Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

வெறியாட்டு

வளர்ந்த பிறகு, வெளி சிறியதாகி உள்ளுலகத்தில் பல்வேறு நான்கள் உருவாகி, எந்த நான் நான் என ஒவ்வொருநாளும் தேடிக்கொண்டே இருக்கிறேன். வீட்டில் அப்பா அம்மாவிடம் ஒரு நான், வீட்டின் தனியறையில் வேறொரு நான், ஸ்கூல் வரும்போது கிளாஸ்ரூமில் ஒரு நான், மகேஷிடம் ஒரு நான், அனுகிரஹாவிடம் ஒரு நான், சென்றவாரம் மருத்துவமனையில் ஒரு நான், இன்று காலை அப்பா அம்மாவுடன் உரையாடலில் வேறொரு நான், எக்ஸாம் எழுதும் முன் ஒன்று, முடித்தபின் மற்றொன்று, எல்லாருக்கும் பொதுவான ஒரு நான், எனக்கே பிரத்யேகமான ஒரு நான், பிரத்யேகத்தை வெளிக்கொணரத் துடிக்கும் வேறொரு நான். பார்க்கும்போது ஒரு பாதை, யாரும் பாராமல் இருக்கும்போது வேறொரு பாதை எனச் செல்லும் ஒளிபோல எனக்குப் பல பாதைகள் பல நான்கள்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ரோட்டின் வலதுபுறம் எப்போதும்போல் காலை எட்டுநாற்பதுக்கு பத்துநிமிட பள்ளிக்கு நடந்துகொண்டிருந்தேன். வீட்டிலிருந்து பஸ்ஸ்டாண்டிற்கு அப்பா அம்மா கூட்டிக்கொண்டு போவதே வெகுதூரம் போல் இருக்கும் சிறுவயது கடந்து, இப்போது பதினொன்றாவது படிக்கும்போது அவ்வளவு தூரம் இல்லை என்று தோன்றுகிறது. அகண்ட தார்ரோடுகள் இப்போது நெரிசல் மிக்கதாக சிறியனவாக தெரிகின்றன. சாலையின் இருபுறமும் எப்போதும் போல அங்குமிங்குமாக தனியும் கூட்டமுமாக பள்ளி பையன்களும் பெண்களும் நடந்து கொண்டிருந்தனர். நானும் மிகச்சில பையன்கள் போல தனியனாக நடந்துகொண்டிருந்தேன். 

கிளாஸில் நுழைந்ததும் இரண்டு வரிசைகளாக பிரித்துவைக்கப்பட்டுள்ள பெஞ்சுகளில் ஆண் வரிசை பெஞ்சில் நேராக சென்று மூன்றாவது பெஞ்சில் உள்பக்க ஓரத்தில் அமர்ந்தேன். மகேஷின் உற்ற நண்பன் என்றாலும் அவன் அருகில் அமர்வதில்லை. அவன் அமரும் பெஞ்சின் முன்னால் வேறொரு பெஞ்சில்தான் இரண்டு வருடங்களாக உட்கார்கிறேன். ஒருவேளை அதையேத்தான் அவனும் விரும்புகிறானோ என்னவோ. ஆனால் என்னிடம் கிளாஸ் முடிந்தவுடன் சகஜமாக பேசி என்னுடனே தினமும் பஸ்ஸில் வருகிறான். இந்தப் பக்க பெண் வரிசையில் எனக்கு பக்கவாட்டு இடத்தில் முன்னரே வந்து உட்கார்ந்திருக்கும் அனுகிரஹாவைப் பார்த்தேன். நான் தலைதிருப்பி அவளைப் பார்ப்பதை அவள் உணர்ந்திருக்கவேண்டும். வாழ்விலேயே தான் கேட்கக்கூடாத விஷயம் என் வாயிலிருந்து உதிரி கேட்டதுபோல் என்பக்கம் திரும்பாமல் தனக்கு நேரேயே பார்த்துக்கொண்டிருந்தாள். என்னை மனிதனாக மதிக்கிறாளா என்றே புரியவில்லை. சரி, அவளாகவே பேசுவாள் என எதிர்பார்த்திருந்து ஒரு வாரம் ஆக போகிறது. கடைசியாக சென்ற வெள்ளி பேசியது. 

முதல் பீரியடில் தமிழ் சார் சந்திரன் வந்தார். தினமும் சிறுகமணி கிராமத்தில் இருந்து பஸ் பிடித்து திருச்சி வந்திறங்கி, நடந்து பள்ளி வரும் ஆசிரியர். இந்த வயதிலும் பேருந்திலேயே வருவது சிரமமாகயிருக்காதோ என்று எனக்கு ஒவ்வொருமுறையும் தோன்றும். உயரமாகவும் ஒல்லியாகவும் சற்றே நரைத்துள்ள தலையும் மீசையும் வைத்து எண்ணெய் நிறைய வைத்து வகிடு கோடாகத் தெரியுமாறு சீவியிருப்பார். கிளாஸ் பிளாக்போர்டு முன் மேடையில் சரியான நடுப்புள்ளியில்நின்று, இன்னும் முடிக்காமலேயே விட்ட சங்ககால பாடல்கள் நடத்த ஆரம்பித்தார்.

”நேத்திக்கி வேலன் வெறியாட்டுப் பத்தி பாத்தோமே.. யாரு அத சம்மரைஸ் பண்ணி சொல்றது.”

எந்தக் கையும் உயராதபோது, “யாரும் இல்லையா” என்று கேட்டார்.

பையன்கள் சில பேர், ”சார் அதான். மிஸ்டர் படிப்ஸ் ஷண்முகம் இருக்கிறார்களே” என்று என்னை இழுத்துவிட்டர்கள். மேலும், “அவனுக்கு தலைவிக்கு தலைவன் மீதுள்ள காதல்களைப் பத்தி நெறையா தெரியும் சார்” என்று சிரித்தனர்.

”சரி சண்முகம், நீயே சொல்லு” என்று என்னைப் பார்த்தார்.

