
மனதுக்குப் பிடித்தமான தொழில் செய்து அதற்கு சன்மானமும் வாங்கும் அதிருஷ்டசாலி நான். சராசரிக்கும் குறைவான என் சம்பளம் எங்கள் குடும்பத்துக்கு அதிகப்படி வருமானம் என்பதால் இல்லை. நிஜமாகவே இந்த வேலையில் எனக்கு திருப்தி, மகிழ்ச்சி. அவ்வப்போது குறிப்புகள் அறிக்கைகள் எழுத வேண்டிய தலைவேதனை. அதை விட்டுவிடுவோம். மற்றபடி வீட்டில் இருந்து வேலைக்குக் கிளம்புவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இத்தனைக்கும் இது கணக்காக ஒன்பது மணிக்குத் தலைகாட்டி ஐந்து அடித்ததும் கைகழுவும் தொழில் இல்லை. மாலை வேளைகளில், ஏன் சனி ஞாயிறு கூட வேலை செய்ய வேண்டி வரும். நான் அதற்காக முனகுவது கிடையாது. அவசரம் என்றால் என் சொந்த ஊர்தியைப் பயன்படுத்துவேன். அதன் தேய்மானமும் எனக்குப் பெரிதில்லை.
என்ன வேலை?
வறுமை, வன்புணர்ச்சியின் அதிர்ச்சி, பொறுப்பை ஏற்கமுடியாத இளமை, மற்றும் வேலை இழப்பு, நம்பிக்கை மோசம் போன்ற திட்டமிடாத தடங்கல், என்று ஏதோவொரு காரணத்தால் பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையைப் பாசம் வைக்குமுன்பே விட்டுக்கொடுக்கும் தாய் – ஒரு பக்கம். நவீன வாழ்க்கையின் கெடுபிடிகளில் குழந்தை பெறும் காலம் கடந்துவிட்டதால், இல்லை ஆண் பெண் இருவரின் உடற்குறையால் கருத்தரிக்க இயலாதவள் – இன்னொரு பக்கம். இவர்களுக்கு நடுவில் நான் ஒரு பாலம்.
கடந்த பத்து ஆண்டுகளில் எத்தனையோ சிசுக்களைப் பிறந்த சில நாட்களுக்குள் பெற்ற தாய்களிடம் இருந்து பிரிக்கும் பாவத்தையும், அந்தப் பச்சிளம் குழந்தைகளை அன்புடன் ஆதரவுடன் வளமுடன் வளர்க்கும் குடும்பங்களில் சேர்த்த புண்ணியத்தையும் ஒருசேர செய்து வருகிறேன். இதுவரை நான் வழிசெய்த எந்த இடமாற்றமும் துயரத்தில் முடிந்தது இல்லை. இதற்கு முக்கிய காரணம், மனிதர்களின் தராதரத்தைக் கணிக்கும் எனது சாமர்த்தியம். அது கல்லூரியில் உளவியல் படித்ததால் மட்டும் வரவில்ல. ஷிகாகோவில் என் பெற்றோர்கள் சிறு உணவு விடுதி நடத்தியபோது, நானும் என் தம்பியும் வீட்டில் பாட்டியின் மேற்பார்வையில். உறவுகள், உற்றார்கள் என்று அவள் எப்போதோ நடந்த பழங்கதைகள் பேசிக்கொண்டே இருப்பாள். அவற்றைத் தினம் கேட்டு யார் எந்த சூழ்நிலையில் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை ஊகிக்கும் திறமை. அத்துடன் கடையின் மூலையில் அமர்ந்து வாடிக்கைகளை வேடிக்கை பார்ப்பேன். அவர்கள் பேச்சில் நடத்தையில் அவர்களின் கேரக்டரை மனதில் வரைவேன்.
நான் போட்ட ஒரு முடிச்சு இறுகப்போகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்…
வடமேற்கு அட்லான்ட்டாவில் உயர் அலுவலகக் கோபுரங்களைத் தாண்டியதும் கட்டடத் தொகுப்புகள். எண் பார்த்து அந்த வீட்டின் அழைப்புமணியை அழுத்தினேன். நான் சந்திக்க வேண்டியவர்கள்: சுமன் சுகுமாரன், வயது முப்பத்திநான்கு, தாரா சக்கரவர்த்தி முப்பதை எட்டவில்லை. அவர்கள் திருமணத்தின் வயது நான்கு. இளம் தொழில்நிபுணர்கள். இருவரின் சரித்திரங்களில் அப்பழுக்கு இல்லை. பொதுவாக எங்கள் உதவியை நாடும் தம்பதிகள் நாற்பதுக்கு அந்தப் பக்கம். இந்தியாவில் ஓர் ஆண்டிற்குள் கருத்தரிக்காவிட்டால் பேச்சு கிளம்பும் என்று பாட்டி சொல்வாள்.
