Site icon சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

சாம்பல் பூத்த நிலம்

அபர்ணாவின் கண்கள் இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் ஊசலாட்டமாடுவது போல இருந்தன. கண்களை மெல்ல திறந்தபோது வலைப்பின்னல் போல வெளிச்சம் இடமும் வலமும் ஓடின. மீண்டும் இறுக மூடிக்கொண்டாள்.

‘அம்மா, எந்த கையில இருக்கு சொல்லு பார்க்கலாம்?’ சிறுவன் தனது இரு கை விரல்களையும் மூடி முட்டியைக் காட்டினான். இடது கைவிரல் முட்டிக்கு அருகே கோளங்கள் போல நரம்புகள் பச்சை கட்டி இருந்தது. கையில் ரேகை இல்லாததைக் கண்டு குழம்பியவள் அந்த விரல்களைத் தொடப்போகும்போது, ‘அம்மா, தொடாமல் சொல்லணும்’, எனக் கண்ணை உருட்டிச் சிரித்தான். அவளது அப்பாவைப் போலப் பழுப்புக் கண்கள். அவரது பார்வையில் தெரியும் ஒரு கேலி இவனது கடையோரமும் தெரிந்தது. மெய்நிகர் உலகில் ஆழ்ந்த அனுபவமாக இருந்தாலும் அபர்ணாவால் இந்த ஒற்றுமையை வியக்காமல் இருக்க முடியவில்லை. தொட்டுக்காட்டிய கையை முதுகுக்குப் பின் மறைத்து கோலியை மாற்றிவைத்தவன் அவன் வென்றதாக சொல்லி ஓடியபோது அவனை பிடிக்க அபர்ணா கை உயர்த்தினாள்; அப்படியே சரியத் தொடங்கினாள். திரையில் காட்சிகளும் அவளுடன் சரிந்து வானவில் குழம்பாயின.

உடல் உதறி முழுமையாக விழித்துக்கொண்டாள். உடனடியாக சூழலுடன் பொருந்திப்போக முடியவில்லை. சுவர் முழுவதும் திரை வடியில் தெரிந்த அந்த அறை ஒரு சாதாரண படுக்கை அறை போல இருந்தது. அவள் திரும்ப முற்படும்போது, முகத்தின் அருகே வால் முளைத்த கண் ஒன்று கேமிரா கண்களால் அவளை அதட்டி நகரவிடாமல் செய்தது. குமிழுக்குள் இருந்து ஒரு விழியின் பாப்பா விரிந்து சுருங்கி அவளது நெற்றியில் சிகப்பு நிற ஒளியைப் பாய்ச்சியது. அறையின் சுவர்கள் அடர் நீல நிற வெளிச்சக் கோடுகளால் நிரம்பியதைப் பார்த்தபோது அபர்ணா காலையில் இங்கு நடந்த நிகழ்வுகளை திடுக்கிடும்படியாக உணர்ந்து நிகழ்காலத்துக்குத் திரும்பினாள்.

நீலத்திறை தனக்குள் கூம்பி மீண்டும் விரிந்ததும் கதவு போல திறந்ததும் ஒரு வெளிர் நிற ஊர்தி அவளருகே வந்து நின்றது. அவள் காலையில் பார்த்த ஷாமன் அமர்ந்திருந்தார்.

‘இன்னும் முழுமையாக முடியவில்லை அபர்ணா. நீங்கள் இப்படி அடிக்கடி கண்விழிப்பதும் விழுமியின் நோட்டத்தை பாதிக்கும்’

‘இல்லை டாக்டர். எனக்கு அந்த மெய் நிகர் உலகில் ஒரு கட்டம் வரை மட்டும் ஆழ்ந்திருக்க முடிகிறது. ஆறு வயதாகும் மகனிடம் விளையாடும்போது விழுவது போல உடல் நடுங்கி எழுந்துவிடுகிறேன்’

விழுமி வாலை ஒரு முறை உதைத்துக்கொண்டு ஷாமன் கை அருகே வந்தது. வேகமான தொடுகை மூலம் தகவல்களை முழுமையாக ஊர்த்தியில் பதிந்துவிட்டு மீண்டும் அபர்ணாவின் தலைக்கு மேலே சென்று மிதந்தது.

‘அபர்ணா, நான் டாக்டர் இல்லை. இது உங்க மனித மருத்துவமனையும் இல்லை. உங்களுக்கு இது என்ன என விளக்கவும் போவதில்லை. மெய்நிகர் நோட்டம் மூன்றாம் முறையாகத் தடைபெற்றதால் நீங்க காலக்குழப்பத்தில் இருக்கீங்க’

அபர்ணாவுக்கு அடுத்து வரப்போகும் செயல்முறைகள் அனைத்தும் மனப்பாடம். ரெண்டு வாரங்களாக இங்கு வந்துகொண்டிருக்கிறாள்.

‘இது மருத்துவமனையா?’

‘இல்லை, மேல் அரசின் மையக்கட்டுப்பாட்டுக் கழகம்’

‘இங்கு மருந்து மாத்திரை கொடுப்போமா?’

‘இல்லை. மகப்பேறு மையக்கட்டுப்பாட்டு அமைப்பின் சிசு தரக்கட்டுப்பாடுகளை நோட்டம் விடும் அமைப்பு’

பொம்மை போல ஷாமன் கேட்கக் கேட்க அபர்ணா உடனடியாகச் சொல்லி வந்தாள்.

‘சிசு தரக்கட்டுபாட்டு மையத்தின் மெய்நிகர் மையம்’, எனத் திருத்தினார்.

