வேங்கைவனம் நாவலை முன்வைத்து ஒரு குறிப்பு
உலக இலக்கியத்தில் புலிகள் பல்வேறு உருவகங்களாகவும் குறியீடுகளாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளன. யான் மார்டெலின் ‘லைஃப் ஆஃப் பை’ நாவலில் ரிச்சர்ட் பார்க்கர் என்ற புலி ஆன்மீக உருவகமாகப் படைக்கப்பட்டுள்ளது. ரூட்யார்ட் கிப்ளிங்கின் ‘ஜங்கிள் புக்’ நாவலில் ஷேர்கான் காட்டின் அதிகார சின்னமாகத் திகழ்கிறது. வில்லியம் பிளேக் தனது ‘டைகர்’ என்ற கவிதையில் புலியை அழகுணர்வின் பிரதிநிதியாகச் சித்தரிக்கிறார். அஞ்செலா கார்ட்டரின் புலி கதையில், புலி காமத்தின் குறியீடாக வெளிப்படுகிறது.
இத்தகைய எல்லா புலி பாத்திரங்களிலிருந்தும் வேறுபட்டு, வேங்கைவனம் நாவலில் வரும் மசிலி, ‘ரத்தன்பரோவின் ராணி’ என்று அழைக்கப்படும் புலி, ஒரு தனித்துவமான இடத்தைப் பெறுகிறாள்.
மற்ற புலிகள் அனைத்தும் கற்பனையில் உருவாக்கப்பட்ட பாத்திரங்கள், ஆனால் வேங்கை வனம் நாவலின் மச்சிலி உண்மையில் வாழ்ந்த புலி. அதுவும் நாம் வாழ்ந்த காலகட்டத்திலேயே வாழ்ந்த புலி என்பது குறிப்பிடத்தக்கது. வேங்கைவனம் நாவல் வெறும் புலியைப் பற்றிய கதை தானா என்ற கேள்வியை முன்வைத்தால், ஆம்/இல்லை என்று இருபதில்களும் சொல்லலாம். புலிகள் மூலமாக வரலாறு, வரலாற்று புனைவு, போர், அதிகாரம், படிநிலை, காலனித்துவம், சூழியல், காதல், அறம், துரோகம், மனித-விலங்கு உறவு, இயற்கையின் வலிமை, இயற்கை மீதான ஆதிக்கம் போன்ற பல பரிமாணங்களை இந்நாவல் ஆராய்கிறது. மச்சிலி இப்போது வரலாற்றில் நிலைத்துவிட்டாள். அவளைப் புரிந்துகொள்வது என்பது வெறும் புலியை அறிவது அல்ல, மாறாக இயற்கை, அதிகாரம், மனித-விலங்கு உறவுகள் குறித்த ஆழமான புரிதலைப் பெறுவதாகும். உலக இலக்கியத்தில் உள்ள புலிகளின் வரிசையில் மச்சிலியின் தனித்துவம் என்னவெனில், அவள் வெறும் உருவகமோ கற்பனைப் பாத்திரமோ அல்ல. உண்மையில் வாழ்ந்த, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, பல சமூக-அரசியல் பரிமாணங்களை உள்ளடக்கிய, இயற்கையின் குரலாக ஒலிக்கும் ஒரு பாத்திரமாக அவள் திகழ்கிறாள்.
ரத்தன்பரோ கோட்டை உருவான கதை:
ஜெயந்தா சவுஹான் ஒரு மலையுச்சியை தன் கனவில் பார்க்கிறான். அந்த மலையுச்சியை அடைவதற்கான வழி தெரியாமல் தேடும்போது, காட்டில் ஒரு பழங்குடி மனிதன் அவனுக்கு நேர்கிறார், காளி கோயிலுக்குச் செல்லும் தந்தூரி மொழி பேசும் பழங்குடியினரிடம் அந்த மலையுச்சியை பற்றி விசாரிக்கிறான். ஜெயந்தா விஸ்வகர்மாவை அழைத்து வேலையை ஆரம்பிக்குமாறு சொல்கிறான். “ரணஸ்தம்பரோ” என்ற கோட்டை உருவாக்கப்படுகிறது. காலப்போக்கில் இந்தக் கோட்டை “ரத்தன்பரோ” என்று அழைக்கப்படத் தொடங்குகிறது.
