தீராத தாகம் ஒன்று மனித இனத்திற்கு உண்டு- அது உலகை, உண்மையை அறிவது. ‘ஆதி பௌதீகம்’ என்று வியந்த நம் முன்னோர் அதனால் ஈர்க்கப்பட்டனர். பிரபஞ்ச இரகசியங்களைத் தெரிந்து கொள்ள மெய்ஞானமும், விஞ்ஞானமும் முயன்று கொண்டேயிருக்கின்றன.
‘எனது காதலி சோபியா என நீங்கள் சொல்வீர்கள்- ஆனால், என் காதல் மெய்யியலே’
-வேன் மோரிசன். (Van Morrison)
‘இறந்தோரைப் புதைப்பவரையும், புதைப்பது போல, தத்துவம், அதில் ஆழ்பவரையும் புதைத்து விடுகிறது’
எடியன் கில்சன். (Etienne Gilson)
பொய்யான மீபொருண்மையை (Metaphysics) விடவும் மோசமானது, மீபொருண்மையைப் பற்றிய எச்சரிக்கைகள். எப்போது, ஐம்புலன்களால் மட்டுமே அறிந்ததைத் தாண்டி செல்கிறோமோ, அப்போது அது ஆடம்பரமாகத் தோன்றும் என்பது வெளிப்படைதான். ஆனால், அது மீபொருண்மையின் குற்றமல்ல; அது துறை சார்ந்த ஒரு ஆபத்து; எப்படி மூட நம்பிக்கைகள், மதம் சார்ந்த விபரீதங்களோ, தர்க்கப் பூர்வமாக விவாதிக்கையில், வறட்டுப் பிடிவாதம் வரட்சியைத் தருமோ, (சரியான காரணங்கள் அமையாத நிலையில் அது போடும் ஆவேச வேடம்!) அவ்விதம் தான் மீபொருண்மையிலும் நிகழ்கிறது. நான் ஆடம்பரம் என்று தான் சொன்னேன்- தவறு என்று சொல்லவில்லை. ஏனெனில், தவறு என்பது முட்டாள்தனமல்ல- எந்த ஒரு கருத்திலும், தவறுகள், அதுவும், அதி தீவிர சிந்தனைக் களத்தில், ஏற்பட வாய்ப்புகள் மிகுதி. அதற்காக, புலனறிவே மேம்பட்டது என்று மீபொருண்மைத் தவறுகளால், நாம் அதை ஒதுக்கக் கூடாது. தற்காலத்தில் நிலவும், பொருள் முதன்மையில், அது, உயிரியலோ, பொருளாதாரமோ, வழிமுறைகளோ, எந்தத் துறையானாலும் சரி, அது நம்மை மூச்சடைக்கச் செய்யும் போது, சமூகம் நாட வேண்டிய ஒன்றாக நான் மீபொருண்மையியலைச் சொல்வேன். மனித வாழ்வை நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம்? வரலாற்றுக் கொடுமைகளில் ஒன்றாகவே, திருட்டுத்தனமாக உள் நுழைந்து, பரவலாகி, நம் வாழ்வியலில் பொருள் முதல் வாதத்தை முன்னிறுத்தியதை என்னவென்று சொல்வேன்? ஃப்ரெஞ்ச் மரபு தத்துவ வரலாற்றாளர் லூக் ப்ரிசன் (Luc Brisson) நம்மை அசைத்துப் பார்க்கும் வாக்கியம் ஒன்று சொன்னார்-‘ மீறலுக்கும் வரலாறு உண்டு;’ ஆம், மறுக்க முடியாத உண்மை; ஆனால்,, மீபொருண்மைக்கு எதிரான பதுங்கித் தாக்கும் கருத்தும், மெய்யியல் ரீதியாக இதில் வெளிப்படுகிறது அல்லவா? நம் காலத்தில், மீபொருண்மையின் இடம் ஏன் மங்கித் தெரிகிறது? அது மதத்துடன் குழப்பிக் கொள்வதாலா? அல்லது இன்னமும் துல்லியமாக, நாட்டுப்புற மதங்களும், அரசியலும் கொண்டு வந்துள்ள நம்பிக்கையின் அறிவுசார் வீழ்ச்சியின் விளைவா? குதர்க்க நாத்திகர்களை கணக்கில் எடுக்க வேண்டாம்-எப்படி மதம் சார்ந்த சிந்தனைகளோ, அப்படியேதான், மீபொருண்மையும், மதச் சார்பற்ற ஒரு சிந்தனையே.
நம் காலத்தில் அது கருத்து வேறுபாடுகளுக்கான இடமளிக்கிறது- அதுவே அதை நோக்கி முதலில் நம்மை ஈர்க்கிறது. அதற்காகப் பட்டினியும் கிடந்தேன்- அதன் முன் கையறு நிலையிலும் இருக்கிறேன்; அதன் அதீதங்களின் முன் அசாத்தியப் பொறுமையுடன் காத்திருக்கிறேன்- ஆம் சரியான திசையில் தவறுவதைப் போலத்தான்- அதுதான் அனுபவம். உண்மை என்பது இயற்கையை மீறிய ஒன்றல்ல என்று எவரும் உறுதி அளிக்கவில்லை.