கதவைத் திறந்து சுமன் வரவேற்றான்.
முன்தலை வழுக்கையும் மீதித் தலைமயிரில் ஒன்றிரண்டு நரையும் வயதை உயர்த்தின. குழந்தை இல்லாத குறையினால், இல்லை வேலையின் இறுக்கத்தால்?
“நான் ஸ்னேஹா பட்டேல். ஃபேமிலி-க்ரோவ் சேவை நிறுவனத்தில் இருந்து…”
“ஆகா! உன்னை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.”
கதவை சாத்தியதும்,
“என் அக்காவின் பெயர்,” இடைவெளி கொடுத்து, “சுபா பட்டேல்” என்றான்.
“சின்னஞ்சிறு உலகம்.”
பொதுவான கூடம். சாப்பிடும் இடமும், சமையலறையும் தெரிந்தன.
நான் சோஃபாவில் உட்கார்ந்ததும்,
“குடிக்க…”
“தண்ணீர்.”
ஒரு அழகான கண்ணாடி தம்ளரில் நிரப்பிக் கொண்டுவந்தான். நாற்காலியின் முதுகில் முன்புறமாகச் சாய்ந்து,
“இம்மாதிரி நேர்காணலில் கணவன் மனைவி இருவரையும் தனித்தனியே சந்தித்துப் பேசுவது வழக்கம் என்று கேள்விப்பட்டேன். தாரா வெளியே போயிருக்கிறாள்.”
நான் அப்படிச் செய்வது இல்லை. இருவருடனும் ஒன்றாக உரையாடுவது என் வழி. மூவருக்கும் நடுவில் அவர்கள் ஆசையை, என் எதிர்பார்ப்புகளை வைத்து ஒரு தீர்மானத்துக்கு வருவது எனக்குப் பிடிக்கும். தாரா வரும்வரை ஏன் காத்திருக்க வேண்டும்?
“நீ ஏழு வயதில் இங்கே வந்ததாகத் தெரிகிறது. உன் மனைவி கல்லூரிப் படிப்பை முடித்து வந்திருக்கிறாள். அத்துடன் இருவரின் குடும்பமும் சென்னையில் இருந்து. நல்ல பொருத்தம். உன் அம்மாவுக்கும் சந்தோஷமாக இருக்கும். என் தம்பி சீனப்பெண்ணை மணந்ததில் என் பெற்றோருக்குப் பெரிய குறை.”
யோசித்துவிட்டு,
“உண்மைதான். சுபாவின் மாமியாருக்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது என்பதால் அவளுடன் என் அம்மா சகஜமாகப் பேசமுடியாது.”
“உன் மாமியாருடன்…”
“தமிழில் பேசலாம். ஆனால் பேசத்தான் விஷயம் கிடையாது.”
அவள் மாநில அலுவலகத்தில் நடுநிலைப் பணியாளர். தாராவின் தாய் இந்தியாவில் கோடீஸ்வரரின் மனைவி. அவர்களுக்குள் பொதுவாக என்ன இருக்க முடியும்?
பேச்சை மாற்ற,
“குழந்தைகளுடன் அனுபவம்?”
“என் அக்காவுக்கு ஒரு பெண், ஒரு பையன். குழந்தைகள் பிறந்தபோது என் அம்மாவுடன் நானும் இரண்டு வாரங்கள் அவளுடன் தங்கி உதவி செய்தேன்.”
“பட்டம் வாங்கியதில் இருந்து ‘கப்ளிங்’ என்கிற ஒரே நிறுவனத்தில் வேலை.”
அவன் தொழிலில் ஒவ்வொரு வேலை மாற்றத்திலும் சம்பளம் இருபது சதம் உயரும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.
“ஷார்லெட்டில் அக்கா. ராலேயில் என் அம்மா தனியாக இருக்கிறாள். அவசரம் என்றால், இங்கிருந்து உடனே போய்ப் பார்க்கலாம். சியாட்டில், சான் ஹொஸேக்குப் போனால் அது முடியுமா?”
