ஆங்கில மூலம் : டோபையாஸ் ஊல்ஃப் (1996)
தமிழாக்கம்: மைத்ரேயன்
அவள் வேலையில் இருக்கும்போது அது துவங்கியது. முதல் இடிப்பில் அவளுடைய மூச்சு நின்றதுபோல இருந்தது, அவள் கண்கள் விரிந்து திறந்தன. பிறகு அது அடங்கியது, அவளுடைய பின் கழுத்தில் இலேசான ஓர் அழுத்தத்தை மட்டும் விட்டிருந்தது. விசைப்பலகையின் இரு பக்கங்களிலும் கைகளை ஊன்றிக் கொண்டு காத்திருந்தாள் ஜாய்ஸ். அவளைச் சுற்றி இருந்த தடுப்பறைகளிலிருந்து விசைப்பலகைகளின் தொடர்ந்த க்ளிக் ஓசைகள் கேட்டபடி இருந்தன. தனக்கு என்ன ஆகிக் கொண்டிருக்கிறதென்று அவளுக்குத் தெரிந்திருந்தது, அது அத்தனை நன்றாகவே தெரிந்ததால், அடுத்த அலை வரும்போது அதை அவள் வலியாக உணரவில்லை, மாறாக இன்னும் என்ன வரப்போகிறதென்பது குறித்த பயமாக உணர்ந்தாள். ஜாய்ஸ் தன் முனையத்தை அணைத்தாள், சோதனைச்சாலை அறிக்கைகளைச் சேகரித்தாள், ஒரு கோப்பில் இட்டாள்.
தன் மேலாளரின் அலுவலக அறை வாசலில் நின்றாள், தான் சீக்கிரமாக வீட்டுக்குப் போக வேண்டியிருப்பதைச் சொன்னாள். அவர் பரிவு காட்டும் முகபாவத்துடன், ஜாய்ஸால் வீட்டுக்குக் காரை ஓட்டிப் போக முடியாதென்றால், அவளுக்கு ஒரு வாடகைக் காரை அழைப்பதாகச் சொன்னார்; அதற்கான கட்டணத்தை நிறுவனத்தின் சில்லறைச் செலவுக்குப் பணமாக ஒதுக்கப்பட்டதிலிருந்து கொடுக்கலாம் என்றும் சொன்னார். “இதற்குத்தான் அந்தப் பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறது,” என்று அந்தப் பெண்மணி சொன்னார்.
“வேண்டாம், நான் சமாளிப்பேன்,” ஜாய்ஸ் அவளிடம் சொன்னாள். மேலும் சொன்னாள்: “இதற்காக நீங்க சத்தத்தை அடக்கிப் பேச வேண்டாம்.”
ஜாய்ஸ் வீட்டுக்குக் காரை ஓட்டிக் கொண்டு போகவில்லை. மாறாக ஒரு வாடகைக் காரை அலுவலகக் கட்டடத்து முன் கூடத்திலிருந்து தொலைபேசியில் அழைத்தாள், முதலிலிருந்தே அப்படிச் செய்வதாகத்தான் அவள் திட்டம். அவளுடைய மேலாளர் இலவசமாகப் பணம் கொடுப்பதாக நினைத்திருக்கலாம், ஆனால் அது அப்படி முடியாது. யாரும் தங்களுடைய மனத்தில் பொங்கும் தாராள உணர்வால் ஏதும் கொடுத்தால் அதை நினைவு வைத்திருப்பார்கள் என்பதோடு நாமும் அதை நினைவு வைத்திருப்போம், அதுவும் என்றென்றும் என்று எதிர்பார்ப்பார்கள். ஜாய்ஸுடைய அனுபவத்தில் சில்லறைச் செலவு நிதி என்று ஒன்றும் கிடையாது.
அவள் வீட்டுக்குத் திரும்பியபோது, முன்னறையில் இரண்டு அட்டைப் பெட்டிகள் இருப்பதைப் பார்த்தாள், அவை அவளுடைய அடுக்ககத்தைப் பங்கிட்டுக் கொண்டவளுடைய சில பொருட்களால் நிரம்பியவை. ஜாய்ஸும் டீனாவும் மறுபடியும் சண்டை போட்டிருந்தனர், இப்போது டீனா அவர்கள் ஒத்துக் கொண்டிருந்தபடி, இறுதி நடவடிக்கையாக, அடுக்ககத்தை விட்டு வெளியேறவிருந்தாள். ஜாய்ஸ் பெட்டிகளைப் பார்த்தாள், அவற்றைச் சோதிக்க வேண்டுமாவென யோசித்தாள், ஆனால் அந்த எண்ணம் தன் கௌரவத்துக்குத் தாழ்வானது என்று ஒதுக்கினாள். அந்த மாதிரிதான் அவள் முன்பு செய்வாள், ஆனால் அப்படிச் செய்வதை நிறுத்தத் தானே கஷ்டப்பட்டுக் கற்றுக் கொண்டிருந்தாள். தன் கண்களை ஒரு கணம் மூடிக் கொண்டாள், இப்படியும் அப்படியும் உடல் ஆடிக் கொண்டிருந்தது, பிறகு அறையைக் குறுக்காகக் கடந்தாள், தொலைக்காட்சியை முடுக்கிவிட்டாள். திரையில் ஒரு பெரிய கடிகாரம் வினாடிகளைக் காட்டிக் கடந்து கொண்டிருந்தபோது, அடிக்கிற மஞ்சள் நிறத்தில் மேலங்கி ஒன்றை அணிந்த அறிவிப்பாளர், பார்வையாளர்களின் பெரும் ஆரவாரத்திற்கு மேலே கத்திக் கொண்டு தன் குரலை மேலெழும்பிக் கேட்கும்படிச் செய்ய முயன்று கொண்டிருந்தார். ஜாய்ஸ் ஒலியை நிறுத்தி விட்டு, சமையலறைக்குச் சென்று தனக்குத் தேநீர் தயாரிக்கத் தண்ணீரைக் கொதிக்க வைக்கப்போனாள்.
