
“அவருதான் கடைசி ஆசைன்னு முன்னயே சொல்லிருக்காரு… உனக்கு என்னடா அவ்ள பிடிவாதம்…?”
டேவிட்டின் கைகள் பீட்டரின் தோள் மீது இருந்தது. எந்தப் பிடிக்கும் தளராத தேகம் அது. பீட்டருக்கு நெஞ்சு பகுதியில் வியர்த்திருந்தது. கடந்த இரண்டு வாரமாக மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் என்று பயங்கர அலைச்சலின் உச்சத்தில் இருந்தார். கண்களைச் சுற்றி அடர்ந்திருந்த கருவளையங்கள் உறக்கமற்ற இரு கண்களின் தொய்வையும் பூதாகரமாகக் காட்டின. பீட்டரின் மனம் அமைதியின்மையில் இருந்தது.
“பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், மத்தேயு 11ஆவது அதிகாரம்: 28ஆவது வசனம்.”
பீட்டரின் மனைவி அந்தோனியம்மாள், மரியசூசையின் பக்கத்தில் நின்றவாறு பைபள் வசனத்தைச் சத்தமாக வாசித்தாள். டேவிட் சற்றுநேரம் அமைதியாக வசனத்திற்கு மரியாதை கொடுத்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.
“மாதா கோயில பார்த்துக்கற குடும்பத்துல உள்ளவனுக்கு இம்புட்டுத் திமிர் இருக்கக்கூடாதுடா… சொல்றன் கேட்டுக்கோ…”
பீட்டரின் அப்பாவான மரியசூசையைச் சிறிது நேரத்திற்கு மாதாவின் சிற்றாலயத்தில் வைத்திருந்தார்கள். மருத்துவமனையில் இருந்து இனி பயனில்லை வீட்டிற்கு அழைத்துப் போகச் சொல்லிவிட்டார்கள். சொந்தமாக அம்புலன்ஸ் வாடகை எடுத்துதான் பீட்டர் அவரை திங்கி கம்பத்துக்குக் கொண்டு வந்தார். அவருடைய உயிர் வாழ்ந்து கழித்த வீட்டில்தான் போக வேண்டும் என்ற முடிவு. அம்புலன்ஸில் அவரோடு அமர்ந்து வந்த அந்தோனியம்மாள் நேராக சிற்றாலயத்தில் இறக்கிவிடச் சொன்னதைப் பீட்டரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வந்து சேர்ந்ததும் பீட்டருக்குக் கடும்கோபம். ஆள்கள் கூடிவிட்டதால் கடுமையாக நடந்து கொள்ள முடியாமல் அமைதியாகிவிட்டார்.
மரியசூசை மாதாவின் கண்களையும் சிற்றாலயத்தின் விட்டத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். அழ முடியாமல் கண்ணீரை உள்ளுக்குள்ளே இறுக்கிப் பிடித்திருந்தார். ஈரம் பளபளக்கும் மரியசூசையின் கண்களைக் குழந்தைகள் எட்டிப் பார்த்துவிட்டு மீண்டும் அமர்ந்து கொண்டனர். மரணத்தை எட்டி நிற்பவர்களின் கண்கள் வித்தைக்காரர்களின் கண்கள் போல் ஆகிவிடும். சுற்றியிருப்பவர்கள் அவற்றை பார்ப்பதில் இயல்பாகவே ஆர்வம் காட்டுவார்கள்.
“ஆமா… இவரு இத்தன வருசம் கோவில் கோவில்ன்னு கெடந்தாரு… சொந்த பிள்ளைங்களுக்கு என்ன செஞ்சாரு? இப்ப மாதா வந்து காப்பாத்தட்டும்… அந்த அதிசயத்த நானும் பார்க்கறனே… சும்மா போறீங்களா…”
சுற்றி உறவினர்கள் சிலர் இருந்தனர். பீட்டர் குரலை உயர்த்திப் பேசியதும் சிறு சலசலப்பு உண்டானது. திங்கி கம்பத்திலுள்ள பதினனைந்து குடும்பங்கள் மட்டுமே இந்த மாதா சிற்றாலயத்தை மாற்றி மாற்றி பராமரித்து வருகின்றனர். அதில் மரியசூசையின் குடும்பம்தான் துவக்கத்திலிருந்து முழுப் பொறுப்பையும் ஏற்றிருந்தது.
“மாதா முன்னுக்குதான் சொல்றன்… இவருக்குன்னு ஏதாச்சம் நல்லது நடந்துருக்கா? இப்போ இவரு உயிரு வீட்டுலத்தா போகணும்… நான் கூட்டிட்டுக் கெளம்ப போறன்…” பீட்டர் அப்படிச் சொன்னாலும் அவருடைய கால்கள் எங்கும் நகரவில்லை.
பீட்டர் அவருடைய அப்பாவை கடந்த ஐந்தாண்டுகளாக வீட்டில் வைத்துக் கவனித்து வருகிறார். மற்ற பிள்ளைகள் கோலாலம்பூர், ஜொகூர் என அங்கே வீடு குடும்பம் என்று இருந்துவிட்டனர். கடைசிவரை யாரும் உதவிக்கு வரவில்லை என்று அவருக்கு எப்பொழுதும் உள்ளுக்குள் அடங்காத கோபம் உண்டு.
“ஒரே கம்பத்துல இருக்கறம்… நாலு நடை நடந்தா எங்க வீடு… சொந்த தம்பிதானே? சித்தப்பா வந்து பார்த்தாரா? எல்லா கைவிட்டுட்டாங்க… அப்புறம் என்ன?”
