
அதிகாலை மூன்று மணி அலாரத்துக்கு எழுந்த போது சரியாகத் தூங்காததன் விளைவு இருந்தது. கண்களில் எரிச்சல், தலை கனத்தது. குளித்து ஒரு காபி குடித்தால் சரியாகப் போய் விடும். இன்று முக்கியமான நாள். பல் துலக்கும்போது கண்ணாடியில் பார்த்த போது தலையில் அதிகமாக நரை தெரிந்தது. கண்களுக்கு அடியில் சுருக்கங்கள். நாற்பத்து அய்ந்து வயதுக்கு சற்று அதிகம்தான். தொழிலில் பளு அதிகம். பெங்களூரிலிருந்து மும்பய்க்குச் சென்று கொண்டிருக்கிறேன். ஒரு தனியார் முதலீட்டு நிறுவனத்திடம் என்னுடைய தொழிலில் முதலீடு செய்யக் கோரி அவர்களைச் சந்திக்கப் போகிறேன். அவர்கள் முதலீடு செய்தால், நான் தொழிலை இன்னும் விரிவு செய்ய முடியும். எனக்குத் தேவையான முதலீடு சற்றுப் பெரியது – ஐம்பது கோடி. நாங்கள் பாட்டரி செய்கிறோம். சைனாவிலிருந்து செல்கள் இறக்குமதி செய்து, பாட்டரி அசெம்ப்ளி செய்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கம்பெனிகளுக்கு விற்கிறோம். மைசூர் ரோட்டில் பிடதியில் இப்போது இருக்கும் என்னுடைய தொழிற்சாலைக்கு அருகிலேயே விரிவு செய்ய இடம் பார்த்து வைத்திருக்கிறேன். இந்த முதலீடு கிடைத்தால், புதிய சொழிற்சாலை கட்டி, இன்னும் நிறைய பாட்டரி செய்ய முடியும். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இப்போது மிக வேகமாக வளரும் துறை. முதலீடு செய்து விரிவு செய்ய இதுதான் சரியான தருணம்.
ஒரு மாதமாகவே தயார் செய்து கொண்டிருக்கிறேன். மும்பய்க்கு ஏழு மணி விமானத்தில் முன்பதிவு செய்திருந்தேன். முன்சாக்கிரதையாக நாலரை மணிக்கே கிளம்பி விட்டேன். வீட்டிலிருந்து விமான நிலையம் சுமார் ஒரு மணி நேரம்தான் ஆகும், ஆனாலும் இன்றைக்கு வழியில் கார் நின்று போய் இல்லை சாலையை மெட்ரோ வேலை என்று அடைத்து ஏதாவது தாமதம் ஆகி விடக்கூடாது என்று.
மாடி படுக்கை அறையிலிருந்து ஓசை செய்யாமல் என் மனைவியை எழுப்பாமல் எழுந்தேன். பக்கத்து அறையில் மகள் கதவைப் பூட்டிக் கொண்டு தூங்குகிறாள். தினமும் இரவு ஒரு மணிக்குதான் தூங்கப் போவாள். வயது பதினைந்து. சீக்கிரம் தூங்கச் சொன்னால் கேட்க மாட்டாள். தினமும் இதுவே ஒரு சண்டை ஆகும். கீழே வந்தால் என்னுடைய அம்மாவும் ஏற்கெனவே எழுந்திருந்தார்.
“டேய் ராம், உனக்கு காபி வேணும்னு எழுந்து டிகாக் ஷன் போட்டுட்டேன் “ “எதுக்கும்மா நீங்க இவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்கணும் ? உங்களுக்கு வயசு எழுபது ஆச்சு ஞாபகம் இருக்கட்டும். போகிற வழியில ஒரு தர்சனியில காபி குடிக்கலாமே “
“ ஆமாம் உனக்கு காலை நாலரை மணிக்கு பெங்களூருல தர்சனி திறந்து காபி தயாரா வெச்சிருப்பான், குடிடா இத “ என்று ஆவி பறக்கும் காபியை நீட்டினாள்.
என்னுடைய ப்ரபோசலை மறுபடியும் ஒரு முறை புரட்டினேன். ஒவ்வொரு வரியும் மனப்பாடம், நானே எழுதியதுதான். குறிப்புகளைப் பார்த்துக் கொண்டே காபியை அவசரமாக ரசித்துக் குடித்து விட்டு கிளம்பினேன்.
“ அம்மா, போய் வரட்டுமா “
“எல்லாம் நல்ல படியாக நடக்கும். பாம்பே போகிறத்துக்கு முன்ன திருப்பதிக்கு போயிட்டு வான்னு சொன்னேன், நீதான் கேட்க மாட்ட, இப்ப போகாட்டியும் பரவா இல்லை முதலீடு கிடச்சு, புது ஃபாக்டரி ஆரம்பிக்கறத்துக்கு முன்ன ஒருதடவ போயிட்டு வந்துடுப்பா “ என்றாள்.
