மலையாள மூலம்: பி.வத்சலா
ஆங்கிலம் வழி: வசந்தி சங்கரநாராயணன்
தமிழாக்கம் : தி. இரா.மீனா
சமையல் தொழிலில் தன்னோடு உதவியாக இருப்பதற்கு, பரமேஸ்வரன் ருக்மிணியைத் திருமணம் செய்து கொண்டான். கிருஷ்ணன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குச் சோறும், கறியும் சமைத்துத் தருவதே அவனுடைய வாழ்க்கையின் ஆதாரமான தொழில். மலைப்பகுதியின் நடுவே உள்ள அந்தக் கிருஷ்ணன் கோவிலுக்கு வழிபாடு், சாவுச் சடங்குகள், பெயர் சூட்டு விழாக்கள், திருமணங்கள் என்று வரும் மக்களுக்கு உணவு சமைத்துத் தந்து, சம்பாதிக்கிறான். வாழ்க்கையைச் சாதாரணமாக நடத்திச் செல்லவும், வீட்டுக் கூரை வேய்தல், அணிவதற்கு இரண்டு ஜோடி ஆடை என்ற தேவைக்கும் அந்த வருமானம் போதுமானதாக இருந்தது. இதற்கு மேல் ஆசைப்பட என்ன இருக்கிறது ? பரமேஸ்வரனுக்கு வேறு எந்த வேலையும் தெரியாது.
கோவிலுக்குப் போக வசதியாக, சாலையும், பஸ்ஸும் வந்த பிறகு, பக்தர்களின் வருகை ஜாஸ்தியானது. தனக்கு உதவி செய்ய யாராவது வேண்டும் என்று நினைத்தான். ஒரு பெண்தான் இதற்குப் பொருத்தமானவளாக இருக்க முடியும். பல மனிதர்கள் வந்து போகும் ஓரிடத்தில் அரைக்க, சமைக்க, மீதமிருக்கிற உணவைச் சரி செய்ய, சுற்றுப் புறத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ள அவளால் முடியும். ருக்மிணியைத் தூரத்து கிராமத்திலிருந்து திருமணம் செய்து கூட்டி வந்தான். அவள் அழகோ, படிப்போ பரமேஸ்வரனின் கண்களுக்கு முக்கியமில்லை. அவனுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும், அவள் காட்டுகிற கட்டுப்பாடு தான் முக்கியம். அவர்களால் இப்போது பக்தர்களுக்குக் காலைச் சிற்றுண்டியும்,மதிய உணவும் தர முடியும். காலைச் சிற்றுண்டியும், இரவு உணவும் சுலபமாகச் செய்வது எப்படி என்றும் அவளுக்குத் தெரியும்.
பிறகு, அந்தக் கவலையற்ற வாழ்வில் வேறு என்ன தடை இருக்க முடியும்? அவளுக்கு என்ன குறை? இதைப் பரமேஸ்வரனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
சாப்பாட்டை முடித்து விட்டு, கடைசி விருந்தாளி லாட்ஜுக்குப் போகிற படியில் ஏறினார். விளக்கைப் போட்டு விட்டு ருக்மிணி கதவைச் சாத்தினாள். சமையலறையில் உட்கார்ந்து சாப்பிடத் தயாரானாள். பாத்திரத்தில் சிறிது சோறு இருந்தது. அந்த வாடிப் போன வாழை இலையைப் பார்த்தாள். யாரும் இனி மேல் வர மாட்டார்கள் என்று நினைத்தாள். ஆறிப் போயிருந்த வெந்நீரை அடுப்பி்ன் மேல் வைத்திருந்ததால் சூடு இருந்தது. அவளுக்குச் தொட்டுக் கொள்ள கறி இல்லை. எல்லா நாளும் இதே கதைதான். காய்கறிகள் விலை அதிகம். பச்சை மிளகாய் ,கத்தரிக்காய் செடிகள் வைக்க அவளுக்கு ஆசை என்றாலும் அன்றாட வேலைகளால் அதற்கெல்லாம் நேரமில்லை.
