Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

தடுமாற்றத்தின் குரல்

ரிச்சர்ட் ஓவென்ஸ், பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த உயிரியலாளர். அவரது காலகட்டத்தில் தான், தொல்லுயிரில் ஆராய்ச்சி பெருமளவு வளர தொடங்கியிருந்தது. ஆங்காங்கே கிடைக்கும் சிறுசில எலும்புகளை கொண்டும், புதைபடிவங்களை கொண்டும் அந்த துறை மிக வேகமாக வளர்ச்சி பெற்று வந்தது. டைனோசர்கள் முதலில் கண்டுபிடிக்கப்பட்டபோது அதை எப்படி வகை படுத்துவது என்ற குழப்பம் இருந்தது, பலரும் அதை நீர் வாழ் உயிரினம் என்றே கணக்கிட்டனர். ஆனால் ஓவென்ஸ் ஒரு முக்கியமான பார்வையை முன்வைத்தார், டைனோசர்களின் முதுகுத்தண்டின் கடைசி ஐந்து முள்ளெலும்புகள் ஒன்றாக இணைந்திருந்தது. அது, முதுகுத்தண்டுக்கு வலுசேர்த்து, அது நடப்பதற்கு உதவும் என கணித்தார். நீர் வாழ் உயிரினங்களுக்கு அந்த தேவை எல்லை. ஒரு சிறிய எலும்பு கூட ஒரு பெரிய அமைப்பின் அங்கம் என்பதையும், அந்தச் சிறிய எலும்பைக் கொண்டு ஒரு முழு சித்திரத்தையும் வரைய முடியும் என்பதையும் அவர் நிரூபித்தார். எனக்கு எப்போதும் அந்த பார்வையின் இரு கூறுகள் ஆச்சர்யப்படவைத்து கொண்டே இருந்தது. ஒன்று, ஒவ்வொரு சிறு துளியும், ஒரு பிரம்மாண்டத்தின் பகுதி என்பதும், புல்லின் நுனியை கொண்டு ஒரு காட்டையே நம்மால் கற்பனை செய்து கொள்ள முடியும் என்பதும். 

எழுத்தாளர் ஆதவனின் கதைகள் எனக்கு பலசமயம் அந்த ஆச்சர்யத்தையே கொடுத்தது. மிகச் சிறிய ஒரு அன்றாட நிகழ்வை கொண்டு, ஒரு பெரும் சித்திரத்தை படைக்க முயல்கிறார் என. இதையெல்லாம் கதையாக்க முடியுமா என நாம் நினைக்கும் பல நிகழ்வுகள் சிறப்பான கதைகளாக அவரில் உருவாகி வந்துள்ளது. காதலியை விடுதியில் விட்டுவிட்டு கிளம்பும் காதலனின் எண்ணங்கள் (நிழல்கள்), பேருந்தில் செல்கையில் பார்க்கும் ஒரு பூங்கா (முதலில் இரவு வரும்), ஒரு இளைஞனின் ஞாயிற்றுக் கிழமை மதியம், ஒரு காப்பி குடிக்கும் நேரத்தில் இரு நண்பர்களுக்கு இடையேயான உரையாடல் (புதுமைப்பித்தனின் துரோகம்) என ஒரு சின்ன துளியில் தொடங்கி விரியும் கதைகள். சமீபத்தில் ஒரு உரைக்காக அவரது சிறுகதைகளை படித்தேன், அதில் இழையோடும் சில பொதுவான சரடுகளை கொண்டு அவரது ஆக்கங்களை மேலும் புரிந்துகொள்ள முடியுமா என்பதுதான் இந்த கட்டுரையின் நோக்கம். 

