Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

பாரதியின் காளி

பாரதியின் பன்முக ஆளுமையிலிருந்த சாக்த சாரம்

‘பாரதியின் காளி’ என்ற சந்தியா பதிப்பக 2025 வெளியீட்டில் (இதற்கு முன் தமிழினி வெளியீட்டில் பாரதியின் கல்வி என்ற தலைப்பில் வந்திருந்த நூல்) ஸ்ரீரங்கம் மோகனரங்கன் எழுதிய கட்டுரைத் தொகுப்பு நூல்  பாரதியாரை அணுக்கமாகவும் நுணுக்கமாகவும் படித்ததனால் உண்டான புரிதலினாலும், அது எழுப்பும் கேள்விகளை நோக்கியும் தன்விசாரணையான குரலில் எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள் அடங்கியது. 

பாரதியார் பிரச்சாரப் பொருளாக, புகைப்பட ஆளுமையாக, விதந்தோதல் மூலமாக உருப்பெருக்கப்பட்ட ஆளுமையாக, விவாதத்துக்கு அப்பாற்பட்ட மனிதராக, தேவையற்ற விவாதப்பொருளாக, சார்புநிலைகளால் போற்றப்பட்டோ, தூற்றப்பட்டோ ஆகிவிட்ட ஆளுமையாக, தமிழின் இலக்கிய நவீன அடையாளத்துக்கு தேவையான இலச்சினையாகவோ – இப்படிப் பலவாறெல்லாம் சிலாகிக்கப்படும் சூழலில், பாரதியை பலர் இலக்கிய அஞ்சறைப்பெட்டி வஸ்துவாக உபயோகிப்பதை நாம் எளிதாகவே காணநேரும் சூழலில், இது அவரது எழுத்துக்கள் மூலமாக நாம் அறிந்தவரை, அவரை முழுமையாக அறிய முயலும் முயற்சியாக இருக்கிறது. பாரதியாரின் மனப்பாங்கு, தேடல்கள், விடாமுயற்சி, உணர்ச்சிப்பெருக்கு, ஆன்மீகம், சாக்த நெறி, தேசாபிமானம், சமூக நிலைகுறித்த பார்வைகள் மற்றும் சராசரி மனிதனுக்குரிய தவிப்புகள் போன்ற அனைத்துக்கும் அவருடைய மனமும் அறிவும் எப்படி செயல்பட்டிருக்கின்றன என்று அறிந்துகொள்ள முனைகின்றன, இயல்பாக.

கர்ப்பக்ருஹத்தினுள் விக்ரகமாய் ஆக்கப்பட்டிருக்கும் பாரதி ஒரு கோடி என்றால், வைதிக வர்ணாஸ்ரம கொள்கைகளின் மறைமுக ஆதரவாளர் என்று வகைப்படுத்தி திட்டுச்சுவடிகு இலக்கக்கப்பட்டிருக்கும் பாரதி ஒரு கோடி என்று கட்டுரையாளர் சொல்வது போல இருக்கையில்,  இந்த முன்முடிவுகளுக்கும் அபிப்ராயங்களுக்கும் அப்பால், ஒரு படைப்பாளுமையை அவருடைய படைப்புகள் மூலம் அறிந்துகொள்ளும் ஆர்வம் மிகுந்த கட்டுரைகள்.  

பத்திரிகையாளன், கவிஞன், அத்வைத வேதாந்தி, கட்டுரையாளர், சமூகவாதி என்று பலவித பரிணாமங்களைக் கொண்டிருக்கும் ஒரு ஆளுமையை, படைப்பாளுமைய ஒற்றைச் சிமிழுக்குள் – நமக்குப் பிடித்த சிமிழுக்குள் – அடக்கிவைப்பதன் மூலம் நாம் அவரை அசலாக அறிந்துகொள்வதில்லிருந்து நழுவிப்போகிறோம் என்ற குரலை இந்த புத்தகத்தில் நாம் கேட்கமுடியும். 

இந்த கட்டுரையைப் படிக்கையில் ஜெயகாந்தனின் ஒரு பேட்டி நினைவுக்கு வரக்கூடும். பாரதியிடம் லாகிரி வஸ்துப் பழக்கங்கள் இருந்தனவே, அவரை எப்படி முன்மாதிரியாகக் கொள்ள முடியும் எனும்போது அவர், இருந்துவிட்டுப் போகட்டுமே. எனக்குத் தேவை ஞானபாரதி என்றார். இவ்வகை பதிலை ஒரு ஞாயமான சிந்தனையாளரால் தரமுடியும். ஒரு அரும் செயலைச் செய்யும் மனிதன் ஒருவன், அவதார புருஷன் போல இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் சராசரியான பார்வையை அகற்றிவிட்டுப் பார்த்தால், படித்தால் அவரைப் புரிந்துகொள்ள முடியும். ‘தம்முடைய வாழ்வியல் நெறியையும், ஆன்மீகக்கொள்கை விளக்கத்தையும் நன்கு நிறுவி ஒரு நூலாக இயற்றுவதற்கு வேண்டிய காலவசதி அந்தப் பெருமகனாருக்கு இல்லாமலே போய்விட்டது’ என்ற  மிகவும் பொருத்தமான வரி ஒன்று கட்டுரையில் இருக்கிறது. 