மாங்காய் ஊறுகாய் ஜாடியைச் சுரண்டி, ஒரு துண்டை எடுத்துத் தன் தட்டில் வைத்துக் கொண்டாள். காலியாகி இருந்த மோர் பாத்திரத்தில் அந்த வாடை மட்டுமிருந்தது.
தன் தட்டிலிருந்த பாதிச் சோற்றை எடுத்து, பானையில் போட்டு விட்டு, கூடையைத் தள்ளி வைத்தாள்.
அவள் சாப்பிடத் தொடங்கிய கணத்தில், வெளியே காலடிச் சத்தம் கேட்டது. வராந்தாவின் அணைக்கப் படாத விளக்கு இந்தத் தாமதமான விருந்தாளியை உள்ளே வரச் செய்திருக்கிறது.
வராந்தாவிற்குச் செல்லும் படிகளின் அருகே காலடிச் சத்தம் நின்றது.
திறந்திருந்த அடுப்படி இருட்டினூடே கூர்மையாகப் பார்த்தாள். மண்ணெண்ணைய் விளக்கைத் தூக்கினாள். ஆனால் அப்போதுதான் வந்திருந்த அந்த மனிதனால் அவளை நன்றாகப் பார்க்க முடிந்தது. தட்டு, அவள் புடவை முனை, தண்ணீர் நிரம்பிய வெண்கல டம்ளர் ஆகியவை அவனுக்குச் சிறிய நிம்மதியைத் தந்தன. படிகளிலேறி லாட்ஜுக்குப் போக அவனுக்குத் தெம்பில்லை.
அடுப்படியில், பானையிலிருந்த இஞ்சித் தண்ணீர் மீது அவன் பார்வை போனது.
அவள் இதற்கு மேலும் அமைதியாக உட்கார்ந்திருக்க முடியாது. தன் சாப்பாட்டுத் தட்டை ஓர் இலையைப் போட்டு மூடி விட்டுக் ,கையில் விளக்கை எடுத்துக் கொண்டு வராந்தாவை நோக்கி நடந்தாள். இப்போது விருந்தாளியின் ஒளி விடும் கண்களையும், கருமையான தாடியையும் அவளால் பார்க்க முடிந்தது. மண் பரவி, அவனுடைய வேட்டியும், ஜிப்பாவும் அழுக்காக இருந்தன. காட்டு வழியில் அவன் வந்ததால் இப்படி ஆகியிருக்க வேண்டும். அவன் மீது கடும் மஞ்சள் வாடை அடித்தது. தன் தோளில் தொங்கிக் கொண்டிருந்த பையைக் கட்டைச் சுவற்றில் வைத்தான். அவளை ஏக்கமாகப் பார்த்து விட்டு, இருட்டான அடுப்படியையும் பார்த்தான்.
சுருட்டிச் சுவற்றில் சாய்த்து வைக்கப் பட்டிருந்த பாயை எடுத்துத் தரையில் விரித்து, “தயவுசெய்து உட்காருங்கள்” என்றாள் ருக்மணி. அணைக்கப்பட்டிருந்த விளக்கை ஏற்றினாள். சுற்றி இருட்டாக இருந்ததால் விளக்கு பிரகாசமாகத் தெரிந்தது. அமாவாசை இருட்டின் முதல் நாள் என்பதால் விளக்கில் முன்கூட்டியே எண்ணெய் நிரப்பி இருந்தாள்.
ஒரு வார்த்தை கூடப் பேசாமல், இஞ்சித் தண்ணீர்ப் பாத்திரத்தை எடுத்து வந்து, அவன் முன்னால் வைத்தாள்.
தாகம் அடங்கத் தண்ணீர் குடித்தான். வரண்ட குழியில் நீரூற்று வேகமாகப் பாயும் போது எழும் சப்தம் போல அது இருந்தது. அவன் தொண்டைக் குழியின் தண்ணீர் வெறியை அவளால் பார்க்க முடிந்தது.
“நீங்கள் சாப்பிட்டு விட்டீர்களா?” அவள் கேட்டாள். நேரம் கடந்து விட்ட அந்தப் பொழுதில் சாப்பாடு கேட்பது சரியல்ல என்று நினைத்தபடி ,அவன் பேசாமலிருந்தான்.