மனம் தாவிச் செல்லும் தருணங்கள்

முதலாவதாக, கண நேரத்தில் எதிர் துருவங்களுக்கு மனம் தாவிச் செல்வதை அவர் தொடர்ச்சியாக பதிவு செய்து வந்துள்ளார். ஆதவனே ஒரு கட்டுரையில் தன்னை பற்றிச் சொல்வது இது, “வாழ்வின் எந்த ஒரு பிரச்சினை அல்லது நிலைமையை எடுத்துக் கொள்ளுங்கள், அதைச் சார்ந்தும் அதை எதிர்த்தும் ஒரே சமயத்தில் என்னுள் குரல்கள் எழும்: வாதி, பிரதிவாதி, இரண்டு பேருக்கும் நான் வக்கீலாக இருப்பேன்”. அவரது பல கதைகளில் இது இயல்பாக பிரதிபலிக்கிறது. இரண்டு வெவ்வேறு கதாபாத்திரங்களோ, அல்லது ஒரே ஒருவரின் இரண்டு வெவ்வேறு மனநிலைகளோ நுணுக்கமாக பதிவுசெய்யப்பட்டு ஒரு உண்மையை விவாதித்து கொண்டே இருப்பதை அவரது கதைகளில் காணலாம்.

“முதலில் இரவு வரும்” கதையில், ராஜாராமன் தன் தந்தை மீதுள்ள வெறுப்பை தன் காதலி கோதையுடன் பேசிக்கொண்டிருப்பதுடன் தொடங்குகிறது, முற்றிலும் அவரை வெறுப்பவனாகவே இருக்கிறான். “எங்கள் அப்பா – அவர்தான் பெரிய பிரச்சனை, வீட்டில் அமைதியை குலைக்கும் ராட்சசன்” என்றே அவனது அப்பாவை பற்றி எண்ணி வருகிறான். யாரும் தன்னை நேசிப்பதோ அல்லது தன்னிடம் நேசத்தை எதிர்பார்ப்பதோ அதிகப்ரசங்கித்தனம் என்று அவர் நினைப்பதாக தான் அவரை பற்றிய எண்ணத்தை வளர்த்து கொண்டிருக்கிறான். தற்போது அப்பா இல்லை, ஆனால் அம்மா அவனுடன் தான் வாழ்கிறாள். கோதையை திருமணம் முடித்து இப்போது அவனுக்கும் ஒரு குழந்தை இருக்கிறது. குழந்தை ஆசையாக ஐஸ் க்ரீம் சாப்பிட அழைக்கையில் அவன் அம்மா, “எனக்கு வேண்டாண்டி கண்ணு, நீ போய் சாப்பிடு” என்கிறாள். அம்மா தனக்குள் இப்படி சுருங்கிக் கொண்டதை நினைப்பவன், அதிலிருந்து தாவி, அப்பாவின் அன்புக்கு ஏற்ற அலைவரிசையில் அவனது அம்மா இல்லாதுதான் அவர்களுடைய பிரச்சனையோ என எண்ணுகிறான். 

“அன்பையும்‌ கொடூரத்தையும்‌ பிரிக்கும்‌ கோடு எத்தனை மெலிதானது! அவருடைய அன்புக்கு அதே அலை வரிசையில்‌ அவளிடம்‌ எதிரொலி கிடைக்காமல்‌ போனதே அவர்களிடையே பிரச்சினையாக இருந்திருக்கலாம்‌. அப்பா ‘வேண்டும்‌, வேண்டும்‌’ என்றபோது அம்மா “வேண்டாம்‌, வேண்டாம்‌ என்றிருப்பாள்‌.” 