சாத்திரநாட்டமுக் தருக்கமும் கவிதையில் 

மெய்ப்பொருள் ஆவதில் மிஞ்சிய விழைவும்

கொண்டோர் தமையே அருகினிற் கொண்டு – என்ற கண்ணன் பாட்டின் வரிகள் மூலம் தனக்கு தர்க்க விவாதம், படிப்பு, ஆய்வு போன்றவை தனது நாட்டம் என்பதை குறிப்பாக காட்டியிருப்பதாக சொல்லும் நூலாசிரியர், பாரதி ‘தன்னை’ இயன்ற வரை வெளிப்படுத்திக்கொண்ட பகுதி கண்ணன் பாட்டு என்றும் கருதுகிறார். 

இத்தொகுப்பிலிருக்கும் கட்டுரைகளை தோராயமாக அடையாளப்படுத்திக்கொள்ள –  பாட்டும் கவிதையும், பாரதியாரின் வங்காளமும் சாக்தமும், இந்தியச் சூழலுக்கு ஆன்மீகப்பார்வையுடைய நாட்டுணர்வு, பொருளாதாரப் பார்வை, ஸ்ரீராமகிருஷ்ணர், விவேகானந்தர், சகோதரி நிவேதிதை எனும் மூவரின் அறிவுத்தாக்கத்தில் சுடர்ந்தெழுந்த விதம் என்று பிரித்துக்கொள்ளலாம், தோராயமாக. இவை அனைத்துமே பாரதியின் கட்டுரைகள், பத்திகள், கவிதைகள், பாடல்கள் போன்றவற்றின் வழியாக நாம் புரிந்துகொள்ளும் பாங்கை எழுதியிருக்கிறார்.  “ஒருவிதத்தில் பார்த்தால் பாரதியின் எழுத்தில் இனி எக்காலத்திலுமே இடைச்செருகல் ஏற்படுவது கடினம் என்றபடிதான் அவரது மன இயக்கத்தின் ஒருங்கிணைப்பு இருக்கிறது” என்கிறார். 

ஆர்வமூட்டும் விஷயம் என்னவென்றால், பாரதி எங்கெல்லாம் தனது கருத்தை, உணர்ச்சியை அழுத்தமாக பதிவு செய்துகொண்டு போகிறான் என்பதையும், சில சமயங்களில் எப்படி அவற்றுக்கிடையே ஒற்றுமைகள் மட்டுமல்ல, வேறுபாடுகளும் உள்ளன என்பதை அவற்றுக்கான சரித்திர ரீதியான பின்னணிகள் மற்றும் அவரது படைப்புகள் மூலமும் எடுத்துச் சொல்கிறார் மோகனரங்கன். ஒரே ஒரு வரியை தனியாகப் பிய்த்தெடுத்து உபயோகித்துக்கொள்ளுபவர்களால்செய்யவியலாத காரியம் இது. 

ஒரு ஆளுமை  தனது வாழ்வில் ஒன்றுக்கொன்று முரணான விஷயங்களைச் சொல்கிறார் என்றால் அதற்கு இரண்டு காரணங்களே  இருக்கமுடியும். தனது சுயவளர்ச்சிக்கும் சுயலாபத்துக்குமாக தேவைக்குத் தகுந்தபடி பேசுவது. மற்றொன்று அனுபவத்தின் மூலம் அறிவார்ந்து உணர்ந்தவற்றைத் தெளிந்து மொழிதல்.  வறுமையிலும், கரந்துவாழ வேண்டிய நிர்பந்தத்திலும் தன் ஆகிருதியை மறைத்துக்கொள்ளாமல், தன்னையும் சேர்த்து பதினைந்து பேருடன் தனது மயனாத்துக்குச் சென்ற பாரதி, மேற்சொன்னதில் முதல்வகைப் பட்டவராக இருக்கவே முடியாதுதானே!  அப்படி அனுபவத்தின் மூலம் சொன்னார் என்றால்  ஏன் அப்படிச் சொன்னார் அல்லது சொன்னதன் உண்மையான சூழற்பொருள் என்னவாக இருந்திருக்கும் என அவரது வாழ்வை வாசித்துப் பொருள் புரிந்துகொள்ளவேண்டும். இக்கட்டுரைகள் இதைச் செய்யவே முயன்றிருக்கிறது. இன்னமும் கூட,  யானை மிதித்து பாரதி இறந்தார் என்றே பரவலாக நம்பிக்கொண்டிருக்கும் சூழலில், ‘மெல்லத் தமிழினிச் சாகும்’ என்ற வரிகளை முற்றிலும் தவறான மேற்கோளில் கொள்ளுதல் போன்ற நிலையில், இவ்வகைக் கட்டுரைகள் முக்கியமானவையாகின்றன. 

