Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

என்னைப் போல் ஒருவன்?

மூளை (அறிவாற்றல்), மனம் (சிந்தனை), உணர்வு (சைதன்யம்) இவற்றை ஓரேயிடத்தில் வைத்துப் பார்க்கிறது அறிவியல். நரம்பியல் மற்றும் தன்னுணர்வுத் துறைகளில், மூளையே, மனது மற்றும் உணர்வின் இருப்பிடமாக பெரும்பான்மையான அறிவியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். ஒன்றே மூன்றாய் தேவைக்கேற்ப செயல்படுகிறது என்று எண்ணுவோரும் உள்ளனர். அவர்களின் ஆதார சிந்தனை என்பது மனமோ, உணர்வோ ஒரு உருவிற்குள் அடைபடுவதில்லை என்பதால், ஓட்டிற்குள் இருக்கும் மூளையில் இரண்டையும் பொருத்திப் பார்க்கிறார்கள். இதில் சுவையான விஷயம் என்னவென்றால், அவர்கள் இதயத்தில் மனதையோ, உணர்வையோ பொருத்திப் பார்ப்பதில்லை. அதை ஒரு குருதியேற்றும் நிலையமாகத்தான் வைத்துள்ளார்கள்.

அறிவியலாளர்கள், உணர்வை ஏன் இவ்வளவு ஆழமாக ஆய்வு செய்கிறார்கள்? அவர்களின் கேள்விகளை இவ்வாறு குறிப்பிடலாம்.

இந்த கேள்விகளுக்கான விடைகளின் மூலம் செயற்கை நுண்ணறிவிற்கு ‘உணர்வைத்’ தர முடியுமா என்ற ஆர்வமும் உள்ளது.

பென்ரோஸ் (Penrose) என்ற பிரித்தானிய இயற்பியலாளர் மற்றும் ஸ்டுவர்ட் ஹேம்ராஃப்  (Stuart Hameroff) என்ற மயக்க மருந்து நிபுணர், உணர்வை, மூளையில் உள்ள நுண் நரம்புக் குழாய்களில் (Microtubule) இருப்பதாகக் கட்டுரைகள், நூல்கள் எழுதியுள்ளனர். அதன் கருதுகோள், மூளையின் நுண்குழாய்களில் உணர்வு இருக்கிறது, அது பலவகைகளில் பல செயல்களில் வெளிப்படுகிறது என்பதாகும். பார்வை, பேச்சு, சுவாசம், கேட்பது, தொடு உணர்வு என்பது ந்யூரான் வலைப் பின்னல்கள் நடத்தும் வாண வேடிக்கைகள் என்பது அவர்களது கருத்து. ‘திட்டமிடப்பட்ட புற நிலைக் குறைப்பு’ (Orchestrated Objective Reduction) என்பதை அவர்கள் குவாண்டம் செயல்முறையுடன் (Quantum Process) பிணைத்தார்கள். உணர்வு என்பது, மூளை ந்யூரான்களில் உள்ள நுண்குழாய்களில் நடைபெறும் குவாண்ட செயல்முறை, அது காலவெளி வடிவவியலின் (Spacetime Geometry) துல்லிய அமைப்பை ஒத்து செயல்படுகிறது. இதை பௌதிகக் கருவிகள் கொண்டு அளவீடு செய்வது கடினம். ஆனால், கருதுகோளைக் கணித மாதிரிகளைக் கொண்டு விளக்க முடியும். இதில் நுண்குழாய் என்று வருகிறதே, அது என்ன? புரதக் குழாய்களின் பாலிமர் என அதை வரையறை செய்கிறார்கள்.