அஞ்சி அஞ்சி வாழ்ந்த அம்மாவின் பக்கமே சாய்வுடைய அவன் மனது, மிக இயல்பாக அவனது அப்பாவைப் புரிந்துகொள்கிறது. கிட்டத்தட்ட இதே போல, நிழல்கள் கதையில் “கருணையையும் கடுமையையும் பிரிக்கும் கோடு இவ்வளவு மெலிதானதா?” என காதலனின் கோபம் வெளிப்படும் இடம் ஒன்று வருகிறது. சொல்லப்போனால் அந்த ஒட்டு மொத்த கதையுமே அன்பிற்கும் வெறுப்பிற்குமான இடையேயான ஊஞ்சல் போல ஆடிக் கொண்டே இருக்கிறது. எந்த மர்மமான கணத்தில் நாம் ஒரு எல்லையில் இருந்து மறு எல்லைக்கு தாவுகிறோம்? எப்படி அந்த இரு எல்லையிலும் முற்றான உண்மை அதுதான் என்று நம்மால் உறுதியாகக் கூற முடிகிறது? அப்படியான கணங்களைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்தவர் ஆதவன்.

நவீன வாழ்வின் நெருக்கடிகள்

ஆதவன் அறுபதுகளில் எழுதத் தொடங்கியவர், பல வகையிலும் முக்கியமான காலகட்டம் இது. உலக அளவில், வியட்நாம் போரும் அதற்கு எதிரான போராட்டங்களும், ஹிப்பி இயக்கங்களின் வளர்ச்சியும், இந்திய அளவில் காந்திய லட்சியவாதத்தை தாண்டிய ஒரு சோர்வும், அதிகாரத்துவம் (Bureaucracy) நிலைபெற்று அன்றாட வாழ்வை நெருக்கத் தொடங்கியிருந்த அழுத்தமும். பல இளைஞர்கள் நவீன வாழ்க்கை முறைகளை எதிர்கொள்ளத் தொடங்கியிருந்தனர், முக்கியமாக பெருநகரங்களில். அதுவரை அவர்கள்பற்றி கொண்டிருந்த மரபும், ஆசாரங்களும் நவீன யுகத்தை எதிர்கொள்ளும் போது பலவகையான கேள்விகளுக்கு உட்படுத்தப் படுகின்றன. இது அவரது கதைகளின் முக்கியமான இரண்டாவது சரடு.

எல்லாத் திருப்புமுனைக் கால கட்டங்களை பற்றியும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் விரிவாகப் பதிவுசெய்து உள்ளனர். உதாரணமாக தஸ்தோயேவ்ஸ்கியின் “கரமசோவ் சகோதரர்கள்” நாவலும் குழப்பம் நிறைந்த நவீன யுகத்தை எதிர்கொள்ளும் மனிதனின் அறம் மற்றும் ஒழுக்கவியலை ஆராயும் நாவல் தான். ஜார்ஜ் ஆர்வெலின் 1984 மற்றும் சாப்ளினின் “மாடர்ன் டைம்ஸ்” என இன்னும் பல உதாரணங்களை சொல்லலாம். இவை எல்லாமே, சாதாரண மனிதர்கள் தாங்கள் திடீரென எதிர்கொள்ளும் பெரிய உலகைச் சமாளிக்க முடியாமல், அதை அர்த்தப்படுத்திக்கொள்ள முயற்சிப்பதையே காட்டுகிறது. அமெரிக்க சமூகவியலாளரான ரைட் மில்ஸ், “The Sociological Imagination” என்னும் புத்தகத்தில், இத்தகைய காலகட்டங்கள் ஒரு மனிதனைச் சிதறடிக்க செய்யும், அதனால் அவர்கள் தன்னிலையை காத்துக்கொள்ள முற்றிலும் தனியர்களாக ஆக வாய்ப்புள்ளதாக வாதிடுகிறார். ஒட்டுமொத்தமாக எல்லாரையும் அந்தப் பேழைக்குள் அடைக்க முடியாது என்றாலும், பெரும்பாலானவர்களுக்கு இது பொருந்தும் என்றே படுகிறது. மற்ற யாவரையும் விடவும், டெல்லியில் வாழும், படித்த உயர்தர இளைஞர்கள் இந்தப் பிரச்சனைகளை முதலில் எதிர் கொண்டிருப்பார்கள்.