“ அம்மா, திருப்பதில கூட்டம் இல்லாமல் இருந்தால் போகலாம். அப்படிக் கூட்டத்துல போய் பெருமாளைப் பார்க்கறதைவிட,இங்க வீட்டுப் பக்கத்துல பெருமாள் கோவிலுக்கு போகலாம். எல்லாம் ஒரே பெருமாள்தானே” என்னுடைய வழக்கமான வாதம்தான்.
“ நீ அதுவும் செய்யறதில்லயே “ அம்மா சொல்வதும் சரிதான். நான் வருடத்துக்கு சில முறை போவதுண்டு, அதுவும் என் மனைவியின் வற்புறுத்தலுக்காக, எங்கள் இருவருடைய பிறந்த நாட்களிலும் திருமண நாளிலும்.
“நீங்க வழக்கம்போல எதுவும் வேண்டிக்கலை இல்லயா ? எங்கயாவது முதலீட்டு பணத்துல ஒரு சதவீதம் திருப்பதி உண்டியலுக்கு அப்படின்னு வேண்டுதல் செஞ்சுக்காதீங்க.”
“ ஏன் கூடாது, எல்லாம் அந்தப் பெருமாள் பார்த்துப் போடற பிச்ச “
“அதுக்காக பெருமாள்கிட்ட எனக்கு முதலீடு கிடச்சா, உனக்கு ஒரு பர்சன்ட் கமிஷன்னு பேரமா ?”
“போடா, தெய்வம் மனசு வெச்சா, நீ போதும், போதும்னு சொன்னால்கூட கூரையப் பிச்சுக்கிட்டு கொட்டும். “
அவ்வளவு எளிதாக பணம், முதலீடு வருவதாக இருந்தால், எல்லோரும் சொந்த முயற்சி எதுவும் செய்யாமல், தினமும் கோவிலுக்குப் போய் வரலாம். நான் எத்தனை வருடங்களாக கஷ்டப் பட்டு உழைத்து, உடம்பைக் கெடுத்துக் கொண்டு, எத்தனை அடிபட்டு இப்போது இருக்கும் நிலைக்கு வந்த்திருக்கிறேன், அம்மா எல்லாவற்றையும் பெருமாள் அருள் என்று எளிதாக சொல்லி விடுவாள். நான் பேச்சை வளர்க்காமல் அம்மாவுக்காக பெருமாள் படத்தைக் கும்பிட்டு விட்டுக் கிளம்பினேன்.
என்னுடைய ட்ரைவர் குளித்து விட்டு சுத்தமாக புன்னகையுடன் காத்திருந்தான். வழக்கமாக அவனைப் பற்றி ஏதாவது விசாரிப்பேன். இன்று அதிகம் பேசும் மன நிலையில் இல்லை.
“ குட்மார்னிங் சார், செக் இன் எதுவும் இல்லையா ? “
எறி அமர்ந்து “ இல்ல சேகர், இன்னிக்கே மாலையில வந்திடுவேன், கிளம்பலாம் “ என்றேன்.
எப்படியும் இன்று சாதகமான முடிவு கிடைத்துவிடும் என்ற உள்ளுணர்வின் நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் வெறும் நம்பிக்கையில் சென்றால் போதாது. காரில் லாப்டாப்பைத் திறந்து, இன்னொரு முறை ப்ரபோசலைப் பார்த்தேன். நந்தா லால் நிறைய கேள்விகள் கேட்பான். அவர்கள் என்ன கேள்விகள், குறுக்குக் கேள்விகள் கேட்கக்கூடும் என்று பட்டியலிட ஆரம்பித்தேன். அதற்கு பதில்களையும் கையில் பேப்பரில் எழுதி வைத்துக் கொண்டேன். என்னதான் கம்ப்யூட்டரில் செய்தாலும், பேப்பரில் கையால் எழுதினால் சிந்தனையில் ஒரு தெளிவு வரும், தவிர மனதில் நன்றாகப் படியும்.
அவர்கள் முதலீட்டை எப்படி பயன்படுத்தப் போகிறேன் என்று விவரங்கள் கேட்பார்கள். நான் ஐம்பது கோடி முதலீட்டில் என்ன செய்யலாம் என்று யோசித்து எழுதி வைத்திருக்கிறேன். ஒரு வேளை அவர்கள் முழுவதும் திருப்தி அடைந்து நூறு கோடி வரை கொடுக்கத் தயாராக இருந்தால் என்னசெய்ய முடியும் என்று இன்னொரு திட்டம் தயாராக வைத்திருக்க வேண்டும். இன்னும் நான்கு லைன் அமைத்து ப்ரொடக்சனை விரிவு செய்யலாம். அப்போதே அதற்குக் குறிப்புகள் எழுதினேன். அவர்கள் என்ன கேட்டாலும் தயங்காமல் பதில் சொல்ல வேண்டும். அதற்கு முதலில் எனக்கே முழு நம்பிக்கை இருக்க வேண்டும். அதற்குத்தான் இத்தனை தயாரிப்பு.
