Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

எஸ்கார்ட்

இன்றாவது விடுதிக்கு வெகு சீக்கிரத்தில் சென்றுவிடுவதற்கான வாய்ப்பு அமைந்ததே என்கிற நிறைவுடன் அலுவலக கட்டிடத்தின் கீழ் தளத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களுள் அன்றைய பயணத்தின் பொருட்டு எனக்கென நியமித்துத் தரப்பட்ட வெண்ணிற இண்டிகா காரின் முன் சீட்டில் ஏறி உட்கார்ந்தேன்.

அன்றாடம் இரவு பணி முடிந்ததும் அலுவலக காரில் பயணித்து என் விடுதிக்கு திரும்புவதற்கு இரண்டு மணி நேரம் ஆகும். தொலைவின் பொருட்டு இந்த தாமதம் என்றால் கூட பரவாயில்லை. ஆனால், அறுவர் பயணிக்கும் பெரிய கார்களிலேயே அன்றாடம் பயணம் செய்யும்படி இந்த அமைப்பின் பொறுப்பாளர்கள் செய்துவிடுகிறார்கள்.

”தினம் இதேதான் செய்றிங்க. நான் கம்ப்ளெயிண்ட் ரெயிஸ் பண்ணப் போறேன்.” என்று ஒரு நாள் விரக்தியில் பொறுப்பாளரிடம் சொல்லி விட்டேன்.

அவர் மெல்ல சிரித்தபடி, “கோவிச்சுகாதிங்க சார். உங்களோட சேர்ந்து அஞ்சு பொண்ணுங்க வர்றாங்கள்ல. அவங்கள பத்திரமா வீட்டுல கொண்டுபோய் விடுறது நம்மளோட பொறுப்பு இல்லைங்களா!? அதனால தான் உங்களது லாஸ்ட் ட்ராப் ஆகிடுது. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க” என்றார்.

”அவ்ளோ கேர் எடுத்துக்குறவங்களா இருந்தா நீங்க தனியா எஸ்காட் போட்டுக்கங்க சார். அதுக்குத்தான உங்களுக்கு சம்பளம் தர்றாங்க. என்ன மயிருக்கு நான் எஸ்காட் மாதிரி டெய்லியும் அவங்ககூட போகனும்?” என்று சீறினேன்.

”எஸ்காட் போடுறத நிறைய பொண்ணுங்க விரும்புறது இல்ல. மூணு நாலு ட்ராப்னா அட்ஜஸ்ட் பண்ணி போட்டுக்கலாம். ஆறேழு பேர் போகுற காருக்கெல்லாம் எஸ்காட் போடுறது சரியா வராது. எஸ்காட விட ஒரே ஆபிஸ்ல வேல பார்க்குற பசங்க கூட வந்தா பொண்ணுங்க சேஃப்டியா ஃபீல் பண்ணுவாங்க. ப்ளீஸ் புரிஞ்சுக்கங்க.” என்றார்.

அதற்கு மேல் எதுவும் பேச முடியாது என்பதால் நான் ஒன்றும் சொல்லாமல் திரும்பிவிட்டேன்.

அதன்பின் ஒவ்வொரு நாளும் விடுதிக்குச் செல்வது மேலும் தாமதமாகிக் கொண்டே வந்தது. பின்னிரவில் அறைக்குச் சென்று கட்டிலில் தொப்பென்று விழுந்து கண் மூடினால் அடுத்த நாள் உச்சி வெயிலின் போதே விழிப்பு வரும். உடலில் பரவியிருக்கும் வலியை தாங்கியபடி எழுந்து சென்று அலுவலகம் செல்ல தயாராவதற்கு மனமே இருக்காது. விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்றே தோன்றும்.

ஒருமுறை சக பணியாளரிடம் இதைப் பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த போது அவர் சொன்னார், “நீங்க எவ்ளவோ பரவால்ல. நான் வேங்கைவாசல்ல இருக்கேன். ஃபர்ஸ்ட் ட்ராப்பே நானா தான் இருக்கனும். ஆனா, பள்ளிக்கரணை போய் கடைசி பொண்ண இறக்கி விட்டுத் திரும்பி வரும்போது தான் என்னைய இறக்கி விடுறாங்க.”