குடும்பத்துக்கு முக்கியத்துவம் தருகிறான், அதற்கு ஒரு பாய்ன்ட்.
“ஆர்பர்-அட்லான்ட்டாவில் நீ பங்கெடுப்பதைப் பாராட்டுகிறேன்.”
“தாங்க்ஸ்! அதன் ஆதரவாளர்களில் எங்கள் நிறுவனமும் ஒன்று. பணத்துடன் என் உடல் உழைப்பும் காணிக்கை.”
“நீ தொடங்கி இருக்கும் ‘ஜாப்-லிங்க்’ பற்றி…”
“அட்லான்ட்டா மாநகரத்தின் வேலை மற்றும் பயிற்சி வாய்ப்புகளை அத்தளத்தில் சேகரிக்கிறேன். முன்னாள் இராணுவ வீரர்கள், இளைஞர்கள், முதியவர்கள் இலவசமாக இந்த சேவையைப் பயன்படுத்தலாம்.”
இன்னொரு பாய்ன்ட்.
“குழந்தையைப் பார்த்துக்கொள்ள உன் அம்மா?”
“அவளைத் தொந்தரவு செய்வது நியாயமில்லை. எங்களால் முடியும். இந்நிறுவனத்தில் குழந்தையை தத்து எடுக்க நீண்டகால விடுமுறை உண்டு. வேலை மாறாததற்கு அதுவும் ஒரு காரணம்.”
அவன் மருத்துவ அறிக்கை என்னிடம். அதனால் அதைப்பற்றிய பேச்சை எடுக்கவில்லை.
“எப்படிப்பட்ட குழந்தை என்பதில்…”
“இந்நாட்டிலேயே பல ஏழை மக்கள். அதனால் இங்கே பிறந்த குழந்தையாக இருந்தால் நல்லது.”
கதவைத் திறக்கும் சத்தம்.
லூலூ லெமன் (இறுக்கமான ஆடை), கோச் (கைப்பை), ஜிம்மி ச்சூ (காலணிகள்) மற்ற பெண்களிடம் ஆடம்பரத்தில் முடிந்து இருக்கும். அவை தாராவிடம் பொருந்தி அவளை இன்னும் இளமையாகக் காட்டின.
“நான் அரை மணி நடந்துவிட்டு வருகிறேன்.”
சுமன் விடைபெற்றதும்,
“ஐஸ் க்ரீம்? ஸ்னேஹா!”
“உனக்காக என் கட்டுப்பாட்டைத் தளர்த்துகிறேன். தாரா!”
இரண்டு அகன்ற கண்ணாடி கிண்ணங்கள் நிறைய மாம்பழ ஜெலாடோ. சாப்பாட்டு மேஜைக்கு எதிர்ப்புறங்களில் உட்கார்ந்தோம்.
“இதைச் சாப்பிட்டு நீ எப்படி இவ்வளவு ஒல்லியாக இருக்கிறாய்?”
“ட்ரெட்-மில்லில் தினம் ஒரு மணி.”
சுவைத்து முடித்ததும்,
“சுமனை எப்படி சந்தித்ததாய்?”
“இந்தியாவில் பிடெக். இங்கே வந்ததும் ‘கப்ளிங்’கில் பயிற்சி வேலை. அவன் உதவியாக இருந்தான்.”
“கேட்பதற்கு மன்னிக்க வேண்டும். ‘இன்விட்ரோ’வுக்கு பதில் தத்து எடுப்பதைத் தேர்ந்தெடுத்த காரணம்?”
“இது இயற்கை.”
இரண்டிலும் முழு விருப்பம் இல்லை என்கிற தொனி. அதை நிலைநாட்டுவது போல் காலியான கிண்ணத்தைக் குனிந்து பார்த்து,
“புத்தாடை ஸ்ரீமான் சக்கரவர்த்தி பரம்பரையில் என் தாத்தாவுக்கு என் அப்பா ஒரே பிள்ளை. நான் ஒரே பெண்.”
அந்தப் பரம்பரை மரத்தில் மிச்சம் இருக்கும் ஒரு கிளை போத்தாக மாறுவதற்கு சாத்தியக் குறைவு என்பதை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் வர இன்னும் சில காலம் போகலாம். சின்னப்பெண் தானே.