என் புத்தக அலமாரியில் ஸ்வீடன்போர்க்கின் இரு புத்தகங்கள் – (Heaven and its Wonders and Hell, From Things Seen and Heard, and The Delights of Wisdom Pertaining to Conjugal Love, After which follow the Pleasures of Insanity pertaining to Scortatory) முடிவற்ற பெரும் தொகுப்புகள்- பித்தத்தின் உச்சம் என சொல்லத்தக்கவை, அதனாலேயே அந்த மகிழ்வை அனுபவிக்கச் செய்பவை -ஆம்-இருக்கின்றன. அவை அறிவுசார்ந்த பேராசைகள்; அப்படி இல்லாமலா, செஸ்லாவ் மிலோஷ் (Czeslaw Milosz) “விசித்திரமான பார்வைகள்’ என்று அவற்றைக் கொண்டாடி, மதிப்பிற்குரிய அறிவுச் சிந்தனை எனக் குறிப்பிட்டார்.
கான்டும் (Kant), ஸ்வீடன்போர்க் போலவே பித்து நிலை மனிதர்தான். பின்னவரின் பகட்டான பார்வையில் வீழ்ந்த கான்ட், அவரது பல நூல்களை வாங்கினார், வெளியிட்டார். ஆனாலும், வண்ணக் காகிதங்களில், ‘ஆவி பார்ப்பவரின் கனவுகள்’ என்று கண்டனமும் செய்தார்! அதே 1766ல் மோசஸ் மென்டல்சானிற்கு (Moses Mendelssohn) எழுதிய கடிதத்தில், ஸ்வீடன்போர்க்கைப் பற்றி தனக்கு ஒரு விரோதமுமில்லை எனக் குறிப்பிட்டார். (இன்று புகழ் பெற்ற எழுத்தாளர்களைப் பற்றி மெல்லவும், விழுங்கவும் செய்ய முடியாமல் இருப்பது நினைவிற்கு வருகிறது). “ஆவிகளின் அறிக்கைக் கதைகளை படிப்பது என்னமோ சுவையாகத்தான இருக்கிறது; ஆனால், பகுத்தறிவு அதன் சரித்தன்மையைத் தான் சந்தேகிக்கிறது’ என்றார் அவர். அவை என்ன ஒன்று, இரண்டு மட்டுமேயா? அவர் யூத மீபொருண்மையாளரிடம், அழுத்தமாக, ‘மனித இனத்தின் உண்மையான, நிலைத்த நலன்களுக்கு மீபொருண்மை தேவை’ என்று சொன்னார். முன்னர் சொன்னது போல், சரியான திசையில் தவறுவதுதான் இது. ஸ்வீடன்போர்க்கை கருத்தியல் ரீதியாக தாக்குகையில், ‘உணர்வுக் கனவுகள்’ (Dreams of Sensation) மற்றும் ‘காரணம் பொருந்திய கனவுகள்’ (dreams of Reason) இரண்டிற்கும் இடையே வேறுபாடுகள் உண்டென்று கான்ட் விளக்கினார். முன்னதை ஆன்மீகவாதி அறிகிறான்; பின்னதை மீபொருண்மைவாதி அறிகிறான். வரலாற்று நிகழ்வான ‘மீபொருண்மை சுற்றறிக்கை’ யை கான்ட், தான் வெளியிடும் சில வருடங்களுக்கு முன்னரே இக்கருத்தினைச் சொல்லிவிட்டார். அவ்வறிக்கை “ஃப்ர்ஸ்ட் கிரிடிக்”ல் (First Critique) வெளியானது. ஒருவகை பகுத்தறிவுவாதமெனப் பார்க்கப்பட்ட அது, மேலும், மலரும் ஊகங்களுக்கும் வழி அமைத்தது. இதற்கு சில பத்தாண்டுகளுக்குப் பின்னர், கோயா (Goya), ‘காரணக் கனவுகள் கோட்பாட்டை’ எதிர்த்து திரளும் அரக்கர்கள் போன்றதொரு தொனியில், எச்சரிக்கைகள் செய்தார். ‘பகுத்தறிவு பேராசைகள்’ பற்றி கவனம் கொள்ளுங்கள்; கோட்பாட்டின்படி கனவுகள் காண்பவர், வெறியர் அல்லவா?’ நானுமே, மனித நலனிற்கு மீபொருண்மை அவசியம் என நினைப்பவனல்ல. அதன் நீண்ட அரசியல் தொடர்புகளும், அதிகாரத்துடனான அதன் இணக்க வரலாறும் தெரிந்தவர்கள் அதற்கு எதிர் நிலை தான் எடுப்பார்கள்; அதுவும், தென்படாத, கமுக்கமான, சரிபார்க்க வழியில்லாத நம்பிக்கையில்லாத வழிகளில் எத்தனை மக்கள் பலியாகியிருக்கிறார்கள் அறிவீர்களா? அதிலும், அருவெறுக்கத்தக்க மதப் போர்கள் எதிர்மீபொருண்மையை நிறுவுவதற்காக, 20ம் நூற்றாண்டு வரை பொருள்மய வாதமும், கடவுள் இல்லை என்ற இழிப்பேச்சுக்களும், வரலாறுமாக மக்களை வதைத்து, இனப் படுகொலைகள் செய்து, மதச்சார்பின்மையைப் பரிந்துரைப்போருக்கு மிகப் பெரும் சவாலாக இருந்தன- இத்தகைய கருத்துக்கள் இரத்த வெறிபிடித்த பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று சொல்வதும் இயலாமல், தாழ்ந்து போகும் நிலையும் அல்லவா வந்தது? இது உலகெங்கும் நிகழ்ந்தது; இந்தப் புரட்சிக் குற்றத்திற்கு, நிழலாகவும், நிஜமாகவும் இருந்தவர்கள், புனிதர்கள், அபசாரப்பட்டவர்கள், தொலை நோக்கு பார்வை உடையவர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள், பொருள்வயக் கருத்தாளர்கள், கருத்தியல் சார்ந்தவர்கள். மக்களாட்சி மனிதர்களும் ஒன்றும் புனிதமாக இல்லை. எந்த ஒரு நாகரீகமும், உச்சபட்ச தூண்டுதல்கள், குறைந்த தூண்டுதல்களிடம் சரணடைவதை தடுத்ததில்லை. நல்லதற்கோ, அல்லதற்கோ மனம், அறிவு இரண்டில் மனம் சொல்வது வெற்றி பெற்று விடுகிறது. நாம் ஆராயாத உள்ளுணர்வுகளால், அதில் உறையும் தீமைகளால்,.. ஹூம்.. எத்தனை தேற்றங்களால் அதை சரிபார்க்க…?
கேம்ப்ரிட்ஜில் உள்ள டேனியல் பெல்லின் (Daniel Bell) வீட்டின் பின் தாழ்வாரத்தில் நான் ஒரு முன் மாலையில் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தேன். போலந்து நாடு சிக்கலில் இருந்தது; கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிராக ‘சாலிடாரிடியும், கே ஓ ஆரும்’ (Solidarity & KOR) திரண்டு எழுந்த நேரம்; மாஸ்கோவின் ஆளுகைக்கு உட்பட்ட வார்சா (Warsaw)மாகாணத்தில், போர்த்திறம் சார்ந்த கத்தோலிக தேவாலயத்தின் முக்கியத்துவத்தைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். குறிப்பாக, முன்னாள் க்ராகோவின் கரோல் வொய்டிலாவின் (Karol Wojtyla of Krakow) முக்கியஸ்தரான ஜான் பால் 2, எவ்வாறு செயல்படுவார், எவ்விதம் அவரது மனித கௌரவம் என்ற தெய்வீக முழக்கங்கள் உதவும் என விவாதித்தோம். இதில் மீபொருண்மை, அரசியல் விடுதலைக்கான ஒரு முக்கிய எடுத்துக்காட்டு என்று சொன்னேன். டேனியல் ஒப்புக்கொண்டார்; ஆனால், அதில் அவர் முழுவதும் உடன்படவில்லை. ந்யூயார்க்கின் அறிவுஜீவிகளில், மதத்திலும், தத்துவத்திலும், ஆர்வமுள்ள அவரும், அவரது சகாக்களும், 1930 மற்றும் 40 களில் நடந்த மீபொருண்மையின் விளைவுகளால் அதிருப்தியில் இருந்தனர். பொதுவுடைமைக்காரர்களும், அதன் எதிர்ப்பாளர்களும், தாங்கள் கொண்டிருந்த குறைவான கருத்தியல் சார்ந்து, ஏதோ தங்களால் தான், இந்த உலக உண்மையைப் புரிந்து கொள்ள முடியும், அதற்கேற்ற திட்டங்கள் வரைய முடியும் என்று தங்களின் குற்றங்களை நியாயப்படுத்திக் கொண்டிருந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால், அவரவர் குழுவிலே, உண்மையின் தன்மையை அறிந்தவர் மிகக் குறைவே. ஆஷ்விட்ஸ், (Auschwitz) கூலாக்கிற்குப் (Gulag) பிறகு மீபொருண்மை ஆபத்து என்றே கருதப்பட்டது. மீபொருண்மையின் ஈர்ப்பை விட ‘இருத்தலியல் மனநிலை’ (Existentialist) உறுதி பெற்றது.