அதற்குள் ஹெப்பாள் வந்து விட்டோம், இங்கிருந்து டோல் ரோட்டில் எறினால் இந்த நேரத்தில் விமான நிலையம் சரியாக இருபது நிமிடம் தான்.
என்னுடைய ப்ரபோசலில் ஒரு பகுதி மேலோட்டமாக இருப்பதாகத் தோன்றியது. அது மார்கெட் எவ்வளவு வேகமாக வளரும் என்பதைப் பற்றி. எலக்ட்ரிக் கார்களைவிட எலக்ட்ரிக் பைக் மார்கெட் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. முதலில் அமேசான், ஸ்விக்கி மாதிரி டெலிவரி செய்பவர்கள் உபயோகிக்கும் வாகனங்கள். ஆனால் இப்போது சிறிது மந்தம். தனியார்கள் வாங்க ஆரம்பித்து விட்டார்கள். இந்தியாவின் மத்தியதர குடும்பங்கள் செக்மன்ட் வளருவதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தன. நான் இரண்டு மூன்று சாத்தியங்களை யோசித்து குறிப்புகள் எழுதிக் கொண்டேன். இப்போது ஓரளவு திருப்தியாக இருந்தது.
அதற்குள் விமான நிலையம் அருகே வந்து விட்டேன். டோல் பூத்துக்கு முன்பு இருக்கும் சிக்னலில் நின்றோம். பக்கத்தில் உடுப்பி தர்சனி ஹோட்டல் திறந்திருக்கவில்லை. அம்மா சொன்னது சரிதான். காபி கிடைத்திருக்காது. ஆனால் அம்மா சொன்னது மற்றது எல்லாம் சரி என்று எனக்கு ஒத்துக் கொள்ள முடியாது.
டோல் பூத் தாண்டி விமான நிலையம் செல்லும் ப்ளை ஓவரில் ஏறினோம்.
லாப்டாப்பை மூடி வெளியே பார்த்தேன். வெளி நாடு மாதிரி இப்போது இங்கேயும் சுத்தமாக, அழகாக செய்திருக்கிறார்கள். சீராக அமைக்கப்பட்டிருந்த தோட்டங்கள். நல்ல பசுமை. இயற்கையான அழகாக அமைத்திருந்தார்கள், பழைய காலம் போல புதர்ச் செடிகளை யானை மயில் என்று செயற்கையாக வெட்டி விடவில்லை. கண்களை உறுத்தாத மலர்கள். அடுத்த டெர்மினல் இன்னும் அழகாக பிரம்மாண்டமாக அமைத்திருப்பதாக வீடியோ பார்த்திருந்தேன். அந்தப் பக்கம் நிறைய விளக்குகள் எரிந்து கொண்டிருந்த புதிய டெர்மினல் பார்க்கவே நவீனமாக இருந்தது. இதே மாதிரி நகரம் முழுவதும் அழகாக சுத்தமாக இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.
பயணிகளை இறக்கி விடும் இடத்துக்கு கடைசித் திருப்பத்தில் இருந்தோம். அங்கே சாலையில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்புக்காக வாகனங்களை ஒன்றொன்றாக உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார்கள். மரத்தால் ஆன கேபினில் மணல் மூட்டைகளுக்கு நடுவே கம்பளி தொப்பியில் ஜவான் துப்பாக்கியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு கொட்டாவி விட்டார்.
விமான நிலையம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பெட்டிகளை தள்ளு வண்டியில் இழுத்துக் கொண்டு அவசரத்தில் பயணிகளும், வழி அனுப்ப வந்த செல்பி எடுக்கும் உறவினர்களும், நடுவே சீருடை அணிந்த பணியாளர்களும், காத்துக் கொண்டிருக்கும் வாகன ஓட்டிகளும் எல்லோரும் ஓடிக் கொண்டிருந்தார்கள். எல்லா உணவு கடைகளிலும் கூட்டம். இட்டலியும் தோசையும் இரு நூறு,முன்னூறு என்று விற்றாலும், கூட்டத்துக்குக் குறைவில்லை. எனக்கு அவ்வளவு கொடுப்பதில் விருப்பம் இல்லை. காலையில் சீக்கிரம் எழுந்தது பசித்தாலும், நான் எதையும் சாப்பிடப் போகவில்லை. தேவையானால் இன்னொரு காபி. சற்றுப் பசி இருந்தால்தான் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.
