Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

வெர்னோனின் மனைவி

இந்த குடியிருப்புக்கு நான் மாறி வந்து  ஏறத்தாழ  ஏழு மாதங்கள் ஆக போகிறது. முன்பிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த பல தொந்தரவுகள் இங்கு இல்லை. இந்த வீடு ஒரு தொடர் வீடு. வீட்டின் இரு பக்க சுவர்களையும், இடப்பக்கமும் வலப்பக்கமும் அண்டை வீட்டுக்காரருடன் பகிரவேண்டும்.

வீட்டுக்குள் இருக்கும் வரை எம்மை பிரிப்பது ஒற்றை சுவர்தான் என்ற நினைப்பே வராது. வெளியிலிருந்து பார்க்கும் போது மட்டுமே நான் சுவரை பகிர்வது தெரியும். அத்தனைக்கு சத்தமோ இரைச்சலோ சுத்தமாக இருக்காது.

நான் முன்பிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் நான் முதல் தளத்திலும் இரு பக்க கிங்கரர்கள் போல கீழ்தளத்தில் நான்கு இளைஞர்களும் மேல் தளத்தில் ஒரு பஞ்சாபி குடும்பமும் குடி இருந்தோம்.

மத்தளத்திற்கு இரு பக்கமும் இடி என்பதெல்லாம் சாதாரணம் என்பது போல, எல்லா பக்கத்திலும்  மேல் வீட்டுக்காரரும் கீழ் வீடு இளைஞர்களும் கொடுத்த மண்டையிடி ,,,சொல்லிமாளாது. 

கீழ் தளத்து தங்கங்களுக்கு இரவு பத்து மணிக்கு மேல் தான் இன்று புதிதாய் பிறந்தோம் என்று சுறுசுறுப்பு வரும் . பகலெல்லாம் என்னதான் செய்வார்களோ. சரி பகலில் வேலைக்குபோவார்கள் என்று வைத்துக்கொண்டாலும் மாலை வேளை என்று ஒன்று இருக்கிறதே… ஆட்கள்  இருப்பதே தெரியாது…அமைதியாக இருக்கும். அந்த அமைதி தான் எனக்கு பீதியை கொடுக்கும். சொல்லிவைத்தது மாதிரி வாரத்தின் ஐந்து நாட்களும் இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து இரண்டு மணி வரை சமைத்து, சாப்பிட்டு , பாத்திரம் கழுவி…..அது என்னவோ இரவில் பாத்திரங்கள் கூட கூடுதல் ஒலி எழுப்புமோ. வார இறுதிகளில் சில வாரம் வீடு அதிர பாட்டும் சீட்டுக்கட்டு விளையாட்டுமாக ஒரே கூச்சலாக  இருக்கும், சில வாரம் எங்காவது கிளம்பி சென்றுவிடுவார்கள்.

சில நாட்களில் சமையல் நடுவே சண்டையும் நடக்கும்.

எங்கள் அடுக்குமாடி தான் கடைசி அதனால் வேறு எவரும் இந்த சத்தத்தால் அலுப்படைந்ததாக தெரியவில்லை. நான் ஒரு முறை ” உங்கள் சமையற்கட்டு பக்கம் இருக்கும் பால்கனி கதவை சற்று அடைத்தீர்கள் என்றால் எனக்கு மேலே சத்தம் வராது என்று சொன்னது தான் ” நீங்கள் உங்கள் கதவை நன்றாக அடைக்கிறீர்களா என்று ஒரு முறை பார்க்கிறீர்களா  ” என்று ஒரு பதிலடி தான் கிடைத்தது. ஆனால் என்ன நினைத்தார்களோ “இனி அடைக்க பார்க்கிறோம் என்று நல்ல பிள்ளைகள் மாதிரி  தலையை ஆட்டி கொண்டு சொன்னார்கள். சொன்னது மட்டும் தான், அதன் பின்னர் வந்த நாட்களில் பாட்டும்  சேர்ந்து ஒலிக்க ஆரம்பித்தது.

இவர்கள் கச்சேரி இரவிலென்றால் மேல் வீட்டு பஞ்சாபி குடும்பமோ பகல் இரவு பாராமல் என் மண்டையில் போடுவார்கள். காலையில் அந்த வீட்டு மகராசி ” உங்களுக்கு டீயை மேஜை மீது வைத்துள்ளேன்” என்று அன்றைய நாளின் முதல் ஒலிபரப்பை துவங்குவார். எனக்கு பஞ்சாபியும் தெரியாது ஒன்னும் தெரியாது. ஆனால் டீ டேபிள் என்று அந்த அம்மா தினமும் சொல்வதை வைத்து நானாக நினைத்து கொண்டது. மனைவியாவது பரவாயில்லை ஒரு வரியில் முடிப்பார், கணவர் அந்த ஒரு டீகே நான்கு நிமிடங்கள் பேசிக்கொண்டே டீயை குடிப்பார். இவர்கள் எல்லாம் எப்படி தான் ரகசியம் பேசுவார்கள் என்ற சந்தேகம் எனக்கு உண்டு.

சமையல் செய்யும் போதும் பேசிக்கொண்டே தான் இருப்பார் அம்மணி . தினமும் இதே நடைமுறை தான்….அந்த வீட்டம்மாவிற்கெல்லாம் ஒரு நாள் கூட உடம்பு முடியாமல் போகாதா என்று கூட யோசித்திருக்கிறேன்.

