எல்லோர் காலைப் பொழுதுகளும் அவரவர் எழும் நேரத்தைப் பொறுத்து இளஞ்சிவப்பு நிறத்திலோ வெள்ளை நிறத்திலோ விடியும் ஆனால் அவனது காலைப் பொழுதுகள் எல்லாம் பச்சை நிறத்திலானவை. அவனது வீட்டுச் சன்னலை ஒட்டியபடி இருக்கும் ஒளிர்பச்சை நிறத்திலான இலைகளைக் கொண்ட புங்கமரம் அவனது அறை முழுதையும் எல்லா காலைப் பொழுதுகளிலும் பச்சை ஒளியில் ஆழ்த்திவிடும்.
கோலிசோடாக் குப்பிக்குள் இருக்கும் குண்டைப் போல் எங்கும் பச்சை வண்ணத்தால் சூழப்பட்டு படுத்திருந்தான். அவனுக்கு தினமும் ஏதோ காட்டுக்கு நடுவே மரக்கிளைகளையே கூரையாய்க் கொண்டு துயின்று எழுந்த உணர்வைத் தந்திடும் அந்தப் பச்சை ஒளி. ஆனால் அன்று மட்டும் அந்தப் பச்சை ஒளி அவனுக்கு வழக்கமான புத்துணர்வைத் தரவில்லை. காரணம் அவனது நேற்றைய அறிவியல் வகுப்பு தான். அவன் எப்போதுமே அப்படித்தான் ஏதேனும் ஒன்று புரியாவிட்டாலோ அல்லது ஏதேனும் கேள்விக்கு விடை தெரியாவிட்டாலோ அவனது மனம் அதனை அறிந்து தெளியும் வரை அமைதிகொள்ளாது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வே நேற்றைய அறிவியல் வகுப்பிலும் நடந்தேறியது.
பதினோறாம் வகுப்பு படிக்கும் அவனுக்கு அறிவியல் வகுப்பில் விண்வெளியைப் பற்றிய பாடம் எடுத்தார் அவனது அறிவியல் ஆசிரியர். விண்ணில் கோள்களையும் நட்சத்திரங்களையும் தாண்டி குறுங்கோள்கள் எரிக்கற்கள் வால்வெள்ளிகள் பெருநட்சத்திரங்கள் என எத்தனை விடயங்கள் உள்ளன என்று அறிந்து மலைத்துப் போனான். மேலும் அவற்றின் இயக்கமும் அண்டத்தின் இருப்பில் அவற்றின் இன்றியமையாத் தன்மையும் அவனை விந்தையில் ஆழ்த்தின. அதனால் அவனுக்கு அந்தப் பாடம் மிகவும் பிடித்துப் போனது ஆனால் இந்த முடிவில்லாப் பேரண்டத்தை ஒரு வகுப்பின் நாற்பது நிமிட இடைவெளிக்குள் அவனது அறிவியல் ஆசிரியர் அடக்க நினைத்ததால் அந்தப் பாடத்தின் கடைசிப் பகுதி அவனுக்கு விளங்கவில்லை. அது Blackholes ஐப் பற்றியது. வகுப்பு மணி அடிக்க நேரம் நெருங்கி விட்டதால் “Black holes are highly concentrated and tightly packed mass of matter with gravity overwhelming all other forces” என்ற புத்தக விளக்கத்தை மட்டும் ஒருமுறை சொல்லிவிட்டு இது ஒன்றும் அவ்வளவு முக்கியமான பகுதி இல்லை அதனால் இதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டாம் என்று சொல்லி பாடத்தை முடித்துச் சென்றார். ஆனால் பள்ளத்தை நோக்கியே நீர் செல்வதைப் போல அந்த Black holes ஐ நோக்கியே அவனது எண்ணங்கள் எல்லாம் சென்றன. அவனும் ஆசிரியர் சொன்ன விளக்கத்துக்கே மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தான் ஆனால் அவனுக்கு அதன் பொருள் விளங்கவே இல்லை. இணையத்தில் தேடிப் பார்த்தும் அவனுக்கு அது புரிந்தபாடில்லை. அவன் இயல்பும் அப்படித்தான் ஒரு விடயத்தைக் கண்டு தெளியும் வரை அவன் மனம் ஓயாது. இதைப் பற்றிய எண்ணங்களே அவன் மனதை அரித்துக் கொண்டு இருக்க அப்போதுதான் அவன் அறையை நிறைத்திருந்த அந்தப் பச்சை ஒளியைப் பார்க்கையில் அவனுக்கு அவனது தமிழ் ஐயா நினைவுக்கு வந்தார். நிறமற்ற சூரிய ஒளியை வாங்கி எப்படி அவன் அறையை அந்தப் புங்கமரம் பச்சை ஒளியால் நிறைக்கிறது என்று அவனுக்குச் சொல்லிக் கொடுத்தது அவன் தமிழ் ஐயா தான்.