நான் வேண்டா வெறுப்பாக எழுந்து, “வேலன் வெறியாட்டு சங்க இலக்கியத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் ஒரு சடங்கு முறை. தன் பெண் மெலிந்துகொண்டிருக்கிறாள் எனக் கண்டு, யாரோ ஒருவன் மீது காதல்கொண்டிருக்கலாம் என்று எண்ணி, அத்தலைவனின் நினைவை அவளிடமிருந்து அகற்றுவதற்காக செய்யும் சடங்காகும்” என்று ஆர்வமில்லாமல் இதோடு போதும் என்று சுருக்கமாக முடித்தேன். 

ம் என்று மேலும் என்னைப் பார்த்தார்.

நான் தயங்கி, “வேலன் என்கிற ஓர் பூசாரி வந்தவர்கள் வீட்டின் முன் பெண்ணை அமரவைத்து சடங்கு செய்து, முடிவாக பெண்ணின் மனசிலிந்து காதலனை விரட்டியாகிவிட்டது என்று அறிவிப்பான். அல்லது இச்சடங்குக்குப் பின்னர் தாய் தன் மகளின் காதலைப் புரிந்து கொண்டுவிடுவாள்” என்று வழக்கத்திற்கு மாறான வேகத்தில் ஒப்பிப்பது போன்று பாதி சொற்களை விழுங்கி சொல்லிமுடிக்கும்போதே, “ஏன்யா ஓடுற, பிரேக்கப் போடு பிரேக்கப் போடு” என்று இரு இப்பிலும் அழுத்தம் வைத்து, அதேசமயம் நிதானத்தோடு அவரே தொடர்ந்து வெறிபாடும் வேலனின் ஆட்டத்தையும் அவன் செய்யும் சடங்குகளையும் இன்னும் விரிவாக விளக்கினார். அவர் பேசும்போது நான் ஒருவாறு நடுதொலைவில் பார்வையைச் செலுத்தி அவர் விவரிப்பதை காதில் விழுவதிலிருந்து தடுக்க முயன்றேன். நெற்றி உறைந்து தொண்டை அடைத்து இந்த டாப்பிக்கை விட்டு எப்போது அடுத்ததற்குத் தாவுவார் என்றே என் மனம் தகித்துக்கொண்டிருந்தது.

மதியம் சாப்பாட்டுக்கு மகேஷ் உட்பட நண்பர்களோடு கிரௌண்ட் அருகிலுள்ள மரத்தடியில் அமர்ந்து சிறிது பகிர்ந்து சிறிது சிரித்து சாப்பிட்டேன். பின் மகேஷோடு தனியாக நடந்துவந்து சைக்கிள் ஸ்டாண்ட் அருகில் நின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்தேன். வரிசை வரிசையாக சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்த அந்த ஒழுங்கு அழகாக இருந்தது. அவன் ஏதோ ஒரு சைக்கிளைத் தேர்ந்தெடுத்து அதன் காரியரில் பாதி உட்கார்ந்து, ஒருகாலை கீழே வைத்து மறுகாலை ஆட்டிக்கொண்டு என்னிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். நான் மகிழ்வின் முகிலூடே பறப்பதுபோன்று உணர்ந்தேன். அதே சூரியன் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வெப்பநிலை தருவதுபோல ஒவ்வொரு நாளும் அவனிடம் பேசினாலும், ஒவ்வொரு முறையும் அவன் வேறுமாதிரி தெரிந்தான், அவன் சைகைகள் வேறுமாதிரி இருந்தன. கைவிரல்களைக்கொண்டு சைக்கிளில் தாளம் ஏற்படுத்திக் கொண்டிருந்தான். விரல்களைப் பாதி மடக்கி ஒவ்வொரு விரலையும் வரிசையாக வேகமாக விரித்து நகங்கள் காரியரில்பட்டு லேசாக அழுந்த அவ்வொலியே சீரான இசையாக என் மனத்தில் கேட்டுக்கொண்டிருந்தது; கவலையில்லா முழுபுன்னகை என் முகத்தில் அரும்பியிருந்தது. 

சட்டென்று அவன் அனுகிரஹா என்று சொன்னவுடன் நான் விழிப்புற்று மீண்டு, மகிழ்மேகம் மறைந்து வெற்றுவெளியில் தொங்கிக்கொண்டிருப்பவன்போல உணர்ந்தேன்.

”ஏன்டா அனுகிட்ட பேசறதே இல்ல? அவளோட ரொம்ப ஒட்டிகிட்டே இருப்பியே. எல்லாரும் கூட ஓட்டிகிட்டே இருப்பாங்க,” சிறிது இடைவெளிவிட்டு, “உங்ககிட்ட எதுவும் நடந்து வீட்டுல தெருஞ்சிருச்சா” என்றான்.

அவன் முகம் சாதாரணமாகத்தான் இருந்தது. உண்மையிலேயே அக்கறையோடுதான் கேட்கிறான். அவளிடம் சொன்னதை எப்படி உன்னிடமே சொல்வேன் மகேஷ். அவளைப் போன்றே நீயும் என்னிடம் பேசாமல் இருந்துவிட்டால். அவளைப் போன்றே நீயும் விஷத்தைக் கக்கிவிட்டால்.

வரிசையாக சைக்கிள்கள் நின்றுகொண்டிருக்கின்றன, என் மனத்தைப் போலவே அடுக்கடுக்காக. ஒவ்வொரு அடுக்கும் ஆயிரமாயிரம் சிடுக்குகள். ஒரு அடுக்கையாவது அலெக்சாண்டர் வெட்டிய கார்டன் முடிச்சுப் போல் உடைத்து இவளிடம் கூறலாமா, இவள் என்னச் சொல்வாளோ? இண்டர்நெட்டில் பார்த்தால் இதெல்லாம் ஒன்றும் தப்பில்லை என்று உள்ளதே; சிலருக்கு இப்படித்தான் தோன்றுமாமே. இதை இப்படியே விட்டுவிடலாமா. எதற்காக இவளிடம் சொல்லவேண்டும்? இது என்னுடைய உணர்வு. எதற்காக மற்றவரிடம் பகிரவேண்டும்? இல்லையில்லை, அனுவிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்லப்போகிறோம். கூறியே ஆகவேண்டும். என்னவென்று ஆரம்பிப்பது? 

