Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

அம்மி அஸ்கரி

டிசம்பர் 14 சனிக்கிழமை மும்பை என் சி பி ஏ ஆடிட்டோரியத்தில் “அம்மி அஸ்கரி” இசை நாடகம் பார்க்கச் சென்றிருந்தேன். 

இந்த நாடகம்  மாபெரும் இசை மேதை பேகம் அக்தரின் வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்டு அவரைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்ட இசை நாடகம். தன் வாழ்நாளில் பேகம் அக்தர் பாடி பிரபலப்படுத்திய பல கசல் பாடல்கள், கிட்டத்தட்ட 14 பாடல்கள் இந்த நாடகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிரபல இசைக் கலைஞர் தலத் அசிஸ் இசையமைத்து இப் பாடல்களை பாடியுள்ளார.

50 வருடங்களுக்கு மேலாக இசை உலகில் கொடிகட்டி பறந்த, மல்கா-ஏ-கஸல் (Queen of gazals) இன்று புகழப்பட்ட பேகம் அக்தரின் பாடல்களை யாரும் வெறுமனே  கேட்டு கடந்து சென்று விட முடியாது. அவை ஆன்மாவால் உணரப்பட வேண்டியவை. அவரது குரலில் வெளிப்படும் சோகம் கலந்த இனிமையை ரசிக்க தனி மனமும் ரசனையும் வேண்டும்.

பாடல்களைப் பாடிய தலத் அசிஸுடன் இணைந்து பத்மினி கோலாபுரேயும் அவரது இளைய சகோதரி தேஜஸ்வினி கோலாபுரேயும் பேகம் அக்தராகவும் அவரது உயிர்த்தோழி சுக்கியாகவும் நடித்திருக்கிறார்கள். பத்மினி  பேகம் அக்தராகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகை இல்லை. அவரது மிடுக்கு கலந்த கம்பீரமும் நளினமும் உருவ ஒத்திசைவும் பத்மினியின் உடல் மொழியில் மிகவும் அற்புதமாக வெளிப்பட்டுள்ளது. நடிப்பை பற்றி தனியாக சொல்லத் தேவையில்லை. உருது மொழி உச்சரிப்புக்காக  அவர் எடுத்துக் கொண்ட சிறப்பு முயற்சிகளை பற்றி கட்டாயம் சொல்லியாக வேண்டும். 

இந்த நாடகம் பேகம் அக்தரின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவங்களை கோர்வையாக சொல்லிச் செல்கிறது. வசனம் முடிகிற இடத்தில் பாடல் தொடங்கி விடுகிறது. சில இடங்களில் வசனத்தின் கூடவே பாடல் ஒலிக்க ஆரம்பித்து விடுகிறது. நடிகர் பாடகர் இருவருக்குமே இது மிகவும் சவாலான விஷயம்தான். உரையாடல்களின் வாயிலாக  சம்பவங்களை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இது ஒரு புதிய முயற்சி. நல்ல முயற்சியும் கூட.

கஸலோ, தும்ரியோ,  தாத்ராவோ,  அவற்றில் பேகம் அக்தரின் ஆன்மாவின் ஒரு சிறு துகளையேனும் ரசிகர்களால் நிச்சயம் உணர முடியும். தன்னுடைய சோகத்தையும் வெற்றிகளையும்  சமமாக தன் பாடல்களின் வாயிலாக வெளிக்கொணரும் திறமை அவரிடம் இருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன்பு காலமான பேகம் அக்தரின் ஆன்மா இந்த நாடகத்தின் மூலம் வெளிவந்தது என்று தான் சொல்ல வேண்டும். அவரது வாழ்க்கையை பெருமைப்படுத்துகிற ஒரு முயற்சியே இந்த நாடகம் என்று தயாரிப்பாளரும் இயக்குனரும் கருதுகிறார்கள். பத்மினியும் தேஜஸ்வினியும் மிகச் சரியான முறையில் பேகம் அக்தரின் இசையையும் வாழ்க்கையையும் தங்கள் நடிப்பின் வாயிலாக பெருமைப்படுத்தி இருக்கிறார்கள். பேகம் அக்தராக நடிப்பதற்கு வெறும் நடிப்பு திறமை மட்டும் போதாது. கூடவே அவரது ஆன்மாவை தெளிவாகப் புரிந்து கொள்ளும் ஆற்றலும், அவர் எதிர்கொண்ட சவால்களை சந்தித்த விதமும், அவர் விட்டுச்சென்ற ஈடு இணையற்ற சங்கீதப் பரம்பரையையும் புரிந்து கொள்கிற திறமையும் வேண்டும். இவை அனைத்தையும் ஒன்று சேர பத்மினியின் நடிப்பில் காண முடிகிறது. பேகம் அக்தரின் முக்கிய சிஷ்யை சுக்கியாக தேஜஸ்வினியும் பத்மினிக்கு சற்றும் சளைக்காமல் தன் திறமையை நிரூபித்து இருக்கிறார். சங்கீத பரம்பரையில் பிறந்தது இவர்களுக்கு கூடுதல் வலு சேர்த்து இருக்கிறது.