”கம்ப்ளெயிண்ட் ரெயிஸ் பண்ணிங்களா?” என்று கேட்டேன்.

”அதனால ஒரு பிரயோஜனமும் இல்ல. இஷ்டமிருந்தா வா, இல்லன்னா பஸ்ஸோ ஆட்டோவோ பிடிச்சு போன்னு தான் சொல்லுவானுங்க. நைட் டைம்மா வேற இருக்குது. அடுத்த ஷிஃப்ட் மாறுற வரைக்கும் பல்ல கடிச்சுட்டு இருக்க வேண்டியதான்னு விட்டுட்டேன்” என்று அவர் சொன்னார்.

ஆனால், தொடர்ந்து புகார் அளித்துக் கொண்டு வந்தால் மேலிடத்தில் இருந்து சற்றேனும் நம் குறைகளுக்கு செவி கொடுப்பார்கள் என்று எனக்குத் தோன்றியதால் ஒவ்வொரு நாள் பயணத்தின் முடிவிலும் அறைக்குத் திரும்பியவுடன் தாமதமாக விடுதிக்கு வந்து சேர்ந்ததை குறிப்பிட்டு புகார் அளித்துக் கொண்டே வந்தேன்.

அதற்கான தகுந்த பலன் எனக்குக் கிடைத்தது. இரண்டு ட்ராப் மட்டுமே கொண்ட பயண வசதியை மேலிடத்தில் இருந்து எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்கள். என்னுடன் ஒரு பெண் மட்டுமே பயணம் செய்ய இருந்தாள். ஆகவே, இன்று தாமதமில்லாமல் சீக்கிரத்திலேயே விடுதிக்கு திரும்பிவிடலாம் என்கிற நிம்மதியுடன் காரில் உட்கார்ந்து இருந்தேன்.

அன்றாடம் தவறாமல் நிகழ்பெறும் மீட்டிங்கை முடித்துவிட்டு கேப் ட்ரைவர்கள் யாவரும் அவரவர் வண்டிகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களுள் மிக எளிமையாக அடையாளம் காணத்தக்க குள்ளமான ஆள் ஒருவர் நான் அமர்ந்திருந்த காரை நோக்கி வந்தார். மிகுந்த எடை கொண்டிருந்தமையால் சற்று மெதுமாகவே வந்து சேர்ந்தார்.

காருக்குள் தன் உடலை திணித்துக் கொண்டு உட்கார்ந்த பின் பெருமூச்சு விட்டார். பின் தன்னுடைய அலைபேசியில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்த கார் பயணம் தொடர்பான செயலியை திறந்தபடி என்னைப் பார்த்து, “ஓ.டி.பி. சொல்லுங்க சார்” என்றார்.

நான் என் அலைபேசியை திறந்து எனக்கு அனுப்பப்பட்டிருந்த ஓ.டி.பி எண்ணை அவரிடத்தில் சொன்னேன். அதை அந்தச் செயலியில் குறித்துக் கொண்டதும், “நீங்க சொல்லுங்கம்மா” என்றார்.

நான் திடுக்கிட்டுத் திரும்பினேன். எனக்கு முன்னரே ஏறி பின் சீட்டில் உட்கார்ந்திருந்த அந்தப் பெண்ணை நான் அப்போது தான் கவனித்தேன். கவலை தேய்ந்த முகத்துடன் பவ்யமாக அமர்ந்திருந்தாள். கறுப்பு டி-ஷர்ட், நீல ஜீன்ஸ் அணிந்திருந்தாள். அவள் கூந்தல் வலப்பக்க தோளில் சரிந்து வலது மார்பை மூடிக் கொண்டிருந்தது. மெல்லிய குரலில் தன் ஓ.டி.பி எண்ணை ட்ரைவரிடம் சொன்னாள்.