அவள் எதிரில் மென்மையாகச் சிரித்துக்கொண்டிருக்கிறாள். இதைத்தான் மற்ற பையன்கள் ரசிக்கிறார்களா. கவிகள் சொல்லும் சிற்றிடை இதுதானா. அதனால் என்ன, இருந்துவிட்டு போகட்டும் என்று தானே எனக்குத்தோன்றுகிறது. வேறெதுவும் தோன்றவில்லையே. அவள் சிரிப்பு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இவள் என்னிடம் சிரிப்பதைக் கண்டு ஏன் எல்லாரும் என்னைக் கிண்டல் செய்கிறார்கள். 

அவள் ஏதோ சொல்ல வந்து நிற்பதுபோல இருக்கிறதே. அவள் கண் விரிகின்றன. என் கையை மெதுவாக வருடினாள். 

இல்லை, இதுவே நல்ல தருணம். இனிமேல் என் மனம் கடலைச் சுமக்க முடியாது. 

சொன்னேன்.

”அனு, எனக்கு மகேஷ் மேல ஏதோவொரு அட்ராக்‌ஷன். எல்லா பையங்களுக்கும் இப்படித்தான் தோனுமோன்னு மொதல்ல நெனச்சேன். அப்றொந்தான் அவங்க பொண்ணுங்க பத்தியே பேசிட்டுஇருக்காங்கன்னு புரிஞ்சது.” மனம் எடையிழந்து தெர்மாக்கோல்போல் இருந்தது. பெருமூச்சு விட்டேன்.

அவள் முகமோ இயற்கையாய் அமைந்துள்ள கற்பாறையில் தெரியும் உருவமற்ற வடிவம்போல் உறைந்திருந்தது. என் கைமீது படர்ந்திருந்த சருமம் நழுவிவிழுவதை உணர்ந்தேன். பச்சைநிற தீபாவளி அணுகுண்டு திரியைப் பற்றவைத்துவிட்டு காத்திருக்கும் சிறுவன்போல, கிட்டே போனால் வெடித்துவிடுமா, தூரம் போகலாமா, இன்னும் நெருப்பு வைக்கவில்லையோ, இன்னும் விவரித்திருக்கவேண்டுமோ, இல்லையே நெருப்பு மெதுவாக நகர்வது தெரிகிறதே, ரொம்ப பக்கத்தில் இருந்தால் வெடித்து முகத்தில் பட்டுவிடுமோ, எவ்வளவு நேரம் தான் காத்திருக்கிறது, அருகில் வண்டி எதுவும் வராமல் இருக்கவேண்டுமே, புஸ்ஸாகி விட்டதோ, கல் ஏதும் பக்கத்தில் இருந்தால் தூக்கியெறியலாமா என நூல்நூலாக எண்ணங்கள்.

”ஏண்டா பொட்ட மாதிரி பேசுற. நீ என்ன ஃபெம்மா? என்னோட பொட்டு வெச்சுக்கறியா,” வெடித்தாள்.

என்ன சொன்னாள் என்று புரிவதற்கே எனக்கு நேரம் எடுத்துவிட்டது. ஆனால், விட்ட என் கையை மெல்ல மீண்டும் பிடித்தாள். வேறொரு தொடுகைபோல் இருந்தது. எதுவும் பேசாமல் மறுபடியும் கையை விட்டுச் சென்றுவிட்டாள். கால்கள் இரண்டும் கனத்து ஊன்றி நிலத்துற்சென்று புதைந்து இழுப்பதுபோல் இருந்தன. கடல் மீண்டும் ஊறி முற்றி கண்வழியே சொரிய அனுமதி கேட்டது. நான் கண்ணிமைகளை வேகமாகச்சிமிட்டி அண்ணாந்து பார்த்து விழாமல் பார்த்துக்கொண்டேன். 

”இல்ல, தெர்ல மக்கி. திடீர்னு பேசுறத நிறுத்திட்டா. என்னன்னே தெரீல.” என்று மகேஷிடம் பதில் சொன்னேன்.

”சரி உட்றா. இதயெல்லாம் பெருசா எடுத்துக்க கூடாது.”

”டேய் ஸ்கூலுக்கப்பறம் ஒறையூர் பஸ்ஸுல போலாமா, இன்னிகாச்சும் குழுமாயி அம்மன் திருவிழா கடைங்கள பாத்துட்டு போலாம்.”

”நாளைக்கி போலாமேடா”

ஏற்கனவே காலையில் யோசித்துவைத்த பொதுவான பதிலைக் கூறினேன். “இல்ல நாளைக்கி… அம்மாக்கு ஹாஸ்பிடல் போகனும்.”

”சீரிஸா ஏதாச்சும்?”

”இல்ல அதெல்லாம் ஒன்னும் இல்ல, அப்பா ஏதோ என்னோட ஹெல்ப் தேவப்படலாம்னு சொன்னாரு, அதான்.. இன்னிக்கு குழுமாயி குட்டிக்குடி வேற, சும்மா கடைங்கள வேடிக்கப் பாத்துட்டு அதுக்கும் போலாம்னு இருக்கேன்.”

”சரி ஓகே, நா ஜஸ்ட் சுத்திப்பாக்க வேணா கம்பனி தர்ரேன்.”

