Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

உடல்நலம் — ஒரு உலகளாவிய கேள்வி

This entry is part 20 of 10 in the series பொது நலம்

ஒரு சாதாரண நாளில் ஒரு அசாதாரண கேள்வி

ஒரு காலைப் பொழுதை கற்பனை செய்யுங்கள். லண்டனில் ஒரு வயதான பெண்மணி விழுந்து இடுப்பு எலும்பு முறிகிறது. அவரை உடனே மருத்துவமனையில் சேர்க்கிறார்கள், அறுவை சிகிச்சை நடக்கிறது, இரண்டு வாரம் மருத்துவமனையில் இருக்கிறார், இயன்முறை மருத்துவம் கிடைக்கிறது. திரும்பி வீட்டுக்கு வரும்போது அவரிடம் யாரும் பணம் கேட்பதில்லை. அது இங்கிலாந்தின் தேசியச் சுகாதார சேவை — NHS.

அதே நேரத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஒரு இளைஞன் அதே நிலைக்கு ஆளாகிறான். அவனிடம் காப்பீடு இல்லை. அறுவை சிகிச்சை, மருத்துவமனை தங்கல், மருந்துகள் — மொத்தம் 100,000 டாலரைத் தாண்டுகிறது. அந்த கடன் அவனின் வாழ்நாள் முழுவதும் பின்தொடரும்.

இவ்விரு நிகழ்வுகளும் ஒரே நோய்; ஆனால் முற்றிலும் மாறுபட்ட விளைவு. வித்தியாசம் என்ன? அரசியல். கொள்கை. காப்பீட்டு முறை. இவை மூன்றும் ஒன்றாகச் சேரும்போது, ஒரு மனிதனின் உடல்நலம் காக்கப்படுமா அல்லது நொறுங்குமா என்பதைத்  தீர்மானிக்கிறது.

உலக சுகாதாரக் கொள்கைகள் மற்றும் காப்பீட்டு முறைகளைப் பற்றிய இனி வரும் கட்டுரைகள் அந்தக் கேள்விக்கான விடையைத் தேடுகின்றன. இந்த அறிமுகக் கட்டுரையில் நாம் சுகாதாரக் கொள்கையின் அடிப்படைகளையும், அதன் வரலாற்றையும், உலகின் வெவ்வேறு அணுகுமுறைகளையும், காப்பீட்டு முறை மக்கள் வாழ்வை எவ்வாறு நேரடியாகப் பாதிக்கிறது என்பதையும் பார்ப்போம்.

‘கொள்கை’ என்ற வார்த்தையைக் கேட்கும்போது பலருக்கும் அது அரசு அலுவலகங்களிலும் சட்டமன்றங்களிலும் மட்டுமே கேட்கும் சொல் என்று தோன்றலாம். ஆனால் சுகாதாரக் கொள்கை என்பது நம் அன்றாட வாழ்வோடு மிகவும் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்தது.

ஒரு நாட்டின் சுகாதாரக் கொள்கை என்பதைச் சுருக்கமாகச் சொல்வதென்றால்: அந்நாட்டில் யாருக்கு மருத்துவம் கிடைக்கும், எந்த விலையில் கிடைக்கும், அதை யார் செலுத்துவார்கள், தரம் எப்படி இருக்கும்  என்பதைத்  தீர்மானிக்கும் ஒட்டுமொத்தத் திட்டம். இது ஒரே நேரத்தில் பொருளாதாரக் கொள்கை, சமூகக் கொள்கை, நெறிமுறைக் கொள்கை ஆகிய மூன்றையும் இணைக்கும் ஒரு சிக்கலான பின்னல்.

