Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

வெண்முரசு வரிசையில் – பன்னிரு படைக்களம்: ஒரு பார்வை

panirupadai_2

ஜெயமோகனின் மஹாபாரதப் பயணம் பன்னிரு படைக்களத்தில் தொடர்கிறது  (இந்த மதிப்பீட்டை எழுதி முடிப்பதற்குள் இதற்கு அடுத்த நாவல், ‘சொல்வளர்க்காடு’, இதுவும் எழுதி முடிக்கப்பட்டு விட்டது). இதுவரை  வந்த அனைத்து நாவல்களையும் பார்க்க, இந்த நாவலிலேயே ஜெயமோகன் மஹாபாரதத்தை தொடராக எழுதுவதன் நோக்கம் துல்லியமாகத் துலங்குகிறது என்று சொல்லலாம். இதுவரை வந்த நாவல்கள் அனைத்தும் சில இடங்களை விரித்தெடுத்தன, சில இடைவெளிகளை அபாரமான கற்பனைகளால் நிரப்பின, கவித்துவமான மொழியாலும் புதுப்புது சொல்லாக்கங்களாலும் உவகையூட்டின. ஆனால் பன்னிரு படைக்களமென்னும் இந்த நாவலில், ஜெயமோகன்  எதை அடிப்படையாக வைத்து இதை எழுதத் தொடங்கினாரோ அந்த நோக்கத்தை நோக்கி ஒரு தீர்மானகரமான திரும்புதலை நிகழ்த்துகிறார் என்றே சொல்லவேண்டும்.
இந்த நாவல், ஜராசந்தன் கதையில் துவங்குகிறது. சொல்லப் போனால் ஜராசந்தனின் ஆளுமையில் உள்ள இருமைக்கு ஒரு பீடிகையாக ரம்ப கரம்பர் கதையுடனும், துரியோதனனின்  வீழ்ச்சியை உருவகப்படுத்தும் விதமாக, தாயுடனான ஈர்ப்பும் முரணும் பகையும், தவிர்க்கவியலாத அழிவுப்பாதையை  நோக்கிய பயணமும் கொண்ட ரக்தபீஜன் கதையுடனும்  தொடங்குகிறது. பௌண்டரிக வாசுதேவன் வதம், ஜராஸந்த வதம், சிசுபால வதம் போன்ற களங்கள் வழியாக இறுதி உச்சமாக, அஸ்தினபுரியில் நிகழும் சூதாட்டப் படைக்களத்தில் பாண்டவர்களின் தோல்வியுடனும் பாஞ்சாலியின் வஸ்திராபரணத்துடனும் முடிகிறது. இடையில் நிச்சயமாக, ராஜ சூய யாகமும் நிகழ்கிறது.
இப்படி ஏராளமான சம்பவங்களும் மூலத்துக்கு இன்னும் துலக்கம் சேர்க்கும் கிளைக்கதைகளும் உருவகக் கதைகளுமாக ஒன்றுக்கும் வேறுபட்ட பல திரிகள் இருந்தாலும் பன்னிரு படைக்களத்தில் முக்கியமாக ஜெயமோகன் காட்டுவது இதுதான் என்று சொல்லலாம்:  மண்ணாசை, தாயாதிக் காய்ச்சல் மற்றும் தனிமனித அறம் சம்பந்தப்பட்ட சிக்கலான கேள்விகளே மகாபாரதத்தின் அடிப்படை என்பதிலிருந்து வேறுபட்டு, மிக விரிவான தத்துவப் பின்னணி கொண்ட  பல்வேறு சமூகங்களுக்கிடையே நிகழும் மேலாதிக்கத்துக்கான போட்டி, பல்வேறு வாழ்க்கை நோக்குகளின்  பூசல் என்று நிலைநாட்டுவது வெண்முரசு. இவற்றை ஒவ்வொன்றாகக் காணலாம் எனினும் முதலில் ஒன்று சொல்ல வேண்டும்- ஒவ்வொரு வாழ்க்கை நோக்குக்கும் பிரதிநிதியாக பாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார் ஜெயமோகன்.