மீபொருண்மை ஈர்ப்பு என்பதை ஒரு இயற்கையான ஆர்வம் என்று எடுத்துக் கொள்ள அன்றைய சூழல் இடம் கொடுக்கவில்லை-ஆசிரியர்களும் இந்த எண்ணத்தைத்தான் எங்களுக்குக் கடத்தினார்கள். பார்க்கப் போனால், பொதுவுடமை, அதன் எதிர்ப்பு இரண்டிற்குமே மீபொருண்மை அடிப்படை அல்ல; ஆனால், போர்களுக்குப் பின்னரான காலகட்டத்தில், விரிவான, அனுபவமற்ற முறைப்படுத்தல் நடந்ததென்னவோ நிதர்சனம்.
என்னால், இந்த சோக உண்மையை எதிர்ப்பின்றி ஏற்க முடியவில்லை. நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை என்று நினைப்பவன் நான். என் சந்தேகங்கள், இவ்வளவு எளிதாக, சுலபமாக நீக்கப்படக் கூடியவையா என்ன? என் ஆன்மீகத் தொல்லைகளை எப்படிக் கையாள்வேன்? நான் டேனிடம் சொன்னேன்:
- என்னால் மீபொருண்மை கருதுகோளின்றி வாழ முடியாது.
- அது தரும் அனுபவங்களை ஆராயும் சுவையை இழக்க முடியாது.
- உச்சபட்சமாக, போரிற்குப் பின்னரான அறிவுஜீவிகள், மிகவும் பயந்து, இதைப் பற்றி எச்சரித்திருக்கிறார்கள்.
- மீபொருண்மை, போரிற்குப் பின்னர் இருக்கக் கூடாது என்று சொல்வது, ஆஷ்விட்சிற்குப் பிறகு கவிதைகள் கூடாது என்பதைப் போன்றது. டேனியல், மீபொருண்மை எதிர்ப்பாளர்கள், பேராபத்தின் கனத்தைச் சுட்டுகிறார்கள் என்றார்.
- என் மீபொருண்மை ஆர்வமும், என் மத ஆர்வமும் என்னை சங்கடப்படுத்தவில்லை என்றும், தீமைகளின் நினைவுகள் என் நினைவில் இருக்கின்றன என்றும் சொன்னேன்.
- கட்டில்லாத, முழுமையோ என ஐயப்படும் கருத்துக்கள், மறைவான சிறு கூட்டத்திற்குரிய எண்ணங்கள் இவைகள் எல்லாம், அரசியலில் இருக்கக்கூடாது என்பதில் நாங்கள் ஒத்துப் போனோம். டேனின் முக்கிய செய்தி ஒன்றுண்டு-அரசியல் அவ்வளவு முக்கியமல்ல- பல சாம்ராஜ்யங்களைப் போலவே அதையும் நாம் ஏற்கிறோம். இந்தச் சொற்களின் ஊடாக அவர் புனிதத்தை நோக்கித் திரும்பினார்.
அந்தப் பின்கட்டில் உட்கார்ந்து கொண்டு நான் சிந்தித்தேன். ஒரு தாராளமயவாதிக்கு மீபொருண்மை கூடாதா? மதச்சார்பற்ற பொதுவெளியில் இருக்கும் நபருக்கு, மதச்சார்பில்லாத தனியிடம் கிடைக்காதா? அப்படியில்லையென்றால், சுதந்திரத்தை உறுதியாகச் சொல்லும் அவர்களுக்கு, கசிவு உள்ளது தெரியாதா? டேனின் முகம் கறுத்து, அவர் கண்கள் மென்மையாகப் பார்த்தன. தன்னளவில் மீபொருண்மையை விட்டுவிடுதல் தனிப்பட்ட ஒரு தியாகம் என்றார். நவீனத்துவம், ஆன்மீகக் கடமைகளை கட்டுப்படுத்தும் ஒரு ஆன்மீகமோ, என்னமோ? மனச்சோர்வுடன் முணுமுணுத்தார்-‘நாம் எதையெல்லாம் விட்டுவிடுகிறோம் என்பதை நாம் தான் அறிவோம்.’