இந்த இடத்தில் அவனுக்கு ஒரு தெளிவான தரிசனம் கிடைக்கிறது. “இனி இங்கு உணவுப் பஞ்சமோ, நீரின் பஞ்சமோ இருக்காது, கூக்குரல்கள் கேட்கப்போவதே இல்லை” என்று பாறை மீது படுத்துக்கொண்டு கனவு காண்கிறான். நாவலில் முதன் முதலில் புலியும் மனிதனும் சந்தித்துக் கொள்ளும் இடம் சுவாரசியமாக சொல்லப்பட்டிருக்கும்
அப்போது, “பாறை மேல் நின்ற அந்த நீண்ட உடலையும், அதன் வசீகரத்தையும் பார்த்தவுடன் உடனடியாக அச்சம் எழுந்தது. தலையை உயர்த்தி, முதுகை சற்றே தளர்த்தி, வாயைப் பிளந்தது. மறுபடியும் அந்த உறுமல். ஜெயந்தனை எச்சரிப்பது போல் இடது முன்னங்கையைக் காற்றில் அறைந்தது வேங்கை.”
பழங்குடியினரின் குல மூத்தவன் அவனிடம் இந்தக் கோட்டையின் வரலாற்றைப் பகிர்ந்துகொள்கிறார். பிருதிவி ராஜா, கோரி மொஹமது, தில்லி சுல்தான் என பல ஆட்சியாளர்கள் கோட்டையை கைப்பற்றி இருந்தாலும், “இந்தக் காட்டின் உண்மையான ராஜா வேங்கை மட்டும்தான்” என்று குல மூத்தவன் சொல்கிறான்.
ராஜபுத்திர மன்னர்கள்:
ஹமீரா சௌகான் மற்றும் போஜன் ஆகிய ராஜபுத்திர மன்னர்கள் கமல், மனத்தூர், கஜராஜ், சம்யுகதா ஆகிய நான்கு யானைகளுடன் வேட்டைக்குச் சென்றனர். வேட்டையின் போது, ஒரு பழங்குடி சமூகத்தினர் காட்டிலிருந்து புலிகளைத் துரத்திக் கொண்டு வருவார்கள். அப்போது ராஜாக்கள் புலியின் கழுத்தில் குந்தத்தை இறக்குவார்கள், பின்னர் மற்றவர்கள் வந்து ஈட்டியால் குத்திப் புலியைக் கொல்வார்கள். நாவலின் முதல் வேட்டை இங்குதான் நடக்கும். வேட்டை முடிந்து திரும்பியதும், ஹமீரா சௌகானுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கும்.
மாஹிம்ஷாவை அலாவுதீன் கில்ஜியிடம் ஒப்படைக்க முடியாது என்று ஹமீரா கூறுகிறார். சுல்தான் அலாவுதீன் கில்ஜி ஒரு லட்சம் பொற்காசுகள், ஆயிரம் யானைகள் மற்றும் தேவலா தேவியை அலாவுதீன் கில்ஜிக்கு மணமுடிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ரத்தன்பரோ கோட்டையை கைப்பற்ற முயற்சிக்கிறார். அலாவுதீன் கில்ஜி, உள்ள கான் மற்றும் தளபதி மாலிக் கபூர் ஆகியோர் கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர். கோட்டையில் தானியங்கள் இல்லை, ஏனெனில் தானியக் கிடங்கை நிர்வகிக்கும் சமணன் துரோகம் இழைத்துவிட்டான். புலி வேட்டை மூலம் அரசவைத் தளபதியாக உயர்த்தப்பட்ட ரணமல்லனும் ரதிபாலனும் சூழ்ச்சியால் சுல்தானிடம் சேர்ந்துவிட்டனர்.
இங்கு நாவலில் அறம் குறித்த மகத்தான விவாதம் ஒன்று வருகிறது
“ரஜபுத்திரர்கள் மண்ணுக்காக ரத்தம் சிந்துபவர்கள், நீ தப்பித்துக்கொள்ள வேண்டும்” என்று ஹமீரா கேட்கப்படும்போது மாஹிம்ஷா தன் பதிலைத் தருகிறார். “எங்களுக்கு அடைக்கலம் அடைந்தவர்கள் நீங்கள், உங்களுடன் நின்று போராடுவதே எங்களின் அறம்”. அதுமட்டுமல்லாது மாஹிம்ஷா தன் மனைவியையும் குழந்தையையும் கொலை செய்கிறார். அதைப் பார்த்து ஹமீரா துன்பத்தின் உச்சத்திற்குச் செல்கிறார். அறத்தை அவர்கள் இருவருமே நிலைநாட்டுகிறார்கள்.
