Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

மாயையில் துளிர்க்கும் மலர்கள்

விடா, அந்த அறையில் உள்நுழைந்ததும் நுகர்ந்த கடும் வாசனை, அவ்வறை அதன் இயல்பை இழந்திருப்பதாக உணர்ந்தாள். சன்னலை மூடியிருந்த திரைச்சீலையின் பிளவுகளுக்கிடையே கசிந்து வரும் மெல்லிய ஒளியில் அவ்வறையிலிருந்த பொருட்கள் அவ்விழப்பை எதிரொலிப்பதுபோல அவளுக்குப்பட்டது. அவள் தள்ளிக்கொண்டு வந்த வண்டியைக் கதவின் அருகிலேயே நிறுத்திவிட்டு சற்று முன்னகர்ந்து செல்லும்போது காலில் இடறிய தொலைக்காட்சியின் ரிமோட்டை எடுத்து அருகிலிருந்த மேசையின் மீது வைத்தாள். சுவரோடு ஒட்டி ஒரு பக்கமாகக் கீழே விழுந்திருந்த மேசை அலங்கார விளக்கை எடுத்து வைத்துச் சரிசெய்துவிட்டு, கட்டிலின் கீழ் கிடந்த சிறிய மதுப்புட்டி ஒன்றை எடுத்து அங்கிருந்த குப்பைத் தொட்டியில் போட, அது வேறு சில காலியான புட்டிகள் மீது பட்டு ஒலியெழுப்பியது. சிறிது நேரம் அங்கு நின்று அறையை நோட்டமிட்டுவிட்டு கட்டிலின் மறுபக்கம் சென்று வேறு ஏதேனும் கீழே கிடக்கிறதா என்று பார்த்தாள். ஒன்றுமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு வாக்குவம் க்ளீனரை கார்பெட்டின் மீது ஓடவிட, அது காதையடைக்கும் சத்தத்தில் கீழே கிடந்த சிகரெட் துணுக்குகள், கிழித்துப் போடப்பட்ட காசினோவின் ரசீதுகள், உணவு துகள்கள் என அது செல்லும் இடமெங்கிலும் இருந்த அனைத்தையும் உள்ளிழுத்துக்கொண்டிருந்தது. அபு மீண்டும் குடிக்க ஆரம்பித்துவிட்டான். அவனிடம் இதைப் பற்றிப் பேச முடியாது. கோவம் வந்து கையில் கிடைப்பதைத் தூக்கி என் மேல் எறிவான். ஒரு முறை மேசையின் மீதிருந்த அலங்கார விளக்கை எடுத்து என் மேல் வீசியெறிந்த தருணம் சரியான நேரத்தில் குனிந்துகொண்டதால் ஏதும் அடிபடாமல் தப்பித்துக்கொண்டேன். குடித்துவிட்டால் அவன் வேறு உலகத்துக்குள் பயணிப்பவன். அந்த உலகத்தில் எனக்கான இடமில்லை. அவ்வுலகத்திலிருந்து அவன் மீண்டு வரும் வரை அவனுக்காகக் காத்திருப்பது மட்டுமே என்னால் இயல்வது. வாக்குவம் க்ளீனரை அணைத்துவிட்டு அந்த அறையில் வழக்கமாக அவள் வந்து நிற்கும் ஒரு மூலையில் நின்று பார்த்தாள். வேறு ஏதும் வித்தியாசமாக இல்லையெனத் தெரிந்துகொண்டு, கட்டிலின் மெத்தை மீது சுருட்டி கிடந்த படுக்கை விரிப்புகளை எடுத்து கதவோரம் நிறுத்தி வைத்திருந்த கூடையில் திணித்தாள்.  தலையணையில் ஒன்று கால்களுக்கிடையே வைத்துக்கொண்டதுபோல இருப்பதைச் சற்று நேரம் பார்த்துக்கொண்டே இருந்துவிட்டு தலைக்கு வைக்கப்பட்ட மற்றொரு தலையணையை எடுத்து  தலையணையின் உறையைப் பிரித்து எடுத்தாள். மீண்டும் சிறிது நேரம் கால்களுக்கிடையே இருந்த தலையணையின் மேடு பள்ளங்களைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டுச் சட்டென அதைக் கலைத்து அதன் உறையையும் பிரித்து கூடையினுள் தூக்கி எறிந்தாள். மெத்தையின் மீதிருந்த வெண்மையான விரிப்பில் சிறு சிறு சுருள் முடிகள் உதிர்ந்திருந்தன. அபுவின் நெஞ்சில் அடர்த்தியாகச் சுருண்டு வளர்ந்திருக்கும் முடிகளை ஒரு முறையேனும் கொத்தாகப் பிடிக்கவேண்டும். விடா சிரித்துக்கொண்டே மெத்தையின் மேலிருந்த விரிப்பை எடுத்து உதறி அதனையும் கூடைக்குள் சொருகினாள். அவளின் முகத்திலிருந்த மென்சிரிப்புடன் அவ்வறையின் கிழக்கு பக்கமிருக்கும் சன்னலில் தொங்கிக்கொண்டிருந்த பாசி வண்ணத்திலிருந்த தடிமனான திரையை விலக்க, தூரத்தில் ஹட்ஸன் ஆறு நீல வண்ணத்தில் கிடந்தது. அதன் கரையையொட்டியிருந்த  வானுயர்ந்த கட்டிடங்கள் அதன் மீது நிலையற்று அலையில் நெளிந்துகொண்டிருந்தன.