உணர்வு மற்றும் அறிவாற்றல் செயல்களில் இந்த குவாண்டச் செயல்முறை இயங்கும் விதம் என்ன? அளவு மாறாத படிநிலையில், (Scale invariant Hierarchy) ந்யூரான்கள், பெரிய வலைப்பின்னலுக்கும்,(Networks) மூளையில் உள்ள வலைப்பின்னலின் வலைப்பின்னல்களுக்கும், முன்னேறி முன்னேறி செல்லும் ஆற்றல் கொண்டுள்ளன; அதே நேரம், மிக நுண்ணிய குழாய்களுக்குள் சென்று, ஆழமாக, மிக வேகமாக, குவாண்ட செயல் முறையில் உணர்வை உண்டாக்குகின்றன. எனவே, நரம்புகள் மூளைக்குள் ஒத்திசைந்து, நடனமாடி, பெரும்போக்காகவும், நுண்மையாகவும் உணர்வை, அறிவை, சிந்தனையை ஏற்படுத்துகின்றன என்ற பொதுக் கருத்தை இவர்கள் இருவரும் சொன்னார்கள். அதற்கு முன்னும், பின்பும் இதே கருத்து சிற்சில வார்த்தை மாறுபாடுகளுடன் பலரால் சொல்லப்பட்டு வந்துள்ளது.

இந்தக் கருத்திற்கு வலு சேர்க்கும் ஒரு கணித மாதிரியை ஷாங்காய் பல்கலை (Shanghai University) சமீபத்தில் உருவாக்கியுள்ளது. குவாண்டச் சிக்கல் அல்லது பிணைப்பு (Quantum Entanglement) நமது உணர்வை உண்டாக்குகிறது என்று அந்த அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.

மூளையை கணினிக்கு ஒப்பிடுவது வழக்கம். ந்யூரான்களை, ட்ரான்சிஸ்டர்களுக்கு ஒப்பீடு செய்வது ஒரு உருவகமேயன்றி முழுப் பொருத்தமில்லை. மூளை, கணினியைக் காட்டிலும் ஆற்றல் மிக்கது. தன் சக்தியை மீட்டுக் கொள்ளும் திறம் வாய்ந்தது. கணினியால் இயலாத பல செயல்களைச் செய்யக் கூடியது. மூளையின் உட்செயல்பாடுகளைப் பற்றி இன்னும் அறிய வேண்டியது ஏராளம். மூளை முதன்மையான குவாண்டக் கணினி செயல்பாடுகளை மட்டுமே கொண்ட ஒன்றில்லை என்று சொல்லும் அறிஞர்கள், அதன் குவாண்டச் செயல்பாடுகள் உணர்விற்கு ஆதாரமாக இருக்கலாம் எனக் கருதுகிறார்கள். குறிப்பாக குவாண்ட பிணைப்பு. குவாண்ட பிணைப்பு என்பது என்ன என்ற கேள்வி இயல்பாக வருமல்லவா? பொதுவாக இரு ஃபோடான்கள், ஒன்றுக்கொன்று வெகு தொலைவில் இருந்தாலும்,பிரிக்க முடியாத பந்தத்தில் பிணைந்துள்ளன என்பதைத் தான் குவாண்டப் பிணைப்பு என்று சொல்கிறோம். (இதைப் பற்றி மேலும் அறிய இக்கட்டுரையைப் பார்க்கலாம். சொல்வனம் இதழ் 281, 23/10/2022 அவனாம், இவனாம், உவனாம்- உத்ரா) ஐன்ஸ்டைனே இதை ‘தொலைவில் பயமுறுத்தும் ஒன்று’ என்று சொன்னார் என்றால், இதைப் புரிந்து கொள்வது எளிதான ஒன்றல்ல.

ஷாங்காய் பல்கலை, ‘பிசிகல் ரிவ்யூ ஈ’ (Physical Review E) யில் வெளியிட்டுள்ள கட்டுரையில் சொல்கிறார்கள்: ‘நரம்புத் திசுக்களின் அச்சினை சுற்றியுள்ள மைலின் (Myelin) என்ற கொழுப்பு, ஃபோடான்களின் பிணைப்பிற்கான சாத்தியங்களுள்ள சூழலைத் தரலாம். இது உணர்வைத் தந்து, தகவல்களை அலசி ஆராய்ந்து உடனடி நடவடிக்கைக்கு வழி கோலுகிறது. முக்கியமாக ஒத்திசைவிற்கு இது உதவுகிறது. காற்றில் வரும் புகை நெடி, கண்களால் நெருப்பைப் பார்த்து, வாயால் சத்தமிட்டுக் கொண்டே கால்களால் ஓடி, கைகளால் நீரை வாரியிறைத்து … இது நரம்பு மண்டலத்தின் ஒத்திசைவையும், மூளையின் துரிதக் கட்டளையை ஏற்று செயல் படும் மனிதனையும் காட்டுகிறது.

