Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

உருவன்றியே நின்று உருவம் புணர்க்கும்

“அன்றைய தினம் நடந்தது ஒரு விளக்க முடியாத, புதிரான அனுபவம்டா, மிஸ்டிக்கல், சாதாரண அனுபவம் இல்லை. என்னால அதை எத்தனை யோசிச்சு பார்த்தாலும் பிடிக்கவே முடியல. விளக்கத்துக்கெல்லாம் வெளியே ஒன்று இருக்குதுடா…” புவனேஸ்வரன் லோகநாதனிடம் சொன்னான். 

சாயங்கால ஸ்நாக்ஸுக்கு ஹாலாபினோ மிளகாயை ரொட்டித் தூளில் தோய்த்து பஜ்ஜி போட்டு ஹாட்பேக்கில் வைத்து விட்டு, டீ போட்டு எடுத்துக் கொண்டு  பின்புறம் புல்வெளியை ஒட்டி இருந்த சேரில் உட்கார்ந்து பத்து நிமிடம் ஆகியிருந்தது. லோகநாதன் படித்துக் கொண்டிருந்தான். 

புவனுக்கு காலையில் இருந்தே முக்தாவையும், விக்கியையும் பார்க்கையில் அது பதட்டத்தினை அளித்துக் கொண்டே இருந்தது.புவன் செயற்கை நுண்ணறிவு பொறி ஒன்றில் மசாலா டீயில் ருசியை எப்படி அதிகரிப்பது எனப் பார்த்துக் கொண்டிருந்தான். 

செயற்கை நுண்ணறிவிடம் சின்ன சின்ன கேள்விகள் கேட்டு பதற்றத்தில் இருந்து மீள முயன்றான்.   அது அவனுக்குக் கொஞ்சம் சலிப்பை தந்தது. சலிப்பு தனிமையை தந்தது, தனிமை எண்ணங்களை சிதறடித்தது, சிதறி பறந்த எண்ணமோன்று அந்த நாளை ஓரு வருடம் முன்னர் நடந்ததை அசைப்போட, அதில் ஏறி இன்றைய தினத்தினை நோக்கி ஒரு பயம் வந்தது.

லோகநாதன் கையில் இருந்த ராபர்ட் சபோல்ஸ்கி எழுதிய “நடத்தை: சிறந்த மற்றும் மோசமான தருணங்களில் மனித உயிரியல்” புத்தகத்திலிருந்து கண்ணை உயர்த்திப் பார்த்தான்.  புவன்-முக்தாவின் திருமண நாள் கொண்டாடத்திற்கு வந்திருந்தான். இரவு உணவு வெளியே செல்ல இருந்தார்கள். லோகுவின் மனைவி அவர்கள் மகனை பியானோ வகுப்புக்கு அழைத்து சென்றிருந்தாள். அவள் வருகைக்கு காத்திருந்தார்கள். லோகு முக்தாவுக்கும், புவனுக்கும் பிடித்த சாயங்கால நொறுவலை செய்து கொடுத்து விட்டு தான் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் மூழ்கியிருந்தான். புவனின் உடல் அசைவும், குரல் அசைவும் அவனை நடைமுறை உலகுக்கு கொண்டு வந்திருந்தது.

நாற்காலியில் அமர்ந்திருந்த புவனின் வலதுகால் துடித்தது, அவனுடன் ஒட்டி பிறந்த இரட்டையனோ என ஐயமூட்டும் அலைப்பேசி அவனிடன் இருந்து தள்ளி அமர்ந்திருந்தது. பிலடெல்பியா நகரத்தின் வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றின் உரிமையாளர். ஐந்து வருடத்துக்கு முன்னால் கல்லூரியில் படிக்கையிலேயே பங்குச் சந்தை வணிக நிறுவனம் ஒன்றுக்குத் தலைசிறந்த அல்காரிதம் ஒன்றை எழுதி சில மில்லியன் டாலர் சம்பாதித்தவன்… என்ன சொல்கின்றான்? அவன்தானே அலாஸ்காவின் ஓடும் நதியொன்றில் ஒரு வருடம் முன்பு தலைகுப்புற விழுந்து கதறிக் கொண்டிருந்தவன். அதைத்தான் சொல்கின்றான் என லோகநாதனுக்கு தெரியும்.  

பொதுவாக அந்தச் சம்பவம் பற்றிப் பேசியதே இல்லை. புவனின் மனைவி முக்தாவுக்கே அன்று என்ன நடந்தது என முழுக்க தெரியாது. அன்றைய தினம் அவள் அவர்களுடன் வந்து சேருகையில் ஒரு சில சம்பவங்கள் நடந்து முடிந்திருந்தன. அவள் விடாமல் அன்றைய தினம் பற்றிப் பேசுவாள். அன்றைய தினம் அவள் வாழ்வில் கொண்டாட்டம், கொஞ்சம் பயம், கொஞ்சம் கண்ணீர், நிறைய மகிழ்ச்சி, அதைத் தொடர்ந்து கல்யாணம்.

ஆனால் விடுபட்ட விஷயங்களைப் பற்றி இதுவரை புவன் விரல் விட்டு எண்ணும் அளவுக்குக் கூட பேசியதில்லை. மிஸ்டிக்காக என அவன் துவங்குகையில் விரல் விட்டு எண்ணுவதில் இன்னொரு விரல் கூடுகின்றது என லோகநாதனுக்கு புரிந்தது. லோகநாதனுக்கு கல்லோ, முள்ளோ, சிவப்புக் கம்பளமோ, மலர் மெத்தையோ கால் தரையில் ஊன்றி நிற்கும் புரிதல் வந்தால் அடுத்த அடி போகலாம் என்பதில் ஸ்ரத்தை உண்டு.

முக்தாவிடம் சொல்ல முடியாத விஷயங்களைக் கூட லோகுவிடம் சொல்லுவான். லோகநாதன் மீது அந்த அளவுக்கு ஸ்ரத்தை இருந்தது.

“சில நிமிடங்கள் என் உடம்பிலிருந்து உயிர் வெளியேறி என்னை நான் பார்க்கிற மாதிரி இருந்தது…இன்றைக்கும் தூக்கத்தில் கனவில் அந்தக் காட்சிகள் வரும். விழித்து இருக்கையில் கூட கண்ணை மூடினால் அந்தக் காட்சியைத் திரும்பப் பார்க்க முடிகின்றது…”  புவன் தொடர்ந்தான்.

“புரியுது… உயிரை விட வேண்டுமென்று என தண்ணீரில் பாய்ந்திருக்கடா. அந்த அதிர்ச்சி பலமானது. சாமான்யம் இல்லை. ஆனால் உன் அனுபவம் மிஸ்டிக்கலா இல்லையா என பார்ப்பதை விட, அது உன் உடம்பிலும், மனசிலும் எப்படி இன்றைக்கு நிற்கின்றது என பார்க்கலாம்..அதை பார்த்துவிட்டல் என்ன செய்வதென நமக்கு ஒரு பிடிப்பு வரலாம்..” லோகநாதன் அழுத்திச் சொன்னான்.

புவன் கண்களை மூடினான், மூச்சை இழுத்து விட்டான். அவன் கை விரல்கள் இறுகின. நதியென எண்ணப்பெருக்கு பெருகியது. அன்றைக்கு நடந்ததை பற்றி நல்ல பிடிக் கிடைத்தால் அவனுக்கும் நல்லதே என நினைத்தான். நினைவில் பெருகி ஓடியது.

புவனின் உடல் நதியின் கொந்தளிப்பில் கரைந்தது போல அவனுக்கு உணர்விருந்தது. நீரின் வேகம் அவனை அடித்துக்கொண்டு சென்றது, உடல் முழுவதும் குளிரில் விறைத்தது. ஒவ்வொரு மூச்சும் வலியாக இருந்தது.

‘முக்தா… எல்லாம் உன் தப்பு.’ கோபம் அவன் நெஞ்சில் எரிந்தது. ‘ஏன் ஒரு முடிவு சொல்லமாட்டேன் என்கிறாய்? இப்படி நிராகரிப்பது எவ்வளவு சுலபம் உனக்கு? நான் இன்று இறந்து போனதும் என் நினைவுக்கு ஏங்குவாய், உனக்குச் சரியான தண்டனை, என் சடலம் கூட கிடைக்கப்போவதில்லை, இந்த நீரில் காணாமல் போனதை எண்ணி நீ அழுவாய்’ என முக்தாவின் மீதான எண்ணங்கள் புவனில் சலசலவென ஓடின.

லோகநாதனின் முகமும் அவன் மனதில் தோன்றியது. ‘இது என் பிரச்சனை இல்லை, நீங்க இரண்டு பேரும் பேசி முடிவெடுங்கள்’ என அவன் சொன்ன வார்த்தைகள் இப்போது எரிச்சலை ஏற்படுத்தின. ‘எத்தனை சுலபமாகச் சொல்லிவிட்டான்…தொழிலில் அவனைச் சேர்த்து இன்று ஆளாக்கியது நான்தான், உதவி எனக் கேட்கையில் விட்டு விலகி ஓடுகின்றான், தன் நண்பன் காதல் உடைந்து கைவிடப்பட்டுத் தவிக்கும்போது…இப்படிப் பேசலாமா.. நான் இல்லாமல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுச் சாகட்டும்..” எனச் சொல்லிக் கொண்டான்.’