சிறு தீவு ஒன்று மெல்ல நகர்வது போலக் கப்பல் ஒன்று நகர்ந்துகொண்டிருக்க, அதன் பின்னால் ஒரு சிறிய பாய்மர படகு ஒன்று நிற்பதுபோலவோ அல்லது மெல்ல நகர்ந்துகொண்டோ இருந்தது. அப்படகு ஒன்றில் ஒருநாள் நான் அபுவுடன் ஹட்ஸன் ஆற்றில் பயணிக்க வேண்டும். அது போன்ற படகு ஒன்றை முதலில் அவள் பிறந்த ஊரான கானாவில் சிறுவயதில் அவள் அம்மாவுடன் கடற்கரைக்குச் சென்ற போது பார்த்திருந்தாள். வெயிலில் பளபளக்கும் உடலோடு நகர்ந்துகொண்டிருந்த அப்படகில் ஒருநாள் அம்மாவுடன் செல்ல ஆசைப்பட்டாள். எதுவும் நடக்கவில்லை. சிறிதுநேரம் அப்படகையும் மினுமினுக்கும் ஆற்றையும் பார்த்துக்கொண்டிருந்தவள் சட்டென மீண்டு, அவள் கதவருகே நிறுத்தியிருந்த வண்டியிலிருந்து தூய வெண்மையுடன் கூடிய விரிப்புகள், தலையணைகள் எடுத்து வந்து மெத்தையின் மீது விரித்தாள். சுருக்கங்களை நீவி எடுத்து ஓரங்களை மடித்து மெத்தையின் அடியினுள் விட்டு ஒரு துல்லியமான ஒழுங்குடன் கூடிய படுக்கையைத் தயார் செய்தாள். குளியலறைக்குச் சென்று சற்று அழுக்கேறிய பஞ்சுப் பொதிகளெனக் கீழே கிடந்த அனைத்து துண்டுகளையும் எடுத்து கூடையினுள் போட்டுவிட்டு, சலவை செய்து மணம் ஏற்றப்பட்ட வெண்மையான துண்டுகளை மடித்து குளியலறையின் அலமாரியில் வைத்தாள். குளிக்கும் தொட்டியை மறைத்துத் தொங்கிக்கொண்டிருந்த துணியை விலக்கி தொட்டியைக் கழுவத் தண்ணீர் ஊற்றியபோது பொன்னிற சாயம் ஏற்றப்பட்ட நீண்ட மயிரிழை ஒன்று தண்ணீரின் வேகத்தில் மெல்ல நகர்ந்து சென்று மறுபுறமிருந்த சிறு குழியில் தேங்கி மறைந்தது. விடா திரும்பி அங்கிருந்த குப்பைத்தொட்டியைக் கையில் எடுத்துப் பார்த்தாள். அவளுக்குச் சட்டென அழவேண்டும் போல இருந்தது. அப்படியே சற்று நேரம் நின்றுகொண்டிருந்தவள் பின்பு வெளியே சென்று வண்டியின் முன்பக்கம் தொங்கிக்கொண்டிருந்த பெரிய கூடையினுள் குப்பைகளைக் கொட்டிவிட்டு அக்குப்பைக் கூடையினுள் வேறு ஒரு புதிய உறையை உள்தள்ளி மீண்டும் குளியலறையில் வைத்தாள். ஆளுயர கண்ணாடியைத் துடைத்து, கை அலம்பும் சோப்புகளை மாற்றிவைத்துவிட்டு அனைத்தும் அதனதன் இடத்திற்குத் துல்லியமாக வந்தபிறகு அந்த நட்சத்திர விடுதிக்கே உரிய நறுமண தெளிப்பானை அடிக்க, அந்நறுமணம் அறை முழுவதும் மெல்லப் பரவி அவ்வறை அதன் தன்மையை மீட்டுக்கொள்ள விடா அங்கிருந்து வெளியேறி அவ்வறையை மூடினாள்.  