அரசியலிற்கு ஒருக்கால் அவசியமற்ற மீபொருண்மை, நீதிநெறிகளுக்கு அவசியமோ? அரசியல் சுட்டுக்களோடு அனல் பறக்கும் விவாதப் பொருள் இது. பல நூற்றாண்டுகளாக, ‘மதமின்றி நன்னெறி இல்லை, கடவுளிடம் தான் ஒழுக்க அடிப்படைகளைப் பார்க்கலாம்’ என்று பீடு நடை போட்டு சொன்னவர்கள் மரபுவாதிகள். இப்படிச் சொல்பவர்கள், நற்குணமிக்க, மதச்சார்பற்ற மனிதரும், ஏழைகளுக்கு உதவும் நாத்திகர்களும் சூழ இருந்தவர்கள் தான். கிரேக்க பாக மதத்தைச் சார்ந்த ஒருவர், ஒழுக்க தத்துவ நூல் எழுதியவர், ஏகத்துவத்தின் சிந்தனையை வளப்படுத்தியவர், அவர் எழுதியதில், நன்மை என்பதை மாயமான விதங்களில் விளக்கியவர் என்ற போதிலும், மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டு சொல்லத்தக்க நூல் அது. இதன் பொருள், தார்மீகம் என்பது மீபொருண்மையின் பக்கம் அண்டாது என்பதல்ல;மத அண்டவியல், தார்மீகத்தை ஏற்காது என்பதுமல்ல. பல நூற்றாண்டுகளாக, ஒழுக்க அடிப்படைகள் சொல்லப்பட்டு வந்துள்ளன- அவற்றை தவிர்த்தோம் என்றால் நாம் மூடர்கள். நல்லவற்றிற்கு நிறைய அடிப்படை இருப்பது நன்மையே . அறவியல் கற்பிக்கும் மத மரபுகள் நிச்சயமாக முக்கியத்துவம் வாய்ந்தவை; கடவுளை அவர்கள் நற்செயல்களுடன் இணைக்கும் விதங்களும் தேவையானவை. ‘உன் அருகாமை வீட்டுக்காரனையும், உன்னைப் போலவே நேசி; நான் கடவுள்.’
ஆனாலும், கடவுள் வெளிப்படையாகத் தெரியாத கருதுகோளிலும், செயல்பாடுகளிலும், தீமை உள்ளதை நாம் அறிந்திருக்கிறோமே? பல வருடங்களுக்கு முன்னர், முட்டாள் தனமாக, ஒரு கேட்டலோனியன் ராப்பை ‘எந்தக் கேடும் சுவர்க்கத்திலிருந்து வருவதில்லை’ என்று சொன்னதை எப்படி நம்பினேன்.?(மூலக் கட்டுரை ஆசிரியர்,’தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடலை அறிந்திருக்கவில்லை) இறையியல் இந்தக் கூற்றைச் சரிசெய்ய உடனே ஓடி வரும்; ஆயின், இறையியல் முன்னரே ஒரு ஆழ்ந்த மன அமைதியின்மையைக் கொண்டு வந்துள்ளதல்லவா? ஒரு தார்மீக அமைப்பு, மீபொருண்மையுடனோ, அல்லது இணைப்பாகவோ இருப்பது ஒன்றும், நல்லவற்றை பயிற்சி செய்வதாகாது. சில மத கிருத்துவர்கள், வீண் தற்பெருமையிலும், ஆடம்பரமாகவும், தங்கள் மதத்தின் தார்மீக முறைகளைப் புகழ்ந்து சொல்கிறார்கள்; வியக்கிறேன்; அவர்கள் தங்கள் சமயத்தின் அறமற்ற வரலாற்றை எப்படி கண்டு கொள்ளாமல் விடுகிறார்கள்? சங்கடப்படாத கிரிஸ்தவ மனம் இருக்கக்கூடும் என்ற சாத்தியமில்லை என நினைக்கிறேன். கான்ஸ்டான்டினிசம் தோட்டத்தில் இருந்து வெளியேற்றப் பட்டதே!
அரசு, கடவுளைப் போல தம்மை நினைப்பதால், அப்படியே உணர்கிறதா? மனிதனின் முகஸ்துதியில் மயங்கும் கடவுள் யார்? ஒரு கொடியில் அடைந்துவிடும் அளவிற்குதான் அவன் இருப்பா? ஒரு அரசு அமைப்பில் உச்சம், அல்லது க்ளைமேக்ஸ் அடையும் மீபொருண்மை அதன் அழகியலிற்கே எதிரானது. அறிவு சார் சுருக்க விளக்கமாக, நான் இவ்வாறு சொல்வேன்-“ ஹேகல் கூறும் தத்துவமான ‘புற நிலை பொருள் மய ஆவி / பொருள் வயத் தோற்றம் (Objective Spirit) அல்லது உலக ஆவி’ (World Spirit) ஆண்டுகளும் ப்ருஷ்யாவின் (Prussia) மாற்றப்பட்ட சிந்தனைகளும் இணைந்து செல்கின்றன.”
