இரண்டாம் பாகத்தை படிக்க
“மேனிலைப் பள்ளிக்கூடத்தில் படித்தபோது. ‘உன் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?’ என்று என்னை யாராவது கேட்டால்…”
“உறவில் பெரிய மனிதர், ஹெட் மாஸ்டர், பத்திரிகை நிருபர் – இப்படி ஒருவர்…”
“உடனே புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பது என்று சொல்வேன். நான் மட்டும் இல்லை, அக்காலத்தில் என் வயதில் இருந்த எந்தப் பையன் பெண்ணைக் கேட்டாலும் இதே பதில் தான்.”
“அதாவது, நிறைய சம்பாதிக்கும் வேலைகளில் ஆசை இல்லை என்று காட்டிக்கொள்ள.”
“சிலர் அப்படிச் சொல்லலாம். எனக்கு நிஜமாகவே பணத்தின் மேல் பற்று இருந்தது கிடையாது.”
சஞ்சய்க்கு அதில் சந்தேகம் இல்லை. அம்மாவின் அந்த குணத்தில் ஒரு பங்கு அவனுக்கும் இருக்கிறது.
“அப்போது… கேன்சர் பல வியாதிகளின் தொகுப்பு, பல காரணங்களால் அது உண்டாகலாம், வந்த பிறகு குணப்படுத்துவதும் எளிது இல்லை, என்று உனக்குத் தெரியாது.”
“ஊகும். தலைவலிக்கு ஆஸ்ப்ரின் மாதிரி. பத்துப் பதினைந்து வருஷம் மனம் வைத்து உழைத்தால் மருந்து கண்டுபிடித்துவிட முடியும் என்ற நம்பிக்கை.”
அப்படியொரு வாய்ப்பு கிடைத்திருந்தால் அம்மா நிச்சயம் மனம் ஒன்றி, பலனை எதிர்பார்க்காமல் அதில் ஈடுபட்டு ஓரளவு வெற்றியும் பெற்றிருப்பாள். ஆனால், அவள் தந்தைக்கே வயிற்றில் புற்றுநோய் வந்து வேலையில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன் அவர் உயிரைப் பறித்ததால், எம்.எஸ்ஸி.யை ஒரு செமிஸ்டரில் நிறுத்திவிட்டு அவர் பணி செய்த வங்கியில் சேர வேண்டிய கட்டாயம்.
தம்பி தங்கைக்கு வழிசெய்து முப்பது வயதில் அப்பாவை மணந்து, யூ.எஸ். வந்து சஞ்சயும் அவன் தங்கையும் பள்ளிக்கூடம் போகத் தொடங்கியதும், பயோகெமிஸ்ட்ரியில் எம்.எஸ். அதை வைத்து ஆராய்ச்சியில் நுழைவு மட்ட வேலை.
அவள் நிறைவேறாத ஆசையைப் பூர்த்திசெய்ய சஞ்சய். அவள் விருப்பப்படி எம்.டி., பிஎச்.டி. பட்டங்கள். நோயாளிகளைப் பார்ப்பதுடன் புற்றுநோய் ஆராய்ச்சி.
ரேவதிக்கு அந்த இரவு நீண்டுகொண்டே போனது. பத்துமணிக்குப் படுத்ததும் வந்த தூக்கம் கனவில் பயணித்த ரயில் திடுமென நின்றதால் நடு இரவுக்கு முன்பே கலைந்தது. பிறகு நினைவு நழுவுவதற்கும் பாதி விழிப்பிற்கும் நடுவில் அலைபாய்ந்த மனம்.
ஏன்?
மகளைக் கல்லூரியில் சேர்த்துவிட்டு, தனியாகத் திரும்பி வரவில்லை. அடுத்த நாள், நீண்ட பயணம் போவதாக இல்லை. அரசாங்க அதிகாரியுடன் சந்திப்பும் இல்லை. ஒருவேளை கவலைப்படும் விஷயம் ஒன்று ஆழ்மனதுக்குக் கிடைத்திருக்குமோ? அது மேல் மட்டத்துக்கு எப்போது வரும்?
ஐந்து மணி அலாரத்துக்கு முன்பே அதை நிறுத்த அலைபேசியை எடுத்தாள்.