பெரும்பாலான ஆதவனின் கதைமாந்தர்கள் ஆட்சியதிகாரநிலை பற்றியும், சுற்றுச் சூழல் அழிவது பற்றியும், வெகு வேகமாக மாறிவரும் டெல்லியைப் பற்றியும் தொடர்ந்து பேசுகின்றனர். அதே சமயம், அதற்கு எதிர்வினையாக, எப்போதும் நடப்பது போல ஒரு போராட்டத்தை ஒருங்கிணைப்பவர்களாகவோ அல்லது குறைந்த பட்சம் பங்குபெறுபவர்களாகவோ கூட இருப்பதில்லை. ஞாயிற்றுக் கிழமைகளில் சினிமாவுக்கோ, அல்லது குதிரைப் பந்தயத்துக்கோ செல்வதை பற்றிய குழப்பங்களும், கவலைகளும் நிறைந்தவர்கள். “காகித மலர்கள்” விஸ்வம் ஒரு பாரில் “ஜுக் பாக்ஸ்” கேட்பவனாகவே அறிமுகம் ஆகிறான். அவனது விடுதலை என்பது சினிமாவாகவே இருக்கிறது.அத்தனை கவலைகளையும் மறப்பதற்கு அவர்களுக்கு ஆட்ரி ஹெபர்ன் (Audrey Hepburn) போதுமானதாக இருக்கிறது. 

 ‘அவனுடைய வாழ்க்கைத் துணைவியின் இலட்சிய உருவகம் இந்த பிரியமான நடிகைகளின் சாயல்களில் இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் என்று சிதறிக் கிடந்தது’ 

(சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல் கதையிலிருந்து)

அதே சமயம் அந்த நகர்ப்புற வாழ்க்கை அவர்கள் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை நுட்பமாக பல கதைகளில் பயன்படுத்துகிறார். நிழல்கள் கதையில், நாயகனும் நாயகியும் ஒரு முத்தத்தின் பொருட்டு ஊடலிலும், சண்டையிலும் இருக்கிறார்கள், அப்போது “அந்த கேட்டருகே நிற்கும் போது அவர்கள் இருவருமே எவ்வளவு சிறியவர்களாகவும் முக்கியத்துவமில்லாதவர்களாகவும் தோற்றமளிக்கிறார்கள்” 

என்கிறார், அதே போல சற்று நேரம் கழித்து, “அவர்களுடைய நிழலும் அந்த கேட்டின் நிழலின் மேலேயே, ஒன்றன் மீது ஒன்றாக சாலை மீது படர்ந்திருந்தது” என சொல்லிச் செல்கிறார். மிகச் சாதாரணமாக தனிமனித உணர்வுகளையும் அந்த சூழலின் எதார்த்தத்தோடு பொருத்தி கதைக்கு ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி விடுகிறது அந்த வரி. 

“அவர்களுடைய சூழ்நிலைக்கு சற்றும் பொருத்தமில்லாமல் குப்பென்று குளிர்காற்று வீசியது. மெயின் ரோட்டிலிருந்து பஸ்கள், கார்கள் செல்லும் ஓசைகள், ஹார்ன் ஒலிகள் மிதந்து வதந்தன” என்பது சற்றும் பொருத்தம் இல்லாத அந்த இடத்தில் அவர்கள் மென்மையான ஒரு உணர்வை எப்படி இயல்பாக பேசிவிட முடியும் என்ற கேள்வியை எழுப்புகின்றது. இறுதியாக அவர்களின் அந்த ஒட்டுமொத்த சம்பாஷணையையே அவர் இப்படி தொகுத்துச் சொல்கிறார்,

“பஸ்களின்  மேல் அவனுக்கு தனியாக பாத்தியத்தையோ, அதிகாரமோ இல்லை. மற்றவர்களைக் காக்க வைப்பது போல, அவை அவனையும் காக்க வைக்கட்டும். பாதகமில்லை. ஆனால் இவள் – இவள் ஏன் காக்க வைக்க வேண்டும்.”