சுகாதாரக் கொள்கையில் பல கேள்விகள் உள்ளன. மருத்துவமனைகளை யார் நடத்துவார்கள் — அரசாங்கமா, தனியாரா, இரண்டுமா? மருந்துகளின் விலையை யார் கட்டுப்படுத்துவார்கள்? தடுப்பூசிகள் கட்டாயமா, தன்னார்வமா? மனநலச் சிகிச்சைக்கு நிதியுதவி கிடைக்குமா? பிறக்கும் குழந்தைக்கு இலவசச் சுகாதாரப் பரிசோதனை உண்டா? — இவை எல்லாம் சுகாதாரக் கொள்கையின் வெளிப்பாடுகள்.

ஒரு நாட்டின் சுகாதாரக் கொள்கையை வடிவமைப்பதில் பல சக்திகள் செயல்படுகின்றன. அரசியல் கட்சிகளின் கொள்கைகள், மருத்துவத் தொழில் சங்கங்கள், மருந்து நிறுவனங்கள், காப்பீட்டு உலகம், பொதுமக்கள் கோரிக்கைகள், சர்வதேச அழுத்தங்கள் — இவை அனைத்தும் ஒரு நாட்டின் சுகாதார முகத்தை நிர்ணயிக்கின்றன.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஐரோப்பாவில் தொழில் புரட்சி தீவிரமடைந்தது. கிராமங்களிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக நகரங்களில் குடியேறினார்கள். கல்கத்தாவில் தொழிற்சாலை, மான்செஸ்டரில் நெசவு, பர்மிங்காமில் கல் தோண்டு தொழில்  எனச் சில எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம்— எங்கும் கூட்டம்.

இந்த கூட்டத்தில் நோய்களும் கூட்டமாய் வந்தன. காலரா, டைஃபாய்டு, காசநோய் — இவை நகரங்களில் அலை அலையாய் உயிர்களைக் கொண்டு சென்றன. 1832 இல் லண்டனில் காலரா தாக்கம் மட்டுமே பதினைந்தாயிரத்துக்கும் அதிகமானவர்களைப் பலி கொண்டது. பணக்காரன் வீட்டிலும், ஏழைக் குடிசையிலும் இந்த நோய் வேறுபாடு பாராமல் நுழைந்தது.

இந்தத் தாக்கங்கள் ஒரு முக்கியமான உண்மையை ஆட்சியாளர்களுக்கு உணர்த்தின — நோய் என்பது தனி மனித விஷயமல்ல. ஒருவருக்கு வரும் தொற்று நூறு பேருக்குப் பரவும். ஆகவே, பொதுச் சுகாதாரம் என்பது அரசாங்கத்தின் கடமை என்ற சிந்தனை அரும்பியது. சாலைகளில் கழிவுகளைச் சேகரிப்பது, குடிநீர் சுத்திகரிப்பு, மக்கள் கூடும் இடங்களில் காற்றோட்டம் — இவை சுகாதார நடவடிக்கைகளாக வடிவெடுத்தன.

1948 ஆம் ஆண்டு உலக வரலாற்றில் ஒரு திருப்புமுனை. இரண்டாம் உலகப் போர் முடிந்து மூன்று ஆண்டுகளில் உலக சுகாதார நிறுவனம் (World Health Organization — WHO) உருவானது. அதன் அரசியலமைப்பு ஒரு புரட்சிகரமான வாக்கியத்துடன் தொடங்கியது: ‘உடல், மன, சமூக நலனில் முழுமையான நிறைவே சுகாதாரம் — வெறும் நோயின்மையல்ல.’

அதே ஆண்டு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அறிவிப்பில் 25 வது பிரிவில் உடல்நலம் ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை என்று பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த இரண்டு நிகழ்வுகளும் சுகாதாரத்தை ஒரு சரக்காகவும் சேவையாகவும் மட்டுமின்றி மனித உரிமையாக மாற்றின.