அவளுடைய வண்டியைத் தள்ளிக்கொண்டு விடுதியின் அதே தளத்திலிருந்த வேறு அறைக்குச் சென்றுகொண்டிருந்தாள். ஒளி குறைந்த குறுகலான அந்த நீண்ட நடைபாதையின் இருமருங்கிலும் கண்ணுக்கெட்டிய தூரம் மூடிய அறைகள் தொடர்ச்சியாக இருப்பது, விடாவுக்கு கானாவில் தன் சிறுவயது பள்ளி நூலகத்தின் அலமாரியில் வரிசையாக வைக்கப்பட்ட தடிமனான புத்தகங்களென இருப்பதுபோல நினைத்துக்கொள்வாள். அப்புத்தகங்களுக்குள் ஒளிந்திருக்கும் மாய உலகம் அவளை எப்போதும் ஈர்ப்பது. அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளை அதன் எண்களைக் கொண்டு அல்லாமல் அதன் சன்னல் வழி தெரியும் காட்சியை வைத்தே அடையாளப்படுத்திக்கொள்வாள். எண்கள் மீது அவளுக்கு நம்பிக்கையில்லை. அவைகள் சோர்வடையச்செய்யக்கூடியவை என நம்பினாள். நடைபாதையின் மறு முனையிலிருந்து அர்ஷத் வெகு ஆழத்திலிருந்து மெல்ல மேலே வருவதுபோல அவனுடைய வண்டியைத் தள்ளிக்கொண்டு வந்துகொண்டிருந்தான். அர்ஷத் வெகு சமீபத்தில் தான் இவ்வேலைக்குச் சேர்ந்திருந்தான். அர்ஷத்தை காணும்போதெல்லாம் அவன் வேலைக்குச் சேர்ந்திருந்த ஆரம்ப பொழுதுகளில் அவனின் மீது அவள் கொண்டிருந்த கடுங்கோபத்தை நினைவுகொள்வாள். அவனுடைய இளம் மனைவியையும் கைக்குழந்தையையும் ஒரு முறை சுரங்க ரயிலில் பார்த்தபின்தான் அவளுக்கு அவன் மீதான கோவம் படிப்படியாகக் குறைந்தது. 

அவன் அருகில் வந்ததும், “வாழ்த்துக்கள்” என்றான்

விடா அவனுக்குப் பதிலேதும் சொல்லாமல் போய்க்கொண்டிருந்தாள். 

“வீட்டிற்கு வருவேன், பீர் வாங்கி வை. குடிக்கலாம்.” என்று சொல்லிவிட்டுச் சிரித்துக்கொண்டே சென்றான்.