நாடகத்தில் 14 கஸல் பாடல்களை பாடியிருக்கும் தலத்  அசிஸுக்கு, பள்ளிப் பருவத்திலிருந்தே பேகம் அக்தரின் கஸல்களை கேட்டு வளர்ந்தது அவரது பணியை வெகுவாக சுலபமாக்கி இருக்கிறது. பண்டைய வாத்தியங்களான சாரங்கி, தபலா, ஹார்மோனியம் போன்ற இசைக் கருவிகளை பயன்படுத்தி இருப்பதும் இந்த இசை நாடகத்துக்கு  பெருமளவில் உதவியிருக்கிறது. உண்மையில், இந்த இசை நாடகத்தில் பத்மினி மற்றும் தேஜஸ்வினியுடன் கூடவே இசையும் ஒரு முக்கிய பாத்திரமாக பங்காற்றியுள்ளது.

பேகம் அக்தரின் பொது பிம்பத்தை தாண்டி, இந்த நாடகம் அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் அவர் சந்தித்த சவால்களையும் எதிர்கொண்ட பிரச்சினைகளையும் விரிவாக பேசுகிறது. பெண்களைக் குறித்த, குறிப்பாக கலைத்துறையில் இயங்கும் பெண்களைக் குறித்த சமுதாய எதிர்பார்ப்புகளையும், அது விதிக்கும் அனைத்து தடைகளையும் உடைத்து எறிந்து அவர் தனக்கென ஒரு தனிப் பாதையை உருவாக்கிக் கொண்டதையும், சமுதாயம் அங்கீகரிக்கிற மரபு வாழ்க்கைக்காக ஏங்கி திருமணம் செய்து கொண்டதையும் அதனால் இசையை தொடர முடியாமல் ஐந்தாண்டுகள் அல்லலுற்றதையும் நாடகம் வெளிச்சம் போட்டு காட்டுவதோடு நிற்காமல் காண்பூரையும் அச்சுழலுக்குள் ஈர்த்துக் கொள்கிறது. சுக்கியின் கதாபாத்திரம் மூலமாக நாம் பேகம் அக்தரின் தனிப்பட்ட வாழ்க்கை, அவரது பயங்கள், பலவீனங்கள், ஒரு பெண்ணாகவும் மனைவியாகவும் கலைஞராகவும் அவர் தன்னை நடத்திக் கொண்ட விதம் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடிகிறது.

நாடகம் முடிந்து வீடு வந்து சேர்ந்த பிறகும் மறுநாளும் காதுகளில் கஸல் பாடல்கள் ரீங்ரித்துக் கொண்டே இருந்தன. பேகம் அத்தர் என்னும் மாபெரும் கலைஞரின் வாழ்க்கையும் அவரது மென்மைகளும் மேன்மைகளும் இதை எழுதுகிற இந்த நிமிடம் வரை என்னுடன் பயணித்துக் கொண்டிருக்கின்றன. நாடகத்தின் வெற்றியை கொண்டாட இதைவிட வேறென்ன வேண்டும்?

Exit mobile version