Site icon சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

டாங்கோ : ஓர் அறிமுகம்

ஒரு புத்தகத்தைப் பார்த்தவுடன் அதன் தலைப்பிற்காக வாங்குவது என்பது மிகவும் அரிதான ஒன்று.  Love at first sight. அப்படித்தான் டாங்கோ நாவல் வாங்கப்பட்டது. டாங்கோ என்பது ஆண், பெண் இருவரும் ஆடும் ஜோடி நடனம். இது அர்ஜெண்டினா,  உருகுவே நாடுகளின் பிரபலமான நடனம்.

“மகிழ்ச்சியான காட்சிகள் அரங்கேறும் மேடையாகவே றாம்ப்லாவைக் கண்டான்” என்ற  நாவலின் முதல் வரிக்கும்,  ”பிரபஞ்சமே உன்னை ஆரத்தழுவிக் கொள்கிறேன்” என்ற  கடைசி வரிக்கும் இடைபட்ட 184 பக்கங்களில் ஒரு மகத்தான நாவலை குணா கந்தசாமி எழுதியிருக்கிறார் என்று சொல்வது இந்த நாவலுக்கு வாசகனாக நான் கொடுக்கும் ஒரு Royal Salute .

 இன்றைய நாவல் என்பது நவீன அடுக்கங்கள் போல் உயரமாகவும்,  TMT முறுக்குக் கம்பிகள் போல் திருகிய நடையில் இருக்க வேண்டும் என்ற புதிய சட்டதிட்டங்களை புறங்கையில் தள்ளிவிட்டு ஒரு பறவையின் இறகு போல் மிகவும் லேசாக,  அதே நேரத்தில் அதன் அழகும்,  நேர்த்தியும் குறையாமல் உயரேப் பறக்கிறது “டாங்கோ”.

நினைவு தெரியும் முன்பே தாயையும்,  தந்தையையும் இழந்த,  மாமாவால் வெறுமென வளர்க்கப்பட்டு,  ஆசிரம இல்லத்தில் தங்கி தன்னை தகவமைத்துக் கொண்ட  ஆனந்த் என்கிற ஒரு தனியனின் கதை மட்டுமல்ல. அவனின் மனசஞ்சலங்கள்,  ஆர்வங்கள்,  ஆர்வமின்மைகள்,  லாகிரி,  காதல்,  காமம் என அனைத்தையும் மிக அழகாக நேர்த்தியாக blend செய்து கவனமாக நெய்யப்பட்ட ஓர் அழகிய தூய்மையான கம்பளம் என்று சொல்லலாம். தூய்மைக்கே உரிய மென்சோகமும்,  துயரமும் இதன் உள்ளுறை தன்மைகள்.

நாவல் இரண்டு பகுதிகளகப் பிரிக்கப்பட்டுள்ளன. கதை நாயகி எனச் சொல்லத்தகுந்த சந்தியாவுக்கு முன்,  சந்தியாவுடன் என ஆனந்தின் வாழ்வியல் சம்பவங்களுக்காகத்தான் இந்த இரண்டு பாகங்கள்.

குண கந்தசாமியின்  உரைநடையில் ஒரு கவிஞனும்,  தத்துவவாதியும் வந்து கொண்டேயிருக்கிறார்கள். ஆமாம். எங்கும் தனிமையைச் சொல்ல கவிதையும்,  தத்துவமும் தான் முன்வரும் இயல்புடையவன.

உருகுவே நாட்டின் மாண்டிவீடியோவின் உள்விளிம்பில் அட்லாண்டிக் சமுத்திரமும், ரியோ தெ லா பிளாட்டா நதியும் ஒன்று கலக்கும் முகத்துவாரத்தின் கரையில் நீண்டிருக்கும் றாம்ப்லாவில் அவன் வசிக்கும் பொசிட்டோஸ் பகுதியில் கணினி விசைப்பலகையில் இருக்கும் இடது அடைப்புக்குறியின் வடிவத்தை ஒத்திருந்தது கடற்கரை என்ற வரிகளின் மூலம் கதைகளனின் அழகியலை அறிய முடிகிறது.

ஆனந்த் நாவலின் வெளி எங்கும் தந்தைமையைத் தேடியலைகிறான். ஆசிரமப் பள்ளியின் தமிழாசிரியர் ராகவன்,  கல்லூரி வார்டன் ஆர்.ஜெ.எஸ்,  அலுவலக ஆசான் எம்.கே,  அவன் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளரான டாக்டர்,  ஆளரவமற்ற கடற்கரையில் எதேச்சையாக சந்தித்த மத்தியாஸ் எல்லோரிடமும் கிடைக்கும் பிரியத்தின் மூலம் தந்தைமையை உணர்கிறான்.