விடா அவள் இடுப்பில் அணிந்திருந்த ஒரு அட்டையை அந்த அறையின் கதவிலிருந்த கைப்பிடியில் காட்ட அது பச்சை நிறத்தில் ஒளிர்ந்து திறந்துகொண்டது. விடாவுக்கு இந்த அட்டை மூலம் அறையின் கதவுகளைத் திறப்பது பிடித்தமானது. கொத்து சாவிகள் போல ஒலியெழுப்பி தன் இருப்பையும் நழுவி செல்லும் காலத்தையும் உணரவைக்காமல், விரல் நுனியில் நடப்பது போலச் சத்தமில்லாமல் கதவைத் திறப்பதும் மூடுவதும் தான் விடாவுக்கு பிடித்திருந்தது. கதவைத் திறந்து வண்டியை வழக்கம்போல கதவின் அருகே நிறுத்திவிட்டு உள்ளே சென்றாள். அறையிலிருந்த இரண்டாவது கட்டிலின் கீழே இரண்டு பெரிய கருப்பு நிற பெட்டிகள் திறந்து அதனிலிருந்து துணிகள் வழிந்துகொண்டிருந்தது. மெத்தையின் மீது வீசப்பட்டிருந்த துணிகளை ஒவ்வொன்றாக எடுத்து மடிக்க ஆரம்பித்தாள்.அதில் வெள்ளை நிறத்தில் சிறுமிகள் அணியும் குட்டையான பாவாடையும் சிகப்பு நிறத்தின் மேல் மஞ்சள் நிற பூ வேலைகொண்ட சிறிய மேல் சட்டையும் இருக்க அவைகளை மெத்தையின் மீது கிடத்திப் பார்த்தாள். ஏஞ்செலாவுக்கு பிடித்தமான உடை. அவ்வாடையை அணிந்தவுடன் சுழன்று பாவாடையைக் குடைபோல செய்து சட்டென அவள் நின்றவுடன் சுருண்டு அப்பாவாடை தன் உடலில் படிவதையே பார்த்துக்கொண்டேயிருப்பாள். பின்பு எதிர்த்திசையில் சுழன்று பார்ப்பாள்.  மடித்து வைக்கும் உடைகளை அனைத்தையும் கலைத்து எங்கும் இறைத்துவிடுவது தான் ஏஞ்செலாவுக்கு பிடித்தமான விளையாட்டு. வாங்கி வைக்கும் புது துணிகளை எப்போதும் தேடிக்கொண்டு இருப்பதிலேயே பல மணி நேரங்கள் எனக்குக் கழிந்துவிடும். பல நேரத்தில் அவைகள் எதிர்பார்க்காத தருணம் ஒன்றில் வேறு எங்கிருந்தோ அபு அவ்வுடைகளை எடுத்துவந்து கொடுப்பான். மற்றொரு கட்டிலின் மெத்தையில் கருப்பு நிறத்திலிருந்த சிறிய கால் சட்டையும் நீல வண்ணத்திலிருந்த கைகள் இல்லாத சிறிய பனியனும் எடுத்து அதே போல வைத்துப் பார்த்தாள். அந்த பனியனில் இரண்டு பெரிய மீன்கள் கடல் அலையிலிருந்து  தாவிக் குதிப்பது போலப் படம் ஒன்று இருந்தது. கோஜோவை அவன் சிறு விரல்களைப் பிடித்துக்கொண்டு லபடி கடற்கரையில் கால் தொட்டு விளையாடிச் செல்லும் அலைகள் ஊடே நடந்து அழைத்துச் செல்லவேண்டும். சிறுவயதில் அம்மா என்னை நடத்திச் சென்றது போல என்று நினைத்துக்கொண்டே மெத்தையில் கிடந்த அனைத்து உடைகளையும் மடித்து அருகிலிருந்த மேசையின் மீது வைத்தாள். அபுவுக்கு நான் முதலில் வாங்கித்தந்தது இதுபோன்ற ஒரு கை கடிகாரம் தான். முதலில் அது தடிமனாக இருப்பதாகச் சொன்னான். பின்பு முரட்டுத்தனமான அகலமான அவன் கைக்குப் பொருத்தமாகவே இருக்கிறது என்று தொடர்ந்து அணிந்துகொண்டான். அவன் எனக்கு முதலில் வாங்கித்தந்தது செயற்கை கற்கள் பதிக்கப்பட்ட கழுத்தில் அணியும் ஒரு ஆரம். என் நீண்ட கழுத்துக்கும் கருப்பான நிறத்துக்கும் அது எடுப்பாக இருக்கிறது என்று சொல்லி என்னை அணைத்துக்கொண்டான். ஒரு நாள் குடும்பத்துடன் அருகிலிருந்த ஓப்ரா அரங்கத்துக்கு நிறைய வேலைப்பாட்டுடன் கூடிய ஒரு நீண்ட ஆடையும் அந்த ஆரமும் அணிந்து சென்றபோது அபு அவன் கைகளை என் கைகளுடன் கோர்த்து நடந்து வந்தான். அவன் மீது அப்படி ஒரு வாசனை. காற்றில் கைகோர்த்து நடனமாடுவதுபோல இரண்டு முறை சுழன்று அருகேயிருந்த ஆளுயர கண்ணாடியின் முன் இடுப்பில் கை வைத்து நின்று பார்த்துப் புன்னகைத்தாள். சட்டென அதிர்ந்து அதிலிருந்து விலகி அவ்வறையின் கிழக்கு பக்கமிருந்த சன்னலில் தொங்கிய திரையை இழுக்க நெரிசலான மன்ஹாட்டன் தெருவின் சாலையில் ஏராளமான வாகனங்கள் குழிகளிலிருந்து வெளிவரும் நீராவி புகையின் ஊடே மெல்ல ஊர்ந்துகொண்டும், நடைபாதையில் வண்ண வண்ண உடையணிந்த மனிதர்கள் எங்கோ சென்றுகொண்டும், சாலையைக் கடக்க நின்றுகொண்டுமிருந்தார்கள். யாரோ ஒருவர் மற்ற யாரோ ஒருவருடன் அல்லது பலருடன் சென்றுகொண்டிருக்கிறார்கள். கைகோர்க்க ஆளில்லாமல் தனியாக இவ்வூரில் தொலைந்துபோனதுபோல் யாரும் தலை குனிந்து செல்லவில்லை என்று நினைத்துக்கொண்டே வாக்கும் க்ளீனரை ஓடவிட்டாள். சிறிது நேரத்தில் அவ்வறை மீண்டும் விடுதியின் நறுமணம் சூழ விடா வெளியே சென்று அவ்வறையை மூடினாள். 

