Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

பழிவாங்கும் தீ – அம்பை

ஆங்கில மூலம் : யமுனா ஹர்ஷவர்தன்

தமிழாக்கம் : கார்த்திக்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை – 3

அஷ்ட வசுக்கள்

அஷ்ட வசுக்கள் அவரவர் மனைவியுடன் மலைப்பிரதேசத்தில் மகிழ்வாக நேரம் கழித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது மகரிஷி வசிஷ்டரின் ஆசிரமத்தை கண்டனர். அந்த சமயத்தில் ரிஷி அங்கில்லை. ஆசிரமத்தின் அருகே தெய்வ பசு நந்தினி மேய்ந்து கொண்டிருந்ததைக் கண்டனர். அஷ்ட வசுக்களில் ஒருவர் அந்த பசுவின் தெய்வீக வடிவை கண்டு மயங்கி அதை புகழ்ந்து பேச துவங்கினார். அவரது மனைவியும் கருணை வடிவாய் இருந்த அந்த சாதுவான பசுவை பார்த்து மயங்கி அந்த பசுவை தங்களுடன் எடுத்த செல்ல விரும்பினார். ஆனால் மற்ற வசுக்கள் இதை எதிர்த்தனர். மனைவி விரும்பி கேட்டதால் அந்த ஒரு வசு மற்றவர்களை இதற்கு சம்மதிக்க வைத்து, நந்தினியை அங்கிருந்து கவர்ந்து சென்றனர்.

வசிஷ்டர், ஆசிரமத்துக்கு திரும்பிய பிறகு நந்தினியை இவர்கள் கடத்தி சென்றது அறிந்து கோபம் கொண்டார். வசுக்களை வரவழைத்து அவர்களை சபித்தார்.

 நீங்கள் உங்கள் நிலைக்கு தகுதி இல்லாத செயலை செய்தீர்கள் ! எனவே நீங்கள் மனிதனாக பிறக்க வேண்டும்

அவரது சாபம் கேட்டவுடன் அனைத்து வசுக்களும் பயந்து, நந்தினியை திரும்ப ஒப்படைத்து சாபத்தில் இருந்து விடுவிக்க கோரினர். ஒருமுறை சபித்தால் அதை மீண்டும் பெற இயலாது. இருந்தும், நந்தினி மீண்டும் வந்ததால் கோபம் தணிந்த வசிஷ்டர் ” அந்த ஒரு வசு மட்டுமே நந்தினியை திருட எண்ணியதால் , அவன் மட்டுமே மனிதனாக பிறந்து முழு வாழ்வும் வாழ்ந்து பின் இறப்பை சந்திக்க நேரிடும். மற்ற அனைவரும் பிறந்ததுமே சாபத்தில் இருந்து விடுபட்டு மீண்டும் வசுக்கள் ஆவீர்கள் ” என சாபத்தை மாற்றினார்.

இதன் பின், வசுக்கள் கங்கையை சென்று சந்தித்து, தங்களின் சாபத்தை பற்றிய விவரத்தைக் கூறி பூலோகத்தில், தங்களது தாயாக இருக்க வேண்டினார்கள். அவர்கள் மேல் கருணை கொண்ட கங்கையும் அதற்கு சம்மதித்தாள் . பூலோகத்திற்கு வந்து, சந்தனு ராஜாவை சந்தித்து அவரை மணந்துக் கொண்டாள். ஆனால் அதற்கு முன் , தான் செய்யும் எந்த செயலைப் பற்றியும் எந்த கேள்வியும் கேட்கக்கூடாது என்ற நிபந்தனை விதித்து அதற்கு அரசன் சம்மதத்தைப் பெற்றாள்.

முதல் ஏழு வசுக்கள் பிறந்த பொழுதும், பிறந்தவுடனேயே அவர்களை கங்கை நதியில் வீசி அவர்களுக்கு சாப விமோசனம் அளித்தாள் . ஏழு குழந்தைகளை அவள் கங்கையில் வீசிய பொழுதும் எதுவும் கேட்காத சந்தனு, அவள் எட்டாவது குழந்தையை வீச முயன்றபொழுது, அவளை தடுத்து அவளது செய்கைகளுக்குக் காரணம் கேட்டார்.