‘இங்கு கீழ் அரசின் பிரதிநிதிகளை நோட்டம் விடுவதில்லை; சிசுக்களின் சமூக ஒழுங்கின் மதிப்பு எண் மட்டுமே கணக்கிடப்படும்’

இந்த சமூக ஒழுங்கு எண் ஒரு காலத்தில் பெரிய உரையாடல்களை உருவாக்கியிருந்தது. சமூக ஒழுங்கு என்பது அரசின் கட்டுப்பாட்டு வலைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பது என்பது முதல் ஒரு கூட்டமைப்பாக மக்கள் போராட்டங்கள் புரட்சிகள் செய்யாதிருப்பது வரை பல வரைமுறைகளைக் கொண்டது.

ஷாமன் கைகாட்டியதில் அபர்ணா பதில்களைத் தொடரவில்லை. திரையின் முன் இருந்த சில மின் இணைப்புகளைக் கட்டில் விளிம்பின் மீதிருந்த மின்பள்ளத்தில் பொருத்தினார். மெல்லிய அதிர்வு அபர்ணாவின் உடலை கட்டிலோடு பொருத்தியது. ரெண்டு விழுமிகளும் அவளது கண்ணின் பள்ளத்தில் இணைந்துகொண்டன. ஊர்தியில் இணைந்திருந்த இரும்புக் கைகள், திரையில் தெரிந்த சில காட்சிகளை தனிக்கோப்புகளாக உருவி எடுத்து மற்றோரு திரையில் இணைத்துக்கொண்டிருந்தது.

‘எப்படிடா இந்த கையில கோலி வந்துச்சு?’ , என அபர்ணா அப்பாவியான முகத்தோடு கேட்க அச்சிறுவன் வெட்கம் வந்து ஓடினான்.

அறையின் சுவர்களில் திரையின் காட்சிகள் ஓடிக்கொண்டே இருந்தன. சிறுவன் வளர்கிறான். கீழ் அரசின் பள்ளி அமைப்பில் நண்பர்களுடன் இணைகிறான். அபர்ணாவுக்கும் அவனுக்கும் நண்பர்கள் சார்ந்த சில முடிவுகளில் வாதம் நடக்கிறது. மகனின் மன அமைப்பும், அபர்ணாவின் மூளை ஓட்டங்களும் இணைந்தும் பிரிந்தும் பல நிறங்களாகத் திரையில் தெரிகிறது. அவர்களிடையே இருந்த அந்த வெகுளித்தனமான உறவு பிணக்காக மாறும்போது பையன் 16 வயதைக் கடந்திருக்கிறான். நண்பர்களுடனும் கீழ் அரசின் சில அமைப்புகளோடும் ஊர் சுற்றிவிட்டு வரும் இரவுகள் மிகக் கடுமையான மெளனத்தில் கடக்கின்றன. ஊர்தி தனித்தனியாக இக்காட்சிகளை பதிவு செய்து வருகிறது. சிகப்பும், ஊதாவும், நீலமும் இணைந்தும் பிரிந்தும் செல்லும் மின் ஓட்டங்களை அபர்ணாவின் முகத்தில் ஷாமனால் பார்க்க முடிகிறது.

ஷாமன் கையிலிருந்த கணினிப் பலகையில் அபர்ணாவின் முன்னாள் இணையரை அழைக்கிறார்.

‘ராஜேஷ், அபர்ணா வயிற்றில் வளரும் சிசுவின் சமூக ஒழுங்கு மதிப்பு நடந்துகொண்டிருக்கிறது.’

‘தெரிகிறது சொல்லுங்க டாக்டர் ஷாமன்’

சிறு முகச்சுளிப்புக்குப் பிறகு, ‘ நான் டாக்டர் இல்லை, அபர்ணாவின் சிசுவின் மதிப்புக் கோப்புகளை உங்களுக்கு அனுப்பி இருக்கிறேன். அதில் சில மின் அலைத் தடைகள் இருப்பதை ரெண்டாம் நிமிடத்திலிருந்து பார்ப்பீர்கள்’

‘ஷாமன், இந்த குழந்தை பிறந்தபின் அதன் தேவையை பார்ப்பது மட்டுமே என் வேலை. கீழ் அரசு கோர்ட்டில் அதற்கு மட்டுமே பொறுப்பு ஏற்கும் ஆணை எனக்கு வந்திருக்கு. நாங்கள் ஒன்றாக வாழவில்லை.’

‘அது தெரியும் ராஜேஷ். கீழ் அரசின் சிசு சட்டங்கள் இங்கு செல்லுபடியாது. அங்கு கொடுத்த ஆணைப்படி, உங்களது ஒரு நிலத்தை குழந்தைக்கு உரிமை கொடுத்து உள்ளீர்கள். அந்த சட்டம் இங்கு இல்லை. ஆனால் நான் சொல்ல வந்தது வேறு ஒரு சிக்கல்’, இது சீக்கிரம் முடிகிற விஷயமல்ல என ஷாமனின் குரல் தெளிவாக உணர்த்தியதும் ராஜேஷ் உன்னிப்பாகக் கவனிக்கத்தொடங்கினார்.

‘ இது ரெண்டாம் முறை சோதனை. சிசு வளர்ந்து முப்பது வயது வரை மட்டுமே நோட்டம் செய்துள்ளோம். அதில் மட்டுமே எங்கள் அளவீடுபடி ஒழுங்கு மதிப்பு இருபதுக்கும் குறைவாக இருக்கிறது. அபர்ணா விழிப்பதற்கு முன் உங்களிடம் சொல்வதற்கும் முடிவெடுப்பதற்கும் மேல் அரசின் சட்டம் அனுமதிக்கிறது. அதனால்..’

