Site icon சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026

உலக நிகழ்வுகளும் ஊகச் சந்தையும்

இந்தியாவும் நியூசிலாந்தும் டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாட இருக்கின்றன. இந்தியாதான் வெற்றி பெறும் என்பது பெரும்பாலானோரும் எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பைச் சந்தைப் படுத்த முடியுமா? முடியும் என்கிறார்கள் கால்ஷி (Kalshi) போன்ற ஊகச் சந்தை நிறுவனங்கள் (Predictions Market).

அது என்ன ஊகச் சந்தை? எதோ ஒரு நிகழ்வு நடந்தால் ஒரு டாலர் கிடைக்கும். நடக்கவில்லை என்றால் ஒன்றும் கிடைக்காது. அந்த நிகழ்வு நடந்தால் கிடைக்கும் ஒரு டாலரைப் பெற அந்நிகழ்வு நடக்க எவ்வளவு சாத்தியம் இருக்கிறது என்று எதிர்பார்க்கப் படுகிறதோ, அந்த விலை கொடுத்து நாம் வாங்கலாம். அதுதான் ஊகச் சந்தை. குழப்பமாக இருக்கிறதா? ஓர் எடுத்துக்காட்டைக் கொண்டு விளக்கினால் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். 

மீண்டும் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியையே எடுத்துக் கொள்வோம். இந்தியா வெற்றி பெற 70% வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். 0.70 டாலர் கொடுத்து இந்தியா வெற்றி பெறும் என்ற ஊகத்தினை நாம் வாங்கலாம். இந்தியா வெற்றி பெற்றால் நமக்கு ஒரு டாலர் கிடைக்கும். ஆக 0.30 டாலர் லாபம். இதுவே இந்தியா வெற்றி பெறாமல் போனால் நமக்கு 0.70 நட்டம். இதுதான் அடிப்படை. 

ஆனால் இந்த ஊகத்தை இந்தியா வெற்றியோ தோல்வியோ அடையும் வரை நாம் பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கவும் விற்கவும் செய்வது போல வாங்கி விற்கலாம். உதாரணமாக 0.70 டாலருக்கு இந்திய வெற்றியை வாங்கி இருக்கிறோம். நாளை நியூசிலாந்தின் பந்து வீச்சாளர் ஹென்றிக்கு உடல்நலம் சரியில்லை என்ற செய்தி வருகிறது. முக்கியமான ஆட்டக்காரரான அவர் நியூசிலாந்திற்கு விளையாட முடியாமல் போனால் இந்தியாவின் வெற்றிக்கான சாத்தியம் அதிகரிக்கிறது. எனவே அந்த வெற்றிக்கான விலை 0.70 டாலரில் இருந்து 0.80 டாலராக உயர்கிறது என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது நாம் வாங்கிய பங்கினை விற்றோமானால் நமக்கு 0.10 டாலர் லாபம். கடைசி வரை நாம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. 

அதே சமயம் இந்தியா விளையாடும் பொழுது முதல் ஐந்து ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் சரிந்தால் இந்திய வெற்றிக்கான வாய்ப்பு குறைகிறது. அப்பொழுது 0.55 டாலராக விலை மாற, நாம் விற்றோமானால் நமக்கு 0.15 டாலர் நட்டம். அந்த சமயத்தில் யாரேனும் வாங்கி, இந்தியா வெற்றி பெற்றால் அவர்களுக்கு 0.45 டாலர் லாபம் கிடைக்கும். இப்படி நிமிடத்திற்கு நிமிடம் இந்த ஊகத்திற்கான விலை மாறும். நாமும் அந்த வாய்ப்பை வாங்கி விற்பதன் மூலம் லாபமோ நட்டமோ அடையலாம். இதுதான் ஊக வணிகம். இதைப் பொதுவாகச் செயலிகள் மூலம் செய்கிறோம். அந்தச் சந்தையை ஊகச் சந்தை (Predictions Market) என்று அழைக்கிறார்கள்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெல்வதற்கான நிகழ்தகவு ஆட்ட ஆரம்பத்தின் பொழுது சுமார் 62% ஆக இருந்தது. முதல் இருபது ஓவர்களுக்குப் பின் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு 88% வரை உயர்ந்தது. ஆனால் இங்கிலாந்து சரியான பதிலடி கொடுத்த சமயத்தில் இது 50% சதவிகிதம் வரை குறைந்தது. இறுதியில் இந்தியா வென்றது. இந்த ஆட்டதின் பொழுது இந்திய வெற்றிக்கான நிகழ்தகவை ஒரு வரைபடமாகச் செய்தால் அது இப்படி இருக்கும்?