நூலின் துவக்கப் பகுதிகளில் இலக்கியப்பார்வையை தெளிவாகவே பதிவு செய்திருக்கிறார். பாரதியின் கவிதைகள் என்று நம்மால் பொதுவாக அறியப்படுபவற்றில் அவை பாடல்களா, கவிதைகளா என்ற கேள்வியை எழுப்புகிறார். நவீனகவிதையின் முதல் முளை பாரதியே என்பதால், இந்தக் கேள்வி முக்கியமானதாகிறது.  ஏன் அவை பாடல்களாகின்றன என்ற காரணத்தையும் புரிந்துகொள்ள முயல்கிறார்.  அடிப்படையில் பாரதி பத்திரிகையாளனாக இருப்பதால் பரவலாக எல்லோரையும் முழுமையாக வெளிப்படையாக சென்றடைந்துவிட வேண்டும் என்ற தீவிரம் அவரிடம் இருந்தது. கவிதைகள் மூலம் உசுப்பிவிடவேண்டும் என்ற ஆவேசமும் இருந்தது.  ஆகவே தனது கவிதைகளை கருத்துக்களால் செறிவாக்கி அவற்றுக்குள் அடக்கிப் பாடுகிறான் என்பதை காணமுடியும். நவீன கவிதைக்கு மேற்சொன்ன நிர்பந்தங்கள் கிடையாது என்பதை சொல்லியிருப்பது மிக ஆழமான புரிதலுடையது. ‘பாரதியின் பேசாப்பேச்சாக உலகையும் தன்னையும் விட்டுப் பூரிக்கும் கணங்கள் அவருடைய வசனகவிதைகள்’ என்கிற வரி முக்கியமானது.

பாரதி இயல்பிலேயே இசையறிவு கொண்டவராக இருந்ததால் கவிதைகளை பாடல்களாக அவை மாற்றிவிட்டதோ என்ற ஏக்கப் பார்வையையும் வைக்கிறார். ஸ்வதந்திரப் பள்ளு, கிளிக்கண்ணி போன்ற பலவும் இசையனுபவ வெளிப்பாடு கொண்டிருப்பதால், அடர்ந்த நவீன கவிதானுபவத்தை மழுங்கடித்துவிடுகிறது என்று பார்வையையும் வைக்கிறார்.

அழகானதொரு கவிதையை உருவாக்கிவிட்டு அதை முடிக்கும் பாணியால் அதை பாடலாக்கி விடுகிறான் என்கிற அவதானமும் நாம் கவனிக்கவேண்டிய ஒன்று.  குயில்பாட்டில் அருமையான கவிதை புனைந்தவர் இறுதியில் ‘ஆன்ற தமிழ்ப்புலவீர் வேதாந்தமானாலும் விரித்துப் பொருளுரைக்க யாதேனும் சற்றே இடமிருந்தால் கூறீரோ’ என்று கவிதையைப் பாட்டு வரியாக செய்துவிடுகிறான் என்றும்,  தனது வாழ்வின் தரிசனத்தை கண்ணன் பாட்டில்தான் வைக்கிறார் என்றும் உணர்கிறார் மோகனரங்கன். 

