- கிணற்றிலிருந்து வெளிவரும் உண்மை
- இமானுவல் கன்ட்டின் அழகியல் தத்துவம்
- இமானுவல் கன்ட்டின் உணர்வோங்குப் பெருநிலை
- கிரேக்கத்து ஸிஸிபஸும் கேரளத்துப் ப்ராந்தனும் – அல்பேர் கமூவின் அபத்தவாதம்
- சபலங்களைக் கடத்தல்
- எங்கிருந்து வந்தோம்? நாம் யார்? நாம் எங்கு செல்கிறோம்?
- எதற்காக உயிரைத் துறக்கலாம்? – 1
- எதற்காக உயிரைத் துறக்கலாம்? – 2
- பாவம், மரணம், நரகம்
- கானலின் நீரோ, காட்சிப்பிழையோ?
- இருளையும் ஒளியையும் வென்றவன்
- கண்டுணரும் நொடிப்பொழுதின் காட்சி
- ஒழுங்கின்மையின் உன்னதம்
- காலம் எரித்ததும், கணினி மீட்டதும்
சாக்ரடீஸின் மரணம்
எதற்காக உயிரைத் துறக்கலாம்? இன்றைக்கு இந்தக் கேள்வி முன்வைக்கப்பட்டால் பலருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்குப், பதில் சொல்லத் தெரிவதில்லை. சமூக வலைத்தளங்கள் வழியே இப்படி ஒரு ஆய்வு நடத்தப்பட்டபொழுது குடும்பத்தைக் காப்பாற்ற, காதலுக்காக, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் சிறுமியைக் காப்பாற்ற என்று பொத்தாம்பொதுவில்தான் பதில்கள் கிடைத்தன. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுபவருக்காக உயிரைப் பணயம் வைத்து முயல்வது உன்னதமானதுதான், ஆனால் ஒருவரும் தன்னுடைய வாழ்வில் அந்தத் தருணத்திற்காகக் காத்திருப்பதில்லை, அல்லது அதற்கான ஆயத்தங்களையும் பயிற்சிகளையும் மேற்க்கொள்வதில்லை. நாட்டுக்காக உயிரை இழக்கத் தயார் என்று ஹொராஷியை சகோதர்கள் சபதம் மேற்கொண்டதை சென்ற கட்டுரையில் நாம் பார்த்தோம். தேசத்திற்காகவும், தாம் நம்பும் மதத்திற்காகவும் இன்றளவும் பலர் உயிர் துறக்கின்றனர். இதுபோன்ற காரணங்களுக்காக உயிர் துறப்பவர்கள் நிச்சயமாகத் தெரிந்தேதான், நம் மரணத்திற்கு ஒரு அர்த்தமிருக்கப்போகிறது என்ற நம்பிக்கையுடந்தான் அதைச் செய்கிறார்கள். சில சமயங்களில் தற்கொலைத் தாக்குதல் போன்ற பயிற்சிகளையையும் மேற்கொள்கிறார்கள். வரலாற்றில் மதம், தேசம் இரண்டுமே உலகின் மாபெரும் போர்களுக்கும் உயிரிழப்புகளுக்கும் காரணமாக இருந்திருக்கின்றன; இன்றும் இருந்து வருகின்றன. எனவே தற்கால நெறிமுறைகளில் இவை பெரிதும் உன்னதமாக்கப் படுவதில்லை. ஏற்புடன், சுயதெரிவாக உயிர்துறக்க இதற்கெல்லாம் மேலான காரணங்கள் உண்டா?
படம் -1 : தத்துவ மேதை சாக்ரடீஸ். இந்தப் பளிங்குச் சிலை ஒரு செப்புச் சிலையின் (தற்பொழுது தொலைந்துவிட்டது) மறுவடிவாக உருவாக்கப்பட்டது. பிரான்ஸின் லூவர் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.