கேட்டுக்கொண்டிருந்தாலும் ராஜேஷ் பதில் ஏதும் சொல்லவில்லை. அவனது பெயர் அபர்ணாவின் அவசர தொடர்பாக கொடுக்கப்பட்டிருந்ததே தவிர, மேல் அரசு மருத்துவ அமைப்பின் சிசு ஆய்வுக்கு போவதற்கு அவன் சம்மதிக்கவில்லை. எதன் மீதும் நம்பிக்கையற்றவனாக கடந்து போன யுத்தம் அவனை மாற்றியிருந்தது.

மீண்டும் நான்கு வயது சிறுவன் திரையில் ஓடிக்கொண்டிருந்தான். அது ஒரு பசுமைத் தோட்டம். மண்ணில் முளைத்த ரோஜா, முல்லை கூட்டங்களால் அறையில் வாசம் நிறம்பியது. அபர்ணா நீல நிறப்பையில், கடற்கரைக்குக் காலணிகளும், விரிப்புகளையும் வைத்திருந்தாள். அவளது கால்களிலிருந்து சிதறும் மண் துகள்கள் சிறு முக்கோணக் குவியல்களாகக் கூடிச் சரிந்தன. மேல் அரசு கட்டுப்பாடு அமைப்பின் கணினி நிரல் கச்சிதமான காட்சிகளுக்காக முயன்றபடி இருந்தது.

‘அடுத்த முறை சோதனையிலும் இதே போன்ற முடிவு வருமானால் குழந்தையை சுழற்சி அமைப்புக்கு அனுப்பிவிடுவோம் என்பதால் அபர்ணாவின் இணையரான உங்களை அழைக்க வேண்டியதாகியது’ என்றார் ஷாமன்.

**

‘2084 ஆம் ஆண்டில் ரெண்டு விதமான அரசுகள் உருவாகின. ரஷ்யா, துருக்கி, அமெரிக்கா போன்ற நாடுகள் மேல் அரசு எனும் குடைக்குள் வந்தன. இயந்திரங்களும், மனித ஆல்ஃபா ஆண்டிராய்டுகளும் வழிநடத்தும் ஒரு மைய அரசு. மனிதர்களும் இயந்திரங்களும் கூட்டுவாழ்க்கையில் ஈடுபட்டு புது அறத்தை உருவாக்கி இருந்தன.

ஆசிய நாடுகள் ஒன்று சேர்ந்து கீழ் அரசு எனும் நிகர் நாடு ஒன்றை உருவாக்கி இருந்தன. மனித வள சட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கீழ் அரசு, இயந்திரங்கள் மனித வளர்ச்சிக்கு உதவுபவை மட்டுமே என்றும் சட்டங்களில் மனித மைய விழுமியங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்போகின்றன’

இயந்திரங்களாலும், ஆன்றாய்ட் எனும் பாதி மனித பாதி இயந்திரக் கலவையாகவும் மேல் அரசின் கட்டுப்பாட்டு மையம் இயங்குகின்றது. முதல் அணுவெடிப்பைத் தொடங்கிய வடகொரிய நாடு சீனா மற்றும் ரஷ்யாவின் பாதி நிலங்களை நஞ்சு பூத்ததாக மாற்றிய பின், மற்றொரு அணுவெடிப்பு நிகழாது என உலக நாடுகள் நினைத்தன. அதற்கு முன்னேற்பாடாக உயர் நிலப்பகுதிகளில் வானைத் துளைக்கும் மேல் நகரங்கள் உருவாக்கப்பட்டன. கடலிலும் நிலத்திலும் நஞ்சு பரவியதை அடுத்து பூமியின் மிகச் சில இடங்கள் மட்டுமே மனிதர்கள் வாழ்பவையாக மாறின. நஞ்சாக மாறிய கனிமங்கள் மெல்ல மனித மூளையை பாதிக்கத் தொடங்கின. ஏழு இடங்களில் உருவான மேல் நகரங்கள் எல்லாம் ஒன்றொறு ஒன்று இணைந்து ஒரே நூற்றாண்டுக்குள் மேல் அரசு எனும் அமைப்பை உருவாக்கின.

கூட்டுவாழ்வு ஒப்பந்தம் உருவாவது இயற்கையால் தேர்ந்தெடுக்கப்பட்ட முறை. இயந்திரங்கள் முழுமை அடையத் தேவையான எரிசக்தியும், நரம்புவழி கடத்தி எனும் அறிவியலும் இன்னும் முழுமை அடையாத நிலை. இயந்திரங்களுக்கு மனிதர்கள் தேவை. அவர்களில் பயன்மதிப்பு உள்ளவர்கள் மட்டுமே தேவை. ஆழ் குழிகளில் பதுங்கிய மனிதர்கள் ரெண்டாம் அணுவெடிப்பினால் நஞ்சு படர்ந்த நிலத்தை விட்டுச் செல்ல தயாரானார்கள். அதனால் பெரும்பாலான கீழ் அரசு நிலங்களிலிருந்து மனிதர்கள் தப்பி எப்படியேனும் மேல் அரசு நாடுகளுக்குக் குடி பெயர முனைந்தனர். அதில் ஒரு வழி சிசு சமூக மதிப்பு சோதனை. மனிதர்களின் பயன்மதிப்பை கணிக்கும் ஒரு கணினி அமைப்பு.