செய்தித்தாள் சமையல் மேடைமீது சிதறிக் கிடந்தது, அதன் விளிம்புகள் காற்றில் படபடத்தன. டீனா ஜன்னல் கதவுகளை மறுபடியும் திறந்து வைத்து விட்டுப் போயிருந்தாள். ஜாய்ஸ் அவளுக்குப் படித்துப் படித்துச் சொன்னபோதும், டீனா சாதாரணப் பாதுகாப்பு முயற்சிகளைக் கூட எடுத்துக் கொள்ளத் தயாராக இல்லை, தன்னுடைய கவனக் குறைவுகளை முக்கியமில்லாதவை என்று ஒதுக்கி விடுவாள், ஏன் பொருட்கள் மீது பற்றில்லாத சுதந்திரப் பிறவியாகத் தான் இருப்பதன் இனிமையான விளைவு என்று கூட எடுத்துக் கொள்வாள். ஆனால் ஜாய்ஸ் இதையெல்லாம் தாண்டிப் போய் டீனாவைப் புரிந்து கொண்டாள்; இப்படி இருப்பதால் டீனா இவற்றுக்கு எதிரான நிலையை வகிக்கும் கட்டாயத்தில் தன்னைத் தள்ளி இருக்கிறாள், அதாவது எதையும் இறுகப் பிடிக்கும் மனநோயாளியாக இருப்பதில். அந்த மாதிரி இருப்பதாகத் தன்னையே ஜாய்ஸ் சில நேரம் கண்டிருக்கிறாள். ஆனால் இனிமேல் அப்படி இருக்கப் போவதில்லை அவள். அதெல்லாம் முடிவுக்கு வந்தாயிற்று.
வெந்நீரைக் கொதிக்க வைத்தாள், பிறகு ஜன்னலருகே போனாள். ஜன்னல் கட்டையில் முழங்கைகளை வைத்தபடி தன் முகத்தை உள்ளங்கைகளில் தாங்கி நின்று, நெற்றிப் பொட்டை விரல் நுனிகளால் பிசைந்து கொண்டாள். துடிப்பு துரிதமாக ஆரம்பித்ததால் மேன்மேலும் அழுத்திப் பிசைந்தாள். அதனுடைய மிக மோசமான கணத்தில், அவளுடைய காதுகள் ஒலியைக் கேட்காமல் அவள் செவிடாக ஆனது போல இருந்தது, அவளுடைய தலையை யாரோ திடீரென்று தண்ணீருக்குள் அழுத்தினாற்போல இருந்தது. பிறகு அது கடந்தது. ஜாய்ஸ் இப்போது தன் தாறுமாறான மூச்சொலியைக் கேட்டாள். மேலே இருந்த ஓட்டுக் கூரை மீது புறாக்களின் கால்களின் சீய்ப்பு ஒலிகளைக் கேட்டாள். அருகில் இருந்த பள்ளிக்கூடத்து விளையாட்டு மைதானத்தில் குழந்தைகளின் குரல்கள் கேட்டன, வெகு தூரத்திலிருந்து தரையைப் பிளக்கும் ஜாக்ஹாமரின் ஒலி பொறுத்துக் கொள்ளுமளவு அடங்கிக் கேட்டது, ஓரளவு சௌகரியம் கொடுப்பதாகக் கூடத் தெரிந்தது, அவள் வளர்ந்த கல்லூரி மைய நகரத்தின் அணிவகுப்புக்கான இசைக் குழுக்களின் தூரத்து இசையொலியை அது ஒத்திருந்தது.
தன் முகத்திலிருந்த வியர்வை குளிர்ந்த காற்றில் உலர நின்றாள் ஜாய்ஸ். பிறகு ஜன்னலை மூடினாள், தேநீருக்கு ஊறவைக்கவிருந்த ஒரு கரண்டியில் காமொமைல், டிலியா மற்றும் ஸ்பிர்மிண்ட் இலைத் துகள்களால் நிரப்பினாள்.
ஜாய்ஸின் கண்களில் உறுத்தலாக இருந்தது. அவளுடைய தோல் ஈரமாக இருந்தது, அவளுடைய மேல்சட்டை நனைந்திருந்த இடத்தில் குளிர்ச்சியாக ஒட்டிக் கொண்டது. அவள் தேநீரைத் தன் படுக்கையறைக்கு எடுத்துச் சென்றாள், படுக்கைக்கு அருகிலிருந்த சிறு மேஜையில் வைத்தாள், தான் ஆடைகளைக் களையும்போது ஊறட்டும் என்று விட்டிருந்தாள், தன் படுக்கையின் விளிம்பில் உட்கார்ந்தாள். அறை களேபரமாக இருந்தது. எல்லா இடங்களிலும் துணிகள், கொக்கிகளில் இருந்தும், கைப்பிடிகளிலிருந்தும் தொங்கின, தரையில் குவியலாகக் கிடந்தன. மேலும் செய்தித்தாள்கள். தவிர, டீனாவின் பெற்றோரைப் பார்க்கப் போவதற்காக அடைக்கப்பட்ட பெட்டிகள் இன்னும் ஒழிக்கப்படாமல் நிரம்பியே இருந்தன. அந்தப் பயணமும் நடக்கவில்லை, ஜாய்ஸ் அப்போதும் நோய்ப்பட்டு இருந்தாள். அவள் ஒரு காலணியை எடுக்கக் குனிந்தாள், கீழே போட்டாள், முன் நோக்கி ஆடி எழுந்து நின்றாள். டெர்ரி குளியல் அங்கியை அணிந்து கொண்டு, முன்னறைக்குச் சென்றாள், அங்கே, சோஃபாவில் சாய்ந்தமர்ந்தபடி, தன் தேநீரை உறிஞ்சினாள், தொலைக்காட்சியை ஒலியில்லாமல் பார்த்தாள்.
தேநீர் உதவியது. அதிகமாக இல்லை, ஆனால் அவளுக்கு நடப்பதன் மீது ஜாய்ஸுக்கு ஒரு அளவு கட்டுப்பாட்டைக் கொடுத்தது. டீனா பிடித்துப் பிசைந்து விடுவதற்கு மட்டும்தான் பலன் இருந்தது, வேறெதுவும் வேலை செய்யவில்லை. ஜாய்ஸ் மூலிகைக் குளியல்கள் எடுத்துக் கொண்டாள். மது அருந்திப் பார்த்தாள், போதைமருந்துகள் எடுத்துக் கொண்டாள். அவள் கேள்விப்பட்ட எல்லா சிகிச்சைகளையும் முயன்றாள், பார்த்தவுடனேயே உபயோகமற்றவை என்று தெரிந்தவற்றைத்தான் முயலாமல் விட்டிருந்தாள் – ஸ்கூபா டைவ் செய்பவர்களின் சிலிண்டர்கள் மூலம் மூச்சு விடுவது என்ற யோசனையைப் போன்றவை அவை. டீனா வலுக்கட்டாயமாகச் சேர்த்துவிட்ட ஒரு செய்திமடலில் அந்த வழிமுறை கொடுக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் தன் பிரச்சினையைப் பற்றி மேலும் எதையும் படிப்பது தன்னை நலமாக்குவதற்குப் பதில் மோசமாக்குகிறது என்று புரிந்து கொண்ட ஜாய்ஸ் அவற்றைப் படிப்பதை நிறுத்தினாள். அந்தச் செய்தி மடலின் தொனியே சுயப்பரிதாபம் நிறைந்ததாக இருந்தது என்பதும், அதன் வாசகர்கள் கஷ்டப்படுவதைத் தனியே இருந்து படவில்லை என்று அது முடிவு கட்டிக் கொண்டதும் ஜாய்ஸுக்கு வெறுப்பைக் கொடுத்தன.