முன்பொதுயுகம் 470-ல் பிறந்து 399-ல் மறைந்தவர் தத்துவ மேதை சாக்ரடீஸ் (Socrates.) அவருடைய தந்தை கொத்தனாராகவும், தாயார் செவிலியராகவும் வேலையில் இருந்தனர். மேற்கத்தியத் தத்துவ உலகில் மிக முக்கியமானவராகக் கருதப்படும் சாக்ரடீஸ், அவருடைய வாழ்நாளில் ஒன்றையும் எழுதிவைக்கவில்லை. அவர் தன் வாழ்நாள் முழுவதையும் ‘தத்துவப்படுத்தலில்’ (philosophizing) கழித்தார். அதாவது உலகின் இருப்புகளையும் நடப்புகளையும் ஏன், எதற்கு, எவ்வாறு என்ற தொடர்ச்சியான கேள்விகளின் மூலம் புரிந்துகொள்ளத் தலைப்பட்டார். அவர் ஏதென்ஸ் நகரவீதிகளில் அலைந்து திரிந்தார். கண்ணில் படுபவர்களையெல்லாம், குறிப்பாக இளைஞர்களைக், கேள்விகள் கேட்டார். அவர்களையும் கேள்விகளைக் கேட்கப் பணித்தார். ஒருவகையில் அவர் தன் வேலையை குழந்தைகளைப் பிறப்பிக்க உதவும் தன் தாயாரின் செவிலிப் பணியுடன் ஒப்பானதாகக் கருதினார். எப்படி ஒரு செவிலித் தாதி குழந்தைகளை ஆரோக்கியமாகப் பெற்றெடுக்க உதவுகிறாரோ அதைப் போலவே இளைஞர்களிடம் தத்துவக் கேள்விகளைக் கேட்பதன்மூலம் அவர்களுக்கான (மற்றும் பொதுவிலான) புரிதலுக்கு இட்டுச் செல்வதே தன் பணி என்று நம்பினார். அவர் மாணவர்களில் ஒருவர் இன்னொரு மாபெரும் தத்துவ ஞானியான பிளாட்டோ, அவருடைய எழுத்துக்கள் வாயிலாகவே நாம் சாக்ரடீஸின் சிந்தனைகளை அறிகிறோம்.
அவர் தன்னுடைய உணர்வுகளின்மீது பெரும் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தார். தான் தீர்க்கமாக நம்பியவற்றின் வழியிலேயே வாழ்ந்தார். அவர் மானுட வளர்ச்சிக்கு அறிதல் மிகவும் இன்றியமையாதது என்று கருதினார். ஒன்றைப்பற்றி நன்றாகச் சிந்தித்து புரிந்துகொள்வது அது குறிந்த நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்த உதவும் என்றார். உதாரணமாக, மரணத்தை அறிந்துகொள்வதன் மூலம் அது குறித்த பயத்தைக் கடக்க முடியும் என்று நம்பினார். மரணம் என்பது ஒரு முடிவல்ல, மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது, எனவே அதைக் கண்டு அஞ்சத் தேவையில்லை என்று வாதிட்டார். உறுதியான கேள்விகள், அவற்றுக்கான சரியான பதில்களைக் கண்டடைவதன் மூலம் தெளிவான புரிதலை அடையமுடியும், அது தரும் நிச்சய உணர்வினால் நம் நடத்தைகளிலும் நேர்மை பிறக்கும் என்றார். மறுபுறத்தில், பொது விழுமியங்களாக அன்றைய சமூகம் கடைபிடித்த தைரியம், பக்தி, நேர்மை, சுயகட்டுப்பாடு போன்றவற்றை அவர் கேள்விகளுக்கு உட்படுத்தினார். ஆனால் சாக்ரடீஸின் இந்தக் ‘கேள்வி கேட்டல்’ அன்றைய ஆட்சியாளர்களுக்கு பெரும் எரிச்சலூட்டியது. அவர்கள் சாக்ரடீஸ் கடவுளை மறுப்பதாகவும், இளைஞர்களைப் புரட்சிக்குத் தூண்டுவதாகவும் குற்றம் சாட்டினர். ஏதென்ஸ் நகரப் பொதுமன்றத்தில் அவர் விசாரிக்கப்பட்டார்.