“மூளையில் உணர்வு என்பது மில்லியன் கணக்கான ந்யூரான்களின் ஒத்திசைவைச் சார்ந்துள்ளது. இத்தகைய, திறமையாகத் திட்டமிடப்பட்டுள்ள ஒருங்கிணைவிற்கான வழிமுறை எதில் இருக்கிறது, எங்கே இருக்கிறது என்பதில் தெளிவில்லை” என்று அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ”மைலின் உறையால் உருவாகும் அந்த உருளைக் குழி, (Cylindrical Cavity) பல ஜோடி ஃபோடான்களை, அதிர்வு நிலைகளில் உமிழ்ந்து, அவைகளின் பிணைப்பிற்கு வழி வகுக்கும்.”

ஷாங்காய் குழுவினர் இதை விளக்குவதற்கு ஒரு கணினி மாதிரியைச் செய்துள்ளார்கள். மைலின் என்ற கொழுப்புக் கவசத்தில் கார்பன்- ஹைட்ரஜன்  பொதிந்துள்ளது. அகச்சிவப்பு ஃபோடான்கள், (Infrared Photons) இந்த இரசாயன பிணைப்பான கார்பன்- ஹைட்ரஜனை எவ்விதம் பாதுகாக்கிறது, எப்படி சக்தி பிறக்கிறது என்பதை விரிவாக இந்த ‘மாதிரி’ விளக்குகிறது. பல பைஃபோடான் இணையர்கள் உருவாகி, பிணையும் தன்மையினால், நரம்பு மண்டலத்தின் ’குவாண்டத் தொடர்பின் மூலம்’ (Quantum Communication Resource) என உதவக்கூடும்.

யாங் காங் சென் (Yong Cong Chen) ஷாங்காய் பல்கலைக் கட்டுரையின், கணித மாதிரியின் இணை ஆசிரியர். அவர் சொல்கிறார்: “மூளை செயல்படும் போது, இலட்சக் கணக்கில் ந்யூரான்கள் எழுச்சி பெறுகின்றன. உதவும் வகையில் ஒரு சாதனத்திற்கு ‘பரிணாமத் துறை’ ஆர்வம் கொள்ளுமானால், குவாண்ட சிக்கல் அதற்கு ஏற்ற ஒன்று.” ஆனால், இதை உயிரியில் பரிசோதித்துப் பார்ப்பது மிக மிக சிக்கலான ஒன்று. ஒரு எலியின் மூளையின் குவாண்ட செயல்பாடுகளை பரிசோதனைச்சாலையில் கண்டறிவது சுலபமல்ல. குவாண்டத்தின் தன்மையும், நிலைத் தன்மையைக் காட்டும் நீள் பரிசோதனை இன்றைய அறிவியல் நிலையில் செய்யக் கூடிய ஒன்றல்ல. ஆனால், கருதுகோள்கள், மாதிரிகள், மற்றும் நிரூபணங்கள் இவையன்றி அறிவியல் இல்லை. ஒரு காலத்தில் ‘பயமுறுத்தும் ஒன்று’ எனச் சொல்லப்பட்ட குவாண்ட பிணைப்புதான், இப்போது குவாண்டத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியா

கேன உபநிஷதம் சொல்கிறது pratibodha vidita matamamtatva hi vindate (2.4). இதன் பொருள் ‘அறிவின் ஒவ்வொரு துடிப்பிலும், உணர்வு ஒளி சிந்துகிறது. உணர்வில் பிரதிபலிப்பதே பொருள் ஆகும், ஆனால், உணர்வு ஒரு பொருளல்ல.