பாரதி மேற்சொன்ன பல படைப்பாளுமைகள் கொண்டவராக இருந்தாலும், அடிப்படையில் அவர் ஒரு பத்திரிகையாளர். சுதந்திரத்தை வேண்டிநிற்கும் நாடொன்றின் பத்திரிகையாளர்.  அடிமைத்தனத்தை உதறுவதற்கு மக்களிடையே எழுச்சியையும், ஆவேசத்தையும் உண்டுபண்ண விரும்பிய பாரதிக்கு, எந்த ஊடகம் மூலமாக அதை அவர்களிடம் கொண்டுசெல்வது என்பதை நிறுவிக்கொள்ள வேண்டியிருந்தது. அவனது வாரனாசி, வங்காள வாழ்க்கை; (இங்குதான் அவர் தலைப்பாகை, தாடி போன்ற புறத்தோற்ற மாறுதல்களை செய்துகொள்கிறார்) சமஸ்கிருதம் உட்பட புதுமொழி கற்றதால் விரிந்த ஆளுமை, தீவிரப்பட்ட எண்ணங்கள் இவற்றால், மக்களுக்கு தம்மளவில் நெருக்கமாக இருப்பது ஆன்மீக உணர்வு என்பதை கணிக்கிறார். ஆகவே அதன்வழியாக தேச உணர்வை கடத்தலாம் என்று, வெறும் உத்தியாக மட்டுமின்றி, தம்மளவில் முழுமையாக நம்பவும் செய்கிறார். இதை அவர் சந்தர்பவச  உபாயமாக அவர் கருவிப்படுத்தியிருந்தால், இன்று நாம் அவரைப் பேசமாட்டோம்.   இதை விவேகானந்தர் மற்றும் ஸ்ரீராமகிருஷ்ணரின் கருத்துக்களைப் படித்தனாலும், சகோதரி நிவேதிதையைச் சந்தித்ததும், பிறகு தொடர்ந்து வாசித்ததாலும் தானே உருவாக்கிக்கொண்ட ஒரு பாதையில் பயணித்தார். பாரதியின் இந்த அம்சத்தை தவிர்த்துவிட்டு நாம் தேச விடுதலைக்கான பாரதியை நிர்ணயித்துக் கொள்ள முடியாது என்பதை நாம் இக் கட்டுரைகளிலிருந்து அறிகிறோம்.

பாரதியார் ஆரம்ப நாட்களில் தேவாரத் திருவாசகங்களில் திளைத்தரவாக இருந்திருக்கிறார்.  திருமுறைகளை உருக்கமாக ஓதவல்லவராக, மாபாடியாரைப் படித்தவராக இருந்திருக்கிறார். எட்டையபுரம், மதுரை, திருவல்லிக்கேணி அவருக்கு வைணவத்தை அறிமுகப்படுத்தி இருக்கவில்லை.  புதுவையில் அரவிந்தரை சந்தித்தபின் ரிக் வேதத்தில் ஆழ்ந்த படிப்பையும், வைணவத்தின் மீதான ஈடுபாடும் உருவாகி 1910க்குப் பின் நம்மாழ்வாரையும், ஆண்டாளையும் ஆங்கிலத்தில் எழுதுகிறார் என்பதை பதிவு செய்யும் மோகனரங்கன், நம்மாழ்வார் தாக்கத்தில் நந்தலாலா பாடலை எழுதியதில், தீக்குள் விரலை வைத்தால் என்ற கண்ணி பாரதியாரின் வரிகள் அல்லாமல் இருக்க சாத்தியமுண்டு என்கிறார்.  சுதேச கீதங்கள் இரண்டாம் பதிப்பிலும், அவர் கைப்பட எழுதிவற்றிலும் மூன்று கண்ணிகளே உள்ளன என்றும்  பிறகு பாரதியார் பிரசுரத்தாரால் வந்த பதிப்பில்தான் சேர்க்கப்படுகிறது என்ற குறிப்பையும் தருகிறார்.`

இன்னொரு சுவார்சியமான விஷயம், இதுவரை பாடப்பட்ட பக்தி இலக்கியங்களில் தன்னைக் காதலியாகவும், கடவுளைக் காதலனாகவும் வைத்துப் பாடும் மரபுதான் இருந்தது என்றும், கடவுளைப் பெண்பாலாக வைத்து பாடப்பட்டதில்லை என்றும், அதிலிருந்து வேறுபட்டு, தன்னைக் காதலனாகவும் கண்ணனைக் காதலியாகவும் வைத்து பாடி புரட்சி செய்தார் என்று உரைகளிலும், சில எழுத்துகளிலும் அறிந்திருந்தேன்.  ஆனால் மோகனரங்கம் இங்கே புது வெளிச்சம் ஒன்றைக் கொண்டுவருகிறார்.  அடிப்படையில் சைவத்தைச் சார்ந்த பாரதிதலைவன் ஜீவன், தலைவி திருச்சிற்றம்பலம் என்று வைத்து பாடப்பட்ட திருக்கோவையாற்றின் பாணியை,  கண்ணனை வைத்து பாடுகையில் ஏற்றிப் பாடியிருக்கிறார் என்கிறார். 