சாக்ரடீஸின் முதன்மை மாணவரான பிளாட்டோ எழுதிய ஃபேடோ (Phaedo) என்ற நூலில் சாக்ரடீஸின் விசாரணையும், தண்டனையும் விவரிக்கப்பட்டிருக்கின்றன. அவர் மீது பின்வரும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன; நாடு பொதுவில் ஏற்றுக்கொண்ட கடவுளை மறுத்தது, பிற தெய்வங்களைப் போதித்தது, இவற்றின் வழியே இளைஞர்களின் மனங்களைக் களங்கப்படுத்தியது. இந்த விசாரணைகளின்பொழுது அவர் தன் கொள்கைகளையே அவர்களுக்கு மீண்டும் போதிக்க முயன்றார். தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பது தவறு என்று வாதிட்டார். சொல்லப்போனால் டெல்ஃபி (Delphi)-யில் குடிகொண்டிருக்கும் கடவுளுக்கு கீழ்ப்படிந்தே தன் செய்கைகள் இருப்பதாகச் சொன்னார். உண்மையான கடவுளின் தன்மையை சக குடிமக்கள் அறிந்துகொள்ளவே தான் உதவுவதாகச் சொன்னார். ஆனால் ஏதென்ஸ் நகர மக்களுக்கு அதில் நம்பிக்கையில்லை. அவர்கள் சமயச் சடங்குகளில் ஈடுபடுதல், பலியிடுதல், கோயிலுக்குச் செல்லுதல் போன்றவையே கடவுளுக்குக் கீழ்படிதலின் அடையாளங்கள் என்று கருதினார்கள். அப்படி நடந்துகொள்ளாவிட்டால் கடவுள் தம்மையும் நாட்டையும் தண்டிப்பார் என்று நம்பினார்கள். சாக்ரடீஸ் நேர்மையாக நடப்பவர்களைக் கடவுள் ஒருபோதும் தண்டிக்கமாட்டார் என்று வாதிட்டார். தன் மனத்தளவில் உண்மையானவனாகவும் நேர்மையானவனாகவும் இருப்பது மிக முக்கியம், சடங்குகளிலும் பலிகளிலும் எந்தப் பலனும் இல்லை என்றார். பொதுமன்றம் அவர் குற்றங்களை உறுதிப்படுத்தியது. அவருக்கு எந்த வகையில் மன்னிப்பு வழங்கலாம் என்று அவரையே கேட்டது. தன் மீது சாட்டப்பட்ட குற்றங்களை முழுவதுமாக மறுத்த அவர், அதற்கான மன்னிப்பை யாசிக்கத் தயாராக இல்லை. எனவே மன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. ஹெம்லாக் என்ற விஷச் செடியின் சாற்றை அருந்தி அவர் உயிர் துறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது; அவர் அதை மனவுறுதியுடன் ஏற்றுக்கொண்டார்.
படம் – 2 ‘சாக்ரடீஸின் மரணம்’ – பிரெஞ்சு ஓவியர் ழாக்-லூயி தாவீத் வரைந்தது. தற்பொழுது நியூயார்க் பெருநகர அருங்காட்சியகத்தில் காட்சியிலிருக்கிறது.
பிரெஞ்சு ஓவியர் ழாக்-லூயி தாவீத் (Jacques-Louis David 1748–1825), 1787-ஆம் ஆண்டு பிளாட்டோவின் ஃபேடோ நூலின் அடிப்படையில் இந்த ஓவியத்தை வரைந்திருக்கிறார். ஒரு பழைய கிரேக்கத்து வரலாறு, அதைப் பழைய செவ்வியல் பாணியிலேயே வரையப்பட்ட ‘சாக்ரடீஸின் மரணம்’ ஏன் நவ-செவ்வியல் (Neoclassical) ஓவியமாகச் சொல்லப்படுகிறது? முன்னூறு ஆண்டுகளுக்குப் பின்னும், ஏன் இன்றுகூட அது உலகின் முக்கியமான ஓவியங்களுள் ஒன்றாகப் போற்றப்படுகிறது?
‘சாக்ரடீஸின் மரணம்’ (La Mort de Socrate) என்று தலைப்பிடப்பட்ட இந்த ஓவியம் 129.5 × 196.2 செமீ அளவில் திரைச்சீலையில் தைல வண்ணத்தால் ( Oil on canvas) வரையப்பட்டது. இப்பொழுது நியூயார்க் பெருநகர அருங்காட்சியகத்தில் (Metropolitan Museum of Art, New York) காட்சியில் இருக்கிறது. கொண்ட கொள்கைக்காக சாக்ரடீஸ் உயிர்துறக்கும் தருணத்தை தாவீதின் ஓவியம் மிக அற்புதமாக சித்தரிக்கிறது. ஓவியத்தின் மையத்தில் ஹெம்லாக் விஷத்தால் நிரம்பிய கோப்பை இருக்கிறது. அதை அருந்தத் தன் வலது கையால் சாக்ரடீஸ் வாங்குகிறார். சிறைக்காவலன் மிகுந்த தயக்கத்துடன் அதை அவர்முன் நீட்டுகிறான். அவருக்கு நெருக்கமாக, அவர் மடிமீது கைவைத்து அவர் சொல்வதைக் கவனித்துக் கேட்பவர் முக்கிய சீடரான கிரிட்டோ (Crito). காலடியில் குனிந்த தலையுடன் யோசனையில் ஆழ்ந்திருப்பவர் பிளாட்டோ. இவர்களுடன் கூட இன்னும் பல சீடர்கள் வருத்ததிலும் வேதனையிலும் மூழ்கியிருக்கிறார்கள். சாக்ரடீஸின் இன்னொரு சீடர் வளைவு வாயிலின் சுவற்றில் முகம் பதித்திருக்கிறார். தொலைவில் சாக்ரடீஸின் மனைவியும் இன்னும் சிலரும் அவருக்கு விடைகொடுத்து அவ்விடத்தைவிட்டு நீங்குகிறார்கள்.