” போயிட்டு வரேன்” என்பதையே நம்ம ஊரில் திருவிழா ஒலிபெருக்கியில் ” ரமேஷ் எங்கே இருந்தாலும் தண்ணீர் பந்தலுக்கு அருகே வரவும் ” என்று அறிவிப்பது போல தான் கத்துவார்கள்.

அவர்களுக்கு மூன்று குழந்தைகள், மூன்றும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல.

என்னத்தை தான் கொடுப்பார்களோ அவ்வளவு போஷாக்கு. அது அவர்கள் விளையாடும் போதும் , பாடம் படிக்கும் போதும் , சண்டையிட்டுக்கொள்ளும் போதும் கத்தும் கத்தலிலேயே தெரியும்.

கீழ் வீட்டு மண்டையிடிகளாவது நான் பேசும் போது நின்று கேட்டார்கள் . மேல் வீட்டு குடும்பம் என்னிடமே சண்டைக்கு வந்தது ” குழந்தைகள் கொஞ்சம் அப்படி தான் இருப்பார்கள் ” என்று என்னை திருப்பி அனுப்பி, நான் திரும்பி படி இறங்கும்வரை கணவனும் மனைவியுமாக நான் கேட்க கூடாததை கேட்டு விட்டது போல ரவரவ எண்டு பேசிக்கொண்டே இருந்தார்கள்.

வீட்டில் நுழைந்து முதல் வேலையாக அந்த நவம்பரில் தான் என் லீஸ் முடிகிறதா என்று உறுதிப்படுத்திக்கொண்டு கையோடு வீடு தேடும் படலத்தை துவக்கினேன்.

எல்லாமே முதல் முயற்சியிலேயே நடந்து விட்டால் அப்புறம் நான் வைக்க வேண்டிய நேர்ச்சைகளும் விரதங்களும் என்னாவது . எனக்கு தெரிந்த ஓன்று இரண்டு இந்தியர்கள் அதிகம் விளம்பரம் செய்யும் வலைத்தளங்களை அலசிவிட்டு தோதாக ஒன்றும் கிட்டாமல் மடிக்கணினியை மூடவும் மேல் வீட்டு  சில்வண்டு எங்கோ இடித்து கொண்டதோ என்னவோ கூரை இடிந்து விழுவது போல கத்தவும் சரியாக இருந்தது.

அடுத்த நாள் அலுவலகத்தில் என்னிடம் வசமாக என் புலம்பலுக்கு ராப் மாட்டினான். முன்பே என் அடுக்குமாடி குடியிருப்பு இம்சைகள் பற்றி ராபிடம் பேசியிருக்கிறேன், ஆனால் அன்று தீவிரமாக வீடு மாற்றும் திட்டம் பற்றி பேசினேன்.

ராப் நெல்சன் என்ற பெயர் மட்டும் தான் கேட்பதற்கு கொஞ்சம் கம்பீரமாகவோ கரடுமுரடாகவோ ஒலிக்கும், ஆனால் மனுஷன் மிக மென்மையானவன். அந்த மென்மையை அவன் நமக்கு உணர்த்தும்விதம் ரசிக்கத்தக்கது.

காலையில் ஏழு மணிக்கே அலுவலகத்தில் வேலையை துவங்கும் சிலரில் நானும் ராபும் அடங்குவோம். நுழைந்து அரைமணி நேரத்திலேயே என் காபி குவளையையும் எடுத்தபடி ” உனக்கு வேலை இருந்தால் உன் காபியை எடுத்து வரவா ” என்று காபிக்கு அழைப்பான், கூடவே ” வா இந்த மபினை பகிரலாம்” என்று ஏதேனும் சாப்பிட எடுத்துவருவான். சோர்வான நாட்களில் ” ஏதேனும் இடையூறு செய்கிறேனா” என்று குரலை தாழ்த்தி கேட்டுக்கொள்வான். அவனிடம் ஒரு தாயுள்ளம் உண்டு, ஒருவித பரிவும் அக்கறையுமாக விசாரிப்பான், நானும் ராபும் நண்பர்களானது இந்திய சித்தாந்தங்களை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தினால் தான். மிக ஆர்வமாக சித்தாந்தங்களை அலசி அன்றாடங்களில் பொருத்தி பார்ப்பான்.

வீடு மாறுவது பற்றி நான் பேசி முடித்தவுடன் நீண்ட யோசனையிலிருந்த ராப்  ” உனக்கு என்னால் உதவ முடியும்” என்று ஏதோ ” உனக்கு வரும் அருளுவதாக உள்ளேன்” என்று கடவுள் அசரீரியாக ஒலிப்பது போல் தீர்க்கமாக சொன்னான்.

” மிக்க நன்றி ராப், ஆனால் எப்படி” என்று நான் கேட்கவும், ” என்னோட ஸ்டெப் சிஸ்டர் தன்னுடைய பேர பிள்ளைகள் வளர்ந்து வருவதால் அவர்கள் அருகிலிருக்க விரும்புகிறார், அவர் தற்காலிகமாக ஹுஸ்டனுக்கு குடிபெயர்கிறார். தற்போது வசிக்கும் வீட்டை வாடகைக்கு விடும் எண்ணம் இல்லை. சும்மா பூட்டி தான் வைக்கப்போகிறார்கள். உனக்கு விரும்பமிருந்தால் நாம் கேட்டு பார்க்கலாம்” என்று இந்த நெளிவு சுளிவுகள் நிறைந்த வரத்தை அருளினான்.