மேஜையின் நடுவில் மரக்கொம்புகளில் பின்னிய ஒரு கூடையில் இலைகளும் பைன் கூம்புகளும். என் பார்வை அதில் பதிந்ததும்,
“செலவில்லாமல் சுமன் கொடுத்த வாலன்டைன்ஸ் டே பரிசு.”
“அபூர்வமான ஒன்று.”
ஆர்பர்-அட்லான்ட்டாவுக்கு சேவை செய்யும் போது அவன் சேகரித்ததாக இருக்கும்.
“குழந்தை வந்ததும் உதவிக்கு உன் பெற்றோர்?”
“பொறுப்பான நான்னிக்கு இக்காலத்தில் மாதம் ஐந்தாயிரம் டாலர். அதை அவர்களிடம் எதிர்பார்க்கலாம்.”
“வீட்டைச்சுற்றிப் பார்க்கலாமா?”
“தாராளமாக. ஆனால் பெரிய வீடு தேடிக்கொண்டு இருக்கிறோம். என் தந்தை முன்பணம் தரத்தயாராக இருக்கிறார்.”
சுமன் திரும்பிவந்தான்.
விடைபெற்ற போது,
“சில வருஷங்கள் காத்திருக்க வேண்டும் என்று நண்பர்களின் எச்சரிக்கை” என்றான் அவன் ஏமாற்றத்துடன்.
“உண்மை. எதிர்பாராமல் விரைவிலேயே காலம் கைகூடிவரலாம். யார் சொல்ல முடியும்?”
“எதாவது விட்டுப்போய் இருந்தால் என்னைக் கூப்பிடலாம்.”
ஆறுமாதங்களுக்கு முன். காலம் கைகூடி வந்தபோது சுமனுக்கு, ‘இருவரையும் சேர்த்து இன்னொரு முறை சந்தித்துப்பேச ஆசை’ என்ற தகவல் அனுப்பினேன். தாரா மனம் தேறியிருக்கலாம். அதை நிச்சயம் செய்வதற்கு அவசியம் இல்லாமல் உடனே வந்த பதில். ‘குழந்தையைத் தத்து எடுக்கும் எண்ணத்தை நாங்கள் கைவிட்டுவிட்டோம். முன்பே தெரிவிக்காததற்கு மன்னிக்கவும்! – சுமன்’
‘நல்ல சேதிக்குக் காத்திருக்கிறோம்.’ ‘குடும்பத்தில் புதிதாக ஒருவரைச் சேர்க்க நாங்கள் தயார்.’ இப்படி முற்றுப்புள்ளியில் முடிகிற வினவல்கள். ‘காய் கனிந்துவருகிறது.’ ‘பழம் மரத்தில் இருந்து விழப்போகிறது.’ என்ற என்னுடைய சமாதான பதில்கள். இவை தான் எனக்குப் பழக்கம். நேரில் பார்த்தபோது குழந்தையை வரவேற்க ஆவலுடன் இருந்த சுமனின் மனமாற்றத்தின் காரணம்? அதை அப்புறம் யோசிக்கலாம். இப்போது பீட்ரிஸின் வயிற்றில் வளரும் குழந்தை…
என் கவனிப்பில் இருந்த கோப்புகளை (நாங்கள் பழங்காலம்) ஒவ்வொன்றாகப் பார்வையிட்டேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனித்து வாழும் பெண்ணிடம் இருந்து வந்த விண்ணப்பம் கவனத்தைக் கவர்ந்தது.
இரண்டு நாளில் இருந்து பதின்பருவத்தினர் வரை இளம் வயதினருக்குப் பொருத்தமான, பாதுகாப்பான குடும்பத்தைத் தேடுவது ஃபேமிலி-க்ரோவ் நிறுவனத்தின் பிரதான சேவை. பிறந்த குழந்தைக்கு இல்லம் தேடும்போது தம்பதிகளுக்கு முதலிடம் என்பது எழுதாத விதி. காலாகாலத்தில் உணவூட்டி, அழுக்கான துண்டுகளை அடிக்கடி மாற்றி, குழந்தை தூங்கும் போது வீட்டுவேலைகளைக் கவனித்து, எப்போதாவது கண்ணயர்வது முழு நேர வேலை. அப்போது பணச்செலவும் அதிகம். ஒருத்தியால் சுமக்க முடியாத பளு என்பதால் அவள் விண்ணப்பம் முதல் கட்டத்தைத் தாண்டவில்லை. அவள் எழுதிய சுயகட்டுரையில் இருந்து நான் தேடும் வளர்ப்புத்தாய் அவளாக இருக்கலாம் எனத் தோன்றியது.