ஓவியத்தைப் பார்க்கும்பொழுது முதலில் நம்மை ஈர்க்கிறார் சாக்ரடீஸ். அவரது இடக்கரம் நெடுதுயர்ந்து விண்ணைச் சுட்டுகிறது. அது அவர் போகவிருக்கும் இடம். மரணத்தை எதிர்நோக்கும் நிலையிலும் அவர் முகம் தெளிவாக இருக்கிறது. ஆன்மாவிற்கு அழிவு கிடையாது, அது நிரந்தரமானது என்று தன் சீடர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார். வேறுவிதமாகப் பார்த்தால் உயர்த்தப்பட்ட வலக்கரம் ஏதென்ஸ் நகரின் ஊழல் ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்பதைப் போலிருக்கிறது, அல்லது அவர் சீடர்களைத் தான் இறந்த பிறகும் எதிர்த்து நிற்கத் தூண்டுகிறது. உண்மையில் சாகும்பொழுது அவருக்கு எழுபது வயது. ஆனால் ஓவியத்தில் அவர் ஒரு தீரமிக்க இளைஞனின் உடற்கட்டுடன் இருக்கிறார்.
படம் – 3 ஓவியத்தின் நாயகன் சாக்ரடீஸ். அவர் மரண தண்டனையை ஏற்றுக்கொண்டபொழுது வயோதிகராக இருந்தார். சாக்ரடீஸ் குறித்த பிற தகவல்கள் அவரைக் குள்ளராக, சப்பைமூக்கு கொண்டவராக் காட்டுகின்றன. ஆனாலும் அவருடைய மனத்தூய்மையையும், தைரியத்தையும் உணர்த்த ஓவியர் தாவித் அவரை தீரமிக்க இளைஞராக வரைந்திருக்கிறார். இது செவ்வியல் ஓவிய முறையின் வழக்கம்.
ஏன் இப்படி உண்மைக்குப் புறம்பாக வயோதிகத்திலிருந்த சாக்ரடீஸை பராக்கிரம இளைஞனைப்போலக் காட்டவேண்டும்? சொல்லப்போனால் இளவயதில்கூட சாக்ரடீஸ் அழகானவரில்லை. பிற குறிப்புகளில் அவர் கட்டையாக, தொந்தியுடனும், சப்பைமூக்குடனும் இருந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், செவ்வியல் காலத்து கிரேக்கத்தில் ‘heroic nudity’ என்றொரு கலைப் பாரம்பரியம் உண்டு. வெற்று உடலின் உன்னதம் மனத் தூய்மையையும் வீரத்தையும் பிரதிபலிக்கிறது. இங்கே ஒரு ஒலிம்பிஸ் வீரரையொத்த உடலால் சாக்ரடீஸீன் திடமும், மனவுறுதியும் சுட்டப்படுகிறன. அவர் உடுத்தியிருக்கும் வெண்ணிற உடை கத்தோலிக்கப் பாரம்பரியத்தில் தூய்மையின் அடையாளம்.