எனக்கு நம்பிக்கை இல்லை, பெரும்பாலும் அமெரிக்கர்கள், தற்காலிகமாக வீட்டை மாற்றும்போது, அந்த வீட்டை வாடகைக்கு விடுவதை நான் கேள்விப்பட்டதில்லை. இருந்தாலும் இப்போ இருக்கற தலையிடிக்கு கேட்டு பார்க்கலாம் என்று ஒப்புக்கொண்டேன். முதலில் அந்த வார இறுதியில் ராப் அவர்களிடம் பேசுவது என்று முடிவானது.

திங்களன்று என்ன முடிவு என்று தெரிந்துகொள்வதில், அந்த வார இறுதியில் என் படபடப்பு அதிகரித்தது. 

பொதுவாக இந்தியர்கள் பற்றி அமெரிக்கர்களிடம் இருக்கும் பிம்பம் பற்றி யோசித்து பார்த்து, முடிவு எனக்கு சாதகமா பாதகமா என்று ஒரு பட்டிமன்றமே நடத்திக்கொண்டிருந்தேன், எனக்கு  பிடிக்காவிட்டாலும் தீர்ப்பு பாதகத்தை நோக்கியே நகர்ந்தது.

ராப் சொல்லும் முடிவைப்பொறுத்து வேறு எப்படியெல்லாம் வீடு தேடும் படலத்தை தீவிரமாக்குவது என்று சிறுமூளையை கசக்கி பிழிந்தேன், மேவிய அயற்சியில் சீக்கிரம் உறங்கிபோனேன்.

திங்கள் காலை எனக்கு ராசியான பச்சை நிற ஸ்வெட்டரை தேடியெடுத்து அணிந்து எதுவும் சாப்பிடப்பிடிக்காமல் போகும் வழியில் டங்கினில் ஒரு காபியை வாங்கிக்கொண்டு ஏழரைக்கு அலுவலகம் நுழைந்தேன்.

வந்திருந்த மின்னஞ்சல்களை அரைமனசாக வாசித்துக்கொண்டிருந்தேன். ராப் பிரசன்னம்மானான். 

” வார இறுதி எப்படி இருந்தது, இன்று எப்படி இருக்கிறாய்” என்று நலம் விசாரித்தான். இவர்களின் இந்த , எவ்வளவு முக்கியமான பிரச்னையானாலும் நலம் விசாரிப்பு முடிந்தே பேச வந்த விஷயத்தை துவங்கும் பழக்கம் நம் பொறுமைக்கான சோதனையா என்று பலமுறை யோசித்திருக்கிறேன்.

 ” என் வீட்டு தண்ணீர் குழாய் வெடித்துவிட்டது, இப்போது என்ன செய்வது” என்று பக்கத்துவீட்டுக்காரரிடம் கேட்க போனால் கூட அவர்கள் நலம் விசாரிப்பு படலம் முடித்தே விஷயத்திற்கு வருவார்கள்.

நம்ம ஊர் தேவலாம், நாம் கதவை திறக்கும் முன்னரே, ” துளசி இலை பறிச்சுக்கட்டுமா” என்றோ   “கூரியர் வந்தா கொஞ்சம் வாங்கி வைக்கிறீங்களா” என்றோ நேரடியாக அவர்களுக்கு சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டுதான் நாம் சாப்பிட்டு கொண்டிருக்கிறோமா, அலைபேசியில் பேசிக்கொண்டிருக்கிறோமா என்பதை சட்டை செய்வார்கள் …ம்ம் … மக்கள் தான் எத்தனை விதம். 

ராபின் கேள்விக்கு மண்டையை ஆட்டிவிட்டு சம்பிரதாயமாக அவனின் வார இறுதி பற்றி ஒரு ஒப்புக்கு சப்பாணி விசாரணையை போட்டேன்.

பையனுக்கு பொண்ணு உறுதியாகிவிட்டது என்று சொல்வதற்கு வந்தவன் போல ” உன் வீடு பற்றிய தேடல் முடிவுக்கு வருகிறது” என்றான்.

அவனே தொடர்ந்தான், ” நாளை மாலை நீ வரமுடியுமென்றால் நாம் ஜேனின் வீட்டை சென்று பார்க்கலாம். அவர்களுக்கு வீட்டை வாடகைக்கு விட சம்மதம். ஆனால் ஒரு வருடம் மட்டுமே என்றும் என்று முதல் நிபந்தனையை சேர்த்தான்   நான் உன்னைப்பற்றி கூறியதால் உன்னிடம் நேரடியாக பேச விரும்புகிறார்கள்” என்று அவனின் திருவிளையாடல் நல்லபடியாக முடிந்ததாக கூறி சிரித்தான். ஒரு ஆசுவாசம் ஏற்பட்டாலும், இனி வாடகை என்ன சொல்ல போகிறார்களோ என்று அடுத்த யோசனை ஓடியது. மறுநாள் மாலை ஜேன் கேட்டுக்கொண்டபடி சரியாக ஐந்து மணிக்கு அவர்களை சந்திக்க சென்றோம். ஜேன் ராபை விட இருபது வயது மூத்தவர். ஜேன், ராபின் தந்தையின் முதல் மனைவியின் மகள்.

