
தமிழரின் பண்பாடு என்பதே திணைக்கோட்பாடுதான் என்பார் பேரா. அ. மங்கை அவர்கள். இந்த திணைக்கோட்பாட்டைத் தீர்மானிக்கும் புறக்காரணிகள் எவை? அன்பின் ஐந்திணையாக கட்டமைத்திருக்கும் சக்திகள் எவை?
முதற்பொருள், கருப்பொருள்.
முதற்பொருள் என்பது நிலமும் பொழுதும்.
கருப்பொருள் என்பது அந்த முதற்பொருளான நிலம் பொழுதுக்கான இயற்கை வழங்கி இருக்கும் தெய்வம், உணவு, பறவை, விலங்கு, மரம், செடி கொடி, மலர், பாட்டு, பண், கூத்து, தொழில் ஆகிய எல்லாமும்.
திணைக்கோட்பாடு என்ற பண்பாடு , அன்பின் ஐந்திணை , வாழ்க்கை நியதி ஆகிய சகலமும் பெண்களைச் சுற்றிய பிரபஞ்சவெளியாகவே இருக்கிறது. அதனால்தான் பண்பாடு கலாச்சாரம் என்பதெல்லாம் எப்போதும் பெண் சார்ந்த மதிப்பீடுகளாக கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.
எது பண்பாடு ?
இந்தப் பண்பாடு என்றால் என்ன? அதிலும் குறிப்பாக தமிழர் பண்பாடு என்றால் என்ன? என்ற கேள்வியை முன்வைக்கும்போதெல்லாம் ‘விருந்தோம்பல் தமிழர் பண்பாடு’ என்று சொல்லிவிடுகிறோம். அப்படியானால் ஒரு பஞ்சாபியோ மராட்டியரோ விருந்தோம்பல் செய்வதில்லையா? பிற தேசங்களில் இனங்களில் விருந்தோம்பல் இல்லையா? என்ற கேள்வியை நாம் எழுப்புவதில்லை. அதிலும் கணவனின்றி
விருந்தோம்பல் இழந்த கண்ணகியின் துயரத்தைக் கண்ணீர்மல்க இப்போதும் சொல்வதில் நம் விருந்தோம்பல் பண்பாடு இருப்பதாக எண்ணுகிறோம். குடும்பம் என்ற நிறுவனத்தில் ஆண் துணையின்றி வாழும் பெண்ணுக்கு விருந்தோம்பல் மறுக்கப்பட்டிருப்பது அவள் உடல்மீதும் உணர்வுகள் மீதும்
இச்சமூகம் நடத்திய வன்முறை, எந்த ஆணுடனும் பெண்ணை, பெண்ணுடலை கிட த்தி அவளை அதிகாரத்தின் கைப்பாவையாக மாற்றிய சமூகக் கெடுபிடிகள். இதெற்கெல்லாம் பண்பாடு என்ற போர்வையை போர்த்துகின்றபோது பெண் அந்த வலைக்குள் எளிதாகச் சிக்கிவிடுகிறாள்!
இன்னும் சிலர் இன்றைய கணினி யுகத்திலும் புடவைக் கட்டுவதும் துப்பாட்டா போடுவதும் தமிழர் பண்பாடு என்று பெண்ணின் உடல் மறைக்கும் ஆடைக்குள் ஒரு சமூகத்தின் பண்பாடை அடையாளப்படுத்துகிறார்கள். இதுவும் சமூகக் காவலர்கள் பெண் உடல்மீது அத்துமீறி நடத்தும் ஆதிக்கம்தானே தவிர இதுவும் பண்பாட்டுடன் தொடர்புடையதல்ல,
அப்படியானால் எதுதான் பண்பாடு ? என்றால் ‘அன்பின் ஐந்திணை’ என்ற திணைக்கோட்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. இத்திணைக்கோட்பாட்டை, தமிழர்களுக்கானதாக மட்டுமே சுருக்கிவிட முடியாது. ஒட்டுமொத்த மனிதர்களுக்குமானதானதாக இத்திணைக்கோட்பாடு விரியும்.