சந்தனுவிடம் தன் உண்மை தோற்றத்தை காட்டிய கங்கை, தனது செய்கைகளுக்கு உண்டான காரணத்தையும் விளக்கி கூறினாள். பின், ” நீ எனக்கு அளித்த சத்தியத்தை மீறியதால், இனி என்னால் உன்னுடன் வாழ இயலாது. இப்பொழுது இக்குழந்தையை என்னுடன் அழைத்து செல்கிறான். உரிய காலம் வரும் நேரத்தில் அவன் உன்னிடம் வந்து சேர்வான் ” எனக் கூறி அக்குழந்தையுடன் அங்கிருந்து சென்றாள்.அதன் பின், பதினாறு வருடங்கள் கழித்து அனைத்தும் கற்ற இளம் வாலிபனாய் அரசனிடம் திரும்பி வந்தது அக்குழந்தை. தேவவிரதன் என அழைக்கப்பட்ட அந்த இளைஞன், அனைவராலும் மதிக்கப்பட்டு, பயத்துடன் பார்க்கப்பட்டான் .அவன் அனைவருக்கும் கவலைப்பட்டு அனைவரையும் பார்த்துக் கொண்டாலும், மகிழ்ச்சி என்பதே வாழ்வு முழுவதும் அறியாமல் இருந்தான்.


பழிவாங்கும் தீ – அம்பை

சத்யவதியின் மகன் விசித்திரவீர்யனுக்கு திருமண வயது வந்ததும் அவனுக்கு உரிய மணமகளை தேடும் வேலையை துவங்கினார் பீஷ்மர். அந்த சமயத்தில் , காசி ராஜனின் மகள்களான அம்பை, அம்பிகா மற்றும் அம்பாலிகாவிற்கு சுயம்வரம் நடைபெற்றது. குணவதிகளும் அழகிகளுமான அவர்களை விசித்திரவீர்யனுக்கு திருமணம் செய்ய முடிவுசெய்தார் பீஷ்மர். சுயம்வரத்திற்கு சென்ற இவரை, இவரது நோக்கம் தெரியாமல் அங்கு வந்திருந்த மற்ற இளவரசர்கள் கிண்டல் செய்தனர். ஏற்கனவே பிரம்மச்சரிய விரதம் பூண்டவர் சுயம்வரத்திற்கு வந்ததால் இந்த கேலி நிகழ்ந்தது. இதனால் கோபம் அடைந்த பீஷ்மர் அவர்கள் அனைவரையும் சண்டைக்கு அழைத்தார். மிக எளிதாக எந்தவித கஷ்டமும் இன்றி அந்த இளவரசர்கள் அனைவரையும் தோற்கடித்து, மூன்று இளவரசிகளையும் அங்கிருந்து அழைத்து சென்றார்.

அம்பை, ஸுபால ராஜன் சால்வனை விரும்பியதையும், சுயம்வரத்தில் அவனுக்கு மாலையிட விரும்பியதையும் பீஷ்மர் அறியவில்லை. அஸ்தினாபுரம் திரும்பும் வழியில் , சால்வன் இவரை வழிமறித்து போருக்கு அழைத்து தோல்வியடைந்தான். அஸ்தினாபுரம் வந்தபின்பே, அம்பை , தனது மனதில் இருப்பதை பீஷ்மரிடம் கூறினார். தான் தவறு செய்ததை உணர்ந்த பீஷ்மர், தக்க பாதுகாப்புடன் அவளை சால்வன் இருக்குமிடத்திற்கு அனுப்பி வைத்தார். ஆனால் சால்வனோ, பலர் பார்க்க பீஷ்மர் என்னை தோற்கடித்தார். எனவே என்னால் உன்னை திருமணம் செய்ய இயலாது என கூறினான்.

இதனால் மனம் உடைந்த அம்பை, கோபத்துடன் மீண்டும் பீஷ்மரிடம் திரும்பி வந்து, நடந்ததை கூற, அவர் விசித்திரவீரியனிடம் அம்பையை திருமணம் செய்யக் கூறினார். அவனோ, மனதில் வேறொரு ஆணை நேசிக்கும் பெண்ணை தான் திருமணம் செய்ய இயலாது எனக் கூறி மறுத்துவிட்டான்.

மீண்டும் சிலகாலம் கழித்து சால்வன் மனம் மாறியிருப்பான் என எண்ணி , அம்பையை அங்கே அனுப்ப, அவன் மீண்டும் மறுத்துவிட்டான். இதனால் கடுங்கோபம் கொண்ட அம்பை, நீங்கள்தான் இந்த நிலைக்கு காரணம் எனவே நீங்களே என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என பீஷ்மரிடம் சண்டையிட்டாள்.

ஆனால், ஏற்கனவே பிரம்மச்சரிய விரதம் பூண்டதால் பீஷ்மர் அவளைத் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். தனது வலிக்கும் வாழ்வின் பிரச்சனைக்கும் பீஷ்மர் மட்டுமே காரணம் என எண்ணிய அம்பை அவரை அழிக்க சபதம் பூண்டாள். சுப்ரமணியரை நோக்கி தவம் இருந்து, என்றும் வாடாத தாமரை மாலையை வரமாகப் பெற்றாள். அந்த மாலையை அணிந்தவர் பீஷ்மரை அழிக்க இயலும் என்பதே வரமாகும்.