ஜேனும் அவர் கணவரும் வீட்டை படு சுத்தமாக வைத்திருந்தார்கள்.

வீட்டின் கீழ்தளம் மட்டுமே வாடகைக்கு கொடுக்க முடியுமென்றும் மேல் தளம் அவர்கள் பொருட்களுடன் அப்படியே இருக்கவேண்டுமென்றும் அடுத்த நிபந்தனையை வைத்தார்கள்.

கீழ் தளத்தில் இருந்த ஒரு படுக்கையறை, ஒரு அலுவலக அறை, ஒரு சிறிய சமையலறை எனக்கு போதுமானதாக இருந்தது.

மேல் தளத்தையும் வாரம் ஒரு முறை நான் சுத்தம் செய்வதற்கு ஒப்புக்கொண்டால் வாடகை கணிசமான அளவு குறைக்கப்படுமென்று ஒரு சலுகையும் கொடுக்கப்பட்டது. என்னைப்பற்றி எந்த கேள்வியும் பெரிதாக கேட்கவில்லை. நான் வேலை செய்யுமிடம், என் மாத சம்பளம் வாடகை கொடுக்க கட்டுப்படியாகுமா தற்போது எங்கு வசிக்கிறேன் என்று கேட்டுவிட்டு அதற்கென்றே இருக்கும் முகவர் மூலம் என்னை பற்றி பின்புல விசாரணை எதுவும் வேண்டாம் என்று ஜேன் முடிவெடுத்து அந்த வருட நவம்பரில் புது வீட்டில் குடியேறினேன்.

ராபும் நானும் ஒரு சிறு கேக் வெட்டி குடியேறிதை கொண்டாடினோம்.

எனக்கு வீடு தேடி கொடுத்த கையேடு ராப் ஒரு இடியை இறக்கினான்.

அவ்வப்போது திபெத்திய தத்துவங்கள், வாழ்க்கை முறை பற்றி விரிவாக என்னிடம் பேசுவான். ஆனால் ஒரு வருடம் திபெத் சென்று ஒரு மடாலயத்தில் தங்கி தத்துவம் கற்க போவதாக ராப் தெரிவித்தபோது இவன் செய்யக்கூடியவன்தான் என்று முன்பே தெரிந்ததால் பெரிதாக ஆச்சர்யப்படவில்லை. ஒரு வருட விடுப்பு எடுத்துக்கொண்டு தான் கற்றுக்கொள்ள விரும்பும் ஒன்றுக்காக கண்டம் விட்டு கண்டம் போகக்கூடிய அவனின் அந்த வேட்கை மீது சற்றே பொறாமை வந்தது.

அவசியமெனில் தன்னை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள சொல்லி தன் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி பகிர்ந்தான், இருந்த ஒரு ஆறுதல் தோழன் விடைபெற கொஞ்ச நாட்கள் தடுமாறித்தான் போனேன். என் புது குடித்தனம் ஒரு சலசலப்பும் இல்லாமல் நன்றாக போய்க்கொண்டிருந்தது.

இடப்பக்கம் ஒரு கொரிய குடும்பம் வலப் பக்கம் ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர் குடும்பம்.

கொரிய பெண்ணின் பெயர் கேயூ. தலை வெளியே தென்பட்டால் விடமாட்டார். அக்கம் பக்க கதைகளை சொல்லி முடித்துவிட்டுதான் விடுவார். அவர் கணவர் கொரிய மளிகை பொருள் விற்கும் அங்காடி நடத்துகிறார்.

கேயூ வாரத்தில் சில நாட்கள் அங்காடிக்கு கணவருக்கு உதவியாக செல்வார். ஆனால் மனுசி படு சுறுசுறுப்பு, அங்காடியின் கணக்கு வழக்குகளை வீட்டிலிருந்தபடியே சரிபார்ப்பது, பொருட்களை தங்கள் நாட்டிலிருந்து இறக்குமதி செய்வது, விடுமுறை கால தள்ளுபடிகளை முடிவு செய்வது என்று வியாபாரத்தின் முக்கிய முடிவுகள் மனுசி கையில்தான். கேயூ வலப்பக்கத்து குடும்பம் பற்றியும் சில தகவல்களை தெரிவித்தார். முக்கியமாக அந்த வீட்டு பெண்மணி அவ்வளவு ஒன்றும் பேசமாட்டார். தன்னை போலன்றி சற்றே கலகலப்பு குறைந்தவர் என்று சொல்லி ஒரு உதட்டு சுளிப்புடன் அவர்களை பற்றிய அறிமுகத்தை முடித்தார்.

நான் குடியேறிய சில வாரத்திலேயே வெர்னோன் என்னிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினார். 

இந்த வல பக்க ஆப்ரிக்க அமெரிக்கர் பெயர் தான் வெர்னோன் , அவர் மனைவி , மகன் மற்றும் மகளுடன் தான் வசிப்பதாகவும், என் சௌகரியங்களை பற்றியும் ஏதேனும் உதவி தேவைப்படுமென்றால் தயங்க வேண்டாமென்றும் கூறினார்.

அதன்பின் எப்போது தெருவில் எதிர்பட்டாலும் நின்று பேசிவிட்டு தான் செல்வார்.