மாலை சத்திரம் பஸ்ஸ்டாண்டில் பேருந்து பிடித்தோம். நான் ஏறிக்கொண்டு எனக்கு இயல்பான கடைசி சீட்டைப் பிடித்துக்கொண்டேன். அவன் கூட்டம் இல்லையென்றாலும் படியிலேயே நின்றுகொண்டான். என்னிடம் நீயும் படியில் நில்லேன் எனவும் கூறவில்லை, தான் படியிலேயே நிற்கட்டுமா என்றும் கேட்கவில்லை. வெளியில் அவன் கண்கள் பெண்களைத் தேடியலைந்தன. படியில் நின்றுகொண்டிருந்தாலும் எப்போதிருக்கும் ஒரு சமநிலை அவனிடம். அவன் வெள்ளைச் சட்டை முதுகுபுறம் லேசாக வியர்த்து முதுகோடு சிறிது ஒட்டியிருந்தது. பேருந்து மெதுவாக கிளம்ப ஆரம்பித்ததும் சட்டை காற்று நிரம்பி உப்பி உப்பி ஆடியது. காக்கி பேண்ட் பெல்ட் அணியாமலேயே அவன் இடுப்புக்குச் சரியாக பொருந்தியது; இடுப்புக்குக் கீழேயும் சரியாக பொருந்தி அவன் உடலைக் காட்டியது. பின்புறம் அங்கிருந்து சற்றே மேலேறி சரியான அளவில் வளைவுச்சி பெற்று கீழிறங்கியது.

அவன் முகம் புதிதாக அரும்பியிருக்கும் மீசையுடைய முகம். அவன் முகம், சிறிய முடிச்சுருள்களுடன் சற்றே நீண்டு காதுமடல் அளவுக்குக் கீழ், வளைந்துள்ள கிருதாகொண்ட முகம். அவன் முகம் சிறிதே சிறிதாக கைக்குள்ளாகவே எண்ணிவிடுமாறு முடிகள் சில வளர்ந்துள்ள முகவாய்கொண்ட முகம். அவன் முகம் இன்னும் ஒருமுறைகூட ஷேவ் செய்யாமலே இருக்கும் முகம். நாளைமுதல் இப்படி இவனைப் பார்க்க முடியுமா இல்லையா என்று தெரியவில்லை. ஒருவேளை நாளை நானும் பஸ்படியில் நின்றுகொண்டு பயணம் செய்ய யோசிக்கத் தோன்றுமா என்னமோ. 

உறையூர் வாலாஜா ரோட்டிலேயே பஸ் நின்றுவிட்டதால், இறங்கி புத்தூர் நால்ரோட்டு வழியாக வீதியோரம் போடப்பட்டிருக்கும் ஒவ்வொரு கடையாக அவன் அருகில் சென்றுசென்று நின்றுநின்று பேசுவதைக்கேட்டுகேட்டு சிறிதுசிறிதேபேசி – மார்பு இளகியிருந்தது. இரவு கவியகவிய மனம் அமைதிகொண்டது மகிழ்வுகொண்டது. அவன் அருகிலேயே நடந்து இதுவரை அவனைத் தொடாமலே அவன் உஷ்ணத்தை உணர்ந்து எனக்குள் ஒரு வெம்மை உண்டானது. இவ்வளவு ஆண்டுகள் பழகியும் அவன் கைகளைத் தொட கூச்சம், அவன் கன்னத்தை என் உள்ளங்கையால் அள்ளி சொர்க்கத்தைச் சேகரிக்க வேண்டும் என ஆசை. ஆனால் சாத்தியத்தில் மட்டுமே வசிக்கிறேன். அவன் தோள்களைமட்டும் அவ்வப்போது கைபோட்டுக்கொள்வது ஒன்றே இதுவரை என் மூளைச்சேமிப்பின் பெருவுயர்பொக்கிஷம். வாழ்வெல்லை வரை அது ஒட்டியிருக்குமோ; யாரேனும் அழித்துவிடுவார்களோ. மாலை இருட்டாக தொடங்கியபோது அவன் விலகி பஸ் ஏறி கையசைத்தான், நான் சிரித்தேன், இப்போதைக்கு என்று. 

உய்யங்கொண்டான் ஆற்றுத்திக்கில் சாலை செல்ல, கோவில் நெருங்க, கூட்டம் அதிகமாகிக்கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் தலைகள், ஆத்தா அம்மா என்று குரல்கள். கோவில் அருகில் உள்ள திடலுக்கு வந்துசேர்ந்து கூட்டத்திலிருந்து சற்றுத் தள்ளியிருந்து ஒரு பூக்கடை அருகிலேயே நின்றுகொண்டேன். இங்கிருந்து கூட்டம் முழுவதும் தெரிந்தது. ஈரங்கலந்த காற்று, ஆற்றிலிருந்து தவழ்ந்து, பாறையில் வழிந்து, பறந்து இங்குவந்து கண்தெரியாத மென்மையான சட்டைபோன்று முகத்தில் சில்லென்று படர்ந்துகொண்டிருந்தது. மனம், மக்களின் வியர்வை கலந்த ஈரக்காற்றை ஒருநொடி விநோத வாசம் என்றறிந்து, சில நிமிடங்களிலேயே சகஜமாக பழகக் கற்றுக்கொண்டது. 

நான் நின்றுகொண்டிருப்பதன் எதிர்மூலையில் இருந்து குழாய் வாத்திய பிளிறல் கேட்டது. தூரத்தில் ஒருவர் தலையில் அரை முண்டாசாக கட்டிய துணியோடு வந்துகொண்டிருந்தார். கால் அகன்று வைத்து வரும் நடை; மிக அழுத்திவைத்த அடிகள். அவர் முகம் அரும்பி மெல்ல தெரிந்தது; நெற்றியில் பெரிய பொட்டு, மூக்கின் கீழ் பெரிய மீசை, வாய் முழுக்க உரைத்துக்கொண்டே நடை. கூட்டத்தில் எல்லாரும் ஆரவாரம் எழுப்பினர். ஒவ்வொரு வருடமும் பார்த்திருந்தாலும் சிறுவயதில் விளையாட்டாக தோன்றிய சடங்கு, இம்முறை பயம் எழவைப்பதுபோன்று உணர்ந்தேன். என் துடிப்பு சீராக வேகமாக அதிர்வதை உள்காது உணர்வதை அறிந்தேன். மீசைக்காரரின் குரல் மெல்ல அதிர்ந்து எழுந்து, மக்கள் அம்மா அம்மா குழுமாயி ஆத்தா, ஒண்டிக் கருப்பா என்று குரல் எழுப்பினர். சந்நதம் சந்நதம் என கொட்டு அதிரத் தொடங்கியது. இருவர், சாமியை தங்கள் தோளில் தூக்கினர். அவர் உடல் தெரிந்தது; பெரிய தொப்பை வைத்திருந்தார்; மாலைகள் அணிந்திருந்தார். குறுக்காக வெள்ளைத்துண்டு தோளிலிருந்து இடுப்புக்கு அணிந்து, வெள்ளை வேட்டி உடுத்தியிருந்தார். கொட்டும் குழாயும் என் துடிப்பை மேலும் எழச்செய்து என் நெற்றியின் இருபக்கமும் அடிப்பது போல ஆக்க,  நான்குபேர் மணியொலிக்க ஒரு கரிய ஆட்டை இழுத்துக்கொண்டுவந்தனர். அதைத் தோள்தூக்கிக்கொண்டிருக்கும் ஆட்கள் அருகில் நின்றிருக்கும் மற்றோராளிடம் ஒப்படைத்தனர். அவர் ஒரு செப்பு அரிவாள் போன்ற கத்தியை எடுத்து மெலிதாக ஆட்டின் கழுத்தைக் கீறினார்.