திடீரென, அவனது கால் ஒரு கல்லில் மோதியது. கடும் வலி உடலெங்கும் பரவியது. நதி நீர் அவன் உடலைத் தாக்கி, ஒவ்வொரு அடியும் சாட்டையடி போல உணர்ந்தான். பசி வயிற்றைக் கிள்ளியது, ஏற்கனவே பல மணி நேரங்கள் உணவின்றி இருந்ததால் பசி நதியை விடப் பலமாக அடித்தது. நதியில் குதித்து தற்கொலை செய்து கொள்வது வேண்டாத வேலை எனத் தோன்றியது. இதற்குப் பதில் ஏதேனும் மாத்திரை சாப்பிட்டு இருக்கலாம், தூக்குப் போட்டிருக்கலாம்… இது உடலை மிகக் காயப்படுத்துகின்றது.. இன்னமும் எத்தனை நேரம் ஆகுமென்று வேறு தெரியவில்லை.

அவன் சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு வந்தது, ஆனால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. குளிரில் நடுங்கிய உடல், இயல்பான செயல்பாடுகளை இழந்து கொண்டிருந்தது. கண்களில் நீர் வழிந்தது, குளிரால் மட்டுமல்ல, தனிமையும் பயமுறுத்தியது. முக்தாவின் முகம் ஞாபகம் வந்தது. அவள் அழக்கூடாது என நினைத்தான். அவளைப் பார்க்க வேண்டுமென நினைத்தான்.

“யாருமே இல்லையா? யாராவது இருக்கிறீர்களா?” அவன் கத்தினான், குரல் நடுங்கியது.

திடீரென, சின்ன வயதில் அம்மா அவனை அணைத்துக்கொண்ட நினைவு வந்தது. படிக்க வந்தது, பெற்றோர் என அலை அலையாய் எண்ணங்கள். ‘அம்மா இப்போது இங்கே இருந்தால்… எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்திருப்பாள். நான் ஏன் அவர்களோடு இந்தியா திரும்பவில்லை?’

‘யாராவது… தயவுசெய்து… என்னைக் காப்பாற்றுங்கள்!’ அவன் மனம் கெஞ்சியது. கஜேந்திர மோட்சம் கதை நினைவுக்கு வந்தது – முதலையால் பிடிக்கப்பட்ட கஜேந்திரன் கடவுளை அழைத்ததும், விஷ்ணு வந்து காப்பாற்றிய கதை. சிறுவயதில் அம்மா சொன்ன அந்தக் கதை இப்போது அவனுக்கு ஆறுதல் தந்தது.

‘ஆஜானுபாஹு… ஆபத்பாந்தவா… அச்சுதா…’ என்று யானை சொன்ன வரிகள் அவன் உதடுகளில் வந்தது.

‘இது என்ன?’ தடுமாற்றத்துடன் ஒரு பாறையைப் போலத் தோன்றிய ஒரு பொருளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டான். 

“யாராவது… உதவுங்கள்!” அவன் கத்தினான். ஆனால் அவனைச் சுற்றி யாருமில்லை. மரணம் நெருங்கி வருகிறது என உணர்வு வந்தது. ‘ஏன் இந்த முடிவைத் தேர்ந்தெடுத்தேன்? ஏன் ஆற்றில் குதித்தேன்? நான் உயிர் வாழ விரும்புகிறேன்…’ அவன் மனதில் நதியின் வேகம் தாண்டி எண்ணங்கள் ஓடின.

சில நிமிடங்கள்தான் ஆகியிருக்கிறது, புவனுக்கு மொத்த ஆயுளும் நினைவுக்கு வந்து போனது, நேரக் கணக்கு தெரியவில்லை. அவன் கண்கள் மூடிக்கொண்டு வந்தன. இது போல ஒரு பிடிப்பு வாழ்க்கையில் இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என அவன் மனதுக்குப் பட்டது.

வாழ்க்கை முடிவடையும் நிமிடம் இதுவா என அவன் யோசித்த தருணத்தில், “ஹேய்! ” என்ற குரல் கேட்டது.

புவன் கண்களைத் திறந்து பார்த்தான். இரண்டு இளைஞர்கள் ஒரு சிறிய துடுப்புப் படகில் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஆரஞ்சு நிற மேற்சட்டை அணிந்திருந்தனர், அவர்களது முகங்களில் கவலை தெரிந்தது.

புவன் ஒரு பெருமூச்சு விட்டான். அவனது உடலிலிருந்து ஒரு கனம் இறங்கியது போல உணர்ந்தான். அவன் இன்னும் உயிரோடு இருக்கிறான். 

“கவலைப்படாதீர்கள்! உங்களை நாங்கள் காப்பாற்றுகிறோம்!” அவர்கள் கத்தினார்கள், படகை அவனை நோக்கி விரைவாகச் செலுத்தினார்கள்.

“என்னடா யோசனை…? குழப்பிக்கொள்ளாதே..” படகென வந்து லோகநாதனின் குரல் புவனின் சிந்தனையை மீட்டுக் கொண்டு வந்தது. ஒரு சில நொடிகள் இருக்கும், மொத்தக்காட்சியும் வந்து போன சுமை புவனேஸ்வரனின் மீது இருந்தது

“திரும்பவும்  அதே மாதிரி ஏதாவது செய்து விடுவேனா என்று பயம் வ்ருகின்றது…அன்றைக்கு மிஸ்டிக்கலாக ஒரு விசை என்னை அந்த முடிவுக்குத் தள்ளி, அதுவே காப்பாற்றி விட்டது. அதே விசை திரும்ப என் வாழ்க்கையில் வருமா?  முக்தாவையும், விக்கியையும் பார்க்கும் போது… தெரியல்லடா… ஏதோ பயமா இருக்கு.” 

“குழப்பம் அதிகமா இருந்தது எனில் ப்ரோபஷனல் உதவிக்கு போ” லோகு கவலையுடன் பார்த்தான்.

“ரொம்ப குழப்பம் என சொல்ல முடியாது… குழப்பம் இல்லைனு சொல்ல முடியாது…”  புவன் என்ன சொல்வதென்று கணக்கு போட்டுப் பார்த்தான்.

“சரி.. சொல்லு.. “ சொல்லி விட்டு ஒரு விநாடி சொல்லுவதா வேண்டாமா என யோசித்து தயங்கி தொடர்ந்தான் “நான் முக்தாகிட்ட சொல்லிவிடுவேன் என மிரட்ட விரும்பலை, அப்படி சொன்னால்  நீ என்னிடம் பேசுவதையும் நிறுத்தி விடுவாய். எது வேண்டுமானாலும், எப்ப வேண்டுமானாலும் என்னிடம் நீ  சொல்லலாம்..”  லோகநாதன் குரல் இறுகியது.

“அதில்லடா, இன்னைக்கு திருமண நாள், அந்த சம்பவம் எங்கள் நிச்சயதார்த்தம் அன்று நடந்தது. அதனால்…”

“அந்த நாள் திரும்ப, திரும்ப உனக்கு வாழ்க்கை முழுக்க கொண்டாட்டமாக வரும், அன்னைக்கு நல்லதும் நடந்துச்சு, நம்ம நினைக்காததும் நடந்துச்சு … சொல்லி விட்டு ஒரு இடைவெளி விட்டான்.

புவன் ஆமோதிக்கின்றானா என உற்றுப் பார்த்தான். புவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை…வெறுமை மட்டுமே இருந்தது. அது லோகுவுக்கு சரியாக படவில்லை. புத்தகத்தினை மூடி பக்கத்தில் வைத்தான். டீயை எடுத்து புவனுக்கு கொடுத்தான்.

“அன்னைக்கு நடந்தது மனுசங்களை மீறிய பெரும் சக்தி ஒன்றினால் என ஏன் நினைக்கிறாய்…” லோகு மௌனத்தை வார்த்தைகளால் நிரப்ப நினைத்தான்.

“நான் லாஜிக்கலான ஆள்டா. நான் வாழ்க்கையில் சம்பாதிக்க அல்காரிதம் எழுதும் ஆள்….கரெக்ட்? ஆனால் எனக்கு ஏன்னு புரியல..” புவன் கேட்டான். டீயை ஒரு மிடக்கு விழுங்கினான்.

“நீ கணக்கு போடும் மனுஷன்தானேடா, நீ கணக்கு போடும் செயற்கை நுண்ணறிவா என்ன?” லோகு கேள்வி கேட்டான்.

“அதனால”  புவன் கொஞ்சம் இடைவெளி விட்டு அடுத்த கேள்வியை முன் வைத்தான்.