தொலை தூர மலைப் பகுதியில் ஒரு காட்டுத் தீ உருவானது. எரியும் மரத்தின் மணம். இந்தத் தீ வசந்தத்தை வாட்டி விடும்’ என்று பதட்டப் பட்டாள்.
அடுத்த நாளில் அவள் எப்படிச் சமைப்பாள்? விருந்தினர்கள் கை கழுவுவதற்குத் தண்ணீர் இருக்குமா? பெரும்பான்மை நேரங்களில் அவர்கள் தங்கள் முகங்களையும், பாதங்களையும் கழுவிக் கொள்ள வருவார்கள். அவர்களுக்கு உணவை விடத் தண்ணீர் மிகத் தேவை. சோற்றுக்குப் பதிலாக எலுமிச்சைச் சாற்றை அவன் விற்றிருந்தால், மிகப் பெரிய பணக்காரனாகி இருக்க முடியுமென்று பரமேஸ்வரன் அடிக்கடி சொல்லுவான். ஆனால் குடி தண்ணீரை விற்றுப் பணம் சம்பாதிப்பது மிகப் பெரிய பாவம் என்று அவன் நம்பினான்.
“எனக்கு ஒரு குவளை தண்ணீர் தர முடியுமா?” அவன் கெஞ்சினான். அவள் பதட்டமானாள். லாட்ஜின் கை கழுவுமிடம் வரண்டு போயிருந்தது. வீட்டிற்குள் வெம்மையாக இருப்பதால் லாட்ஜின் முதல் மாடி வராந்தாவில் படுத்துக் கொள்வதாகச் சொல்லி விட்டுப் பரமேஸ்வரன் போய் விட்டான். அக்கம் பக்கத்தில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை. எரியும் காடுகளுக்கிடையில் இருக்கும் நீரூற்றின் வேதனை அவளுக்குப் புரிந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, அதன் வேதனைக் குரல் கூடத் தேய்ந்து, ஒன்றுமில்லாமல் போய் விட்டது.
தண்ணீர் நிரம்பியிருந்த கெட்டிலை எடுத்துக் கொண்டு மரத்தடிக்குப் போய் முகம், கை கால்களைச் சுத்தம் செய்து கொண்டான். மீதமிருக்கிற தண்ணீரில் அவன் பாதங்களைக் கழுவுவதைப் பார்த்து அவள் கலங்கிப் போனாள். எதிர்த்துக் குரல் எழுப்ப அவளால் முடியவில்லை. நடையால் தளர்ந்து போன மனிதன்! விளக்கு வெளிச்சத்தில் அவனது உயரத்தையும், மெல்லிய உடல்வாகையும் பார்த்து, அவள் முன்னால் ஒரு புதிய கற்பனை உருவம் எழுந்தது. அமாவாசை நாளில் அடிவானத்தில் தோன்றும் நட்சத்திரங்களாய். அவளுடைய இருட்டு உலகில் அவன் கண்கள் நட்சத்திரங்களாய் ஒளிர்ந்தன. நள்ளிரவு கடந்து விட்டதா?
தண்ணீரில்லாமல் இன்னொரு வைகறை என்ற எண்ணம் அவளுக்குக் கலக்கம் தந்தது. இன்னொரு நாள் என்பது பிறக்குமா?
இலைகள் வாடிப் போயிருந்ததால் தட்டில் உணவு பரிமாறினாள். சோற்றினருகே ஒரு மாங்காய் ஊறுகாய்த் துண்டு. உறை ஊற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த மோரை எடுத்துச் சோற்றின் மேல் தெளித்தாள். இது, விருந்தாளிக்கு உணவு பரிமாறும் ஒரு முறையே தவிர கற்பனையான விவரமல்ல. இரவு உணவு பற்றி தான் அவனிடம் கேட்டிருக்கக் கூடாது என்று நினைத்தாள்.
சாப்பிடுவதற்கு முன்னால், அவன் ருக்மிணியின் முகத்தைப் பார்த்தான். “நீங்கள் சாப்பிட்டு விட்டீர்களா?”