இது விளையாட்டுப் போட்டிகளுக்கு மட்டுமல்ல. எல்லா வித நிகழ்வுகளுக்கும் இந்த ஊகச் சந்தைகளில் வணிகம் செய்ய வாய்ப்பிருக்கிறது. தேர்தல் முடிவுகளாகட்டும், மழை வருமா போன்ற இயற்கை நிகழ்வுகளாகட்டும், ரிசர்வ் வங்கி வட்டி சதவிகிதத்தைக் குறைக்குமா, விலைவாசி ஏறுமா என்று எல்லா வித நிகழ்வுகளைக் குறித்த ஊகங்களில் வணிகம் செய்யலாம். யாரேனும் ஆளுநர் ரவி தேர்தலுக்கு முன் தமிழ்நாட்டில் இருந்து மாற்றப்படுவார் என்ற ஊகத்தை வாங்கியிருந்தால் நல்ல விலைக்குக் கிடத்திருக்கும். இப்பொழுது வேண்டுமானால் தவெக கட்சியின் தேர்தல் பரப்புரைகளுக்கு த்ரிஷா விஜய்யுடன் செல்வாரா என்று வணிகம் செய்யத் தொடங்கினால் பரபரப்பாக இருக்கும். 

இப்படி நாம் வம்புக்குப் பேசும் விஷயங்களின் நிகழ்தகவுகளாக மாற்றி வணிகப் பொருட்களாகத் தருகின்ற இந்த ஊகச் சந்தைகள். ஒரு விதத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, பொருளாதாரம் என எல்லாவற்றிலும் நம் கூட்டு எதிர்பார்ப்புகளை அவற்றின் பின் இருக்கும் அழுத்தமான உண்மைகளை சந்தைப் படுத்த வழி செய்கின்றன இந்தச் சந்தைகள். 

இது நாம் பந்தயம் கட்டும் DraftKings போன்ற பந்தையத் தளங்கள் (Betting Sites) போலத்தானே என்று நினைக்கலாம். ஆனால் இவை இரண்டும் ஒன்றல்ல. முக்கியமான வித்தியாசங்கள் சில இருக்கின்றன. முதலில் இந்த பந்தயங்களுக்கான விலை அதை நடத்தும் நிறுவனங்களால் முடிவு செய்யப்படுகிறது. உதாரணமாக இந்த நேரத்தில் இந்தியா வெல்லும் என்று நூறு டாலர் பந்தயம் கட்டி இந்தியா வென்றால் உங்களுக்கு கட்டிய நூறு டாலரோடு இன்னும் 125 டாலர் சேர்த்து 225 டாலர் கிடைக்கும் என்று சொல்வார்கள். நாம் 100 டாலர் பந்தயம் கட்டலாம். நாளைக்கு இந்தியா வென்றால் 100 டாலருக்கு 150 டாலர் கிடைக்கும் என்று விலை மாறலாம். ஆனால் நாம் கட்டிய பந்தயம் அதனால் பாதிப்புக்குள்ளாகாது. அது போல நாம் ஒரு முறை பந்தயம் கட்டினால் கட்டியதுதான். அதிலிருந்து பின்வாங்க முடியாது. வாங்கி விற்கவும் வழி கிடையாது. பொதுவாக இத்தளங்கள் விலை நிர்ணயம் செய்யும் பொழுது என்ன ஆனாலும் தமக்கு லாபம் நிற்குமாறே செய்வார்கள். 

இன்னுமொரு முக்கியமான வித்தியாசம் என்னவென்றால் கால்ஷி போன்ற நிறுவனங்கள் Commodity Futures Trading Commission போன்ற அரசு அமைப்புகளால் வரைமுறைப்படுத்தப்படுகின்றன. அதனால் இவை பங்குச் சந்தைகள் போல நம்பிக்கைக்குரிய அமைப்புகளாக பொதுமக்களால் கருதப்படுகின்றன. பங்குச் சந்தையில் நாம் பங்குகளை வாங்கி விற்பது போல இங்கு ஊகங்களை வாங்கி விற்கிறோம். அந்நிகழ்வு பற்றிய எதிர்பார்ப்பு விலையை நிர்ணயிக்கின்றது. எப்படி ஒரு நிறுவனம் நன்றாகச் செயல்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தால் அந்த நிறுவனப் பங்குகளின் விலை ஏறுமுகமாக இருக்குமோ அப்படி இங்கு ஒரு நிகழ்வு நடக்கச் சாத்தியக்கூறு அதிகமாக அதன் விலை கூடும். இப்படி வாங்கி விற்பது வணிக ஒப்பந்தங்களாகவே கருதப்படுகின்றன. 