அன்று அவ்வளவாகக் கூட்டம் இல்லை. அதனால் பாதுகாப்புச் சோதனைகள் வேகமாக முடிந்தன. விமானம் தாமதம் இல்லை. காத்திருக்கும் இடத்தில் எல்லோரும் மொபைல் போனில் மூழ்கி இருந்தார்கள். முன்னொரு காலத்தில் ந்யூஸ் பேப்பர் படித்துக் கொண்டிருப்பார்கள். சரியான நேரத்துக்கு பஸ் வந்து விமானத்துக்கு அழைத்துச் சென்றது. விமானத்தில் ஏறி, பணிப்பெண்ணின் புன்னகைக்கு இயந்திரத்தனமாக பதில் புன்னகை செய்து, என்னுடைய இருக்கையில் அமர்ந்தேன். ஜன்னல் ஓரம் இல்லாமல் , கால்களைச் சற்று நீட்டும்படியான வழிப்பாதை பக்கத்து இருக்கை. கைப்பையைக் கண்ணில் படும்படியாக எதிர் வரிசையில் மேலே வைத்தேன். விமானம் கிளம்பியவுடன், மறுபடியும் என்னுடைய ப்ரபோசலை படிக்க வேண்டும். புதிதாக ஏதாவது தோன்றக் கூடும்.
என்னுடைய பக்கத்து இருக்கைகள் இரண்டுமே காலியாக இருந்தன. விமானம் கிளம்பச் சில நிமிடங்கள் வரை. ஒருவர் அவசரமாகக் கடைசியில் ஏறினார். பணிப்பெண் அவருடைய இருக்கை எண்ணைப் பார்த்து என்னுடைய வரிசைக்கு அழைத்து வந்தாள். அவர் ஒரு ஸ்பாரி சூட் அணிந்து கொண்டிருந்தார். கருநீல நிறம். நடுவே வரிசையாக பெரிய பெரிய பட்டன்கள், இள நீல நிறத்தில். இந்த காலத்திலும் சபாரி அணிகிறார்களா என்று பார்த்தேன். வழுக்கைத் தலை, சராசரியை விட சற்றுக் குள்ளமாக இருந்தார். கூலிங் கிலாசை கழட்டி, கைக்குட்டையினால் முகத்தையும் கழுத்துக்குப் பின்னாலும் ஒற்றி எடுத்து, “மன்னிக்க வேண்டும், நீங்கள் உள்ளே செல்ல முடியுமா ?” என்று ஜன்னல் இருக்கையைக் காண்பித்தார்.
“ சாரி, நான் இந்தப் பக்கத்து ஓர இருக்கையைக் வேண்டுமென்று கேட்டு வாங்கி இருக்கிறேன் “ என்று எழுந்து அவருக்கு உள்ளே செல்ல வழி விட்டேன். அவர் முகத்தைச் சுருக்கி, கைப்பையை மேலே வைக்க எம்பினார். சரியாக எட்டவில்லை. நான் அவரிடமிருந்து வாங்கி மேலே வைத்தேன்.
அவர் எனக்கு நன்றி சொல்லி உள்ளே நுழைந்து இருக்கையில் அமர்ந்து என்னைப் பார்த்துப் புன்னகையுடன் கை நீட்டினார். டால்கம் பவுடர் வாசனை பலமாக வந்தது. பதிலுக்கு நான் கை நீட்டினேன். வலுவாக உறுதியாக குலுக்கினார். விமானம் கிளம்பத் தயாரானது. எஞ்சின் ஒலி உயர்ந்தது.
அவர் “ நான் “ என்று ஆரம்பித்து அறிமுகம் செய்யத் ஆரம்பித்தார். அப்போதுதான் காப்டன் அறிவிப்பைத் தொடங்கினார். கூடவே விமான எஞ்சினின் ஒலி. அவருடைய பெயர் சரியாகக் கேட்கவில்லை. அன்றைக்கு எனக்கு உரையாடலில் அவ்வளவாக விருப்பம் இல்லை.
அதனால் “ அப்படியா, தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, நான் ராம கிருஷ்ணன் “ என்று சொல்லி முடித்து விடலாம் என்று பார்த்தேன்.
அவர் விடுவதாக இல்லை. அறிவிப்பு முடிந்ததும் தொடர்ந்தார்.
“ உங்களை ராம்கி என்று கூப்பிடட்டுமா ? ராம்கி, உங்க வெள்ளை ஷர்ட் நல்ல உயர்ந்த ரக காட்டன் போல, கச்சிதமாக பொருந்தி இருக்கிறது “ என்றார்.
“நன்றி, இது தேடி வாங்கியது,பிரத்தியாகமானது, என்னை ராம் என்றுதான் அழைப்பது “ என்று புன்னகைத்தேன்.