முதலாவது பெரிய அணுகுண்டு வந்து போனபோது அபர்ணாவுக்கு நான்கு வயது. பதினைந்து வருடங்களுக்குள் ரெண்டாவது அணு ஆயுதப்போர். ஆதி மனிதன் தோன்றிய காலம் முதல் நடந்த மாறுதல்களை விட அதிக மாற்றங்கள் இந்த இரண்டு அணுகுண்டு வீச்சுக்கு இடையே நடந்தன. முதலாவது அணுகுண்டு மேல் அரசின் ஆதிக்கத்தை உத்தேசித்து ஆரம்பிக்கப்பட்ட ஒன்று தான். அமெரிக்கா, ரஷ்யாவும் சீனாவுடன் ஒன்று கூட மேல் அரசுக்குத் தேவையான இயந்திர கூட்டு அமைப்புகளை உருவாக்கிவிட்டனர். அணு ஆயுதப் போரை உத்தேசித்து, பசிபிக் கடலுக்கு ஆழத்தில் ஒரு நகரத்தை அமைத்து இயந்திர வளர்ச்சிகளும், சைபார்குகள் மீதான ஆய்வுகள் நடந்தன.

கொரியாவும், இந்தியாவும், தென்கிழக்கு நாடுகள் கூட்டமைப்பும் சேர்ந்து தொடங்கிய முதல் அணுகுண்டு யுத்தத்தில் கீழை பசிபிக் நகரம் பலத்த சேதமடைந்தது. அதைத் தொடர்ந்தே பூமியின் ஆழ்துளை அமைப்பான கோலா சூப்பர் டீப் நகரம் 2 கிட்டத்தட்ட 24 கிலோமீட்டர் ஆழத்தில் உருவாக்கப்பட்டு ரஷ்யா தனது ரெண்டாம் கட்ட மேல் அரசு ஆய்வுகளைத் தொடர்ந்தது. அப்போது அபர்ணாவுக்கு பதினெட்டு வயது. தனது அப்பாவுடன் தொலைதொடர்பு இயக்ககத்தில் ஆர்வம் கொண்டிருந்தாள். இயந்திரத்திலிருந்து மனித உணர்வுகளைப் பகுத்து ஆய்வு செய்யும் கீழ் அரசு திட்ட ஆலோசகராக அவளது அப்பா இருந்தார். நாம் அவர்களைவிட ஒரு படி எப்படி மேலே இருப்பது என்பதுதான் மனித இனத்தின் இப்போதைய தேவை என அபர்ணாவுக்குப் புரியும்படி அவர் விளக்கி இருந்ததை அவள் இன்றும் மறக்கவில்லை.

‘உணவு சுழற்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் தான் மனித குலத்தின் வரலாறு என பொதுமைப்படுத்திவிட முடியும்’ என்ற அவளது அப்பாவின் தொண்டைக்குழி மேல் கீழ் அசைவதை அவள் பார்த்தபடி இருந்தாள். அவளது தலையை அவர் தட்டிவிட்டார் என்றாலும் அவளது கவனம் அவரது கழுத்திலிருந்து சில நொடிகள் மட்டுமே விலகி இருந்தது.

‘அப்பா, திரும்பவும் அந்த கதை தானா, வரலாறு, மனித இனம், இது என்ன பள்ளிக்கூடமா?’

‘நாங்கள் படித்த காலத்தில் இப்படி இயந்திர ஆசிரியர்கள் இல்லை. எங்கள் ஆசிரியரை ரெண்டு பரிமாண திரைகளில் மட்டுமே பார்த்தோம் என்றாலும் எங்களுக்குள் ஒரு பரஸ்பர நட்பு இருந்தது, அது படிக்கவும், பிற மனிதர்கள் சொல்லாமல் விட்டதைப் புரிந்துகொள்ளவும் உபயோகமாக இருந்தது. இப்போ நீங்க எல்லாம் என்ன கத்துக்கறீங்க?, என அப்பா அலுப்புடன் கூறினார்.

‘இவ்வளவு தெரிந்திருக்கிற இயந்திரத்துக்கு நாம எதுக்குத் தேவை? நமக்கு இப்படி எதையாவது சொல்லித் தரணும் என மேல் அரசு சொல்லியிருக்கா?’, என அவள் கேட்டாள்.

‘நமக்கு எங்க சொல்லிக்கொடுக்குது? நாம தான் இயந்திரங்களுக்கு ஆசிரியர்கள். நம்மைப் போல புது சிந்தனைகளை, இடம் பொருள் ஏவல் இல்லாமல் செயல்பட இயந்திரங்களால் இயலாது. அப்படி நாம் புது வழியை முயலும் போது நம் சிந்தனையும் பிரக்ஞையும் அடையும் மாற்றங்களை அவை பிரதி செய்ய முடியாது. அவை இன்னும் முழுமையான செயற்கை அறிவை அடையவில்லை. ஒரு சிறு காட்சி வழியாக நம் சிந்தனை அடையும் மாற்றங்களையும் நமது ஆழ்மனம் உணரும் தொடர்புகளையும் இந்த இயந்திரங்கள் அறிந்துகொள்ள முயல்கின்றன’,

‘சரி நமக்கு ரொம்ப முக்கியமானது என எதைச் சொல்லுவாய்?’

‘அது அந்தந்த நேரத்தைப் பொருத்தது அப்பா’, என அவள் ஆர்வமில்லாதது போலக் காட்டிக்கொண்டாலும், அப்பாவுக்கு அவளது சிந்தனைப் போக்கு சிறுவயதிலிருந்தே தெரியும்.

‘எப்போதும் மாறாததுன்னு மனிதனுக்கு என்ன இருக்கலாம்?’

‘காதல், காதலி, காதலன், பணம், சந்தோஷம்? இப்படி எதை வேணாலும் சொல்லலலாமே?’