அதனால் அவரே அவன் குழப்பத்தைப் போக்க சரியான ஆள் என்று நினைத்தபடியே பள்ளிக்குக் கிளம்பத் தொடங்கினான். பள்ளியில் இடைவேளை நேரத்தில் தமிழ் ஐயாவைப் பார்த்து நடந்தவற்றைச் சொன்னான். இவனது இயல்பு தெரிந்தவராய் அவரும் அடுத்த வகுப்பிற்கு அவனுக்கு நேரமாகிவிட்டதால் உணவு இடைவேளையின் போது தன்னை வந்து பார்க்கும்படி சொல்லி அவனை அனுப்பிவிட்டு நூலகத்தை நோக்கிச் சென்றார்.
உணவு இடைவேளையில் தமிழ் ஐயாவைப் பார்க்கச் சென்றவனை விளையாட்டுப் பொருள்கள் வைக்கப்படும் அறைக்கு அழைத்துச் சென்றார். அந்த அறையின் மூலையில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்திலான இரண்டு எறிகுண்டுகள் இருந்தன. அவற்றுள் மஞ்சள் குண்டைக் காட்டி அதை ஒரு முறை தூக்கிப் பார்க்கச் சொன்னார். அவனும் அதைத் தூக்கிப் பார்த்து கீழே வைத்தான். பின்னர் சிவப்புக் குண்டை தூக்கிப் பார்க்கச் சொன்னார். இந்த முறை சற்றே மெனக்கெட்டு அவன் அதைத் தூக்கினான். பின்னர் “இந்தக் குண்டு எப்படி இருக்கிறது” என்று கேட்டார் மஞ்சள் குண்டை விட எடை அதிகமாய் உள்ளதாய்ச் சொன்னான். பின்னர் ஐயா தொடரலானார் “மஞ்சள் குண்டும் சிவப்புக் குண்டும் தோற்றத்திலும் அளவிலும் வடிவிலும் ஒன்று போல் இருந்தாலும் உள்ளிருந்து பார்த்தோம் என்றால் அவை இரண்டும் வேறுவேறானவை எல்லா பொருள்களும் அணுக்களால் ஆனவை.
மஞ்சள் குண்டில் குறைந்த அளவிலான அணுக்கள் உள்ளதால் அதன் எடை குறைவாகவும் சிவப்புக் குண்டில் அதிக அளவிலான அணுக்கள் இருப்பதால் அது அதிக எடை கொண்டதாகவும் இருக்கிறது. இதுவே இன்னும் அதிக அளவிலான அணுக்களை நாம் அதனுள் அடைத்தால் அதன் எடை இன்னும் கூடும். ஒரு பொருளின் எடை என்பது அதனுள் இருக்கும் அணுக்கள் உள்ளிருந்து வெளிநோக்கிச் செலுத்தும் விசையே ஆகும். இப்படி ஒரு பொருளுக்குள் அதிக அணுக்களை நாம் தொடர்ந்து அடைத்துக் கொண்டே சென்றோம் என்றால் ஒரு கட்டத்தில் அந்த அணுக்கள் செலுத்தும் விசையின் திசை மாறி அது தன்னைச் சுற்றியுள்ள எல்லா பொருள்களையும் தனக்குள் இழுக்கத் தொடங்கிவிடும் அதைத்தான் Blackhole அதாவது கருந்துளை என்று சொல்வோம். அதன் விசை எத்தகையதாய் இருக்கும் எனில் தன்னைவிட அளவில் பெரிய பொருள்களைக் கூட அது தனக்குள் இழுத்துக்கொள்ளும். அதைச் சுற்றியுள்ள எதுவுமே அதனிடமிருந்து தப்ப முடியாது” என்று சொன்னார்.