பிப்ரவரி 14, புதன்கிழமை
ஆகா! தெரிந்துவிட்டது.
அன்று வாலன்டைன்ஸ் டே!
மருத்துவரிடம், முடிதிருத்துனரிடம் போகும் போது (உடற்குறையை முதலிலேயே சொல்லிவிட்டு), சவரம் செய்துகொள்ளும் போது (நிறைய நுரை பரப்பி ரேஸரை அழுத்தாமல் வழித்து), காய் பழங்கள் நறுக்கும்போது (கத்தியின் மேல் கவனம் வைத்து) தெருவில் நடக்கும்போது (வேடிக்கை பார்க்காமல்) எவ்வளவோ ஜாக்கிரதையாக இருந்த அஷ்வின் யாரோ செய்த தவறினால் நடந்த சாலை விபத்தில் உலோகத்துண்டு தொடையில் கீறி, இரத்தம் உறையாமல் வடிந்து…
அக்காட்சி நினைவில் தோன்றும்போதெல்லாம் அதற்கு முன்னால் சந்தோஷமாகப் போன பன்னிரண்டு ஆண்டுகளால் அதை மூடி மறைத்து…
டென்னஸி பன்னாட்டு வங்கி அழைத்த போது, புது வாழ்வு தேடவும், பத்து வயது ஐஸ்வர்யா மனதைத் தேற்றிக்கொள்ளவும் இடமாற்றம் அவசியம் என வேலையை உடனே ஏற்றுக்கொண்டாள்.
யூ.எஸ். வந்து ஐந்தாம் வகுப்பில் சேர்ந்த ஐஸி, முதல் ‘வாலன்டைன்ஸ் டே’ தினத்தில் மற்ற சிறுவர்களுடன் உற்சாகமாக வாழ்த்து அட்டைகள் பறிமாறிக்கொண்டாள். பிறகு அவளுக்கே அந்த தினம் அலட்சியம்.
அதனால் காதலர் தினம் அவளுக்குத் தொந்தரவு கொடுத்தது இல்லை.
சமையலறையில் கே-கப் நிரம்பியதும் அதைப் பாலுடன் கலக்க அலமாரியைத் திறந்தாள். கிட்டத்தட்ட காலி. முந்தைய மாலை டிஷ்-வாஷரில் பாத்திரங்களை அடுக்கினாலும் இயந்திரத்தை இயக்க மறந்துவிட்டாள். அதைச் செய்துவிட்டு அலமாரியின் கோடிவரை பார்த்தாள். இதயம் வரைந்த உயரமான கோப்பை. ஒரு கண தயக்கத்துக்குப்பின், அதில் பாலை சுடவைத்து காப்பி கலந்து, அதை மேஜைமேல் வைத்தாள். நாற்காலியில் அமர்ந்து காப்பியை சுவைப்பதற்கு முன் அந்தக் கோப்பை கிளறிய நினைவுகள்.
சென்ற ஆண்டு. காதலர் தினத்துக்கு முந்தைய ஒரு வாரம். வேலையில் இருந்து திரும்பியபோது கதவுக்கு முன்… பிளாஸ்டிக் தாளில் சுற்றிய பூச்செண்டு, எண்-கோணத்தில் சாக்லேட் பெட்டி, இதயம் அலங்கரித்த கோப்பையில் தேநீர் பாக்கெட்கள், எஸ்டே லாடர்…
ஒவ்வொன்றிலும் ஒரு அலங்கார அட்டை. அவள் அழகை ஆராதிக்கும் ஒரு ‘சீக்ரெட் அட்மைரர்’ அனுப்பியது.
யாராக இருக்கும்? ஐஸி வழியாக அறிமுகமான அவள் ஆசிரியர்கள், சிநேகிதர்களின் பெற்றோர்கள்? சக-ஊழியர்கள்? நண்பர்கள்? பஸ்ஸில் வேலைக்குப் போகும்போது அவளால் கவரப்பட்டவர்கள்? யாராக இருப்பது அவளுடைய விருப்பம்?