டேவிட்டினால் மேற்கொண்டு ஏதும் பேச முடியவில்லை. பீட்டரின் கேள்விக்குள் தனிப்பட்ட ஆதங்கங்கள் நிறைந்திருந்தன. அந்தக் குடும்பத்தில் தனியாளாக இருந்து அனைத்தையும் கவனித்து வருகிறார்.
“அவன் பேசறான்னா அவனுக்கு எல்லா உரிமையும் இருக்கு… ஒடம்பு முடியாத அப்பன இப்ப வரைக்கு வச்சிப் பார்த்துக்கறான்…”
டேவிட், பீட்டரின் தாய் மாமா. பக்கத்தில் நின்றிருந்த யாரோ ஒரு பையனிடம் சொல்லிவிட்டு முகத்தில் வடிந்த வியர்வையை வழித்துவிட்டார். டேவிட் பினாங்கில் இருப்பதால் எப்பொழுதாவது குடும்பத்தில் ஏதாவது தேவை என்றால் வந்துவிட்டுப் போவார் என்பதைத் தாண்டி அவருடைய பேச்சுக்குப் பெரிய மரியாதையெல்லாம் இருந்ததில்லை. அதை அவரே பலமுறை வந்து பரிசோதித்து ஏமாந்துதான் போவார். அதுவும் மாதா சிற்றாலயம் இருப்பதால் மட்டுமே அவர் இங்கு வந்துபோக முடிந்தது.
“இப்ப நான் வீட்டுக்குக் கொண்டு போறன் அவர… இங்க வச்சி என்ன செய்றது? மாதா தூக்கி மடியில வச்சிக் காப்பாத்தவா போறாங்க…?” பீட்டரின் கோபமும் ஆதங்கங்களும் அவருடைய பேச்சில் கலந்திருந்தன. சிவந்த கண்கள் அழுவதற்குத் தயாராக இருந்தன.
“சும்மா இருடே, மாதாவ எதிர்த்துப் பேசாத… அவங்க பெரிய தாய்டே…” மரியசூசையின் வயதை ஒத்த இன்னொருவர் எழுந்து அவரின் உடல் கிடத்தி வைக்கப்பட்டிருந்த கட்டிலின் பக்கம் நின்றார். உடல் இளைத்திருந்தாலும் அதை அவர் விறைத்துக் காட்டினார். துயரத்திற்குள் அமிழ்ந்து போகாமல் இருப்பதற்கான உத்திகளுள் ஒன்று.
மாதா சிற்றாலயத்தின் கோபுரத்தில் உள்ள பலகை சிலுவை அதன் வெண்மையை இழந்து மெல்ல பழுப்பேறி பலநாள் ஆகியிருந்தது. கம்போங் திங்கியில் இருந்த மக்களுக்காக 1935இல் கட்டப்பட்ட சிற்றாலயம் இது. தோட்டத்து மக்களால் தொடர்ந்து கவனிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டது. வாரம் ஒரு குடும்பம் பொறுப்பெடுத்துக் கொண்டு சமைத்து உணவு கொண்டு வருவதும் பிறருக்குப் பரிமாறுவதுமெனக் கவனித்துக் கொள்வார்கள். 1970களிலே சிற்றாலயத்தின் திருவழிப்பாட்டுக் குழுவின் தலைவராக மரியசூசைதான் நியமிக்கப்பட்டிருந்தார். பின்னர், 1981இல் வீடைப்புத் திட்டத்திற்காக மாதா சிற்றாலயத்தை அகற்றும்படி அரசு உத்தரவிட்டது. வேறு நிலம் இல்லாமலும் மாதாவை எங்குக் கொண்டு போவதெனத் தெரியாமலும் அனைவரும் திண்டாடிப் போனார்கள். அப்பொழுது தலைவராக இருந்த மரியசூசைதான் தம் வீட்டில் வைத்து வழிபடலாம் என்று கூறி மாதாவை அழைத்துச் சென்றார். மரியசூசை வீடு அப்பொழுது தோட்டமாக இருந்த திங்கியில் கொஞ்சம் பெரிய வீடு. 1987 வரை அவர் வீட்டில்தான் ஒன்று கூடுதலும் ஜெப வழிபாடுகளும் நடந்து வந்தன. ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் அவருடைய வீட்டின் இடப்பக்கத்திலுள்ள காலி இடத்தில் மாதாவை வைத்து ஒன்றுகூடி ஜெபங்கள் நடந்தன.
“மாதா எங்க நின்னா என்னடே, அவளோட பார்வ நம்ம எல்லாத்து மேலயும் இருக்கும்…” மரியசூசை வீட்டிற்கு மாதா சிலை வந்ததிலிருந்து அவர் தன்னைச் சேவகராக மட்டுமே பாவித்து வந்தார். வருவோர் போவோரிடம் மாதாவின் பெருமையைச் சொல்லி துயரென்றால் மாதாவிடம் வாருங்கள் என்று பிரசங்கிக்கவும் தொடங்கினார். நோயில் படுக்கும்வரை மாதாவிற்காக அவர் படாத பாடில்லை.
பக்கவாதம் ஏற்பட்ட சில நாள்களுக்குப் பின்னர் மாதாவின் புனிதத் தீர்த்தத்தைத் தெளித்து ஜெபிக்க வந்தவர்களைக் கோபத்தோடு கடிந்து கொண்டார். உளறல் வார்த்தைகளில் சாபமிட்டார். அவரை மாதா சிற்றாலயத்திற்கு அழைத்துப் போக வேண்டாமென அடம்பிடித்தார். தன்னை மாதா கைவிட்டுவிட்டார் என்று இரவெல்லாம் புலம்பினார். சுங்கை பட்டாணி பெரிய மருத்துவமனையில் இருந்தபோதுகூட அவர் வாயிலிருந்து மாதாவின் பெயர் உச்சரிக்கப்படவில்லை. மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டதா என்றுகூட அவர் விசாரிக்கவில்லை. பிறகொரு மழைநாளில் மின்சாரத் தாக்குதல் ஏற்பட்டு சிற்றாலயம் இருண்டுபோனதைப் பார்த்ததும் மனம் பதற்றம் கொண்டார். பீட்டரைப் போய்ப் பார்க்கும்படி தொல்லை செய்தார்.