அவன் மேல், தொடர்ந்து அழுத்தத்தை கொடுக்கும் நவீன யுகத்தின் மீது அவனால் எந்த எதிர்வினையும் கொடுக்க முடியவில்லை, ஆனால் அதன் காரணமாக அவன் காதலி இன்னும் கொஞ்சம் அவனுக்கு கரிசனம் காட்டவேண்டும் என எண்ணுகிறான். ஞாயிற்றுக் கிழமைகளும் பெரிய நகரமும் கதையில் வரும் நாயகனை அறிமுகப்படுத்தும் போதும், “தன் அறையில் அவன்தான் அரசன். ஆனால் வெளியே அவன் பல்வேறு இடங்கள், சூழ்நிலைகள், மனிதர்கள் ஆகியவற்றின் அடிமை” என்கிறார்.பொதுவாக ஆதவனுடைய பார்வை, நாம் எல்லாரும் வெவ்வேறு வேடங்களின் கைதிகள் என்பதாகவே இருக்கிறது. அவரே சொல்வது போல அவரது, “இளைஞர்கள், வயதையும், ‘வேடங்கள்’ அணியும் திறனையும் ஒட்டியே வாய்ப்புகள் வழங்குகிற ஒரு அமைப்பில் நிரந்தரமான ஒரு insecurity இன், ஒரு alienation இன் கைதிகள்”

சுயத்தை தேடும் பயணம்

மூன்றாவது அழுத்தமான சரடு, மேலே சொன்னவற்றில் தொடர்ச்சியாக, இளைஞர்கள் தங்கள் தனித்தன்மையை அல்லது சுயத்தை தக்கவைத்து கொள்வதற்கான வழிகள். பல சமயங்கள் வெறும் சுயநலன்களாகவே நின்று விடுபவையும் கூட. காகித மலர்கள் முன்னுரையில், மனுஷ்யபுத்திரன் இவ்வாறு சொல்கிறார், 

“தனிமனிதர்களின் தன்னிலைகளை உருவாக்கும் சமூகக் கட்டுமானங்கள் பற்றிய கேள்விகள் நவீன இலக்கியத்தின் ஆதாரமான பிரச்சனைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. தனிமனிதர்களின் சுயம், சுதந்திரம் என்பவை எந்த நவீன சமூகத்தில் உருவாக்கப்பட்டனவோ அங்கேயே இந்த சுயங்களும் சுதந்திரங்களும் வெறும் கற்பிதங்கள் என்று கூறி மறுக்கப்பட்டுவிட்டன. பிற ஆளுமையை கொண்டு அதன் வழியே தன்னுடைய ஆளுமையை ஸ்தாபித்து கொள்ளும் இடையறாத போராட்டத்தில் நிகழும் தன்னிழப்பும் கசப்பும் தனிமையும் எழுப்பப்படும் கதைகள் ஆதவனுடையது.”

அறுபதுகளின் இளைஞர்கள், முதன் முதலாக ஒரு நீண்ட இளமை பருவத்தை (prolonged adolescent) கழிக்க நேர்ந்த தலைமுறை, அவர்களின் அப்பாக்களுக்கோ, தாத்தாக்களுக்கோ அத்தகைய பிரச்சனை இருந்ததில்லை. ஆனால், அதை எப்படி கடக்க வேண்டும் என்பதற்கு அவர்களுக்கு எந்த விதமான பயிற்சியும் அளிக்கப்படவும் இல்லை.  இந்தத் தடுமாற்றத்தை கிட்டத்தட்ட அந்த இளைஞர்களை பற்றிய முந்தைய தலைமுறை பார்வையை அவர் பல கதைகளில் பதிவு செய்துள்ளார்.