பெண்ணுடல் : புனிதம்
பண்பாடு என்பதே பெண்ணுடல் புனிதம் என்ற மையத்திலிருந்து கட்டமைக்கப்பட்டிருக்கிறது. புராண இதிகாச காலமுதல் இன்றைய நவீன கவிதைகள் வரை இந்தப் புனித நீரைத் தெளித்துக் கொள்கின்றன.
பெண் புனிதமானவள் என்று சொல்லும்போது ‘புனிதம் ‘ என்பது அப்பெண்ணுடலின் கன்னித்தன்மை மற்றும் கற்புடமையுடன் தொடர்புடையதாக இருக்கிறது.
வரலாற்றுப் பூர்வமாக இதன் கட்டமைப்பு நிறுவனமயமான மதங்களிலிருந்து ஆரம்பித்து அசைக்கமுடியாத நம்பிக்கைகளின் வழி காலூன்றி இருக்கிறது. இந்த உலகின் பெரும்பான்மைக்குரிய மக்கள் நம்பிக்கைக்குரிய கிறித்தவ மதத்திலிருந்து எடுத்துக் கொண்டால், கிறித்தவம் ஏசுவைப் பெற்றெடுத்த அன்னையை, ‘கன்னிமேரி” என்று கட்டமைத்துவிட்டது ஆனால் , தி ஜீசஸ் பேப்பர்ஸ் நூலின் ஆசிரியர் மைக்கல் பைகண்ட்
(Michael Baigent) சில உண்மைகளை முன்வைக்கிறார். ஹீப்ரு மொழியில் முதன்முதலாக எழுதப்பட்ட பைபிளில் ஏசுவை, ஒரு இளம்பெண் பெற்றெடுத்தாள் ‘ என்ற வாசகம் இடம்பெறுகிறது. கிமு. 3 ஆம் நூற்றாண்டில் ஹீப்ருவிலிருந்து பைபிள் கிரேக்கத்தில் மொழியாக்கம் பெறுகிறபோது, இளம்பெண் என்ற ஹிப்ரு சொல் ‘அல்மா’ (ALMA)என்பதை கிரேக்கத்தில் ‘பர்த்தனஸ்’ (PARTHENOS) என்று மொழியாக்கம் செய்கிறார்கள். கிரேக்க பர்த்தனஸ் என்ற சொல்லுக்கு இளம்பெண், கன்னிப்பெண் என்ற இரண்டு பொருளுண்டு, இப்படியாகத்தான் ஹிப்ருவின் இளம்பெண் மேரி, கிரேக்கத்தில் கன்னிப்பெண் மேரியாகி, அதுவே நிலை நிறுத்தப்பட்டது. அதன்மூலம, கிறித்துவம் , கடவுளின் பிறப்பு பெண்ணின் கருப்பையில்தான் என்பதை ஏற்றுக்கொண்டாலும் அக்கருப்பையை ஆண் வாடையிலிருந்து காப்பாற்றி அதைப் புனிதம் என்று கட்டமைத்திருக்கிறது.
இந்து மதத்தில் தொன்மக்கதைகள் வெறும் கதைகள் மட்டுமல்ல, அவை சமூக மாற்றங்களின் பிரதிபலிப்புகள். பரசுராமனின் கதை, ஆண் தலைமையை அதிகாரத்தை ஏற்கும் சந்ததிகளைப் பற்றிப் பேசுகிறது. அத்துடன் எல்லாம்மா உடம்பில் ரேணுகாதேவியையும் ரேணுகாதேவி உடம்பில் எல்லம்மா தலையையும் பொருத்தி, பண்பாட்டு தளத்தில் பெண்ணுடலை கட்டமைத்திருக்கும் அனைத்தையும் கேள்விக்குட்படுத்தி இருக்கிறது. பெண்ணியத்தளத்தில் ஆகச்சிறந்த ஒரு கலகக்குரல் இக்கதை எனலாம்.