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் 

வித்தியாசம்ஊகச் சந்தைபந்தய வலைத்தளங்கள்
சந்தை அமைப்புவாங்குபவர்களும் விற்பவர்களும் செய்து கொள்ளும் ஒப்பந்தம்பந்தய நிறுவனங்களோடு ஒப்பந்தம்
விலை நிர்ணயிப்புநிகழ்வின் சாத்தியக் கூறினை ஒட்டிச் சந்தை நிர்ணயம் செய்யும்நிறுவனம் முடிவு செய்யும், அவர்கள் லாபத்தை எப்பொழுதும் சேர்த்துக் கொள்ளும்
வரைமுறைப்படுத்தப்படுவதுநிதி நிறுவனங்கள் போன்ற வரைமுறைகளுக்குட்பட்டதுசூதாட்டம், லாட்டரி போன்றவற்றின் வரைமுறைகளுக்குட்பட்டது
எது குறித்த சந்தைஎல்லா விதமான நிகழ்வுகள் குறித்தும்பொதுவாக விளையாட்டு, பொழுதுபோக்கு தொடர்பான நிகழ்வுகள்
ஒப்பந்த காலம்எப்பொழுது வேண்டுமானாலும் வாங்கலாம், விற்கலாம்ஒரு முறை பந்தயம் கட்டினால் கட்டியதுதான்

ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்கு மட்டும்தான் ஊகச் சந்தை என்றில்லை. உதாரணமாக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் ஒன்றினை விளையாடினால் அதை இந்தியா 3-2 என்ற கணக்கில் வெல்லும் என்ற ஊகத்தை வாங்கலாம். முதலிரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்றால் இந்த நிகழ்வுக்கான விலை மிகவும் குறைந்து போகும். அல்லது ஒரு ஆண்டின் முடிவில் பங்குச் சந்தைக் குறியீட்டு எண் எவ்வளவாக இருக்கும் என்று ஓர் ஊகத்தை முன்வைக்கலாம். இதில் வருடம் முழுவதும் வணிகம் செய்ய முடியும். 

உலகின் பல நாடுகளில் பந்தயத் தளங்களுக்கு அனுமதி இருந்தாலும் அமெரிக்காவில் இருப்பது போல இவை இரண்டையும் வித்தியாசப்படுத்திப் பார்ப்பது மற்ற நாடுகளுக்கு இன்னும் பரவவில்லை என்றே சொல்ல வேண்டும். எடுத்துக்காட்டாக 

நாடுபந்தயத் தளங்கள்ஊகச் சந்தை 
அமெரிக்காசூதாட்ட விதிகளின்படி முறைப்பட்டுத்தப்பட்டவைநிதி நிறுவனங்களைப் போல முறைப்படுத்தப்பட்டவை
இங்கிலாந்துஉரிமம் பெற்ற தளங்களுக்கு அனுமதிசூதாட்டமாகவே கருதப்படுகின்றது
ஐரோப்பாமுறைப்படுத்தப்பட்டவைஅதிக அளவு கட்டுப்பாடுகள்
ஆஸ்திரேலியாமுறைப்படுத்தப்பட்டவைஅதிக அளவு கட்டுப்பாடுகள்
இந்தியாஅனுமதி இல்லைவிதிகள் தெளிவாக இல்லை 

எதனால் ஊகச் சந்தை குறித்து பல்வேறு நாட்டு அரசுகள் கவலைப்படுகின்றன? 

இது போன்ற காரணங்களினால் ஊகச் சந்தைகளுக்கு அனுமதி கிடைப்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. இன்றைக்கு அமெரிக்காவில்தான் கூடுதல் தெளிவு இருப்பதாகத் தெரிகிறது. அதற்கு ஏற்ற மாதிரி விதிமுறைகளையும் இயற்றி வருகிறார்கள். பங்குச் சந்தை போலத்தான் ஊகச் சந்தையும், அதில் எப்படி Insider Trading, Manipulation போன்றவற்றைத் தடுக்க வழிவகைகள் இருக்கிறதோ, அவற்றைப் போலவே ஊகச் சந்தைக்கும் கொண்டு வரலாம். இது சட்டத்திற்குப் புறம்பான சூதாட்டத்தைத் தடுத்து சட்டரீதியாக வணிகம் செய்ய ஒரு வாய்ப்பாக இருக்கும் என்கிறார்கள் ஊகச் சந்தை ஆர்வலர்கள். எங்கே செல்லும் இந்தச் சந்தை என்பது இந்தத் துறையைக் கவனித்து வருபவர்களின் கேள்வியாக இருக்கிறது.  

நாம் வேண்டுமானால் ஊகச் சந்தைகள் நல்ல படியாக நிலைத்து நிற்குமா? இந்தியாவில் ஊகச் சந்தை காலூன்றுமா போன்ற நிகழ்வுகளை கால்ஷியில் வணிகம் செய்யத் தொடங்கலாம். 

Exit mobile version