உருப்படியான எதிலும் தீவிரப் பிடிவில்லாமல், ஆழமான‌ எதனுடனும் தம்மை முழுமையாகச் சம்பந்தப்படுத்திக் கொண்டு அதன் விளைவுகளைச் சந்திக்கத் துணிவில்லாமல், தாமே உருவாக்கிக் கொண்ட ஒரு நிரந்தரமான சலிப்பில் உழலும் இக்கால இளைஞர்களுக்கு இதுபோன்ற பொறுக்கித்தனமான முறைகளில்தான் மனக் கிளர்ச்சியையும் பரவசத்தையும் உருவாக்கிக் கொள்ளத் தோன்றுகிறது (ஒரு பழைய கிழவரும் ஒரு புதிய உலகமும்)

அதே சமயம் அவர்கள் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருப்பதாக தோன்றினாலும் அந்த பொருமலையும் பார்க்க முடிகிறது, 

இந்தக் காலத்துப் பசங்களெல்லாம் பரவாயில்லை. ஸார். இவங்க வயசிலே நாம் இருந்த போது என்ன எஞ்ஜாய் பண்ணியிருப்போம் சொல்லுங்கோ! (சிவப்பா, உயரமா, மீசை வச்சுக்காமல்)

இறுதியாக, மிக சில வரிகளிலேயே அவரால் ஒட்டுமொத்த மன உணர்வையும் சொல்லி விட முடிகிறது. அலங்காரமான சொற்கள் அல்லாமல், மனித மனதின் நுட்பத்தை வெகு சில வரிகளில் கடத்தி விடுகிறார்.

நானறிந்த உலகை, என்னால் என்றுமே சொல்ல முடியாத என் உணர்வுகளை, மிக அழகாக, மிகப் பொருத்தமான சொற்களில் வேறொருவரால் இவ்வளவு துல்லியமாக வெளிப்படுத்த முடிந்தது எப்படி என்ற வியப்பு என்னைவிட்டு இன்னமும் அகலவில்லை. (அசோகமித்திரன்)

லேடி என்கிற கதை, வீட்டு வேலை செய்யும் பெண், அந்த வீட்டு முதலாளி அம்மாள் தருவதாக சொன்ன சாப்பாட்டு தட்டை பற்றிய கதையாக வளர்கிறது, இறுதியில், தன் மகனுக்கு எவர்சில்வர் தட்டு தருவார் என எதிர்பார்த்திருக்க, அந்த அம்மாள் ஒரு சாதாரண தட்டை தர, அந்த கோபத்தில் அவள் வெளியேறுவதாக செல்லும் கதை, இப்படி முடிகிறது.

ஆயாசத்துடன் தரையில் சாய்ந்தாள், கண்களை மூடி கொண்டாள். இப்போது தெரிந்தது காளியின் முகம் அல்ல, வீட்டுக்கார அம்மாளின் பிள்ளையின் முகம். காலையில் அவள் மீது மோதிய உடல், அவள் புருஷன் இப்படித்தான் இருந்தான் கல்யாணம் ஆன புதிதில் (லேடி)

இப்போது விடுபட்ட இடங்களைப் புரிந்து கொள்ள நாம் மொத்தக் கதையையும் மீண்டும் படிக்க வேண்டியிருக்கிறது.

ஒரு கால கட்டத்தின் கதைகளை எழுதத் தொடங்கி, என்றைக்குமான பிரச்சனைகள் சிலவற்றைத் தொட்டுச் செல்வதால் ஆதவன் ஒரு முக்கியமான எழுத்தாளர் ஆகிறார். ஆனாலும், பல சமயங்களில் ஆதவன் சிறு சிறு விஷயங்களிலேயே முட்டி மோதி கொண்டிருப்பதாக படுகிறது. பல நுட்பமான விஷயங்களைத் தொட்டு சென்றவர், ஒரு பெரிய தீர்வை நோக்கி சென்றதாக தெரியவில்லை. ஒருவேளை மனிதனின் வெவ்வேறு பாவனைகளை அப்படியே பதிவு செய்தாலே போதுமானதென்று அவர் நின்று விட்டது போல தெரிகிறது. 