ஓவியர் தாவீதுக்கு கிறிஸ்துவத்தில் நம்பிக்கை இல்லை, இருந்தபோதும் காண்பவர் மனதில் தூய்மையைப் பிரதிபலிக்க வேண்டியது முக்கியம். ஓவியத்தில் சாக்ரடீஸுடன் 12-பேர்கள் இருக்கிறார்கள். உண்மை வரலாற்றின்படி அந்த இடத்தில் 15-பேர் இருந்தார்கள். லியனார்டோ டாவின்சியின் ‘இறுதி இரவுணவு’ (Last Supper) ஓவியத்தில் யேசுவைச் சுற்றி பன்னிரெண்டு சீடர்கள் இருக்கிறார்கள். சாக்ரடீஸை யேசுவைப் போன்ற உன்னதமானவராகக் காட்ட தாவீதும் 12-பேர்களையே வரைந்திருக்கிறார். சாக்ரடீஸையும் யேசு கிறிஸ்துவையும் பலரும் ஒப்பிட்டிருக்கிறார்கள். யேசுவைப் போல சாக்ரடீஸ் மதம் எதையும் நிறுவவில்லை, ஆனால் இருவர் வாழ்விலும் பல ஒற்றுமைகள் இருந்திருக்கின்றன. இருவரும் எளிய வாழ்வையே வாழ்ந்திருக்கின்றனர், தங்களுக்கேயான வழிகளில் இருவருமே உயர்ந்த உண்மைகளுக்காக வாழ்வை அர்ப்பணிதிருக்கின்றனர். யேசு கடவுளாகிய தந்தைக்கும், சாக்ரடீஸ் தர்க்கங்களினால் கட்டமைக்கப்பட்ட தத்துவப் புரிதல்களுக்கும் விசுவாசமாக வாழ்ந்தனர். இருவர் மீதும் எந்தவித அடிப்படைகளும் இல்லாமல் குற்றங்கள் சாட்டப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்டது. இருவரும் தங்கள் கொள்கைகளைப் புறந்தள்ளி உயிர்வாழத் தலைப்படாமல், அவற்றின் மீதான தீர்க்கமான உறுதிப்பாட்டுடன் தங்கள் இலட்சியங்களுக்காக உயிர் துறந்தார்கள். எனவே ஓவியர் தாவீத் கிட்டத்தட்ட நானூறு ஆண்டுக்களுக்கு முற்பட்ட, டாவின்சியின் ஓவியத்தின் கூறுகளை உள்ளடக்கி, சாக்ரடீஸை யேசுவுடன் மறைமுகமாக ஒப்பிடுகிறார். நவ-செவ்வியல் ஓவியங்கள் இப்படிச் செவ்வியல் கூறுகளை உள்வாங்கி, அவற்றைப் பிரதிபலிக்கும்படி வரையப்பட்டன. சாக்ரடீஸின் இன்னொரு கரம் விஷக்கோப்பைக்கு மேலாக இருக்கிறது, இன்னும் தொடாத, அதே சமயம் திடமாக அதை அனுகும் நிலை நாடகத்தன்மை நிறைந்ததாக இருக்கிறது. அவருக்கருகில் ஒரு லூட் இசைக்கருவி. (சாக்ரடீஸின் இறுதி நாட்களில் அவர் கிரேக்க நாயகன் அப்போலோ மீது ஒரு பாடலை யாத்துக் கொண்டிருந்தார்). அவர் காலடியில் விடுபட்ட அடிமைச் சங்கிலி, இனி சாக்ரடீஸ்க்கு எந்தத் தளைகளும் இல்லை என்பதைக் காட்டுகிறது.
படம் – 4: சாக்ரடீஸ்க்கு ஹெம்லாக் செடியின் விஷச்சாற்றை அளிக்கும் சிறைக்காவலன். தன் செய்கையால் அருவருப்படையும் அவன் முகத்தைத் திருப்பி, மூடிக்கொண்டிருக்கிறான். கோப்பையை நீட்டும் அவன் கரத்தில் உறுதியில்லை. குறுகிய முதுகும், தரையில் பாவாத காலும் அவன் சங்கட மனநிலையை அற்புதமாகக் காட்டுகின்றன. ஓவியம் சாக்ரடீஸ் கோப்பையைத் தொடுவதற்குச் சற்றுமுன் நிலையைக் காட்டுகிறது, இதுவே நிகழ்வின் உச்சகட்ட நாடகீயத் தருணம்.