“யாரா இருந்தா என்ன? நீ ‘டேட்’ பண்ணற நாள் வந்துவிட்டது” என்று அம்மாவுக்கு அறிவுரை வழங்கினாள் ஐஸி. அவளுக்காக ரேவதி அதைச் செய்யவில்லை என்கிற குற்ற உணர்வு.
அந்த தினத்தில் நிதி நிறுவனத்தின் முன் அவளுக்காகப் பூச்செண்டுடன் காத்திருந்தான் அவனீஷ். ‘வீக்டே‘ முழுதாகப் பயன்படுத்தப் படுகிறதா என்பதை நிச்சயம் செய்ய, மாதத்தின் ஆரம்பத்தில் பிறகு எப்போதாவது அவன் அங்கே வருவது வழக்கம்.
“உன்னால் ஊகிக்க முடிந்ததா? ரே!”
“எனக்கு எத்தனையோ ரகசிய ரசிகர்கள்” என்று பூச்செண்டை வாங்கிக்கொண்டு புன்னகைத்தாள்.
“அதில் ஆச்சரியம் இல்லை. இன்று மாலை? ஆறு மணிக்கு?”
“மாட்டேன் என்ற பதிலுக்கு நீ இடம் வைக்கவில்லையே.”
இது புது அனுபவம்.
வேலையில் மனம் லயிக்கவில்லை. பூச்செண்டையே சுற்றி வந்தது. இன்டெர்நெட் வழியாக, இல்லை நிறுவனத்தின் பிற ஊழியர்களுடன் பேசியதில் அவள் ஒரு தனிமகள் என்பதைக் கண்டுபிடிப்பதில் அவனுக்கு சிரமம் இருந்திருக்காது. ஆனால், வயது தெரியாமல் இருக்கலாம். வங்கியின் ஒப்பந்ததாரர்களின் விவரங்களில் அவன் நாற்பதைத் தொட்டவன் என்ற விவரம் கிடைத்தது. தோற்றத்தில் இருந்து அவள் கணிப்பும் ஏறக்குறைய அது தான்.
‘இருந்தா என்ன? ஆண் பெண்ணைவிட வயசானவனா இருக்கணும்னு என்ன சட்டம்?’ ஐஸியின் குரல் ஒலித்தது.
மார்கோ போலோ உணவகம். அவர் வருகை தந்த நாடுகளின் உணவுகள். சராசரி உயரத்தை அதிகரித்த நீளக்கோடுகள் போட்ட தழைந்த பட்டு ஆடையும், பிரச்சினைகள் இல்லாமல் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட ஐஸியின் பதின் பருவம் கொடுத்த சுருக்கமில்லாத முகமும், இயற்கை நெளிவுடன் செயற்கையாக சுருள்கள் சேர்த்த கூந்தலும் ரேவதியை முப்பதுகளில் நிறுத்தினாலும் வயதை முதலிலேயே அவனுக்குத் தெரியப்படுத்துவது விளையாட்டின் விதி என நினைத்து எதிர்எதிர் நாற்காலிகளில் அமர்ந்ததும்,
“சென்ற ஆண்டு என் பெண்ணின் பள்ளிக்கூட நிறைவு விழா முடிந்ததும் அதைக் கொண்டாட இங்கே வந்தோம்” என்றாள்.
அவன் முகத்தில் மாறுதல் தெரியவில்லை.
“என் மனைவிக்கும் இது பிடித்தமான இடம். பல நாட்டு உணவுகளில் அவளுக்கு நல்ல ரசனை” என்று சாதாரணமாகச் சொன்னான்.
இப்போது, ரேவதிக்கு முகத்தைச் சாதாரணமாக வைப்பது எளிதாக இல்லை.
“அப்படியா? அவள்… இப்போது…”
“லன்டனில். அமஸானின் புதிய அலுவலகத்தை முழு செயல்பாட்டிற்குக் கொண்டுவரும் தீவிரப் பொறுப்பு. வாரத்தில் ஆறு பன்னிரண்டு மணி நேர வேலை நாட்கள். ஆறு மாதம் இப்படி அப்படி நகர முடியாது. ஆனால், வீட்டுக்கடன் தீர்ந்துவிடும்.”