இங்கிலாந்தில் அதே 1948 ஆம் ஆண்டு தேசியச் சுகாதாரச் சேவை (NHS) தொடங்கியது — பிறந்தது முதல் இறக்கும் வரை இலவசமாக மருத்துவம் என்பதே இதன் தாரக மந்திரம். இது ஒரு சாதாரண நிகழ்வல்ல. நூறு ஆண்டுகளாக வர்க்கம், செல்வம் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு வந்த மருத்துவ அணுகல் இப்போது அனைவருக்கும் சமானமாக கிடைக்கும் என்று சட்டம் சொன்னது. இது ஒரு நாகரிகத்தின் தேர்வு.

இன்று உலகின் சுகாதார நிலையை ஒரு தட்டில் வைத்தால் அது சரிசமமான இரு பாகங்களாக இல்லை — ஒரு பக்கம் மிகவும் கனமானதாகவும் மறுபக்கம் மிகவும் இலேசாகவும் இருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலானவை ‘உலகளாவிய சுகாதார காப்பீடு’ (Universal Health Coverage — UHC) என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளன.

ஜெர்மனியில் 1883 லேயே  தொழிலாளர்களுக்குக் கட்டாயச்  சுகாதாரக்  காப்பீட்டை காய்சர் பிஸ்மார்க் அறிமுகப்படுத்தினார் — இது உலகின் முதல் தேசியச் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம். இன்று ஜெர்மனியில் 90 சதவிகிதம் மக்கள் அரசு-அங்கீகரிக்கப்பட்டக் காப்பீட்டு நிறுவனங்களால் பாதுகாக்கப்படுகிறார்கள்.

கனடாவில் ‘சிங்கிள் பேயர்’ (Single Payer) என்ற முறை உள்ளது — அரசாங்கமே ஒரே செலுத்துவாராக இருந்து மருத்துவச் செலவுகளை ஏற்கும். நோர்வே, சுவீடன், டென்மார்க் போன்ற ஸ்காண்டினேவியன் நாடுகளில் வரி வருமானத்திலிருந்து முழுமையான மருத்துவச் சேவை நடத்தப்படுகிறது. இந்த நாடுகளில் நோயாளி ஒருவர் மருத்துவமனையில் சேர்வதற்கு முன் காப்பீடு உள்ளதா என்று சோதிக்கப்படுவதில்லை.

ஆனால் வளர்ந்த நாடுகள் அனைத்தும் ஒரே அச்சில் இல்லை. அமெரிக்கா ஒரு விலக்கு. உலகின் மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட நாட்டில் 2024 ஆம் ஆண்டில் கூட மூன்று கோடிக்கும் அதிகமானவர்கள் எந்தச் சுகாதாரக் காப்பீடும் இல்லாமல் வாழ்கிறார்கள். மருந்துகளின் விலை உலகிலேயே மிக அதிகம். ஒரு புற்றுநோய் சிகிச்சை ஒரு குடும்பத்தை வறுமைக்குத் தள்ளும் அளவுக்குச் செலவாகும். இது ஒரு பணக்கார நாட்டின் சுகாதார முரண்பாடு.

ஆப்பிரிக்காவின் சப்-சஹாரன் பகுதியில் நிலை கவலைக்குரியது. தென் ஆப்பிரிக்காவில் சுமார் 80 சதவிகிதம் மக்கள் அரசு மருத்துவமனைகளையே நம்பியிருக்கிறார்கள், ஆனால் அந்த மருத்துவமனைகளுக்குப் போதுமான நிதியில்லை. சியர்ரா லியோன் நாட்டில் ஒரு மருத்துவரே ஐந்து ஆயிரம் மக்களுக்கு மேல் சேவை செய்ய வேண்டும். ஒரு பிரசவம் கேள்விக்குத் திரும்புவதற்கு முன்பே தாய் இறந்துவிடுவது இன்னும் அங்கங்கே நடக்கிறது.