‘இதையெல்லாம் தாண்டி – அவனுடைய சுதந்திரம். குகை மனிதன் கூட அதற்காக ஏங்கினான். சுதந்திரம் இருந்தா நீ சொன்னா எல்லாமே கிடைச்சா மாதிரி’

‘அதுக்காகத்தான் எல்லாரும் மேல் அரசு நுழைவு சீட்டுக்கு  வரிசைகட்டி நிற்கறாங்களா?’

அபர்ணாவின் கேள்விக்கு அப்பாவிடம் விடை இல்லை.

கீழ் அரசின் பாதுகாப்புத் துறை அமைப்பில் அப்பா இருந்த காலகட்டம் அவளுக்குத் தெரியும். முதல் அணுகுண்டுக்கு பதிலடியாக தெற்கு ஆசியா நாடுகளுடன் இந்தியா உருவாக்கிய குழு. அரசியல் புரிந்துணர்வு அல்ல.; புவியியல் நெருக்கம். அண்டை வீட்டார்கள் என்பதால் ஒன்று சேர்ந்தவர்கள். அதில் இருந்தபோது சுதந்தர சிந்தனைக்கான தேவைக்கெனவும் இயந்திரங்களிடமிருந்து நம்மைப் பிரித்துக்காட்டுவதில் மனித இனம் செல்ல வேண்டிய பாதை பற்றிய அப்பாவிடம் கனவும் இருந்தது. பின் அணுகுண்டு விளைவாக உருவான மறைமுக குழிபறித்தல்களும், அரசியல் சதிகளும் கீழ் அரசை பலகீனமாக்கியது. அணு மின் தாக்குதல்களால் பல புது வியாதிகள் வரத்தொடங்கிய போது கீழ் அரசு தடுமாறியது. எது நமது பலமோ அதுவே நமது பலவீனம் என அவர் அபர்ணாவிடம் கூறியதை உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது அவளுக்கு நினைவு வரும்.

மனிதர்கள் இயந்திரத்துக்கு எதிர்ப்பாக மாற முடியாது. அது முட்டாள் தனம். அவர்களை விட ஒருஅடி முன்னே பாய்ந்தபடி இருப்பது மட்டுமே நாம் செய்யக்கூடியது. அதற்காகச் சுதந்திரத்தை விலையாகத் தரக்கூடாது என்பது அவரது பேச்சில் மறைமுகமாக வந்தபடி இருக்கும். அபர்ணா தன்னால் இயன்றளவு இவற்றை குவாண்டம் பிட்டுகளாக மாற்றி தனது ஞாபகத் தொகுப்புக்குள் அனுப்பிக்கொண்டிருந்தாள். அப்பாவின் வாசனை, தொடுகை, மேலும் கீழும் சீசா போல ஆடும் அவரது கழுத்துப்பகுதி என உணர்வுகளும் மெல்ல ஞாபக வலைப்பின்னலாக மாற்றி இருந்தாள்.

‘இயந்திரங்களோடு கூட்டுவாழ்க்கை ஒரு சாத்தியம். நம் வயிற்றில் இருக்கும் பாக்டீரியாக்கள் நம்முடன் கூடவே வாழும்படியான ஒரு சிம்பையாடிக் உறவு. சிப்பிக்குள் முத்து போல ஒரு சிறு அரிப்பை சுற்றிச் சுற்றி நம்மால் ஒரு பெரிய முத்தை உருவாக்க முடியும். ஆனால் இயந்திரங்கள் அப்படியல்ல. அவர்கள் விதிகள் வேறு நமது விதிகள் வேறு. நம் சட்டத்திலும், விதிகளிலும் இருக்கும் இடைவெளிகளை மனித இனத்தின் இயல்பான வளர்ச்சியினால் சமன்வைத்தபடி வாழ முடியும்.’

‘வயிற்றில் வளரும் சிசு, பிறந்து வளர்ந்த பின் சமூகத்துக்கும் மேல் அரசுக்கும் விசுவாசமான கூட்டுவாழ்வில் ஈடுபடுவார்களா என்பதை கணிக்கும் இயந்திரங்களை மேல் அரசு ஓட்டம் பார்க்கிறது என என்னுடைய அமைப்பில் ஒரு செய்தி உண்டு. அது இயந்திரங்களுக்கு மிக இயல்பான வளர்ச்சி. முன்னர் இப்படித்தான் குற்றங்கள் உருவாகும்முன்னரே கண்டுபிடிக்கும் எந்திரங்களையும், குற்றங்களைத் தடுத்து அவற்றைச் செய்ய நினைப்பவரை கைது செய்யும் சட்டங்களையும் மேல் அரசு உருவாக்கி இருந்தது. இவை நமக்கு சட்டம் அல்ல, அநீதி’

அப்பாவின் சிந்தனைகள் மட்டுமல்ல, அவரது பயங்கள், குழப்பங்கள், சந்தேகங்கள், என எல்லாவற்றையும் அவள் சேகரித்தாள். தான் மட்டுமே அவற்றைப் பார்க்கும்படியான ஆர் என் ஏ ஜீன் கோடிங் செய்து அவற்றை மறைத்தும் வைத்தாள்.

இவையெல்லாம் இப்போது மறைந்தன. அவரது தொண்டைக்குழியின் அசைவு மட்டுமே மிச்சம் இருந்தது.