அவன் அவரையே வியந்து பார்த்திருக்க மேலும் தொடர்ந்தார் “ஆம், பொதுவாக ஒளியை எதனாலுமே எதுவும் செய்து விட முடியாது. நீரைக் கூட சூட்டைக் கொண்டு ஆவி ஆக்கி விடலாம். காற்றைக் கூட அதை உறியும் இயந்திரத்தைக் கொண்டு ஓரிடத்தில் இல்லாமல் செய்துவிடலாம் ஆனால் ஒளியை ஒன்றுமே செய்ய முடியாது. நம்மால் அதைத் தடுக்கத்தான் முடியும் அப்படி தடுத்தாலும் அந்தத் தடுப்பின் மீதும் ஒளியை வீசும் தன்மை கொண்டது ஒளி. ஆனால் இந்தக் கருந்துளை எப்படிப்பட்டது எனில் அது ஒளியைக் கூட தனக்குள் இழுத்து இருளில் கரைத்து விடும். தன்னுள்ளும் தன்னைச் சுற்றியும் இருள் மட்டுமே இருக்கும் படி செய்துவிடும்” என்றார். ஒரு ஆலிவுட் திரைப்படத்தைப் பார்ப்பது போல் வியந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் பின்னர் கேட்டான் “பார்க்க கருப்பாக இருக்குமா இது ?” என்று.
“இல்லை, இதன் பெயர் கருந்துளை என்றாலும் இது நம் கண்ணால் பார்க்க முடியாதபடியே இருக்கும்” என்றார்.
“இதற்கு முன் இது எங்கும் தோன்றியுள்ளதா?” என்று கேட்டான்.
“ஒரு சில கருந்துளைகள் நமது அண்டத்தில் உள்ளன. அவை நமது பூமியிலிருந்து பல இலட்சம் மைல்கள் தொலைவில் உள்ளன. இவற்றைப் பற்றிய ஆய்வுகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. அறிவியலாளர்களுக்கே இவற்றைப் பற்றிய முழு புரிதல் தற்போது இல்லை. ஆனால் இப்படி அண்டப் பெருவெளியில் தோன்றும் கருந்துளைகள் கோள்களையும் நட்சத்திரங்களையுமே கூட விழுங்க வல்லன” என்றார்.
அவன் ஐயாவுக்கு நன்றி சொல்லி விடை பெற்றாலும் அவன் மனதில் இருந்து கருந்துளைகள் விடைபெறவே இல்லை.
அறிவியலாளர்களுக்கே இதைப்பற்றி முழுதாய்த் தெரியாது என்பது அதைப் பற்றிய புதிரான தன்மையை இன்னும் அதிகமாக்கியது. உணவு இடைவேளைக்குப்பின் நடந்த வகுப்பில் கணித ஆசிரியர் அன்றைய பாடத்தைச் சொல்லிக் கொடுத்துவிட்டு கரும்பலகையை அழித்தார். அதில் எழுதப்பட்டிருந்த எழுத்துகள் எல்லாம் மாயமாய் மறைந்தன. அப்போது ஒருவேளை இந்தக் கரும்பலகை கருந்துளையாய் மாறி எழுத்துகளையும் எண்களையும் விழுங்கி விட்டதோ. இன்னும் சற்று நேரத்தில் கணித ஆசிரியரையும் அது விழுங்கி விடுமோ என்றெல்லாம் நினைத்துக் கொண்டான்.
பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து செல்லும் போது கூட அடிகளைப் பார்த்துப் பார்த்து கவனத்துடன் வைத்துச் சென்றான். எங்கே சாலையில் உள்ள குழிகள் கருந்துளைகளாய் மாறி தன்னை உள்ளே இழுத்து விடுமோ என்று.