“ அப்படியா, உங்களுக்குச் சரியான ஒரு கடை பாம்பேயில் இருக்கிறது. எல்லாமே டிசைனர் ஷர்டுதான். விலை அதிகம், ஆனால் அந்த மாதிரி வேறு எங்கயுமே கிடைக்காது. நம்ம நண்பர்தான் நடத்துகிறார், சொல்லட்டுமா ? “ என்று ஒரு பார்ஸி பெயரைச் சொன்னார். அவர் நிறைய பாலிவுட் படங்களுக்கு உடை அமைப்பவராம்.
“ நன்றி, எனக்கு நேரம் இல்லை, இன்றே திரும்ப வேண்டும், அடுத்த முறை பார்க்கிறேன் “ என்று என்னுடைய லாப்டாப்பைத் திறந்தேன். இந்த புதிய முதலீடு எப்போது லாபமாகும் என்று சரியாகப் பார்க்க வேண்டும். அவர் சொன்ன கடை பெயரை நினைவில் வைத்துக் கொண்டேன். அடுத்த முறை பார்க்கலாம்.
“ சாருக்கு என்ன ஐ டி வேலையா ? “, புத்திசாலித்தனமாகக் கண்டு பிடித்தது போல முக பாவத்துடன் என்னையும் கம்ப்யூட்டரையும் பார்த்தார்.
“ இல்லை, நான் ஐ டி துறை இல்லை “ என்று புன்னகைத்தேன். இது என்னை நிறைய பேர் கேட்கும் கேள்வி.
“அப்ப நீங்க என்ன பிசினஸ் செய்யறீங்களா ?”
“ஆமாம், ஒரு பிசினஸ் விஷயமாக மும்பய் போய்க் கொண்டிருக்கிறேன் “ என்றேன்.
“முக்கியமான மீட்டிங்கா, ராத்திரி எல்லாம் சரியாகத் தூங்கவில்லையே “ என்றார் என் முகத்தைப் பார்த்தபடி.
“ ஆமாம், என்னுடைய தொழிற்சாலையை விரிவு படுத்த இருக்கிறேன். அதற்கு முதலீடு செய்ய ஒரு தனியார் நிறுவனம் தயாராக இருக்கிறார்கள். அவர்களைச் சந்திக்கத்தான் இன்று பயணம் “
“ ஓ, அப்படியா, எல்லாம் நல்ல படியாக கிடைக்கும், வாழ்த்துகள் “
“ நன்றி” என்று கவனத்தை என்னுடைய கம்ப்யூட்டருக்குத் திருப்பினேன். நான் எக்ஸல் ஷீட்டில் ஃபார்முலா எதுவும் தப்பு இல்லாமல் இருக்கிறதா என்று சரி பார்த்தேன். நந்தா லால் கூட பரமேஸ்வர அய்யர் இருப்பார். பாலக்காட்டுக் காரர், ஒரு கணத்தில் நான் ஒரு மாதம் போட்ட கணக்கில் தப்பு கண்டு பிடித்து விடுவார்.
நேர்த்தியான உடையுடன் மிக மெலிதான பெல்ட் அணிந்த விமான பணிப்பெண் வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்தாள். உணவு மணம் வந்தது. சற்று பசிப்பது போல இருந்தது.
“ காலையில சாப்பிட்டீங்களா ? இவங்க கிட்ட ரவா உப்புமா நல்லா இருக்கும், வென்னீர் ஊற்றினால் ஏழு நிமிடத்தில் மோறு மொறுன்னு முந்திரி, தாளித்துக் கொட்டிய கறிவேப்பிலையுடன் ஆவி பறக்கும் உப்புமா ரெடி. நான் வாங்கப் போகிறேன், உங்களுக்கும் வாங்கட்டுமா ?”
“ இல்லை நன்றி, நான் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டேன்”
அவர் வென்னீர் ஊற்றிய உப்புமா டப்பாவை வாங்கிக் கொண்டு கைக் கடிகாரத்தை பார்த்தபடி ஏழு நிமிடங்களுக்குக் காத்துக் கொண்டிருந்தார்.
“எவ்வளவு முதலீடூ தேவை ?”
எனக்கு ஏனோ பதில் சொல்ல அவ்வளவாக விருப்பம் இல்லை. என்னுடைய பண விவகாரங்களை பக்கத்து இருக்கை ஆசாமிக்கு எதற்குச் சொல்ல வேண்டும். அவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.
“பத்து கோடி இருக்குமா ?”
என்னை என்ன இவ்வளவு குறைவாக நினைத்து விட்டார், “ இல்லை ,சுமார் ஐம்பது கோடி “ என்று பெருமையாகச் சொன்னேன்.
“ பெரிய தொகைதான், மும்பயில் எந்தக் கம்பெனி சொன்னீர்கள், மறந்து விட்டேன் “
நான் மும்பய்க் கம்பெனி பெயரை இது வரை சொல்லி இருக்கவில்லை. அந்த ஆள் குடைவது எனக்குப் பிடிக்கவில்லை.