உண்மையை சொல்லப்போனால் ஏதோ நம்ம ஊர் அண்ணாச்சியிடம் அரட்டை அடிப்பது போலிருக்கும் வெர்னோனிடம் பேசுவது, ஆள் அன்றைய தட்பவெப்பம், மதிய உணவு, தன்  சகோதரி மகன் மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது என்று விரிவாக பேசுவார்.

எனக்கு பொழுது போகாத போது மெதுவாக வெர்னோன் வீட்டின் பக்கவாட்டில் நடை பயில்வேன். ஆள் வெளியே தென்பட்டால் கொஞ்சம் கதை பேசலாமென்று. பல சமயங்களில் இந்த யுக்திக்கு பலன் கிடைத்ததுண்டு.

ஆள் வெளியே வந்து குறைந்தது அரைமணி நேரம் வெட்டி அரட்டை நடக்கும்.

கேயூவிடமும் வெர்னோனிடமும் எனக்கு ஒரே ஒரு குறையுண்டு. மறந்தும் இருவரும் தத்தம் வீட்டுக்குள் என்னை அழைத்து இருத்தி பேசிக்கொண்டிருந்ததில்லை. நான் ஒரு முறை கேயூவை தேநீர் குடிக்க அழைத்தேன். அந்த ஒரு முறைக்கு பதில் மொய் வைப்பது போல என்னை அழைத்து ஒரு கொரிய இனிப்பும் தேநீரும் அளித்தார்.

வெர்னோன் நான் அழைத்தும் தேநீர் அருந்த என் வீட்டினுள் வந்ததில்லை. ஆனால் சமையல் எரிவாயு கசிந்தபோது உதவிக்கு வந்தார். அப்போது நான் வற்புறுத்தியதால் நின்றுகொண்டே சிறிது பழரசம் அருந்திவிட்டு ஓடிவிட்டார்.

மற்றொருமுறை நான் காய்கறி பைகளை காரிலிருந்து இரு கைகள் கொள்ளாமல் சுமந்து வந்தபோது தன வீட்டு ஜன்னல் வழி பார்த்துவிட்டு, ஓடிவந்து பாதி பைகளை என் வீட்டின் கதவின் அருகே வைத்துவிட்டு சென்றார். இவ்வளவு தன்மையானவரை அவர் தன் வீட்டுக்கு அழைக்காததால் கோவித்துக்கொள்ளமுடியுமா சொல்லுங்கள். வெர்னோனை போலவே அவர் மகனும் சிரித்த முகத்துடன்தான் எப்போதும் இருப்பான். மகனுக்கு பன்னிரண்டு வயது தான் இருக்கும். பிள்ளையென்றால் இப்படியல்லவோ இருக்கவேணும் என்று சொல்ல தோன்றும். வார இறுதிகளில் பிள்ளை தன் தந்தையின் காரை கழுவுவான்.  ” உன் தந்தை வேலை கொடுத்துவிட்டாரா ” என்று கேட்டபோது. வெள்ளை பற்கள் பளிச்சிட” ஒரு முறை கழுவுவதற்கு இருபது டாலர் தருவார். அது என் அம்மாவிற்கு சிறு பரிசு பொருள் வாங்க நான் சேமிக்கும் தொகைக்கு உதவும்” என்று மீண்டும் சிரித்தான்.  ” உன் அக்கா எங்கே பார்க்கவே முடிவதில்லை” என்று குசலம் விசாரித்தேன். அவள் வெளியே அதிகம் வருவதை விரும்பமாட்டாள், என் அம்மாவை போல” என்று காரை துடைத்துக்கொண்டே கூறினான். சரி இதற்கு மேல் பிள்ளையை நோண்ட வேண்டாமென்று விடைபெற்றேன்.

அடுத்து வந்த தேங்க்ஸ் கிவ்விங் நாளுக்கு கேயூவிற்கு ஒரு மணிமாலையும், வெர்னோனுக்கும் அவர் மனைவிக்கும் ஒரு காஷ்மீரி சால்வையும் பரிசளித்தேன். ” இந்த பரிசுகளெல்லாம் மிக அதிகம், நீங்கள் இவ்வளவு மெனக்கெட்டிருக்கவேண்டாம்” என்று ஒரு பெரிய தயக்கத்துடன் வீட்டுக்கு வெளியே வந்து கதவை சாத்தியபின் பெற்றுக்கொண்டார். பரிசுப்பொருளை அவர் வீட்டு வாசலில் வைத்தே கொடுக்கமுடிந்தது. அப்போதும் அவர் மனைவியிடம் பேச முடியவில்லை. 

கேயூவிற்கு மாலை ரொம்ப இஷ்டமாக இருந்தது போல, அதை அணிந்து கொண்டே என் வீட்டுக்கு வந்து எனக்கு ஒரு வாசனை திரவிய போத்தலை பரிசளித்தார்.