வெரோனிக்கா, சலோமி, ரொமோன் என நண்பர்கள் வந்து விலகிப் போகிறார்கள். அலுவல்,  போதையென இறுகிக்கிடக்கும் அவன் வாழ்வெனும் பாறையில் சந்தியா ஓர் அழகிய உளியென சில கல்வெட்டுக்களை இனிக்க,  இனிக்க ,  பின் வலிக்க,  வலிக்க பொறித்துப் போகிறாள்.

நாவலின் வரிகள் மழையென என் மீது பொழிந்தாலும் அதில் சில தூறல்களை மட்டும் இங்கே குறிப்பிடுவதென்பது ஆசிரியருக்கு நான் செய்யும் பதில் மரியாதை எனக் கொள்கிறேன்.

அவனுக்குள் ஆல்கஹாலின் கிடார் இசை தடதடத்து ஒலிக்கும்.

கடலின் மீது நிலவு எழும் காட்சியை வாழ்க்கையில் முதல் முறையாக கண்டான். தகத்தகாயம். பாலெனச் சுரக்கும் தகத்ததாயம். கண்களின் மீது படரும் தகத்தாயம். காமத்தையும்,  குருதியையும் கண்ட தகத்ததாயம்.

நினைவு தெரியும் முன்பே அம்மாவும், அப்பாவும் இறந்து விட்டார்கள்> ஒற்றை வரியில் முன்கதை சுருங்கி விட்டது. ஆனால் ஒற்றை வரியில் சொல்லக்கூடிய எதன் ஒற்றிற்குள்ளும் நீண்ட கதை உள்ளுறைந்திருக்கிறது.

வாழ்வில் அன்பையோ,  பிரியத்தையோ அல்லது துயரத்தையோ காட்டும் காட்சிகள் ஏதுமில்லை. தேவைகள் எளிய விதத்தில் பூர்த்தி செய்யப்பட்டு முக்கியத்துவமற்ற நீட்சியாக வளர்க்கப்பட்டான்.

அறிவு என்பது முயன்றால் எல்லோரும் சம்பாதித்துவிடக் கூடிய சொத்து.

நீ உனக்குள் இரண்டு மனிதனாக மாறிக்கொள். ஒருவன் இந்த வாழ்க்கைக் கடலை நீந்திக் கடக்க வேண்டிய லெளகீக மனிதன். அந்த லெளகீக மனிதனை ஆற்றுப்படுத்தி ஆன்மாவில் அழிக்க முடியாத கறைகள் படிவதைத் தடுத்து மட்டுறுத்தவேண்டியவன் உன்னுள் இருக்கும் இன்னொரு தூயவன்.

ஒரு மூன்றாம் உலகநாடு என்கிற எண்ணத்துடன் உருகுவேக்கு வந்திருந்தேன். தென்னமெரிக்காவின் சுவிட்சர்லாந்து என்ற பட்டத்தை இந்த நாடு ஒருகாலத்தில் தாங்கியிருக்கின்றது.

சொந்த வீடென்று ஒன்றை உணர வாய்ப்பில்லாதவனுக்கு அதன் நீட்சியாக சொந்த ஊர்,  சொந்த நாடு என்பதிலும் பிடிப்பற்ற தன்மையே இருந்தது. தான் ஒரு உலக மனிதனாக முதிர வேண்டும் என்று நினைப்பான்.

நிலத்தைக் குறித்தும்,  இடங்களைக் குறித்தும் எப்போதுமே பெரிய கற்பனைவாதம் இருந்ததில்லை. அப்படியான கற்பனாவாதம் நிலப்பிரபுத்துவ மனநிலையின் எச்சம் என்று அவனுடைய நண்பர் சொல்வார்.

ஒரு மனிதனுக்கு மட்டுமான தனிமாதிரியான துயரமென்று ஒன்று கிடையவே கிடையாது. எல்ல வகையான துயரங்களுக்கும் இந்த பூமியில் உனக்கு பங்காளிகள் இருப்பார்கள்.- வாழ்வின் தாதுக்களை உண்ணாமல் வீணடிப்பது பெரிய பாவம்.

கலாச்சாரத்தின் இடுப்பு துண்ணியை விலக்கிப் பார். உனக்கு எல்லாம் புரியும்.

பெண்ணின் மனதை கலவுவதுதான் லாகிரி.