ஏனெனில் அவர்கள் தனியேதான் இருந்தனர். உண்மையில் எல்லாருமே தனியேதான் இருக்கிறார்கள், ஆனால் நாம் நோய்வசப்படும்போது நமக்கு அது நன்கு தெளிவாகிறது, அப்படி அறிந்து கொளவது இருக்கிறதே -அதுதான் கஷ்டப்படுவது என்பதில் பெரும்பகுதி.
ஜாய்ஸ் தேநீரில் மிச்சத்தைக் குடித்தாள். கோப்பையைத் தரையில் வைத்தாள், டீனாவின் பெட்டிகளை உற்று நோக்கினாள். அல்மாடென்: அந்தப் பெட்டிகளை டீனா மதுபானக் கடையிலிருந்து கொண்டு வந்திருக்க வேண்டும். அவை மேல் புறத்தில் திறந்திருந்தன. ஒரு வெள்ளை மோஹேர் கம்பளி ஸ்வெட்டர் ஒரு பெட்டியின் மேல் கிடந்தது, இன்னொரு பெட்டியின் மேல் புட்டிகளும், பல ப்ளாஸ்டிக் ட்யூப்களும் கலந்து கிடந்தன. ஜாய்ஸ் பின்னே சாய்ந்து அமர்ந்தாள். கண்களை மூடிக் கொண்டாலும், அவளால் தொலைக்காட்சித் திரையில் காமெரா தொகுப்பாளரிடமிருந்து போட்டியாளர்களுக்கும், அவர்களிடமிருந்து தொகுப்பாளருக்கும் தாவுவதை ஒளி மாற்றங்களில் உணர முடிந்தது. அடுக்ககம் ஆழ்ந்த மௌனத்தில் இருந்தது.
தனியாக இருப்பது நன்றாக இருந்தது. நம் வாழ்க்கை அவர்களுடைய வாழ்க்கையோடு கலந்திருப்பதாக நாம் கற்பனை செய்து கொள்ளும்படியாக வேறு யாரும் கூட இல்லாமல், நிஜமாகத் தனியாக இருப்பது. ஆனால் அது ஒருபோதும் உண்மையில்லை. மேய்ச்சல் நிலத்தில் வெவ்வேறு திசைகளில் பார்த்துக் கொண்டு நிற்கும் பசுக்களைப் போல, மனிதர் சேர்ந்து இருக்கும்போதும் தனியராகத்தான் இருந்தார்கள்.
நாம் விரும்பினாலும் இன்னொரு மனிதரின் வாழ்வில் நம்மால் நுழைய முடியாது. முன்பு ஆகஸ்ட் மாதம், ஜாய்ஸும் டீனாவும் இரவுணவுக்கு ஒரு தோழியை அழைத்திருந்தார்கள், அந்த மாலை நேரத்தில், சமீபத்தில் ஒரு வினோதமான விபத்தில் அகப்பட்டுக் கொண்டவர்களாக அவர்கள் எல்லாருக்கும் தெரிய வந்த ஒரு ஜோடியைப் பற்றி அவள் ஒரு கதை சொன்னாள். அவர்கள் தம் அடுக்ககத்தில் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, மேல் தளத்தில் நீரால் நிரப்பட்ட மெத்தையில் படுத்திருந்த ஒரு பெருத்த நபர், இவர்களுடைய அறைக் கூரையைப் பிய்த்துக் கொண்டு கீழே இவர்கள் மேல் விழுந்திருக்கிறார். இவர்கள் கொல்லப்படவில்லை என்பது ஓர் அதிசயம்தான் – ஆனால் அப்படி அதைப் பார்ப்பது இவர்களுக்கு ஒரு ஆறுதலையும் தராது, ஏனெனில் அவர்கள் பட்ட காயங்கள் அப்படிப்பட்டவை: ஒருவருக்கு கழுத்தெலும்பு முறிந்தது, கழுத்துச் சுளுக்கும், மண்டைக்குள் பலத்த அடியால் அழுத்தமும் இன்னொருவருக்கு. அந்தத் தோழி தன் கதையை முடித்தபோது ஜாய்ஸும் டீனாவும் தங்கள் தலைகளைக் குலுக்கினார்கள். தங்கள் சாப்பாட்டுத் தட்டுகளைப் பார்த்து அமர்ந்திருந்தார்கள். ஜாய்ஸ் தன் தாடைகளை இறுக்கி மூடிக் கொண்டு சமாளித்திருந்தாள், ஆனால் டீனாவுக்கு மூக்கு வழியே சீறிக் கொண்டு சிரிப்பு வெளிவந்தது. உடனே மூவருமே கட்டுப்பாட்டை இழந்து கெக்கலித்தனர். ஊளையிட்டுச் சிரித்தனர். அவர்களால் நிறுத்த முடியவில்லை. ஜாய்ஸுக்கு மூச்சு நிற்பது போல ஆனதால், அவள் தன் நாற்காலியைப் பின்னே தள்ளிக் கொண்டு, தன் தலையை முழங்கால்களில் பதிக்கும்படி ஆயிற்று.
