
“அப்போ?’
“எங்கே கேட்டாலும், யார் கிட்ட கேட்டாலும் இதே பதில்தான்,” சொல்லிவிட்டு சிரித்தாள்.
“என்ன பதில்?”
“முடியாது, நடக்காது” சொல்லிவிட்டு மறுபடி சிரிப்பு.
ஒவ்வொரு வாக்கியம் சொன்னபிறகும் சிரிக்கவேண்டும் என்று பயிற்றுவித்திருப்பார்கள் போலிருக்கிறதுஎன
நினைத்தான்.
அவன் ஒரு கணம் தயங்கி நின்றான். பின்னால் வரிசையில் மேலும் மேலும் ஜனங்கள் சேர்ந்துகொண்டிருப்பது தெரிந்தது. இத்தனை பேர்களுக்குப் பிரச்சனைகளா?
“உங்கள் மனத் திருப்திக்காக வேண்டுமானால் ஒன்று செய்யலாம், இவர்களைப் போய்ப் பாருங்கள். 125 வது தளம், வடக்குப் பகுதி . அறை எண் 43, எட்டாவது கண்ணாடி தடுப்பு” கையில் ஒரு டிக்கெட் போன்ற சமாசாரத்தைக் கொடுத்தாள். மீண்டும் சிரிப்பு.
கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு கூட எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது, இப்போது கடினமாக இருக்கிறது, இவர்கள் உயிரினத்தைச் சேர்ந்தவர்களா, இயந்திரங்களா என்று கண்டுபிடிப்பது. என்ன செய்தால் கண்டுபிடிக்கலாம்?, அவன் மனம் போகும் திசையை ஊகித்தவளாக தலையை கண்டிப்புடன் அசைத்தாள்.
சட்டென்று நடக்க ஆரம்பித்தான். டிக்கெட் பாதை சொல்ல ஆரம்பித்தது.
எட்டாவது கண்ணாடி தடுப்பறையிலிருந்து ஒரு பெண் , குழந்தையுடன் வெளியே வந்தாள் . பார்த்தால் NGX 7438 f கிரகத்திலிருந்து வந்திருப்பாள் போலத் தோன்றியது..
இன்னும் கூட மற்றவர்களைப் பார்த்தால் எங்கிருந்து என்ற எண்ணம் ஏன் வருகிறது? சே! தலையை உலுக்கிக்கொண்டான். எல்லாருக்கும் இதுதான் இடம் , இது ஒன்றுதான் இடம் என்று ஆன பிறகு ஏன் இப்படி யோசிக்கிறேன்?
இவன் வழி விட்டுவிட்டு பின்னர் உள்ளே நுழைந்தான்.
உள்ளே இருந்தவர் இவனுக்காக உருவம் மாறினார்.
“வாருங்கள் ஜனா! உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?”
அங்கு அமர்ந்திருந்த பெண்மணி பெரிய உருவமாக கொஞ்சம் தாய்மை உணர்வோடு இருப்பவர்போல தோற்றம் தந்தார்.
இன்றைக்கு காலையில் சவரம் செய்யும் பொழுது லேசாக கன்னத்தில் வெட்டு விழுந்ததிலிருந்து அவன் மனைவிக்கு கடைசியாக முத்தமிட்டது நேற்றைய முன்தினம் இரவு 8 மணி ஒன்பது நிமிடங்கள் என்பது வரை அவனைப் பற்றி அவர்களுக்குத் தெரியாதது எதுவும் இல்லை. அவனுக்கு வெறுப்பாக இருந்தது.
“என் அப்பா… திடீரென்று காணவில்லை. என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே கண்ணிலிருந்து மறைந்துவிட்டார்.”
“புரிகிறது. மறைந்து விட்டார்! எங்கள் அனுதாபங்கள்! நீங்கள் நசிகேதன் கதை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் இல்லையா?”
இவன் கதாகாலஷேபம் கேட்கும் மன நிலையில் இல்லை.
எந்த சூரிய குடும்பத்தில், எந்த கிரகத்தில், எந்தப் பகுதியிலிருந்து வருபவர்களுக்கும் அவரவர் பணபாட்டு சூழ்நிலைக்கேற்ப இந்த நேர்காணல் நிகழும் என்பது அவன் அறிந்ததுதான். இங்கிருக்கிற ஒவ்வொன்றிலும் இருக்கிற இந்த வடிவ ஒழுங்கமைதி அவனுடைய பாதுகாப்பிற்கு, அவனுடைய சௌகர்யத்திற்கு என்ற போதும் அது அவனை சீண்டியது.
“நேற்று சாயங்காலம் வரை கூட என்னுடன் இருந்தார்”
“அதுதான் வள்ளுவர் சொல்லியிருக்கிறாரே ‘நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை படைதிவ்வுலகு’ என்று. தவிர தினந்தோறும் மாறும் இந்த உலகில் மரணம் என்பது மாறாத உண்மை என்கிற பிரபஞ்ச விதி, மாறாத ஒன்று இங்கு இருக்கிறது என்கிற ஆசுவாசத்தை நமக்கு வழங்குகிறது இல்லையா?”
