வீடு பறத்தல்
வீட்டைக் காலி செய்து பொருளேற்றிய
வண்டி
வீதியில் போகிறது
வீடொன்று
பெயர்ந்து போவதைப்போல
ஜன்னலே இல்லை என்கிற
புகாரோடு
வெளியேறிய வீடு
ஜன்னல்களின் அவசியமற்ற
வண்டியில்
வெளியைத் திறந்து திறந்து
போகிறது
காற்றைக் காணாத
வீட்டுச் சாமான்கள் யாவும்
காற்றில்
பயணம் போகின்றன
தாமே ஒரு பட்டமெனவும்
தாமே ஒரு பறவையெனவும்
வண்டியின் வேகம்
கூடும்போது தெல்லாம்
கூடிப் பேசி
சப்தமிட்டுச் சிரிக்கின்றன
திருவிழாக் கலை கண்டதுபோல
வீடும்
வீட்டுச் சாமான்களும்
நகரின் பிரதான பாலத்தின் மேல்
ஏறியதும்
தானாக சிறகுகள் விரிந்தகல
துளி வானைத் தொட்டுத் தொட்டு
பறந்து களிக்கிறது வீடு
இன்னோர் வீடு என்பது
வாழ்வின் வேறோர் துயரம்
என்றாலும் கூட
மேடேறி பள்ளமிறங்கி
வளைவிற் திரும்பி
நதி நீரென
நகர்ப் பயணம் போகிறது
வீடற்ற ஒரு வீடு
தனிமை
கதவைத் திறந்த போது
பாத்திரங்கள் உருள
பூனை குட்டிகளிரண்டு
உலாத்தலைக் கைவிட்டு
சன்னலின் வழியே
தாவிக் குதித்தோடின
கதவைத் திறந்த போது
பெண்ணொருத்தியின்
களி நடனமிட்ட
சமயற் கூடத் திரைச் சீலை
காற்றிலாடி
துணுக்குற்று நின்றது
கதவைத் திறந்த போது
அரூபம் நின்று
புரட்டுவதைப்போல
திறந்தும் மூடியுமிருந்தது
மேசை மீதிருந்த
புத்தகத் தாள்கள்
கதவைத் திறந்த போது
உடைந்த ஓட்டின் வழியே
உள் நுழைந்த ஒளிக் கீற்று
அறைத் தனிமையின்
இருளள்ளிக் கண்களில்
ஒற்றிக் கொண்டிருந்தது
கதவைத் திறந்த போது
ஒழுகிய மழை நீரால்
தரை மூழ்கிய அறை
தாமரைத் தடாகம் போல
உடல் குளிர்ந்து
விறைத்திருந்தது
கதவைத் திறந்தபோது
சில பறவைகளையும்
அவற்றின் சில கூடுகளையும்
கொண்ட
நாற்பதாண்டு முதிர் மரமென
நானும் வீற்றிருந்தேன்
அவ்வறையின்
நெடிய பகல் பொழுதில்
இருளெது? ஒளியெது?
முச்சந்தியில் பற்றி எரிந்தது
ஒரு கற்பூரம்
ஆயிரம் அதிர்வுகளோடிருந்தது
அதன் பிறப்பு
சற்றே
காற்று வலுக்கும்போதெல்லாம்
பால்யக்
குதூகலிப்பு அதனிடம்
தெருநாய் ஒன்று
நுகர்ந்து நெருங்கியபோது
சீறித் தாக்கியதில்
இளம் பருவத்திற்கு
வளர்ந்திருந்தது சுடர்
பின்பும் காலம் உருண்டோட
நினைவு தப்பியது அதற்கு
நின்றெரிந்த துளி நெருப்பில்
முதுமைத் தள்ளாட்டம்
நெருப்பின் உடற் சுருங்கிச் சிறுத்தது
பின்பு முற்றாய்த் தூர்ந்து
காற்றில் கரைந்து போனது
இக்கணத்தில் வெளி எங்கும்
நிறை இருள்
இவ்விருளில் ஒளிர்ந்து கடந்தது
எந்தத் திருஷ்டியோ?
எந்தச் சாபமோ?
பாதையும் பயணமும்
பயணப்படும் பாதை
எப்போதும் இரண்டாகப் பிரிகிறது
இரண்டில் ஒன்றின் விலக்கம்
பயணத்தில் தவிர்க்கவியலாதது
பாதையோ பயணமோ சமயத்தில்
தவறிழைக்க
நான் தண்டிக்கப்படுவதும்
உண்டு
ஒருபோதும் நான் இது குறித்து
ஒருவரிடத்தும் புகாரிட்டதில்லை
மாறாக பகுத்தறிந்தேன்
ஒன்று சொல்லற்றிருந்தது
ஒன்று பொருளற்றிருந்தது
என் வளர்ப்பு நாயிடம் சொன்னேன்
நீ பொருளற்றவள்
நம் நடைப் பயணத்தில் எதிர்ப்படும்
அவனோ
சொல்லற்றவன்
என் பகுப்பில்
சொல்லும் பொருளும்
ஒரே இனம் தான்
இரண்டின் குரைப்பொலியிலும்
நான் காண்பது
ஒரே பண்தான்
ச்சீச்சீ……
“சிரிப்பு பிடிக்கவில்லை”
ஏளனமும் இகழ்ச்சியும்…
மாயக்காரி
ஏமாற்றுக்காரி
வெற்று வாய்ப்பிதற்றல்
நடிப்பு நாடகம் என்றெல்லாம்
பிடிக்காத சிரிப்பில் உள்ள
நாணத்தில் அழகில்
தடுமாறி இருக்கலாம்
பிடிக்காத சிரிப்பில் உள்ள
பெண்ணியத் தொன்மத்தில்
திகைத்திருக்கலாம்
வாய்த்திடாத வசப்படாத
ஒருபோதும் வாய்க்கு எட்டாத
நகை நளினத்தின் துல்லியம்
அச்சுறுத்தவோ
பதற்றமடையவோ
செய்திருக்கலாம்
“சிரிப்பு பிடிக்கவில்லை”
எட்டாத உயரத்தில் பூத்துக் கனிந்த
ஆதிப் புளிப்புள்ள
அந்தச் சிரிப்பு