நியு யார்க் மாநிலத்தின் வடக்கில் பிறந்து வளர்ந்த எனக்குச் சிறுவயதில் இருந்தே இயற்கையின் மீது ஒட்டுதல்…
அவளை அழைத்தேன். அட்லான்ட்டாவில் இருந்து போய்விடவில்லை.
“பிற்பகல் மூன்று மணிக்கு.”
சரியான நேரம். நேர்காணலை முடித்துவிட்டு அங்கிருந்தே வீட்டிற்குப் போகலாம்.
குறுகலான தெருவின் இரு சாரியிலும் தனி வீடுகள். கட்டி அரை நூற்றாண்டுகளாவது ஆகியிருக்கும். அங்கொன்றும் இங்கொன்றும் புதுப்பித்த இல்லங்கள். சாலையோரத்தில் நிறுத்திய ஊர்திகளுக்கு நடுவில் ஒரு இடைவெளி. அதில் என் காரை நிறுத்திவிட்டு நடந்தேன். குளிர்காலம் முடியப் போகிறது என்றாலும் இலைகளற்ற மரங்கள். புல்வெளிகளில் நிறைய மஞ்சள் திட்டுகள். கவர்னருக்குப் போட்டியிட்ட ஸ்டேசி ஏப்ரமை ஆதரித்த அட்டைகள். முதியவர் இருவர் நடந்தார்கள். மேட்டில் ஏறி இறங்கியதும் உள்ளே தள்ளி இரண்டு தள வீடு. ஓரத்தில் நிஸான் லீஃப். தபால் பெட்டியை ஒட்டி ஒரு அறிவிப்பு.
எங்கிருந்து வந்திருந்தாலும்
எந்த நிறத்தினர், எந்த மதத்தினர் என்றாலும்
எந்த மொழி பேசினாலும்
அனைவருக்கும் நல்வரவு!
நான் தேடி வந்த 947 வீடு அது தான்.
சந்திக்கப்போகும் பெண்ணின் விவரங்களை சில நிமிடங்கள் நின்று மனதில் கொண்டுவந்தேன்.
உயிரியலில் பி.எஸ். மற்றும் எம்.எஸ். பட்டங்கள் கோர்னெல் பல்கலையில். அதைத் தொடர்ந்து ஸ்டேட் யுனிவெர்சிடி ஆஃப் நியு யார்க் காலேஜ் ஆஃப் என்விரன்மென்ட்டல் சயன்ஸ் அன்ட் ஃபாரஸ்ட்ரியில் பிஎச்.டி.. பட்டத்துக்கு எற்ற பதவி, நேஷனல் ஃபாரஸ்ட் சர்வீஸில். அலாஸ்காவில் இருந்து வயோமிங் வரை பல இடங்களில் களப்பணி. கடந்த சில ஆண்டுகளாக அட்லான்ட்டாவில். காட்டுச்செல்வத்தை அளவோடு அனுபவிக்கும் வழிகளைப் பரப்புதல் வேலையின் குறிக்கோள். அந்த அனுபவத்தில் ஆர்பர்-அட்லான்ட்டாவின் கௌரவ ஆலோசகர். இப்படிப்பட்ட பின்னணியில் நான் சந்திக்கும் முதல் பெண்.
வளைந்த வீட்டுப்பாதையில் நான் நடந்துவருவதைக் கவனித்த அவள் கதவைத் திறந்து காத்திருந்தாள். சராசரி உயரம். எப்போதுமே திறந்தவெளியில் அலைந்து திரியும் வேலை என்பதால் பழுப்பேறிய உறுதியான உடல். சூரியவொளியில் நிறம் இழந்த கூந்தலை முடித்துக் கட்டியிருந்தாள்.
“ஹாய்! நீ ஸ்னேஹா பட்டேல்.”
“நானே தான்.”
“நான் மேகன் மெக்ளாஸ்கி.”
“ஹாய் மேகன்!”
“கம் இன்!”
நுழைவிடம் மட்டுமல்ல சமையல் பகுதியும் அதை ஒட்டிய குடும்ப அறையும் சுத்தமாக இருந்தன. அதிக சாமான்கள் இல்லாததால் திறந்தவெளியில் நிற்பது போன்ற பிரமை.
“சாப்பாட்டு மேஜையைப் பயன்படுத்தலாமா?”