நம் அத்வைத வேதாந்தம், உணர்வு என்பது ஒன்றே, பல மனிதர்கள், பல மனதுகள், பல உயிரிகள் என்று கண்டாலும், எல்லாவற்றிலும் இருப்பது ஒரு உணர்வே; அதை ப்ரக்ஞை, சைதன்யம் என்றெல்லாம் பெயரிட்டு நாம் அழைக்கிறோம் எனச் சொல்கிறது. மூளை பௌதீக வடிவம் கொண்ட ஒரு கருவி, மனம் என்பது எங்கும் பயணிக்கும் ஒரு செயல், இவ்விரண்டும் பொருள் என எதால் அறியப்படுகிறதோ அதுவே உணர்வு. இந்த உணர்வு பொதுவாக இருந்தாலும், அவரவர்க்கான உணர்ச்சிகள் வேறுபடும். எனவே இதை அளக்க முடியாது, அளக்க முயலும் செயலும் ஒரு பொருளை அளப்பதில் முடியுமே தவிர, அந்த உணர்வுத் தன்னிலையை கருவிகள் கொண்டு வரையறுக்க முடியுமா என்பது ஐயமே!

ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தில் ‘ப்ரக்ஞான கன ரூபிணி’ என்ற நாமாவளி, அன்னை தூய உணர்வாக இருக்கிறாள் என்று சொல்கிறது. 

சில கேள்விகளை தொடக்கத்தில் பார்த்தோம் அல்லவா?  ஸ்வாமி சர்வப்ரியானந்தா நிகழ்த்தியுள்ள பல உரைகளிலிருந்து சுருக்கமாக அதன் விடைகளை தொகுத்துப் பார்ப்போம். 

மேற்கூறியவைகள், உபநிஷதங்கள் சொல்லும் சில கருத்துக்கள். விஞ்ஞானமும், மெய்ஞானமும் தேடுவது ஒன்றைத்தான். நாம் கருதுகோளாய்  வைத்திருப்பதை, அறிவியல் நேராகவோ, மாறாகவோ நிரூபித்தால், மனித குலத்திற்கு நன்மையே. உயிர்களிடத்தில், இதனால், நம் அன்பு ஓங்கும் அல்லவா?

முண்டக உபநிஷத்தில் மிகப் புகழ் வாய்ந்த ஒரு பாடல் வருகிறது. இரு பறவைகளைப் பற்றி, அவற்றின் குண வேறுபாடுகளைப் பற்றி சொல்வதாகத் தோன்றும் அந்தப் பாடல் ஒரே பறவையைக் குறிக்கும் அற்புதமாக மாறுவது உணர்வு ஒன்றே என்றே சுட்டுகிறது. சாதாரணத் தளத்தில், பழத்தை உண்ணும் பறவை தன் கர்மாக்களின் பலனை அனுபவிப்பதாகவும், அதை பார்த்துக் கொண்டு அதே மரத்தில் மற்றொரு பறவை அமைதியாக அமர்ந்திருப்பதாகவும் பொருள் சொல்வார்கள். சிறப்பு தளத்தில் அமைதியாக பார்த்திருக்கும் அந்தப் பறவை, கனியை உண்ணும் பறவையின் உணர்வு என்று வகைப்படுத்துவார்கள். அதாவது, இரண்டு பறவைகளில்லை. அந்தப் பாடல் இவ்வாறு தொடங்கும்:

“த்வா சுபர்ணா சாயுஜா சகாயா சமானம் வ்ருக்ஷம் பாரிசஸ் வாஜதே தயோரன்யா: பிப்பலம் ஸ்வாத்வாத்யான ஸ்னான்னயோ…….”

வேதாந்தங்கள் உணர்வு என்பதே வாழ்வு என சுருக்கமாகச் சொல்கின்றன. அது ஒற்றையாக இருக்கிறது, அனைத்திலும் பரவி இருக்கிறது. அதில் பொருட்கள் பிரதிபலிக்குமே தவிர அது ஒரு பொருளாவதில்லை. அது உயிரிகளின் வாழ்வியலாக உருவான ஒன்று.

“உடம்புக்கும் நாலுக்கும் உயிராகிய சீவன்
ஒடுங்கும் பரனோடு ஒழியாப் பிரமம்
கடந்தொறும் நின்ற கணக்கது காட்டி
அடங்கியே அற்றது ஆரறிவாரே?” -திருமூலர் திருமந்திரம்

உசாவிகள்:

https://www.popularmechanics.com/science/a61854962/quantum-entanglement-consciousness/ by Darren Orf Published: Aug 13, 2024 3:24 PM EDT

கேன, முண்டக உபனிடதங்கள், திருமூலர் திருமந்திரம், ஸ்வாமி சர்வப்ரியானந்தாவின் உரைகள்.

Exit mobile version