அந்த மாலையுடன் வலிமை மிகுந்த பல அரசர்களிடம் சென்று பீஷ்மரை தோற்கடிக்க உதவிக் கோரினாள். ஆனால் பீஷ்மரை பகைத்துக் கொள்ள எவரும் விரும்பாததால் அனைவரும் மறுத்துவிட, அம்பை துருபதனிடம் சென்றாள். துருபதனும் மறுத்துவிட, அவனின் அரண்மனை வாசலில் தாமரை மாலையை தொங்கவிட்டு காட்டுக்கு சென்றாள் அம்பை. அங்கே இருந்த சில முனிவர்கள் அவளை பரசுராமரை அணுகுமாறு கூற, பரசுராமரிடம் சென்றாள். முதலில் சால்வனிடம் பேசி அவளை திருமணம் செய்துகொள்வதாய் அவர் கூற, இனி தன் வாழ்வில் இல்லறத்திற்கு இடம் இல்லையென்றும், பழி வாங்குவது மட்டுமே தன் லட்சியம் என அவள் மறுத்துவிட , பீஷ்மரை போருக்கு அழைத்தார் பரசுராமர். நீண்ட நாட்கள் இருவருக்கும் வெற்றி தோல்வி இன்றி சண்டை நீடிக்க, இறுதியில் தன் தோல்வியை ஒத்துக்கொண்டு அங்கிருந்து விலகினார் பரசுராமர்.

இதனால், மனம் உடைந்த அம்பை மீண்டும் சிவனை நோக்கி கடுமையான தவமிருக்க துவங்கினாள். இறுதியில் அவள் தவத்தை மெச்சி காட்சியளித்த சிவன், அடுத்த பிறவியில் அவள் பீஷ்மரை கொல்ல முடியும் என வரமளித்தார். இதனை கேட்டவுடன், தீ மூட்டி, அதில் இறங்கினாள் அம்பை.

அடுத்த பிறவியில் துருபதனின் மகளாக பிறந்தாள் . சிறு வயதிலேயே அம்பை முன்பு வாயிலில் தொங்க விட்டு சென்ற தாமரை மாலையை எடுத்து அணிந்து கொண்டாள் . இதை அறிந்த துருபதன், பீஷ்மரின் கோபத்திற்கு ஆளாகாமல் இருக்க, அவளை காட்டிற்கு அனுப்பி வைத்தார். காட்டில் போர்கலைகளை கற்றவள், அங்கிருந்த யட்சனின் உதவியுடன் ஆணாக சிகண்டியாக மாறினாள்.

மகாபாரத யுத்தத்தில் சிகண்டி பெண்ணாக பிறந்தவள் என அறிந்திருந்த பீஷ்மர் அவளை தாக்கவில்லை. பத்தாம் நாள், யுத்தத்தில், அர்ஜுனனுக்கு சாரதியாக கிருஷ்ணரின் இடத்தில் சிகண்டி இருக்க, அர்ஜுனன், சிகண்டி இருவருமே அவர் மேல் கணைகளை தொடுத்தனர். பிதாமகர், அர்ஜுனனின் அம்புகள் வலிமையாகவும் துன்புறுத்துவதாகவும் இருந்ததாகக் கூறினார். அவருடைய நீண்ட துன்பகரமான வாழ்வு அங்கு முடிவுக்கு வந்தது.


பதிலுக்கு பதில்…

துரோணரும், துருபதனும் அவர்களின் இளம் வயதில் ரிஷி பாரத்வாஜரின் குருகுலத்தில் பயின்றுவந்தனர். அப்பொழுது இருவரும் மிக நெருங்கிய தோழர்களாய் இருந்தனர். அந்த நேரத்தில், துருபதன் துரோணருக்கு ஒரு வாக்கு அளித்தார். அவர் நாட்டின் அரசராக ஆகும் பொழுது, அவரது சாம்ராஜ்யத்தின் பாதியை துரோணருக்கு அளிப்பதாக கூறினார். குருகுலம் முடிந்து இருவரும் பிரிந்தனர். துருபதன் நாளடைவில் பாஞ்சால நாட்டின் அரசன் ஆனான். துரோணர், க்ருபரின் சகோதரி கிருபையை மணந்து அஸ்வத்தாமன் என்ற மகனை பெற்றார். உலகிலேயே சிறந்த வில்லாளி ஆக வேண்டும் என்ற ஆசையில் பரசுராமரிடம் மேலும் பயின்றார்.