சுற்றிலும் பார்த்து விட்டு “ பிறகு பேசலாமே “ என்று கம்ப்யூட்டருக்குத் திரும்பினேன்.
ஒரு நிமிடம் ஆகி இருக்கும். அவருடைய உப்புமா நல்ல மணமாக இருந்தது. ஓரக்கண்ணால் முந்திரி இருக்கிறதா என்று பார்த்தேன். அவர் பணிப்பெண்ணை அழைத்து சர்க்கரைப் பொட்டலம் கேட்டார்.
“ எனக்கு இப்ப கூட உப்புமாவுக்கு சர்க்கரைதான் வேண்டும் “ என்று புன்னகைத்தார்.
“சாப்பிடுங்க, நல்லா இருக்கும் “ என்று நானும் புன்னகைத்தேன். எனக்கும் சிறுவயதில் உப்புமாவுடன் சாப்பிட்ட சர்க்கரை இனித்தது.
“ இன்றைக்கே திரும்புவதாகச் சொன்னீர்களே ? ஒரு மீட்டிங்தானா ?”
“ஆமாம் “
“ எதற்கும் இரண்டு மூன்று பேரிடம் முயற்சி செய்வது நல்லது. நந்தாலால் கறாரான ஆசாமி, அவ்வளவு எளிதில் ஒத்துக் கொள்ள மாட்டான் “
நான் நிமிர்ந்தேன்.
“ ஆமாம், அதற்குத்தான் என்னுடைய ப்ரபோசலை மிகக் கவனமாகத் தயாரித்திருக்கிறேன். “
சொன்ன பிறகுதான், இந்த ஆளுக்கு நந்தாலால் என்று எப்படித் தெரிந்தது, ஒரு வேளை நான் அறியாமலேயே சொன்னேனா இல்லை அவர் என்னுடைய குறிப்புகளைப் பார்த்தாரா, தவிர எதற்கு இரண்டு மூன்று பார்க்கச் சொல்லுகிறார் என்று சந்தேகம் வந்தது. நடு இருக்கையில் வைத்திருந்த பேப்பர்களை எடுத்து கையில் வைத்துக் கொண்டேன். என்னுடைய ப்ரபோசல் முழுமையாகத்தான் இருக்கிறது. நந்தலால் ஒப்புக் கொள்ளுவான்.
நான் “ இத்தனை வருடம் பிசினஸ் செய்து கொண்டிருக்கிறேன், நந்தா லாலை நன்றாகத் தெரியும், இருந்தாலும் அடுத்த வாரம் மறு படி வேறு ஒருவரைச் சந்திக்க இருக்கிறேன், உங்களுக்கு வேறு யாராவது பழக்கம் உண்டா “ என்று கேட்டேன்.
உண்மையில் அப்படி யாரையும் சந்திக்கும் திட்டம் இது வரை இல்லை. குறிப்பு எழுதி கொண்டேன். எதற்கும் இன்னும் இரண்டு பேரைச் சந்திக்க வேண்டும்.
“ நல்லதுதான், ஒரே முதலீட்டை நம்பி இருக்க முடியாது, இன்றைக்கு என்ன ஆயிற்று என்று சொல்லுங்கள், தேவைப்பட்டால், இன்னொன்று பார்க்கலாம், என்னுடைய நீண்ட கால நண்பன் தான்“ என்று இன்னொரு பெயரை உதிர்த்தார். நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் எனக்கு பழக்கம் இல்லை, எழுதிக் கொண்டேன். ஒரு வேளை அவருக்கு அதில் ஏதாவது கமிஷன் கிடைக்குமோ என்னவோ என்ற ஒரு சந்தேகம் இருந்தது.
இரண்டு நிமிடம் ஆகி இருக்கும் அவர் விடவில்லை.
“ எலக்ட் ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசாங்கம் நிறைய சலுகைகள் கொடுக்கிறார்களே , அவை எல்லாம் கிடைத்திருக்கிறதா ? “
நான் என்னுடைய பிஸினஸ் எலக்ட்ரிக் வாகனம் தொடர்பானது என்று அவரிடம் சொல்லி இருக்கவில்லை. அவர் நடு இருக்கையில் வைத்திருந்த என்னுடைய ப்ரபோசலைப் பார்த்திருக்கிறார்.
“ எல்லாம் தெரியும், வாங்கி வைத்திருக்கிறேன் “ என்று சற்று கடுமையாகச் சொன்னேன்.