தேசபக்தி, அதற்கு ஆன்மீக வழி, பொருளாதாரம், ஆட்சிமுறைமை, தொழில் வளர்ச்சி போன்ற பன்முகத் தன்மையான பார்வையை அவர் விவேகானந்தரிடமிருந்தும், நிவேதிதையிடமிருந்தும் பெறுகிறார். விவேகானந்தரிடம் ஈடுபாடுடையவர் என்றாலும் அவர்மேல் விமர்சனப் பார்வை கொண்டவராகவும் இருந்திருக்கிறார்.  அனைத்துயிரும் ஒன்று. அடிப்படையில் அது கடவுள். இந்த முறையிலேயே வாழ்க்கைத்தரமும் இயக்கமும் இருக்கவேண்டும். ஜபம், தியானம், காடு என்பதை விட நாடு, ஊராண்மை தொழில் அனைத்தையுமே பேருருவின் அம்சமாகக் காணவேண்டும் என்ற அவருடைய கருத்தியல் விவேகானந்த பரமஹம்சரிடமிருந்து நவீன வேதாந்தமாக வந்தது. செயலை மறுக்கும் சங்கரரிடமிருந்து,  விலகும் பாரதி செயலில் உத்வேகத்தைக் கோருகிறார்.

‘ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அந்நியர் வந்து புகலென்ன நீதி’ என்ற பாடலில் ‘தம்முட் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ’ என்ற வரியை வைத்து, பாரதி சாதிப் பிரச்சனையைப் பெரிதாக பொருட்படுத்தவில்லை என்ற முடிவுக்கு ஒருவர் வரலாம். ஆனால் அது அவருடைய கருத்தியல் வசதிக்கானதாகவே இருக்கும்.  ஏனென்றால் நாட்டு மக்கள் ஒற்றுமை என்ற உணர்ச்சி வேகத்துக்கான பாடல் வடிவம் அது. அவருடைய உரைநடைப் பகுதிகளில் இந்த சமரசத்தை காண முடிவதில்லை.  நாட்டில் உள்ள பல தீமைகளைக் களைந்து சமுதாயத்தில் நன்மை துலங்கச் செய்வதே சுதந்திரத்தில் நாம் சாதிக்கவேண்டிய சுதந்திரம். இதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. 

க்ளாஸ்டன் அவரது நாட்டில் எங்களுக்குள் பல தீமைகள் இருக்கின்றன. அவை அகன்றால்தான் உங்களுக்குச் சுதந்திரம் என்று சொல்லும் உரிமையை பிரிட்டிஷாருக்கு யார் கொடுத்தது ? நாடுகளை அடிமை செய்ய அவர்களுடைய தந்திர உபாயம் இது என்று அவர் சொன்ன விஷயத்தையே பாரதியார் கையிலெடுக்கிறார். அதுவே அவருடிய மேற்சொன்ன கவிதை வரிகளில் வெளிப்படுகிறது.  அவருக்கு அரசாங்க எதிர்நிலை எடுப்பது என்பது மிகவும் முக்கியமாக இருந்திருக்கிறது . உணர்ச்சியை மையப்படுத்தும் பாடல்களில் முழுமையான ஞாயவிளக்கங்கள் வெளிப்படாது என்பதை நினைவூட்டுகிறார் கட்டுரையாளர். 

மேலும் சமுதாய சீர்திருத்தம் செய்வதற்கு முன் ராஜாங்க சீர்திருத்தம் முக்கியம் என்று அழுத்தம் கொண்டிருந்த திலகர் முதாலனவர்களுடைய குழுவில் இருக்கும் பாரதி அதை பின்பற்றவும் வேண்டியிருந்தது.  ஆனால் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் சமுதாய சீர்திருத்தம் பற்றி வெளிப்படுத்தினார். அவ்விதத்தில் தென்னிந்திய விடுதலை உணர்வாளர்கள் சுதந்திரமாகவே பேசமுடிந்திருக்கிறது என்பதையும் கவனிக்கிறார். 

காசியில் இருந்த சமயம் பாரதிக்கு சுதேசி இயக்கம் அறிமுகமாகிறது. பொருளாதாரத்தின் சிக்கலான சமன்பாடுகளைக் கொண்டு தேசம் என்பதையும், அதனால் அது எதிர்கொள்ளும் அபாயம் என்பதையும் தாதாபாய் நௌரோஜி மிகச் சாதுர்யமாக விளக்குகிறார். அதை பாரதி கவனிக்கிறார். அதுவரை பண்பாட்டுப் பரப்பாக மன்னர்களும் மக்களும் கருதிக் கொண்டிருந்த காலத்தில், ஜாதிமைய அடையாளம், அதிகாரம் போன்றவற்றையே அறிந்திருந்தவர்கள் மத்தியில் பொருளாதாரப் பார்வையை நௌரோஜி முன்வைத்து அபாயத்தை எச்சரிக்கிறார்.