இந்தியாவின் நிலை சுவாரஸ்யமான முரண்பாடுகளால் நிறைந்தது. உலகின் மிகப் பெரிய மருத்துவர் உற்பத்தியாளர் நாடு இந்தியா. மலேரியா, காசநோய் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருக்கிறது. ஆனால் கிராமப்புறங்களில் இன்னும் அடிப்படை சுகாதார வசதிகள் கிட்டுவதில்லை. ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் வாயிலாக கோடிக்கணக்கான ஏழை மக்களுக்குக் காப்பீடு சலுகை தரப்பட்டாலும், அதை நடைமுறைப்படுத்துவதில் இடைவெளிகள் தொடர்கின்றன.

வளரும் நாடுகளில் சில கவனிக்கத்தக்க வெற்றிக்கான கதைகளும் உண்டு. ருவாண்டா 1994 இல் நரமேத யுத்தத்திலிருந்து மீண்ட பிறகு தனது சுகாதார அமைப்பை முழுதாக மறுகட்டமைத்தது. இன்று ருவாண்டா ஆப்பிரிக்காவிலேயே மிகவும் திறனுள்ள சுகாதார அமைப்புகளில் ஒன்றை வைத்திருக்கிறது. தாய்லாந்து 2002 இல் தனது ‘யுனிவர்சல் கவரேஜ்’ திட்டத்தை அறிமுகப்படுத்திக் குறுகிய காலத்திலேயே மக்களுக்கு அதிகமான சுகாதார அணுகல் கொடுத்தது. இந்த நாடுகள் நிரூபிக்கின்றன — பணம் இல்லாவிட்டாலும் திட்டமிட்ட கொள்கை இருந்தால் மாற்றம் சாத்தியம்.

‘காப்பீடு’ என்ற வார்த்தையின் ஆழமான அர்த்தம் நமக்குச் சொல்லப்படுவதற்கும் அதிகமாகவே புரிந்து உள்ளது. நாம் வாகன காப்பீடு, வீட்டு காப்பீடு என்று கேள்விப்படுகிறோம். ஆனால் உடல்நலக் காப்பீடு என்பது வேறு ஒரு தளத்தில் செயல்படுகிறது — ஏனென்றால் உடல்நலம் என்பது ஒரு வாகனமோ வீடோ அல்ல. அது ஒரு மனிதனின் உயிர்.

காப்பீட்டின் அடிப்படை யோசனை எளிமையானது. நாளை நோய்வந்தால் அதைப் போக்க ஆகும் செலவு நமக்கு கட்டுப்படியாகாமல் போகலாம் என்ற அச்சம் நமக்கு இருக்கிறது. ஆகவே, இப்போது ஒரு சிறிய தொகையை செலுத்தி வைக்கிறோம். அது ஒரு பெரிய சமூக வங்கியில் சேர்கிறது. யாருக்காவது நோய் வரும்போது அந்த வங்கியில் இருந்து பணம் எடுக்கப்படுகிறது. இது ‘ரிஸ்க் பூலிங்’ (Risk Pooling) — அபாயத்தைப் பலரிடையே பரவல் செய்வது.

ஆனால் இந்த எளிமையான யோசனை, நடைமுறையில் மிகவும் சிக்கலானது. யார் இந்த காப்பீட்டை நடத்துவார்கள்? அரசாங்கமா? தனியார் நிறுவனங்களா? இரண்டுமா? பிரீமியம் — அதாவது மாதாமாதம் செலுத்தும் தொகை — எவ்வளவு இருக்கும்? எந்த நோய்களுக்கு காப்பீடு கிடைக்கும்? முன்பே இருந்த நோய்களுக்கு? தீவிரமான நோய்களுக்கு மட்டுமா? மனநலச் சிகிச்சைக்கும் கிடைக்குமா? — இந்தக் கேள்விகள் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதத்தில் விடையளிக்கப்படுகின்றன.