ருக்மிணி திகைத்துப் போனாள். இந்த நிமிடம் வரை அவள் சாப்பிட்டாளா என்று யாரும் கேட்டதில்லை. அவளுடைய கணவன் கூட. அமைதியாக இருந்தாள்.
“தயவுசெய்து இன்னொரு தட்டு கொண்டு வாருங்கள். இவ்வளவு சோறு எனக்கு அதிகம்.”
ஒரு வார்த்தை கூடப் பேசாமல், இன்னொரு தட்டைக் கழுவிக் கொண்டு வந்து அவனிடம் தந்தாள். இன்னொரு முறை அவன் கறி கேட்பானோ என்று பயந்து, அங்கிருந்து போய் விட்டாள். விளக்கின் திரியைச் சற்று மட்டுப் படுத்தி விட்டு, அடுப்படியின் ஒரு மூலையில் நின்றாள். ஒருவரை ஒருவர் பார்க்க முடியாத ஓர் இருட்டு மூலை.
அவன் அமைதியாகச் சாப்பிட்டான். வறுத்து வைக்க ஓர் அப்பளம் கூட இல்லாதது அவளுக்கு வருத்தமாக இருந்தது. பொதுவாகச் சிறப்பு விருந்தினர்களுக்கென்று அவள் கொத்தவரை, பாகற்காய் வத்தல்கள், பலாப்பழ அப்பளம் என்று ஏதாவது வைத்திருப்பாள். அடுப்படி முற்றத்தில் இந்தத் தேவைக்காகவே பல காய்கறிகளைப் பயிரிட்டிருந்தாள். கோடை அனைத்தையும் கருக்கி விட்டது. மலைகள் வெம்மையாகு்ம் போதும், காட்டு நீரூற்றுக்கள் தம் தொண்டை வற்றி காயும் போதும் அவள் ஓர் உண்மையான பாலைவனத்தால் சூழப்பட்டிருப்பாள். மலைகளுக்கு அப்பால் எங்கோ வெகு தொலைவில் மழை தெரிகிறது. மழை மேகங்களைக் கையை நீட்டித் தொட்டு, இங்கே இழுத்து வரக் கூடிய காற்றின் லேசான அடையாளம் கூட இப்போதில்லை.
அவன் சாப்பிட்டு எழுந்திருக்கும் சத்தம் அவளுக்குக் கேட்டது. கை கழுவத் தண்ணீர் தர வேண்டுமே, எங்கே போவது என்று நடுங்கினாள்.
பானைகள், சட்டிகள், பாத்திரங்கள் என்று எல்லாம் காலியாகி, கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன. குடிப்பதற்கு வெந்நீர் மட்டும் கொஞ்சம் இருந்தது. அதைத் டம்ளரில் ஊற்றி அவனிடம் தந்தாள்.
கையைக் கழுவியபடியே பக்கவாட்டில் அவள் முகத்தைப் பார்த்தான்.
“தண்ணீர் தீர்ந்து விட்டது.” மென்மையாகச் சொன்னாள்.
அவளை வியப்பாகப் பார்த்தான்.
“இந்த இடத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடா?” அடிவானத்தின் சிவப்பு நெருப்பு மாலையைப் பார்த்துப் பெருமூச்சு விட்டான்.
தான் சாப்பிட வேண்டாமென்று அவள் முடிவு செய்தாள். சட்டி பானைகளை முறையாக அடுக்கி வைத்தாள். அவள் கதவை மூடும் போது, தோளில் பையை மாட்டிக் கொண்டு அவன், “லாட்ஜில் படுக்கப் போகிறேன். காலையில் எங்கே குளிப்பது?” என்று கேட்டான்.
இருட்டில், தொலைவிலுள்ள குளியல் இடத்தை அவள் காட்டினாள்.
“நீங்கள் நீண்ட தூரம் நடக்க வேண்டும். சாமுண்டிக் குழியில் மட்டும்தான் தண்ணீர் இருக்கிறது. உண்மையில் அது மிக ஆழமான குளம்.”