“மாதா என்ன விட மாட்டாங்கடே… நானும் மாதாவ விட மாட்டன்…” மரியசூசை நகர முடியாமல் படுக்கையில் கிடந்தபோது திடீரெனப் புலம்பத் தொடங்கிய வார்த்தைகளை அந்தோனியம்மாள் தினமும் கேட்டுக் கொண்டிருந்தாள்.
மரியசூசையின் வாய்த் தானாகத் திறந்து மூடிக் கொண்டிருந்தது. அவருடைய பார்வை முழுவதும் மாதாவின் கண்கள் மீதே இருந்தது. அவை நியாயம் கோரும் தொனியில் இருக்கிறதென அந்தோனியம்மாள் நினைத்தாள். அவருடைய தலையைத் தடவி சாந்தப்படுத்தினாள். கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக மரியசூசை பார்த்துக் கவனித்துத் தூக்கி சுமந்த மாதாவின் முன்னே ஏதேதோ கேள்விகள் கேட்க நினைக்கும் விழிகள்.
வெள்ளை நிற ஆடையில் அவருடைய இரு கைகளையும் தழுவியிருந்த நீல நிற அங்கியுடன் மாதாவின் முகம் தெளிவாகத் தெரிந்தது. கழுத்தில் காலையில் போட்ட மாலையும் அவருடைய காலுக்கிடையில் இரு ஜாடியில் கொத்துப் பூக்களும் வெட்டப்பட்டுச் செருகப்பட்டிருந்தன. இரண்டு படிகட்டுகள் மாதா நின்றிருந்த கெபிக்குக் கீழாக இருந்தன. அதன் மீது மெழுகுவர்த்திக் கொழுத்தி வைப்பதற்கான தண்டுகளும் இருந்தன. பெரும்பாலும் கொளுத்தப்பட்ட மெழுகுவர்த்திகள் உருகி அதன் மெழுகு மிச்சமாய் தண்டுகளின் மீது ஒழுகி இறுகியிருந்தன. கெபியைச் சுற்றி சிறு சிறு பாறைகள் சிமெண்டுடன் பொறுத்திக் கட்டப்பட்டிருந்தன. மாதா அருவியின் நடுவில் இருக்கும் பாறைகளுக்குள் நின்றிருப்பது போன்று காட்சியளிப்பார்.
“சரிங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய்ரலாமா?” மாதாவையே வெறிக்கப் பார்த்துக் கொண்டிருக்கும் மரியசூசையின் கண்கள் அந்தோனியம்மாளுக்கு ஏதோ தகவல் சொல்ல முயன்று கொண்டிருப்பதாக அவள் நினைத்தாள். ஒருமுறையாவது மரியசூசையை இங்குக் கொண்டு வந்து மாதாவின் முன் படுக்க வைத்துவிட வேண்டுமென்ற அவளுடைய தவிப்பு இப்பொழுது அடங்கியிருந்தது.
“கூட்டிட்டுப் போலாம்… இன்னும் எவ்ள நேரம் இங்க இருக்கறது? இப்ப என்ன அவரு ஏஞ்சி உக்காந்து மாதாவுக்கு மெழுகுவர்த்தியா ஏத்தப் போறாரு…” பீட்டருக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை என்பதைப் போல் கூட்டத்தில் காட்ட முயன்றார். பீட்டர் முரட்டுக்குணம் உள்ளவர் என்று திங்கி கம்பத்திற்குத் தெரியும்.
சுற்றியிருந்த உறவினர்கள் ஒன்றும் சொல்லாததால் அந்தோனியம்மாள், மரியசூசையின் தலைமாட்டில் ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்துவிட்டாள். மாதா சிற்றாலயத்தின் உட்புறத்தில் வரிசையாக இருத்தி வைக்கப்பட்டிருக்கும் மர இருக்கைகளுக்கு முன்னே இருக்கும் பலகையில் முழந்தாழ் படியிட்டு ஜெபிக்க வசதியாக இருக்கும். டேவிட் அங்குப் போய் மண்டியிட்டுக் கைகளைப் பலகையின் பிடியின் மீது வைத்துக் கோர்த்துக் கொண்டார். கண்களை மூடி தமக்குள் இருக்கும் இறுக்கங்களைத் தளர்க்க முயன்றார்.
“டே, எனக்கு ஏதாச்சம் ஆச்சின்னா என்னடே பண்ணுவிங்க? என்னய திங்கி சுடுகாட்டுல புதைச்சிருங்க… பயமா இருக்குடே… சாவாம இருக்க முடியாதா…?”
மரியசூசை பேச்சை இழப்பதற்கு முன் மருத்துவமனையில் பீட்டரின் கைகளைப் பிடித்துக் கேட்டுக் கொண்ட வேண்டுதல் அது. மாதாவைப் பார்த்து ஜெபிக்கும் போது இருக்கும் அதே கெஞ்சும் நிலையில் மரியசூசையின் கண்கள் இருந்தன. பீட்டர் அவருடைய மரணம் குறித்த பயத்தைப் போக்க பல முயற்சிகள் செய்து பார்த்தார். கடைசிவரை அவரைச் சமாதானப்படுத்த முடியவில்லை.