“செயற்கை நுண்ணறிவுக்கு பயம் இல்லை. ஆனா நமக்கு பயம் இருக்கு” என்று சொல்லிவிட்டு, லோகு கையிலிருந்த புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டி ஏதோ தேடினான். புவன் அவன் தேடுவதைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

“சந்தேகம்தான் பயத்துக்கு வாசல். உங்க காதல் மேல வந்த சந்தேகம் பயமாயிடுச்சு. பயம் வந்தா தெளிவு போயிடும்…” என்று சொல்லிவிட்டு புத்தகத்தைப் பார்த்தான். “இங்க எழுதியிருக்கு…” மீண்டும் ஒருமுறை வாசித்து லோகு நிதானமாகத் தொடர்ந்தான்.

“மூளையின் ஒரு பகுதி எல்லா மனுசங்களுக்கும் பொதுவான மரபணுக்களை வச்சிருக்கும். பயத்தைக் கட்டுப்படுத்துற மரபணு மனுசன் மனுசனா வளருறதுக்கு முன்னாடியே கிடைச்சிருக்கும்னு சொல்றாங்க…” சொல்லி விட்டு லோகு புவனின் முகத்தினை பார்த்தான்.

“பெரிய சங்கிலி தொடர்…..” புவன் அவன் சொல்வதை ஆமோதித்தான்.

“நீயும் நானும் அந்த சங்கிலியில் ஒரு கண்ணிதானே…பயம் கடந்து நமக்கு இன்னோரு இயல்பு இருக்கு. “ஸ்ரத்தாமய அயம் புருஷ” என சொல்லுவார்கள். ஸ்ரத்தை …,அது அனுபவங்களால் நாம உருவாக்கிக்கனும்…மூளையோட இன்னோரு பகுதியை பயன்படுத்தும் ”  சொல்லி விட்டு லோகு அமைதியானான். 

“ஸ்ரத்தை.. ஸ்ரத்தை.. “ புவன் சொல்லி பார்த்துக் கொண்டான்.

“ஸ்ரத் என்றால் இதயம். தா என்றால் வைப்பது. இதயத்தில் வைப்பது… ஆனால் வெறும் உணர்வு மட்டும் இல்லை. நீ எதன்மீது ஸ்ரத்தை வைக்கிறாயோ, அது உன் உண்மையான இருப்பாக மாறுகிறது. இதயபூர்வமாக இருப்பது..”  லோகு சொன்னான்.

புவன் மேஜையில் இருந்த போனை எடுத்தான்.தொலைப்பேசியில் செயற்கை நுண்ணறிவு பொறியொன்றில் எடுத்து ஸ்ரத்தை என தேடினான். “யதா வை ஸ்ரத்ததாத்யத மநுதே நாஸ்ரத்ததந்மநுதே ஸ்ரத்ததேவ மநுதே ஸ்ரத்தா த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யேதி ஸ்ரத்தாம்” என செயற்கை நுண்ணறிவு பதில் கொடுத்த ஒன்றைப் படித்துக் காட்டினான்.

“எப்போது ஒருவர் ஸ்ரத்தை கொள்கிறாரோ, அப்போது அவர் சிந்திக்கிறார்; ஸ்ரத்தை இல்லாத விஷயத்தில் அவர் சிந்திப்பதில்லை; ஸ்ரத்தை கொண்டதில்தான் சிந்திக்கிறார்; ஆகவே,ஸ்ரத்தையை அறிந்துகொள்ள வேண்டும்.”  என அர்த்தமும் படித்தான். 

புவன்  சொல்லிக் கொண்டிருக்கையில் பின்னால் டெக்கின் கதவு திறக்கும் சப்தம் கேட்டது..பேச்சை நிறுத்தி இருவரும் திரும்பினார்கள்.

முக்தா ஒரு கையில் விக்கியை தூக்கிக் கொண்டு மறுகையில் ஒரு தட்டில் பஜ்ஜியுடன் வந்தாள். “நாங்கள் இருவர் இருக்கின்றோம். எங்கள் மீது ஸ்ரத்தை இருக்காடா……எங்களை பற்றியும் யோசிக்கனும் இல்லையா?” கிண்டலாக கேட்டாள்.

புவன் ஓடிச்சென்று அவள் கையில் இருக்கும் தட்டினை எடுத்து உணவு மேஜையில் வைத்தான். விக்கியை வாங்க கை நீட்டினான். “எப்பப் பார்த்தாலும் விக்கிக்கு பசிதான். நான் பால் கொடுத்தே ஓய்ந்து விடுவேன் போல இருக்கின்றதே….நடமாடும் மில்க் டிஸ்பென்ஸர். எனக்கு அசந்து போகாதா என்ன? சொல்லு விக்கி.. அப்பாகிட்டே போய்க்கோ.. அப்பாவை ஸ்ரத்தையா இருக்க சொல்லு” முக்தா செல்லமான குரலில் கொஞ்சிக் கொண்டே விக்கியை புவனிடம் கொடுத்தாள். புவன் வாங்கி விக்கியின் நெற்றியில் முத்தமிட்டான்.

லோகநாதன் இவள் மீது கோபப்பட்டு ஓடும் நதியில் பாய்ந்த புவனை நினைத்தான். எண்ணங்கள்தான் எத்தனை வலுவானது என நினைத்தான். எதை நம்புகின்றோமோ, அது செயலின் ஆற்றலை வழங்குகின்றது எனச் சொல்லிக் கொண்டான்.  புவன் குழந்தைக்கு சாப்பிட்ட பின்னர் ஏப்பம் வர வேண்டுமென விக்கியின் முதுகை தட்டிக் கொடுத்து கொண்டிருந்தான்.

முக்தா நடந்து சென்று டெக்கின் விளிம்பில் நின்று அதன் மரசட்டங்களால் ஆன விளிம்புகளை பற்றிக் கொண்டு புல்வெளியை பார்த்தாள். “புவன் புல்லை பார்த்தியா , பச்சை பசேல் என அழகாக இருக்கு, போன வருஷத்துக்கு இந்த வருஷம் நல்லா வந்திருக்கு. நல்லா புல் வெட்டியிருக்க….குட்ஜாப்”  .. அவள் குரலில் ஒரு பதட்ட உணர்வு இருப்பதை புவன் பார்த்தான். பேசிக் கொண்டிருப்பதை கேட்டிருப்பாளோ என நினைத்தான்.

“இந்த சீசன் நல்ல மழை.. அது பச்சையை கொடுக்குது…” லோகு சொன்னான். “முக்தா, நீ ஸ்ரத்தையை பற்றி என்ன நினைக்கற.. நீதான் நம்ம மூனு பேரில் கல்லூரியில் இலக்கியமும் படிச்சவள்.. என்ன நினைக்கற.”  லோகு கேள்வியை வைத்தான். முக்தா புவன் அமர்ந்திருந்த நாற்காலியின் அருகில் அமர்ந்து “இன்னமும் தங்கத்துக்கு ஏப்பம் வரலியா…?”  என விக்கியின் தலையில் முட்டிக் கேட்டாள். விக்கி அவன் அம்மாவை கண்டு சிரித்தான்.

“பைரனோட ”She Walks in Beauty” தெரியுமா.. “Where thoughts serenely sweet express,How pure, how dear their dwelling-place”… அப்படினு சொல்லுவார். அதுதான் ஸ்ரத்தை , இதய பூர்வமா இருக்கறது..” முக்தா புவனின் டீ கப்பை எடுத்து குடிக்க ஆரம்பித்தாள். 

“லோகு உனக்கு ஞாபகம் இருக்கிறதா..கரெக்டா 372 நாள் முன்னாடி எனக்கு புவனை ஹோட்டல் பார்க்கிங் லாட்டில் பார்த்த பொழுது இதயம் வெடித்து போனது.. அன்னைக்கு விக்கி என் வயிற்றில் இருந்தான்.. இன்னைக்கு இவன் கையில்..”  முக்தாவின் குரல் நெகிழ்ந்தது.

“இன்னைக்கும் எனக்கு கவலை இருக்கு… “ அவள் கண்கள் கலங்கின. “எக்ஸ்க்யூஸ் மீ” என எழுந்து அங்கிருந்து செல்ல கிளம்பினாள். அவளுக்கு அந்த நொடியின் வலி நெருப்பின் சூடென இருந்தது. புவனும் எழுந்தான். அவனை நெற்றியில் முத்தமிட்டு “ஒன்னுமில்லை.. கவலைப்படாதே. நான் போய் முகம் கழுவிட்டு வர்ரேன்.. பின்னாடியே ஓடி வராதே…” சொல்லி விட்டு அகன்றாள்.

“லோகு அவள் கேட்டிருப்பாளோ..” புவன் கேட்டான்.