அந்த வருட கோடையில் நானும் கேயூவும் மாலை நடை போகும் புதிய பழக்கத்தை துவக்கினோம். நடை பாதி கேயூவின் கதைகள் மீதியுமாக பொழுது நல்லபடியாக போய்க்கொண்டிருந்தது. மூன்றாம் தெருவில் ஒரு மெக்சிகன் வீட்டில் காணாமல் போன பூனை எப்படி கண்டுபிடிக்கப்பட்டது, இரண்டாம் தெருவில் விற்பனைக்கு வரவுள்ள வீடு, எதிர் தெருவில் வசிக்கும் பாட்டி இவரின் அங்காடியில் வாங்கிய கொரிய ஊறுகாய் என்று மனுசி கண்டது கேட்டது எல்லாவற்றையும் விரிவாக சொல்லிக்கொண்டே வருவார். ஒரு ஆர்வ மிகுதியால் நானும் “ஏன் கேயூ இந்த வெர்னோனின் மனைவி வெளிஆட்களிடம் பேசவே மாட்டாரா, தப்பி தவறி தெருவில் பார்த்தாலும் ஒரு தலை அசைப்பு மட்டுமே , வேறு பேச்சு ஒன்றும் கிடையாதே ஏன்” என்று கேட்டேன்,

“ஓ அது ஒரு தனி கதை. அவள் பெயர் டேக். எனக்கே சில வருடங்கள் கழித்துதான் தெரியவந்தது. அவளுக்கு சற்றே தாழ்வு மனப்பாண்மையுண்டு  என்பது என் கணிப்பு. ஆப்ரிக்க அமெரிக்கர்களிலேயே கொஞ்சம் வித்தியாசமாக உயரம் இவ்வளவு குறைவாக உள்ள பெண் இவள், மேலும் பள்ளி படிக்கும்போதே வெர்னோனை காதலித்து மனம் முடித்தவள். கல்லூரி சென்று படிக்காதவள், மற்ற நாட்டவரை பார்த்தால் தன்னை விட திறமையானவர்களாக உள்ளார்கள் என்று தான் நினைப்பதாக ஒரு முறை என்னிடம் கூறியுள்ளாள். அதனாலேயே வெளியாட்களிடம் அதிகம் பேசி பழகமாட்டாள். வெர்னோனின் ஆளுமைக்கு டேக் கொஞ்சம் குறைவு தான் ” என்று என் மனதில் இருந்ததை இறுதியாக கேயூ கூறினார். இந்த அலசலின் முடிவில் நடையை முடித்துக்கொண்டு வீடு திரும்பினோம்.

பின் வந்த வாரத்தில் எங்கள் குடியிருப்புக்கு எதிரில் துவங்கப்பட்ட புதிய ஐஸ் கிரீம் கடைக்கு சென்றிருந்தேன். சாப்பிட்டோமா வந்தோமா என்று இருந்திருக்கலாம், வெர்னோனின் மகன் நினைவு வரவே இரண்டு ப்ளூ பெரி ஐஸ் கிரீம்களை வாங்கி கொண்டு வெர்னோன் வீட்டு கதவை தட்டினேன். வெர்னோன் தான் கதவை திறந்தார். அவர் மகனுக்கும் மகளுக்கும் வாங்கினேன் என்று சொல்லி ஐஸ் கிரீமை கொடுத்தவுடன் நன்றி கூறி பெற்றுக்கொண்டாலும் அவர் ஏதோ ஒரு தயக்கத்துடன் பெற்றுக்கொண்டதாகவே எனக்கு பட்டது. தேவையில்லாத அணுக்கத்தை நாடுகிறேனோ என்று கொஞ்சம் சங்கடமும் வந்தது.

கோடையும் முடிந்தது கேயூவும் நானும் மாலை நடைக்கு ஒரு சிறு இடைவெளி விட்டோம். கேயூவை சந்திப்பதும் வாரத்தில் ஒரு நாள் என்றானது , சில சமயம் பத்து நாட்கள் கூட ஆகும்.

நவம்பரில் ஒரு நாள் கேயூ என் அலைபேசியில் அழைத்தார், இது மிக அரிதாக நடக்கும். ஏதேனும் அவசரமா என்று கேட்டேன்.  கொஞ்சம் வீட்டின் பின்புறம் வர முடியுமா என்று கேட்டார். கீழே விழுந்து விட்டாரோ என்னவோ என்று ஓடினேன். மரத்தடுப்பை பிடித்துக்கொண்டு நின்ற கேயூ “ஒரு அதிர்ச்சியான சம்பவம்” என்று முகத்தில் உணர்ச்சி மாறாமல் சொன்னனர்.

கேயூவிற்கு ஒரே ஒரு மகன், அவன் பயணிகள் கப்பல் ஒன்றில் மாலுமியாக உள்ளான், வருடத்தில் ஒரு முறையோ இருமுறையோ வீட்டிற்கு வருவான்.

அவன் தான் ஏதேனும் பெண்ணுடன் வீட்டுக்கு வந்துள்ளானோ என்று என் வழக்கமான அம்மாக்களின் எதிர்பார்ப்புகளை மீறி நடக்கும் “அதிர்ச்சி” சம்பவங்களை வரிசைப்படுத்தியது. இல்லை ஒரு வேளை கேயூவின் கணவர் ஏதாவது…என்று உணர்ச்சிவசப்பட்டு யோசிக்கும்போதே ” வெர்னோன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்” என்று சடாரென்று விஷயத்தை போட்டு உடைத்தார்.

வெளியேறுவது என்பதை நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. நம் ஊர்களில் ஓடிப்போவதை தான் கேட்டிருக்கிறேன். ஒரு வேளை அதைத்தான் கேயூ நாசுக்காக சொல்கிறாரோ என்று நினைத்து ” யாருடன் ” என்று கேட்டேன், ” அவர் மட்டும் ” என்று அடுத்த ஆச்சரியத்தை எடுத்து வைத்தார்.