“மரியசூசை… மாதா மாதான்னு இருக்க… கூட உள்ள தம்பி தங்கச்சிங்கள உன் கண்ணுக்குத் தெரில… இதோட கோவிலுக்கும் உன் வீட்டுப் பக்கமும் என் கால் வராதுடே…” மரியசூசையின் தம்பி ஞானபிரகாசம் கடைசியாக சிற்றாலயத்தின் முன் நின்றுதான் கத்திவிட்டுப் போனார். அதற்குப் பிறகு இந்தப் பக்கமே அவர் வரவில்லை. இப்படித்தான் அவருடைய பல நண்பர்களும் அவரை விட்டுப் போயினர்.
“என்ன ஒரு நல்லது கெட்டதுக்குக் கூட கம்பத்த விட்டு அவன் வரமாட்டறான்… எப்படி அவன்கூட உறவா இருக்க முடியும்?”
அவரை விட்டுப்போனவர்களை நினைத்துப் பீட்டர் வருத்தப்படுவதா கோபப்படுவதா என்று தெரியாமல் குழம்பி போயிருந்தார். சிற்றாலயத்திற்கு வெளியில் ஓரிடத்தில் நிற்க முடியாமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். மாதா சிற்றாலயத்தின் வாசல் ஓரத்திலுள்ள சமையல் இடத்தில் தூக்கி வீசப்பட்ட பூக்கள் அங்கேயே தேக்கி வைக்கப்பட்டிருந்தன. நேற்று இங்குதான் இறந்துபோன வில்லியத்தின் இறுதி சடங்கு திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது. வெளியாள்கள் மரியசூசையைப் பார்க்க சிற்றாலயத்திற்குள் வரத் துவங்கியதும் அந்தோனியம்மாள் புடவை முந்தானையை எடுத்துத் தலையில் முக்காடு போட்டுக் கொண்டாள்.
திங்கி கம்பத்திலிருந்து பின்னர் சுங்கை பட்டாணிக்கு மாறிப் போனவர்கள் சிலர் வந்திருந்தனர். அனைவரும் வந்து மரியசூசையின் கண்களை உற்றுப் பார்த்தனர். இந்தக் கண்களைச் சிலரால் மறக்க முடியாது. பிள்ளைக்குக் காய்ச்சல் என்றாலும் இரவில் உறக்கமில்லாமல் உடல் அனத்தினாலும் உடனே மரியசூசை வீட்டிற்குத்தான் தூக்கிக் கொண்டு வருவார்கள். அது நள்ளிரவாக இருந்தாலும் அவர் குழந்தையின் நெற்றியில் சிலுவையிட்டு ஜெபித்து அனுப்புவார். மரியசூசை செய்து வந்த அனைத்துச் சேவைகளையும் பின்னர் கடந்த ஐந்தாண்டுகளில் பீட்டரால் முறையாகக் கடைபிடிக்க முடியவில்லை. அந்தோனியம்மாள்ளைத்தான் அனுப்பி வைப்பார்.
“ஒன்னும் ஆகாதுமா, மாதா கோவிலோட உச்சியில உள்ள சிலுவையப் பார்த்து ஜெபிச்சிட்டுப் போங்க… மாதா கூடவே வருவாங்க… நல்லாச்சின்னா வெள்ளிக்கெழம வந்து மெழுகுவர்த்தி ஏத்திருங்க… மாதாவுக்கு வேற என்ன வேணும்…? உள்ளத்த ஒப்புக்கொடுத்தா போதும்…”
அவருடைய ஒவ்வொரு வார்த்தைகளிலும் கணிவும் ஆசிர்வாதமும் இருந்ததாக நம்பினர். மரியசூசையும் தவறாமல் நேரம் கிடைக்கும்போதெல்லாம் மாதாவிற்கு மெழுகுவர்த்தி ஏற்றி சிறிது நேரம் அமர்ந்துவிட்டு வருவார். கம்பத்திலுள்ள அவருடைய நண்பர்கள் சிலர் இறந்துபோகத் துவங்கியதும் மாதா சிற்றாலயத்தில் மெழுகுவர்த்தி எரியும் நேரமும் அதிகமானது.
“மாதா இருக்கும்போது என்னடே கவல? அவப் பார்த்துக்குவா…” மரியசூசை தமக்குதான் அதிகமாக இந்த வசனங்களைச் சொல்லிக் கொள்வார்.
அவரைப் பங்கு குருவானவர் என்றும் மறைத்தந்தை என்றும் கம்பத்திற்குள் பேசிக் கொண்டனர். முதலில் அதைக் கேள்வியுற்று மரியசூசை துடித்துப் போனார்.
“என்னடே, அதுக்குலாம் ஒரு தகுதி வேணும்… சும்மா மாதாவ பார்த்துக்கிட்டேன்னு என்ன குருவானவர் ரேஞ்சுக்குப் பேசாதீங்கடே… பெரிய தப்பு… ஆண்டவர் அனுமதிக்க மாட்டாரு… எனக்கு மாதா ஆரோக்கியமான தேகம் கொடுத்தா போதும்டே… வேற என்ன வேணும்…?”
ஓயாமல் இரவெல்லாம் பீட்டரிடமும் மருமகள் அந்தோனியம்மாளிடமும் புலம்பிக் கொண்டிருப்பார். தண்ணீர் அதிகம் குடித்துவிட்டால் சட்டென வீங்கிவிடும் தமது பெருத்த கால்களை நீட்டியவாறு அமர்ந்து வாசலைப் பார்த்துக் கொண்டிருப்பார். மாதா சிற்றாலயத்திலிருந்து அருள் பெருகி தம் கால்களைக் குணப்படுத்தும் என்று காத்திருந்து அப்படியே உறங்கிப் போவார்.