“ஒன்று, இது ஒன்றும் மாறாத பிரபஞ்ச விதியின் இயற்கை விளைவு இல்லை, நாம் உண்டாக்கிய விதி; இரண்டாவது, அப்படியே மாறாத பிரபஞ்ச விதி என்றாலும் ,அந்த பிரபஞ்ச விதியின் விளைவு நமக்கு பாதகமாயிருக்கும் பட்சத்தில், அதன் ஸ்திரத் தன்மையை நினைத்து நாம் சந்தோஷப்பட முடியுமா?”
“புரிகிறது! உங்களுக்காக நான் வருத்தப்படுகிறேன்”
‘இல்லை உங்களுக்குப் புரியாது! பூமி அழிவதற்கு சில வருஷங்கள் முன் நான் எட்டு வயது குழந்தையாக தனியே இந்த கிரகத்தில் வந்து நின்றதிலிருந்து அவர்தான் என் அப்பா! எனக்கு ஒரு வீட்டையும் அன்பான அப்பாவையும் தந்ததற்கு இந்த அமைப்பின் பால் என் நன்றி கொஞ்ச நஞ்சம் அன்று. அப்பா!…. எப்பேர்ப்பட்ட அப்பா!’
“அவரை நான் பார்க்கவேண்டும்!”
“நடக்க முடியாததை நீங்கள் கோருகிறீர்கள்! இயலாமைக்கு வருந்துகிறேன்! நீங்களே அறிவீர்கள், நாம் எல்லோரும் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிற இந்த வசதிகளைக்கூட வெகுவாக குறைத்துக்கொள்ள வேண்டிய நிலையில் நம் கிரகம் இருக்கிறது என்பதை.
பல்லாயிரம் மடங்கு தொழில்நுட்ப வசதிகளுடன் வாழ்ந்துகொண்டிருந்த எத்தனையோ பண்பாடுகளிருந்து, எத்தனையோ சூரியக் குடும்பங்களிலிருந்து வந்தவர்களுக்கு வரும் நாட்கள் கடினமாகத்தான் இருக்கப் போகின்றன. நாம் நம்முடைய ஒவ்வொரு சொட்டு ஆற்றலையும் பாதுகாக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.எது எப்படியோ அது வேறொரு நாளுக்கான விவாதம் . மறுபடி சொல்லுகிறேன். உங்கள் நிலைமைக்கு வருந்துகிறேன்.”
“எப்போதைக்குமாக நான் கேட்கவில்லை! இன்னும் கொஞ்ச நாட்கள், கொஞ்சமே கொஞ்சம் நாட்கள்….. தயவு செய்யுங்கள்!
நான் செய்த எத்தனையோ செயல்களுக்கு அவரிடம் மன்றாடி மன்னிப்பு கேட்பதற்கு, சத்தமே செய்யாமல், சந்தோஷமாக, என்னிடம் எதையுமே எதிர்பார்க்காமல் அவர் செய்த அத்தனை செயல்களுக்கும் நன்றி தெரிவிப்பதற்கு, எனக்கும் அவருக்குமேயான பிரத்தியேகமான தருணங்களில் சந்தோஷமாக சிரித்துக்கொண்டு இருப்பதற்கு, வாழ்க்கையில் அவர் அடைந்த தரிசனம் என்னவென்று தெரிந்துகொள்வதற்கு ……..இன்னும் எத்தனை எத்தனையோ விஷயங்களுக்காக நான் அவரைப் பார்க்க வேண்டும்!
அவரிடம் சொல்வதற்கும் அவரிடம் கேட்டறிந்து கொள்வதற்கும் எனக்கு நிறைய நிறைய இருக்கின்றன! தயவு செய்யுங்கள்!”
“நீங்கள் குறிப்பிட்ட இயற்கை விதிக்கு உட்பட்டு இது நிகழ்ந்து இருந்தால் உங்களால் இது எதையுமே செய்திருக்க முடியாது, மறையும் காலத்தின் நிச்சயமற்ற தன்மையால்! ஒத்துக்கொள்கிறீர்களா?. ஆனால் அரசு உங்களுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே உங்கள் அப்பா மறையும் தினத்தைக் குறிப்பிட்டு கடிதமும், பின்னர் இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு நினைவூட்டல் கடிதமும் அனுப்பியிருந்தனரே? நீங்கள் பார்க்கவில்லையா?” அவனைக் கூர்ந்து பார்த்துக்கொண்டே கேட்டார்.
“……..”.
“அரசாங்க கடிதங்களைப் புறக்கணிப்பது தண்டனைக்குரிய குற்றம் தெரியுமில்லையா?”
அவன் பலவீனமாக “கடிதங்களைப் பார்த்தேன் “ என்றான். கடிதங்களைப் படித்திருக்கவில்லை.