ஆனால் அவளுக்கு இந்தப் பெண்களைத் தெரியும். அவர்களின் வலிகள் அவளுக்குப் பொருட்படுத்த வேண்டியதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது கூட, தானே வலியில் அவதிப்படும்போதும், அவளால் அவர்களின் வலிகளை உணர முடியவில்லை, அல்லது அவள் அவர்களின் வலிகளை உணர்ந்திருக்க வேண்டும் என்ற நினைப்பைத் தாண்டி அவர்களை நெருங்க முடியவில்லை. அந்த தண்ணீர் நிரம்பிய மெத்தை அவர்கள் மேல் விழாமல், அவள் மேலும், டீனா மேலும் விழுந்திருந்தாலும், இதேதான் உண்மையாக இருக்கும். அவளை அந்த விபத்து கொன்றிருந்தாலும், அவர்கள் சிரிக்கத்தான் சிரித்திருப்பார்கள், பிற்பாடு அந்தச் சிரிப்புக்காக வருந்தியிருப்பார்கள், அவள் இப்போது தான் சிரித்ததற்காக வருந்துவதைப் போல. அவர்கள் தங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டு போயிருந்திருப்பார்கள், அவளைப் பற்றி நினைப்பதைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டே போயிருப்பார்கள், எப்போதாவது நினைத்தாலும், அவளுடைய உதட்டில் இப்போது இருக்கும் அந்தச் சிரிப்பைப் போல, தம்மை மீறி எழும் ஒரு சிரிப்போடு நினைத்திருப்பார்கள்.
தேநீரின் தாக்கம் குறைந்து வந்தது. தலையணையிலிருந்து தலையைத் தூக்கிய ஜாய்ஸ், மெல்ல எழுந்து அமர்ந்தாள். பெட்டிகளை மறுபடி பார்த்தாள், தொலைக்காட்சியைப் பார்த்தாள். ஓர் ஆண் முகம் மாறாமல் சிரித்தபடியே இருக்கையில், அவனுக்கு அடுத்து உட்கார்ந்திருக்கும் ஒரு பெண் அவன் தலையில் ஒரு டப்பியிலிருந்து வெள்ளைப் பிசினைக் கவிழ்த்துக் கொட்டினாள்.
ஜாய்ஸ் கையூன்றி எழுந்தாள். சமையலறைக்குப் போய், கெட்டிலில் மறுபடியும் நீரை நிரப்பினாள், மேடைமீது சாய்ந்து நின்றாள். அதிர்வலை மறுபடியும் வலுவாகி வந்தது; ஒவ்வொரு தடவையும் அது இடிக்கும்போது அவள் தலையைச் சிறிது குனிந்தது பார்க்கத் தூங்கி வழிபவரின் தலை ஆடி விழுவதைப் போல இருந்தது. அவள் இன்னொரு முறை காது கேட்காமல் போகும் நிலைக்கு வந்தாள். அதிலிருந்து வெளியே வந்தபோது, கெட்டிலின் மூடி தடதடத்துக் கொண்டிருந்தது; நீர்த்திவலைகள் கெட்டிலின் பக்கவாட்டில் வழிந்தன, ஸ்டொவ்வின் நெருப்பில் சொட்டி இஸ்ஸென்ற ஒலி எழுப்பின. ஜாய்ஸ் தேநீரைத் தயாரிக்கும் ஸ்பூனை மறுபடி நிரப்பினாள், தன் கோப்பையில் நீரை ஊற்றினாள், அதை முன்னறைக்கு எடுத்துப் போனாள். டீனாவின்பெட்டிகளிடையே மண்டியிட்டாள், மேலே ஸ்வெட்டர் இருந்த ஒரு பெட்டியைச் சோதனை போடத் துவங்கினாள்.
டீனா தன் ஒப்பனைக்குப் பயன்படுத்திய கண்ணாடியில், சட்டத்தின் இடுக்கில் செருகி வைத்திருந்த சில ஒளிப்படங்கள் ஸ்வெட்டருக்கு அடியில் இருந்தன. அவை அவளுடைய சகோதரன், மற்றும் அவனுடைய குடும்பத்தினரின் கால வரிசைப்படியான படங்கள், இரு மகள்கள் ஒவ்வொரு படமாக உயரமாகிக் கொண்டு வருவதைச் சித்திரித்தன, அவர்களின் வட்டமான இனிய முகங்கள் ஒல்லியாகி, எச்சரிக்கை உணர்வுள்ளனவாக ஆனதைக் காட்டின. முறைப்படி எடுக்கப்பட்ட டீனாவின் பெற்றோர்களுடைய உருவப்படம். ஜாய்ஸின் பல படங்கள். ஜாய்ஸ் இந்தப் படங்களைப் பார்வையிட்டு விட்டு, ஒரு புறம் வைத்தாள். பின்னே சாய்ந்து. தன் குதிகால்களில் அமர்ந்தாள். தீர்மானமாக ஒரு நீண்ட மூச்சு இழுத்துக் கொண்டு, தலையை நேராக வைத்துக் கொண்டாள், ஒரு கணம் தெம்பில்லாதவளாக இருந்தவள், தன்னை மீறி எப்படியோ சக்தியைத் திரட்டிக் கொண்டு சுதாரித்துக் கொண்ட ஒரு பெண்ணாகத் தெரிந்தாள். ஃப்ரிட்ஜின் எந்திரம் உயிர் பெற்றது. அதனுள் புட்டிகள் ஒன்றோடொன்று இடித்த ஒலியை ஜாய்ஸால் கேட்க முடிந்தது. இன்னொரு மூச்சை இழுத்துக் கொண்டாள், மறுபடி முன்னே சாய்ந்து, பெட்டிகளிலிருந்து பொருட்களை எடுக்கத் தொடங்கினாள்.
துணிகள், காலணிகள். முடி உலர்த்த உதவும் ஓர் எந்திரம். கடைசியாக, பெட்டியின் அடியில் டீனாவின் புத்தகங்கள்: சாரட்ஸ் ஆஃப் த காட்ஸ், த இன்னர் கேம் ஆஃப் டென்னிஸ், மெனி மான்ஷன்ஸ், இன் ஸெர்ச் ஆஃப் பிக் ஃபுட், த நோ ஸ்வெட் ஒர்க் அவுட், மற்றும் த பகவத் கீதா. ஜாய்ஸ் இன் ஸெர்ச் ஆஃப் பிக் ஃபுட் புத்தகத்தைத் திறந்தாள், புரட்டி அதிலிருந்த படங்களைப் பார்த்தாள். அதில் இருந்தவை: ஒளித்து வைக்கப்பட்டிருந்த மைக்ஃபோஃபோனிலிருந்து கிட்டியதென ஒரு குரலின் ஒலிஅலை வரைபடம், பெரும் காலடியின் ப்ளாஸ்டர் அச்சு வடிவு, வியப்புத் தரும்படி கைவிரல்களைப் போல மெல்லியதாக இருந்த கால்விரல்கள், மற்றும் அந்த அசுர உருவம் விரிந்த வெளியின் குறுக்கே கைகள் உடலின் பக்கவாட்டில் ஆடியபடி, சாதாரணமாக நடந்து போகும்போது எடுக்கப்பட்டதாக ஒரு தெளிவற்ற படம். ஜாய்ஸ் பெட்டிக்குள் பொருட்களை மறுபடி ஒழுங்காக வைத்தாள். அவளுடைய மூளை ஏன் அரித்துப் போகாமல் இருக்கும்? டீனாவின் தலையில் அத்தனை குப்பைகள் இருக்கும்போது, அவளோடு ஒரு உரையாடல் என்பது சீறிவரும் மண் துகள்களால் ஊசியாகக் குத்தப்பட்டு அடிபடுவது போலத்தான் இருந்தது.