அந்த இடைவெளியில் ஒரு தாற்காலிக உறவு. இன்றே, இன்னும் சிறிது நேரத்தில், என் இடத்தில் 7, 6, 5, 4, 3, 2, 1 ப்ளாஸ்ட் ஆஃப்! இளமையின் அந்திப்போதில் இருக்கும் ரேவதிக்கு அதில் ஆசை இருக்கும் என்ற அவன் கணக்கில் என்ன தவறு?
பிறகு, பணியாளன் கொடுத்த மெனு அட்டை, தேர்ந்தெடுத்த உணவின் சுவை, சமீபத்திய நெட்ஃப்ளிக்ஸ் தொடர்கள் பற்றிய பேச்சு எல்லாமே மேல் மனதில். ஆழ்மனதில் ஒரு போராட்டம். வாழ்த்து அட்டைகளுக்கும், சாக்லேட் கட்டிகளுக்கும், வாசனைக் குப்பிகளுக்கும், ஒட்டுதல் இல்லாத உடல் உறவுக்கும் மேலாக ஒன்று பெண்களுக்கு, குறைந்த பட்சம் அவளுக்கு வேண்டும். நாற்பது வயது வரை அப்பாடத்தைக் கற்காத அவனுக்குச் சொன்னாலும் அது புரியப்போவது இல்லை.
உணவகத்தில் இருந்து வெளியே வந்ததும் அவன் கன்னத்தில் இலேசான முத்தம்.
“நான் ஊபர் பிடித்துப் போய்விடுகிறேன். எல்லாவற்றுக்கும் தாங்க்ஸ், அவனீஷ்!” நிதானமாக சுமுகமாக புன்னகையுடன் சொல்லிவிட்டு அலைபேசியில் ஊபர் சதுரத்தைத் தொட்டாள்.
காப்பியைக் குடிக்கவில்லை என்பது நினைவுக்குவர கோப்பையைத் தன் பக்கம் இழுத்தாள். ஆறிப்போய் ஆடை தட்டி இருந்தது. அதைப் பார்த்துக்கொண்டே ஓராண்டு பின்னோக்கிப் போனதின் விளைவு. குடித்துவைக்கலாமா இல்லை இன்னொன்று தயாரிப்பதா?
அதற்குள், அலைபேசியில் ஒரு தகவல். எடுத்துப் பார்த்தாள்.
– – நான் எஸ். வி. ரமணா. சிங்கப்பூரில் இருந்து அழைக்கிறேன். இந்த அலைபேசியின் எண் உன் தந்தையிடம் இருந்து. ஒப்புதல் தெரிவித்தால் உரையாடலைத் தொடங்குவேன் – –
அவன் யார்? என்ற கேள்விக்குப் பதில்சொல்வது போல தந்தையின், “எழுந்துட்டியா? ரேவதி!”
“இப்பத்தான்.”
“காப்பி?”
“இனிமேல தான்.”
“எதுக்குக் கூப்பிட்டேன்னா, வான்டர்பில்ட்ல ஒரு ப்ரொஃபசர், எஸ். வி. ரமணா. கேள்விப்பட்டிருக்கியா?”
“ஊகும்.”
“ஒரு வருஷமா சிங்கப்பூர்ல செபாடிகலுக்கு வந்திருக்கார். இரண்டு வருஷத்துக்கு முன்னாடி அவரோட மனைவி தவறிப்போயிட்டாளாம். எப்படியோ சுத்திவளைச்சு அவரோட சிங்கப்பூர் நம்பர் கிடைச்சுது” என்று நிறுத்தினார். அவனை அவள் வட்டத்தில் நுழைப்பதை அவர் திட்டமிடவில்லை, வாழ்க்கையின் எதேச்சையான நிகழ்வுகளால் விழுந்த முடிச்சு. “அவரைக் கூப்பிட்டு உன்னைப் பத்தி சொன்னேன்.”
‘அவர் உன்னைத் தொடர்பு கொள்ளலாம்’ என்பது மறைந்திருந்த தகவல்.
“சரிப்பா!”
ஒப்புதல் தெரிவிக்குமுன் ஒரு தேடல்.
