி நினைப்பதற்கும் ஆசிரியர் அதைப் பற்றி நினைப்பதற்கும், அதாவது கதையில் வரும் பேச்சுமொழிக்கும் அவற்றுக்கிடையே வரும் கதைமொழியிற்கும் இடையே உள்ள இடைவெளியில் வாசகன் தன் வாசிப்பின் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக்கொள்கிறான். ஆனால் இங்கு பாத்திரத்துக்கும் ஆசிரியருக்கும் இடையே நிலவும் எல்லைக்கோடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. நரசிம்மனே மாமல்லன் என்பதில் மாற்றுக்கருத்தேதும் இருக்க வாய்ப்பில்லை. நாவல் முழுதும் ஒரே பாத்திரத்தின் கண்ணோட்டத்திலேயே எழுதப்பட்டிருப்பதும் இவ்விடைவெளிகள் உருவாவதற்குத் தடையாக இருக்கின்றன.ஆனால் பாத்திரத்தைக் குறித்த நம் நினைப்புக்கும் பாத்திரம்/ஆசிரியர் அதைப் பற்றி நினைப்பதற்கும் இடையே ஒரு இடைவெளி நாவலில் உருவாவதை நாம் உணர்ந்தபடியே இருக்கிறோம். அதை நிரப்பிக்கொள்ளவே கடைசிவரையிலும் வாசிக்கிறோம். அந்த இடைவெளியை ஓரளவிற்கு நிரப்பியிருப்பதும் இப்பிரதியின் வெற்றிதான்.
இறுதியாக மீண்டுமொரு முறை கொகோலின் ஓவர்கோட் கதையின் நாயகனை நினைத்துக்கொள்கிறேன். இறந்தபின், பழிவாங்குவது போல, அகாகி அதிகாரிகளின் கோட்டுகளை திருடும் ஒரு பேயாக நகரத்தை அச்சுறுத்துகிறான். வயதாகிவிட்டிருக்கும் அந்த இளைஞனும் இப்போது ஃபேஸ்புக் தாதாவாக அதைத்தான் செய்துகொண்டிருக்கிறானோ என்னவோ!
நம்பி கிருஷ்ணன்
மார்ச், 2026
மூலநூல்கள் / மேலும் படிக்க:
விமலாதித்த மாமல்லன், விமலாதித்த மாமல்லன் கதைகள்: சிறுகதைகள் நெடுங்கதைகள் குறுநாவல்கள் (1980 – 1994), சத்ரபதி வெளியீடு, 2017
விமலாதித்த மாமல்லன், ஆபீஸ் தொகுதி1, சத்ரபதி வெளியீடு, 2025
