
அந்தச் சிறிய கோயிலின் முன்பு பதினாறு பெண் கள் திகைத்து நின்றனர். நடை சாத்தியிருந்தது; ஆனால் கோயிலின் உள்ளே செல்ல அனுமதிக்கும் வாயில் திறந்திருந்தது. கர்ப்பக்கிருக தெய்வச் சிலைகளைத் தரிசிக்க ஏதுவாக மரக் கதவில் பெரும் பூக்களைச் செதுக்கி, அவற்றைப் பிரித்தெடுத்து அவற்றின் வடிவம் மட்டும் துலங்கும் விதமாக அமைத்த மர ஆசாரியை அவர்கள் அனைவரும் மனதிற்குள் பாராட்டினர்.
இன்னிசை வீணையர், யாழினர் ஒரு பால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒரு பால் துன்னிய பிணைமலர்க் கையினர் ஒரு பால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒரு பால்
சுருதகீர்த்தி தொடங்கிய பாடலில் மாண்டவியும், ஊர்மிளாவும் இணைந்து கொண்டனர். புதிரான சிரிப்போடு, எப்போதும் பிரியாத சீதா, செவி மடுத்துக் கொண்டிருந்தாள்.
இந்தப் பதினாறு பேரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களில், சட்ட வல்லுனர்கள், பொறியியலாளர்கள், வங்கியாளர்கள், கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள், தொழில் நுட்ப திறமையாளர்கள் இருக்கின்றனர். ஆனால், கோயில் தரிசனம் முடியும் வரை ‘நெய்யுண்ணோம், பாலுண்ணோம், நாட்காலே நீராடி, மையிட்டெழுதோம், மலரிட்டு நாம் முடியோம்’ என்பதோடு மௌனமாக இருப்போம் என்பதும் விதிமுறை. அப்படியென்றால், யாரோ இருக்கிறார்கள், பெண்களின் குரல் கேட்கிறது; சிந்தித்த இவர்களை சட்ட நிபுணர் சைகையால் அமைதியாக இருக்குமாறு சொன்னார்.
சிறிய கோவில். சின்னஞ்சிறு பிரகாரம், பூட்டிய கதவின் பின்னே இருக்கும் சிலைகளா பாடியிருக்கும்? இந்தக் கல்யாண ராமச்சந்திர மூர்த்தி ஆலயத்தில் மட்டுமே இராமன், பரதன், இலக்குவன், சத்ருக்னன் தத்தம் மனைவியரோடு கருவறையில் உள்ளனர். மேடக் கும்மடிவாலா ஆலயத்திற்குத்தானே வந்திருக்கிறோம் என்று அவர்கள் சரி பார்க்க நினைத்தாலும், அங்கே தொடர்பு கிடைக்கவில்லை. திரும்பி விடலாம் என அவர்கள் நினைக்கையில் அந்தக் கோயிலில் ஏதோ ஒன்று அவர்களைத் தடுத்தது.
பழமையான அந்தக் கோயிலில் மெல்லிய சர விளக்கொன்று தொங்கிக் கொண்டிருந்தது. மங்கிய ஒளியில் திருமேனிகளின் வடிவம் தெளிவாகப் புலப்படவில்லை. காற்றில் துளசி தள வாசனையும், வில்வப் பழங்களின் வாசனையும் கலந்திருந்தன.யாரோ, எப்போதோ ஏற்றிய குட்டிக் கற்பூரம் கருமை படர்ந்திருந்த அகலில் பாதி எரிந்து அணைந்திருந்த சுவடு மங்கலாகத் தெரிந்தது.
‘சந்திர மலையில் நாம் சுவாசித்த அந்தக் காற்றும், நம் வாழ்வும் எங்கே போயின? இந்த நாலடிக் கருவறையில் மூச்சு முட்டுகிறது.’ என்றாள் ஊர்மிளா.
“மகிழ்ச்சி கொள், தமக்கையே. நமக்குக் கூட கோயில் இருக்கும் இந்த மேடக்கை விட்டால், நம்மை நினைப்பாரும் உளரோ?” என்றாள் மாண்டவி.
