Site icon சொல்வனம் | இதழ் 318 | 12 மே 2024

ஒரு வார்த்தை.. நம் மொழியில்..

உங்களுக்கும் எங்களுக்கும்
தொடர்ந்து நடக்கிறது
பேச்சு வார்த்தை
எங்கள் பக்கத்திலிருந்து
கோரிக்கைகளாகவும்
உங்கள் பக்கத்திலிருந்து
அறிக்கைகளாகவும்.
நாம் ஒரே மொழியைதாம்
உபயோகிப்பதாக நினைக்கிறோம்.
ஆனால் உங்கள் வாக்கியங்கள்
ஒன்றன் மேல் ஒன்றாக மடிந்து
காரண காரியங்களாகத் திரிந்து
எங்கள் புரிதலுக்கு அப்பாலானதாகவே
என்றைக்கும் இருக்கிறது.
இன்றைய கணமும்
உண்ணும் உணவும்
கேள்விக்குறிகளாக நிற்கையில்
எங்கோ நிகழ்ந்த நிலநடுக்கமும்
பேரழிவைக் கொடுத்த நிலச்சரிவும்
எம் சிந்தைக்கு எட்டாமல்
கடந்து செல்கிறோம்
இரக்கமற்றவர்களாய்.

உங்களுக்கு உதிக்கும் பகலவனே
எங்களுக்கும் உதிக்கிறான்
ஆனால் ஒளிக்காக
ஏங்கி நிற்கிறோம்.
கரும்பு வளர்க்கவும்
கம்பு, சோளம் விதைக்கவும்
நெற்கதிர்களை கொத்த வரும்
மைனா, கிளிகளை விரட்டவும்
தெரிந்த எங்களுக்கு
நாகப் பாம்பினைப் போல
வளைந்து நெளிந்து
எங்களது விளைநிலங்களை
கபளீகரம் செய்யவிருக்கும்
எட்டு வழிச் சாலையால்
விளையவிருக்கும் நலன்கள்
புரியவில்லை.
இந்த அறிவிலிகள்
தேடிக் கொண்டேயிருக்கிறோம்
நம் மொழியில்
ஒரு வார்த்தையை..
கண்ணீரைக் கண்ணீர் என
உங்களுக்குப் புரிய வைப்பதற்காக.

[படம் உதவி: நித்தி ஆனந்த்]

Exit mobile version