எஸ். வி. ரமணா
பப்ளிக் பாலிஸி துறையில் பேராசிரியர். மருத்துவம், பொருளாதாரம் மற்றும் சக்தி பொதுமக்களைப் பாதிப்பது பற்றி வகுப்புகள் நடத்துகிறார். அண்மையில் அவர் வெளியிட்ட புத்தகம்: ‘மருத்துவமும் தட்பவெப்பநிலையும்’. பட்டங்களின் இறங்குமுக வரிசையில் இருந்து அவர் ஐம்பதை இன்னும் எட்டவில்லை.
ரம்யா ரமணாவின் இரங்கல்
ரம்யா கடைசி பதினைந்து ஆண்டுகள் மருத்தவ நூலகத்தில் பணிசெய்தாள். அவளுக்குப் புன்னகை மாறாத முகம். அதிகாரம் செய்தவர்களிடம், அலட்சியமாகப் பேசியவர்களிடம் கூட அது மாறியது இல்லை. வாரக்கடைசியிலும் பண்டிகை நாட்களிலும் ஹிந்து கோவிலில் நிர்வாகத்துக்கு உதவியாக அவளைப் பார்க்கலாம்.
பிரிவில் வருந்தும் கணவன் எஸ். வி. ரமணா, மகள் ஷ்ரேயா மற்றும் நண்பர்கள், உறவினர்கள்.
ரம்யாவின் நினைவாக ‘கே யாவ் புற்றுநோய் நிதி’க்கு நன்கொடை வழங்குவதை விரும்புகிறோம்.
அவள் வாழ்க்கையின் பிரதிபிம்பம்.
– – அழைக்கலாம், ரேவதி —
பாத்திரங்கள் சுத்தம் ஆக்கப்பட்டுவிட்டன என்பதற்கான கூவல். நட்சத்திரங்கள் அலங்கரித்த வழக்கமான கோப்பையில் இன்னொரு காப்பி தயாரித்துக் குடித்தாள். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவள் தந்தை மற்றும் நண்பர்களின் சிபாரிசில் அவளைத் தேடிவந்தவர்களை நினைவுக்குக் கொண்டுவந்தாள். முதல் உரையாடலுக்கு மேல் தொடர்புகள் வளரவில்லை. ஏன்?
‘நீ உன் எதிர்பார்ப்புகளைக் குறைச்சுக்கணும், ரேதி!’ என்கிற அஷ்வினின் முகம்.
‘அது முடியாது அஷ்!’
பல எண்களைக் காட்டிய அலைபேசி அழைப்பு.
“ஹலோ”க்களைத் தொடர்ந்து
“உனக்கு அதிகாலை என்று தெரியும். யூ.எஸ். திரும்புவதற்கான ஏற்பாடுகளால் இப்போது தான் நேரம் கிடைத்தது. விமானத்தில் ஏறக் காத்துக்கொண்டு இருக்கிறேன்.”
“பரவாயில்லை. நான் அரைமணிக்கு முன்பே எழுந்துவிட்டேன்.”
“கிட்டத்தட்ட பத்தாண்டுகள் ஒரே ஊரில் இருந்திருக்கிறோம். நமக்கு ஒருவரை ஒருவர் தெரியாதது ஆச்சரியம்” என அறிமுக ஆரம்பம்.
“பொதுவாகக் கோவில் இல்லை இந்திய மளிகைக்கடையில் எதேச்சையான சந்திப்பு நிகழும். பெண் பள்ளிப்படிப்பை முடிக்கிறவரையில் கோவிலுக்கு நேரம் இருந்தது இல்லை. இப்போது தான் வாரம் ஒரு தடவை போகிறேன். உங்கள் வீடு ப்ரென்ட்வுட்டில் (புறநகர்) என நினைக்கிறேன்.”
“கரெக்ட். நீ?”
“க்ரீன் ஹில்ஸ்(நடுநகர்). போக்குவரத்து நெருக்கடியினால் நம் குடியிருப்புகள் இரண்டு தீவுகள். அது ஒரு காரணம். என் பெண் மார்டின் லூதர் மேக்னட் பள்ளிக்குப் போனாள்.”
“ஷ்ரேயா ரேவன்வுட் ஹை.”
“நம் வட்டங்கள் தொடாததற்கு இன்னொரு காரணம்.”