மாஹிம்ஷா மற்றும் ஹமீரா சௌகான் ஆகியோரின் கதை, அமெரிக்க உள்நாட்டுப் போரைப் பற்றிய “தி கில்லர் ஏஞ்சல்ஸ்” நாவலில் கர்னல் ஜாஷுவா லாரன்ஸ் சேம்பர்லெயினின் வீரத்தையும் தலைமைப் பண்பையும் நினைவூட்டுகிறது. “வெற்றி பெறுவது மட்டுமல்ல, சரியானதைச் செய்வதுதான் முக்கியம். நாம் இந்த நிலத்தைக் காக்க வேண்டும், நாம் அவர்களை விட சிறந்தவர்கள் என்பதால் அல்ல, மாறாக நாம் ஏதோ ஒன்றில் நம்பிக்கை கொண்டுள்ளோம், போராடத் தகுந்த ஒன்று” என்பது போன்ற கருத்துக்கள் இடம்பெறுகின்றன.
அரண்மனை ராணிகள் அனைவரும் தடாகத்தில் விழுந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள். ராணி ரங்கா தேவியின் அருமை மகள் தேவலா தேவியும் தற்கொலை செய்கிறாள். ஹமீரா சௌகானின் ராஜபுத்திர வீரம் நாவலின் பிற்பகுதியில் வெளிப்படுகிறது. இப்பகுதியில் வீரன் உத்தம் சிங்க் குறித்த கருத்தும் முக்கியமானது. ஜோகி மஹால் பகுதியில், ராதாபாய் என்ற நாட்டியக்காரி பேரழகியாக இருப்பாள். அவள் மதில் மேல் நாட்டியம் ஆடுவாள், அவள் கில்ஜியின் படையை ஏளனம் செய்வதுபோன்றும், தாங்கள் எதற்கும் அஞ்சமாட்டோம் என்பதை அறிவிப்பது போன்ற ஒரு அறைகூவல் . கில்ஜியின் படையில் சிக்கிக்கொண்ட உத்தம் சிங் என்ற வில்வீரன், கில்ஜியின் ஆணையால் எதிரில் இருக்கும் மலை மீதிருந்து அம்பு ஏவுவான். அவள் மதிலிலிருந்து விழுவாள். பின்னர் பார்க்கும்போது, அவள் அவனது காதலியாக இருப்பாள்.
முகலாய புலி வேட்டையும் அதன் பரிமாணங்களும்
முகலாயர்கள்தான் புலி வேட்டையில் முதன்முதலில் துப்பாக்கியைப் பயன்படுத்தினர். முதல் புலி வேட்டையை ஜஹாங்கிர் குதிரை மீது அமர்ந்து நடத்துவார். அவர் புலியை நோக்கிச் சுடும்போது, அந்தப் புலி வெகுண்டெழுந்து காவலாளிகளைத் தாக்கும். அப்போது ஷாஜஹான் (அவரது மகன்) ஒரு வாளால் அந்தப் புலியின் தொடையில் வெட்டிவிடுவார். நாவலின் இந்தப் பகுதி பல பரிமாணங்களில் நடக்கும். உறவுகள், போர், தந்தை-மகன் பாசம், காதல், மகனுக்கு அளிக்கும் தண்டனை போன்றவற்றுடன், சுப்திரி என்ற தாய்ப்புலி என்ற ஒரு முக்கியமான பாத்திரமும் இடம்பெறும். இந்தப் பகுதியில் பல உறவுகள் சித்தரிக்கப்படுகின்றன: அக்பர்-ஜஹாங்கீர் உறவு, ஜஹாங்கீர்-ஷாஜஹான் உறவு ஜஹாங்கிர்-குஷாரோவின் (முதல் மகன்) பகை, சலீம் (ஜஹாங்கிர்)-அனார்கலி காதல், ஜஹாங்கிர்-நூர்ஜஹானின் காதல் நூர்ஜஹான் – ஒரு பெண் புலியைப் போல, கிட்டத்தட்ட இந்தியாவை ஆண்ட பெண்புலி. ஜஹாங்கிர்-நூர்ஜஹானுக்கும் இடையேயான காதல் கதை இந்த நாவலில் முக்கிய அம்சமாக சித்தரிக்கப்படுகிறது. முகலாயர்கள் கதையின் தொடக்கத்தில் சாஜகான் வேட்டையாட செல்லும்போது சுப்திரியின் குட்டிகளை தன்னுடன் எடுத்துகொண்டு வந்துவிடுவார். சுபத்திரி சாஜஹானை பின்தொடர்ந்து அந்த குட்டிகளை மீண்டும் அவரிடம் பெற்றுவிடும். நூர்ஜஹானும், சுபத்திரிக்கும் ஒரு தொடர்பு இருப்பது போன்ற அந்த நாவலில் தென்படும்.நாவலில் சுப்திரி என்ற தாய்ப்புலி ஒரு சக்திவாய்ந்த குறியீடாக உருவாகிறது. அவள் தன் குட்டிகளை மீட்பதற்காக ஷாஜஹானைப் பின்தொடரும் காட்சி, பேரரசு முழுவதும் தன் செல்வாக்கைப் பரப்பும் நூர்ஜஹானின் முயற்சிகளுக்கு இணையானதாகக் காட்டப்படுகிறது. இரண்டுமே தாய்மையின் வலிமையையும், தங்கள் குடும்பத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தையும் குறிக்கின்றன. வேட்டைக்காடுகளில் உள்ள சுப்திரியும், அரண்மனை அரசியலின் சிக்கலான சூழலில் நூர்ஜஹானும் ஒரே மாதிரியான போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
முகலாய வம்சத்தில் புலி வேட்டை ஒரு அரச மரபாகவும், வீரத்தின் அடையாளமாகவும் கருதப்பட்டது. இந்தப் புலி வேட்டைகள் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அரசியல் சதித்திட்டங்கள், ஆட்சி அதிகாரப் போட்டிகள், மற்றும் குடும்ப உறவுகளின் சிக்கலான வலைப்பின்னலின் பிரதிபலிப்புகளாகவும் இருந்தன.