டீனா வெளியேறியதும், ஜாய்ஸ் தன் புத்தியை ஒழுங்காக்கிக் கொள்ளப் போகிறாள். அவள் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று ஒரு பட்டியல் அவளிடம் இருந்தது. தினசரி குறிப்பேடு ஒன்றை அவள் துவங்கிப் பராமரிப்பாள், இரவுக் கல்வியில் சேர்ந்து தத்துவம் படிப்பாள். வருடங்கள் முன்பு கல்லூரியில் தத்துவ வரலாறு பற்றிய ஒரு வகுப்பில் ஜாய்ஸ் நன்றாகச் செய்திருந்தாள், அவளுடைய பங்கெடுப்பு அத்தனை சிறப்பாக இருந்ததால் அதை நடத்திய பேராசிரியர், இறுதிக் கட்டுரையில் ஒரு குறிப்பைச் சேர்த்துத் திருப்பிக் கொடுத்திருந்தார், அதில் அந்த வகுப்பு நடத்துவதை மகிழ்ச்சியான அனுபவமாக ஆக்க உதவியதற்காக அவளுக்கு அவர் நன்றி தெரிவித்திருந்தார்.
அதனால் தத்துவத்துறையில் ஒரு வல்லுநராக வேண்டும் என்றெல்லாம் ஜாய்ஸ் எண்ணவில்லை. ஆனால் கருத்துகளைப் பற்றிப் பேசுகையில் அவளுக்கு உயிரோட்டம் கூடியது, அந்தப் பேராசிரியர் நிதானமான நிச்சயத்துடன் தன் மாணவர்களின் நம்பிக்கைகளைப் பின்பற்றிப் போய் அவற்றில் பலவும் பழைய நம்பிக்கைகளிலும், ஆதாரம் இல்லாத வதந்திகளிலும், வெறும் உணர்ச்சிகளிலும் வேர் கொண்டவை என்பதை வெட்ட வெளிச்சமாக்கினார் என்பது இன்னமும் அவளுக்கு ஞாபகமிருந்தது. மாணவர்களை அழவைப்பதில் அவர் பெயர் பெற்றிருந்தார். உண்மைக்கு மேன்மேலும் அருகே செல்லுவதாக அவள் உணர்ந்தபோது அவளுக்கு சுத்தமாகத் தெளிவு கிட்டிய சில கணங்கள் தட்டுப்பட்டிருந்தன, அதே நேரம் தங்களுடைய மாய நம்பிக்கைகளை இழக்க நேர்வதால் சில சகமாணவர்களுக்கு எழுந்த அதிர்ச்சியை அவள் விலகியிருந்து வேடிக்கை பார்த்திருந்தாள். அதற்குப் பிறகு ஜாய்ஸுக்கு வேறெதிலும் அப்படி ஒரு தெளிவுணர்வு கிட்டி இருக்கவில்லை. அப்போதெல்லாம் பிறருடன் செயல்படுவதில் அவள் ஈடுபட்டிருந்தாள், மற்றவர்கள் நீரோட்டத்தைக் கலக்கலாக ஆக்கினர் என்பது ஒரு காரணம். பிறருடைய தேவைகளும், எதிர்பார்ப்புகளும், உணர்ச்சிகளும், எல்லாம் வல்ல அவர்களின் கவலைகளும் ஒரு நாளில் எட்டு, ஒன்பது தடவைகள் எழும்போது நாம் எத்தனையோ பொய்களைச் சொல்ல நேர்கிறது, கடைசியில் எது உண்மை என்று நமக்கே மறந்து விடுகிறது. ஆனால் ஜாய்ஸ் இன்னும் அத்தனை தூரம் தொலைந்து போகவில்லை- அதாவது இன்னும் போய்விடவில்லை. தனியாகவே அவள் படிக்கவும், யோசிக்கவும், எல்லாம் நிஜமாக எப்படி இருக்கின்றன என்று பார்க்கவும் துவங்கலாம். உண்மை என்பது எவ்வளவு உறுதியாகவும், குளிர்ந்தும் நாம் இருக்க வேண்டும் என்று கேட்கிறதோ அத்தனையை அவள் தனியாகவே அடைய முடியும்.
இன்னொரு விஷயம். இனிமேல் தொலைக்காட்சியே கூடாது. டீனாவை அமைதியாக இருக்கச் செய்யத்தான் ஜாய்ஸ் அதை வாங்கினாள், ஆனால் அது இனிமேல் தேவைப்படாது. அவள் தொலைவியக்கியை எடுத்தாள், பிக் அப் ட்ரக்குகளுக்கான விளம்பரத்தில் மீதிப் பகுதியைப் பார்த்தாள், பிறகு தொலைக்காட்சியை அணைத்தாள். வெற்றுத் திரை அவளுக்கு அசௌகரியமாக இருந்தது. ஏதோ அந்தத் திரை அவளைக் கண்காணிக்கிறது என்பதைப் போல இருந்து அவளை நிதானமிழக்கச் செய்தது. தொலைவியக்கியை தாழ் மேஜையில் வைத்தவள், மற்றப் பெட்டியைப் பிரிக்க ஆரம்பித்தாள்.