அதன்பின் அங்கிருந்த கார்கள் யாவும் வரிசையாக வெளியேறத் தொடங்கின. எங்கள் முறை வந்ததும் ட்ரைவர் காரை முன் நகர்த்தியபடி, “சீட் பெல்ட் போட்டுங்கங்க” என்றார். நாங்கள் இருவரும் சீட் பெல்ட்டை போட்டுக் கொண்டோம்.

கீழ் தளத்தில் இருந்து வெளியேறும் பகுதியில் நின்று கொண்டிருந்த பொறுப்பாளர் எங்கள் காரை நிறுத்தி, “லாஸ்ட் ட்ராப் யாரு?” என்று ட்ரைவரிடம் கேட்டார்.

”பின்னாடி இருக்குற பொண்ணு” என்றார் ட்ரைவர்.

பொறுப்பாளர் என்னை முறைத்துப் பார்த்துக்கொண்டே ட்ரைவரிடம், “இந்தப் பொண்ண இறக்கிவிட்டதுக்கப்பறம் சார இறக்கிவிடு. இன்னைக்கு சார் தான் இந்தப் பொண்ணுக்கு எஸ்காட்” என்றார்.

”சரிங்க” என்று சொல்லிய பின் ட்ரைவர் காரை விருட்டென்று கிளப்பினார்.

பிரதான சாலைக்கு கார் வந்ததும் ட்ரைவர் கார் கண்ணாடியை உயர்த்தி விட்டு ஏ.சி.யை போட்டு விட்டார். மிதமான வேகத்தில் கார் சென்று கொண்டிருந்தது.

ட்ரைவர், “உங்க லொகேஷன் கரெக்ட்டா இருக்கான்னு பாருங்க.” என்று தன் அலைபேசியை என்னிடம் கொடுத்துப் பார்க்கச் சொன்னார்.

”ஃபர்ஸ்ட் அந்த பொண்ண தான ட்ராப் பண்ண போறிங்க!? அவங்க லொகேஷன ஃபர்ஸ்ட் போடுங்க. அவங்கள ட்ராப் பண்ணதுக்கப்பறம் என் லொகேஷன போட்டுக்கலாம்.” என்றேன்.

”என் ஜியோ கோட் ஆப்ல அப்டேட் ஆகல. நீங்க உங்க லொகேஷன கரெக்ட்டா போட்டுக் கொடுத்துடுங்க. நான் வழக்கமா இந்த கேப்ல தான் போறேன். ட்ரைவர் அண்ணாவுக்கு என் ரூட் தெரியும்” என்று பின்னால் அமர்ந்திருந்த அந்தப் பெண் சொன்னாள்.

நான் என் லொகேஷனை சரிபார்த்து ட்ரைவரிடம் கொடுத்த பின், “டெய்லியும் இதே கேப்ல தான் போறிங்களா?” என்று அவளிடம் கேட்டேன்.

”ம்ம்…ஆமா” என்றாள் அவள்.

“எப்படி உங்களுக்கு மட்டும் அப்படி அசைன் பண்றாங்க?” என்று கேட்டேன்.

”ஒரு வருசத்துக்கு முன்னாடி இந்த கேப்ல வீட்டுக்குப் போயிட்டிருந்தப்போ ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சு…” என்றாள் அவள்.

“இந்த கேப்லயா?” என்று திடுக்கிட்டேன்.

”ஆமா சார். இந்த கேப் தான். நான் தான் அன்னைக்கும் ட்ரைவிங்” என்றார் அவர். நான் அவர் மேலும் சொல்லட்டும் என்று அவரையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

”காலைல ஆடிட் ஆபிஸ்ல பார்ட் டைம் வேல பார்த்துட்டு நைட் இங்க வண்டி ஓட்டிகிட்டு இருந்தேன். அன்னைக்கு கொஞ்சம் தூக்க கலக்கமா இருந்துது. மாத்திவிடுறதுக்கு ஆள் யாரும் இல்ல. நானும் சரி ஒரு ட்ராப் தான, அட்ஜஸ்ட் பண்ணி போயிடலாம்னு நினைச்சு வண்டிய எடுத்துட்டேன். ஒரு டர்னிங்ல மெட்ரோ வேல நடந்துட்டு இருந்த இடத்துல டிவைடர் வெச்சிருந்தானுங்க. எப்படி அசந்தேன்னு தெரியல. கண்ண மூடி திறக்குறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு” என்றார்.