“மாதா ஆலயத்தப் பார்த்து மரியசூசை ஜெபிச்சாருன்னா அந்த மாதா எங்க இருந்தாலும் வந்துருவாங்க… இது நானே ஆலயத்துல பல தடவ சாட்சி சொன்ன வார்த்த…” அங்குள்ள பலரும் சொல்லும் வாடிக்கையான வார்த்தைகள் அவை. மரியசூசை வேண்டாமென்றாலும் அப்போதைக்குக் குருவானவர் இடத்தில் இருந்து திங்கி மக்களின் துயரங்களை மாதாவிடம் கொண்டு செல்லும் சக்தி மரியசூசைடுக்கு இருப்பதாகப் பேசி வந்தனர்.
வருடத்திற்கு ஒரு முறை மாதா கோவிலில் திருவிழா நடக்கும். டிசம்பர் எட்டாம் திகதியில் நான்கு பெரிய கூடாரங்களைக் கோவிலைச் சுற்றி போட்டுக் கம்பத்திலுள்ளவர்களும் திருவழிபாட்டுக் குழுவும் இணைந்து சுங்கை பட்டாணி பங்கு குருவானவரின் தலைமையில் திருவிழாவைச் சிறப்பாக நடத்திவிடுவார்கள். மறைத்தந்தை சேமுவேல் வந்து திருவிழாவை நடத்திக் கொடுப்பார். திருப்பலியைக் கொண்டாடும் போதெல்லாம் கூட்டம் மாதா கோவிலில் அலைமோதும். இடமில்லாமல் ஆண்களும் பெண்களும் ஆலயத்திற்கு வெளியில் உட்கார்ந்து கொண்டு திருப்பலியில் கலந்து கொள்வார்கள். நற்கருணைக்காக குருவானவர் கொடுக்கும் அப்பத்திற்கு இறைமக்கள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். திங்கி கம்பத்திலுள்ளவர்கள் தங்களுக்கு நடந்த அற்புதங்களைச் சாட்சி சொல்லும்போது கேட்க மகிழ்ச்சியாய் இருக்கும். அதில் கோலாலம்பூரிலிருந்து வந்த ஜெனியின் சாட்சியை இன்றும் யாராவது நினைவுக் கூர்ந்து பேசுவார்கள்.
“மாதா கோவிலுக்கு வந்தோம்னா எங்கள உக்கார வச்சி என்ன இருந்தாலும் மாதாவ வேண்டிகிட்டு ஒரு மெழுகுவர்த்தியக் கொழுத்திட்டுப் போங்க அது உருகற மாதிரி உங்க கஸ்டம்லாம் உருகி காணாம போய்ரும்னு மரியசூசை அண்ணா சொல்லும் அந்த ஒரு வார்த்தை அவ்ள ஆறுதலா இருக்கும்… ஆலேலூயா ஆலேலூயா!”
சாட்சி சொல்லி முடிந்ததும் அவர் மயங்கி விழுந்த சம்பவம் கம்பத்தில் பரவலாகப் பேசப்பட்டு மரியசூசை பற்றியும் திங்கி கம்பத்து மாதா பற்றியும் நிறைய பேர் பேசத் துவங்கினார்கள். அதே போன்று இன்னொரு சம்பவமும் உண்டு. ஒரு நடுத்தர வயதுமிக்க பெண்ணும் சிறுமியும் சிற்றாலாயத்திற்கு வந்த தருணத்தில் மரியசூசை சிற்றாலயத்தைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். சட்டென உள்ளே நுழைந்தவர்கள் மாதாவின் கெபியின் முன்னே மண்டியிட்டு அழத் துவங்கிவிட்டனர். அதுவும் சிறுமியின் அழுகை அப்பழுக்கற்று நிறைந்திருந்தது. மரியசூசையும் கலங்கிவிட்டார். என்ன சொல்வதென்று தெரியாமல் அவர்கள் இருவரும் அழுது முடிக்கும் வரை அமைதியாக நின்றிருந்தார்.
“மாதா முன்னுக்கு நம்ம உள்ளத்த ஒப்புக்கொடுத்து அழுதா அவுங்க நமக்காக ஆண்டவர்கிட்ட மன்றாடுவாங்க… உங்களுக்கு என்ன பெரச்சனன்னு தெரில… ஆனா மாதா கருணையானவங்க… அவங்க முன்னுக்கு வந்து நின்னா எல்லாம் சரியாயிடும்…”
மரியசூசை பேசிய முதல் வார்த்தைகளே அவர்களுக்கு அரவணைப்பாகிவிட்டது. அன்று இருவருக்கும் புனிதத் தீர்த்தத்தைக் கொடுத்து ஜெபம் செய்து அனுப்பி வைத்தார். குருவானவர்கூட மரியசூசை மீது மக்கள் வைத்துள்ள அன்பையும் மரியாதையும் கண்டு வியந்துதான் பேசினார்.
“இப்ப நான் கூட்டிட்டுப் போகவா? இல்ல எல்லா இங்கயே முடியணுமா? அவரோட கடைசி மூச்சி எங்க வீட்டுலத்தான் போகணும்…” பீட்டர் மீண்டும் சிற்றாலயத்திற்குள் நுழைந்து சத்தம் போடத் துவங்கினார்.
அனைவரும் அமைதியாக இருந்ததைக் கண்டதும் பீட்டரும் அமைதியாக இருந்தார். யாரேனும் மறுப்புச் சொல்லி இன்னும் சிறிது நேரத்தைக் கடத்தினால் என்ன என்பது போல் அவருடைய ஆழ்மனம் சொல்வது யாருக்கும் கேட்க வாய்ப்பில்லை.