மேகன் சம்மதிக்கவே என் பையை அதன் மேல் வைத்தேன்.
“இன்றைய தினம் எப்படி? ஸ்னேஹா!”
“ஒரு சராசரி நாள். உனக்கு?”
“வேலையில் அடுத்த ஆண்டுக்கான ஒரு அறிக்கை. அதை முடித்து சொந்த வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை யோசித்தபோது உன் அழைப்பு வந்தது.”
“அதைக் கேட்க சந்தோஷம்.”
என்னை மிகவும் கவர்ந்தது அவள் ராகமான குரல். ஓய்ந்த பிறகும் அதில் தொனித்த ரீங்காரம் வார்த்தைகள் நிஜமானவை என்ற எண்ணத்தைக் கொடுத்தன.
அவளுடைய கோப்பை எடுத்துப் பிரித்தேன்.
“உன் விண்ணப்பம் எங்களிடம் வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த இடைக்காலத்தில் மாறுதல்கள்?”
“ஊதியத்தில் சிறு உயர்வு. என் பாட்டி இப்போது இல்லை.”
“ஐ’ம் சாரி!”
“நன்றாக வாழ்ந்து சிரமப்படாமல் முடிந்த வாழ்க்கை.”
“நீ சார்ந்திருக்கும் ஆர்பர்-அட்லான்ட்டா.”
“‘கப்ளிங்’ நிறுவனத்தின் நிதியுதவியில் நகரத்தின் பல இடங்களில் மரங்கள் நட்டோம். தென் அட்லான்ட்டாவில் இருக்கும் வீலானி காட்டை அழித்து அதை போலிஸ் பயிற்சிக்களமாக மாற்றுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.”
“அவ்வளவு தானா?”
யோசித்துவிட்டு,
“ஒன்றிரண்டு இருக்கும். ஆனால், உடனே ஞாபகத்துக்கு வரவில்லை.”
“முக்கியமாக, குழந்தையைத் தத்து எடுக்கும் விருப்பம்.”
“ஓ! அது நடக்கப்போகிறதா?”
ஆவலும் சிலிர்ப்பும் கலந்த குரலில் குழந்தையை அப்போதே அவள் கையில் எடுத்ததுபோலச் சொன்னாள்.
இது ஆரம்பக்கட்டம். அவளுக்கு நான் நம்பிக்கை தருவதற்கு இல்லை.
“அப்படித்தான் தோன்றுகிறது” என்றேன் நிதானமான குரலில்.
சந்திப்பு நீளப்போகிறது என்பதை உணர்ந்த அவள்,
“குடிக்க எதாவது…”
“உனக்கு?”
“இது தேநீர் நேரம்.”
“எனக்கும்.”
தயாரித்தபோது அவளாகவே,
“எனக்கு முப்பத்தியாறு முடியப்போகிறது. இந்த வயதில் எத்தனையோ பெண்கள் குழந்தை பெறுகிறார்கள். இயற்கை வளங்களின் அழிவையும் மனித குலத்தின் முடிவையும் தடுக்க மக்கள்தொகையைக் குறைக்க வேண்டும் என்பது என் கொள்கை. அதனால் நான் பெற்றுக்கொள்வதாக இல்லை. ஆனால், அதே சமயம் ஏற்கனவே பிறந்த குழந்தைகளை சுற்றுச்சூழல் அறிவுடன் வளர்க்க வேண்டியதும் அவசியம்.”
அலைபேசியில் ஒரு பக்கத்தைக் காட்டினாள்.
‘யூத் கான்செர்வேஷன் அசோஸியேஷன்’. அவள் வழிகாட்டலுக்கு நன்றி தெரிவித்து அதன் உறுப்பினர்கள் எழுதிய மடல். நடுவில் இளைஞர்களுடன் அவள் நிற்கும் படம்.
அவளுடைய குரலின் இனிமைக்காகவே அவர்கள் அவள் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்திருப்பார்கள்.
தேநீர் குடித்து முடித்ததும் நான் குரலில் கனம் சேர்த்து,
“தென் அமெரிக்காவில் இருந்து எம்.எஸ். பட்டம் வாங்க ஜியார்ஜியா டெக் வந்த ஒரு இளம்பெண். ஸ்காலர்ஷிப் இருந்தாலும் மற்ற வசிக்கும் செலவுகளுக்காக, இங்கே அதே நாட்டில் இருந்து வந்த, வேறொரு இனத்தைச் சேர்ந்த ஒருவன் வீட்டில் தங்கி எடுபிடி வேலை. முதல் செமிஸ்டர் முடிந்தபோது அவள்…”
இன்னொரு பெண்ணின் நிலைமையை உணர்ந்து அவள் முகத்தில் உடனே பரவிய சோகம்.