நாட்டை பிரிட்டிஷார் கொள்ளையடிக்கிறார்கள் என்ற புகாரை இங்கிலாந்திலிருந்த பலரே கண்டித்தனர். எச்.எம்.ஹைண்ட்மேன் என்பவர் பிளாசி போரிலிருந்து இதுவரை எத்தனை கோடி கோடிகளை கொள்ளையடித்திருக்கிறார்கள் என்பதைப் புள்ளிவிவரங்களுடன் வெளியிடுகிறார். பிரிட்டாஷாரும் முன்பு பல மன்னர்களும் சுரண்டினார்கள் என்றாலும் அந்தப் பணங்கள் இந்தியாவுக்குள்ளேயே புழங்கியது; ஆனால் பிரிட்டாஷார் செல்வத்தை தமது நாட்டுக்கு கொண்டு சென்றனர். இதையெல்லாம் எடுத்துரைத்து Poverty and Unbritish என்ற புத்தகத்தை எழுதிய நௌரோஜியை பிரிட்டிஷார் விரும்பவில்லை.  அவரது கருத்தியலை சரியாக அடையாளம் கண்டு “இந்தியர்கள் தமது நலனை தாமே தேடிக்கொள்ளவேண்டும் என்பதில் தாதாபாய் நௌரோஜி திலகரைக் காட்டிலும் மிஞ்சியவர்” என பாரதி எழுதியதை கவனப்படுத்துகிறார்.

பிரிட்டாஷாரால் நமக்கு ரயில்வே உட்பட பல நன்மைகள் வந்துள்ளன என்பதால் அவர்களுக்கு சாதகமாகப் பேசுவதைச் சொல்லி, அவையெல்லாம் எப்படி அவர்களுக்கான சாதனமாக இருந்தன என்பதையும், இந்தியர்கள் பயணிக்க ஒரு வசதியற்ற பெட்டியை மட்டுமே ரயிலில் இணைத்திருந்ததையும், இந்தியச் சொத்தை இங்கிலாத்துக்கு ஏற்றமிறைத்துச் செல்ல உதவிய சாதனங்களே அவர்கள் உருவாக்கிக்கொண்ட வசதிகள் என்பதைச் சொல்லும் பொருளாதாரப் பார்வை மூலம் சுதேசியத்தைக் காணும் பகுதிகளை, அன்றைய கட்டுரைகளை கவனப்படுத்திச் சொல்லிப்போகின்றன இதிலுள்ள கட்டுரைகள்.

இந்து ஆசார சீர்திருத்த உறுப்பினன் என்று சொல்லிக்கொண்டு பாரதி இந்து பத்திரைகைக்கு எழுதிய கடிதத்தில் சமுதாய ஒற்றுமை பற்றி எழுதுகிறார். ஆனால் பொருளாதார ரீதியில் இந்தியாவை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டு, ஜாதி வேற்றுமைகளைக் காட்டி அரசியல் கபடம் செய்யும் பிரிட்டாஷாரை விரட்ட, ஒற்றுமையுணர்வும், தேசபக்தியும் எல்லாவற்றையும் விட அதிக முக்கியம் தரவேண்டியிருக்கிறது என்ற நிலைக்கு பாரதி மாறுகிறார். பிரிட்டிஷ் பாராளுமன்றத்திலேயே இந்தியாவைச் சுரண்டுவதைப் பற்றி கண்டிக்கின்றனர் என்பதையும் அறிகிறார்.

இந்தியாவுக்கு வருகை புரிந்து நேரில் கண்டு அதைப்பற்றி எழுதிய பிரிட்டிஷ் தலைவர் ப்ரையன், இந்தியாவில் பிரிட்டாஷார்  சுரண்டி அதை வறுமைக்கு தள்ளுவதைக் கண்டித்து எழுதுகிறார். பத்திரிகையாளர் பாரதி இதைத் தேடிப்பிடித்து அதைப்பற்றி தமது பத்திரிகையில் வெளியிடுகிறார். நல்ல பதவிகளைப் பெருமளவு இந்தியர்களுக்கு திறன் இருந்தும் அவர்களுக்கு அவை தரப்படுவதில்லை. இந்தியாவில் பெறப்படும் வரிப்பணம் வெளியேறுகிறது, வந்த வரிப்பணத்தை எப்படி செலவு செய்வது என்று நிர்ணயிக்கும் உரிமை இந்தியர்களிடம் இல்லை என்று ப்ரையன் சொன்னதையெல்லாம்  பாரதி கவனப்படுத்துகிறார். அதையே கவிஞன் பாரதி ‘பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போவதோ – நாங்கள் சாவதோ” என்று பாடுகிறான்.  பாரதியார் திலகர், அரவிந்தர், சுவாமி விவேகானந்தர், நிவேதிதை போன்றவர்களின் கருத்துலகால் தாக்கமுற்றபடியே தனது சுயபரிசீலனையின் மூலம் பொருத்தித்  தன்னை வளர்த்துக்கொள்கிறார்.