*

அபர்ணாவின் அடி நாக்கில் ஒரு அமிலச் சுவை. எங்கோ மின் இயந்திரங்களில் கசிவினால் உண்டான வாடை அவளது மூக்கைச் சீண்டியது. அவளது சிசுவினுடைய நோட்டக்காட்சிகளில் வந்தது தனது குழந்தையா அப்பாவா எனும் குழப்பம் அவளுக்கு மின்னல் போல வந்து வந்து போனது. கூடவே ராஜேஷின் குரலும். சிறு குழந்தையாக, சிறு தீண்டலாக, கெஞ்சலாக, மன்றாடலாக, ‘அம்மா, அப்பா, இடக்கையா வலக்கையா எங்க இருக்கு தொடுங்க’, எனச் சிணுங்கும் ஒரு குரல். அவை கனவிலிருந்து வந்தவை போலவும், கைவிரல்களுக்கு இடையே தீண்டும் உதட்டு எச்சில் சத்தியம் என்பது போலவும் அவளுக்கு மயக்கம். ‘அட செல்லக்குட்டி, இதென்ன பெரிய மேஜிக்’ , என அள்ளி அணைத்துக்கொள்ளும் உணர்வை கட்டிலின் மின்பூட்டுகள் தடை போட்ட உணர்வு. அசைத்துப்பார்க்கிறாள், சிறு மணிகளின் அசைவு. அது அவனது கால் கொலுசா, தாளக்கட்டு போல ஒரே வரிசையில்.

இந்த உணர்வு அவளுக்குப் புதிதல்ல. முதல் முறை கருவுற்றபோது நான்காம் வாரம் செய்த சோதனைக்குப் பின் வயிற்றின் மேல் பகுதியில் அதிக வலி. உயிர் தங்காது என மருத்துவர் கூறியதில் சந்தேகம் இருந்ததால் மேல் அரசின் சிசு பாதுகாப்பு அமைப்பிலும் சோதனைசெய்திருந்தாள்.

அப்போதும் இதே போன்ற கட்டிலில் மின்பூட்டுகள் இருந்தன. ஆனால் முதல் மருத்துவர் சொன்னதே நடந்தது.

ராஜேஷ் சொன்னதை மீறி அவள் இன்று மேல் அரசு நடத்தும் சிசு சோதனைக்கு வந்திருந்தாள்.

அபர்ணாவும் ராஜேஷும் அரசியல் மேற்படிப்புக்காக தாய்வான் சென்றிருந்தபோது சந்தித்திருந்தார்கள். தென் இந்தியாவிலிருந்து வந்திருந்தால் இயல்பாக இணைந்திருந்தாலும், மனித மைய சட்டங்களின் மீது மிகுந்த ஈடுபாடும் அதில் முக்கியமானது.

‘கருவில் இருக்கும் குழந்தை 24 வாரங்களைக் கடந்ததும் உலகப் பிரஜை ஆகிறது. இந்த சட்டம் போட்டு ஐம்பது வருடங்கள் ஆச்சு ராஜேஷ், அன்றைய தொழில் நுட்பத்தைக் கணக்கில் கொண்டு இதை உருவாக்கி இருப்பார்கள். இந்த காலத்தில் இதில் திருத்தங்கள் வேண்டாமா?’, கரு கலைந்த அலுப்பும் அயர்ச்சியும் இருந்தாலும் அபர்ணா இதை ஒரே நாளில் ஐந்தாவது முறையாக ராஜேஷிடம் சொன்னாள். அவனால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை என்றாலும், ‘ இதில் நடைமுறை சிக்கல் இருக்கே’, என மெல்ல முனகினான்.

‘நம் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சட்டங்களும் திருத்தப்படலன்னா கீழ் அரசு மனித உணர்ச்சிகளோடு போட்டி போட்டு தொலைந்துபோகும்’

‘நீ மேல் அரசின் சட்டத்தை நம்மோடு ஒப்பிடற. அவர்களால் நான்காம் வாரத்திலிருந்து கருவை ப்ரொஃபல் செய்ய முடிகிறது. கிட்டத்தட்ட 70 சதவிகித வாழ்க்கையை சமூக மதிப்புள்ளதா இல்லையா என சோதிக்க முடிகிறது. அதுபடி அந்த குழந்தை வளர்ந்து அவர்களுக்கு கட்டுப்படுமா இல்லையான்னு தெரிஞ்சுக்க முடியுது. அதனால அவங்க நான்காம் வாரமே அக்குழந்தையை சமூக பிரஜையாக அங்கீகரிக்க முடியுது. இந்த நிலைமையில் நமக்கு எதுக்கு இந்த பேச்சு?’, என அலுத்துக்கொண்டான்.

அபர்ணாவுக்கு இந்த பதில் திருப்தியைத் தரவில்லை.

‘கருவில் இருக்கும் குழந்தைக்கு சொத்தில் பங்கு உண்டு, உடைமைகளை அதற்கு எழுதி வைக்கமுடியும் எனும் சட்டங்கள் அப்படியே கல்லில் எழுதி வைத்தவை போல இருக்கணுமா என்ன? ஒவ்வொரு மனிதனையும், ஆண்டிராய்டையும் உபயோகத்தின் படி மதிப்பு கொடுப்பது வேணா மேல் அரசின் நோக்கமா இருக்கலாம், நம்ம அரசும் அப்படி செய்யணுமா?’

‘இப்ப நாலு வாரத்தில் உலக பிரஜை தான்னு சொல்வதால் நம்ம குழந்தைய காப்பாத்தி இருக்க முடியுமா என்ன?’

‘குறைந்தபட்சம் ஐந்தாவது வாரத்தில் மேல் அரசின் சிசு பாதுகாப்பு சோதனைக்கு கூட்டிப்போக பெர்மிஷன் கிடைக்கும் இல்லையா? நம்ம அரசு அதைக்கொடுக்காம நம்மால் அந்த மையத்தில் சேர முடியாதே!’