பாதிப் பெட்டியுள் சென்றபோது, இரண்டு துவாலைகளின் நடுவில் அவள் என்ன தேடினாளோ அதைக் கண்டாள். கத்தரிக்கோல் ஒன்று, அருமையான ஜெர்மன் கத்தரி அது, ஜாய்ஸுடையது. அதைத்தான் தேடுகிறோம் என்று ஜாய்ஸுக்குத் தெரிந்திருக்கவில்லை, ஆனால் கைகளில் அந்தக் கூர் முனைகள் தட்டுப்பட்டவுடனே அவள் உரக்கச் சிரித்தாள். டீனா அவளுடைய கத்தரிக்கோலை எடுத்துக் கொண்டிருக்கிறாள். தெரிந்துதான். தவறுதலாக எடுத்துக் கொண்டிருக்க வாய்ப்பில்லை, ஏனெனில் இந்தக் கத்தரிக்கோல் விசேஷமானது. அதன் பித்தளைக் கைப்பிடிகள் சாதுரியமாகச் செய்யப்பட்டிருந்தன, மூடினால் ஒரு வாத்துத் தலையின் கோட்டு வடிவம் தெரியும்படி ஆக்கப்பட்டிருந்தன. அந்த கத்தரியின் வெட்டுக் கத்திப் பகுதிகளில் “அருமையான காரினுக்கு அவளை நேசிக்கும் அப்பாவிடமிருந்து,” என்ற சொற்கள் ஜெர்மன் மொழியில் பொறிக்கப்பட்டிருந்தன. போஸ்ட் தெருவில், பழைய பொருட்கள் விற்கும் கடையில் ஜாய்ஸ் இதைக் கண்டெடுத்திருந்தாள், அதை வீட்டுக்குக் கொண்டு வந்த கணத்திலிருந்தே டீனாவை அது வசீகரித்திருந்தது. அவள் அதை எத்தனையோ முறைகள் கடன் வாங்கியதிலிருந்து ஜாய்ஸ் அவள் அதைப் பயன்படுத்துவதாக ஏதாவது சாக்குச் சொல்கிறாள் என்று ஊகித்திருந்தாள். இப்போது அதைத் திருடிக் கொண்டே விட்டாள்.
கத்தரிக்கோலைப் பெட்டிக்கு மேல் பிடித்தபடி, ஜாய்ஸ் அதைச் சிலமுறை வெட்டுவதைப் போலத் திறந்து மூடினாள். இது தெளிவைக் கொணரும் தருணமில்லையா? செல்லமான சுதந்திரப் பிறவி, பொருட்களால் சிறைப்பிடிக்கப்படாதவள், ஒரு கத்தரிக்கோல் இல்லாமல் வாழ முடியாமல் அதைத் திருடிக் கொண்டு போகிறாள். அவள் ஒரு திருடி- திருடி மட்டுமில்லை, பாசாங்குக்காரியும் கூட.
ஜாய்ஸ் கத்தரிக்கோலை தொலைவியக்கிக்கு அருகில் கீழே வைத்தாள். தன் உள்ளங்கையின் அடிப்பாகத்தை முன்னந்தலையில் வைத்து அழுத்திக் கொண்டாள். அன்று முதல்தடவையாகக் களைப்பை உணர்ந்தாள். கொஞ்சம் அதிர்ஷ்டமிருந்தால் அவளால் தூங்கவும் முடியலாம்.
அந்தத் துவாலைகள் நடுவே கத்தரிக்கோலைத் திரும்ப வைத்தாள், பெட்டிக்குள் எல்லாவற்றையும் திரும்ப வைத்து அதை மூடினாள். டீனா அதை வைத்துக் கொள்ளட்டும். அவளிடம் எதையும் சொல்வதில் பயனில்லை- அவள் வியப்பைக் காட்டுவாள், தற்செயலாக நடந்ததென்று சொல்வாள்- தான் அந்தப் பெட்டியைத் திறந்து சோதித்ததாக ஒப்புக் கொள்ளாமல் ஜாய்ஸால் அந்தக் கத்தரிக்கோல் பற்றி எதுவும் கேட்க முடியாது. டீனா அந்தப் பாழாய்ப் போன கத்தரியை வைத்துக் கொள்ளட்டும், நாட்கள் போகப் போக அவளுக்குப் புரிய ஆரம்பிக்கும், பல மாதங்களுக்கு, பல வருடங்களுக்குப் பிறகு தெரியும், தான் அதைத் திருடிக் கொண்டு போனதை ஜாய்ஸ் அறிந்திருந்தாள் என்று; ஆனால் ஜாய்ஸ் அப்போதும் அதைப் பற்றிப் பேச்செடுக்கப் போவதில்லை, டீனாவின் பிறந்த நாளன்று அவளுக்கு வாழ்த்து தெரிவிக்கச் செய்யப்போகும் தொலைபேசி அழைப்புகளிலோ, அவளுக்கு எழுதப் போகும் கிருஸ்த்மஸ் வாழ்த்தட்டைகளிலோ, அல்லது போகவிருக்கும் பல நாடுகளிலிருந்து அவளுக்கு அனுப்பப் போகிற பயண நேரத் தபால் அட்டைகளிலோ அது பற்றி ஏதும் தெரிவிக்கப் போவதில்லை. இறுதியில் டீனாவுக்குத் தெரியவரும், ஜாய்ஸ் அவளை மன்னித்து விட்டாள், அந்தக் கத்தரிக்கோலை அவளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்து விட்டாள் என்பது. அப்போது, முதல் தடவையாக, அவளுக்குப் புரியத் தொடங்கும் ஜாய்ஸ் எத்தகைய நபராக இருந்தாள் என்பது, அவளைப் பற்றித் தான் எத்தனை தவறாகவும், கவனிப்பில்லாதவளாகவும், உணர்ச்சி இல்லாதவளாகவும் இருந்திருக்கிறோம் என்பதும் டீனாவுக்குத் தெரிய வரும். அப்போது அவளுக்குத் தெரியும் தான் என்ன இழந்தோம் என்பது.
ஜாய்ஸ் விழித்தெழுந்த போது, கீழே சோஃபாவில் படுத்திருந்த அவளைப் பார்த்தபடி டீனா அருகில் நின்றாள். வெளிர்ந்த ஒளித் துண்டங்கள் தரை விரிப்பிலும், சுவரிலும் விழுந்திருந்தன; அறையின் பிறபகுதிகள் நிழலில் இருந்தன. ஜாய்ஸ் தலையைத் தூக்க முயன்றாள். அது பாறையைப்போல இருந்தது. அவள் மறுபடி படுத்துக் கொண்டாள்.
”எனக்குத் தெரிஞ்சுதான் இருந்தது,” என்றாள் டீனா.
ஜாய்ஸ் காத்திருந்தாள். டீனா அவளையே பார்த்து நின்றதால், அவள் கேட்டாள், “என்ன தெரிஞ்சது?”