அவருடைய திடமான மனநிலைக்கு எதிரானது அவருக்கு விஷமளிப்பவனின் நிலை. அவன் தன் செயலால் அருவருப்படைகிறான். மாமேதையின் முகத்தை நேர்கொண்டு காணும் தைரியம் அவனுக்கு இல்லை. சாக்ரடீஸின் விரிந்த தோள்களைப்போல் இல்லாமல் அவன் தோள்கள் சரிந்து விழுகிறன. கையை முழுமையாக நீட்டும் மனத்திடம் அவனுக்கு இல்லை. படம் முழுவதும் தாவீத் நேர்கோடுகளையும் வளைவுகளையும் அற்புதமாகப் பயன்படுத்தியிருக்கிறார். நேர்கோடுகள் மனவுறுதி, நேர்மை, தான் கொண்ட நிலையில் தெளிவு என்பனவற்றைச் சுட்டுகின்றன. மாறாக சுய அருவருப்பிலிருக்கும் விஷமளிப்பவனும், கலக்கத்திலும் சோகத்திலும் இருக்கும் அவருடைய சீடர்களும் சரிந்த தோள்களையும் வளைந்த உடலையும் கொண்டிருக்கிறார்கள். சாக்ரடீஸ்க்கு அருகில் அவரைப் பற்றிக்கொண்டு அமர்ந்து இருப்பவர் அவருடைய மூத்த சீடர் கிரிட்டோ (Crito), பிடித்திருப்பது சாக்ரடீஸை மாத்திரமல்லை, அவர் போதித்த உன்னத விழுமியங்களையும் கூட. சாக்ரடீஸின் பார்வை அவர் மீதே நிலைத்திருக்கிறது.
ஓவியத்தின் பின்புலத்தில் படிக்கட்டுகள் வழியே சாக்ரடீஸ்க்குச் சோகம் ததும்ப விடைசொல்லிச் சென்றுகொண்டிருப்பவள் அவர் மனைவி, ஸாந்திப்பி (Xanthippe). நடுவிலிருக்கும் வளைவு வாசலில் மாணவன் அப்போலோடோரஸ் (Apollodorous). அவனுக்கும் தாளமுடியாத வருத்தம், நடப்பனவற்றை நேர்கொண்டு நோக்கமுடியாமல் சுவரில் முகம் புதைத்துத் தவிர்க்கிறான். கொண்ட கொள்கைகளுக்காகத் தான் மனவுறுதியுடன் உயிரைத் துறக்கும்பொழுது அங்கே சோகத்தின் குறுக்கீட்டுக்கு இடமில்லை என்பதால் அவர்களை வெளியேறச் சொன்னார் சாக்ரடீஸ்.
சாக்ரடீஸைவிட்டுத் திரும்பி, அவர் கால்மாட்டில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருப்பவர் அவருடைய முக்கிய சீடரும் அவரது தத்துவங்களை உலகுக்கு எடுத்துச் சென்றவருமான பிளாட்டோ. இங்கே பிளாட்டோ ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார். தன் வாழ்நாளில் சாக்ரடீஸ் எதையும் எழுதவில்லை. அவர் தொடர்ச்சியாகக் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தார், பிறரையும் கேள்விகளைக் கேட்கத் தூண்டினார். அவற்றினூடாக அவர்களாகவே தமக்கான தத்துவப் புரிதல்களை கண்டுகொள்ள வழிவகுத்தார். போதித்தல் அவர் முறையல்ல; சுயமாகக் கற்கத் தூண்டலே. பிளாட்டோ கிட்டத்தட்ட 35 உரையாடல்களை எழுதியிருக்கிறார், இவற்றின் முக்கிய பாத்திரம் சாக்ரடீஸ்தான். அதன் வழியாகவே நாம் சாக்ரடீஸின் தத்துவமுறைகளை அறிகிறோம். இருவரின் பிணைப்பும் இங்கே ஆழமாகச் சுட்டப்பட்டிருக்கின்றது. தன் குருவைப் போலவே பிளாட்டோவும் தூய வெள்ளாடை அணிந்திருக்கிறார்.
படம் – 5: சாக்ரடீஸின் முக்கிய சீடர் பிளாட்டோ. ஓவியத்தின் ஒளியமைப்பு பிளாட்டோவின் மூளையிலிருந்து துவங்கிப் பாய்கின்றது. எதையுமே எழுதிவைக்காத மேதை சாக்ரடீஸின்மீது வெளிச்சத்த்தைப் பாய்ச்சியவர் பிளாட்டோ. ஓவியர் தாவீத், முரணாக குரு சாக்ரடீஸ் தீரமிக்க இளைஞனாகவும், சீடன் பிளாட்டோ வயோதிகனாகவும் வரைந்திருப்பதுபோலத் தோன்றலாம். ஓவியத்தின் கதை பிளாட்டோவால் பல வருடங்கள் கழித்து அவருடைய நூலில் விவரிக்கப்பட்டது. எனவே, ஓவியம் நிகழ்வை, அதன் நிகழ்கணத்தில் சொல்லாமல் அது எழுதப்பட்ட தருணத்தைச் சுட்டுகிறது.