‘என்ன சொல்ற அபர்ணா. அங்க சோதனை செய்ய எத்தனை கண்டிஷன்ஸ் இருக்கு தெரியுமா? அவங்க பிராஜெக்டுக்கு தேவை என்றால் குழந்தையை மட்டுமல்ல நம் எல்லாரையும் அவங்க எடுத்துக்க முடியும். அது அவங்க அரசு சட்டம். அதைத் தவிர்க்க நாம் சில சட்டங்களை திருத்தாம இருக்கிறது தப்பில்ல. மனிதன் இயந்திரமில்லை, மனிதன் அவனது சந்தோஷத்துக்காக அவனுக்குப் பிடித்த வாழ்க்கையை வாழலாம் என்பது எத்தனை பெரிய சுதந்திரம்?’

‘இங்க வியாதிகள் பெருகியபடி இருக்கு. தலைமுறைகளை பாதிக்கும் அணு கதிரியக்கம், ஒரே தலைமுறையில் பலரையும் பலி வாங்கியபடி இருக்கு. அப்படியே நாம் நொடிஞ்சிப் போய் விடமுடியுமா ராஜேஷ்?’

ராஜேஷ் எதுவும் பதில் சொல்லவில்லை. ஒரு உரையாடலில் இருந்து முழுமையாகத் துண்டித்துக் கொண்டு விலகி நிற்பதை இருவரும் சேர்ந்துவாழ ஒப்பந்தம் செய்துகொண்டதிலிருந்து மிகத் திறைமையாகக் கையாண்டு வருபவன்.

மீண்டும் அந்த பேச்சை அவள் எடுக்கவில்லை. அடுத்த கருவுக்காக மேல் அரசு சோதனை மையத்தின் திரையில் அவளைப் பார்க்கும்போது ராஜேஷுக்கு அவள் மீது பரிதாபம் மட்டுமே வந்தது.

*

அபர்ணாவின் கைகட்டுகளை ஷாமன் எடுத்துவிட்டார். அவர் முன்னே இருந்த திரையில் சிசு மற்றும் தாயின் மரபணுக்கள் சேர்ந்து பல்லாயிரக்கணக்கான சாத்தியங்களாக மாறிக்கொண்டிருந்தது. இயந்திர மனிதர்களின் எதிர்காலத் திட்டங்களும் அதன் தேவைகளும் மிகப்பெரிய நிகர் உலகத்தை உருவாக்கி வைத்திருந்தது. அதிலிருந்த பல சுழற்வட்டப்பாதைகளில் மனிதர்கள் பல மாதிரிகளைக்கொண்டு புது சோதனைகளை மேல் அரசு செய்திருந்தது. மனிதர்களும் இயந்திரங்களும் இனி மேலதிக வளர்ச்சிக்காக பூமியை கைவிட்ட பிற கோளங்களுக்குப் பயணம் செய்யும் தேவை முதல், மனித உயிரின் பிரதிபிம்பமாக குறையில்லாமல் நீடித்து வாழக்கூடிய மனித இயந்திரங்கள், ஆண்டிராய்டுகளை உருவாக்க முடியுமா எனச் சோதனைகள் வரை பலவும் அந்த மெய் நிகர் உலகில் நடந்துவருகின்றன. அவற்றின் மாதிரிகளை அபர்ணா மற்றும் அவளது சிசுவின் மரபணு மீது பொருத்தப்பட்டு வளர்மதிப்பு எண்கள் கணிக்கப்பட்டு வந்தன. வளர்மதிப்பு எழுபதை தாண்டினால் மேல் அரசு உருவாக்கும் எதிர்கால உலகில் அந்த மரபணுகளுக்கு ஒரு பொறுப்பு தரப்படும்.

‘அபர்ணா, ரெண்டு முறை செய்யப்பட்ட ஆய்வில் உங்களது குழந்தையின் சமூக மதிப்பு எண் மிகக்குறைவாக வந்துள்ளது என முன்னர் கூறினேன். மேல் அரசின் சட்டப்படி மூன்றாம் முறையும் அப்படிப்பட்ட சமூக மதிப்பு எண் வந்தால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. குழந்தை பிறந்ததும் அதை சுழற்சி மையத்துக்கு அனுப்பிவிடுவோம். சமூக மதிப்பு எண் குறைவாக இருப்பது எங்களுக்கு மிகப் பெரிய குறைபாடு. கிட்டத்தட்ட எங்கள் உலகத்துக்குள் ஒரு வைரஸ் உள்ளே வருவது போல’

மேல் அரசின் இந்த சட்டங்களைக் கேள்விப்பட்டிருந்தாலும், ஷாமன் சொன்ன கடைசி வார்த்தைகள் அவளுக்குள் பெரிய உதறலைக் கொடுத்தன.

‘மூன்றாம் முறை ஆய்வு செய்ய வேண்டாம் என நான் முடிவு எடுக்கலாமா?’

‘ஆம். அது சாத்தியம். ஆனால் உங்கள் எதிர்கால சந்ததியினரும் எங்கள் மேல் அரசின் உறுப்பினர் ஆக முடியாது. அவர்கள் சோதனைக்கே கூட வர முடியாது. இப்போதைய எங்கள் சட்டத்தின் படி அடுத்த பத்து தலைமுறைகளுக்கு சோதனை சீட்டு கிடைக்காது. அடுத்தடுத்து கீழ் அரசின் உள் நாட்டு கலவரங்கள் வந்தால் கூட, எங்கள் எல்லைக்குள் அவர்கள் நுழைய முடியாது’

‘என்ன மூர்க்கமான சட்டம்! உலகின் ஒரு பகுதியே அழிந்தாலும் உங்கள் சட்டத்தை மாத்திவிட்டு சில மக்களுக்கு அடைக்கலம் கொடுக்க முடியாதா?’