அதே முகம், அதே சிரிக்கும் கண்கள்,
தேவீ.. ரேணுகாதேவி..
நட்சத்திர வெளிச்சத்தில்
பழைய இரவுகளை
மீட்டெடுக்க
உன் மீது படர்கிறேன்.
உன் யோனி வெளியெங்கும்
குடியானவனின் சேத்துவாசனை.
எல்லம்மாவின் தொடைகளுக்கு நடுவில்
மந்திரங்கள் விழித்துக் கொள்கின்றன.
யாகசாலை வேள்வித்தீயில்
திரெளபதி அம்மன் சிரிக்கிறாள்”
அவள்களின் நாட்குறிப்புகள் (புதியமாதவி கவிதை நூலிருந்து)
பெண்: திருமண உரிமை
களவு மணம் தமிழர் வாழ்வில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. பொய்யும் வழுவும் வந்தப் பிறகே திருமணம் என்ற ஏற்பாடு , சமூக ஒப்பந்தமாக மாறி இருக்கிறது. இந்த மாற்றங்கள் அனைத்தும் ஆண் அதிகார மையத்திலிருந்து வருகின்றன, அதிகார மையத்தை இறுக்கமானதாக கட்டி எழுப்புவதற்கு அவை பெண்ணுரிமையைத்தான் கைவைத்திருக்கின்றன. அந்த மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை சங்க இலக்கியப் பாடல்களின் வழி அறியலாம்.
அன்பின் ஐந்திணையை முன்வைத்திருக்கும் சங்க காலத்திலேயே
‘மகட்கொடை மறுத்தல் ‘ என்ற அதிகாரம் எழுதப்பட்டுவிட்டது. இப்பாடல்களில் திருமண உறவுடன் நேரடியாகத் தொடர்புடைய பெண்ணின் விருப்பம் பேசப்படவே இல்லை. அப்பெண்ணின் விருப்பத்தைக் குறிப்பாக உணர்த்தும் உள்ளுறைகள் கூட இடம்பெறவில்லை. மாறாக, ஊரைப் பாழ்ப்படுத்தும் போருக்கான காரணமாகிவிட்டாள் அப்பெண் என்று எந்த வகையிலும் அதிகாரத்துடனும் போருடனும் தொடர்பில்லாத பெண்ணையே ஊர்த் தூற்றுமாம்!
அழிந்தோ ரழிய வொழிந்தோ ரொக்கற் 5
பேணுநர்ப் பெறாஅது விளியும்
புன்றலைப் பெரும்பாழ் செயுமிவ ணலனே.
(புறம் 346, அண்டர் மகன் குறுவழுதியார்)
என்று பாவம் அந்தப் பெண் குற்றவாளியாக்கப்படுகிறாள்.
‘கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை
மறுமையும் புல்லாளே ஆயர்மகள் ‘
என்ற கலித்தொகை காட்சியில் ஆடவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் உறவு ஏற்கும் உரிமையும் கொண்டவள் ஆயர்மகள். ஓர் ஆயர்ம்களுக்கு இருந்த உரிமை அரசன் மகளுக்கு இல்லையா? அப்படியானால் அரண்மனை அரசு அதிகாரம் என்ற காரணிகள் ஆன் பெண் உறவில் பெண்ணை எந்த இடத்தில் வைத்திருந்தன என்ற காட்சி வெளிப்படுகிறது. சங்க இலக்கியம் ஒரு நீண்ட நெடிய காலப்பரப்பைக் கொண்டது என்பதால், இனக்குழு சமூகத்தில் பெண்ணுக்கு இருந்த உரிமைகள் பேரரசு உருவாக்க காலத்தில் பறிபோயின. பேராசிரியர் கைலாசபதி அவர்கள், “மகட்பாற்காஞ்சிப் பாடல்கள் பாணர் மரபு அழிந்து புலமை மரபு மேலோங்கிய வேந்தர் காலத்து படைப்பாக்கங்கள்” என்று இக்கருத்தையே சொல்கிறார்.