அவனது நண்பர்கள் எல்லோருக்குமே பள்ளிக்கூட நேரத்திற்குப் பிறகும் கூடுதல் வகுப்புகள் இருக்கும். அதனால் பெரும்பாலும் வார நாள்களில் மாலை நேரத்தை அவன் தனியாகவே கடத்த வேண்டியதாய் இருந்தது. அன்றும் அப்படித்தான் வீட்டிற்கு வந்தவன் உடைமாற்றி தேனீர்க் கோப்பையுடன் அவனுக்கு மிகவும் பிடித்த இடமான புங்கமரத்தின் அடியில் உள்ள கல்லில் வந்து அமர்ந்தான். மதியத்திலிருந்து இந்தக் கருந்துளையே அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்ததால் அயர்ந்து போயிருந்தவனுக்கு அந்தப் புங்கமரம் உதவியது. அதன் அடியில் அமர்ந்திருப்பது அவனுக்கு இதமாக இருந்தது.
மெல்ல அவன் மனதில் இருந்த கருந்துளை நீங்கி அந்த இடத்தில் அந்தப் புங்கமரம் தன் கிளைகளை விரித்துக்கொண்டது. புங்க மரத்தைப் பற்றி நினைத்து விட்டால் அவனது மாமனைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியாது. தாய்மாமன் ஆயினும் ஒரு முறை கூட அவரை அவன் மாமா என்று அழைத்ததே கிடையாது. அவர் பெயர் சொல்லியே அழைப்பான். அவர் ஒரு கூடைப் பந்துப் பயிற்சியாளர். தினமும் காலை மாலை என நாளின் பெரும் பகுதியை அந்த ஊரின் நடுவே இருக்கும் மைதானத்தில் தான் கழிப்பார். அவர் கூடைப் பந்துப் பயிற்சியாளர் ஆயினும் அவனுக்கு அந்த விளையாட்டின் விதிமுறைகள் கூட முழுதாய்த் தெரியாது. இவனும் விடுமுறை நாள்களில் அதே மைதானத்திற்குத் தான் செல்வான் ஆனால் இவனுக்குப் பிடித்ததெல்லாம் கிரிக்கெட் தான். இவன் மாமனுக்குக் கிரிக்கெட் என்றாலே பிடிக்காது. நம் நாட்டின் மற்ற விளையாட்டுகளின் குரல்வளையை அது நெரிக்கிறது என்று சொல்வார். காலை மாலை போக மற்ற நேரத்தைப் புத்தகங்களோடே கழிப்பார். அதனால் அவர் படித்தவற்றைப் பற்றி கேட்டுக் கொண்டே இருப்பான் அவன். தான் காணாத இடங்களையும் மனிதர்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் பற்றி அவரிடம் கேட்டறிவதில் அவனுக்கு ஒரு அளவற்ற இன்பம்.
அந்த மைதானத்தில் ஒரு பெரிய புங்கமரம் இருந்தது அதை யாருமே செடியாகப் பார்த்திருக்க முடியாது. சொல்லப்போனால் அந்தப் புங்கமரம் தான் அந்த ஊரின் மூத்த குடிமகள். அதன் குளுமையைப் பெற யாரும் அதன் நிழலில் வந்து நிற்கக் கூட வேண்டாம் அதைப் பார்த்தாலே போதும். அதன் ஒவ்வொரு கிளையும் தனிக்காடுகளைப் போன்றவை. ஆனால் நம்மைப் பொறுத்தவரை காய்க்காத மரங்கள் எல்லாமே பயனற்றவை தானே. அப்படித்தான் ஒரு மதிய வேளையில் நகராட்சி ஊழியர்கள் உதவியுடன் அந்த ஊர் மக்கள் மைதானத்திற்கு இடையூறாக உள்ளது என்று அந்தப் புங்கமரத்தை வெட்டிச் சாய்த்தனர். மாலையில் அவன் மாமன் சென்றபோது அந்த மரத்தை முழுதாய்க் கொன்று இருந்தனர். அவர்கள் கொண்டு வந்த வாகனத்தில் வெட்டிய மரத்தைக் கூறு போட்டு ஏற்றியும் கொள்ளாது போன மீதி மரத்தை அப்படியே மைதானத்துத் தரையில் விட்டபடி சென்று