அமெரிக்கர்களின் வேட்டை:
மிச்செல் டெக்சாஸில் ஒரு பெரும்பண்ணைக்காரனாக இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் குடும்பத் தொழிலே குதிரைக்கு லாடம் அடிப்பது தான். அவர் பெருமையுடன், “ஆயிரக்கணக்கான காட்டெருமையை (பைசன்) கொன்றுவிட்டோம்” என்று கூறுவார். இந்தப் பகுதியில் உணர்ச்சிகரமான ஒரு சம்பவம் இடம்பெறுகிறது, அதில் புதூர் என்ற பழங்குடி இளைஞனும் அவனது மனைவி வேங்கியும் முக்கிய பாத்திரங்களாக இருக்கிறார்கள். மிச்செலும், ஜோயலும் நடத்தும் ஒரு புலிவேட்டையில், புலியை சுட்டவுடன் அது புதருக்குள் சென்று மறைந்துவிடும். பின்பு புதூர் என்ற இளைஞன் மீது பாய்ந்து அவனை முகத்தில் கடித்து கொன்றுவிடும். அவன் இறக்கும் போது, அவன் மனைவி நிறைமாத கர்ப்பிணி. ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், எந்த புலிவேட்டையிலும் வேட்டையாடுபவர்கள் யாருமே இறப்பதில்லை. கீழிருந்து வேலை செய்யும் களப்பணியாளர்கள் மட்டுமே உயிரிழக்கிறார்கள். மார்த்தா-மிச்செல் உரையாடலில், அமெரிக்க உள்நாட்டுப் போரில் நிறைய ஜெர்மானிய-அமெரிக்கர்கள் இறந்ததைப் பற்றிய குறிப்பு உள்ளது. மார்த்தா, மிச்செல்லை நோக்கி, “நீங்கள் பணம் கொடுத்து, தொட்டவுடன், யூனியனோடு சேர்ந்து கறுப்பர்களுக்கு ஆதரவாக லிபரலாகக் காட்டிக்கொண்டீர்கள். பைசனைக் கொன்றொழித்து செவ்விந்தியர்களைக் கட்டுப்படுத்தத்தானே” என்று குற்றம் சாட்டுகிறார்.
மிச்செல் டெக்சாஸ் மாநிலத்தின் பிரபலமான பண்ணையின் சொந்தக்காரர்களில் ஒருவர். இந்தப் பண்ணையானது 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் மிகப்பெரிய நிலப்பரப்பைக் கொண்டதாக இருந்தது. மிச்செல்லின் குடும்பம் குதிரை வளர்ப்பு, காட்டு மாடுகளை வளர்ப்பு மற்றும் காட்டு விலங்கு வேட்டையில் பெயர் பெற்றது. ‘லாடம் அடித்தல்’ என்பது குதிரைகளுக்குத் தீக்குறியிடும் ஒரு முறை, இது ஒரு பண்ணையின் குதிரைகளை அடையாளம் காணவும், திருட்டைத் தடுக்கவும் பயன்படுத்தப்பட்டது. மிச்செலின் குடும்பம் இத்தொழிலில் ஊரே அறிந்த நிபுணர்களாக இருந்தனர்.