‘நினைக்க வேண்டியவர்கள் நினைக்கவில்லை. நம் நிழலின் சாயல், நம்மைப் போல இல்லாத வரத்தைப் பெற்றவர்கள் நாம்.’ என்றாள் சுருதகீர்த்தி.
பதினாறு பேரும் அதிர்ந்து போனார்கள். அவர்கள் கூட யாரோ ஒருவரின் நிழலாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முற்றத்தில் படர்ந்த கொடி சம்பங்கியாக, மலைக் காட்டில் பூக்கும் பொன் கொன்றையாக, அடர்ந்த கிளைகளின் உள்ளே கூவும் குயில்களாக, அவர்களின் சிறப்புக்களை தங்கள் பெருமைகளாகக் கூவும் அதிகாரிகளின் ஆணவத் திமிரை சகித்துக் கொள்பவர்களாக….
‘அன்று சந்திர மலையில் தண்டு இறங்கிய தசரதச் சக்கரவர்த்தி மிகச் சிறப்பான சீர்வரிசையால் மிதிலையை மயக்கினார். யானை மேல்,அந்தக் கரியத் திருமேனியின் மேல், சிவந்த சிங்கமெனஊர்வலம் வந்த இலக்குவனின் கரம் பற்றினேன் நான்.’
‘பணிவாக நடந்து வந்த பரதன் என்னைக் கவர்ந்தார்’ என்றாள் மாண்டவி.
‘எனக்கு எப்போதுமே மீந்ததுதான் கிடைக்கும். ஆனாலும், குறை ஒன்றுமில்லை.’
பதின்மருக்கும் தங்கள் வாழ்க்கைக் காட்சிகள் நிழலாடின.
‘நமக்கு மேடக்கில் மட்டுமில்லை, ஜானகி மந்திரில் சீதாசீஷ் மஹலில் அலங்காரமான கண்ணாடி மாளிகையிலும் இடம் உண்டு.’
‘அலங்காரப் பொருட்கள், அவ்வளவுதான். இங்கே பார், கல்லிலே செதுக்கிய என் முகம் சிதைந்து விட்டது, அதில் மரச் சிறகுகளைச் சொருகி, மர முகத்தைப் பிணைத்து, கறுப்பு வண்ணம் பூசி… இப்படி ஒரு கோயில் தேவையா என்ன?’
‘நிச்சயம் தேவை. நம் பெயர் அப்படியாவது நினைவில் வரும். நம்மை வழிபட வேண்டியதில்லை, நம்மிடம் வரம் கேட்க யாருமில்லை, கொடுக்கும் துணிவும் நமக்கில்லை. ஆனால், நம் தியாகங்கள்… அது ஏன் போற்றப்படவில்லை?’
‘உண்மைதான். பரதன் மிக மென்மையானவர். அயோத்திக்கு மணமாகி வந்த பிறகு நானும் அவரும் சித்திரக்கூடபர்வத்திற்கு வசந்த காலத்தில் போனோம். செண்பகப் பூக்கள் மயக்கத்தைத் தந்தன. என் கூந்தல் அவற்றைச் சூட ஏங்கியது. அவருக்கு நான் சொல்லாமலே எப்படித்தான் தெரிந்ததோ? நான் கால் ஓய்ந்து ஏரிக்கரையில் அமர்ந்து விட்டேன். நாம் சிறு வயதில் ஒன்றாகச் சூடிய மலர்கள், அணிந்து கொண்ட அணிகலன்கள், விளையாட்டுக்கள் என்று என் சிந்தனை போய்க் கொண்டிருந்தது. அப்போது என் பின்னால் நின்று அவர் கரங்களால் எனக்கு அணிவித்த செண்பகப் பூ.. எத்தனை மகிழ்ச்சி தெரியுமா எனக்கு? அவர் ஒரு பூவை என் மூக்கருகில் கொணர்ந்ததும் எனக்கு மயக்கம் வந்துவிட்டது. ஒரே பூ, நான் விரும்பிய பூ, தலையில் கமழும் பூ, ஆனால், முகர்கையில்?’