இருந்தனர். அவன் மாமனுக்கு அந்த மரம் இல்லாமல் அந்த மைதானமே உயிரற்று காட்சி அளித்தது. என்றும் இல்லாமல் அன்று மட்டும் சூரியன் இறங்கத் தொடங்கியும் அந்த மைதானம் வெப்பத்தில் தகித்தது அன்று கூடைப் பந்தாட்டமே அங்கு நடக்கவில்லை விழுந்து கிடந்த புங்கமரத்தின் கிளை ஒன்றை முறித்து அவனது மாமன் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றார். அப்போது அவனுக்கு மூன்று வயது தான் இருக்கும் ஆனாலும் அந்தக் கிளையை தோளில் சுமந்து வந்து வீட்டின் முன் அதை அவன் மாமன் நட்டது அவன் மனதில் பசுமையாக இருந்தது. இன்று இத்தனை ஆண்டுகள் கழித்து அந்த மரம் அவனைவிட ஏன் அவன் வீட்டையும் விட உயரமாய் வளர்ந்து நிற்கிறது. அதை நட்டது முதல் எல்லா நாளும் முதல் வேலையாய் அதற்குத் தண்ணீர் ஊற்றுவார் அவனது மாமன். உடன் சொல்லவும் செய்வார் பச்சைகளிலேயே அழகு புங்கமரத்து இலையின் பச்சை தான் என்று. இன்று அவன் மாமனும் அவனோடு இல்லை அந்த மரமும் யாரும் சென்று நீரூற்றத் தேவையில்லாத நிலையை அடைந்திருந்தது அப்படியும் அவன் அந்த மரத்திற்குத் தினமும் தண்ணீர் ஊற்றுவான் ஆனால் அது செல்வதென்னவோ மண்ணுக்குள் அல்லாமல் அவன் மனதுக்குள் இருக்கும் மாமனிடத்தே தான். இதனால் தான் அவனுக்கு அந்தப் புங்க மரத்தின் அடியில் அமர்ந்திருத்தல் மிகவும் பிடித்தமான ஒன்று.
அடுத்த நாள் காலையில் விடியும் முன்பே அவனுக்கு விழிப்பு வந்துவிட்டது. இருள் சூழ்ந்த அறையில் கலைந்த தூக்கத்தை மீட்க முயன்று தோற்றுப் போனான். முந்தைய நாள் மாலையிலிருந்து அவன் மாமனைப் பற்றிய நினைவுகள் அவனை விட்டு விலகாது இருந்தன. அதன் விளைவாகவே தூக்கம் கலைந்தவனாய் விழித்திருந்தான். சற்று நேரம் கழித்து அவன் கண்கள் இருளுக்குப் பழகி சுற்றியுள்ள பொருள்கள் எல்லாம் மங்கலாய்ப் புலப்படத் தொடங்கின. அந்தச் சன்னலின் அருகே இருந்தது மைதானத்தில் இருக்கும் நேரம் போக மற்ற நேரத்தில் எல்லாம் கையில் புத்தகத்துடன் அவனது மாமன் எப்போதும் அமர்ந்திருக்கும் நாற்காலி.
இப்போதெல்லாம் அதில் யாரும் அமர்வதே இல்லை. எப்போதுமே அது காலியாகவேதான் உள்ளது. அந்த வெற்று நாற்காலியைப் பார்க்கையில் ஏனோ அந்த நொடியில் அவன் மாமனின் இல்லாமையை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன் மாமன் எங்கே எங்கே என்று அவன் ஏங்கினான். ஏதோ அந்த அறையிலேயே எங்கோ அவர் இருப்பதைப்போல சுற்றிலும் தேடினான் ஆனால் எங்கும் இருள் மட்டுமே இருந்தது. அந்த அறையில் கவிந்திருந்த இருள் அவனிடம் சொன்னது “எல்லாவற்றையும் விழுங்கிச் செரிக்கும் கருந்துளை எங்கோ விண்வெளியில் தான் இருக்க வேண்டும் என்று இல்லை அது இறப்பு எனும் வடிவில் எல்லோர் வாழ்க்கையிலுமே கூட இருக்கலாம்” என்று. அப்போது அவனும் தமிழ் ஐயா கருந்துளையைப் பற்றிச் சொன்ன விளக்கங்கள் எல்லாம் இறப்பிற்கும் பொருந்துவதை உணர்ந்தான்.