“இப்ப மரியசூசை தாத்தா உயிர் எங்கத்தான் போகும்?” சுற்றியிருந்த சிறுவர்கள் அவர்களுக்குள் பேசிக் கொண்டனர்.
மரியசூசைக்கு மூச்சு அதிகமாக இரைத்துக் கொண்டிருந்தது. கண்கள் இப்பொழுது மாதாவையும் அந்தோனியம்மாளையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தன. அவளிடம் கண்களை அசைத்து சிற்றாலயத்தின் வாசல்கதவைக் காட்ட முயன்றார். அந்தோனியம்மாள் நெற்றியில் மொய்த்துக் கொண்டிருந்த ஈக்களை விரட்டிவிட்டாள்.
பீட்டருக்கு மருத்துவர் சொல்லி அனுப்பிய செய்தி மிகுந்த துயரத்தை அளித்திருந்தது. இன்னும் ஓர் இரவைத் தாண்டுவார் என்பதே சந்தேகம்தான். மரியசூசையின் உயிர் போராடிக் கொண்டிருப்பது அவருடைய மூச்சின் ஏற்ற இரக்கத்தில் கேட்க முடிந்தது. உயிர் வாழ்வதற்கான கடைசி போராட்டத்தில் மரியசூசை இருந்தார்.
“பீட்டரு… உங்கப்பா இந்த செப்பல்ல நின்னுக்கிட்டு எத்தன பேருக்கு ஜெபிச்சிருப்பாரு… எத்தன வீட்டுக்குப் போய் மன்றாட்டு ஒப்புக்கொடுத்துருப்பாரு… மாதாவ சொந்த நிலம் கொடுத்துக் காப்பாத்துவனருடா பீட்டரு…” யாரோ ஒரு பெண்மணி அழுது கொண்டே சிற்றாலயத்திற்குள் வந்து சேர்ந்தார். அழுகையும் கேவலும் உள்ளிருந்து பெருகி மாதாவின் செவிகளைத் தாண்டி வெளியே வந்தன.
“இன்னும் எவ்ள நேரம்? அவரோட உயிர் வீட்டுல போகட்டும்னு சொல்லிட்டன்… இங்க போறதுல எனக்கு விருப்பமில்ல… போதும் எங்க குடும்பம் இந்தக் கோவிலுக்குக் கொடுத்த சேவ…” பீட்டர் பிடிவாதமாய் வாசலில் நின்றிருந்தான். சுற்றியிருந்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர்.
சட்டென பீட்டரின் அத்தை சந்தனமேரி அழுது ஆர்பரித்துக் கொண்டே சிற்றாலயத்திற்குள் நுழைந்தாள். கடந்த வருடம்தான் மகனுடன் திங்கி கம்பத்தை விட்டுப் பட்டவெர்த் போய் அங்கேயே தங்கிவிட்டாள். அவர் இருக்கும்போது திருவழிபாட்டுக் குழுவுடன் சேர்ந்து நிறைய சேவைகள் செய்துள்ளார். மரியசூசைக்கும் பல சமயங்களில் ஒத்தாசையாக இருந்துள்ளார். பிறகு மகனுடன் சேர்ந்து கொண்டு மாதாவை மறுத்துவிட்டு வேறு சபைக்குப் போய்விட்டார். அப்பொழுது போகும்போது மரியசூசை அவளை விடாமல் மாதாவிடமே திரும்பும்படி கெஞ்சினார்.
“அண்ண, நீ என்ன சொன்னாலும் பைபள்தான் ஆண்டவரோட இறுதி வாக்கு, மாதா ஒரு மனுசாளு. ஆண்டவர் உலகத்துக்கு வர அவுங்கள கருவியா பயன்படுத்திக்கிட்டாரு… கிருஸ்த்துவானவங்க நம்ம பைபளுக்கு விரோதமா நடந்துக்கக்கூடாது…” மேரி அத்தை மரியசூசையின் வீட்டு வாசலில் வைத்துதான் அப்படிச் சொன்னார்.
“மேரி, தாய் மூலம் ஆண்டவருக்கிட்ட போகும்போது அதோட கருணை மிகப் பெருசு… மாதா ஆண்டவரால ஆசீர்வதிக்கப்பட்ட தாய்… மாதாவோட பரிந்துரையின் பேராலே நடந்த அதிசயங்கள் உனக்குத் தெரியாதா? உன் மகன் ரோட்டுல அடிப்பட்டுக் கெடந்தப்ப அம்புலன்ஸ் வர்றதுக்கு முன்னால நீ முடிய வாரிக் கட்டிக்கிட்டு எங்க ஓடியாந்த? மாதாகிட்ட… மறந்துட்டியா?”
மரியசூசை எவ்வளவு மன்றாடியும் சந்தனமேரி, மாதாவை விட்டு விலகினார். சிற்றாலயம் வர மறுத்துவிட்டாள். மரியசூசை ஒரு கையில்லாதவரைப் போல் சிறிது காலம் தனிமையில் சிற்றாலயத்தில் அமர்ந்து கொண்டு மேரி முன்பு தினமும் வந்து மாதாவின் கெபியில் வைக்கும் ரோஜா பூவைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பார்.
“தாய விட்டுட்டுப் போய் என்னடே செய்யப் போறீங்க? ஆண்டவரோட தாய மதிக்காவக எப்படிடே இயேசுகிட்ட போவ முடியும்?”