காப்பீட்டை நடத்துவது ஒரு தொழில் என்றால், அந்தத் தொழிலின் நோக்கம் லாபம் ஈட்டுவது. ஒரு காப்பீட்டு நிறுவனம் லாபம் ஈட்ட வேண்டும் என்றால் அது என்ன செய்யும்? அதிக நோய்க்கு ஆட்படக்கூடியவர்களைத் தவிர்க்கும், அல்லது அவர்களிடம் அதிக பிரீமியம் வசூலிக்கும். இந்த நடவடிக்கை வணிக ரீதியில் புரிந்துகொள்ளக்கூடியது, ஆனால் சமூக நீதியின் கோணத்தில் மிகவும் தவறானது.

சுகாதாரக் கொள்கை என்பது தாள்களில் எழுதப்பட்ட விதிகள் மட்டுமல்ல — அவை மனிதர்களின் வாழ்வையும் மரணத்தையும் தீர்மானிக்கும் சக்தி வாய்ந்தவை.

சுகாதாரக் கொள்கையில் ஒரு நாடு எந்தத் திசையில் செலவிடுகிறது என்பது மிக முக்கியம். நோய் வந்த பிறகு சிகிச்சை கொடுப்பதா, நோய் வராமல் தடுப்பதற்கு முயல்வதா?

அமெரிக்காவில் நோய் வந்த பிறகு தரப்படும் சிகிச்சைக்காக மட்டுமே ஆண்டுதோறும் மூன்று ட்ரில்லியன் டாலர்களுக்கும் அதிகம் செலவாகிறது. ஆனால் ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, சூழல் மாசு தடுப்பு, சமூக சேவை போன்ற முன்தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகச் செலவிடப்படுகிறது. ஒரு டாலர் முன்தடுப்புக்கு செலவிட்டால் பல டாலர் சிகிச்சை செலவை மிச்சப்படுத்தலாம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால் அரசியல் ரீதியாக, நோயாளியைக் காப்பாற்றுவது தெரியும், நோய் வராமல் தடுப்பது கண்ணுக்குத் தெரியாது.

நவீன மருத்துவ அறிவியல் ஒரு முக்கியமான உண்மையை நிரூபித்திருக்கிறது — ஒருவர் எந்தக் குடும்பத்தில், எந்த வட்டாரத்தில், எந்த வகுப்பில் பிறந்தார் என்பது அவரது உடல்நலனை மரபணுவைவிட அதிகமாகத் தீர்மானிக்கிறது. இதை ‘சுகாதாரத்தின் சமூக நிர்ணயகங்கள்’ (Social Determinants of Health) என்று அழைக்கிறார்கள்.

ஓர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம். ஒரே நகரத்தில் வசிக்கும் இரு குழந்தைகள். ஒருவன் பணக்கார குடும்பத்தினன் — நல்ல பள்ளி, சத்தான உணவு, சுத்தமான வீடு, பசுமையான பூங்காக்கள். மற்றொருவன் ஏழை குடும்பத்தினன் — பழைய வீடு, மாசடைந்த காற்று, போதுமான ஊட்டச்சத்தில்லா உணவு, மன அழுத்தம் நிறைந்த சூழல். ஆய்வுகள் காட்டுவது என்னவென்றால், இந்த இரு குழந்தைகளின் சராசரி ஆயுட்காலம் பத்தாண்டுகளுக்கும் அதிகமாக வேறுபடலாம் — அது வெறும் மரபணு அல்ல, சூழல்.

இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளும் நாடுகள் தங்கள் சுகாதாரக் கொள்கையை வித்தியாசமாக வடிவமைக்கின்றன. அவர்கள் வீட்டுவசதி, கல்வி, வேலைவாய்ப்பு, உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றையும் சுகாதாரக் கொள்கையின் பகுதியாகவே கருதுகிறார்கள். ஏனென்றால் இவை எல்லாம் நோயின் வேர் காரணங்கள்.

2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் பரவிய கோவிட்-19 தொற்றுநோய் நாடுகளின் சுகாதாரக் கொள்கைகளுக்கு ஒரு கடுமையான பரீட்சை கொடுத்தது. அந்தப் பரீட்சையில் யார் தேர்ச்சி பெற்றார்கள், யார் தோற்றார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது.