பைசன் (காட்டெருமை) வேட்டையானது அமெரிக்காவின் மேற்கு விரிவாக்கத்தின் போது ஒரு முக்கிய அம்சமாக இருந்தது. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில், தென்மேற்கு பிரதேசங்களில் பல்லாயிரக்கணக்கான பைசன்கள் இருந்தன. ஆனால் 1870-1880 காலகட்டத்தில், வெள்ளை குடியேற்றவாசிகளால் பெரும்பாலானவை கொல்லப்பட்டன. மிச்செல் அடிக்கடி பெருமையுடன் தனது குடும்பம் இந்த வேட்டைகளில் பங்கெடுத்து “ஆயிரக்கணக்கான காட்டெருமைகளைக் கொன்றது” பற்றிப் பேசுவார். அவருக்கு இது ஒரு சாதனையாகத் தெரிந்தாலும், உண்மையில் இது பழங்குடி அமெரிக்கர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்கான ஒரு உத்தியாக அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்பட்டது. பைசன்கள் ஒரு முக்கிய உணவு, உடை மற்றும் தங்குமிட ஆதாரமாக பல பழங்குடி இனங்களுக்கு இருந்தன. அவற்றின் அழிவு பழங்குடி மக்களை வெள்ளை அரசின் நீதிமன்றங்களுக்கு முன் சரணடைய வைத்தது.
இந்தப் பின்னணியில்தான் புதூர் என்ற பழங்குடி இளைஞனும் அவனது மனைவி வேங்கியும் கதைக்குள் நுழைகிறார்கள். புதூர் கமாஞ்சி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர், டெக்சாஸ் மற்றும் ஓக்லஹோமா பகுதிகளில் வாழ்ந்த ஒரு வலிமையான பழங்குடி குழு. காட்டெருமைகளின் மரணம் அவரது குடும்பத்தின் வாழ்க்கையையும், பாரம்பரியத்தையும் அடியோடு பாதித்தது. அவரது மனைவி வேங்கி, ஒருவகையில் அவரது இனத்தின் ஆன்மாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறாள். அவள் தனது கணவனுக்கு தன் மக்களின் பாரம்பரியத்தையும், அவர்களது நிலத்துடனான தொடர்பையும் கற்பிக்கிறாள்.
நாவலில் வரும் ஒரு உணர்ச்சிகரமான காட்சியில், மிச்செல்லின் குழுவினர் புதூரின் கிராமத்தை தாக்கும்போது, வேங்கி குழந்தையை காப்பாற்ற முயல்கிறாள். இந்தத் தாக்குதலில் பல பழங்குடி மக்கள் கொல்லப்படுகிறார்கள், ஆனால் வெள்ளை வேட்டைக்காரர்கள் யாரும் இறப்பதில்லை. இந்த முரண்பாடு – வேட்டையாடுபவர்கள் யாரும் இறப்பதில்லை, ஆனால் களப்பணியாளர்கள் மற்றும் பழங்குடியினர் இறப்பர் என்பது – காலனித்துவத்தின் ஒரு சக்திவாய்ந்த குறியீடாக நாவலில் காட்டப்படுகிறது. இது அதிகாரத்தின் ஏற்றத்தாழ்வுகளை, முதலாளித்துவ சுரண்டலை மற்றும் இன வெறுப்பை வெளிப்படுத்துகிறது.
மார்த்தா மற்றும் மிச்செல் இடையேயான உரையாடல் இந்தக் கதையின் மையக் கருத்துக்களை வெளிப்படுத்துகிறது. மார்த்தா ஒரு அறிவுஜீவி, வரலாற்றை மாற்று கண்ணோட்டத்தில் பார்ப்பவர். அவர் மிச்செல்லை சந்திக்கும்போது, அமெரிக்க வரலாற்றின் முரண்பாடுகளை எடுத்துக்காட்டுகிறார். அமெரிக்க உள்நாட்டுப் போரில் (1861-1865) பலரும் ‘சுதந்திரத்திற்காகப்’ போராடினார்கள், ஆனால் அதே நேரத்தில் பழங்குடி மக்களைக் கொடுமைப்படுத்தினார்கள். ஜெர்மானிய-அமெரிக்கர்கள் பலர் அடிமைத்தனத்திற்கு எதிராக உள்நாட்டுப் போரில் யூனியன் படைகளில் சேர்ந்து போராடினார்கள், ஆனால் அதே சமயத்தில், அவர்களில் சிலர் பழங்குடி மக்கள் மீதான கொடுமைகளிலும் பங்கெடுத்தனர்.
மார்த்தாவின் குற்றச்சாட்டு – “நீங்கள் பணம் கொடுத்து, தொட்டவுடன், யூனியனோடு சேர்ந்து கறுப்பர்களுக்கு ஆதரவாக லிபரலாகக் காட்டிக்கொண்டீர்கள். பைசனைக் கொன்றொழித்து செவ்விந்தியர்களைக் கட்டுப்படுத்தத்தானே” – அமெரிக்க வரலாற்றின் ஒரு தீவிர முரண்பாட்டை வெளிப்படுத்துகிறது. ஒரு புறம் ஒடுக்கப்பட்ட கறுப்பினருக்கான உரிமைகளுக்காகப் போராடுவது, மறுபுறம் பழங்குடியினரை அடக்குவது என்ற இந்த முரண் டெக்சாஸ் மற்றும் தென்மேற்கு அமெரிக்க வரலாற்றில் பொதுவாகக் காணப்படுகிறது.