அவன் கற்படிகளில் ஏறி நடந்து கோயிலின் முற்றத்தில் மறைந்தான். விதியைப் போல பயமுறுத்தித் தன் முன்னால் நின்ற செங்குத்தான சுவர்களை ருக்மிணி வெறித்தாள். அந்தச் சுவர்கள் பாறைகளிலிருந்து வடிக்கப் பட்டவை ; கீழே ஒரு சிறையைப் போல சிறிது உயர்த்தப்பட்ட பகுதி. யாருமே, காற்று கூட அவளுடைய வேய்ந்த சிறிய குடிசையைப் பார்க்க முடிந்ததில்லை
நள்ளிரவு கடந்து விட்டது. ஓரளவு குளிர்ச்சியாக இருப்பதால் அவள் கணவன் கீழே வரலாம். அவன் வராமலும் இருக்கலாம்.
வெளிப் புறத்திலிருந்து கதவைச் சாத்தி விட்டு, வராந்தாவின் முன்னால் ஒரு பாயை விரித்தாள். முன்பின் தெரிந்திராத அந்த விருந்தாளியின் மஞ்சள் வாடை பாயிலிருந்து வெள்ளிப்பட்டது.
புரண்டு படுத்தாள். தூக்கம் வரவில்லை. தூக்கத்திலிருந்து எழுந்த அவளுடைய சின்னக் குழந்தை, ஏதோ முனகியபடி அவளருகே வந்து. படுத்துக் கொண்டான். அவனுக்கு வியர்ப்பதை உணர்ந்து, தூங்குவதற்காக விசிறியை எடுத்து விசிறினாள்.
எங்கோ தொலைவில் வரண்ட இடியொலி கேட்டது . முற்றத்திலிருந்த மரத்தின் உயர்ந்த கிளைகளிலிருந்து இலைகள் சலசலத்தன. அவள் தூங்கிப் போனாள். காலடிச் சத்தம் அவளை எழுப்பியது.
இன்னும் விடியவில்லை. ஒன்றிரண்டு பறவைகளின் கீச்சொலி. அவள் கண்களைத் திறந்து மூடினாள். பிறகு தன்னருகே எதையோ தேடத் தொடங்கினாள்
டார்ச் ஒளி தெரிந்தது. “என்ன தேடுகிறீர்கள்?” முற்றத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. அந்த ஒளி இருட்டைக் கிழிக்க, மீண்டும் அவள் தன் பார்வையைப் பாயை நோக்கித் திருப்பினாள்.
எதுவுமில்லை. வெறுமைதான். தன் மகன் என்பது வெறும் கனவுதான் என்ற கசப்பான உண்மை ஞாபகத்திற்கு வந்தது. வரண்ட மண்ணில், சிக்கிய ஒர் கிளையின் மேல், வளர்ந்து வரும் ஒரு வீணான இளந்தண்டு. பகலின் வெளிச்சம் பார்ப்பதற்கு முன்னாலேயே வாடிப் போனது.
தன் கனவை மறக்க முயற்சி செய்து சிரித்தாள்.
“நான் குளிர்ச்சியான தண்ணீர்த் துளியைத் தேடப் போகிறேன்.” என்று விருந்தாளி முணுமுணுத்தான். கேள்விக் குறியோடு அவள் கண்களைப் பார்த்தான்.
பாயைச் சுருட்டி வைத்து விட்டு, அவனோடு சேர்ந்து கொண்டாள்.
P. Vatsala , Chamundi’s Pit
நன்றி : Under The Wild Skies , An Anthology of Malayalam Short Stories,
National Book Trust, India Editor K.Sachidanandan
பி.வத்சலா :
சமூகச் செயற்பாட்டாளரான வத்சலா பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடத் தக்கவர். இவருடைய பங்களிப்பு 17 நாவல்கள். மற்றும் 25 சிறுகதைத் தொகுப்புகள். நெல்லு, நிழலுறங்குன்ன வழிகள், கௌதமன், பெம்ப்பி உள்ளிட்டவை சிறந்த படைப்புக்களாக மதிப்பிடப் பட்டுள்ளன. பெரும் பாலான படைப்புகள் வயநாடு மலைவாழ் மக்களின் பின்புலம் கொண்டவை. கேரள சாகித்ய அகாதெமி விருது, எழுத்தச்சன் விருது பெற்றவர்.