நான் அவரையே வெறித்தபடி பார்த்தேன். “ஒன்னும் பயப்படாதிங்க. நான் அப்படியெல்லாம் கொண்டு போய் விட்டுட மாட்டேன். நல்லா தெளிவோட தான் வண்டி ஓட்டுறேன். நீங்க ரிலாக்ஸா வாங்க.” என்று சொல்லிவிட்டுப் புன்னகை செய்தார்.

பிறகு அவராகவே, “அந்த சம்பவத்துக்கு அப்றம் யாரும் இந்த வண்டியில ஏறவே இல்ல. ஒருநாள் இந்த பொண்ணா முன்வந்து, ‘நான் உங்க கார்லயே வரேன்ணே! இனிமேலாவது என்ன பாதுகாப்பா கொண்டு போய் வீட்டுல விடுங்க!’ன்னு சொல்லுச்சு. இன்னைக்கு வரைக்கும் நான் அத கடுமையா கடைபிடிச்சுட்டு வரேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அவர் கண்கள் கலங்கியது.

”இந்த பொண்ணுக்கு அப்றமா இத்தன நாள் கழிச்சு நீங்க தான் இந்த வண்டியில தைரியமா ஏறி இருக்கிங்க.” என்றார் அவர்.

”நான் இங்க வேலைல சேர்ந்து நாலு மாசம் தான் ஆகுது. எனக்கு இந்த விஷயமெல்லாம் தெரியாது.” என்றேன்.

“தெரிஞ்சா ஏறியிருக்க மாட்டிங்கள்ல!?” என்று அவள் கேட்டாள்.

”இல்ல, அப்படியில்ல. கவன குறைவா ஓட்டும் போது ஆக்ஸிடண்ட் நடக்குறதுலாம் சாதாரணம் தான். அதுக்காக ஆக்ஸிடண்ட் ஆன வண்டில போக கூடாதுன்னு நினைக்குறது முட்டாள்தனம்.” என்றேன்.

”நீங்க எந்த ஏரியாவுல இருந்து வர்றிங்க?” என்று கேட்டாள்.

”துரைப்பாக்கம்” என்றேன்.

”தினம் அங்க இருந்து வந்துட்டுப் போறதுன்னா சிரமம் தான்.” என்றாள் அவள்.

”ரொம்ப சிரமம். ஆனா, இன்னைக்கு சீக்கிரமா போயிடுவேன்.” என்றேன்.

அவள் மெல்ல புன்னகைத்தாள். அப்போது ட்ரைவர் சாலையின் இடையில் குறுக்கிட்ட வேகத்தடையில் காரை குலுங்காமல் ஏற்றி இறக்கினார்.

பிரதான சாலையை கடந்து ஒரு வளைவில் திரும்பியதும் ட்ரைவர் சட்டென்று வண்டியை நிறுத்தினார்.

”என்னாச்சுணா?” என்று கேட்டேன்.

அவர் சாலையை வெறித்துப் பார்த்தபடி, “இங்க தான் தம்பி அந்த ஆக்ஸிடண்ட் நடந்துச்சு.” என்றார்.

நான் அந்த சாலையை பார்த்தேன். இருளில் அது தன்னை ஒளித்துக் கொண்டு படுத்திருந்தது. பின் சீட்டில் அமர்ந்திருந்து அவளும் அந்த சாலையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். விபத்தில் சிக்கி பரிதவித்த நினைவு அவளுள் எழுந்திருக்க வேண்டும். அதற்கான அடையாளமாக அவள் முகத்தில் கவலையின் ரேகைகள் தோன்றின.

பின், சட்டென்று தன் பார்வையை விலக்கிக் கொண்டு, “போலாம்ணா.” என்றபின் “யாரால நடந்தத மாத்த முடியும்!?” என்று தனக்கு மட்டுமே கேட்கும்படியாக முனகிக் கொண்டாள்.