மிச்செல்லின் குடும்பம் பைசன்களை வேட்டையாடி பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்ததை நியாயப்படுத்த, அவர்கள் இது ‘நாகரிகத்தை’ பரப்புவதற்காகவும், ‘காட்டுமிராண்டி’ பழங்குடி மக்களை நாகரிகப்படுத்துவதற்குமான ஒரு அவசியமான செயல் என்று வாதிடுகிறார்கள். ஆனால் உண்மையில், இது வெள்ளையர்களின் நிலப்பரப்பை விரிவுபடுத்துவதற்கும், இயற்கை வளங்களை சுரண்டுவதற்குமான ஒரு நுட்பமான உத்தியாக இருந்தது.
முகலாய புலி வேட்டைகள் மற்றும் அமெரிக்க பைசன் வேட்டைகள் இரண்டும் வெவ்வேறு காலங்களிலும் கலாச்சாரங்களிலும் நடந்தாலும், அவை பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன. இரண்டுமே அதிகாரம், சமூக நிலை மற்றும் இயற்கையின் மீதான ஆதிக்கத்தின் வெளிப்பாடுகளாக உள்ளன. ஜஹாங்கிர் மற்றும் ஷாஜஹான் போன்ற முகலாய அரசர்கள் புலி வேட்டையின் மூலம் தங்கள் அதிகாரத்தை நிரூபித்தது போலவே, மிச்செல் போன்ற அமெரிக்க நிலப்பிரபுக்கள் பைசன் வேட்டையின் மூலம் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினர்.
ஆனால் இரு கலாச்சாரங்களிலும், ‘புலி’யும் ‘பைசன்’னும் சக்தி மற்றும் வீரத்தின் குறியீடுகளாக இருந்தன. அவற்றை வேட்டையாடுவது அதிகாரத்தின் ஒரு குறியீடாக கருதப்பட்டது. இரண்டு சூழல்களிலும், இந்த விலங்குகளின் அழிவு ஒரு சூழலியல் அழிவையும், அத்துடன் அவற்றை சார்ந்திருந்த மக்களின் வாழ்வாதாரத்தின் அழிவையும் குறித்தது. முகலாய இந்தியாவில் புலிகள் குறைவது காடுகளின் அழிவையும், அமெரிக்காவில் பைசன்கள் அழிவது பழங்குடி மக்களின் வாழ்க்கையின் அழிவையும் குறித்தது.
ஆங்கிலேர்களின் வேட்டை
ஜெய்ப்பூர் மஹாராணி மாயாதேவியின் அழைப்பில், அவளது லண்டன் ஆக்ஸ்போர்டு கல்லூரி நண்பர்களான சாரா மற்றும் டேவிட் ஆகியோர் வருகின்றனர். அவர்கள் .256 மான்லீசர் மற்றும் 400 ரெட்டைக்குழல் துப்பாக்கிகளை வேட்டைக்குப் பயன்படுத்துகின்றனர். இந்த வேட்டைப் பயணத்தில் மோஹினி என்ற புலியும், மொஹைதீன் என்ற யானை மேல் இருக்கும் பணியாளரும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
டேவிட் ஒரு யூதர், அவருக்கு ஒரு பெரிய பின்னணிக் கதை உள்ளது. அவர் ஜெர்மனியின் பவேரிய நகரைச் சேர்ந்தவர். ஆஸ்திரியாவின் வியன்னா பல்கலைக்கழகத்தில் படித்தவர். அவரது குடும்பத்தினர் அனைவரும் நாஜிக்களால் வதை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் டேவிட் தப்பித்து ஸ்விட்சர்லாந்தின் சூரிச் நகருக்குச் சென்றார், பின்னர் இத்தாலியின் மிலான் நகருக்குச் சென்றார். அங்கிருந்து மீன் பிடி படகுகளின் மேல் பிரான்ஸின் மார்செல் துறைமுகத்திற்குச் சென்றார். பின்னர் ஸ்பெயினின் கிழக்குக் கரையில் உள்ள லாவண்யா நகரில் பேக்கரி வேலை செய்தார். அங்கிருந்து போர்ச்சுகலின் போர்டோவிற்குச் சென்று, இறுதியாக பிரிட்டனின் போர்ட்ஸ்மவுத்தில் குடியேறினார். அங்கு ஹான்ஸ் வில்லியம் என்ற பெரியாரின் உதவியால் அவர் பெயரை டேவிட் என மாற்றிக்கொண்டார்.