அவ்வட்டங்கள் ஒன்றின் மேல் இன்னொன்று படிவதற்கு,
“அஷ்வின் இறந்த துக்கத்தை மறக்க யு.எஸ். வந்தேன். ஐஸ்வர்யாவுக்கு இப்போது எமரியில் இரண்டாவது வருஷம்.”
“ரம்யா போனபோது ஷ்ரேயா வான்டர்பில்ட்டில் சீனியர். ஒரு வருஷம் என்னுடன் தங்கியது இருவருமே மனதைத் தேற்றிக்கொள்ள உதவியாக இருந்தது. இங்கே சபாடிகல்லுக்கு வந்ததில் கொஞ்சம் ஆறுதல்.”
“திரும்பி வரும் நேரம் சொன்னால் நான் ஏர்போர்ட் வருகிறேன், ரமணா!”
“ரமணா வேண்டாம், வெங்கட். டெக்ஸ்ட் செய்கிறேன்.”
இன்று காதலர் தினம். தயக்கம் ஏன்?
“உன்னை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பேன், வெங்கட்!”
“ரேவதி! அடுத்த முப்பது மணியை முப்பது நிமிடங்களாக இல்லை வினாடிகளாகக் குறுக்க முடிந்தால்…”
காலையின் மாமூல் காரியங்கள் கூட இனிதாகச் சென்றன. ‘அஷ்! என் எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்ளாமலேயே…’
வேலைக்குக் கிளம்பியபோது அலைபேசியில் ஒரு தகவல்.
– – முடிந்தபோது அழைக்கவும், டாக்டர் க்ரான்ட்டின் நர்ஸ் – –
மருத்துவர் மேகன் க்ரான்ட்டை ஆண்டுக்கு ஒரு முறை ரேவதி பார்ப்பது வழக்கம். மேலோட்டமாக ஒரு சோதனை. வெறும் வயிற்றுடன் மூன்று குப்பி இரத்தம். சந்திப்பிற்கு சில தினங்கள் கழித்து அவளிடம் இருந்து ஒரு மின்னஞ்சல். அளவுகள் ஆரோக்கிய எல்லைகளுக்குள் என்ற தகவலுடன் விளக்கங்கள். முதல் வரிக்கு மேல் படித்தது கிடையாது. எல்லாம் சரியாக இருக்கிறதா? ஃபைன்! திங்கள்கிழமை சந்திப்பில், ‘இரண்டு வருஷமாக தைராக்ஸின் அளவு குறைவாக இருப்பதைக் கவனிக்கிறேன். சீக்கிரம் களைத்து விடுகிறாயா?’ என்று கேட்டாள்.
‘அப்படி சொல்வதற்கு இல்லை.’
‘இப்படியே சில காலம் போகட்டும். தேவைப்பட்டால் 25 மைக்ரோக்ராமில் ஆரம்பிக்கலாம்.’
அதைச் சொல்ல நர்ஸ் அழைத்திருக்கலாம்.
நர்ஸுடன் தொடர்பு கொண்டாள்.
“நான் ரேவதி ரங்கநாத்.”
“யெஸ்! யெஸ்! டாக்டர் க்ரான்ட்டை நீ உடனே சந்திப்பது நல்லது. நாளை காலை எட்டு அல்லது எட்டரை?”
ஒன்பதரைக்கு வெங்கட்டை அழைத்துவரப் போக வேண்டும்.
“எட்டு மணிக்கு வருகிறேன்.”
வெங்கட் வானத்திலும் கற்பனை உலகிலும் பறந்தபோது ரேவதி தரையில் சந்தேகத்துடன் நகர்ந்தாள். நேரில் உடனே சந்திக்கும்படி மருத்துவ அறிக்கையில் என்ன இருக்கும்? உயிரியல் மற்றும் மருத்துவம் அவள் அறிவுக்கு எட்டாதவை. கூக்கிலில் பதில் தேடலாம். அது பயங்கரமாக இருந்தால்…
மறுநாள்.