“யோசி,” டீனா மறுபுறம் திரும்பி சமையலறைக்குள் சென்றாள்.
கெட்டிலில் நீரை அவள் நிரப்புவதை ஜாய்ஸால் கேட்க முடிந்தது. ஜாய்ஸ் கேட்டாள், “நான் சுகமில்லாமல் படுத்திருக்கிறதைச் சொல்றியா?”
டீனா பதில் சொல்லவில்லை.
“நீ அதைப்பத்தி எதுவும் கவலைப்படத் தேவையில்லை.”
டீனா சமையலறை வாசலுக்கு வந்தாள், “இப்படி எல்லாம் பண்ணாதே ஜாய்ஸ். நாம இங்கெ என்ன நடக்கிறதுங்கறதைப் பத்திக் கொஞ்சம் நேர்மையா இருக்கலாம், ஓகே?”
“நான் இங்கே இல்லைன்னு நினைச்சுக்கோ,” ஜாய்ஸ் சொன்னாள். “இதுல உனக்கு ஒரு சம்பந்தமும் இல்லெ.”
டீனா தலையை ஆட்டி மறுத்தாள். “நீ இப்படிச் செய்வேன்னு என்னால நம்பவே முடியல்லை.” அவள் சமையலறைக்குள் திரும்பிப் போனாள்.
“என்ன செய்தேன்?” ஜாய்ஸ் கேட்டாள். “நான் இங்கே கௌச்ல படுத்திருக்கேன், அதை நான் எதுக்கோ செய்யறேன்னு சொல்றியா?”
“உனக்கே தெரியும்,” என்றாள் டீனா. மறுபடியும் நிலைப்படியில் சாய்ந்து நின்றாள், பிறகு சொன்னாள், “தலையைக் குழப்பற விளையாட்டை எல்லாம் நிறுத்து.”
“தலை விளையாட்டா?” ஜாய்ஸ் திரும்பச் சொன்னாள். “ஜீசஸ் மேரி அண்ட் ஜோசஃப்.”
டீனா முன்னறைக்குள் ஒரு காலெட்டு வைத்தாள். “இது நியாயமே இல்லை, ஜாய்ஸ்.”
ஜாய்ஸ் பக்கவாட்டில் திரும்பிப் படுத்துக் கொண்டாள். அசைவில்லாமல் படுத்தபடி, டீனா சமையலறையில் எதையெல்லாமோ தடால்புடாலென்று உருட்டுவதைக் கேட்டபடி இருந்தாள்.
“நான் ஒண்ணும் முட்டாளில்லை,” டீனா கத்தினாள்.
“இங்கெ யாரும் நீ அப்படின்னு சொல்லல்லை.”
டீனா முன்னறைக்கு இரண்டு கோப்பைகள் எடுத்துக் கொண்டு வந்தாள். ஒன்றைக் காஃபி மேஜைமீது ஜாய்ஸுக்கு எட்டும்படியாக வைத்தாள், இன்னொன்றை எடுத்துக் கொண்டு சாய்வு நாற்காலிக்குப் போனாள்.
‘தாங்ஸ்,” ஜாய்ஸ் சொன்னாள். மெல்ல எழுந்து அமர்ந்தாள், தலை சுற்றலில் தலை ஆடியது. தேநீர்க் கோப்பையை மேலெடுத்து, நெஞ்சோடு அமர்த்திக் கொண்டாள், அதன் வாசனையுள்ள நீராவி, தன் முகத்தை உஷ்ணப்படுத்தும்படி பிடித்தாள்.
டீனா முன்னால் குனிந்து தன் கோப்பைக்குள் ஊதினாள். “நீ பார்க்கறதுக்கு மோசமா இருக்கே,” என்றாள்.
ஜாய்ஸ் புன்னகைத்தாள்.
இருவரும் தேநீரை உறிஞ்சினார்கள், கோப்பைகளுக்கு மேலாக ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருந்தார்கள். “எனக்குப் பித்துப் பிடிக்கறாப்ல இருக்கு,” என்றாள் டீனா. “கடற்கரைக்கு ஒரு வாட்டி போகலாம்னுகூட என்னால திட்டம் போட முடியல்லை, நீ இப்படி ஏதாவது செய்யறே.”
“என்னை லட்சியம் செய்யாதெ,” ஜாய்ஸ் அவளிடம் சொன்னாள்.
“அப்படித்தான் நீ எப்பவும் சொல்றே. நான் விட்டுட்டுப் போகப் போறேன், ஜாய்ஸ். இப்பவே இல்லாட்டியும், ஒருநாள் போயிடுவேன்.”
“இப்பவே போ,” என்றாள் ஜாய்ஸ்.
“நெசம்மாவே நான் போகணும்னுதான் உனக்கு இருக்கா?”
“நீ விட்டுட்டுப் போகப் போறேன்னா, இப்பவே போ.”
“நீ பார்க்க கோரமா இருக்கே. அது நிசம்மா வலிக்கிறது, இல்லையா?”
“நான் இங்கே இல்லைன்னு நெனச்சுக்கோயேன்,” ஜாய்ஸ் சொன்னாள்.
“என்னால் முடியல்லியே. உனக்கே தெரியும் என்னால அப்படி முடியாதுன்னு. அதனாலெதான் இது கொஞ்சம் கூட நியாயமே இல்லை. நீ இப்படிக் கஷ்டப்படறப்ப என்னாலெ இங்கேயிருந்து வெளியே போக முடியாது.”
“டீனா.”
“என்ன?”
ஜாய்ஸ் தலையை ஆட்டி விலக்கினாள். “ஒண்ணுமில்லை, ஒண்ணுமேயில்லை.”
டீனா சொன்னாள், “பாழாப் போனவ நீ, ஜாய்ஸ்.”
“நீ போகத்தான் வேணும்,” என்றாள் ஜாய்ஸ்.
“நான் போகப் போறேன். அது சத்தியம். அப்புறமா உனக்கு நான் போதுமான எச்சரிக்கை தரல்லைன்னு சொல்லாதெ.”
ஜாய்ஸ் ஏற்றதற்குத் தலையசைத்தாள்.
டீனா எழுந்தாள், ஒரு பெட்டியைத் தூக்கிக் கொண்டாள். “இன்னக்கி ஒரு போலிஷ்காரங்களைப் பத்தின பிரமாதமான ஜோக் ஒண்ணைக் கேட்டேன்.”