“தெரியலடா.. அவள் அழுவதை பார்த்தால் அப்படித்தான் போல இருக்கின்றது. மைதிலி இருந்தால் சரியாக சொல்லுவாள். அவளும் இல்லையே..” லோகு  போனை எடுத்து தன் மனைவி மைதிலியை அழைக்கலாமா என நினைத்தான். அவள் இருந்தால் இதை இன்னமும் நன்றாக கையாள்வாள் என நினைத்தான். 

புவனுக்கு ஒரு நிமிடம் நிலை தடுமாறியது, அன்றைக்கு நடந்தது விபத்து என்பதையே முக்தாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதில் அன்று நடந்தது என்ன என தெரிந்தால் என்ன நினைப்பாள் என சுழலும் எண்ணங்கள் அவனை மூழ்கடித்தன. விக்கியை இறுக பற்றிக் கொண்டான். நினைவுகள் நதியென சுழன்றது.

அலாஸ்காவின் கோடைக்காலச் சூரியன் கீழே இறங்க மறுத்து, நெனானா நதியை ஒட்டி அமைந்திருந்த பாதையில் புவனும் லோகுவும் நடந்து கொண்டிருந்தனர். நீண்ட பகல் நேரம், ஆனால் இனிமையான குளிர்ச்சி காற்றில் இருந்தது. லோகுவின் முகத்தில் மறைக்க முடியாத மகிழ்ச்சி கலந்த பதற்றம் இருந்தது. இன்று மாலை நடக்கப்போகும் புவனின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நினைத்து அவன் உள்ளூர மகிழ்ச்சியை கொண்டிருந்தான், அதே நேரம் புவனிடம் சொல்ல முடியாதது மற்றும் உறுத்திக் கொண்டிருந்தது. 

புவனுக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் தர முக்தா திட்டமிட்டிருந்தாள். இந்தியாவில் இருந்து புவனின் பெற்றோர்கள் இதற்காக வந்திருந்தார்கள். முக்தா கர்ப்பமாக இருப்பது இன்னமும் புவனுக்கு தெரியாது.பேர்பேங்க்ஸில் உள்ள முக்தாவின் அண்ணனின் வீட்டில் தடபுடலாக ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. மைதிலியும், வருணும், முக்தாவும் அங்கு இருந்தார்கள். லோகுவுக்கு அதை நினைத்த பொழுதே உற்சாகமாக இருந்தது.

வழக்கமாக எலக்ட்ரானிக் உலகத்தில் இருந்தும், அலுவலக நெருக்கடிகளில் இருந்தும் டிடாக்ஸ் எடுக்க வருடம் ஒருமுறை மைதிலி, முக்தா, லோகு, புவன் எல்லாரும் முக்தாவின் ஊரான  அலாஸ்காவின் பேர்பேங்ஸிலோ , மைதிலியின் ஊரான பிரிடிஷ் கொலம்பியாவின் அபாட்பாட்டோ போய் அங்குள்ள வனப்பகுதியில் கேம்பிங் போய் நடைப்பயணம் போவார்கள். முதல் முறையாக முக்தாவும், மைதிலியும் வரவில்லை என சொல்லிவிட்டதால் தனியாக போனார்கள்.

பிலடெல்பியாவில் இருந்து பேர்பேங்ஸுக்கு வந்த பின்னர் ஹோட்டலில் இருந்த முதல் இரண்டு நாட்களும் முக்தாவின் மீதான புலம்பலை புவன் விட்டு விட்டான்.  தொழில், விளையாட்டு, வங்கிக் கடன் வாங்குவது போல வேறு பேச்சுக்கள் கூட இருந்தன. உள்ளூர் கேம்பிங் தோழர்களை சந்திப்பது என நாள் சென்றது. 

முதல் நாள் கிளம்பி நடந்து கேம்ப் சைட் போகையில்  பழையத் தோழர்கள் சேர்ந்துக் கொண்டார்கள். பழைய நண்பர்கள் முக்தாவையும், மைதிலியையும் விசாரிக்கையில்தான் அவன் முகம் மாற ஆரம்பித்தது. லோகுவே சமாளித்தான். இரவு தங்கும் பொழுது தனியே வானத்தினை பார்த்து அமர்ந்திருந்தான்.

காலையில் திரும்பி ஊருக்கு வர நடக்க துவங்கிய பொழுது கேம்பில் இருந்து இன்னமும் நான்கு, ஐந்து நபர்கள் கூட வந்தார்கள், மதியம் கடந்த பொழுது வேறு வேறு வேகம் காரணமாக புவனும், லோகுவும் மட்டும் கிட்டத்தட்ட தனியே இருந்தார்கள். சில மைல்கள் கூட வந்தவர்கள் முன்னே பின்னே இருந்தார்கள்.

“செம ஹைக்கிங்டா. ஏண்டா ரொம்ப டல்லா இருக்கே.. நான்தான் எல்லாம் சரியாயிடும்னு சொன்னேன்ல” லோகு கேட்டான்.

புவன் பதில் சொல்லவில்லை. அவன் முகத்தில் அசாதாரண வெறுமை இருந்தது. உடல் சோர்வைவிட மனச்சோர்வு அதிகமாக இருந்தது. இறுகி போய் இருந்தான். லோகுவுக்கு அவன் புலம்பல் குறைந்து இருந்தது ஒரளவு இலகுவாக இருந்தாலும், புவனின் இறுக்கம் கூடியிருந்தது போல உணர்ந்தான். அது இறுக்கத்தால் ஆனதா, தெளிவால் ஆனதா என சரியாக புரிந்துக் கொள்ள பார்த்தான்.

“நாம் எவ்வளவு நினைச்சாலும் நடக்கறதுதானே நடக்கும்…”  புவனின் விரல்கள் பையை இறுக்கி பிடித்தான். ஓடும் நெனானா ஆற்றை உற்றுப் பார்த்தான், எத்தனை வேகம்…அவனிடம் எதையோ பேசுவதை போல இருந்தது.

“புவன்… விடுடா எல்லா சரியாயிடும்? முக்தாவுக்கு என்ன பிரச்சனையோ?” லோகு கேட்டான்.

“எதுவாக இருந்தாலும்…” புவன் சாதாரணமாக எதையோ சொல்ல முயன்றான், ஆனால் அவன் குரலில் துக்கம் தொனித்தது. சொல்வதை நிறுத்திக் கொண்டான்.

லோகு தனக்குள் குழம்பினான். ‘இவனுக்கு எப்படி சொல்வது? இன்னைக்கு மாலை எல்லாம் மாறிவிடும்… இவனுக்காக இரண்டு குடும்பங்கள் ஒரு நிச்சயதார்த்த ஏற்பாடு செய்து காத்துக் கொண்டுள்ளன்.’

“முக்தா…அவ என்னைக் கல்யாணம் செய்துக் கொள்ள மாட்டேன்னு சொல்லிவிட்டாள்…எத்தனை நாளா யோசிச்சு அவளுக்கு பிடித்த மாதிரி ப்ரபோஸ் பண்ணினேன் தெரியுமா…அவள் சிரிச்சுட்டு ‘இப்ப வேண்டாம்’னு சொன்னா…என் உள்ளே ஏதோ உடைஞ்சு போச்சுடா…ஐந்து வருட கனவுடா..என் கணக்கு எப்படிடா தப்பாக போனது?” புவனின் தொண்டை அடைத்தது. லோகுவை பார்க்க விரும்பாமல் நதியை பார்த்தான். நதியின் நகர்வு ஏதோ செய்தியை அவனுக்கு எழுதிக் கொண்டிருப்பதை போல இருந்தது.

புவனின் ப்ரோபசல் கதை லோகுவுக்கு தெரியும். லோகுவின் கண்கள் விரிந்தன. “அவள் வார்த்தை என்ன? ‘இப்பொழுது வேண்டாம்’ தானே? அதுல டைமிங்தான் இஷ்யூ, நீ இல்லை…இன்னைக்கும் பார்த்தா நீங்க இரண்டு பேரும் எல்லாமே ஷேர் பண்றிங்க – வீடு, சாப்பாடு, கனவுகள்.. கண்டதையும் யோசித்து குழம்பாதே” லோகு புவனை கவனமாக பார்த்துக் கேட்டான்.

புவன் பதில் சொல்லவில்லை, நெனானாவை வெறித்துக் கொண்டிருந்தான், ஆனால் எதையும் பார்க்கவில்லை என தெரிந்தது. தன்னில் தொலைந்திருந்தான்.

“லோகு… அவள் என்னை ரிஜக்ட் செய்த பிறகு அவள் மூன்று வாரமாக அடிக்கடி போனில் யார் யாரிடமோ பேசுகின்றாள். நள்ளிரவில் எல்லாம் பேசுகிறாள்.சிரிக்கிறாள். என்னிடம் மட்டும் பேசுவதில்லை. நான் பேசினாலும் எழுந்து போய் விடுகின்றாள்.. என் முகத்தையே பார்த்து பேசுவதில்லை…” புவன் போய்க் கொண்டே இருந்தான்.