போர்ட்ஸ்மவுத்தில், டேவிட் இயற்கையியல் துறையில் ஆர்வம் கொண்டு, அங்குள்ள ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்யத் தொடங்கினார். அங்குதான் அவர் சாராவை சந்தித்தார். சாரா, ஆக்ஸ்போர்டில் விலங்கியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் ஆப்பிரிக்க வனவிலங்குகளைப் பற்றிய ஆய்வில் நிபுணத்துவம் பெற்றவர். இருவரும் இந்திய வனவிலங்குகளைப் பற்றி ஆய்வு செய்யும் குழுவில் இணைந்தனர்.
ஜெய்ப்பூரில் இருக்கும்போது, டேவிட் தனது யூத பாரம்பரியத்தைப் பற்றி நினைவுகூருகிறார். நாவலின் இந்தப் பகுதியில் நடக்கும் புலிவேட்டை விறுவிறுப்பான ஒன்று, அதை நேரில் பார்பதுபோன்று உணர்வை அளிக்கக்கூடியது. சாரா மரத்தில் இருந்து புலியை சுடுகிறார். புதரினுள் மறைந்துகொள்ளும் புலியை களப்பணியாளரான முகைதீன் யானையின் மீதமர்ந்து மரக்கிளையை அசைத்துப் பார்க்கிறார். வெகுண்டெழுந்த புலி நேராக மரத்தின் மீது ஏறி சாராவை தாக்குகிறது, சாரா தன் துப்பாக்கியால் புலியை தலையில் ஓங்கு அடிக்கிறார், ஆனால் அது துப்பாக்கியை கடித்து, முன்னேறி அவளை தாக்க முற்படுகிறது. பின்பு மரத்திலிருக்கும் பரண் அந்துவிட சாராவும், புலியும் கீழே
விழுந்துவிடும்போது டேவிட் குறிபார்த்து அதை சுட்டு வீழ்த்துகிறார்.
புலிகள் காப்பகச் சட்டம்
புலிகள் காப்பகச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது, பகதூர் சிங் (Tiger Man), பிரகாலத், லட்டு, போதி போன்ற முக்கிய பாத்திரங்கள் அறிமுகமாகின்றன. அப்போது புலிகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்தது.
காப்பகத்தை நிறுவ முதலில் அங்கிருக்கும் மக்களை அகற்ற வேண்டியிருந்தது. அதற்க்கு அவர்கள் மேற்கொள்ளும் எதிர்ப்பு காட்டில் வசிக்கும் மக்கள். அவர்கள் ராணா பிரதாப் சிங்கின் வழித்தோன்றலில் வாழும் மக்கள். அக்பரிடமிருந்து தப்பித்து அங்கு வந்து குடியேறியவர்கள், பின்பு ராணா பிரதாப் சிங்கின் மறைவிற்கு பின்பு அவர்கள் வம்சாவளியினர் காட்டிலேயே தங்கிவிடும். ஆறு மாத போராட்டத்திற்குப் பிறகு காட்டை விட்டு வெளியேறினர். காட்டில் எருமையை ஒரு கயிற்றில் கட்டி வைத்து புலிகளைக் கவர்ந்து, அவற்றின் இருப்பை உறுதிப்படுத்துவார்கள். முதலில் பத்மினி புலியைக் கண்டடைவார்கள். ஒருமுறை வனத்துறையினரின் ஜீப் பழுதடைந்ததால் பதற்றமான சூழல் உருவாகும். பத்மினி பத்து அடி தூரத்தில் படுத்திருக்கும், அது இரவு பொழுது, இப்போது வனத்துறையினர் எப்படி அதன் கண்ணில் பாடாமல் செல்வார்கள் என்ற சம்பவம் நாவலில் முக்கியமானது. இத்தகைய வன ஊழியர்களின்அர்ப்பணிப்பே, ரத்தன்பரோ காட்டையும், புலியையும் மீட்டுக்கொள்ள முடிந்தது. காட்டில் சாந்தினி, பைரவி, ரஞ்சனி, நூர்ஜஹான் என்று புலிகளின் பாரம்பரியம் தொடர்கிறது.
அதுபோல் புலியை அதன் தோல், நகங்கள், அதன் மீசை முடிகளுக்காக வேட்டையாடும் ஆறு வேட்டைக் கூட்டங்கள். காசிதா வெளி, சிக்கு சிங், கண்டார் போன்றவை. ரவீந்திரநாத் மற்றும் பகதூர் சிங் போன்ற பாத்திரங்கள் அநாமதேயமாக செயல்பட்டு, அங்கிருக்கும் வேட்டைக்காரர்களைப் (poachers) பிடித்து வருகின்றனர்.