ஒப்பனையில் கவனம் வைத்து இறுக்கமான ஆடையும் தளர் சட்டையும் அணிந்தாள். பொது மருத்துவமனையில் அவளை வரவேற்ற மங்கை,
“டாக்டர் க்ரான்ட் அவசர சிகிச்சைக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார். உன்னை சந்திக்க இயலாததற்கு வருத்தம் தெரிவித்து, ஒரு புதிய இரத்த சோதனைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அதன் முடிவுகளை விவாதிக்க நீ டாக்டர் சஞ்சய் மஹாதேவைப் பார்ப்பதும் அவர் விருப்பம்.”
“எப்போது?”
திரையில் கண்களை ஓட்டி,
“செவ்வாய் காலை ஒன்பது மணி. நீ போக வேண்டிய இடத்தை மின்னஞ்சலில் அனுப்புகிறேன்.”
அந்த புதிய தகவலை சிரமப்பட்டு ஜீரணித்து நடந்தாள். இரத்தம் கொடுக்கக் காத்திருந்தபோது அலைபேசியில்…
டாக்டர் சஞ்சய் மஹாதேவ்
ஹெமடாலஜி, ஆன்காலஜி, லுகீமியா
முந்தைய நோயாளிகள் கொடுத்த பாராட்டுக் குறிப்புகளில் இருந்து 4.9 நட்சத்திரம்.
எல்லாமே புகழ்மாலைகள்.
பொறுமையாக எல்லா சந்தேகங்களுக்கும் பதில் சொன்னார்.
உடல்நிலை முன்னேற ஊக்கம் கொடுத்தார்.
புதிய சிகிச்சைகளின் பலாபலன்கனை விவரித்தார்.
அவர் மேற்பார்வையில் எனக்குப் பாதுகாப்பு உணர்ச்சி.
அவர் எப்போதும் எங்கள் குடும்பத்தில் ஒருவர்.
ஆனாலும், புற்றுநோய் மருத்துவர் என்பது மனதுக்குப் பிடித்தமானதாக இல்லை. சர்க்கரை அதிகம் என்றால் கசப்பு காப்பியைக் குடித்துவைக்கலாம். இதற்கு என்ன செய்வது?
கடவுள் ஒரு கையில் பரிசு கொடுத்துவிட்டு இன்னொரு கையை வெட்டிவிட மாட்டார் என்கிற ப்ரார்த்தனையைத் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டாள்.
வானூர்தி நிலையத்தின் அலைபேசிப் பகுதியில் காத்திருந்தபோது,
– – தரையைத் தொட்டுவிட்டேன் – –
– – நான் காரில் காத்திருக்கிறேன் – –
– – பெட்டிகளுடன் வெளியே நடக்கிறேன் – –
– – இதோ வருகிறேன் – –
நீண்ட பயணத்தின் களைப்பு வெங்கட் முகத்தில் தெரிந்தது. சிங்கப்பூர் பட்டீக் சட்டையில் பட்டம் பெற விரும்பாத மாணவனின் தோற்றம். குளிர் உறைக்க கையில் எடுத்துவந்த ஜாக்கெட்டில் நுழைத்துக்கொண்டான்.
“சிங்கப்பூரின் மிதவெப்பத்தில் இருந்து நாஷ்வில் குளிருக்கு வருக!”
காரில் அமர்ந்ததும் ரேவதி,
“என் இடம் போகலாமா?”
“தாங்க்ஸ். அப்புறம் என் வீட்டில் விட்டுவிடு!”
ரேவதியின் பார்வையில், அது தயாராக இருக்குமா?
“ஷ்ரேயா வான்டர்பில்ட்டில் மெடிகல் செய்வதால் அவ்வப்போது வீட்டில் தங்கி கவனித்துக்கொள்கிறாள். நான் வரப்போவது தெரிந்து பால், பழங்கள், ப்ரெட் வாங்கிவைத்திருப்பாள்.”
“உன் செபாடிகல் எப்படி போயிற்று?”
“இடமாற்றத்துடன் என் அறிவை வளர்ப்பதற்கும் உதவியாக இருந்தது.”
க்ரீன் ஹில்ஸ் பகுதியில் நான்கு வீடுகளின் தொகுதியில் ஒன்று. நுழைந்ததும்,
“நீ சரியாகச் சாப்பிட்டு பல மணி நேரம் ஆகியிருக்குமே.”
“சான் ஃப்ரான்சிஸ்கோவில் ஒரு பேகல்.”