பல நேரங்களில் அவருடைய வாதங்களை ஏற்காமல் பதிலடி கொடுப்பவர்களையும் மரியசூசை சந்திக்காமல் இல்லை. அவர்களிடம் பேசி ஒன்றும் செய்ய முடியாமல் சிற்றாலயத்திற்கு வந்து மாதாவிடம் புலம்பிவிட்டுப் போய்விடுவார். 1987-இல் மாதாவிற்குச் சிற்றாலயம் ஒன்று கட்டிதான் ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் வந்தபோது தமக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தைக் கொடுத்தது மரியசூசைதான். அவருடைய நிலத்தில்தான் அமலோற்பவ மாதாவின் சிற்றாலயம் கட்டப்பட்டது. உறவினர்கள் சிலர் மரியசூசையை அதற்காகக் கடிந்து கொண்டதையும் அவர் பொருட்படுத்தவில்லை.
“அண்ண, உன்ன மாதா கைவிட்டுட்டா… எவ்ள சொன்னன்… கோயில்ல கெடந்ததுக்கு உன் ஒடம்ப ஒழுங்கா பார்த்திருந்தா இப்படி ஆயிருக்குமா?” சந்தனமேரி அத்தை வயிற்றில் அடித்துக் கொண்டு அழுதாள். அவரின் குரலைக் கேட்டதும் மரியசூசையின் கண்கள் மெல்ல அசைந்தன. அவளிடமும் அவரின் கண்கள் சிற்றாலயத்தின் வாசல் கதவைத்தான் காட்ட முயன்றன. அவள் மரியசூசையின் கன்னங்களை இரு கைகளால் தாங்கிக் கொண்டு நெற்றியோடு நெற்றியை ஒத்தினாள்.
செய்தி கேள்விப்பட்டு மறைத்தந்தை சேமுவேல் சிற்றாலயத்திற்கு மோட்டாரிலேயே வந்துவிட்டார். அவர் மீது தனித்த அன்பும் மரியாதையும் கொண்டவர். மரியசூசை படுக்கையில் இருந்தபோது மாதத்தில் முதல் சனிக்கிழமை சிற்றாலயத்தின் பிரார்த்தணைகளுக்கு வரும்போதெல்லாம் மரியசூசையைப் பார்த்துவிட்டுத்தான் போவார். உள்ளே வந்ததும் அங்கியை அணிந்து கொண்டு பிரசங்க மேடையில் நின்று ஜெபிக்கத் தொடங்கினார். பிறகு, கீழே இறங்கி அவரிடம் சென்று நெற்றியிலும் கைகளிலும் திரு எண்ணெய்ப் பூசினார்.
“இப்புனித பூசதலினாலும் தம்முடைய பேரன்பு மிகுந்த இரக்கத்தினாலும் ஆண்டவர் தூய ஆவியின் அருளைப் பொழிந்து உமக்குத் துணை புரிவாராக…” என்றதும் அனைவரும் “ஆமேன்,” என்றனர். அப்படிச் சொல்லும்போதே குருவானவரின் குரல் தழுதழுத்துப் போயிருந்தது. குருவானவர் எப்பொழுதும் அதுபோல சோகப்படக்கூடியவர் அல்லர். அன்று தம் நிதானத்தை இழந்திருந்தார். மரியசூசையின் கண்கள் அப்பொழுதும் மாதாவின் மீதே இருந்தது.
“மரியே… உன் மகனைக் குணப்படுத்த ஆண்டவனிடம் மன்றாடி தருவாயே…” அந்தோனியம்மாள் மனத்தினுள் முணுமுணுத்துக் கொண்டாள்.
முன்பைக் காட்டிலும் மரியசூசையின் மூச்சு இன்னும் கூடுதலாக இரைக்கத் துவங்கியது. வாய் மேலும் அகலமாகத் திறந்து மூடியது. அனைத்தையும் மாதாவின் செவி கேட்டுக் கொண்டிருந்தது.
“பாதர், நாங்க அப்பாவ வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறம்… நீங்களாச்சம் சொல்லுங்க…” பீட்டர் சத்தமாகக் கத்தினார். திரண்டிருந்த அனைவருக்கும் பீட்டரின் குரல் பதற்றத்தை ஏற்படுத்தியது. சிறிது நேரத்தில் கம்பத்தில் உள்ள பலரும் அங்குக் கூடிவிட்டனர். பீட்டர், மறைத்தந்தை சேமுவேலின் பதிலுக்காகக் காத்திருந்தான். அவர் என்ன சொல்வார் என்பதையும் அவன் மனம் சொல்லிக் காட்டியது.
பதற்றத்தில் இருந்த மரியசூசையின் கண்கள் உயிரை விடுவதற்குரிய கடைசி தருணத்தில் இருந்ததை சேமுவேல் அறிந்து கொண்டார். மரியசூசை எந்தப் புகழ்ச்சியையும் விரும்பாதவர். தம்மைக் குருவானவர் என்று சிலர் அழைப்பதை முற்றிலும் வெறுத்தார். மாதாவிடம் சொல்லிப் பல நாள் அழுதுள்ளார். மன்றாடி மன்னிப்புக் கேட்டுள்ளார்.
“மாதா, நான் யாரு…? உங்கள நானா காப்பாத்தன? நீங்கதான் மாதா என்னய தேடி வந்து எனக்குப் பெரிய இரட்சிப்பக் கொடுத்துருக்கீங்க… நான் கருவி மாதா… என்னய போய் எல்லோரும் குரு குருன்னு சொல்றது ரொம்ப கஸ்டம்மா இருக்குமா…” மரியசூசை சில நாள் மாதாவின் முன்னிலையில் கண்ணீர் விட்டு அழுததுண்டு.