குடும்பம் என்பது சமூக அமைப்பு. அவைகள் பாலியல் அமைப்புகள் அல்ல.

நான் எந்த வெளிநாடுகளுக்கும் போனதில்லை. இன்றைய திறந்த சந்தைக் காலத்தில் உலகத்தின் கதவுகள் திறக்கப்பட்டு வாய்ப்புகள் எளிமையாகி விட்டன. என்றாலும் என்னைப் போன்றவர்களுக்கு அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் காலம் கடந்து விட்டது- 

இன்னொரு நாட்டில் காந்தி வேறொரு மனிதனாக மாறினார். அவனுக்கும் ஒரு தாயிருந்து சத்தியங்களைக் கேட்டிருந்தால் வேறுமாதிரி இருந்திருப்பானோ?

நீ வாழ்க்கையில் வியப்பை இழக்கும் போது உன் வயோதிகம் தொடங்கி விடுகிறது.

நீ விரும்பினாலும்,  விரும்பா விட்டாலும் குருதிச்சங்கிலி மனிதர்களால் நிராகரிக்க முடியாத ஒரு கடப்பாட்டை உருவாக்குகிறது.

மிருகநிலை,  மனிதநிலை, தெய்வநிலை. தெய்வநிலை என்று சொல்வது பக்திபபூர்வ்மானது அல்ல. மனித குணத்தின் அழகை சற்றே உன்னதப்படுத்தி தெய்வநிலை என்றேன்.

ஒரு மனிதனாலே தன்னோட ஒற்றை வாழ்க்கைல உலகத்துல இருக்கிற சிறந்த அழகு அத்தனையையும் அனுபவிக்க முடியுமா?

கலைல கிடைக்கிற அனுபவமும்,  மகிழ்ச்சியும் ஒரே மாதிரியானது. இசை கேட்கிற ஒருவரால் நிச்சயமாக ஓவியத்தையும்,  கவிதையும் அணுகமுடியும். ஏன்னா இங்கே இசையோ,  கவிதையோ, ஓவியமோ முக்கியமில்லை. சூட்சமம் மனதில் இருக்கிறது.

வாழ்க்கை என்பது மரணம் வரை வாழக்கற்றுக் கொள்வதுதான்.

கார்ப்பரேட்டில் வேலை செய்துகொண்டு கம்யூனிஸம் பேசுவது குற்றவுணர்ச்சியைத் தணித்துக் கொள்ள கோவில் உண்டியலில் காசு போடுவது போல.

குடும்பத்தில மகிழ்ச்சி மட்டுமே இருக்கும்னு சொல்லலை. ஆனா இதவிட பெட்டரான இன்னொன்னை நாம இன்னும் உருவாக்கலையே.

Happy families are all alike; every unhappy family is unhappy in its own way. –Tolstoy- அன்னா கரீனாவில். 

மரிய வர்கஸ் லோஸா வுக்கு விலோரா கொடுத்த ஓவியங்கள்

லெட் செப்பளின் இசை. 

டான் கீகாட்டே-செர்வாண்டிஸ்-காற்றாடிகளுடன் சண்டையிடுதல்  

சிமோன் தி பூவா- செகண்ட் செக்ஸ்

நெல்லியின் “ ஹாட் இன் ஹியர்”

இசைத் துணுக்குகள்,  ஓவியங்கள்,  புத்தகங்களின் பெயர்கள் வெறும் Name dropping ஆக இல்லாமல் கதையோட்டத்தில் தம்மைப் பொருத்திக் கொள்கின்றன.

அம்மா நீ இருந்திருந்தால் இப்படி உணர்ந்திருப்பேனா? நானே என்னை இடுப்பில் தூக்கியவாறு எத்தனை காலம்தான் நடப்பேன் அம்மா? களைப்பாக இருந்தது. அதனால்தான் நான் என்னை இறக்கிவிட்டு விட்ட்ஏன். இந்தப் புழுதியும்,  அழுக்கும் என்மீது படியட்டும். நான் அழிகிறேன்.

ஆனந்த் என்கிற அந்தத் தனியன் தாய்நாட்டிலிருந்து வெகுதூரத்தில் ஒரு தந்தையை அடைந்து விடுகிறான்.

எப்போதும் கண்கள் மூடிக்குனிந்திருக்கும் காந்தி நேற்று நள்ளிரவில் அவனை நிமிர்ந்து பார்த்து விட்டார்.

ஆம். காந்தியேதான் சிலை வடிவில் றாம்ப்லாவில்.

Exit mobile version