“ இல்லை, வழக்கமாக சப்சிடி தருவதைத் தவிர, டிபார்ட்மென்ட் ஆஃப் எலெக்ட் ரானிக்ஸ் ஒரு புதிய திட்டம் அறிவித்திருக்கிறார்கள். இந்தியாவிலேயே டிசைன் மற்றும் உற்பத்தி செய்தால், கூடுதலாக நிறைய சலுகைகள் கொடுக்கிறார்கள், அதையும் வாங்கி விட்டீர்களா ? “ என்றார்.
இவர் சொன்ன திட்டம் பற்றி எனக்குத் தெரியாது. எனக்கு அவரிடம் கவனம் வந்தது. இவர் சும்மா தொந்தரவு செய்யவில்லை, எனக்கு வலிய வந்து உதவி செய்ய நினைக்கிறார்.
“ என்ன திட்டம் சொன்னீர்கள் “ என்றேன் மரியாதையுடன்.
“பார்த்தீர்களா, இந்தத் திட்டம் பொதுவாக வெளியே அறிவிக்கவில்லை. பட்ஜெட்டில் ஒரு மூலையில் இருந்தது. நீங்கள் என்னுடன் டெல்லிக்கு வாருங்கள், நான் டிபார்ட்மென்ட் செக்ரடரியுடன் மீட்டிங் ஏற்பாடு செய்கிறேன். ஒரே வாரத்தில் உங்களுக்கு எல்லாம் கிடைத்து விடும் – சுமார் இருபது சதவீதம் முதலீடு வட்டி இல்லாமல் அரசாங்கமே கடன் கொடுக்கிறார்கள் “
நான் மனக்கணக்கில் இருந்தேன் , இருபது சதவீதம் என்றால் , இருபது கோடி வரை. அதற்கு வட்டி இல்லை என்றால், அய்ந்து வருடத்தில் எவ்வளவு லாபம் என்று.
“ நீங்கள் நந்தா லாலிடம் எண்பது வாங்குங்கள், மீதி இருபது கோடி நான் டெல்லியிலிருந்து வாங்கித் தருகிறேன் “ என்றார்.
எனக்கு பரபரப்பாக இருந்தது. இப்படி ஒரு திட்டம் இருப்பதே தெரியாதே என்று என்னிடம் இருந்த பட்ஜட் ஆவணத்தை ஈ மெயிலில் தேடினேன். பட்ஜட் திட்டங்களில் ஒரு ஓரத்தில் சிறிய எழுத்துக்களில் அரசாங்க அறிவிப்பு ஒன்று சிக்கியது. குறித்துக் கொண்டேன்.
“மிக்க நன்றி, இதையும் பார்க்கிறேன் “
“பார்ப்பது என்ன, இன்றைக்கே என்னுடன் டெல்லி வாருங்கள், நாளை காலை சின்ஹா வுடன் ப்ரேக்ஃபாஸ்ட் மீட்டிங் போட்டு விடலாம் “
“அவ்வளவு எளிதாக முடியுமா?”
கேள்வியுடன் அடுத்தது அந்தப் பணத்தில் இவர் என்ன கமிஷன் கேட்பார் என்று மனதில் ஓடியது. அது கமிஷனா இல்லை லஞ்சமா, டிபார்ட்மென்ட் செக்ரடரிக்கும் பங்கு இருக்கலாம்.
“ முடியும், ஆனால் நீங்கள் சைனாவிலிருந்து செல்களை இறக்குமதி செய்தால் , இந்த சலுகை கிடைக்காது “
நான் சைனாவிலிருந்து செல்களை இறக்குமதி செய்து இங்கே அசெம்ப்ளிதான் செய்து கொண்டிருக்கிறேன். இவருக்கு எப்படித் தெரிந்தது ? நான் கம்ப்யூட்டரை முழுவதாக என் பக்கம் திருப்பினேன்.
என் முகத்தைப் பார்த்து புன்னகைத்தபடி “ கவலைப் பட வேண்டாம், மெட்ராஸ் அய் அய் டியில் பாட்டரி செல் தயாரிக்கும் டெக்னாலஜி பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். அவர்கள் ஒரு ஸ்டார்டப்புக்கு தொழில் நுட்ப பரிமாற்றம் செய்திருக்கிறார்கள். அவர்களுடன் பார்ட்னர்ஷிப் வைத்துக் கொண்டு, நாம் சலுகை வாங்கலாம் “
“ எந்த ஸ்டார்டப் சொல்லுங்கள் ?” அவர் சொன்னார்.
என்னுடைய கையில் இருந்த பேப்பர் முழுவதும் புதிய குறிப்புகள் நிறைந்தன.
விமானம் இறங்கத் தொடங்கும் நேரம் ஆகி விட்டது. நான் கம்ப்யூட்டரை மூடினேன்.
“உங்கள் மகள் எப்படி இருக்கிறாள் ?”
நான் இதை எதிர்பார்க்கவில்லை, எப்படித் தெரிந்தது ? அதுவும் மகள் என்று.