படத்தில் பிளாட்டோ அவர் குருவைவிட வயதானவராகக் காட்டப்பட்டிருக்கிறார். அவர் காலடியில் கிடக்கும் எழுத்தோலையும், தூரிகையும் பிளாட்டோ சாக்ரடீஸை உலகுக்குச் சொன்னதன் அடையாளங்கள். ஓவியத்தின் ஒளியமைப்பைப் பார்த்தால் அது சாக்ரடீஸின் மூளையில் துவங்கி விரிந்துப் பாயும் கதிரைப்போலிருக்கிறது. நாமறிந்த சாக்ரடீஸ், பிளாட்டோவின் மூளை வாயிலாகத்தான், அவரே சாக்ரடீஸ்மீது ஒளியைப் பாய்ச்சியவர். ஆழ்ந்து நோக்கினால், உண்மை வரலாற்றைப்போலவே முழுச் சித்திரமும் சாக்ரடீஸ் குறித்த பிளாட்டோவின் (தன் வயோதிகத்தில்) நினைவோவியம்தான். பிளாட்டோ இல்லாமல் சாக்ரடீஸ் இல்லை.
ழாக்-லூயி தாவித் முதல்தர ஓவியர் நுட்பராகப் போற்றப்படுகிறார். படம் முழுவதும் அவரது நுட்பத்தைச் சுட்டும் உத்திகள் விரவிக்கிடக்கின்றன. முதலாவதாக ஓவிய அமைப்பு. ஓவியத்தின் முக்கிய பாத்திரங்கள் அனைவரும் கிட்டத்தட்ட ஒரே தளத்திலேயே இருக்கின்றனர். பின்புலத்திலில் இருக்கும் ஸாந்திப்பியும் மையப்புலத்தில் இருக்கும் அப்போலோடோரஸும் மையக் கருத்தைவிட்டு விலகிச் செல்கிறார்கள். சாக்ரடீஸ், பிளாட்டோ இவர்களின் வெள்ளாடைகளைத் திறமாகக் காட்ட பிற முக்கிய பாத்திரங்களுக்கு (சிறைக்காவலன், கிரிட்டோ) சிவப்பு உடையும், பிறருக்கு வெளிறிய நீலவண்ண உடையும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பின்னால் ஒரு நறுமணத் திரி எரிந்துகொண்டிருக்கிறது. அதன் நிழல் அற்புதமாகச் சுவரில் விழுகிறது. செவ்வியல் உத்திகளான நேர்கோடுகள் (நறுமணம் தாங்கி, சுவர் மற்றும் தரைக் கற்கள், நிமிர்ந்த பிளாட்டோவின் உடல், கிரீட்டோ, பிளாட்டோவின் ஆசனம், சாக்ரடீஸின் படுக்கை), வளவுகள் (மாட வாயில், கோப்பை) போன்றவை படத்திற்குப் பரிமாண ஆழங்களைத் தருகின்றன. படத்தின் மூலைவிட்டமாக இரண்டு கோடுகளை வரைந்தால் அவை சந்திக்கும் மையப்புள்ளியில் விஷக்கோப்பை, அதுதான் படத்தின் மையக் கரு.
படம் – 6 ஓவியர் ழாக்-லூயி தாவீதின் மார்பளவுச் சிலை. சிற்பி பிரான்ஸ்வா ரூட் (François Rude, 1784-1855) 1838-ல் பளிங்குக் கல்லில் செதுக்கியது. இப்பொழுது பிரான்ஸின் லூவர் அருங்காட்சியகத்தில் இருக்கிறது. இளவயதில் கத்திச் சண்டை விளையாட்டில் தாவிதின் முகத்தில் காயம் ஏற்பட்டது. அதன் விளைவாக அவர் முகத்தில் புறையில்லாத கட்டி வளர்ந்து அவர் பேச்சுத்திறனைப் பாதித்தது. இந்தச் சிற்பம் அவர் முகத்தின் சமச்சீரின்மையைத் தெளிவாகக் காட்டுகிறது.