‘நானும் அவ்வப்போது நாம் விளையாடியதையெல்லாம் நினைத்துக் கொள்வேன்.வெள்ளியால் செய்த பல்லாங்குழியில் தங்கக் காசுகளைவைத்து விளையாடுவோம்; ஆனால், அதில் எப்போதும் காசு பொத்துபவள் நம் அக்கா ஜானகிதான்.’ கேட்டுக் கொண்டிருந்த சீதா தன் மந்தஹாசத்தை மாற்றவில்லை.
‘இதையும் கேளுங்கள். சத்ருக்னனுக்கு சிரிப்பே வராது. புன்னகைக்க இதழ் விரியாது. முரட்டுத்தனமாக விளையாடுவார். எங்கள் அரண்மனைப் பொய்கையில் தன் தலைக்கு மேல் என்னைத் தூக்கி, தண்ணீரில் வீசுவார். நான் மூச்சிற்குத் தவிப்பேன். காதார் குழையாட பைம்பூண் கலனாட, சீதப் புனலாடத்தான் நான் விரும்பினேன்; இப்படி பொய்கையில் வீசப்பட அல்ல. நம் நால்வரில் என்னைத் தானே முத்துப் பல்லழகி என்று சொல்வார்கள். அவர் ஒரு நாளும் சொன்னதில்லை.’
‘அண்ணா சொன்னால் தான் அவர் அரண்மனைக்கே வருவார். கவனமெல்லாம், வாயில் காப்போன்‘அண்ணா அழைக்கிறார்’ என்று எப்போது சொல்வான் என்பதில் தான் இருக்கும். என் அழகு, இளமை, தோழமை, பண்பு எதுவுமே அவரிடம் எடுபடவில்லை.’
‘மென்மையான பரதன் எப்படி இறுகிப் போனார் தெரியுமா? பழிக்கு அஞ்சியே தன்னை ஒளித்துக் கொண்டார். யாரையும் பார்க்காமல், காலணிகள் இல்லாமல் நடந்து, நந்திகிராமத்தில் நதி தீரத்தில், விடி வெள்ளி எழும் முன்னே குளித்து விட்டு, பாதுகைகளை பூசனை செய்யத் தொடங்கிவிடுவார். இதனால், நானும் அவருக்கு முன்பே எழுந்து, அவருக்கும் முன்பாகவே நீராடி, பூஜைக்குரிய பொருட்களை எடுத்து வைத்து ஒரு வார்த்தை பேச மாட்டாரா என்று ஏங்குவேன். இவர் அன்னை செய்த தவறுக்கு எனக்கேன் தண்டனை? அவர் அரசக் காரியங்களைச் செய்வார். திரைக்குப் பின்னிருந்து ஆணைகள், ஓலைகள் பிறக்கும். அவரால், பல கிராமங்கள் வளர்ச்சியுற்றன. அரசின் வருவாய் அதிகரித்தது. ஆனால், தேயும் நிலவென நான் அழிந்து கொண்டிருப்பதை அவர் உணர்ந்தாரா என்ன? அவருடைய துயரம் எனக்குப் புரியும். என் துக்கத்தை ஏன் வால்மீகி பாடவில்லை? ‘ஆயிரம் ராமர் நின் கேழ் ஆவரோ?’ என்று கேட்ட கம்பன் பாடவில்லை. அரச போகம், அரசி எனும் அதிகாரம் இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், நான் எதற்காக இப்படி உருவற்றுப் போய் அவரின் நிழலாக எஞ்சினேன்? அவரது சீலத்தைப் பாடிய கவிஞர்கள் என் சீலத்தை ஏன் பாடவில்லை? எதில் குறைவு வைத்தேன்?’
‘மாண்டவி, உனது கணவர் உன்னோடு இருந்தார். ஆனால், என் கணவர் எல்லைப் பாதுகாப்பில், போரில், என்று என்னை விட்டு விலகியே இருந்தார். அவர் சினம் உலகம் அறிந்த ஒன்று. தங்களின் ரகு வம்சத்தில் அண்ணன் இடத்தை தம்பி பற்றிக் கொண்ட ஆறாப் பழி வந்துள்ளதே என்று அவர் தன்னை போரில் பலவந்தமாக ஈடுபடுத்திக் கொண்டார். அவர் உடலின் நீண்ட நிழலாக நான் இருந்து வந்தேன். கம்பரும் நம்மை ஏமாற்றினார். வால்மீகியில் இல்லாத நரசிம்ம அவதாரத்தை ஆயிரம் பாக்களால் பாடியவர் ஓரிரு செய்யுள்களில் கூட நம்மைச் சொல்லவில்லை. அவருக்கு மாண்டோதரியும், திரிசடையும் கண்களில் தென்பட்ட அளவில் நூற்றில் ஒரு பங்கு நாம் படவில்லை. வால்மீகி, கம்பர் வரிசையில் துளசிதாசரும் தான் வருகிறார்.’