ஆன்மீகம் என்பதை மதத்தில் வைத்துக் குழப்பிக்கொள்ளாத புதுத்தெளிவை பாரதியிடம் காணமுடியும். ஹிந்து தர்மம் பற்றிய கட்டுரையில் ‘இது ஒருவித மதத்தின் பெயரன்று. இது ஒருவித ஆசார முறையன்று. இது ஒருவிதமான ஆத்ம தரிசன மார்க்கம். இது ஒருவகைப் பயிற்சி’ என்று விளக்குகிறார். ஆனால் கீதை மட்டுமன்றி மேலும் பல நூல்களிலும் சதுர்வர்ண முறை பேசப்பட்டிருக்கிறது. ஆனால் அது அதன் தூய கருத்துநிலையில் பரிசோதிக்கப்படவில்லை. கீதை என்பது ஜாதிக் கொள்கையிலிருந்து காத தூரம் விலகி நிற்பது. ஆனால் மக்கள் ஜாதிவழிப்பட்டவற்றில் உள்ள பிடிப்பு காரணமாய், சாதித்துயர்களை உணராதவர்களாயிருக்கிறார்கள் என்று அன்னிபெசண்ட்டின் காமன் வீல் பத்திரிகைக்கு எழுதுகிறார். அதைக் கண்ட ராஜாஜி தேச சுதந்திரம் என்பது சமூக கருத்துக்கு சம்மந்தமில்லை என்பதாக பல சுதேசிகள் நினைக்கும் சமயத்தில், பாரதியார் விதிவிலக்கு என்று பாராட்டி அந்த பத்திரிகைக்கு எழுதுகிறார்.  பாரதியிடம் சில குழப்ப மனநிலைகள் இருந்தபோதிலும் அவர் அவற்றை அப்படியே பதிவு செய்கிறார் என்ற நேர்மையையும்,  தன்னை சுயவிமர்சனம் செய்துகொள்ளும் பண்பினால் அவரது எழுத்து நம்பிக்கைக்குரியதாகிறது என்பதையும் கட்டுரையாளர் கோடிட்டுக்காட்டுகிறார்.

சகோதரி நிவேதிதையை சந்திக்கும்போது மனைவியை ஏன் அழைத்துவரவில்லை என்று கேட்டு ‘மாதர்களை இருட்டிலே தள்ளிவிட்டு அவர்கள் அறியாமல் நீங்கள் மேலான நிலைக்கு வந்துவிடமுடியாது’ என்று அவர் பேசியதை உணர்ந்தவராக தன் பார்வையை விசாலப்படுத்திக் கொண்டு ‘புதுமைப்பெண்’ பாடுகிறார். கற்புநிலை என்பதை இருவர்க்கும் பொதுவில் வைப்போம் என்கிறார். 

தேசபக்தியில் ஆன்மீகம் என்று சொல்லும்போது, அவர் அதுபற்றி தெளிவாக்குகிறார். ‘ஆன்மிகம் என்று தாம் குறிப்பிடுவது அறவழிப்பட்ட ஒவ்வொரு செய்கையிலும், எண்ணத்திலும் பொதிந்திருக்கும் தெய்வீகத் தூய்மை, பொருள் ரீதியான பலன்களை எதிர்பாராமல் ஒவ்வொரு கடமையையும் சரியாகச் செய்யும் உன்னத அறிவு ஆகியவற்றை நம்மிச் செயல்படும் பாங்கு’ என்கிறார்.  இந்த நிலைப்பாட்டில், சாக்தம் என்பதையே அவர் தேசபக்திக்கான புதுவடிவாகவும் காண்கிறார். ஒரு நாட்டின் பெரும்பான்மையான குடிமக்களின் உணர்வு எதற்கு நெருக்கமாக இருக்கிறதோ, அந்த உணர்வு வழியின் மூலம், ஞாயமான போராட்டத்துக்கான விதையைத் தூவவேண்டும் எனும்போது பாரதி நவஆன்மீக மார்க்கத்தை கையிலெடுக்கிறார் என்பதை இக்கட்டுரைகள் தெளிவாக்குகின்றன.