“ஆரம்பத்தில் குழந்தை இல்லாத முதல் மனைவியின் இடத்தைத் தனக்குத் தருவான் என்ற நம்பிக்கை இருந்திருக்கும் என்பது என் எண்ணம். அது நடக்கப்போவதில்லை என்று தெரிந்தபோது நான்கு மாதம் முடிந்துவிட்டது. கருவைக் கலைக்க அவளுக்கு விருப்பம் இல்லை. அதே சமயம், குழந்தை அவள் கல்விக்குப் பெரிய தடங்கல்.”
மேகன் செய்தியை எப்படி எடுத்துக்கொள்வாள்? தகவலை ஜீரணித்து,
“இப்போது அவள் எங்கே?”
“எங்கள் நிறுவனத்தின் ஆதரவில், இன்னும் சில பெண்களுடன் ஒரு தனி வீட்டில்.”
“குழந்தையின் ஜனனம்?”
“ஜுலை நடுவில். அதற்குமுன் இரண்டாம் செமிஸ்டரை அவள் முடித்துவிடுவாள்.”
எந்தவிதத் தயக்கமும் இல்லாமல்,
“அரசாங்க அலுவலர் என்று எனக்கு ஆறு மாத விடுமுறை நிச்சயம். அதற்குப் பிறகும் எதாவது வழி செய்ய முடியும்.”
இன்னும் நான் முடிவு எடுக்கவில்லை என்பதை உணர்த்த,
“இன்ஷுரன்ஸ் தரமறுக்கும் பிரசவச் செலவுகளை…”
“நான் ஏற்கிறேன்.”
“அவளை நான் சில தடவை சந்தித்துப் பேசினேன். அவளாக இதை என்னிடம் கேட்கவில்லை. என்றாலும், அவள் இன்னும் இரண்டு செமிஸ்டர்களைப் பணக்கஷ்டம் இல்லாமல் படித்துமுடித்து, பட்டம் வாங்க வேண்டும் என்பது என் விருப்பம்.”
“அதற்கு?”
“பதினைந்தாயிரம் டாலர்.”
“அதையும் சந்தோஷமாகத் தருகிறேன். ஆனால் ஒன்று…”
அவளை ஏறிட்டுப் பார்த்தேன்.
“குழந்தைக்கு விலையாக இல்லை. வசதியான ஒரு பெண் ஆதரவற்ற இன்னொருத்திக்குச் செய்யும் உதவி.”
அந்தக் குரலின் விசுவாசம் என்னை உலுக்கியது. அவளைக் கட்டிக்கொள்ள வேண்டும் போல ஒரு உந்துதல். உணர்ச்சிகளும் டாலர்களும் கலந்து என் தொழில். அதனால்,
“இந்த வீட்டின் பேரில் கடன்.”
“எதுவும் இல்லை.”
ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தேன்.
“இது என் பாட்டியின் சொத்து. வேலையில் இருந்து ஓய்வுபெற்றதும் மாடியில் வசித்து கீழ்ப்பகுதியை வாடகைக்கு விட்டு அதன் வருமானத்தில் காலம் தள்ளினாள். ஐந்து ஆண்டுகளுக்கு முன் அது முடியாமல் போகவே, நான் அட்லான்ட்டாவுக்கு இடமாற்றி வந்து அவளைக் கவனித்துக்கொண்டேன். சென்ற ஆண்டு வீட்டை என் பெயருக்கு மாற்றிவிட்டாள்.”
“என் விவரங்களில் அதை சேர்க்கிறேன்.”
தீர்மானித்துவிட்டேன், பீட்ரிஸின் குழந்தைக்கு அவள் பொருத்தமான தாய். ஆனால், கடமைக்காக,
“வீட்டைச் சுற்றிப் பார்க்கலாமா?”
மாடிப்படியில் ஏறவதற்குமுன் மரச்சட்டத்தில் ஒரு கதவு.
“குழந்தை வருவதற்கு முன்பே” என்று சிரித்தேன்.