‘இத்தனைத் துன்பத்திலும் நீங்கள் உணர்வுடன் இருந்திருக்கிறீர்கள், ஆனால், நான் பதினாலு ஆண்டுகள் உறக்கத்தில் இருந்தேன். அவருக்கு உறங்காவில்லி என்று புகழ் கிடைத்தது. என்னை யார் நினைத்தார்கள்? அண்ணன் மகிழ்வுடன் இருக்க குடிலமைத்து, ஊழியம் செய்து, அவர்களையே பெற்றோர் எனப் போற்றி வணங்கி அவர் வரலாற்றில் இடம் பிடித்து விட்டார். நான் உறங்கும் ஜடம் என்று ஊரார் வாயில் விழுந்து புறப்பட்டேன். இவரைக் காட்டிற்கு கைகேயி அன்னை போகச் சொல்லவில்லையே? சரி, போனதுதான் போனார், நானும் வருகிறேன் என்பதை ஏன் தடுத்தார்? மைத்துனன் அருகில் இருக்கக்கூடாது என்று எந்த சாஸ்திரம் இவரிடம் சொன்னது? இரு குடில்கள் அமைத்து தங்கியிருக்க முடியாதா? நானும் அயோத்தியைச் சேர்ந்தவளாகிவிட்ட பிறகு அதன் நிலப்பரப்பை, காட்டை, விலங்குகளை, பறவைகளை, ரிஷிகளை ஏன் அறியக் கூடாது? என்னைக் காப்பதும், ஒரு கணவனாக அவருடைய கடமை தானே? அயோத்திக்குத் திரும்பிய பிறகும், அவர் பழைய நிலைக்கு வரவேயில்லை. விட்ட உறக்கத்தை இரவிலும், அரசக் காரியங்களை பகலிலும் என்று கோடு போட்டு விட்டார். இவர் கோடு போடுவதில் சமர்த்தர். அக்கா மைதிலி, அந்தக் கோட்டைத் தாண்டி, தன் கற்பினைக் காத்து, பெரும் போருக்குப் பிறகும் அக்னியில் குளித்து,சிறப்பான இடத்தை பெற்றுவிட்டாள். நமக்கு, நமது வம்சத்திற்கு நற்பெயரை பெற்றுத் தந்து விட்டாள். நாம், பிறர் அறியாத துன்பத்தைப் பெற்றும், போற்றப்படவில்லை.’
‘அவர்களது பட்டாபிஷேகத்தில்,“அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த,
பரதன் வெண்குடை கவிக்க, இருவரும் கவரி வீச,
விரைசெறி கமலத்தாள் சேர் வெண்ணையூர் சடையன் தங்கள்மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி” என்று கம்பரும் பாடிவிட்டார். அந்த நால்வரின் அன்னையர் அந்த வைபவத்தில் முன் நிற்கிறார்கள், நம்மை யாரேனும் தகுந்த இடத்தில் வைத்தார்களா?’
‘இல்லை, இது சரியில்லை, ஆனால், செய்வதற்கும், சொல்வதற்கும் ஒன்றுமில்லை. இராமருடன் பிறந்தவர்கள், பாம்புப் படுக்கையாய், சங்காய், சக்கரமாய் போற்றப்படுகிறார்கள். நாம் மிதிபடும் நிழல். ஒரே ஒரு பெருமை- அவர்களின், அந்தத் தூயோரின் நிழல்.’
அந்த நிழல்களின் நீட்சிகள் நாங்கள், இன்றைய நிழல்களின் காட்சியும் நாங்கள், ஆனால் தூயோர்? என்று இந்தப் பெண்களும் நினைத்தார்கள்.