இதற்காகத்தானா இவை எல்லாம்? நாடு-அரசு இவை முக்கியம் என்றாலும், வாழ்வின் அர்த்தங்கள் அதைச் சார்ந்ததில்லை. முந்தைய காலனியான மாஸசூசெஸ்ட்சில் தூய்மையின் பெயரில் நடந்த கிரிஸ்துவ அராஜகங்களை சுட்டும் அதே கரிக்கோலுடன், மீபொருண்மை- அரசியல் இணைப்பும், அதன் மோசமான பின்விளைவுகளும் அமெரிக்க வரலாற்றில் உள்ளன. அமெரிக்க விடுதலையின் முதற் தந்தை ராஜர் வில்லியம்ஸ்! (Roger Williams) இதைப் போலவே முந்தைய யூத பொதுச் சொத்துக்களையும், பல முஸ்லீம் அரசியலையும் பேசலாம். இந்த நாள் வராமல் கூட போகலாம்- கடவுளின் பெயரால் ,2000 பவுன்ட் குண்டுகளை வீசி, அளவிற்கு மீறிய கொடூரங்களைச் செய்யும் ஒரு இஸ்ரேலிய அரசு, மதத்தின் பொருட்டே இதைச் செய்தோம் என்று சொன்னால், அது வரலாற்றில் ஒரு பெரும் கறைதான். எனினும், மீபொருண்மையின் எதிரலையென நீட்டிப்பதும், வெறுக்கத்தக்க ஒன்றுதான்.
சரி, தார்மீகத்திற்கு இது தேவையில்லை என்றால், அழகுணர்ச்சிக்கு? வேண்டாமே என்று நீங்கள் சொல்லலாம். புலன்கள் கொள்ளும் முதல் அறிமுகமும், பொருண்மை உலகும், கலையின் ஆன்மீகத்தை உணர்த்துபவை. ‘கருத்தியல் கலை’ (Conceptual Art) என்னும் பெயரில்,1960 களில், இந்த அழகியலை வெட்டி வீழ்த்தினார்கள். கலையை, ஒரு சிந்தனையின் இயந்திரமயமாக்கிப் படைத்தார்கள். பொருண்மையற்ற அப்படைப்புகள், காண்போரிடம் அழகுணர்ச்சியை உண்டாக்கியதா? பொறுமையற்ற, நேரம் செலவிட திராணியில்லாமல், கலையின் முடிவை நோக்கி ஒரு அவசரப் பயணம். பல கலைஞர்கள், மத ஓவியங்களை வரைபவர்கள் உள்ளீட்ட ஒரு பட்டியல் தருகிறேன்- ஜாலென்ஸ்கி, (Jawlensky) மான்ட்ரியன், (Mondrian) மாலெவிச், (Malevich)கேன்டின்ஸ்கி, (Kandinsky) ப்ராங்குஸி, (Brancusi) ரோத்கோ, (Rothko) இவர்கள் மீபொருண்மையை தம் படைப்புகளில் கையாண்டு, கருத்துக்களை, அழகில் கலந்து சொன்னார்கள்; மோரேன்டி, (Morandi) ‘பிதூரா மெடாஃபிசிகா’வுடன் (pittura metafisica) தொடர்புள்ளவர்; அழகு என்பதை, தத்துவம் இல்லாமல், கோட்பாட்டு வலைக்குள் சிக்காமல், உலகப்பரப்பைத் தாண்டிவிட வேண்டும் என்ற அதீதமில்லாமல், அடையமுடியுமே! சில மெய்யியலாளர்கள், ‘வடிவம்’, ‘உரு’ (Form) என்ற சொற்களின் மூலம், கலையின் மீபொருண்மையை விளக்க முற்பட்டனர். வடிவம் என்று சொல்வது மேற்கத்திய மீபொருண்மையின் அடிப்படைச் சொல். ஆனால், வடிவம் என்பது, பலதைக் குறிக்கலாம்- வடிவமைப்பு, சாரம், குறிப்பிட்ட கட்டமைப்பு, முன்பு அறியாத விதத்தில், கருத்தியல் வரைபடமென, (உண்மையானது போலத் தோற்றமளிப்பது),அனுபவப் பூர்வமாக வடிவமைப்பை அறிதல், எல்லாமே உருவே! மீபொருண்மை பகுப்பாய்வு, சம்பிரதாய பகுப்பாய்வாக இருக்க அவசியமில்லை. அமைப்புசார் தூண்டுதல்கள், தத்துவ எதிர்ப்புக், களுக்கு கொண்டு சென்றாலும், மீபொருண்மை அமைப்புகளைச் சிந்திப்பதே அழகைத் தூண்டும். அப்படைப்புகளை, அதிசயிக்கத்தக்க கற்பனைகளுடன், நேர்த்தியாகச் செய்தோமென்றால், அது அக்கலையை புதிய நல் வெளிச்சத்தில் காட்டும். ஆனால், சிந்தியுங்கள், ஒரு கோட்பாட்டை, அதன் கற்பனைக்காக ஏற்கிறோமென்றால், அதன் உண்மையை பார்க்கவில்லை என்றுதானே பொருள்? தத்துவ சிந்தனைகளிலும் தர்க்க முறைகள்- ஹெகலைப் போல விட்கின்ஸ்டென் தர்க்கம் இல்லை என்ற போதிலும், கற்பனைக்கு பங்கிருக்கிறது. அழகியல் உணர்வோடு மீபொருண்மையை அணுகியவர், போர்ஹெ; அவர் மீபொருண்மைச் செய்திகளை, இலக்கியமாகப் படித்தார்- அது தரும் மயக்க நிலை அவருக்குப் போதுமானதாக இருந்தது. அவற்றின் ஜரிகை