” அது எப்படி” என்று நான் விழிக்க. சம்பவத்தை கேயூ விவரித்தார். ” நான் சற்று முன்னர் டேக் தன வீட்டின் முன் இருக்கும் செடிகளை நகர்த்திக்கொண்டிருப்பதை பார்த்து உதவி ஏதாவது வேண்டுமா என்று கேட்டேன்.  டேக் லேசாக தலையை ஆட்டினார், நானும் இரண்டு செடிகளை நகர்த்தி வீட்டினுள் வைக்க ஒரு கை கொடுத்தேன். என்றைக்கும் இல்லாத திருநாளாக டேக் என்னை நேரமிருந்தால் கொஞ்சம் அமர்ந்து பேச முடியுமா என்று கேட்டாள். நான் அமர்ந்த உடனே வேகமாக ஒரு கோப்பையில் பழரசம் ஊற்றிக்கொடுத்தாள். நான் வாயில் வைக்கும் போது டேக்கிடம் இருந்து சிறு கேவல் வெளிப்பட்டது. நான் மேற்கொண்டு கேட்காமலேயே,     ” வெர்னோன் வீட்டை விட்டு நேற்று வெளியேறிவிட்டார்” என்று சொல்லி முடித்தாள். சம்பவத்தை விவரிக்கும் போது வார்த்தைகளிலும், முகத்திலும் எவ்வித உணர்ச்சியும் இன்றி தான் கேயூ விவரித்தார்.

ஆனால் ஒன்றை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். கேயூ ஒரு நல்ல ஆலோசகர், டேக்கிடம் காரண காரியங்களை கேட்டுள்ளார். நாங்கள் எதிர்பார்த்தது போல டேக் வெர்னோன்னை பற்றி ஒரு குற்றம் குறை கூறவில்லை. அவர் ஒரு சிறந்த தந்தை, அதிர்ந்து பேசாதவர், மணமான பதினெட்டு வருடங்களில் ஒரு முறை கூட சண்டையோ, பிரச்சனையோ வந்ததில்லை என்று பாராட்டு பாத்திரம் வாசித்துள்ளார்.

பின் என்ன தான் காரணம் என்ற கேயூவின் கேள்விக்கு ” அவருக்கு என்மேல் ஈர்ப்பு போய்விட்டது என்று நினைக்கிறேன். அவருக்கு உங்களை போலவும் உங்களுடன் நடை பயில்வாரே ஒரு இந்திய பெண் அவர் போலவும் நன்றாக பேசி பழகுவது பிடிக்கும், இவர்கள் இருவரும் பல முறை நின்று பேசுவதை நான் பார்த்துளேன், என் கணவரிடம் நாசூக்காக கேட்டுமுள்ளேன். என் கணவர் இது சாதாரண உரையாடல் தான் என்று என்னிடம் கூறியுள்ளார் ஒரு வேலை உங்க இந்திய நண்பிக்கு ஏதேனும் திட்டம் உண்டோ” என்று ஒரு பெரிய இடியை இறக்கியுள்ளார். அது தான் கேயூ என்னை அவசரமாக அழைத்ததற்கு காரணம்.

டேக்கை என்ன சொல்லி விளங்க படுத்துவது என்று குழம்பிப்போன கேயூ  கொஞ்சம் ஆறுதல் படுத்திவிட்டு மீண்டும் வருவதாக வாக்கு கொடுத்துவிட்டு என்னிடம் வந்துள்ளார்.

இது என்ன புது வம்பு, என்று எனக்கு ஒரே படபடப்பு.

டேக் தொடர்ந்தார், நாம் இப்போது டேக்கிற்கு உதவ வேண்டும். அவருக்கு, உனக்கும் வெர்னோனுக்கும் வழக்கத்திற்கு அதிகமான நட்பு உண்டோ என்ற ஒரு தோற்ற பிழை உண்டு .அவர் அப்படி நினைப்பது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை , நீ தனியாக வசிக்கிறாய், வெர்னோன்னிடம் மணிக்கணக்கில் அரட்டை அடித்துள்ளாய் , பரிசுகள் அளித்துள்ளாய்….இது எதுவும் தவறில்லை, மிக மிக சாதாரணம் ஆனால் எதிர்பாராமல் ஒரு உறவு காரணம் சொல்லாமல் நீங்கிச்செல்லும் போது சாதாரணம் எல்லாம் அசாதாரணமாக கற்பனை செய்யப்படும். ஒரு சராசரி அமெரிக்கரை விட வெர்னோன் மிகவும் நட்பானவர், நீயும் அப்படியே, இது எனக்குப்புரியும் ஆனால் டேக் இப்போது இருக்கும் மனநிலையில் அவளுக்கு புரியாது. நாம் ஒன்று செய்வோம் டேக்கிடம் நேரடியாக பேசுவோம் என்று கூறி அப்போதே என்னை இழுத்து சென்றார் கேயூ. 

என் வாழ்நாளில் இப்படி’ஒரு தர்மசங்கடமான விளக்கம் அளிக்கும் தருணம் வந்ததே இல்லை. சூழ்நிலையை எப்படி அணுகுவது, நட்பாக பேசுவதா , கறாராக பேசுவதா, அழுது என் களங்கமின்மையை நிரூபிப்பதா என்று யோசித்துக் கொண்டிருக்கையிலேயே, டேக் வீட்டு கதவை தட்டினோம்.