பெண்மகளை கொடையாக கொடுப்பது என்ற சமூக நிலை, அச்சமூகத்தில் பெண் கொடுப்பதற்கும் பெறுவதற்குமான நுகர்ப்பொருளாகி விட்டாள் என்பதை உணர்த்துகிறது. அத்துடன் அப்பெண்ணை அவ்வாறு கொடுக்கும் உரிமை அவளைப் பெற்ற தகப்பனுக்கோ அல்லது உடன்பிறந்த சகோதரனுக்கோ உரியது என்ற நிலை, ஆண்மைய சமூகத்தின் அதிகாரவெளி கட்டமைக்கப்பட்டிருக்கும் விதத்தைத் தெளிவுப்படுத்துகிறது.
இது எந்த திணைப்பாகுபாடுகளுக்குள்ளும் அடங்கிவிடவில்லை. அன்பின் ஐந்திணை இல்லை. பெருந்திணையோ கைக்கிளையோ இல்லை.
அதனால்தான் வசதியாக புறம் என்று புறக்காரணிகளாக வகைப்படுத்துவிடுகிறது. எனினும், முதற்பொருளான ‘நிலம் ‘ அதாவது ‘இடம்’ என்பதன் உரிமையும் அதன் மீதான ஆதிக்கமும் ஒட்டுமொத்தமாக ஆண்மையப் புள்ளியில் குவிகின்றபோது , இதுவரை நம் பண்பாட்டு தளத்தில் முன்வைத்த அன்பின் ஐந்திணை காலாவதியாகிவிடுகிறது. இதைத்தான் மார்க்சியம், ‘நிலத்தின் உற்பத்திப் பெருக்கம் தனி நபரிடம் குவியும் போது அது அதிகாரவெளியாக மாறும்” என்கிறது. சொத்துடமை, குடும்பம், நிலவுடமை ஆகிய கருத்துருவாக்கங்கள் அனைத்தும் அதிகாரவெளியில் முதற்பொருளின் மையம் சிதைவுற்றதால் ஏற்பட்ட விளைவுகள். இதுதான் முதல் பண்பாட்டு சீரழிவு. நிலம் என்ற முதற்பொருள் அதிகார மையமானபோது அன்பின் ஐந்திணை பறிபோன முதல் அத்தியாயம் எழுதப்பட்டது.
பக்தி இலக்கிய காலம் :
பேரரசுகள் உருவானப்பின் வந்த பக்தி இலக்கிய காலத்தில் ஐந்திணை என்பது மானுட ஆண் பெண் உறவாக இருந்த நிலை மாறி அது ஒரு
தத்துவக்கோட்பாடாக வளர்த்தெடுக்கப்பட்டது. ஆண்டவன் மட்டுமே ஆண்மகன், மற்ற எவரும் ஆண்மகனில்லை” என்ற சிந்தனை யதார்த்த ஆண்மையத்தின் மையப்புள்ளியைச் சிதைத்து தூரவீசியது. அதனால்தானோ என்னவோ இப்பெண்களின் பாடல்களை மட்டும் ஏற்றுக்கொண்ட சமூகம், இப்பெண்களின் வாழ்க்கையை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்பெண்ணுடல்களைக் கொண்டாடுவதைத் தவிர்த்ததுடன், இப்பெண்ணுடல்கள் அனைத்துமே சுவடுகள் இல்லாமல் போயின.