வேலைப்பாடுகள், அவை தரும் ஒரு வித ஆட்கொள்ளப்பட்ட நிலை, எத்தனைகெத்தனை விரிவாகவும், மறைவாகவும் இருந்ததோ, அத்தனைக்கத்தனை அதில் மயங்கினார் அவர். விவாதங்களுக்குப் பதிலாக குறியீடுகளை விரும்பினார். இந்த அகிலத்தை அற்புதமான நூலகம் எனக் கருதினார்- நூலகத்தில், எது இடம் பெற்றாலும், அது அறிவான ஒன்றோ, உளறலோ அது அவரது ஆர்வ ஊக்கத்தை தடை செய்யவில்லை. ‘நான் மீபொருண்மையில் என்னைத் தொலைத்தேன்- இதை புகாரெனச் சொல்லவில்லை’ என்றார் உண்மையைத் தேடுவதை விட அதை அடையக்கூடிய சாத்தியங்களில் நம்பிக்கை கொண்டவர் அவர். மெய்யியலிலும், மத முறைகளிலும், அவர் கண்ட ஏராளமான சாத்தியங்கள் அவர் நினைப்பை மெய்ப்படுத்தின. அவர், உண்மையின் அழகைக் கண்டார்; ஆகர்ஷிப்பட்டார், அதன் போக்கை உணர்ந்தார், அதன் அயல்தன்மையை- அறிந்தார், மாறுபாட்ட கோணங்களிலிருந்து வரும் சிந்தனைகளின் ஊடாக ஞானத்தை எவ்விதம் அனுமானம் செய்கிறார்கள் என அறிந்தார். ஹாதோர்ன் சொல்வார்- ‘மலைச் சிகரத்தின் உச்சி’ என்று.
என் இளம்வயதில், நான். தத்துவம் படிக்கும் போது. எனக்கு ஒரு. கனவு இருந்தது. அது நான் முற்றிலும். உண்மையை அறிந்து கொண்டு விடுவேன் என்ற அறியாமை. எனக்கு. போர்ஹெசின் மகிழ்ச்சி போதவில்லை.-எனக்கு உண்மைதான் வேண்டும்.
எனவே பல்வேறு மீபொருண்மை கோட்பாடுகளையும். அதனுடன் பொருத்திப் பார்த்தேன். மெய்யியலின். வரலாறு, அதில் எனக்கு நம்பிக்கையை. அசைத்துப்பார்த்தது. ஏற்கனவே. இருக்கும் குவியல்களில். இத்தகைய அதிகப்படியான கோட்பாடுகள் மேலும் மேலும் சேர்ந்தன. போதும் இந்த. சாரணி நடை. இந்த எண்ணத்திற்கு. ஒரு காரணமும் இருக்கிறது. நான் ஒரு அப்பாவி. ஒரு நாள், இந்த தத்துவங்கள் முடிவுறும்; உண்மை நிதர்சனமாகும் என்னுடைய மதக் கல்வியும், எதையும். அறுதியாக அறிய முடியும் என்ற பழமை வாதமும், நான் நிச்சயம். உண்மையை அறிந்து கொள்வேன். என்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தியிருந்தது. எப்படி உண்மை, மறுக்க முடியாத கோட்பாடாகும், அது எனக்குப் புரியவில்லை; ஒரு வேளை, அது மறுக்கவொண்ணா, புலப்படாத ஒன்றோ? என்னுடைய மதத்திலும் கூட. வலுவான சிந்தனையாளர்கள் சறுக்கிய இடமும் இதுதான். கேள்வி பதில்களாக ஒரு நம்பிக்கையை கொண்டுவருவதில், அறிவுசார் எதிர் பார்ப்புகள் அவசியம் என்று உணரப்பட்டது. மேய்மோனிடஸ், தன், மாணவர்களிடம் சொன்னார் “ விபத்தின் மூலம், அறுதி உண்மையை. அறிய முயலாதீர்கள்.” பாருங்களேன்., கடவுளோ மௌனியாகி விட்டார். நாம், காரணங்களோடு உண்மையைத் தேட வேண்டும், என்று வரை? என்று, இந்த மெய்யியல் தேடல் நிறைவுறுமோ, அன்று வரை. ஆயினும், தத்துவ. வரலாறு எனக்கு தலைச்சுற்றலைத் தந்தது. என் நம்பிக்கையை சிதைத்தது. எத்தனை எத்தனை உண்மைகள்? நேரம் எங்கிருந்து கிடைக்கும்? அதிகப்படியான. பொய்கள்- அதற்கும் நேரம் வேண்டுமே? ஒரு சிந்தனையை ஏற்றுக்கொண்டு அதன் சார்பாக அறிவுப் பூர்வமாக. விவாதிக்கும் போதும் ஆரவாரம் எழுகிறதே மனதில், அது ஏன்? ஒருக்கால் மனதின் பழக்கமா? அல்லது மறுக்க முடியாத கோட்பாட்டுப்பிணைப்பா? மனதின். அரசாட்சியில் இவை இரண்டும் ஒன்றல்லவா? இந்த தலைசுற்றலை. நிறுத்துவதும் இவ்வகையில் தானா? நான் கோட்பாட்டுப் பிடிமானத்தை, பின் கட்டமைப்பு சிந்தனைகளை காட்டிலும் விரும்புகிறேன். ஏனெனில். முன்னதற்கு வடிகால் உண்டு. கோட்பாட்டு பிடிமானத்தில், விவாதம் செய்யும் பதட்டம் சற்று பதுங்குகிறது; ஆனால், பதட்டம் இருந்தால், எதுவுமே இழக்கப்படுவதில்லை.