ஓவியர் ழாக்-லூயி தாவீதின் வரலாற்றை முந்தைய பகுதியில் விரிவாகப் பார்த்தோம். காலத்திற்கு ஏற்றபடி தன்னை மாற்றிக்கொள்வதில் அவர் வித்தகராக இருந்தார். மன்னராட்சி (பதினாறாம் லூயி) காலத்தில் அரச மற்றும் உயர்குடியினரின் ஆதரவில் அவர்களுக்கான ஓவியங்களை வரைந்தார். பின்னர் அதே அரசரை நீக்கிய பிரெஞ்சுப் புரட்சியின்பொழுது உச்சச் செல்வாக்குடன் திகழ்ந்தார். தொடர்ந்து ஆட்சிக்கு வந்த நெப்போலியன் போனபார்ட்டின் ஆட்சியில் அரசவை ஓவியராக விளங்கினார், நெப்போலியனின் தீரத்தைச் சுட்டும் ஓவியங்களை வரைந்திருக்கிறார். அந்த ஆட்சியும் முடிவுக்கு வந்து பழைய மன்னர் பரம்பரை திரும்பியபொழுது அவருடைய புரட்சிகால நடவடிக்கைகளுக்காக நீதிமன்றம் தண்டனை விதித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பதினெட்டாம் லூயி அவருக்கு (அவருடைய அபார ஓவிய மேதைமையைக் கருதி) மன்னிப்பு வழங்கியது மாத்திரமல்லாமல், மீண்டும் அரச ஓவியர் பணியைக்கூடத் திருப்பியளித்தார். இப்படி மிகக் குழப்பமான, பிரெஞ்சு வரலாற்றின் மிக முக்கியமான காலகட்டத்தில் யார் ஆட்சியிலிருந்தாலும் அவர் அசைக்கமுடியாத செல்வாக்குடன் வாழ்ந்திருக்கிறார். இதற்கு அவருடைய ஓவிய மேதைமையே காரணமாக இருந்தது. இந்த இடத்தில் எந்தவிதமான அரசியல் குழப்பங்கள் பொருளாதார நெருக்கடிகள் இருந்த வேளைகளிலும் உன்னத கலைஞர்களைப் போற்றும் பிரெஞ்சு சமூகத்தின் விழுமியங்களையும் சொல்லியாக வேண்டும்.
சாக்ரடீஸ் கிரேக்க வரலாற்றின் மிகப் பெரும் தியாகி. உன்னதமான வாழ்வை வாழ்வது எப்படி என்று சிந்திக்கத் தூண்டியவர். சந்தேகம் – அதனுடன் கூடவே வரும் சங்கடம் மற்றும் குழப்பம் – இவையே உன்னதத்தை நாம் கண்டடைய முக்கிய வினையூக்கிகள் என்று உணர்த்தினார். நம்மை வசதியாக உட்கார்ந்துகொண்டிருக்கும் குகைகளை விட்டு வந்து, பரந்த வெளியையும் கண்கூசும் சூரியனையும் காண, அதன்மூலம் உலகைப் புரிந்துகொள்ளச் சொன்னவர். அவர் வாழ்ந்த நாட்களில் இவை பெரும் குற்றங்களாகக் கருதப்பட்டன, அதற்கான மரண தண்டனையையும் அவர் ஏற்கவேண்டியிருந்தது. ஆனால் அவருக்கு முன்னரே பல பிரபலங்கள் ஏதென்ஸ் நகர நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள். மனித உடற்கூறியல், வானியல், மற்றும் பொருட்பண்புகள் குறித்த கருத்துக்களை முன்வைத்த அப்போலோனியாவின் டையோஜெனிஸ் (Diogenes of Apollonia), மாபெரும் துன்பியல் நாடகங்களை எழுதிய ஸோஃபோக்லிஸ் (Sophocles) போன்றவர்கள் அவர்களுடைய தத்துவங்கள் இலக்கியப் படைப்புகள் ஊடாக அரசு மற்றும் மதத்திற்கு எதிரான கருத்துக்களைச் சொன்னதற்காகத் தண்டிக்கப்பட்டார்கள். ஆனால் பிளாட்டோவின் தத்துவ நூல்கள் (குறிப்பாக சாக்ரடீஸின் மரணத்தை விவரிக்கும் ஃபேடோ) வாயிலாகவும், ஓவியர் ழாக்-லூயி தாவீதின் பெரும்படைப்பான ‘சாக்ரடீஸின் மரணம்’ மூலமாகவும் தத்துவத்திற்காகவும் கொள்கைக்காகவும் உயிர் துறந்த சாக்ரடீஸ் சாசனப்படுத்தப்பட்டிருக்கிறார்.