அவன் மாமனின் கடைசி சில நாள்கள் அவன் கண் முன் தோன்றின. அவர் உடல் முடியாது படுக்கையில் கிடந்தபடி இருந்தார். அப்போது அவர் தலைமாட்டில் தக்க நேரத்திற்காகப் பசியுடன் காத்துக் கொண்டிருந்தது அந்தக் கருந்துளை. தன் மாமனை விழுங்கிய பின்னும் அதன் பசி அடங்கி இருக்கும் என்ற நம்பிக்கை அவனுக்கு இல்லை. சுவரோர அலமாரியின் கடைசித் தட்டில் காற்று நீங்கிய கூடைப் பந்துகள் தூசி படிந்து சுருங்கிக் கிடந்தன. அவன் மாமனுக்குக் கூடைப்பந்து என்றால் எவ்வளவு பிடிக்கும் என்று அவனுக்குத் தெரியும். அதனால் இந்தக் கூடைப் பந்துகளின் மூச்சுக்காற்றும் கட்டாயம் தன் மாமனுடன் கருந்துளைக்குள் தான் சென்று இருக்கும் என்று அவன் நினைத்துக் கொண்டான். பின்னர் அவன் அறிந்து இறந்து போனவர்கள் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் அந்தக் கணக்கு பத்து விரல்களால் எண்ண முடியாதபடி பெருகிப் போனது.
இத்தனை பேரையுமா இந்தக் கருந்துளை விழுங்கியுள்ளது என்று நினைக்க அவனுக்கு மலைப்பாய் இருந்தது. இவன் அறிந்தே இத்தனை பேர் என்றால் இந்த உலகம் முழுவதிலும் எத்தனை பேர் இறந்திருப்பார்கள். அத்தனை பேரையும் விழுங்கி எவ்வளவு பேர்களின் வாழ்வை இந்தக் கருந்துளை இருளில் ஆழ்த்தியிருக்கும் என்று நினைக்கையில் அவன் மனதில் அந்தக் கருந்துளை ஒரு கொடிய உருபெற்று இருந்தது.
பிறந்தது முதல் இவனுடனே இருந்த மாமன் ஒரு நொடிப் பொழுதில் வாழ்ந்த தடம் கூட இல்லாமல் போனது இந்தக் கருந்துளையின் பசியைத் தீர்க்கும் பொருட்டுதானா என்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“எல்லோர் வாழ்விலும் இறப்பு எனும் கருந்துளை தவிர்க்க முடியாதது தான் ஆனால் நாம் வாழ்தலே அதன் பசியைத் தீர்க்கத்தானா?”
“நாளுக்கு நாள் நாம் அந்தக் கருந்துளையை நோக்கிச் சென்று கொண்டேதான் இருக்கிறோம். ஆனால் அது மட்டும் தான் நம் வாழ்வின் பயனா?”
“ஒரு கட்டத்தில் உலகில் உள்ள எல்லாவற்றையும் விழுங்கிச் செரித்து இந்த உலகையே இந்தக் கருந்துளை இருளில் ஆழ்த்திவிடுமா?”
“எனில் வாழ்வில் வெளிச்சத்திற்கே இடமில்லையா?”
என்றெல்லாம் கேள்விகள் அவன் மனதைச் சூழ்ந்தன. அந்த அறையில் கவிந்திருந்த இருள் அவனைப் பார்த்து ஏளனமாய்ச் சிரிப்பதைப் போல் இருந்தது.
அப்போது சூரியன் மெல்ல மேலெழும்பியது. அதன் கதிர்களுக்கு நள்ளிரவில் பெய்த மழையின் மிச்சத்தைத் தாங்கிய கருமேகங்கள் நகர்ந்து வழிவிட்டன. அந்த ஒளிக்கதிர்கள் தூங்கிக் கொண்டிருந்த புங்கமரத்தைத் தட்டி எழுப்பின.
இருளுக்குள் மறைந்த மாமன் நட்ட புங்க மரத்தின் பச்சை வெளிச்சம் மழை பெய்தவுடன் மண்வாசம் பரவுவதைப் போல் இருள் யாவையும் நீக்கி அந்த அறையையும் அவன் மனதையும் ஒளியால் நிறைத்தது.