இந்த ஆட்டால்தான் என்ன செய்ய இயலும். ஒருவேளை மற்ற ஆடுகளைப் போன்று வீதிவீதியாக ஓடியிருக்கலாமோ. மற்ற ஆடுகளைப்போன்றே சுவரில் தன் முதுகைத் தேய்த்துக்கொண்டிருக்கலாமோ. மற்ற ஆடுகளைப்போன்றே சினிமா போஸ்டர்களைப் புல்லுக்குப் பதிலாக தின்றுக்கொண்டிருக்கலாமோ. இந்த ஆடுதான் இயற்கைக்கு எதிராக என்னசெய்தது. இவர்கள் கையில் இதை யார் கொடுத்தது. ஆட்டின் சார்பாக இவர்கள் யார் முடிவெடுப்பதற்கு. 

“அப்பா எனக்கு ஒன்னும் இல்லப்பா.”

“என்னடா ஒன்னுமில்ல.” கன்னத்தில் அரை. 

வரைமீறும் முன்பு அம்மா வந்து தடுத்தார். 

“ஒன்னுமில்லையாமுல்ல. இந்த வாயிதானே. வாயிதானே.” கையில் எதுவும் தற்றுப்படாமல் இருக்க, அருகிலிருந்த டேபிளில் இருந்த எவர்சில்வர் டம்பள்ரை எடுத்து தூக்கிமுகத்திலேயே எறிந்தார். 

“முத்தம் கேக்குதோ ஒரு பையனோட. கட்டிப்புடிச்சி… சீ அதப்பாத்த ஒடனே செத்திருலாம்னு இருந்துச்சு. நீ என்ன பையனா பொண்ணாடா. காறித்துப்புவாங்க. மொதல்ல நா வாங்கிக் கொடுத்த கம்ப்யூட்டர்ல கண்டத பாத்திட்டு இருந்த, அப்புறம் இப்ப இந்த சகிக்காத வேலைய செய்ய ஆரம்பிச்சுட்ட.”

மகேஷிடம் உள்ள ஏதோ ஈர்ப்பையும் தாண்டி இன்னொருவனிடம் நான் செய்த செயலுக்கு எனக்கு தண்டனை தேவைதான். ஒருவேளை இது தப்போ பாவமோ. ஆனால் மகேஷுக்கு ஏன் ஆண்களைப் பிடிக்கவில்லை, பெண்களைப் பிடித்திருக்கிறது.

“அதான் டாக்டர்கிட்ட காமிச்சோமேங்க. இதெல்லாம் ஒன்னுமில்லனு சொன்னாரே.“ அம்மா சொன்னாள்.

“ஆமா அந்த டாக்டர் சுந்தரம் வொக்காலோளி, அவன் என்னடான்னா, நாமதான் புரிஞ்சுக்குனும்னு சொல்றான். அந்த டாக்டர்லாம் வேண்டாம். போன வாரம் போய்ட்டு வந்தோம்ல அந்தத் தெரபிஸ்ட் கிட்டயே இன்னொரு முறை கவுன்சலிங் வரசொல்லியிருக்காங்க. ட்ரீட்மண்ட் எடுத்துரலாமாம். மூணுமுறை வந்து பாத்தா போதுமாம். கண்டிப்பா இத மாத்திரலாம்னு சொன்னாரு. சனியன் ஆனா இதுக்காக அம்பதாயிரம் ரூபா அழணும். அவனவன் பிள்ளைக்காக கோயிலுக்கு அலையிறான். நான் பிள்ளையப் பெத்தும் காசு அழுவுறேன்“

என் பதிலையே இருவரும் எதிர்பார்க்கவில்லை. என்னதான் சொல்வது. எங்கோ யாரோ முடிவு செய்து என் மூளையில் உட்கார்ந்துகொண்டு இச்சைக்கு ஆணையிடுகிறார்களே. 

அம்மா கடைசியாக, “அம்மாவுக்காக ஒருதாட்டி போய்ட்டு வந்துருலாம்யா. இவரும் டாக்டர் மாரிதான். ஒன்னும் நடக்காது. எல்லா ஒன் நல்லதுக்குதானே. இது ஒரு மருந்து மாரின்னு வெச்சுக்கோ. மாத்துரை மருந்து முழுங்கறதுக்கு பதுலா சின்னதா மூளைக்கி ஒரு மருந்து மாதிரி கரண்டுல லேசா கொடுப்பாங்க. தெரப்பிஸ்ட் சொல்ட்டாரு ஒன்னு ஆவாதுன்னு.”

அப்பா முடிவாகச் சொன்னார், “ஸ்கூல் முடிஞ்சு நேரா வீட்டுக்கு வந்துரு. ராத்திரி ஒழுங்கா தூங்கிட்டு நாளைக்கு சரியா காலேல பத்து மணிக்கு அங்க இருக்கணும். அதான் அம்மா இவ்ளோ கேக்கறாங்களே. தாயோட அழுகைய தண்ணீயா குடிச்சு தீக்காத.” 