விடா அர்ஷத்தை தேடிப்பார்த்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் நடைபாதையில் அவனைக் காணவில்லை. இங்கிருந்தால் எதாவது தொண தொணவென்று பேசிக்கொண்டிருப்பான் என்று நினைத்துக்கொண்டாள். ஆனால் விடாவுக்கு பேசுவதற்கென்று இங்கு அவன் மட்டும் தான். வந்து தங்கும் விருந்தாளிகளிடமிருந்து மறைந்தே இருக்கவேண்டும் என்பது விடுதியின் விதிகளில் ஒன்று . அது “நீங்கள் ஒவ்வொரு முறையும் அறைக்குள் நுழையும் போது மாயா ஜாலம் செய்ததுபோன்ற உணர்வை அடைவீர்கள்” என்ற விடுதியின் பல வருட வாக்குறுதியைக் கடைப்பிடிக்க உதவுவதாக நம்பிக்கை. விடாவுக்கு அர்ஷத்தை இரண்டு நாட்களுக்கு முன் பார்த்தபோது அவன்  “இந்த நட்சத்திர விடுதியின் மொத்த ஆயுட்காலத்தில் இங்கு உன்னுடைய இருபத்தைந்தாண்டுக் கால உழைப்பு பாதிக்கும் மேலாக இருக்கிறது. நம் மேலாளரை விட, அவரின் மேலாளரை விட  நீதான் இங்கு அதிகமான நாட்கள் வேலை செய்கிறாய் தெரியுமா? நம் விடுதியின் எதிரே உள்ள பார்ச்சூன் கட்டிடம், நம் வரவேற்பறை, இந்த நடைபாதை, இதோ இந்த அழகான ஓவியம் என அனைத்துக்கும் உன்னைத் தெரியும் என்று சொல்லிச் சிரித்தது நினைவுக்கு வந்தது. ஆனால் கானாவில் தான் பிறந்த ஊரான அக்கிராவில் கால்பந்துகள் உருண்டோடும் தெருக்களில் சிறுவயதில் தன்னுடன் அலைந்து திரிந்த பள்ளித் தோழிகளும் , நெரிசலான மக்கோலா சந்தையில் அம்மாவுடன் சேர்ந்து காய்கறி விற்பவளும், லபடி கடற்கரையில் திலாப்பியா மீன் சுட்டுத் தரும் அந்த தாத்தாவும் தன்னை மறந்து போயிருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டாள். அவள் அம்மா இறந்த பின் அமெரிக்கா வந்த ஆறு மாதத்தில் நம்பியவை கைவிட்டபின் இந்த வேலை மட்டுமே அவளுக்கு அடைக்கலம் கொடுத்தது. யார் கண்ணையும் நேர் கொண்டு பார்க்காமல் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு அறையிலும் தூய்மையில் தன் இருப்பை இருத்தி வெளியேறுவதாக நினைத்துக்கொண்டாள். 