முதலில் ஜராசந்தனுக்கு அவர் அளித்திருக்கும் நாக, அசுர மற்றும் அரக்க பின்னணி. தொல்வேதம் எனும் நாகவேதத்தை மீண்டும் பாரதத்தில் நிலைநாட்ட வந்திருப்பவனாக தன்னை எண்ணிக்கொண்டு, அன்றைய காலகட்டத்தில் கருத்து தளத்தில் நிலைகொண்டிருக்கும் நால்வேதத்தை எதிர்ப்பவனாகவும் அரசியல் களத்தில் நிலை பெற்றிருக்கும் க்ஷத்ரிய மேலாதிக்கத்தை தகர்க்க முயற்சிப்பவனாகவும், அதற்காகவே நூறு க்ஷத்ரிய அரசர்களை வென்று அவர்களை பலி கொடுத்து நாகவேதத்தின் அடிப்படையிலான ஒரு யாகத்தை செய்பவனாகவும் அவனை படைத்திருக்கிறார் ஜெயமோகன்.
அடுத்து, சிசுபாலன்.  சிசுபாலன் அன்று நிலை பெற்றிருந்த க்ஷத்ரிய மேலாதிக்கத்தைப் பாதுகாக்கவும், அதற்கு சவாலாக எழுந்து வரக்கூடிய யாதவ குடிகளுக்கு, குறிப்பாக கிருஷ்ணனின் வளர்ச்சிக்கு எதிரானவனாகவும் கட்டமைக்கப்படுகிறான்.
மூன்றாவதாகவும் மிக முக்கியமாகவும்  கிருஷ்ணன். வெண்முரசுத் தொடரில் இந்த நாவலுக்கு முன் கிருஷ்ணன், துவாரகையை அமைப்பது குறித்து பேசும் ஒரு இடத்தைத் தவிர, தன்  வாழ்நாள் குறிக்கோளையோ, தன்னைப் பற்றியோ நேரடியாக எதுவும் பேசுவதே இல்லை. பிறர் அவனைப் பற்றி பேசுவதைக் கொண்டே அவனது பாத்திரம் எழுப்பப்பட்டிருந்தது. பன்னிரு படைக்களத்தில்தான் அவன் தன் வாழ்நாள் குறிக்கோளை, புதியதொரு தத்துவத்தின் அடிப்படையில் பாரத சமூகத்தை அமைப்பது குறித்து, நேரடியாகப் பேசுகிறான். இருந்து மறைந்த தொல்வேதமெனும் நாகவேதம் மீண்டும் உயிர்த்தெழுவதைத் தடுப்பவனாகவும், நிலைபெற்றிருக்கும் நால்வேத மேலாதிக்கத்தை தகர்த்து வேதாந்தத்தின் பார்வையை நிலைநாட்டுபவனாகவும் அவனது பாத்திரம் கட்டப்படுகிறது. இவற்றை ஜராசந்தனுடனான வாதத்திலும் ராஜசூய யாகத்தின்போது சிசுபாலனின் கேள்விகளுக்கு பதில் உரைக்கும் போதும் கிருஷ்ணன் விளக்கமாகக் கூறுகிறான்.

  நான் அனைத்தையும் ஒளிகொள்ளச் செய்யும் சாந்தீபனி குருகுலத்தின் மாணவன். வேதமுடிவே மெய்மை என்றுரைக்கும் கொள்கை கொண்டவன். வேட்டும் வென்றும் கொண்டு எவரும் நிறையமுடியாதென்றும், அறிந்தும் ஆகியும் அவிந்துமே அமையமுடியும் என்றும் சொல்பவன். அழியாத வேதமுடிவெனும் மெய்ப்பொருளை இங்கும் நிலைநிறுத்தவே வந்தேன்என்றார்.