பாரதியின் சாக்தம் என்ற பகுதியில் சக்தி வாழிபாட்டினை அவர் புரிந்து ஏற்ற விதம், சுருண்டிருக்கும் பாம்பு பிரம்மம், ஓடும் பாம்பு காளி என்ற ஸ்ரீராமகிருஷ்ணரின் வாக்கியத்திலிருந்து ஆன்மம் என்பது செயலூக்கம் என்ற உந்துதலுக்கு வருகிறார்.  வங்காளம் சாக்ததத்தின் முக்கிய கேந்திரம், கிருஷ்ண சைதன்யர் ஸ்ரீரங்கம் வந்தபிறகுதான் தலைவன் தலைவி என்ற பாவத்தை அறிந்து கொண்டு வங்காளம் செல்கிறார், நவீன ஆன்மீகமாகவும், சுதேசி உணர்வின் தந்தையாகவும் விவேகானந்தர் இருந்திருக்கிறார் என்பதைக் குறிப்பிட்டு, பாரதி எப்படி அதில் கரைந்தார் என்பதையும் சொல்லி, வாமாசாரப் பிரிவு என்பதைப்பற்றி விரிவாகப் பேசி விவேகானந்தர் எப்படி அதிலிருந்து விலகிப் பேசுகிறார், அதன் உண்மைக் காரணம் என்ன என்பது இந்நூலில் விரிவாக குறிப்பிடப்படுகிறது. வேதபுரத்திலே ஒரு வீதியில் பண்டாரம் பாடிக்கொண்டு வருவதான பாரதியின் படைப்பில் இதன் தாக்கத்தை பார்க்கமுடியும் என்கிறார் நூலாசிரியர்.  தேசத்தை ஒரு மதமாகவும், தேசபக்தியை காளியாகவும் உருவகிக்கும் முதிர்ச்சி அவரிடம் உருவாவதை கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. மந்திர, தந்திர, யந்திர முறைகள் உள்ள சாக்தத்தில்,பேராற்றல் பெறும் கேந்திரமாக கணக்கியல், உடற்கூறியல், யோகம் கலந்த நூதன முறை யந்திர பூஜை என்பதால், இந்திய நிலத்தை சக்தி கேந்திரமாகக் கொண்டு, பேயவள் காண் எங்கள் அன்னை – பெரும் பித்துடையள் எங்கள் அன்னை என்று அவர் பாடியது சக்திதேவியாக பாவித்த பாரதமாதாவை.

‘நான் ஹிந்து என்பதில் மட்டில்லாப் பெருமை கொள்கிறேன்’ என்று படிப்பறிவு, பட்டறிவு, அனுபவ அறிவு எல்லாம் அது ஒரு நெறிவாழ்க்கை என்பதை அறிந்தமுறையில் பாரதி சொல்வதை கட்டுரை குறிப்பிடுகிறது. 

இவை அத்தனையும் தாண்டி, வாழ்வியல் நெருக்கடியில், கைதாவதைத் தவிர்க்க தான் சம்பளத்துக்கு வேலை செய்பவன் என்று சொல்லிக் கொள்வதும், பெயர் இடம்பெற்ற குற்றத்துக்காக ஸ்ரீநிவாசன் கைதாகும்போது, பாரதி அதை தள்ளி இருந்து பார்த்து ஆலோசனைகள் சொல்வதையும் சொல்லி – பாரதி ஒரு சாதாரண மனிதனாக  இருந்திருந்தவற்றையும் ஒரு கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. 

அடிமையுற்றிருந்த நாட்டின் குடிமக்களாக இருந்துகொண்டு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் சுதந்திரம் கோரிப் போராடிக் கொண்டிருந்த பெரும் வியாபகத்தில், பாரதியின் வழி ஒரு கிளை. அந்த வழியைப் பற்றி அறிய விரும்புபவர்கள் மேம்போக்காக அணுகாமல் அதனை ஆழமாக புரிந்து, உணர்ந்துகொள்ள இத்தகைய நூல்கள் பெரும் உதவி செய்வன.

ஆன்மீகத்தை மையப்படுத்தி இந்திய உணர்வை முதன்மைப் படுத்திய விவேகானந்தரும், நிவேதிதையும் ஆன்மவியலில் முழுமையாக செயல்பட்டவர்கள்; ஆனால் பாரதி ஏன் அப்படி செயல்பட்டார் என்பதை புத்தகத்தை முழுமையாக படிக்கும்போது தெளிந்துகொள்ள முடியும். 

தேசபக்தியை பத்திரிகையாளனாக இருந்து வளர்த்த பாரதிக்கு, புதுவையே கவிஞனாகவும், அரவிந்தர் மூலமாக ஞானபாரதியாகவும், வங்காளம் சாக்ததத்தின் நவீன உருவாக நவ ஆன்மீகப்பார்வையையும் உருவாக்கி, அதையும் விடுதலையுணர்வுக்கான ஆற்றலாக மடைமாற்ற பெரும் உதவிசெய்திருக்கின்றன என்ற பாரதியின் கோட்டுச்சித்திரத்தை, 32 குறிப்புதவி நூல்கள் மூலம் வாசித்தறிந்து எழுதப்பட்ட கட்டுரைகளாலான இப்புத்தகம் உருவாக்கிக் காட்டியிருக்கிறது.

Exit mobile version