‘அது எங்கள் ஒரு பலகீனம் என நீங்கள் எடுத்துக்கொள்ளலாம், அபர்ணா. இப்போதைய தொழில்நுட்பத்தின்படி எங்களது சிசு ஆய்வு எண்பது சதவிகிதம் மட்டுமே வெற்றி பெறும். எங்கள் நிரல்களில் இன்னமும் பல ஓட்டைகள் உள்ளன. செயற்கை நுண்ணறிவின் துணை கொண்டு அவற்றை நிவர்த்தி செய்தாலும், மனிதனின் முழு மனதையும், ஆழ் மனதையும் எங்களால் நூறு சதவிகிதம் கணிக்க முடியாது. இந்த சமூக மதிப்பு எண் கூட ஒரு கச்சிதமான அறிவியல் அல்ல, நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்’

ஷாமனின் பொறுமையான விளக்கம் அவளுக்கு எரிச்சலூட்டியது. ஆனால், ஷாமனே கூட ஒரு இயந்திரம் அல்லது ஹூமனாய்ட் எனச் சொல்லப்படும் கலப்பு இனமாக இருக்கலாம் என நினைத்து தனது எரிச்சலைக் கட்டுப்படுத்திக்கொண்டாள்.

‘நான் மீண்டும் சொல்கிறேன் – மூன்றாம் கட்ட சோதனை உங்கள் கையில் தான் இருக்கு. வேண்டாம் என்றால் திரும்ப போய்விடலாம். பாதியில் நிறுத்திவிட்டதால் உங்கள் அடுத்த குழந்தைக்கு மேல் அரசு சிசு ஆய்வு அலுவலகத்தில் அனுமதி கிடைக்கும். எங்கள் சட்டத்தில் இருக்கும் நல்ல விஷயம் இது’, எனச் சொன்னபிறகு சற்றே தயங்கி, ‘ஒரு வகையில் நாங்களும் எங்கள் சட்டங்களின் கைதிகள் தான்.’, என்றார்.

ஷாமனின் பார்வை எங்கோ இருந்தது. சில சமயம் மேல் அரசு ஆண்டிராய்டுகள் பேசுபவரின் மனநிலையைப் பிரதிபலிக்கும் என அவள் கேள்விப்பட்டிருக்கிறாள். இன்னொரு விதத்தில் அவர் சொல்லி முடித்ததில் கீழ் அரசு பிரஜை மீதான கிண்டல் தொனி இருந்ததோ எனவும் அபர்ணாவுக்குத் தோன்றியது.

*

ரெண்டாம் கட்ட சோதனை முடிந்தபின் முகத்தைக்கழுவ உலரியக்கி முன் நின்றிருந்தாள் அபர்ணா. உடல் முழுவதும் சூடான காற்று பரவியது. ரெண்டாம் அணுவெடிப்புக்குப் பின் கீழ் அரசு நாடுகளில் வாயுக்கான தட்டுப்பாடு வந்தபோது வீட்டின் மாடியில் அமைத்திருந்த காற்றுக்கலம் மிக அதிகமான சத்தத்தை உருவாக்கும். அபர்ணாவுக்கு உலரியக்கி அப்படி ஒரு சத்தம் ஏற்படுத்துவதை உணர்ந்தாள். சிசு பரிதோதனையின் போது ஒரு பின்னணி இசை போல இந்த சத்தம் இருந்தது. தன் திரையின் முன்னே உருவான மலை, கடல், ஆறு, வீடு என எந்த பிம்பத்துக்கும் பின்னணியாகவும். மூன்று மணி நேரம் நோட்டம் மின் இயந்திரத்தில் இருந்தது ஒரு வாழ்நாளையே கடத்தியது போல உணர்ந்ததும் மிகவும் ஆயாசம் அடைந்தாள். மனதில் ஒருவித வெறுமை பூத்திருந்தது.

காத்திருப்பு அறையில் இருந்தபோது தனது கைக்கட்டில் ராஜேஷின் அழைப்பு மூன்று முறை வந்ததைப் பார்த்தாள். திரும்ப பதில் சொல்லும் ஆர்வம் சிறிதும் இல்லை.அவன் என்ன சொல்லப்போகிறான் என அவளுக்குத் தெரியும். கண்ணை மூடி ஷாமன் வருவதற்காகக் காத்திருந்தாள்.

விழிதிரையில் ஒரு ஆழ்பிம்பம். அவளது கையைப் பிடித்துக் கூட்டிச் செல்லும் ஒரு சிறுவன். அவன் கால்கள் மண்ணொடு சேர்ந்து வலைபோல பின்னியிருந்தன. நடக்க நடக்க மண்ணில் அவன் மிதந்து செல்வது போல ஒரு தள்ளாட்டம். அபர்ணா அவனது கையை இறுகப்பற்றி தன்னிடம் இழுத்தாள். சிசு ஆய்வின்போது திரையில் தெரியாத அவனது கைரேகைககள் அவளுக்குப் புலப்பட்டன. அதைத் தடவிப்பார்த்தபடி நிமிர்ந்தாள். முகமில்லா அசைவு மட்டும் இருந்தது. கைரேகை முடியும் இடத்தில் அந்த பச்சை நரம்பு முடிச்சு நன்றாகப் பரவியிருந்தன. அதிலிருந்த துடிப்பை தன் கைகளில் உணர்ந்தாள்.

கண்ணைத் திறந்த மறுகணம் அறையிலிருந்து வெளியேறி தன் வீட்டை நோக்கி விரைந்தாள்.

Exit mobile version