தைவான், தென் கொரியா, நியூஸிலாந்து போன்ற நாடுகள் கொரோனாவை சீரான வேகத்தில் கட்டுப்படுத்தின. இந்நாடுகளில் பொதுச் சுகாதார அமைப்பு வலிமையானது; சோதனை, தடுப்பு, தனிமைப்படுத்துதல் இவை விரைவாகச் செயல்பட்டன. மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நம்பிக்கை இருந்தது.

ஆனால் அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் நிலை வேறாக இருந்தது. சுகாதாரக் கொள்கையை அரசியல் கண்ணோட்டத்தில் அணுகியது; மாஸ்க் அணிவது கூட சர்ச்சையானது. காப்பீடு இல்லாதவர்கள் சோதனையே செய்துகொள்ளாமல் இருந்தார்கள் — செலவுக்குப் பயந்து. இது நோய்ப் பரவலை மேலும் ஊக்குவித்தது.

கோவிட்-19 ஒரு உண்மையை உலகுக்கு நிரூபித்தது: சுகாதாரம் என்பது தனி மனித விஷயமல்ல, அது ஒரு சமூகப் பொறுப்பு. ஒருவர் நோய்வாய்ப்படும்போது அது பலரைப் பாதிக்கும். ஆகவே, அனைவரையும் காப்பாற்றும் அமைப்பு இல்லாவிட்டால் யாரும் பாதுகாப்பாக இல்லை.

உலகின் எந்த நாட்டிலும் காப்பீட்டு முறையில் ஒரு கசப்பான உண்மை இருக்கிறது — அதிகமாகக் காப்பீடு தேவைப்படுவோர்தான் பெரும்பாலும் காப்பீடு இல்லாமல் இருக்கிறார்கள்.

ஒரு நிலையான வேலையில் இருப்பவர்களுக்கு நிறுவனக் காப்பீடு கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு அரசு காப்பீடு இருக்கும். ஆனால் கட்டடத் தொழிலாளர்கள், தெரு வியாபாரிகள், விவசாயிகள், வீட்டு வேலை செய்வோர் — இவர்களுக்குப் பெரும்பாலும் எந்தக் காப்பீடும் இல்லை. இவர்களுக்கு நோய் வந்தால் என்னவாகும்? சேமிப்பு காலியாகும். நகைகள் விற்கப்படும். கடன் வாங்கப்படும். அல்லது வலி தாங்கி வேலைக்குச் செல்வார்கள்.

இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வுகள் ஓர் அதிர்ச்சியூட்டும் உண்மையை வெளிப்படுத்துகின்றன. மருத்துவச் செலவுகள் காரணமாக ஆண்டுதோறும் கோடிக்கணக்கான குடும்பங்கள் வறுமை கோட்டுக்கு கீழே தள்ளப்படுகின்றன. ஒரு குடும்ப உறுப்பினருக்கு கேன்சர் வந்தால், அல்லது இதய அறுவை சிகிச்சை தேவைப்பட்டால், அந்தக் குடும்பம் பல ஆண்டுகள் கட்டிய சேமிப்பை இழக்கிறது. இதை ‘Catastrophic Health Expenditure’ — பேரழிவு சுகாதாரச் செலவு என்று அழைக்கிறார்கள்.

பாலின பேதங்களும் சுகாதார அணுகலைப் பாதிக்கின்றன. பல நாடுகளில் பெண்களுக்கு, குறிப்பாகக் கிராமப்புறப் பெண்களுக்கு, உடல்நலக் கவலைகளை முதன்மைப்படுத்தும் சூழல் இல்லை. குழந்தைகளைக் கவனிப்பதும், குடும்பத்தைக் கவனிப்பதும் முதன்மையாக இருக்கும்போது, தங்கள் நோயைக் கடைசியில் வைக்கிறார்கள். இந்தச் சூழல் கொள்கை அளவிலும், காப்பீட்டு அளவிலும் நிவர்த்தி செய்யப்படாவிட்டால் தொடர்ந்து நீடிக்கும்.