 மேழிபிடிப்பது வேள்வி. ஆழிகொண்டு கலம் வனைவதும் வேள்வியே. ஆபுரப்பது வேள்வி. மீன்பிடிப்பதும் வேள்வியே. செயலென்று தன்னை முழுதுணரும் அழிவிலா வேள்வியால் இனி இப்புவி தழைக்கட்டும். அனைவருக்குமென சமைக்கப்படும் அன்னமெல்லாம் வேள்விமிச்சமேவேள்வியென ஆற்றப்படும் செயல்களன்றி பிறவற்றால் சிலந்திவலையில் சிறகுள்ள பூச்சிகள் என சிக்கிக்கொண்டிருக்கின்றனர் மானுடர்.  எனவே வேள்வி நிகழ்க! நிகழ்வனவெல்லாம் வேள்வியென்றே ஆகுக!”/ 

 இதுவே கிருஷ்ணனின் பிரகடனம். இதை அண்மைக் காலத்தில் ஜெயமோகன்  நிகழ்த்திய கீதை பேருரைகளோடும்  ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
இந்தப் பார்வையே பன்னிரு படைக்களத்தின் மையமாகவும்,   மிக சர்ச்சைக்குரிய பகுதியாகவும் விளங்குகிறது. இந்தப் பார்வைக்கான அடிப்படை பாரதத்தில் உண்டா என்பது இயல்பான கேள்வி. ஜெயமோகன் பாரதத்தின் மௌனமான பகுதிகளைத்  தன் விருப்பம் போல், தான் நம்பும் வரலாற்றுப் பார்வையின் அடிப்படையில், கற்பனையைக் கொண்டு இட்டு நிரப்புகிறார் என்ற குற்றச்சாட்டு வலுவாக எழுவதற்கு வாய்ப்புள்ளது. அதற்கு அளிக்கப்படும் விடையாக, இது ஒரு புனைவு என்றும் இதைச் செய்வதற்கான சுதந்திரம் தனக்கு உண்டு என்றும் ஒரு புனைவில் பேசப்படும் விஷயங்களின் நம்பகத்தன்மைக்கு ஆராய்ச்சி செய்து கண்டடையப்பட்ட வரலாற்று உண்மைகள் அவசியமில்லை, அவற்றுக்கான மெல்லிய முகாந்திரங்கள் இருந்தாலே போதும் என்றும் ஜெயமோகன் சொல்லக்கூடும். அப்படிச் சொல்லியிருமிருக்கிறார். ஆனால் இங்குள்ள பிரச்னை, வெண்முரசு இதுவரை மறைக்கப்பட்ட ஒரு மாற்று வரலாற்றையும் பண்பாட்டையும் வெளிப்படுத்துகிறது என்று பல இடங்களில், பல்வேறு சமயங்களில் அவர் கூறுவதுதான். மாற்று வரலாறு, பண்பாடு ஆகியவற்றை முன் வைப்பது என்றால் அவற்றுக்கான ஆதாரங்கள் கேட்பது தவிர்க்கவியலாததாகிறது. எனினும், சந்தேகத்தின் பலனை ஆசிரியருக்கு அளித்துவிட்டு, சர்ச்சைக்குரிய இந்தப் புள்ளிகள், நாவலில் உள்ளார்ந்த தர்க்கத்துடன் புனையப்பட்டுள்ளதா என்று பார்க்கலாம். அதாவது, இதில் பேசப்படும் விஷயங்களுக்கு ஆதாரமாக இருக்கக்கூடிய புறத்தகவல்கள் பற்றி கேள்வி எதுவும் எழுப்பாமல், புனைவினுள் காணப்படும் அகத்தகவல்களும் அவற்றுக்கிடையே உள்ள உணர்வுத் தொடர்புகளும் திருப்தியளிக்கும் வகையில் ஒன்றுகூடி மேற்கண்ட புள்ளிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் இணைகிறதா என்று பார்க்கலாம்.  அப்படிப் பார்த்தாலும், அது திருப்திகரமாக வரவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.