தெற்கே ஆண்டாள், அக்கா மகாதேவி, செங்கோட்டை ஆவுடையக்கா, வடக்கே மீரா, காஷ்மீரின் லல்லா அனைவருமே ஆண்டவன் மட்டுமே ஆண்மகன் என்றார்கள். அனைவரின் இறுதி அத்தியாயம் ஒன்றுபோலவே எழுதப்பட்டிருக்கிறது தற்செயலானதல்ல.
பாதிதூரம் வந்தப் பின்
வள் திரும்பிப் பார்த்தாள்.
காணவில்லை
அவள் கடந்து வந்தப் பாதையை.
அவள் நட்ட வயல்களில்லை
அவள் வாழ்ந்த வீடுகளில்லை.
அவளுடன் பழகிய மனிதர்கள் இல்லை.
எதுவுமில்லை.
எங்கிருந்து அவள் புறப்பட்டுவந்தாள்?
என்பதற்கான
எந்த தடயங்களும் இல்லை.
யாரோ அவளுக்குப் பின்னால்
கவனமாக
அவள் வாழ்வின் அடையாளங்களைத்
துடைத்துச் சென்றிருக்க கூடும்.
-ஜியோட்சனா மிலன். இந்திமொழிக் கவிஞர்.
(கதவுகள் திறக்கும் வானம் தொகுப்பிலிருந்து)
கடவுள் தெய்வம் வழிபாடு என்பது இயற்கையுடன் தொடர்புடைய கருப்பொருள். அது அதிகார மையமானதால் , கருப்பொருளின் சிதைவு காரணமாக அன்பின் ஐந்திணை திசைமாறிப்போன வரலாறு இது.
கணினி யுகம் :
சங்க காலத்தில் ஆரம்பித்து பேரரசு காலம் பேசி பக்தி இயக்க காலத்தின் சுவடுகளைப் பேசுவதால் இது கடந்த காலமாக நினைக்கிறோம். ஆனால் இன்றைய நவீன கணினியுகத்தில் அன்பின் ஐந்திணை எங்கே?
BLODD IN THE MOBILE என்று ஓர் ஆவணப்படம். ப்ராங்க் பளாங்கி போல்சன்
(FRANK PIASECKI POULSEN) இயக்கியப்படம், நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத கைபேசியின் வரலாறை அதன் தயாரிப்பு பின்புலத்தில் பேசுகிறது. இந்த ஆவணப்படத்தில் ஒரு நாட்டின் முதற்பொருளும் கருப்பொருளும் சிதைகின்றபோது ஏற்பட்டிருக்கும் மனித வாழ்வின் சீரழிவைப் பதிவு செய்திருக்கிறது. இது நம் சமகால நிகழ்வு. ஒரு நாட்டின் இயற்கைவளம் என்பது அந்த மண்ணின் கருப்பொருள். அந்த மண்ணின் மக்களோடும் அவர்கள் வாழ்க்கையுடனும் வாழ்வின் நலங்களுடனும் நேரடி தொடர்புடையது. அதை அதிகார வர்க்கம் கொள்ளையடிக்கிறபோது, நேரடியாக பாதிக்கப்படுவது அந்த மண்ணின் பெண்களும் குழந்தைகளும் தான். அதன் விளைவுகளாக மானுட குலம் இதுவரை நம்பி இருக்கும் அன்பு, காதல், ஆண் பெண் உறவு, பக்தி, நேசம். நட்பு என்ற அனைத்தும் சிதைந்துவிடும் அவலம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. நாம் எந்தவிதமான குற்றவுணர்வுமின்றி கைபேசிகளின் உலகத்தில் நம்மை மறந்து செல்ஃபியாகிவிடுகிறோம்!