வித்தையில் சிறந்தவராக இருந்தாலும், போதுமான வருமானம் இல்லாததால் மிக வறுமையில் சிக்கி தவித்தார் துரோணர். ஒருமுறை, அஸ்வத்தாமன் அவனது அம்மாவிடம், ” அம்மா என் நண்பன் பால் பருகியதாகக் கூறினான். பால் என்றால் என்ன ? ” என கேக்கும் அளவிற்கு அவர்கள் வறுமையில் இருந்தனர். இதனால் வேதனையுற்ற கிருபை துருபதனின் வாக்கை துரோணருக்கு நினைவூட்டி அவரிடம் சென்று உதவி கேக்க சொன்னாள்.

இளம்பிராயத்து நினைவுகளும் துருபதனுடன் கழித்த இன்பமான நினைவுகளும் மனதில் தோன்ற பாஞ்சாலத்திற்கு சென்றார் துரோணர். அங்கே அரசவையில் துருபதனை நண்பனாய் நினைத்து பேச, அதிகாரத்தில் இருப்பதால் அகந்தையில் துருபதன் துரோணரை பிச்சைகாரன் என்றும் அரசரை நேரடியாக சந்தித்து பேச அருகதை இல்லை என்றும் அவமதித்தான்.

இதனால் கோபம் கொண்ட துரோணர், இதற்கு பழி வாங்க உறுதி பூண்டார். சில காலம் கழித்து , துரோணர் குரு வம்சத்து ஆச்சாரியாராக ஆனார். குரு வம்ச இளவரசர்களின் குருகுல காலம் முடிந்ததும், அவர்களிடம் குரு தட்சணையாக துருபதனை பிடித்து வர சொன்னார். இளவரசர்கள் அவர்களின் முதல் போரை எண்ணி சந்தோசத்துடன் சென்றனர்.

முதலில் போருக்கு சென்ற கௌரவர்களை எளிதாக தோற்கடித்தான் துருபதன். அதன்பின், யுதிஷ்டிரன் இல்லாமல் சென்ற பாண்டவர்கள், துருபதனை எளிதில் வீழ்த்தினர். அர்ஜுனன் அப்பொழுதே தீர செயல்கள் செய்து தான் சிறந்த போர் வீரன் என நிரூபித்தான். எதற்காக இந்த யுத்தம் என புரியாமலே அவர்களிடம் கைதியானான் துருபதன்.

தன் மாணவர்களின் சாமர்த்தியத்தை கண்டும், தன் சபதம் நிறைவேறியதை கண்டும் துரோணர் மகிழ்ந்தார். பின் துருபதனை நோக்கி ” நீ என்னை பிச்சைக்காரன் என்று அழைத்தாயே நினைவிருக்கிறதா ? இன்று உனது ராஜ்ஜியம் என்னிடம். இப்பொழுது, உன் உயிரை காப்பாற்றக் கூடியது என்று எதுவும் உன்னிடம் இல்லை. இப்பொழுது மற்ற பிச்சைக்காரர்கள் போன்றுதான் நீயும். உன்னை இப்பொழுதே கொன்றுவிட்டு உன் ராஜ்யத்தை நான் எடுத்துக்கொள்ள முடியும். ஆனால், எனக்கு உன் நட்பே மீண்டும் வேண்டும். அதனால், பாதி ராஜ்யத்தை திருப்பி அளிக்கிறேன் ” என்றார்.

தன் சபதம் நிறைவேறியதும் துரோணரின் கோபமும் தணிந்தது. ஆனால் அந்த சம்பவம் அப்படி நல்லபடியாக முடியவில்லை. துருபதனின் உள்ளிருந்த கோபம் வெளிப்படாமல் உள்ளுக்குள்ளே நீறு பூத்த நெருப்பாய் இருந்தது. அது பழி வாங்கத் துடிக்கும் , சண்டையிடவும் கொல்லவும் பிறந்த ஷத்ரிய வம்சத்தின் கோபம் அது. பிராமணரை கொல்லும் ஒரு மகனும், அர்ஜுனன் போன்ற ஒரு வீரனை மணக்கக் கூடிய மகளும் வேண்டும் என்று அப்பொழுதே மனதில் உறுதி கொண்டார். தன்னை கைது செய்து கொண்டுவந்தாலும் அர்ஜுனனின் வீரத்தை பாராட்டாமல் இருக்க இயலவில்லை அவரால்.

திருஷ்த்துட்யும்னன் , ஆச்சாரியார் துரோணரை கொன்றான், திரௌபதி அர்ஜுனனை மணந்து அதன் மூலம், பஞ்சபாண்டவர்களுக்கும் மனைவியானாள்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை

சிற்றின்பம் மற்றும் உணர்திறன் காதலில் துறவி
Exit mobile version