அந்த அறையின் கதவைத் தட்டிப்பார்த்துவிட்டு, கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றாள். வயதாகியும் அபுவின் மீதான ஈர்ப்பு அப்படியே இன்னுமிருக்கிறது. அவனும் அப்படியே. திங்கள் வெள்ளை, செவ்வாய் மஞ்சளும் சிகப்பும் எனப் பல வண்ணங்களில் ஒவ்வொரு நாளும் கைக்கொள்ளும் அளவு மாத்திரைகள் இருவருமே எடுத்துக்கொள்ளவேண்டியதாகிவிட்டது. இருந்தாலும் என்னைப் படுக்கையிலிருந்து எழுப்பிக் கைதாங்கலாகக் குளியலறைக்கு அழைத்துச் செல்லவும், வெளியே செல்லும்போது என்னை வண்டியில் அமரவைத்துத் தள்ளிக்கொண்டும் செல்கிறான். என்னிடம் அவன் முழுமையாகவே திரும்பி வந்துவிட்டான். அங்கிருந்த ஒரு புகைப்படத்தை எடுத்துப் பார்த்தாள். ஏஞ்செலாவும், கோஜோவும் இப்போது எங்கிருக்கிறார்கள் எனச் சரியாக நினைவில்லை. அபுவுக்கு தெரிந்திருக்கும். வளர்ந்த பின் அவர்கள் அவர்களுடைய உலகில் சஞ்சரிக்கிறார்கள். தவறேதுமில்லை.  முன்பு போல இப்போதெல்லாம் இருவராலும் சாப்பிட முடியவில்லை. பெரும்பாலும் பாதிக்கு மேல் குப்பைத்தொட்டிக்குத் தான் போகிறது. அவனுக்கு திலாப்பியா மீன் செய்து தரவேண்டுமென்றான். பதிலுக்கு எனக்கு நெருப்பில் சுட்ட வாழைப்பழம் செய்து தருவதாகச் சொல்லிருக்கிறான். அபு இப்போதெல்லாம் கண்ணாடி அணிந்துகொள்கிறான். தூரத்தில் இருப்பது சற்று மங்கலாகத் தெரிகிறதாம் அவனுக்கு. அவ்வப்போது அதனை மறந்து எங்கோ வைத்து விட்டுத் தேடுவான். அதனாலேயே அவன் கைகளை இறுகப்பற்றிக்கொண்டே செல்கிறேன். சன்னலின் திரைச் சீலையை விலக்கி தூரத்தில் தெரிந்த அந்த கப்பலைச் சிறிது நேரம் அங்கு நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். அது நகர்வதே தெரியாமல் ஒரேயிடத்தில் நிற்பதுபோல இருந்தது. அவள் அங்கிருந்து வெளியேறி கதவை மூடினாள். 