“என் பாட்டி மாடியிலும் நான் கீழேயும். என்னைப் பார்க்க வரும் நண்பர்களின் குழந்தைகள் மாடிக்குப் போய் அவளுக்குத் தொந்தரவு தரக்கூடாது என்பதற்காக.”
மேகன் மட்டுமல்ல அவள் இல்லமும் அதன் சூழலும் எனக்குப் பிடித்துவிட்டன. விடைபெற்றபோது,
“நான் வேறு எந்த விதத்திலாவது உதவி…”
“இப்போதைக்கு இது போதும். புதிய தகவல் தெரிந்தால் உன்னை அழைப்பேன்.”
அதன் பிரகாரம், சிசுவின் ‘அல்ட்ரா-சௌன்ட்’ பிம்பம், மகப்பேறு மருத்துவரின் அறிக்கை, முக்கியமாக, மருத்தவகத்தின் பக்கம்பக்கமான பில்கள்.
இக்கதையின் நாயகி இருட்டில் நீந்துவது அலுத்துப்போய், பிரகாசமான பரந்த உலகைப் பார்க்கத் தீர்மானித்து கத்திக்கொண்டே வெளியே வந்து இரண்டு நாட்கள் ஆனது.
மேகனை அழைத்தேன். என் எண்ணை அடையாளம் செய்து அலைபேசி, “ஸ்னேஹா!” என்று கூவியிருக்க வேண்டும். அலைபேசியை இயக்கிய அவள் மிகுந்த ஆவலுடன்,
“குழந்தை பிறந்துவிட்டதா?”
“நீ மிக அதிருஷ்டசாலி. பிரசவம் நல்லபடியாக நடந்தது. தாய் கண்ணீர் விட்டாலும் அதைப் பிரிய மறுக்கவில்லை. குழந்தையை வெளியே எடுத்துச்செல்ல மருத்துவகம் அனுமதி கொடுத்ததும் உன்னை அழைக்கிறேன். நீ வந்தால் குழந்தையைப் பெற்றுக்கொள்ளலாம். நான் என் நிறுவனத்தைச் சேர்ந்த அட்டர்னியுடன் நுழைவிடத்தில் உன்னை சந்திக்கிறேன்.”
“இன்று என் வாழ்வில் மிக முக்கியமான நாள்.” பரவசம், எதிர்பார்ப்பு, வருத்தம் கலந்த தொனியில் சொன்னாள். பிறகு கட்டுப்படுத்த முடியாத அழுகை. விசும்பலின் ரீங்காரம் அடங்கியதும், “பெற்றெடுத்த தாய் எனக்கு வழங்கி இருக்கும் விலைமதிப்பற்ற சொத்தை நான் கவனமாகக் காப்பாற்றுவேன்” என்று உருக்கமாகச் சொன்னாள்.
“நானும் அதைத்தான் பலமுறை சொல்லி அவளைச் சமாதானப் படுத்தினேன்.”
நான் முன்பே சொன்னது போல் என் கணிப்பு தவறாகப் போனது கிடையாது.
ஈன்ற தாயையும் வளர்ப்புத் தாயையும் சந்திக்க வைக்க எனக்கு அனுமதி இல்லை என்பது என்னை மிகவும் வருத்தியது.
உணர்ச்சி அடங்க சிறு நேரம் கொடுத்துவிட்டு,
“குழந்தைக்கு அவள் கேடலினா என்ற பெயர் தந்திருக்கிறாள்.”
“நானும் அப்படியே அழைக்கிறேன். இந்த சந்தோஷமான நேரத்தில் இன்னொரு நல்ல சேதி. நான் குழந்தையை ஒண்டியாக வளர்க்க வேண்டாம். இப்போது எனக்குப் பிடித்தமான, இயற்கையைப் பாதுகாக்கும் என் கொள்கைகளுடன் ஒத்துப்போகும் ஒரு துணை. கேடலினாவுக்கும் பொறுப்பான தந்தை. அவனும் குழந்தையைக் கையில் எடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறான். அவனுடன் கிளம்பி வருகிறேன்.”
“பாராட்டுகள்!”
புன்னகையை அடக்க முடியாமல் நான்,
“எனக்கு ஒரு ஊகம்” என்று அவள் ஆவலைக் கிளறிவிட்டு,
“அவனுடைய முதல் மற்றும் கடைசி பெயர் இரண்டும் ‘சு’ என்ற சப்தத்தில் ஆரம்பிக்கும். சரியா?”