“அதெல்லாம் ஒன்றும் இல்லை. உன் கற்பனை..” லோகு அதை அப்பால் தள்ளி வைக்க நினைத்தான். முக்தா இவனுக்காக சர்பிரைஸ் நிச்சயதார்த்தம் செய்ய இந்தியாவுக்கு, பேர்பேங்ஸுக்கு என தொலைபேசியில் அழைப்பதை இவன் தவறாக புரிந்து கொண்டான் என லோகுவுக்கு தெரிந்தது.

“தொலைப்பேசியை எடுத்து பார்த்தால் கால் ஹிஸ்டரி அழிச்சு செஞ்சு இருக்கா, நேற்று நான் போய் துணியெல்லாம் எடுத்து ஹைக்கிங் போறேனு சொன்னப் பொழுது  கூட போனில் பேசுவதை கேட்டேன்.. நான் அழுது புலம்புகிறேன். அவள்  யாரிடமோ  சிரித்து பேசிக் கொண்டு இருக்கின்றாள்…” புவனின் புகார் பட்டியல் மலைப்பாம்பு இரைக்கு வயிறை விரிப்பது போல விரிந்துக் கொண்டே போனது.

“புவன்… இன்னைக்கு ஒருநாள் நேரம் கொடு, நான் அவளிடம் பேசுகின்றேன். கொஞ்ச நேரம் பேசாமல் வா?” இதெல்லாம் கல்யாணம் ஆனால் வெறும் நகைச்சுவையாக கூட தோன்றலாம் என லோகு நினைத்துக் கொண்டான். 

புவன் கண்ணில் நீர் தளும்பியது. 

லோகு கிட்டத்தட்ட அவனுக்காக முக்தாவும், மொத்த குடும்பமும் பேர்பேங்சில் காத்துக் கொண்டு இருப்பதை சொல்லி விடலாம் என முடிவு செய்தான்.”நீ அப்பா ஆக போகின்றாய் “ என்பதையும் சொல்ல நினைத்தான். கஷ்டப்பட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான். சில மணி நேரங்கள் எல்லாம் சரியாகி விடும் என நம்பினான். 

புவன் புலம்புவது துவக்கத்தில் வேடிக்கையாக இருந்தது, தேவையில்லாத நாடகத்துக்குள் புவன் நுழைவதாக லோகுவுக்கு தோன்றியது. கொஞ்சம் குரலை இறுக்கி சொல்ல நினைத்தான்.  “புவன், நீ முக்தாவை நம்பறியா? உன் காதல் மேல் ஸ்ரத்தை இருக்கா?” லோகு கேள்வி கேட்டான். 

“அவளையே சப்போர்ட் செய்..அவளுக்கு வேற யாரோ இருக்காங்க என தோணுது….” புவன் கோபமாக சொன்னான்.

லோகு தன் நெற்றியைப் பிடித்துக் கொண்டான். ஏதாவது சொல்லி சமாளிக்கனும் என யோசித்தான். தேடி வார்த்தைகளை எடுத்தான்.  “புவன்… காதலில் முதல் உண்மை பரஸ்பரமாக காதலை தவிர வேறு எதுவும் இல்லை என்ற ஸ்ரத்தை. சந்தேகம் அதன் மேலே படர்ந்தால், ஓட்டுண்ணி போல சந்தேகத்தின் பலம் காதலைக் காலி செஞ்சுடும்.” எனச் சொன்னான்.

“எனக்கும் அவளுக்கும் செட்டாகாதுனு என்பதை மறைமுகமாக சொல்லிவிட்டாள்.. நான் சாக போகின்றேன்… லோகு. என் வாழ்க்கை ஏன் இவ்வளவு சிக்கலானது? நான் உருவாக்கின கணக்குகள் வீணாக போய் விட்டது.  நான் உண்மையில் அவளைக் காதலிக்கிறேன். என் உயிரை விட அதிகமாக… இப்ப அவளால் எனக்கு உயிரே போகும் நிலை…உயிருக்கு அர்த்தமே இல்லைடா…”

லோகு அதிர்ச்சியுடன் அவனை பார்த்தான். “என்னடா சொல்ற? நீ இப்படியெல்லாம் பேசுவது தெரிந்தால் முக்தா கொன்று விடுவாள்”

“நான் சாகிறேன் லோகு..…” புவன் கண்ணீருடன் சொன்னான்.

லோகு அவனை கையைப் பிடித்தான். “புவன்! பைத்தியமா? இதெல்லாம் தவறான புரிதல்…நீங்க இரண்டு பேரும் இத்தனை நாளாக நீங்க இரண்டு உறவில் இருந்து விட்டு வேறு ஏதோ சக்தியை இழுத்தால் என்னடா அர்த்தம்.. உங்க காதல்தான் சக்தி, உனக்கு வரும் சந்தேகம் சக்தி கிடையாது..” புவனின் தோளை பிடித்து அவனை நிற்க சொன்னான்.

புவனின் கண்களை பார்த்து “என்ன பிரச்சனைனு பார்த்து சரி செய்யனும், நமக்கு ஒரு பேங்க் லோன் ரிஜக்ட் ஆனால், கொஸ்டின் வந்தால் எத்தனை வேலை செய்து அதை மீட்கின்றோம், உடனே அழுதா புலம்புகின்றோம்? சந்தேகமா படுகின்றோம்?”  சொன்னான். 

புவன் அவன் கைகளை தட்டி விட்டு நடக்க ஆரம்பித்தான். 

லோகு பல்லை கடித்துக் கொண்டான், இன்னமும் கொஞ்ச நேரத்தில் பார்க்கிங் லாட் வந்து விடும். காரில் ஏற்றி ஹோட்டலுக்கு போனால் இந்த புலம்பல் எல்லாம் முடிந்து விடும். கொஞ்சம் நேரம், கொஞ்ச தூரம்…தனக்குள் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டான்

“எல்லாம் முடிஞ்சிடுச்சு லோகு… என்னால முடியல..நான் செத்தால்தான் அவளுக்கு என் அருமை தெரியும்…நீயும் எனக்கு எந்த உதவியும் செய்யல.. நீ கிளம்புடா..” புவன் திரும்ப சொன்னதையே சொன்னான்.

லோகுவின் கோபம் பொங்கியது. நண்பனின் பிடிவாதமும், அவனுடைய பேச்சும் அவனை எரிச்சலடைய வைத்தது. “பேசாம வாடா..” லோகு குரலை உயர்த்தினான்.

“நீ காலேஜ் முடிச்சு சின்ன சின்ன ஹவுஸிங் காண்ட்ராக்ட்  எடுத்து செஞ்சுக்கிட்டு இருந்தாய்… உனக்கு கல்லூரி நண்பன் என்பதால் உதவி செய்தேன். நான் டேட் செஞ்சதால்தான் உனக்கு முக்தாவையே தெரியும். ஆனா இந்த பிரச்சனை ஆரம்பித்து ஒரு முறை கூட நீ என்னை சப்போர்ட் செய்யவில்லை, கண்மூடித்தனமாக அவளையே சப்போர்ட் செய்கிறாய்… நீ கிளம்பு.. நான் உன் கூட நடக்க விரும்பவில்லை..என் கூட நடக்கனும்னா, எனக்கு சப்போர்டா இரு. எனக்கு யாருடா இருக்கா? நான் போய் சாக போகிறேன்.”  புவன் வெடித்தான். லோகுவின் முகத்தினை பார்க்காமல் திரும்பி நின்று கொண்டான்.

இவனுடன் பேசுவதால்தான் இந்த நாடகம் வளர்கின்றது. அப்படி வளர்வது லோகுவுக்கு எரிச்சலை தந்தது.

“நான் எப்பொழுதும் உன்கூடத்தான் இருக்கேன்.,அது உனக்கு தெரியல..ரொம்ப எமோஷனலா இருக்கின்றாய்.. என்னவோ செய் போ.. நான் போறேன்..சீக்கிரம் வந்து சேரு…!” லோகு கோபத்தில் சொல்லிவிட்டு  நடக்க ஆரம்பித்தான். 

புவனின் புலம்பலை நிறுத்த அவனுக்கு எதுவும் வழி தெரியவில்லை. தான் திரும்ப பதில் சொல்வது புவனின் புலம்பலை அதிகரிப்பதாக நினைத்தான்.

“டேய் நான் சாக போறேண்டா…” புவன் கத்தினான்.

“இங்க இருந்தா நீ பண்ணற டார்ச்சருக்கு நான்தான் செத்து செத்து பிழைக்கனும். உனக்கு நான் கொடுக்கற ஹிண்டை புரிஞ்சுக்க முடியல. நான் சொல்கிற எதுவும்  உன் காதுக்கு போகலை.  இன்றைக்கு ஒரு நல்ல நாள். நான் சொல்வதை கேள். ரொம்ப நேரம் தனியாக நிற்காதே… சீக்கிரம் வா. பார்க்கிங்க் லாட் இன்னமும் அரை மணி நேரத்தில் வந்திடும். நாம ரூமுக்கு போய் குளித்து விட்டு டின்னர் போகனும்.. நமக்கு பின்னாடி இன்னோரு குரூப் வருகின்றது.. அவங்க கூட வந்திடு…”  லோகு சொல்லி திரும்பாமல் சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அரை மணி நேரம் கழித்து லோகுவின் தொலைபேசிக்கு ஒரு வீடியோ குறுஞ்செய்தி அனுப்பினான்.