தூரத்தில் வரிசையான வெள்ளை ட்யூப்லைட்கள் மாறிமாறி எரிந்தன. என் கால் என் மனம் அறியாமலேயே கூட்டத்தில் நுழைந்தது. துடிப்பு ஒவ்வொரு கணமும் நெஞ்சை நிறைத்து, உள்ளிருந்து காதில் வழியுமென தோன்றுமாறு ஏறியது. கால்கள் நேராக நடந்தன. குறுக்காக நடந்தன. சிலரைத் தள்ளிக்கொண்டு நடந்தன. கூவும் கூட்டம் நான் தள்ளத்தள்ள அதுவும் தள்ளியது. சந்நதம் ஏறிய சாமியின் முகம் ஒவ்வொரு அடிக்கும் பெரிதாக நகர்ந்து வந்தது. அவர் அருகில் வந்ததை உணர்ந்தேன், கால் அடங்கியது. சாமி கழுத்துக்கீறிய ஆட்டை வாங்கி, தன் கையில் ஏந்தி, இன்னும் கால் துடிக்கும் உடல் மருளும் ஆட்டின் கழுத்தில் தன் வாய்வைத்து உறிஞ்சினார். பசிதீர பருகும் ஒண்டிக்கருப்பசாமிதான் அம்மையின் கோபத்துக்குத் தீர்வோ. அம்மைக்கு உள்ளது பசியா ஆதங்கமா பயமா. இந்த ஆடு இவ்வுலகத்தில் பிழைக்காது என்று கனிவோடு கேட்கிறாளா. பின்னால் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்று நினைக்கிறாளோ. அல்லாமல் இவர்கள் தானோ தாய்க்கு பசி என்று தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆட்டின் தலை பக்கவாட்டில் சற்று தலைகீழாக இருந்ததைக் கண்கொட்டாமல் பார்த்து, டியூப்லைட் எதிர்மின்னும் ஆட்டின் விழியோடு விழிகலந்து மூழ்கி மறந்திருக்கும் கணத்தில் பிரக்ஞை தெளிந்து, அவ்விழியொளி என்னைப் பிரதிபலிக்கும் முன்பு, அங்கு இன்னும் பல கரிய ஆடுகள் நிற்கவைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து, வேகமாக திரும்பி வீட்டை நோக்கி நடந்தேன். வழிநடையில் காரிருள் காற்று நகராமல் நிலைத்திருந்தது, ஆனாலும் அந்த அமைதியில் என்னால் கேட்கமுடிந்தது – ஏதோ தெரியாததின் ஏதோ உயிர்ப்பான ஒன்றின், தொடங்கவிருக்கும் ஓர் உறுமலை.

*

காலையில் மூன்று பேரும் கிளீனிக்கா இல்லையா என்று சரிவர புரியாமல் இருக்கும் ஒரு கட்டடத்தை ஆட்டோவில் அடைந்தோம். தெரப்பிஸ்ட் எனப் பெயர்போட்டு போர்டு போட்டிருந்தது. வரிசையாக அமைக்கப்பட்டிருந்த சிறிய குஷன் வைத்த இருக்கைகளில் அமர்ந்தோம். பத்து நிமிடத்தில் நீல நிற யூனிஃபார்ம் அணிந்த நர்ஸ் ஒருவர் வந்து என் பெயரைச் சொல்லி, முதலில் அப்பாவையும் அம்மாவையும் உள்ளே கூப்பிட்டார். அம்மாவின் கண்கள் பெருத்து இருந்தன. வற்றா ஊற்றோ என இரவு முழுக்க ஒழுகிய கண்கள் இன்னமும் தன் வரத்து தீராமல் வழிந்துகொண்டிருந்தன. அப்பாவின் முகம் இறுக்கமாக இருந்தது; பந்தை எடுத்து முகத்தில் நேரே வீசினாலும் கண்ணிமைக்காமல் அதை வாங்கிக்கொள்ளும் இறுக்கம். அவர்கள் உள்ளே அறைக்குச்சென்றார்கள்.

ஒருவேளை நான்தான் தவறானவனா. மகேஷைப் பார்க்கும்போதெல்லாம் விரையும் மனத்திற்கு மாற்றம் தேவையா. நான்தான் கட்டுப்படுத்த வேண்டுமா. எல்லா நண்பன்களும் பெண்களைப் பற்றித்தானே பேசுகிறார்கள். எப்பொழுதும் அவர்களின் அந்தப் பேச்சுகளில் ஆர்வம் எழுந்ததில்லையே. ஒவ்வொருமுறையும் விருப்பமில்லாமால் என்ன உரையாடுவதென்று தெரியாமல் சிரித்து மழுப்பிவிடுகிறேனே. சற்றே இன்னும் முயன்றால் என்னாலும் பெண்களைப் பற்றி நினைக்க முடியுமோ, அவர்களைப் பற்றி உரையாட முடியுமோ, இப்போதிலிருந்து வேறொரு நானாக நான் மாறிக்கொள்ள இயலுமோ. 

காத்திருந்த நிமிடங்களில் கழுவிய தரையிலிருந்து மெலிதாக காந்தும் வாசம் மேலேறி மனம்புரியா ஓர் ஆதியுணர்வைக் கிளப்பியது, சென்றமுறை முதல்தடவை இங்கே வந்தபோது இந்தத் தெரப்பிஸ்டிடம் நடந்ததெல்லாம் நினைவிலிருந்து கொப்பளித்தேறியது.

”பேர் என்ன தம்பி? என்ன படிக்கிற?”

”ஷண்முகம். பதினொன்னாவது.”

”கிளாசுல நீதான் மொத ராங்க்குன்னு அம்மா சொன்னாங்களே.”

”இல்ல, எப்பொவுமே இல்ல.”