அவர் காரை கிளப்பிவிட்டு, “தினம் இந்த இடத்த க்ராஸ் பண்ணும் போதெல்லாம் மனசுக்கு உறுத்தலாவே இருக்குது.” என்றார். அவள் பதிலேதும் சொல்லாமல் வந்தாள். எனக்கு அது என்னவோ போலிருந்தது.

நான், “தினம் ஏன் மீட்டிங் நடத்துறாங்க? அப்படி என்னதான் சொல்லுவாங்க?” என்று ஆரம்பித்தேன்.

ட்ரைவர், “வேகமா போகாதிங்க. பேப்பர்ஸ்லாம் கரெக்ட்டா எடுத்து வெச்சுக்கங்க. பொண்ணுங்கள ட்ராப் பண்ணும்போது அவங்க வீட்டுக்குள்ள போற வரைக்கும் இருந்து பார்த்துட்டு அப்றமா அடுத்த ட்ராப்புக்கு கிளம்புங்கன்னு ஒரே விஷயத்தையே தான் அந்த சூப்பர்வைஸர் திரும்பத் திரும்ப சொல்லிட்டு இருப்பான். வேற ஒன்னுமில்ல” என்று அவர் சலித்துக் கொண்டார்.

அப்போது அவரது அலைபேசிக்கு வந்த அழைப்பை ஏற்று அவர் பதிலளிக்கத் தொடங்கினார்.

”சொல்லுங்க சார்…இன்னும் ட்ராப் முடியல…ஆமா, முதல்ல பொண்ண இறக்கிவிட்டுட்டுத் தான் அவர இறக்கிவிடப் போறேன்…ம்ம், சரி.” என்றபின் அலைபேசியை அந்தப் பெண்ணிடம் கொடுத்து, “இந்தாம்மா. சூப்பர்வைஸர் லைன்ல இருக்காரு. பேசு” என்றார்.

அவள் அலைபேசியை காதில் வைத்தபடி, “ஹலோ” என்று பேசத் தொடங்கினாள். “இல்ல, ஸ்லோவா தான் போறாரு…ஒன்னும் பிரச்சனையில்ல…நான் ஸேஃபா தான் இருக்கேன்…நல்ல எஸ்காட தான் போட்டிருக்கிங்க.” என்று என்னைப் பார்த்து சொல்லிய பின் அழைப்பைத் துண்டித்துவிட்டு ட்ரைவரிடம் அலைபேசியை திருப்பிக் கொடுத்தாள்.

”என்ன நீங்களும் என்னைய எஸ்காடுன்னு சொல்லிட்டிங்க?” என்று அவளிடம் கேட்டேன்.

”ஒரு பொண்ணுக்கு எஸ்காடா வர்றதுல உங்களுக்கு என்னாகிடப் போகுது?” என்று அவள் கேட்டாள்.

”இல்ல, நான் வந்து…என்று பேசுவதற்குள் அவளாகவே, “இன்னைக்கு உங்ககூட வர்றதுனால நான் இன்னும் பாதுகாப்பா உணர்றேன்.” என்று சொன்னாள். அதைக் கேட்டதும் என் உள்ளங்கால்கள் சிலிர்த்தன.

”உங்களுக்கு சிரமமா இருந்துதுனா முதல்ல நீங்க இறங்கிக்குங்க.” என்றாள் அவள்.

”ஐயோ பரவால்லைங்க. எவ்ளோ நேரம் ஆனாலும் நான் உங்கள ஸேஃப்டியா ட்ராப் பண்ணிட்டுத் தான் என் ஹாஸ்டலுக்கு போவேன்.” என்றேன். அவள் குறும்புன்னகை புரிந்தாள்.

சீரான வேகத்தில் போய் கொண்டிருந்த கார் வலப்புறம் தென்பட்ட குறுகிய சாலையொன்றில் நுழைந்தது. தாழ்வான பாதை கொண்டிருந்தமையால் கார் இருளில் மெல்ல தத்தளித்தபடி சென்று கொண்டிருந்தது.