“லோகு….. முக்தாவை  மிஸ் செய்யறேன்…அவள் என்னை தூக்கி எறிந்தாலும் அவளை மிஸ் செய்யறேன்….எல்லாம் முடிந்து விட்டது… என்னால் இந்த வலியைத் தாங்க முடியவில்லை… நான் போகின்றேன்… என் கடைசி வீடியோ இது… குட்பை…”

வீடியோவை அனுப்பி விட்டு ஓடும் நதியை நோக்கி நடந்து அதன் விளிம்பில் நின்றான். தன்னையும் ஆற்றையும் ஒரு புகைப்படம் எடுத்தான். நதியில் விழுந்தான்.

தண்ணீரில் விழுந்ததை நினைக்கையில் உடல் அதிர நனவுலக்கு திரும்பி வந்தான். லோகுவை பார்த்தான். லோகு ஏதோ யோசித்துக் கொண்டு இருந்தான். அவன் அங்கே இல்லை என புவன் நினைத்தான்.  என்ன யோசிக்கின்றான் என புவனுக்கு கேள்வி வந்தது. தொலைப்பேசியில் தான் கண்டெடுத்த கருத்து அவனுக்குள் எழுந்தது

 “எப்போது ஒருவர் ஸ்ரத்தை கொள்கிறாரோ, அப்போது அவர் சிந்திக்கிறார்; ஸ்ரத்தை இல்லாத விஷயத்தில் அவர் சிந்திப்பதில்லை.” புவன் தொலைப்பேசியை பார்த்து தனக்குள் திரும்பப் படித்தான். 

“லோகு யோசித்துப் பார்த்தால் அன்றைக்கும் நீ ஸ்ரத்தை பற்றிதான் சொன்னாய். எனக்கு அது செட் ஆகவில்லை. இன்றைக்கும் அதேதான் சொல்கிறாய்..”  புவன் மிகவும் தணிந்த குரலில் லோகுவிடம் சொன்னான்.  

லோகு யோசனையில் இருந்து வெளியே வந்து நிமிர்ந்து பார்த்தான்… “என்ன சொன்னாய்?  எனக்கு காதில் விழவில்லை“  என்றான்.

“நான் ப்ரபோஸ் செய்து நாம் ஹைக்கிங் போக மூன்று வாரம் ஆனது. மூன்று வாரமும் என்ன யோசித்து இருப்பேன் என நினைத்து பார்க்கின்றேன்..”  புவன் தொடர்ந்தான்

“சொல்லு..”  லோகு தன் இருக்கையில் முன் நகர்ந்தான்.

“முக்தா என்னிடம் சொன்னதை மட்டுமே யோசித்தேன், வேறு எதுவும் இல்லை. அதையே யோசித்து, யோசித்து எனக்கு வேறு யோசனையே இல்லாமல் இருந்தது.  ஒரு விதத்தில் ஸ்ரத்தை இருந்ததால்தானே அப்படி யோசித்து இருக்கேன்..” புவன் கேள்வியை முன் வைத்தான்.

“உங்க உறவில நீயும், முக்தாவும் இரண்டு பேர் இருக்கிங்க.. நீ மட்டும் இல்ல, அந்த விதத்தில் நீ பரஸ்பரம் மீது ஸ்ரத்தை வைக்கனும். நீ சொன்ன யோசித்து, யோசித்து என்பது முக்தாகிட்ட இருந்து கட் ஆப் செய்து கொண்டு உன் இஷ்டத்துக்கு முக்தா உன்னிடம் எப்படி இருக்க வேண்டுமென நினைத்தது, அது எப்படி ஸ்ரத்தையாகும்?” லோகு நிறுத்தி புவனின் முகத்தைப் பார்த்தான். “அப்படித்தானே இருந்தாய்?”

“சரிதான்..தண்ணில விழுந்ததும் உன்னை திட்டினேன், முக்தாவை திட்டினேன்….இறக்க போகின்றேன் என்றே  நினைத்தேன்” புவன் வெளியே வானத்தினை வெறித்துக் கொண்டு சொன்னான்.

“அது அப்படித்தான் வேலை செய்யும்.” சொல்லி லோகு சிரித்தான். ” இன்னோரு விஷயம் இருக்கிறது. நீ குதித்ததை நாம ஆக்ஸிடெண்ட் அப்படினு சொன்னோம், ஹாஸ்பிட்டலில் இருந்து, குடும்பம் வரைக்கும் எல்லாரும் சரினு சொல்லிட்டாங்க.., ஏன்?…” லோகு கேட்டான்.

“ஏன்?”

 “நீ குதிச்ச இடம் ஆழமில்லாத இடம், அங்கே குதித்து  தற்கொலை செய்வாங்க என கற்பனையில் கூட நினைக்க மாட்டார்கள். உன் குணத்துக்கு நீ தற்கொலை செய்யக் கூடிய ஆளுனு யாருக்கும் நினைச்சுக் கூட பார்த்ததில்லை.. அதனால்  நீ செல்பி எடுக்கும் பொழுது நடந்த விபத்து என சொன்னதும் எல்லாரும் நம்பி விட்டார்கள்”

ஆமோதிப்பாக புவன் தலையை அசைத்தான்.

“அது ராப்டிங் ஸ்டேசனுக்கு ரொம்ப பக்கம், நீ பாறைனு நினைச்சு பிடிச்சதே பாறை கிடையாது, ராப்டிங் ஸ்டேஷன் விளம்பரத்துக்கு ஸ்டேஜிங் செய்தது. நீ அதை பிடிக்கலைனா கூட யாரவது உன்னை தூக்கி இருப்பாங்க.. உனக்கு விழுந்த அடியே கொஞ்சம் சுளுக்கும், சிராய்ப்பும்தானே..”

“அசாதாரண சம்பவம் ஒன்றை சாதாரண சம்பவமா மாற்றுகிறாயா, எல்லாவற்றையும் லாஜிக் ஆக சொல்கினறாய்…” புவன் சொன்னான்.

“நீ லாஜிக்கலானவன்தானே…உனக்கு ஏன் லாஜிக் இல்லாத அசாதாரணம் தேவைப்படுது?”

“அப்படினு இல்லை..” புவன் தடுமாறினான். லாஜிக் இல்லாத விளக்கம் ஒரு பாதுகாப்பு உணர்வினை தருவது ஏன் என அவனுக்கு தெரியவில்லை.. வார்த்தைகளை துலாவினான். ஒரு மௌனத்துக்கு பின் ”பாதுகாப்பாக இருக்கு..” லோகுவிடம் சொன்னான். அது மட்டுமே அவனால் சொல்ல முடிந்தது.

“அது பாதுகாப்பா என்ன? நீ நெர்வஸாதானே இருக்க”

“அது வந்து.. அது வந்து..” எதாவது ஒரு பதில் சொல்லி விட யோசித்தான். அவன் யோசனைக்கான சொற்கள் அகப்படவில்லை. “அப்படி தோன்றியது..” என மட்டுமே பதில் சொன்னான்.

“அது பீல்குட் உணர்வு. மேலோட்டமான பாதுகாப்பு.  நாயம் ஆத்மா பலஹீனேன அப்படினு சொல்லுவாங்க. பலகீனமானவர்களுக்கு உண்மை கிடைக்காது. குழப்பம் ஒரு பலகீனம். சந்தேகத்தின் குட்டி.  குழப்பத்தில் இருந்து எடுத்த முடிவு எப்படி சரியாக இருக்கும்?. குழப்பம் எப்பவும் தப்பான பாதையை காட்டும்.. …?” சொல்லி நிறுத்தினான்.

“பர்சனலான விஷயத்தில் நீ நியாயம் சொல்ல சொல்ல அது வேற மாதிரி ஆகுதுடா..” புவன் சொன்னான். 

“பர்சனலான ஒன்றுக்கு நான் நியாயம் சொல்லலைடா… உன் குழப்பத்துக்கு நியாயம் சொல்லறேன்.. எல்லாவற்றுக்கும் நியாயம் வேண்டுமென ஊரில் சொல்வார்கள். நம்முடைய மரபில் பிரபஞ்சத்தினையே விளக்கும் ஆறு பார்வைகளிலேயே நியாயம் ஒரு தரிசனம்..வாழ்க்கையை பார்க்க புரிஞ்சுக்க ஒரு நியாயம் வேண்டும். அதுவும் எழுதப்பட்ட விளக்கப்பட வேண்டிய லாஜிக். அது முக்கியம்.  நம்மளோடது தினப்படி வாழ்வு. இங்கே இதுக்கு தேவைப்படாதா என்ன?”