எல்லா பதின்ம வயது பெண்களைப் போல என்னுடைய மகளும் நிறையத் தொந்தரவு செய்கிறாள், தினமும் வாக்கு வாதம் , சண்டை, பல சமயம் சின்னதாக ஆரம்பித்து பேச்சு எல்லை மீறுகிறது.அதுவும் என்னுடைய மனைவியுடன் அதிகம்.
“ எல்லாம் அந்த வயசுப் பெண்களைப் போலதான் “ என்று மையமாகச் சொன்னேன்.
“குடும்பமாக ஒரு முறை குல தெய்வம் கோயிலுக்குப் போய் வாருங்கள், எல்லாம் சரியாகும் “ என்றார்.
“ ஓ, நிச்சயமாக “ என்றேன்.
காகிதக் குறிப்புகளை மடித்து உள்ளே வைப்பதற்கு முன் ஒரு முறை பார்த்தேன். பெரும்பாலும் நான் ஏற்கெனவே யோசித்து வைத்ததுதான், என்னுடைய பக்கத்து இருக்கை பெரியவர் சில புதிய யோசனைகளை கொடுத்திருந்தாலும், அவற்றை செய்து முடிப்பது அவ்வளவு எளிதல்ல. சிறு வயதில் அப்பா இறந்து போனபோது அனுபவம் இல்லாமலேயே தொழிற்சாலையை எடுத்துக் கொண்டு, அடி பட்டு இப்போது இருக்கும் நிலைக்கு வந்திருக்கிறேன். எல்லாம் என்னுடைய உழைப்பு. நான் தான் யோசித்து முடிவு எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் ஒருவேளை இவருடைய உதவியைக் கேட்கலாம். காலையில் இருந்ததை விட இன்னும் உற்சாகமாக இருந்தேன். கம்ப்யூட்டரை மடித்து, காகிதங்களுடன் கைப் பையில் வைத்தேன். விமானம் இறங்கியது.
வெளியே வரும் வாயில் வரை அவர் கூடவே வந்து கொண்டிருந்தார். அவருடைய பெயரைக் கூடத் தெரிந்து கொள்ளவில்லை, மொபைல் எண்ணையும் வாங்கிக் கொள்ள வேண்டும்.
“சார், மிக்க நன்றி, நீங்கள் சொன்னது எல்லாம் உபயோகமாக இருந்தது “ என்றேன்.
“ எனக்கும் மிக்க மகிழ்ச்சி, ஏதோ என்னால் முடிந்தது. “
“உங்களுடைய மொபைல் நம்பர் சொல்லுகிறீர்களா . அப்படியே பெயரும் சரியான ஸ்பெல்லிங் சொல்லுங்கள் , நான் குறித்துக் கொள்ள வேண்டும் “ இது வரை பெயரைக் கூட கேட்டுக் கொள்ளவில்லை.
“முதல்ல இந்தாங்க “ என்றபடி கைப் பையிலிருந்து ஏதோ எடுத்தார்.
“திருப்பதி பிரசாதம், பெருமாள் எல்லாம் பார்த்துப்பாரு “
பேப்பர் பையில் ஒரு துண்டு லட்டு நீட்டினார்.
எனக்கு என்ன தோன்றியதோ, தன்னிச்சையாக “இல்ல சார், நன்றி,எனக்கு டையபடீஸ் உண்டு, இனிப்பு சாப்பிடுவதில்லை “
எனக்கு உண்மையில் அப்படி எதுவும் இல்லை.
“சரி, உங்க விருப்பம் “ என்றார், முகம் சற்று வாடிய மாதிரி இருந்தது.
“இதோ என்னுடைய விசிட்டிங் கார்ட், இதுல மொபைல் நம்பரும் இருக்குது, எப்ப வேணுமானாலும் கூப்பிடுங்க “
“ மிக்க நன்றி “ என்று அந்தக் கார்டை வாங்கிக் கொண்டேன்.
“மன்னிக்க வேண்டும், என் கிட்ட கார்டு எதுவும் இல்லை” என்று ஒரு பெரிய செயற்கைப் புன்னகை செய்து விட்டு நகர்ந்தேன்.
அவர் மறுபடியும் “ ராம், என்ன வேணும்னாலும் தயங்காம கேளுங்க “ என்று புன்னகைத்து விடை கொடுத்தார்.
அவர் கொடுத்த கார்டைப் பார்க்கவில்லை. அவர் முன்னே நகர்ந்தவுடன் அதை அருகிலிருந்த குப்பைத்தொட்டியில் போட்டேன்.
ஒருவேளை அவர் பெயர் வெங்கடேஷ், ஸ்ரீ நிவாஸ் இல்லை பாலாஜி என்று ஏதாவது இருந்து விடக்கூடும் என்ற பயமாகவும் இருக்கலாம்.