அப்படியொருநாள் ஜெபத்திற்குப் பின்னர் வீட்டில் போய் உறங்கியதும் மரியசூசைக்கு வந்த கனவு அவருடைய வாழ்க்கையைத் திருப்பிப் போட்டதென அவரே சிற்றாலயத்திற்கு வருவோர்களிடம் சொன்னதுண்டு. மரியசூசை மாதாவின் முன்னே உள்ள பிரசங்க மேடைக்குச் செல்லும் படிகட்டில் படுத்திருக்கிறார். சட்டென அவரைச் சுற்றி வெப்பத்தை உணர்கிறார். யாரோ அவரை அள்ளித் தம் மடியில் கிடத்துகிறார். தலையை நிமிர்த்தி பார்க்கும்போது மாதா தம் ஒளி மிகுந்த முகத்துடன் அவர் அருகில் இருக்கிறார். மரியசூசை நெகிழ்ந்து துடித்து அழுகிறார். மாதா அவரைச் சமாதானப்படுத்தி, “மரியசூசை உன் செவிக்கு வரும் அனைத்தும் என் செவிக்கு வந்து சேர்ந்ததற்குச் சமம்,” என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார். அன்றிலிருந்து மரியசூசையிடம் யார் என்ன மன்றாடினாலும் அவர்களுக்காக ஒரு மெழுகுவர்த்தியை மாதாவிடம் ஏற்றிவிட்டு அவர் ஒப்புக் கொடுப்பதைத் தவறாமல் செய்து வந்தார்.
மெல்ல இருளத் துவங்கியதும் அவரை வீட்டுக்கே கொண்டு போய்விடலாம் என பீட்டர் உறுதியெடுத்தான். அவருடைய மூச்சி இன்னுமும் உயிர் விடுவதற்குப் போராடிக் கொண்டிருந்தது. குருவானவர், மரியசூசையின் கண்களைப் பார்த்தார். அவை மாதாவையும் சிற்றாலயத்தின் வாசலையும் பார்த்துப் பரிதவித்துக் கொண்டிருந்தன.
“அந்தோனியம்மாள் நீ வீட்டுக்குப் போய்க் கதவ தொறந்து வை… எல்லாம் உன்னாலத்தான்… கட்டிலோட தூக்குங்கடா…” வெளியில் நின்றிருந்த இளைஞர்களிடம் கூறிவிட்டு, பீட்டர் அப்பாவைத் தூக்கிக் கொண்டு போக தம் நண்பர்கள் சிலரையும் அழைத்தார். அப்பொழுதும் யாரேனும் மறுப்புத் தெரிவிக்க வருவார்களா எனப் பீட்டரின் மனம் அலை மோதியது.
“பீட்டரு… அப்பாவோட கடைசி ஆசையே யேன்டா இப்படிச் செய்ற?”
சந்தனமேரி அத்தையும் மனம் இரங்கி கேட்டுப் பார்த்தார். ஒரு சிலர் பீட்டர், மரியசூசையை வெளியேற்றுவதற்குள் மாதாவின் சந்நிதியிலேயே அவர் உயிர் போய்விடாதா என்று பதற்றத்துடன் பார்த்தனர்.
“எனக்கு எல்லா தெரியும்… இவரு உயிரு அவர் கடைசி காலத்துல வாழ்ந்து தவிச்ச வீட்டுலயே போகட்டும்… இவரு நோய்னால எவ்ள துண்டிச்சிருப்பாருன்னு அவரோட கட்டிலுக்கும் அறைக்கும் மட்டும்தான் தெரியும்… மாதாவுக்கு என்ன தெரியும்?” பீட்டரின் கோபமிகுந்த கண்களையும் வார்த்தைகளையும் யாராலும் எதிர்க்கொள்ள முடியவில்லை. மாதா என்ற சொல்லை மட்டும் அழுத்தி உச்சரித்துக் கொண்டே அவருடைய கெபியைப் பார்த்தார். எந்தச் சலனமும் தோன்றுவதற்குரிய குறிப்புகள் இல்லாமல் மாதாவின் கண்கள் சாந்தமாக இருந்தன. பீட்டருக்குக் கடுங்கோபம் உண்டானது.
மெதுவாக மரியசூசை படுத்திருந்த வீட்டுக் கட்டிலைத் தூக்கிக் கொண்டு வெளியேற்றினர். மாதாவின் சிற்றாலயத்தை விட்டு மரியசூசை வெளியாவதை அனைவரும் சோகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். மரியசூசையின் கண்கள் அப்பொழுதுதான் சாந்தம் கொள்ளத் தொடங்கின.
பீட்டரின் நண்பர்கள் சிலரும் கம்பத்திலுள்ள இளைஞர்கள் சிலரும் சிற்றாலயத்தை விட்டுச் சற்றுத் தூரத்தில் இருக்கும் மரியசூசையின் வீட்டிற்கு அவரைத் தூக்கிக் கொண்டு சென்றனர். கட்டிலின் கணம் கூடியிருந்ததாக உணர்ந்தார்கள். காலையில் பெய்த மழையில் மண்பாதை நசநசவென்று இருந்தது.
ஐம்பது மீட்டர் நடந்திருப்பார்கள். சிற்றாலயத்திற்கும் வீட்டிற்கும் நடு வழியில் ஒரு பெருத்த சத்தத்துடன் ஏப்பம் விட்டது போன்று மரியசூசையின் கடைசி மூச்சி ஏறி பின்னர் சட்டென தணிந்து அடங்கியது. அந்தச் சத்தத்தையும் மாதாவின் செவி கேட்டுக் கொண்டிருக்கக்கூடும்.