புவன் பதில் சொல்லவில்லை. முக்தாவை பார்க்க நினைத்தான். அவள் வீட்டினுள் சென்று திரும்பவில்லை என்பது உறைத்தது. டெக்கில் இருந்து வீட்டுக்குள் செல்லும் வழியை வெறித்துக் கொண்டிருந்தான்.

“என்னடா..?” லோகு கேட்டான்.

“நான் போய் முக்தாவை போய் பார்த்திட்டு வருகின்றேன்..” எழுந்து கிளம்பினான்.

“இங்க விக்கியை கொடு… நீ போய் பார்த்து கூட்டிட்டு வா..” லோகு சொன்னான். விக்கியை வாங்கிக் கொண்டான். புவன் உள்ளே சென்றான்

உள்ளே வந்திருந்த முக்தா குளிர்ந்த நீரை எடுத்து முகத்தினை அலசினாள். அந்த குளிர்ச்சி தேவைப்பட்டது. புவனும், லோகுவும் பேசியதை கேட்டதில் இருந்து பதட்டமாக இருந்தது. முழுக்க கேட்கலாம் என கதவுக்கு இந்த புறம் காத்திருந்தாள்…ஆனால் அவளால் முடியவில்லை. தான்தான் காரணமோ என்ற உணர்வு அவளை தள்ளியது. விக்கியை புவனிடம் கொடுத்த பின்னர் கொஞ்சம் உணர்வினை கட்டுப்படுத்த முயன்றும் தோல்வி அடைந்தது. லோகுவின் முன்னால் உணர்வினை காட்ட வேண்டாமென நினைத்து பைரனுக்கு சென்றதும் நிற்கவில்லை. சுழலாக எண்ணங்கள் அவளை அள்ளிச் சென்றன.

 “அன்றைக்கு வேண்டுமென்றே ஆற்றில் குதித்தானா? அவனை எத்தனை லாஜிக்கலான ஆள் என நினைத்தேன்.இத்தனை உணர்வுபூர்வமாக இருக்கின்றான். இத்தனை காதல் இருந்தும் அவன் எண்ணம் ஒன்றுமே எனக்கு புரியவில்லையே..” அவள் உடல் அழுகையில் அதிர்ந்தது. கண்ணீர் முகம் கழுவ கழுவ தொடர்ந்தது. வெறும் விளையாட்டாக, காதல் ஊடலாக நினைத்து செய்தது எண்ணென்னவோ செய்துள்ளது என நினைத்தாள். புவனுக்கு தான் இன்னோரு வலியை தரக் கூடாதென முடிவு செய்தாள். விக்கியை நினைத்து தன்னை நிறுத்திக் கொள்ள முயன்றாள். கண்ணாடியில் தன்னை உற்றுப் பார்த்தாள், முகத்தில் நீர் துளிகள் சொட்டின. விக்கியை பற்றி தானறிந்த முதல் நாளை நினைத்தாள்.

அன்று காலை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். கையில் இருந்த ப்ரகனென்ஸி டிடெக்‌ஷன் இரட்டைக் கோடுகளைக் காட்டியது. உற்றுப் பார்த்தாள். இரட்டைக் கோடுகள். எப்படிச் சாத்தியம்? பாதுகாப்பாகத்தானே இருந்தோம் என நினைத்தாள். யாரிடமாவது சொல்லவேண்டும் என நினைத்தாள். அம்மாவிடம், அப்பாவிடம் இப்போதைக்குச் சொல்ல முடியாது. புவனிடம் சொல்ல நேரில் பார்க்க வேண்டும். யாரிடம் சொல்லலாம்?  அண்ணாவிடம் சொல்லலாம் என முடிவு செய்தாள். அவள் இடியைத் தலையில் போட்டால் கூட ஒன்றும் சொல்ல மாட்டான். அலாஸ்காவின் பேர்பேங்க்ஸில் நேரம் என்ன எனத் யோசித்தாள். மணி இங்குக் காலை 6 மணி, அவனுக்கு நள்ளிரவு 2 மணி இருக்கும். கொஞ்ச நேரம் கழித்துச் சொல்லலாமா?  பொறுமை இல்லை. தொலைப்பேசியை எடுத்து அழைத்தாள்.

“முக்தா என்னம்மா , இந்த நேரம், எல்லாம் ஒக்கேதானே…ஏதாவது பிரச்சனையா”  அண்ணனின் குரலில் பதட்டம் இருந்தது.

“அண்ணா, சாரி.. ஒரு நியுஸ். ப்ரகனென்சி சோதனை செஞ்சேன். இப்ப இரண்டு கோடு வந்திருக்கிறது..” முக்தா தணிந்த குரலில் குற்ற உணர்வுடன் பேசினாள்.

ஒரு சின்ன தயக்கம் அந்தப் பக்கம் இருந்தது, ஐந்து நொடிகள் இருக்கும், அவளுக்கு ஐந்து மணி நேரம் போல இருந்தது. ஆறாம் நொடி அண்ணன் ஆறுதல் குரலில் தொடர்ந்தான் “சரி உடம்பை பார்த்துக் கொள். அவன் இன்றைக்கு ப்ரப்போஸ் செய்ய போகிறான் என சொல்லியிருந்தாய்..நல்லதுதானே..”

“அண்ணா நான் என்னென்னவோ கற்பனை செய்திருந்தேன்… அவனோ டொரிட்டோ சிப்ஸ் பாக்கெட்டில் மோதிரத்தினை போட்டு ப்ரப்போஸ் செய்ய போகின்றான். அவனும் அவன் ஐடியாவும், இன்றைக்கெல்லாம் யெஸ் சொல்ல போவதில்லை. இன்றைக்கு அவனுக்கு நோ சொல்ல போகிறேன்..”

“என்னது சிப்ஸ் பாக்கெட்டா..”  அண்ணாவின் குரலில் ஆச்சரியம் கலந்த கிண்டல் இருந்தது.

“அவன் கஞ்சன் அண்ணா. எனக்கு டொரிட்டோ சிப்ஸ் பிடிக்கும், பிக்‌ஷனரி பிடிக்கும், அதனால் இன்றைக்கு கேம் நைட். விளையாட்டில் ஒரு கார்ட் “வில் யூ மேரி மீ?” அங்க என் ஸ்னாக் பவுலில் மோதிரம் வரும், அதை வைத்து ப்ரப்போஸ் செய்ய போகிறான்.”

“ஐயோ, மிகக் கேவலமா இருக்கிறதே.. இதெல்லாம் எப்படி நம்பறான். உனக்கு எப்படி தெரிந்தது?..” 

“போனவாரம்  லாண்டரி போடத் துணி எடுக்கையில் மாட்டியிருந்த அவன் கால்சட்டையை எடுத்தேன் , பாய்ந்து பிடுங்கினான், அவன் தூங்கும் போது பையை சோதனை செஞ்சேன், அதில் “வில் யூ மேரி மீ?” கார்ட் இருந்துச்சு, கடுப்பாகிப் போய் ஸ்நாக் அறையில் சிப்ஸ் சாப்பிடத் தேடி எடுத்தால், ரகசியமாக ஒரு பாக்கெட் ஒளித்து வைத்திருந்தான். அதில் கையை விட்டுப் பார்த்தால் மோதிரம் இருந்துச்சு..இன்றைக்கு புதன்கிழமை கேம் நைட்.. அதான் செய்வான்”

“தீனி பண்டாரம். நல்ல வேளை, சிப்ஸ் சாப்பிடற அவசரத்தில் நீ மோதிரத்தை விழுங்கவில்லை. அந்த ப்ரப்போஸ் செய்வது எமர்ஜென்சி ரூமுக்கு போய் இருக்கும், மோதிரம் எனிமா கொடுத்து எடுக்கிற மாதிரி ஆகியிருக்கும்..” தூக்கக் கலக்கத்திலும் அண்ணன் சிரித்தான்.

“அண்ணா, ப்ரபோசல், என்கேஜ்மெண்ட் எல்லாம் பேர்பேங்ஸில் வச்சுக்கலாம்.இந்த தடவை நான் ஹைக்கிங்க் போக முடியாது, புவனும், லோகுவும் போறாங்க…நான் மைதிலியோட நம்ம வீட்டுக்கு வர்ரேன்…அவன் ஹைக்கிங் போய்ட்டு பேர்பேங்க்ஸ் வரும் பொழுது சர்பிரைசிங்காக செய்வோம்.”  முக்தாவின் குரலில் அண்ணனிடம் சொல்லிய நிம்மதி இருந்தது.

“சரிடா கண்ணா… கவலைப்படாதே, நான் அவங்க பெற்றோரிடம் பேசறேன், அவங்களையும் இங்க வர சொலகின்றேன், இங்க ஏற்பாடு செய்யறேன். இனி உடம்பைப் பத்திரமாக பார்த்துக் கொள். நமது அம்மா,அப்பாவிடம் நான் சொல்லிக் கொள்கின்றேன். நீ பேசி சண்டை வளர்க்காதே… கல்யாணமும் வரும் மாசத்தில் முடித்து விடலாம்.”