”ஒடம்புலாம் எல்லாம் சரியா இருக்கா தம்பி” என்றவர், ”கொஞ்சம் ஒடம்ப செக் பன்னிரலாமே,” என்று என் பெல்ட்டைக் கழற்றச் சொன்னார். ஒரு வெண்ணிற கைக்கிறுக்கமான கிளவுஸ் ஒன்றை அணிந்துகொண்டு இடுப்புக்கு கீழ் கால்களுக்கு இடையில் கைவைத்தார். நான் என் இரு கைகளையும் பின்னால் கொண்டுசென்று இறுக்கமாக பிடித்துக்கொண்டேன். இடதுகையின் ஆள்காட்டிவிரலை வலதுகை மணிக்கட்டில் கட்டப்பட்டுள்ள கறுப்புக் கயிற்றில் நுழைத்துக் இழுத்துக்கொண்டேன். வலதுகைவிரல்களை மடக்கிக்கொண்டேன். அவர் பின்பு என் பாண்டையும் உள்ளாடையையும் இறக்கினார். தன் மொபைலை எடுத்து, சில பெண்ணுடல் படங்களையும் ஆணுடல் படங்களையும் வரிசையாகக் காட்டினார். கைகளைக்கொண்டு பிடித்தும் அசைத்தும் பார்த்தார். என் தற்காப்பு, அவரைத் தள்ளிவிடவேண்டுமென்றும் காலால் உதைத்து விடவேண்டுமென்றும், பிறகு அப்படியே கீழே சுருங்கி அமுங்கிவிடவேண்டுமென்றும் உந்தியது. முன்சதையை பின்னால் இழுத்து பார்த்தபோது அப்பாகத்தைச் சுருக்கிச்சுருக்கி அப்படியே என் உடம்பினுள் இழுத்துக்கொள்ளமுடியாதா என தோன்றியது. முகத்தை அவரிடமிருந்து விலக்கி இடதுபக்கம் திருப்பினேன். அண்ணாந்து பார்த்து நீர் விழாமல் பார்த்துக்கொண்டேன். 

பத்துநிமிடம் கழித்து அம்மாவும் அப்பாவும் அந்த அறையிலிருந்து வெளியே வந்தார்கள். அம்மாவின் முகம் மாறாமல் அதேபோன்றே ஈரம்படிந்து இருந்தது. அப்பா இங்கும் அங்கும் தலையைத் திருப்பி என் கண்களைச் சந்திக்காமல் அலையவிட்டிருந்தார். அவர்கள் பின்னாலேயே நர்ஸும் வந்து நின்றுகொண்டிருந்தார். நான் புரிந்துகொண்டு அம்மாவிடமும் அப்பாவிடமும் எதுவும் கூறாமல் எழுந்து அவர்களோடு சென்றேன். நடந்து இரு அறைகள் கடந்து இன்னொரு சிறிய அறைக்கு அழைத்துச் சென்றார்கள். ஒரு சாய்சேரில் உட்காரச்சொல்லிவிட்டு, அதற்குப் பக்கத்திலுள்ள ஒரு கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் ஆப்பரேட் செய்துவிட்டு அறைக்கு வெளியே கிளம்பினார். அதற்கு அருகிலேயே ஒரு நீள்சதுர வடிவ பெட்டி ஒன்று இருந்தது, அது மெல்லிய உறுமலைக் கக்கிக்கொண்டிருந்தது. என் ஃபிசிக்ஸ் லாபில் உள்ள வேவ் ஜெனெரேட்டர் போன்றே இருந்தது. லேபில் அந்தக் கருவியில் நேர்நேரான ஸ்க்குயர் வேவ் உருவாக்குவதற்கும் வளைவு வளைவான சைன் வேவ் உருவாக்குவதற்கும் உண்டான எக்ஸ்பெரிமெண்ட்ஸ் ஞாபகம் வந்தது. எதை ப்ரோகிராம் செய்தோமோ அதுவே உருவாகும். மாற்றவேண்டுமானால் முதலிலிருந்து தொடங்கவேண்டும். ஆனால் எல்லா விதமான அலைகளுக்கும் அதனதன் பயன் உண்டு. 

தெரப்பிஸ்ட் அறைக்குள் நுழைந்தார். அந்தக் கருவியிலிருந்து வெளியேவந்த இருமுனை நுனிகொண்ட கேபிளை எடுத்து என் நெற்றிப்பக்கவாட்டின் இருபுறமும் மாட்டினார். அவர் அருகில் வரும்போதே சேரின் கைகளில் வைக்கப்பட்ட என் கைகளை என்னை அறியாமலேயே என் உடலின் மீது வைத்துக்கொண்டேன். விரிந்திருந்த என் கால்கள் உள்திரும்பிக்கொண்டன. ”ஒன்னும் பயப்படாதீங்க தம்பி. எதுவும் தெரியாது. நீங்க ப்ரொகிராம் பன்னி கம்ப்யூட்டர உங்களுக்குத் தேவையானத சரியா செய்ய வைக்கறீங்கள்ள, அதேமாதிரிதான் நம்ம மூளையும். முடிஞ்சு அரைமணிநேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வெளியில போயிரலாம். எல்லாம் மத்த பசங்க மாதிரியே நார்மல் ஆயிரும். இதையே பாத்துட்டு இருங்க,” என்று ஃபோனில் பெண்ணுடல் வீடியோவை இயக்கினார். அதேசமயம் பக்கத்தில் நர்ஸ் வந்ததை கடைவிழி உணர்த்தியது, அவர் சேரை முழுவதும் சாயச்செய்து முழுபடுக்கைப்போன்று ஆக்கினார்; என் கையில் ஊசி ஏறியது.