“இப்ப வேண்டாம்,” ஜாய்ஸ் சொன்னாள். “என்னை அது கொன்னுடும்.”
டீனா பெட்டியைத் தன் படுக்கை அறைக்குக் கொண்டு போனாள், இன்னொரு பெட்டிக்காக, கத்தரிக்கோல் இருக்கிற பெட்டிக்காகத் திரும்பி வந்தாள். அது முதல் பெட்டியை விடப் பெரியதாக இருந்ததால் அதில் ஒரு பிடிமானம் சரியாகக் கிட்டாமல் சற்றுத் திண்டாடினாள். “நீ பாழாப் போ,” என்றாள் ஜாய்சிடம். “நான் இதைச் செய்யறேன்னு என்னால நம்பவே முடியல்லே.”
ஜாய்ஸ் தன் தேநீரைப் பருகி முடித்தாள். கைகளைக் குறுக்காகக் கட்டிக் கொண்டு தன் தலை முழங்காலில் படும் அளவுக்கு முன்னால் குனிந்தாள். டீனாவின் படுக்கை அறையிலிருந்து இழுப்பறைகள் திடுமென இழுத்துத் திறக்கப்படுவதும், பின் அறைந்து மூடப்படுவதுமான ஒலிகளை அவளால் கேட்க முடிந்தது. பிறகு ஒரு மௌனம் நிலவியது, ஜாய்ஸ் தன் தலையை உயர்த்தியபோது டீனா மீண்டும் அவள் எதிரே நின்றாள்.
“பாவப்பட்ட ஜென்மம் நீ, ஜாய்ஸ்,” என்றாள் அவள்.
ஜாய்ஸ் அதற்கென்ன செய்வது என்பது போல உடலை அசைத்தாள்.
“நகரு,” என்றாள் டீனா. சோஃபாவின் ஒரு ஓரத்தில் பொருந்தி அமர்ந்தாள், பிறகு சொன்னாள், “ஓகே.” ஜாய்ஸ் மறுபடியும் படுத்துக் கொண்டாள், அவளுடைய தலை டீனாவின் மடியில் இருந்தது. டீனா கீழே நோக்கி அவளைப் பார்த்தாள். ஜாய்ஸின் தலை முடியில் ஒரு கற்றையை ஒதுக்கி விட்டாள்.
“தலை விளையாட்டு,” ஜாய்ஸ் சொன்னாள், சிரித்தாள்.
“வாயை மூடு,” டீனா சொன்னாள்.
டீனா ஒரு புறமாகச் சிறிது நகர்ந்தாள். ஜாய்ஸின் முகத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு கையை வைத்தாள், விரல்கள் கன்னத்தில் படிந்தன, பிறகு கட்டை விரல்களால் ஜாய்ஸின் முன் நெற்றியில் பொட்டில் அழுத்தினாள். தன் கட்டை விரல்களை முன்னும் பின்னும் நகர்த்துகையில் சிறு வட்டங்களாகச் சுழற்றினாள். படிப்படியாக அழுத்தத்தை அதிகரித்தாள். முதலில் அதன் கதி சுலபமாகவும், கணிக்க முடியாதது போலவும் இருந்தது, ஆனால் அது உறுதியாக ஆக, டீனா தனக்குத் தானே ஒரு பாட்டை முனகிக் கொண்டாள். ஜாய்ஸ் கண்களை மூடிக் கொண்டாள். தன் கண்ணிமைகள் துடிப்பதை உணர்ந்தாள், பிறகு துடிப்பு நின்றது. சமையலறையில் செய்தித்தாள் பக்கங்கள் படபடப்பதைக் கேட்டாள். டீனா பாட்டை முனகுவதைக் கேட்டாள். டீனாவின் தொடைகளின் மென்மையை உணர்ந்தாள், அவற்றிலிருந்து கிட்டிய கதகதப்பை உணர்ந்தாள். டீனாவின் கைகள் அவளுடைய கன்னங்களில் வெப்பமாக இருந்தன. ஜாய்ஸ் மேலே தன் கைகளை உயர்த்தி, அவற்றைத் தன் கைகளால் பிடித்துக் கொண்டாள், அவற்றை அங்கேயே வைத்திருக்க விரும்புவது போல.
**** *****
டோபையாஸ் ஊல்ஃப்: ‘மைக்ரெய்ன்’ [1996 ஆம் வருடம் பிரசுரமான ‘த நைட் இன் க்வெஸ்சின்’ என்ற சிறுகதைத் தொகுப்பிலிருந்து பெறப்பட்ட சிறுகதை] 1945 ஆம் வருடம் பிறந்த டொபையாஸ் ஊல்ஃப், பல சிறுகதைத் தொகுப்புகளையும், மூன்று நாவல்களையும், இரு நினைவுக் குறிப்பு நூல்களையும் எழுதியவர். பல பல்கலைகளில் படைப்பிலக்கியத்தைப் போதித்திருக்கிறார். தற்போது ஸ்டான்ஃபோர்ட் பல்கலையில் இங்கிலிஷ் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார் என்று தெரிகிறது. இவரது சிறுகதைத் தொகுப்புகளில் குறிப்பிடத் தக்கவை என்று கருதப்படுவன: ‘த நைட் இன் க்வெஸ்சின்’ மற்றும் ’அவர் ஸ்டோரி பிகின்ஸ்’ ஆகியன.
அவருடைய ஒரு சிறுகதை நியூயார்க்கரில் 1995 ஆம் வருடம் பிரசுரமானது. இங்கே படிக்கக் கிட்டும்: https://www.newyorker.com/magazine/1995/09/25/bullet-in-the-brain
அவருடைய சிறுகதைத் தொகுப்புகள் பற்றிய ஒரு விமர்சனம் இங்கே: https://literariness.org/2020/06/26/analysis-of-tobias-wolffs-stories/
தமிழாக்கம் செய்த மைத்ரேயன், இந்தியாவில் ஒரு மாநிலமான தமிழ் நாட்டில் பிறந்தவர். சுமார் 40 ஆண்டுகளாக தற்காலத் தமிழ் இலக்கியத்தில் அனுபவம் உள்ளவர். சொல்வனம் என்கிற இணையப் பத்திரிகைக் குழுவில் பங்கெடுத்து வருகிறார்.
- The Night in Question
- Stories Hardcover
- Publisher : Knopf; First Edition
- October 8, 1996
- Language : English
- Hardcover : 224 pages
- ISBN-10 : 0679402187
- ISBN-13 : 978-0679402183