“சரி அண்ணா,. உனக்கு ஒன்னும் கோபம் இல்லையே…”

“முக்தா, நான் என்ன சின்ன குழந்தையா..,, நீங்க இரண்டு பேரும் மூன்று வருடமாக ஒன்றாக இருக்கிங்க. கல்யாணம் செய்ய நோ சொல்லறிங்கதான் இரண்டு குடும்பத்துக்கும் கவலை. இந்த நியுஸ்னாலா எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடும். எல்லாம் நல்லதுக்கே. உடம்பை பார்த்துக்க.ரொம்ப உடலை படுத்திக்காதே..” அண்ணா ஆறுதலாக சொன்னான்.

அன்றைக்கு இரவு புவன் கல்யாணம் செய்து கொள்வோமா என சிப்ஸ் பாக்கெட்டில் இருந்து மோதிரமும், பிக்ஷனரி கார்டும் கொடுத்து கேட்டப் பொழுது  “இப்ப வேண்டாம்” என முக்தா சொன்னதும் புவன் கிட்டத்தட்ட அழுது விட்டான். கோபத்தில் பேசவும் முடியவில்லை, வீட்டுக்கும் வரவில்லை. முக்தா அன்றைக்கு இரவு மகிழ்ச்சியில் அழுதாள்.. தனியாக இருந்தாள். அவள் கூட புவன் என்றும் இருப்பான் என மகிழ்ந்து இருந்தான். வயிற்றிலும், மனதிலும். நினைத்துச் சிரித்தாள்.

தன்னையறியாமல் கண்ணாடியில் வந்த கண்ணீர் துளிகளை தாண்டிய புன்னகை அவளை மீண்டும் நனவுக்கு கொண்டு வந்தது. கண்ணாடியில் அவளை பார்த்துக் கொண்டே துளைத்துக் கொண்டு நினைவு சுழலுக்குள் சென்றதை உணர்ந்தாள், புவனின் எண்ணம் மீட்டுக் கொண்டு வந்த பொழுது. வெளியில் கதவின் அருகே புவன் நிற்பதை உணர்ந்தாள்.. முழு ஆற்றலையும் கொண்டு புவனுக்கு ஆறுதலாக இருக்க உணர்வினை திரட்டினாள். கண்ணீரும், புன்னகையும் கலந்து உதவியது.

“என்னை மன்னித்துவிடு முக்தா.. உன்னிடம் சொல்லியிருக்கனும்…” புவன் குரல் தாழ்ந்தது. கதவின் வெளியே நின்றிருப்பதா, உள்ளே வருவதா என குழப்பம் இருந்தது.

“பரவாயில்லை புவன்.நீ சொல்லவில்லையென வருத்தம் இல்லை, ஆனால் சொல்லியிருந்தால் உன் கூட இருந்திருப்பேன். ஒரு சப்போர்ட்டா இருந்திருப்பேன். தனியாக இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கின்றாய்.. நான் கூட இருந்தும் ஒரு உதவி கூட செய்ய முடியவில்லை..” ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டாள். அவன் ஒரு நான்கு, ஐந்து அடி தள்ளி இருந்து இருப்பான். அவளுக்கு வெகுதூரம் போல இருந்தது. அவனை அணைத்துக் கொண்டதும் அவனுள் புதைந்து போக வேண்டுமென நினைத்தாள்.

புவன் “எனக்கு எப்படி இதை உன்னிடம் சொல்லனும்னே தெரியலப்பா. அதனால்தான் சொல்லவில்லை. எதுக்கு இப்படி செஞ்சேனு என்னால காரணமே கண்டுபிடிக்கமுடியவில்லை.. ஏதோ மிஸ்டிக்கலான சக்தினு சொல்ல நினைச்சேன்…அதில்லை..” புவன் கண்களில் இருந்து நீர் அவள் தலையில் இறங்கியது.

“நம்ம காதல்தான் மிஸ்டிக்கல், நீ குதிச்சது முட்டாள்தனம். உனக்கு முட்டாளாக இருக்க பிடிக்காது. அதான் சொல்லலை. திரும்ப இப்படி இருக்காதே.. ஏதாவது ஆயிருந்தா நானும், விக்கியும் உன்னை ரொம்ப மிஸ் பண்ணியிருப்போம்” சொல்லி விட்டு அவன் தோளில் ஒரு குத்து விட்டு திரும்ப அணைத்துக் கொண்டாள்.

“ஏன் என் ப்ரோப்சலுக்கு அப்புறம் பார்க்கலாம் சொன்னாய்?…” புவன் கேட்டான். அவள் முகத்தினை இரு கைகளால் இழுத்து பிடித்து, கண்களை உற்று நோக்கினான்.

“நீ பெரிய அல்பம்டா… எவனாவது டொரிட்டோ சிப்ஸில் ப்ரோபோஸ் செய்வானா…உன் லக் நான் உனக்கு நோ சொல்லலை, அப்புறம் பார்க்கலாம் சொன்னேன்..”  அவள் சொன்னாள்.  கண்ணீருக்கு மத்தியில் அவள் பதில் அழகாக இருந்தாக புவன் நினைத்தான். அவள் இதழ்களில் முத்தமிட்டான்.

இதழை ஒரு மயிரிழை நகர்த்தி “அவ்வளவு மோசமா?..” என கேட்டான்..

“ஆமாம். நீ மோசம்” அவள் கண்ணீர் நிற்கவில்லை, ஆனால் புன்னகையும் அதிகமானது என புவன் நினைத்தான்.

“கீழே லோகு இருக்கான்…” முக்தா சொன்னாள். அவன் கையில் இருந்து சிறிது பின்னகர்ந்தாள்.

“இருக்கட்டும்..அவனுக்கு புத்தகம் இருக்கு, அவனை பார்த்துக்க விக்கி இருக்கான்..” புவன் சொன்னான்.

“லோகுவுக்கு நான் நன்றி சொல்லனும். உன்னையை பத்திரமா பார்த்துக்கிட்டான்….” அவள் சொன்னாள். புவன் பேசவில்லை, அவள் இடைகளில் இருந்த கை அவளை இன்னமும் அருகில் வா என இழுத்தது. அவள் அருகணைந்தாள்.  “நீ இம்பல்சிவ் ஆன ஆளாகவும் இருக்கிறாய்….நான் உன்னை அப்படி பார்த்ததே இல்லை…அப்படி நடந்ததை நினைச்சால் கவலையா இருக்கு…”  முக்தா சொன்னாள்

“பயந்திட்டேன்..” புவன் முணுமுணுத்தான்.

“சந்தேகம் பயத்தின் வாசல் அப்படினு லோகு சொன்னான்…அதுபடி பார்த்தால் ஸ்ரத்தைதான் பரஸ்பரத்தின் வாசல். …” ” என்றாள் முக்தா.

“ம்.”  என்றான். நீண்ட மவுனம் இருந்தது. அவனை அணைப்பில் இருந்து விட முக்தாவுக்கு தோன்றவில்லை. இருக்கும் நேரமெல்லாம் இப்படி பிடித்திருக்க நினைத்தாள். அவன் கண்கள் மூடி அவள் தலையில் தன் முகத்தினை சாய்த்துக் கொண்டான்.

“இனிமேல் எதுவானாலும் என்கிட்ட சொல்லி விடு…”  முக்தா கேட்டாள்

“ம்.” புவன் கண் கலங்கியது. “முக்தா..” அழைத்தான்

அவள் பதில் சொல்லவில்லை. அவள் தலை சொல் என அவன் நெஞ்சில் அலைந்தது.

“சொல்லாமல் இருந்தால் உனக்கும், விக்கிக்கும் பாதுகாப்பு என நினைத்தேன்..” என்றான்.

அவன் கண்களை நோக்கினாள். அவன் இமைத் தாழ்த்தினான், கைகளால் அவன் முகத்தினை நிமிர்த்தி இமைகளை திறக்க செய்து  உற்று சில கணம் பார்த்தாள். “நான் இருக்கின்றேன்..”  என சொல்லி அவன் முகத்தினை தன்னை நோக்கி இழுத்தாள்.. அவன் இதழ் அருகே “ஸ்ரத்தை..” என முணுமுணுத்தாள். முக்தா அவன் இதழ் தேடி அடைந்தாள். அவளின் மென்மையான இதழ் அவனுக்கு அடைக்கலம் தந்தது.  அவன் உள்ளத்துள் சொல்ல முடியாத ஒன்று  மெல்ல அதிர்ந்ததை உணர்ந்தான். “ஆஜானுபாஹு… ஆபத்பாந்தவா… அச்சுதா…’ என்ற காட்சி அவனுள் திரண்டது. எழுத்தாகி, சொல்லாகி உதடை நோக்கி வந்தது… “முக்தா..” என்றானது.

Exit mobile version