காலையில் வார்த்த தோசைகளை டோஸ்டரில் சுடப்பண்ணினாள். சட்னியை அவன் முன்னால் வைத்து,
“உனக்காக இரண்டு மிளகாய் கூட அரைத்தேன்.”
“அதேபோல் இரண்டு கே-கப் கலந்த காப்பி.”
ஐந்து தோசைகளும், காரமும், காப்பியும் அவனுக்குப் புத்துயிர் கொடுத்ததும்,
“கேட்பது தவறில்லை என நினைக்கிறேன்.”
அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
“நேற்று நீ பேசியதற்கும் இன்று நடந்துகொள்வதற்கும் நிறைய வித்தியாசம். நான் காரணம் இல்லையே?” என்கிற மன்னிப்புக்குரலில் கேட்டான்.
“ஒரு விதத்தில் நீதான் காரணம்” என்று புன்னகைத்தாள். “உன்னுடன் பேசியதும் வானத்தில் பறப்பது போல மிக சந்தோஷமாக இருந்தது. அது நீடிக்காமல் தரையில் கால்வைக்க…” என ஆரம்பித்து டாக்டர் மஹாதேவில் முடித்தாள்.
“பப்ளிக் பாலிஸி தொடர்பில் எனக்கு மருத்துவம் பற்றிய அறிவு ஓரளவு உண்டு. ரம்யாவினால் புற்றுநோயின் இன்னும் பல விவரங்கள் தெரிந்துகொண்டேன். எனக்கு முழு பேராசிரியர் பதவி, அவளும் தலைமை லைப்ரரியன், ஷ்ரேயா கல்லூரியில் ஜுனியர். எல்லாம் சீராகப் போனபோது திடீரென்று அவள் உடலில் நடந்த ‘பி53 ஜீன் ம்யுடேஷன்’. அதனால் வந்த கேன்சர் வெகுவேகமாகப் பரவ ஆரம்பித்துவிட்டது. டாக்டர்கள் என்ன செய்தும் அவளைக் காப்பாற்ற முடியவில்லை” என்று பார்வையை மேஜைமேல் பதித்து மெல்லிய குரலில் சொன்னான்.
சில நிமிடங்களின் மௌன அஞ்சலி.
“உன் மருத்துவ அறிக்கைகளை நான் பார்க்கலாமா?”
சாப்பிட்டதும், மேஜைமேல் மடிக்கணினியில் அவள் மருத்துவ தளத்தைத் திறந்து அதை அவன் பார்வையில் திருப்பிவைத்தாள்.
ரேவதி பாத்திரங்களை நகர்த்தி ஒழுங்குசெய்தபோது அவள் எண்களுடன் வெங்கட் சொந்தம் கொண்டாடினான்..
“வெள்ளை அணுக்களும் ப்லேட்லெட் துணுக்குகளும் கடந்த சில ஆண்டுகளாக உச்ச வரம்பின் பக்கத்தில். கடைசியாக அளந்தபோது அவை எல்லைகளைத் தொட்டுவிட்டன. அதற்காகத்தான் இன்னும் சில சோதனைகள் செய்ய டாக்டர் க்ரான்ட் இன்று இரத்தம் கேட்டிருக்கிறார். டாக்டர் மஹாதேவ் மஹா புத்திசாலி. அவர் பார்த்து சொல்லட்டும். அவர் க்ளினிக் நான் இருக்கும் இடத்தின் மறுகோடியில். செவ்வாய் காலை வேலைக்குப்போகும்போது இங்கே வந்து உன்னை அழைத்துப்போகிறேன்” என்று எழுந்தான்.
அவனை வீட்டில் இறக்கிவிடுமுன்,
“பயணக் களைப்பு போக ஓய்வு எடுத்துக்கொள்! நாளை கூப்பிடுகிறேன்.”
“சனிக்கிழமை ஷ்ரேயா வீட்டிற்கு வருவதாக இருக்கிறாள். நாம் வெளியே சாப்பிடப்போகலாம்.”
“மார்கோ போலோ?” என்றபோது ரேவதியின் மனம் இலேசானது.
-தொடரும்
இரண்டாம் பாகத்தை படிக்க