இனி நான் எங்கே ஓடுவது. இதுதான் எனக்கு கடைசி நாளா. இதற்குப் பிறகு நான் நானாக இருப்பேனா. இந்த மென்குளிர் ஊட்டப்பட்ட அறையும் இந்தப் படுக்கையும் தலையில் பொருத்தியுள்ள இந்தக் கருவியும் ஒருவித மயக்கத்தையளிப்பது போன்று இருந்தன. தலை கிறுகிறுத்து, அருகில் இருந்த கருவியின் இம்மோசை கொஞ்சம் கொஞ்சமாக ஏறி, பெருகி மக்கள்கூட்டத்தின் கூச்சல் என ஆகியது. நெற்றியின் இரண்டு பக்கமும் ஐஸ்க்யூப் வைத்து சதை ஒட்டிக்கொண்டு குளிராகி இரும்புநெடி அடித்தாற்போன்று இருந்தது. என் உடல் கூர்வேல் போல் குத்தி நின்றாலும், என் நினைவுகளில் புத்தகத்தின் தாறுமாறாக பைண்ட் செய்யப்பட்ட பக்கங்களை விசிறி திறப்பதுபோல காட்சிகள் மின்னிமின்னி மறைந்தன. சைக்கிள் அடுக்குகள், ஃபெம், மாணவர்களின் சிரிப்பு, பொட்டை, சந்திரன் சார், சிகப்பரிசி… பின் எல்லாமும் அற்று போனதுபோல் இருந்தது.

வீட்டின் முன்றிலில் தந்தை பந்தல் கட்டி மணல் பெய்து தரை அமைத்துக்கொடுத்தார். தென்னைகீற்று அறுகால் பந்தல் போட்டிருந்தது. மாலை கொம்பும் கொட்டும் இசைக்கப்பட்டன. நான்கு பெண்கள் மணலைச் சுற்றி எரிபோன்ற எறுழம் மலர் தூவியபொழுது வேலன் வந்தான். அவன் கூந்தல் தோளில் விழுந்திருந்தது. அடர்த்தியாக இல்லாமலும் மெலிதாக இல்லாமலும் மீசையும் தாடியும் தொங்குமாறு இருந்தன. மீசையை எள்ளின் நெய் கொண்டு சற்றே நிமிர்த்தியிருந்தான். அரைக்கு மேலாக எதுவும் அணியாமல் மார்பு திறந்து இருந்தது. சீரான சமமான நெஞ்சு வழவழப்பாகத் தோன்றியது. சேவலின் அஞ்சிறை வண்ணமேற்ற சேயோனே இந்த மென்னுடம்பில் வந்து விட்டானோ என்பதுபோல், வெண்ணறுவை உடுத்தி, கடம்புமலர் சூடி, செந் துகள் மெய்பூசி, காலை உயர்த்தியும் தாழ்த்தியும் ஆடிக்கொண்டுவந்தான். 

மடந்தைபெண்ணை உள்ளிருந்து ஊழ்கடலே முந்நீராய் வடிவெய்தியதுபோல் மூன்று முதுவாய் பெண்டிர் அழைத்து வந்து மணல் பரப்பிய இடப்பக்கம் அமர வைத்தனர். முகம்முழுதும் அச்சம் அப்பியிருப்பதுபோல் மெலிந்திருந்தாள். வேலன் மூர்க்கமடைந்து குறிஞ்சியை வாழ்த்தி பாடத்தொடங்கினான். ”தூவல் அருவி வீழ், காந்தள் மணம் வீசு, கார் மழைக்குன்று, வாடை வாழிய,” மனையே அதிருமாறு அவன் குரல் விரிந்தது. மலைகள் வெய்யோனை முழுங்கி கருந்திசை சூழ்ந்தது. மலையை ஏத்தி பாடிக்கொண்டே மணலைச் சுற்றி ஒவ்வொரு திசையிலும் நரந்தை பழமும் தீக்கம்பும் வைத்து களம் அமைத்தான். மணற்பரப்பில் வலப்பக்கம் இரும்பு வேல் ஒன்றை நட்டான். தீக்கம்புகள் ஒளிநடனம் புரிந்து வேல்நிழலை நான்காக பிரித்து ஒவ்வொருபக்கம் தள்ளி கூத்தாடவைத்தன.

“இவ்வே
செறுநர்த் தேய்த்த சுடரிலை வேலோ
சிற்றில் சிறுபெண் நின்றலை காமமோ
பலி கொள் முருகே
பலி கொள் முருகே”

என அவன் பாடல் தொடர்ந்தபோது, வேலனின் கூடவந்தயிருவர் தாம் வைத்திருந்த யாட்டைப் பெண்முன் நிறுத்தி கழுத்தை அறுத்தனர். அவள் எழுந்து ஓடாதவாறு பெண்டிர் அவளைப் பிடித்துக்கொண்டனர். மறியின் குருதியை வேலன் அகன்வாய் பானையொன்றில் பிடித்து கையால் அச்செந்நீர் எடுத்து தன் முகத்தில் பூசிக்கொண்டு, அப்பானையில் தினையரிசியைப் பெய்தான். பெண்ணின் முன்னால் முட்டி மடங்க பாதி அமர்ந்து, அவள் முகத்துக்கு நேர் பார்த்து, செவ்வரிசி பிடியெடுத்து அவள் தலையில் தூவினான். நெற்றியில் குருதியிட்டான். அவளுடைய வளியாறு அடைத்துக்கொண்டதுபோல் குருதியிலிருந்து இரும்பு வாசனை அவள் நாசியடைத்தது. தலைவனை விரும்பும் அவள் அவ்விடத்திலேயே மின்னென ஒருங்கி மயக்கமுற்றாள். 

மறுகணம் விழித்தேன். அவன் முகம், பஸ்ஸில் படியில் நின்றுகொண்டு சிறிதே சிறிது திரும்பி என்னைப்பார்த்து புன்னகைக்கும் அம்முகம், தோன்றியது. நான் கடைசி சீட்டிலேயே நிறைவாக அமர்ந்திருந்தேன். இயற்கை தன் இயல்போடு ஒட்டிக்கொண்டிருக்கிறதை எண்ணி மனம் நிம்மதிகொண்டது; நான் உணர்ந்த ஆணும், நான் எனும் நானும், மகிழ்ந்தோம், இம்முதன்முறை வெறியாட்டு முடிந்தபின்னர்.

Exit mobile version