செல்லும் வழி ஆள் அரவமற்ற இடமாக தென்பட்டதும் சூப்பர்வைஸர் மீதிருந்த என் கோபமெல்லாம் கரைந்தது. அவளை பாதுகாப்பாக வீட்டில் சேர்ப்பித்த பின்னரே கிளம்ப வேண்டும் என்று மனதில் உறுதியாக சொல்லிக் கொண்டேன்.

”இங்க எங்க உங்க வீடு?” என்று கேட்டேன்.

”அதோ, அந்த மரத்த தாண்டி லெஃப்ட் சைட்ல பெரிய காம்ப்பௌண்ட் சுவர் தெரியுதுல. அதுக்குள்ள தான் நான் தங்கியிருக்கேன்” என்றாள்.

”ஊருக்கு இவ்ளோ ஒதுக்குப்புறமாவா உங்க வீடு இருக்கு?” என்று கேட்டேன்.

”ஒரு வருசமா தான் இங்க இருக்கேன். அதுக்கு முன்னாடி வேற பக்கம் குடியிருந்தேன்.” என்றாள்.

காம்ப்பௌண்ட் அருகே வண்டி வந்த போதிலும் எங்கும் வெளிச்சம் தென்படவில்லை. நான்கு கரிய நாய்கள் வண்டியை நோக்கி விரைந்து ஓடி வந்து ‘ஊ..ஊ..’ என்று ஊளையிட்டன.

அவற்றை கடந்து சென்று காம்ப்பௌண்ட் சுவரின் மையத்தில் அமைந்திருந்த சிறு நுழைவாயிலின் முன் கார் நின்ற போது நான் உடல் விதிர்த்து அவளைத் திரும்பிப் பார்த்தேன்.

அவள் இயல்பாக காரை விட்டு கீழே இறங்கி ட்ரைவரிடம், “ரொம்ப தேங்க்ஸ்ணா” என்றாள். அவர் காரின் கண்ணாடியை கீழே இறக்கிவிட்டு “பார்த்து போம்மா” என்றார்.

”இவ்ளோ தூரம் வந்ததுக்கு உங்களுக்கும் தேங்க்ஸ்.” என்று என்னைப் பார்த்து புன்னகைத்து விட்டு நுழைவாயிலில் இருந்த இரும்பு கேட்டினை கடந்து உள்ளே சென்றாள்.

பயத்தில் என் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. ”அவ…” சொல் எழாமல் திகைத்து, “அது…” என்று நா குழறி ஒரு வழியாக சொற்களை திரட்டி, “போலாம்ணா. கிளம்பலாம்.” என்று ட்ரைவர் அண்ணாவின் கைகளை தட்டினேன்.

”கொஞ்சம் பொறுப்பா. அவங்க இடத்துக்கு போய் அமையுறத பார்த்ததுக்கப்பறம் தான் கிளம்பனும்னு சூப்பர்வைஸர் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாரு.” என்றார்.

அவள் எங்கள் கண் பார்வையில் இருந்து மறைவது வரை பார்த்திருந்து விட்ட பின்னரே அவர் காரை கிளப்பினார். பின்னர் அவர் அலைபேசியில் சூப்பர்வைஸரை தொடர்பு கொண்டு, “ஃப்ர்ஸ்ட் ட்ராப் முடிஞ்சுது சார். இன்னைக்கும் ஸேஃப்டியா அவங்கள கொண்டு போய் விட்டுட்டேன். தம்பி தான் கொஞ்சம் பயந்துட்டாரு. நாளைக்கு நம்ம கேப்ல ஏறுவாறான்னு தெரியல…சரி, அவரையும் பத்திரமா இறக்கிவிட்டுட்டு கூப்புடுறேன்.” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தார்.

திகைப்புடன் அமர்ந்திருந்த என்னை நோக்கி திரும்பிய அவர், “என்ன பார்க்குறிங்க தம்பி? இன்னைக்கு ஒரு நாள் வேணா நீங்க அவங்களுக்கு எஸ்காடா இருந்திருக்கலாம். ஆனா, என்னைக்குமே நான் தான் அவங்களுக்கு எஸ்காடு.” என்றார்.

Exit mobile version