நம்பிக்கைகள் சாத்தியமற்றவை என்று எத்தனை உறுதியுடன் மறுதலிக்க முடியும்? சிந்தனையின் அவசியத்தை உணர்ந்தவர், தான் செலவிட்ட ஆண்டுகள் தன்னுடன் கருணையோடு இல்லை என அறிவார். அனைத்துப் படங்களிலும் ஓட்டைகள் இருக்கின்றன; சில சிறிய ஒட்டைகள், நடுவில் இல்லாதவை, படத்தின் அழகைக் கெடுப்பதில்லை; மேலும் அதைச் சீராக்க முடியும். ஆனால், நிரூபணம் என்பது, பல்லாயிரம் வருடங்கள் நீடிக்கும்;எனினும், அது, பிரதிபலிப்புகளை முடிவிற்கு கொண்டு வரும் ஒன்றாக இருக்கக் கூடாது. இதைத்தான் சால் க்ரிப்கி ‘கோட்பாட்டு பிடிமானங்களின் முரண்’ என்றார். முன்னர் சொல்லப்பட்ட கூற்றில், நான் உண்மையைக் கண்டிருந்ததாக நினைத்தேன் என்றால், அதற்கெதிரான வலுவான ஆதாரங்கள், என்னை திசை திருப்புவதற்காகச் சொல்லப்படுகின்றன என்று அந்த ஆதாரங்களை கூர்மையாக ஆராயாமல் விட்டுவிடுவேன். காரண ரீதியாக அறிவு சார்ந்து செயல்படத் தொடங்கி, அகாரணத்தில் வீழ்வது இவ்வகையில்தான். திறந்திருந்த மனக் கதவுகள் மூடிக்கொள்கின்றன. ஏன், விசாரணைக்கு, அறிவு, முடிவு கட்டுகிறது? கனியும் முன்னே பழுப்பது வெம்பலாகுமே!
என் இளமையில் விட்கென்ஸ்டைன் எனக்குக் கடவுள் போன்றவர். 1914-18ல் அவர் தனிப்பட்ட குறிப்புகளாக எழுதியதன் மொழி பெயர்ப்புகள் சமீபத்தில் எனக்குக் கிடைத்தன. என்னுடைய இளமைக் கடவுளை, அவரது ஆதிக்க மனோபாவத்தால் இம்முறை நான் வெறுத்தேன். தான் மெய்யியலை நிறைவு செய்து விட்டதாக, ஒரு முறையல்ல, இரு முறை அவர் பெருமிதத்துடன் சொல்கிறார். அவர் சொன்ன முதலாவது தத்துவமாவது புரிந்து கொள்ளும் வகையில், தெளிவாக, எண்களும், தசமப் புள்ளிகளுமிட்டு உதவும் வகையில் இருந்தது. ஆனால், இரண்டாவது முற்றிலும் சிறப்பற்ற, ஒழுங்கற்ற கேள்விகளால் நிரம்பி வழிந்தது வினோதம் என்னவென்றால், தனது கண்டுபிடிப்புகளால், தத்துவம் என்பது இனியில்லை என்று அவர் பெருமைப்பட்டதுதான். (மெய்யியலின் முடிவு என விசித்திரமான பல தத்துவவாதிகள் பேராசைப் படுவார்கள்) இவர் தன் மனதை மாற்றிக் கொள்பவர்; அவர் சொல்பவை விரோதச் சாயல் கொண்ட கோட்பாடுகள்- அவை, முரண் நகையாக அவரது திமிரை மறுத்தன. பணிவை போலி செய்த அவரது கள்ளப் பணிவும், தத்துவ முடிவிற்கான பேராசையும் நாம் கொள்ளத்தக்கவையல்ல. கருத்தை, மனதை மாற்றிக் கொள்ளக் கூடாதா, என்ன? தகுந்த காரணங்கள் இருந்தால் செய்யலாம். ஒரு நிகழ்வைச் சொல்லவா?
தொடரும்
உசாவி: Liberties – A Finer Place : by Leon Wieseltier