அர்ஷத் தன்னை நடைபாதையில் பார்த்ததும்தான் அங்கேயே நின்றுகொண்டிருக்கிறான் என்று விடா நினைத்துக்கொண்டாள். அவனின் அருகில் வந்ததும்,

அவன், “யோசித்தாயா? பெரிய விருந்து வேண்டும் உன்னுடைய இருபத்தைந்தாண்டுக் கால உழைப்பை நாம் கொண்டாடவேண்டும். இது மிகப்பெரிய விஷயம்” என்றான். 

விடா அவனுக்குப் பதிலளிக்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“எனக்கு இன்னும் இருபத்தி நான்கு வருடங்கள் இருக்கிறது உன்னைப் போல அந்த சாதனையைச் செய்ய.”

விடா அவனைக் கோபமாகப் பார்த்து, “என் கோவத்தை மறுபடியும் கிளப்பாதே. நான் உனக்குச் சரியான முன்னுதாரணமில்லை”

“சரி..சரி” என்று சொல்லிச் சிரித்துக்கொண்டே, “உனக்குத் தெரியுமா நீ ஒரு நாளைக்குப் பன்னிரண்டு அறை என்று கணக்கில் கொண்டால் இந்த இருப்பைத்தந்து ஆண்டுக் காலத்தில் நீ ஐம்பதாயிரத்துக்கும் மேல் அறைகளைத் தூய்மை செய்திருக்கிறாய்.”  

விடா சிரித்துக்கொண்டாள். “இருபத்தைந்தாண்டுக் காலம் எப்படி நகர்ந்தது என்றே தெரியவில்லை. நான் நேற்றுதான் கானாவிலிருந்து அமெரிக்காவிற்கு வந்ததுபோல இருக்கிறது.” 

“நீ அமெரிக்காவிற்கு வந்தும் கானாவையே பார்த்துக்கொண்டிருக்கிறாய். அதனால் தான் உனக்கு எப்படி நாட்கள் போனதே தெரியவில்லை.” 

விடா நிற்பதுபோலவே இருந்த கப்பலை நினைத்துக்கொண்டாள். “உண்மைதான். தொலைவில் இருப்பவை ஒரு மாயைதான்.  எனக்கு இருபத்தைந்தாண்டுக் காலம் என்பது மகிழ்ச்சியான விஷயமில்லை.” 

“இது மிகவும் தாமதமான கவலை.” 

“இருக்கலாம். அதையாவது இப்போதே செய்துவிடுகிறேன். இன்னும் தாமதிக்காமல்” என்று சொல்லிச் சிரித்தாள்.

“நீ சொல்வதும் சரிதான். உனக்கென்று ஒரு வாழ்க்கையை நீ வாழவில்லை என்று கவலைப்படுகிறாயா?”

“அப்படிச் சொல்ல இயலாது.” என்று சொல்லிவிட்டு அவளுடைய அடுத்த அறையைத் திறந்துகொண்டே, “எத்தனை அறைகள் இதுவரை தூய்மை செய்திருக்கிறேன்?” எனக் கேட்டாள். 

“ஐம்பதாயிரத்துக்கும் மேல்”

அவ்வறையைத் திறந்தவுடன் பெண்கள் அணியும் வித விதமான காலணிகளும், கட்டிலின் மீது ஆடைகளும், பல வண்ணங்களில் விரல் நகம் மற்றும் முகப் பூச்சு சாயங்கள் கிடந்தது.  

Exit mobile version