கார்ப்பரேட் அழகியல்
இன்றைய கார்ப்பரேட் முதலாளித்துவ உலகம் தன் விற்பனை சந்தைக்கு ஏற்ப பெண்ணுடலையும் பெண் மன நிலையையும் வடிவமைக்கிறது. அந்த வடிவமைப்பில் தங்களை திணித்துக் கொள்ள முடியாமல் பெண்ணுடல் திணறுகிறது. ஒரு ஐரோப்பிய பெண்ணின் உடை, ஓர் ஆப்பிரிக்க பெண்ணுடலுக்குள் திணிக்கப்படுகிறது. பனிப்பிரதேச கார்ட்டூன் கதைகளை வறண்ட பூமியில் பார்க்கும் எம் குழந்தைகளின் கனவுகள் அவர்கள் வாழும் முதற்பொருளுடன் தொடர்பில்லாதவை. 1994ல் இரண்டு உலகப்பேரழிகள் இந்திய மண்ணிலிருந்து தேர்ந்தெடுக்கப்ப்ட்ட்தும் தற்செயலானதல்ல. மக்கள்தொகை பெருக்கம் கொண்ட இந்தியச் சந்தையில் அதன் பிறகுதான் மேற்கத்திய அழகியல் சாதனங்கள் வந்துக் குவிந்தன. அழகியல் சாதனங்களின் விற்பனை வரி கணிசமாக குறைக்கப்பட்டது. பன்னாட்டு நிறுவனங்களின் சோப்பு, க்ரீம், உதட்டுச் சாயங்கள், நகப்பூச்சுகள், ஷாம்புகள், சருமத்தை மென்மையாக்கும் சிவப்பாக்கும் லவ்லி க்ரீம் வகையாறாக்கள்.. பெண்ணுடலைக் குறிவைத்து இந்தியச் சந்தையில் வந்து நிரம்பின. . அதைப் பற்றிய விளம்பரங்க: 24 X 7 நம் நடுவீட்டில் இருக்கும் தொலைக்காட்சியிலிருந்து விளம்பரமாக காணொளியாக நம் வாழ்க்கையில் நுழைந்தன.
இந்த அசுரத்தனமான சமூக மதிப்பீட்டின் மாற்றங்கள் ஆண் பெண் உறவு நிலையில் ஏற்படுத்தி இருக்கும் தாக்கங்களை நாம் கவனிக்க வேண்டும். பெருகிவரும் பெண் பாலியல் சுரண்டல்களும் பெண் வன் கொடுகை, வல்லாங்கு என்ற செய்திகளும் இந்த அதிர்வலைகளின் வெளிப்பாடுகள். தொழில் மயமாதலில் இழந்துப்போன நீர்வளம், அதனால் ஏற்பட்ட மண் வறட்சி, கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் வளர்ச்சியில் காணாமல் போன சிறுதொழில்கள் இவை அனைத்தும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அன்பின் ஐந்திணையைப் பாதித்தவை. எந்த ஒரு தனிமனிதனும் சுயசார்புடன் வாழ முடிவதில்லை. அதற்கான முதற்பொருளான நிலமும் நிலம் சார்ந்த கருப்பொருட்களையும் நாம் இழந்துவிட்டோம். எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை, ஒவ்வொரு ஆண் பெண் வாழ்க்கையிலும் இருத்தலின் நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது.
எதிர்காலம் குறித்த அச்சம் பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும் ஏற்படுத்தி இருக்கும் பீதி, பயம் எல்லாம் சேர்ந்து அன்றாட வாழ்க்கையை அன்பின் ஐந்திணையிலிருந்து வெகுதூரம் இழுத்துவந்துவிட்டன.
முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் இது பொருளதிகாரமோ இலக்கணமோ மட்டும் அல்ல. இதுதான் வாழ்க்கை. ஒன்றின் சம நிலை குலைக்கப்படும்போது அது நேரடியாகவோ மறைமுகமாகவோ மனித வாழ்க்கையைப் பாதிக்கும். நம் எதிர்கால தலைமுறைக்கு நாம் நம் பூமியின் முதற்பொருளையும் கருப்பொருளையும் பொக்கிஷமாக கொடுக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