அந்த பெரிய பெண்மணி மென்மையான குரலில் “தவிர , எவ்வளவு நேரம் இருந்தாலும், வாழ்க்கை முழுவதும் பேசிக்கொண்டே இருந்தாலும் யாரும் யாரிடமும், சொல்ல நினைப்பது அனைத்தையும் சொல்லி முடித்து விட முடியாது! எனவே கவலைப்படாதீர்கள்! உங்கள் அப்பா அறிவாளி, நல்லவர், நுண்ணுணர்வு மிக்கவர். உங்களை நிச்சயம் புரிந்துகொண்டிருப்பார்! சொல்லாமலேயே புரிந்துகொண்டிருப்பார்!”
அவனுக்கு எதையாவது போட்டு உடைக்க வேண்டும் போல இருந்தது, கைகளை இறுக்கி மூடிக்கொண்டு பற்களைக் கடித்துக்கொண்டு கேட்டான்,
“தலைவர் வீட்டில் இதுவரை யாரும் மறைந்திருக்கிறார்களா? “
“மிஸ்டர் ஜனா….” அந்தப் பெண்மணி பேச இடம் கொடாமல் அவன் தொடர்ந்தான்,
“நிச்சயம் இல்லை என நினைக்கிறேன் , ஒரு வேளை அவருக்கு பிடிக்காத உறவினர் மட்டும் மறைந்து போயிருக்கலாம்!”
“ நிறுத்துங்கள் ஜனா! நீங்கள் பேசுவது அரசாங்க துரோக குற்றப் பிரிவின் கீழ் கடுமையான தண்டனைக்குரிய குற்றம்! உங்களின் எளிதில் பாதிக்கப்படக்கூடிய தற்போதைய துயரமான மனநிலையைக் கணக்கில் கொண்டு உங்களை மன்னிக்கும்படி அரசிடம் பரிந்துரைக்கிறேன். நீங்கள் போகலாம்! மீண்டும் கூறுகிறேன். வருத்தப்படவேண்டாம். உங்கள் தந்தை உங்களை நிச்சயம் புரிந்துகொண்டிருப்பார்.”
அவன் மௌனமாக இருந்தான்.
அவர் தொடர்ந்தார்.
“உங்களுக்குத் தெரியும்! நம்முடைய பேரண்டத்திலேயே உயிர் வாழ்க்கை இருக்கும் ஒரே கிரகம் நம்முடையதுதான். பல உயிரினங்களை, தாவரங்கள், மிருகங்கள், பூச்சிகள், பறவைகள் இன்னும் நுண்ணுயிர்கள் உட்படக் காப்பாற்றி மிக மெல்லிய நாஸூக்கான ஊசி முனை மேல் இருப்பதான சமநிலையில் இதை நாம் எல்லாரும் நடத்திக் கொண்டு வருகிறோம். ஒரு சின்ன தவறு நடந்தாலும் , ஒரே ஒரு சிறிய இறகு அதன் மேல் விழுந்தாலும் நாம் அனைவரும், இந்த கிரகம் உட்பட அழிவோம் நிரந்தரமாக. இந்த கிரகத்தை நடத்துவதற்கான ஆற்றல் அனைத்தும் நமக்கு மறு சுழற்சியில் மட்டுமே கிடைக்கிறது. அதுவும் உங்களுக்குத் தெரியும். அதனால் எந்த ஒரு சிறு தவறும் நடக்க இங்கு அனுமதியில்லை. ஆதி சங்கரரின் புனரபி ஜனனம், புனரபி மரணம் வேறு ஒரு தத்துவ கருத்தாக இருந்தால் கூட இங்கு நடப்பவற்றுக்கு ஒரு கோட்பாட்டு வாக்கியமாக வேறு அர்த்தத்தில் அதை நான் புரிந்துகொள்கிறேன். ஒன்றிலிருந்து ஒன்றாக உரு மாறி மட்டுமே இதை நாம் நிகழ்த்த முடியும். நீங்கள் புரிந்து கொள்வீர்கள்! போய் வாருங்கள்!”
“நன்றி” மெதுவாகக் கூறிவிட்டு வெளியே வந்தான்.
அப்பா நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்? என் மீது அடிக்கிற இந்த காற்றாகவா?, என் கால் கீழ் இப்பொழுது முளைத்தாற்போல் இருக்கிற இளம் புல்லாகவா? இந்த மர இலையில் கண் விழித்திருக்கும் சின்னஞ்சிறு புழுவாகவா? என் தலையில் உதிர்கிற இந்த மொட்டாகவா? மனிதன் செய்த செயற்கை காட்டில் புதிதாக பிறந்த புலிக்குட்டியாகவா? இல்லை இந்த கூட்டில் இப்போது முட்டை உடைத்துக்கொண்டு வெளிவந்த பறவைக்குஞ்சாகவா? விதையிலிருந்து வெளிப்படுகிற சின்னச் செடியாகவா? இல்லை இங்கே மேலே பறக்கிற ஊர்திகளுக்கு எரிபொருளாகவா? அப்பா…… அப்ப்பா.. நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்?……
அவன் மேல் மெல்லிய தூறல் விழுந்தது. நாவால் சுவைத்தான்.
எட்டு வயது குழந்தையாக அப்பாவை முத்தமிட்ட அந்த நாளின் மணமும் ,ருசியும்!
அதுதான் அப்பா என்று தோன்றியது.
அப்பா! அப்பா……..!