மச்சிலி – ஏன் இந்தப் பெயர்?
நாவலின் 496-ம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அதன் முகத்தில் ஒரு மீன் குறி இருந்தது. காளியின் சூலம் போல இடது கன்னத்தில் படர்ந்திருந்த தனித்த அடையாளம் காரணமாக அப்பெயர் வந்தது.
விநாயக் சிங் என்ற IFS அதிகாரியும் வனவிலங்கு படப்பிடிப்பாளரும் மச்சிலி பிறந்ததிலிருந்து இறப்பது வரை படம் பிடிக்கிறார். அவரது மனைவி டெல்லியில் இந்திய ஆட்சிப் பணியில் இருக்கிறார்.
மச்சிலி பிறந்து இரண்டு வருடங்களில் அதன் தாயான நூர்ஜஹானை விரட்டி அந்த இடத்தைப் பிடித்துக்கொள்கிறது.
மச்சிலி ஏன் உலகப்புகழ் பெற்றது?
- முதலை வேட்டை
- மனிதர்களை அது தாக்கியதில்லை. நாவலில் கூட ரத்தன்பாரோ காட்டில் உள்ள கோட்டை மீது படுத்திருந்து, கிராம மக்கள் துணி துவைப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கும்.
- அதிக குட்டிகளை ஈன்ற புலி.
- நிறைய சுற்றுலா பயணிகளை வரவேற்று நிறைய வருமானத்தை பெருக்க செய்தது.
ஒரு முறை முதலை வந்து அதன் குட்டிகளைக் குறி வைக்கும். பின்னொரு சமயத்தில் மச்சிலி ஒரு மானைக் கடித்து இழுத்துச் செல்லும். சமயம் பார்த்து வெளியே வரும் முதலையைக் கொன்றுவிடும். அவ்வேட்டையில் அதற்கு ஒரு கோரைப்பல்லும் உடைந்துவிடும். ஐந்து வயதான மச்சிலிக்கு இன்னும் பத்து வருடங்கள் வாழ வேண்டும் என்ற கவலை எழுகிறது. சுந்தரி புலி மச்சிலியை விரட்டியடிக்கும், மச்சிலி தனியாக இடம் தேடிக்கொள்ளும். பின்பு மச்சிலியைக் காணவில்லை என்று கவலைப்பட்டு, காட்டில் எருமையைக் கட்டி வைப்பார்கள். அதன் மூலம் அதன் இருப்பைக் கொண்டாடுவார்கள்.
மச்சிலியின் மரணம்:
“ஈனயா ஈனயா” என்ற துயரம் நிறைந்த அழைப்புடன் விநாயக், மைக், நவாஸ் ஆகியோர் மச்சிலியின் மரணத்தை உணர்கிறார்கள். “ஆண்வவ்வ்வ்வ்…” (ஒரு சத்தம்) “மச்சிலியின் உறுமல் காடெங்கும் எதிரொலிக்கிறது. ஓங்கிய மலையில் மோதுகிறது, கோட்டையின் உச்சியிலிருந்து கொடிகள் அசைகின்றன.”
இங்கு மச்சிலியின் சிதை எரிந்துகொண்டிருக்கிறது, அதே வேளையில் அதன் மகள் சுந்தரி ( டி-17) வேட்டையாடுகிறாள்.
நாவலின் தத்துவம்:
வேங்கைக்கு மானை இறையாக்கிய காட்டின் விதி – அறவே இரக்கமற்றது கொடுத்த காட்டின் விதி – கொஞ்சம் கருணையானது. தொடக்கத்தில் மச்சிலியை இந்த உலக இலக்கியத்தில் உள்ள புலிகளின் வரிசையில் எப்படி உருவாக்குவது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. Harmony – மேற்கத்திய தத்துவம், மேற்கத்திய இசை, அனைத்து மதங்கள், ஆன்மீகம் இவற்றை இணைக்கும் கருப்பொருள். தைத்திரீய உபனிஷத் கூறுவது போல “இசைவு இருக்குமிடத்தில், ஆன்மா இருக்கிறது. ஆன்மா இருக்குமிடத்தில், பேரின்பம் இருக்கிறது.”
வேங்கைவனம் நாவலை வாசித்து முடித்தவுடன், மச்சிலியை “harmony” (இசைவு) என்று உருவகப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் உருவாகிறது. மச்சிலியின் வாழ்க்கை இந்த இசைவின் அடையாளமாக அமைகிறது.
***