இந்தியாவில் தமிழ்நாடுச் சுகாதாரத் துறை ஒரு சிறப்பான இடத்தை வகிக்கிறது. ‘முதல்வர் காப்பீட்டுத் திட்டம்’ மற்றும் ‘மக்கள் நலன் திட்டம்’ ஆகியவை கோடிக்கணக்கான மக்களுக்குச் சேவை செய்கின்றன. அரசு மருத்துவமனைகளில் இலவச மருந்துகள் அளிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் குழந்தை இறப்பு விகிதம் தேசியச் சராசரியை விட குறைவாக உள்ளது — இது கொள்கைகளின் வெற்றி.

ஆனால் சவால்கள் இன்னும் உள்ளன. கிராமப்புறங்களில் மருத்துவ நிபுணர்கள் போதுமானவர்கள் இல்லை. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைச் செலவுக் கட்டுப்பாடு இல்லாமல் உயர்கிறது. மனநலச் சிகிச்சை இன்னும் முழுமையாகக் கவரேஜ் பெறவில்லை. இந்த இடைவெளிகளை நிரப்புவதுதான் அடுத்த கட்ட நெருக்கடி.

உடல்நலம் என்பது ஒரு மனிதனின் மிக அடிப்படையான சொத்து.  அதைப் பாதுகாக்கவும், மீட்கவும் கிடைக்கும் வாய்ப்பு — யாருக்கு எப்போது எந்த நிலையில் கிடைக்கிறது என்பது — ஒரு சமூகத்தின் அடிப்படை நீதியைப் பிரதிபலிக்கிறது.

இந்தக் கட்டுரைகளில் நாம் பார்க்கப்போவது என்னவென்றால்: உலகின் பல்வேறு சுகாதார அமைப்புகள் — பொதுச் சுகாதார முறை, தனியார் காப்பீட்டு முறை, கலப்பு முறை, ஒற்றைச் செலுத்துனர் முறை — இவற்றின் நன்மை தீமைகள். ஒவ்வொரு முறையும் யாருக்கு உதவுகிறது, யாரை விட்டு விடுகிறது என்பதை. கோவிட் காலத்தில் என்ன பாடங்கள் கற்றோம்? காலநிலை மாற்றம் சுகாதாரத்தை எப்படி பாதிக்கிறது? செயற்கை நுண்ணறிவு மருத்துவத்தை எங்குக் கொண்டு செல்கிறது?

சுகாதாரக் கொள்கை என்பது வெறும் அரசியல்வாதிகளுக்கும் மருத்துவர்களுக்கும் மட்டுமானது அல்ல. அது நம் அனைவருக்கும் உரியது. நாம் கட்டும் வரி பணம் எங்கு செல்கிறது, நோய்வாய்ப்பட்டால் நமக்கு என்ன கிடைக்கும், நம் பிள்ளைகளுக்கு எந்த சுகாதார உலகை விட்டுச் செல்கிறோம் — இந்தக் கேள்விகளைக் கேட்கும் உரிமையும், விடைகளைத் தேடும் பொறுப்பும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.

நோய் வரும்வரை காத்திருக்காமல், நோய் வராமல் தடுக்கும் சமூகம்; பணமுள்ளவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் கவனிப்பு கிடைக்கும் உலகம் — இதுதான் நமது கனவாகவும், இலக்காகவும் இருக்கட்டும். அந்தக் கனவை நோக்கி உலகின் பல நாடுகள் எடுக்கும் படிகளை, செய்யும் தவறுகளை, கற்கும் பாடங்களை இந்தத் தொடரில் நாம் ஒன்றாகப் படிப்போம்.

பொது நலம்

கூட்டு முயற்சியும் பொது நலமும் காப்பீட்டின் பிறப்பிடம்: ஐரோப்பா
Exit mobile version