காகித மலர்கள் முன்னுரையில் அவர் சுட்டிக்காட்டியிருக்கும் பிருஹதாரண்யக உபநிஷதத்தின் வரிகளும், பாரதியாரை பற்றிய ராஜாஜி வ.ரா இடையேயான விவாதத்தை பற்றிய அவர் கருத்துக்களிலும், அவருக்கு இந்திய மரபின் மீது இருந்த தெளிவையும், ஒரு ஈடுபாட்டையும் பார்க்க முடிகிறது. அவருடைய prolonged adolescent தாண்டிய வயதில், ஒருவேளை அவர் அதைப்பற்றியெல்லாம் எழுதி இருக்கக்கூடும், ஆனால் தனது நாற்பதுகளிலேயே அவரது பயணம் முடிவுற்றது. 

“பாரதியார் தேச பக்தராக வாழ்க்கையைத் துவக்கி, கவியாக மலர்ந்து, இறுதியில் பக்குவமான வேதாந்தியாகப் பழுத்ததாக” ராஜாஜி தெரிவித்த கருத்து; இக்கருத்தை வ.ரா. எதிர்த்து, “பாரதியாரை வேதாந்தச் சிமிழில் போட்டு அடைக்க வேண்டாம்” என்று எழுதியது. இரண்டு கருத்துக்களுமே பாரதி பற்றின இரு பரிச்சயமான அணுகுமுறைகளைப் பிரதிநிதித்துவப் படுத்துபவை. ஒருவன் ஒரே சமயத்தில் தேச பக்தனாகவும் கவியாகவும் வேதாந்தியாகவும் இருக்க முடியாதா என்ன?” (புழுதியில் ஒரு வீணை முன்னுரை)

மீண்டும் ரிச்சர்ட் ஓவென்ஸ்க்கு, சில ஆண்டுகள் லண்டனின் Natural History Museum தொடங்கிய புதிதில் அதன் முகப்பில் ரிச்சர்ட் ஓவென்ஸின் சிலைதான் வைக்கப்பட்டிருந்தது. அதன் பின், டார்வின் அந்த இடத்தை எப்போதைக்குமாக எடுத்து கொண்டார். டார்வின், ஓவென்ஸ் அளவிற்கு நுட்பமாக ஒரு எலும்பை வைத்து மொத்த உயிரினத்தை கற்பனை செய்யக்கூடியவர் அல்ல. ஆனால், கிடைக்கின்ற தகவல்களை வைத்து ஒற்றை உயிரினத்தை மட்டும் பார்க்காமல், அடிப்படையாக உயிரினங்களின் பரிணாமத்தை விளக்க அவரால் முடிந்தது. மிகக் குறைவாக தெரிந்தாலும், மிக அதிகமாக புரிந்து கொண்டவர் டார்வின் என்கிறார் அறிவியல் வரலாற்றாய்வாளரான பிராங்க் சுல்லோவெ. 

ஆதவன், கிட்டத்தட்ட ஓவென்ஸ் போலத்தான், பிரம்மாண்டமான கோட்பாடுகளை முன்வைக்கவில்லை; மாறாக, அன்றாட வாழ்வின் சின்னச் சின்னத் தருணங்களுக்குள் உறைந்திருக்கும் மனித மனதின் அக உலகை, அதன் தடுமாற்றங்களையும் தனிமைகளையும், நுட்பமான கோடுகளால் தீட்டினார். ஒரு காலகட்டத்தில் நின்று, மனித இருப்பின் சிக்கலான சித்திரங்களை என்றென்றும் நம் முன் நிறுத்தியவர்.  

Exit mobile version