சலனமேயின்றி கதவை திறந்தவர், உள்ளே அழைத்து அமர செய்தவுடன் என்னை நோக்கி ” உங்களுக்கும் வெர்னோனுக்கும் ஏதேனும் உறவு குறித்து திட்டங்கள் உள்ளதா “, என்று நேரடியாக மிக இயல்பாக என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்பது போல கேட்டார் ” அப்படி எந்த எண்ணமும் இல்லை, வெறும் நட்பு மட்டுமே” என்று நான் நிறுத்திக்கொண்டேன். கேயூ தான் இந்தியர்களின் வளவள பேச்சு சுவாரஸ்யத்திற்கு அளிக்கும் முக்கியத்துவம், நட்பு பாராட்டுவது எங்கள் ரத்தத்தில் ஊறியது, என்று ஏதேதோ சப்பைக்கட்டு உரை நிகழ்த்தினார்.

இந்த கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஐயா என்று ஒருவாறு டேக்கிடம் நிறுவிவிட்டு அவர் நூறு முறை அசௌகரியத்துக்கு மன்னிப்பு கேட்டவாறே இருக்க நாங்கள் விடைபெற்றோம். அழுது ஆர்ப்பாட்டம் எதுவும் செய்வார் என்று நான் நினைத்த டேக், மிக முதிர்ச்சியுடன் வெர்னோனனை ஒரு சந்திப்பிற்கு அழைப்பதாக கூறினார், அது பற்றி நானும் கேயூவும் மேற்கொண்டு மூக்கை நுழைக்காமல் அமைதி காத்தோம்.

மேலும் ஒரு மாதம் கடந்தது, நான் தலையை வெளியே காட்டவில்லை, இந்த ஒரு மாதமும் நாட்கள், வேலை வீடு என்று அமைதியாக கழிந்தது, அதுவே என் மன பாரத்தை அதிகமாக்கியது வீட்டை மாற்றுவது பற்றிய எண்ணம் தலைதூக்கியது. என்னவாக இருந்தாலும் என்னை போய் சந்தேகப்படலாமா என்று உறுத்திக்கொண்டே இருந்தது, இனி எப்படி இங்கு சகஜமாக இருப்பது என்று நித்தம் நித்தம் யோசனையாக இருக்கும், ஏதோ மனசில் பட்டதை கேட்டுள்ளார் என்று சில சமயம் சமாதானம் ஆவேன். ஆனால் கணவர் என்று வந்துவிட்டால் பெண்கள் ஒரே மாதிரிதான் உணர்ச்சிவசப்படுகிறார்களோ என்று தோன்றியது யோசித்துக்கொண்டு இருக்கையில் கேயூவிடமிருந்து அழைப்பு வந்தது. இப்போது என்னவாக இருக்கும் என்று பீதியிலேயே சென்றேன், டேக் நம்மை தேநீர் அருந்த அழைக்கிறார், செல்வோமா என்றார். மறுபடியுமா என்று தோன்றினாலும், போய் வருவோம் என்று இருவரும் சென்றோம். 

கொஞ்சம் இயல்பாக தெரிந்தார் டேக்.

தேநீர் அருந்தும்போது, வெர்னோனை சென்ற வாரம் அவர் சந்தித்தது பற்றி கூறினார். வெர்னோன் தன் வேலையை விட்டுவிட்டு, தங்கள் மத குருவுடன் சேவையாற்ற ஆப்ரிக்கா செல்லவிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் எந்த விவரங்களையும் டேக் எங்களிடம் சொல்லவில்லை, நாங்களும் வற்புறுத்தாமல், மாலை நடைக்கு எங்களுடன் டேக்கையும் இனி வருமாறு அழைத்தோம். பலமுறை கேயூவிற்கு நன்றியும் என்னிடம் மன்னிப்பும் கூறியவாறு புன்னகைத்தார் டேக்.

வீடு வந்த நான் ஒரு வழியாக உறுத்தல் சமணப்பட , பாவம் அந்த டேக்கிடம் இனி நட்பாக இருக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டே “பீப்” என்ற மின்னஞ்சல் அறிவுறுத்தலை பார்த்தேன். ஜேனிடமிருந்து மின்னஞ்சல், ஆர்வமாக படித்தேன், ஒப்புக்கொண்ட ஒரு வருடத்திற்கு மூன்று மாதம் இருக்கும் போதே தாங்கள் ஹூஸ்டனிலிருந்து திரும்புவதாகவும், எனக்கு வேறு வீடு கிடைக்கும் வரை ஆகும் தங்குமிட செலவை தான் ஏற்றுக்கொள்வதாகவும், வீட்டை காலி செய்ய மூன்று வாரம் சமயம் அளித்திருந்தாள். ஜேனும் அசௌகரியத்திற்கு பல முறை மன்னிப்பு கோரியிருந்தால்.அன்று மாலை முழுதும் ஒன்றும் செய்ய தோன்றாமல் அமர்ந்திருந்தேன், நீண்ட யோசனைக்கு பின்னர் இந்த முறை ” நீயே கொடுக்க போகும் வரத்தை முடிவு செய்” என்று ராபிற்கு மின்னஞ்சல் அடிக்க துவங்கினேன்.

Exit mobile version