பன்னிரு படைக்களத்தின் கதைப்படி சிசுபாலனும் ஜராசந்தனும் நெருங்கிய  நண்பர்களாகக் காட்டப்படுகிறார்கள். ஜராசந்தன் மரணத்துக்காக கிருஷ்ணனைப்  பழிவாங்கவும் பாண்டவர்களின் இந்திரப்ரஸ்தத்தின் மீது படையெடுக்க பிற க்ஷத்ரிய மன்னர்களின் உதவி கேட்பவனாகவும் சிசுபாலன் சித்தரிக்கப்படுகிறான். இங்கு எழும் முக்கியமான கேள்வி, நால் வேதத்தை மறுக்கும், தொல் நாகவேதத்தை உயிர்த்தெழச் செய்து, க்ஷத்ரியர்களை வேரறுக்க விரும்பும் ஜராசந்தனும், நால் வேதத்தின் நெறியினைப் பாதுகாக்கத் துடிக்கும், க்ஷத்ரிய மேலாதிக்கத்தை நிலைபெறச் செய்யும் எண்ணம் கொண்ட சிசுபாலனும், எப்படி நெருக்கமான  நண்பர்களாக இருக்க முடியும் என்பதுதான். இவர்களிடையே  இது குறித்து, எந்த ஒரு அறிவுபூர்வமான  விவாதங்களும் நிகழ்வதாகக் கதையில் இல்லை. இப்படியொரு விவாதம் நிகழாத காரணத்தால் எதிரெதிர் நோக்கங்களும் செயல்திட்டங்களும் கொண்ட இவ்விருவரும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதில் உள்ள முரண்பாடு நாவலில் வெளிப்படையாகப் பேசப்படும் வாய்ப்பு தவிர்க்கப்பட்டு விடுகிறது. க்ஷத்ரிய மேலாதிக்கத்தை கருவறுக்கத் துடிப்பவனாக கிருஷ்ணனை அடையாளம் கண்டு கொதிக்கும் சிசுபாலன், 100 க்ஷத்ரியர்களை சிறையிலடைத்து தான்  நடத்தும் தொல் நாகவேத யாகத்தில் பலி கொள்ள இருந்த ஜராசந்தனை மட்டும் எப்படி நண்பனாகக் கருத முடியும்? ஜராசந்தனும் க்ஷத்ரிய மேலாதிக்கத்தை தொடர்ந்து நிலைபெற வைக்க விரும்பும் சிசுபாலனை  நெருங்கிய நண்பனாகக் கொள்ள முடியும்? கதையாடலில் உள்ள இந்த முரண்பாட்டை ஜெயமோகன் கவனிக்கவில்லை என்றே தோன்றுகிறது. இது தர்க்கப்பிழை மட்டுமல்ல, ஒருவரையொருவர் கொன்றொழிக்கும் நோக்கங்களைக் அடிப்படையாகக் கொண்ட  இருவர் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர் என்பது, பாத்திரப் படைப்பின் ஒருமைக்கு கேடு செய்கிறது, அவர்களின் நோக்கங்களுக்கு ஊறு செய்கிறது. கொலைக்களத்தில் எதிரெதிர் நிற்கக்கூடிய  இவர்கள் அந்த உணர்வு சிறிதும் இல்லாமல் அருகிருந்து உறவாடுகின்றனர் (வெய்யோன் நாவலில்).
ஜராசந்தன்- சிசுபாலன் நட்பு மட்டுமல்ல, அந்த உறவுக்கு வெளியே ஜராசந்தன் பாத்திர படைப்பு, அவன்  செய்யும் யாகம், மற்றும் அவனது வாழ்க்கை நோக்கு ஆகிய எல்லாமே சர்ச்சைக்குரிய வகையில், படைப்பின் உள்ளார்ந்த தர்க்கத்துக்கும் மாறாகவே உள்ளது. முதலில் ஜராசந்தன் நடத்தும் யாகம் தொன்மையான நாகவேதத்தின் அடிப்படையிலானது என்று சொல்லப்படுகிறது. ஆனால் நால்வேதத்திலேயே அவன் நடத்தும் யாகத்துக்கு இடம் உள்ளது. புருஷ மேத அல்லது நரமேத யாகம் எனும் இது, சுக்ல யஜுர் வேதத்தின் வாஜசனேயி சதபத பிராமண ,-காத்யாயன சிரௌத சூத்திரத்தில் (Vajasaneyi Samhita-Sataphana Brahmana-Katyayana Srauta Sutra)  சொல்லப்பட்ட ஒன்றுதான். நால்வேத மரபுக்கு எதிரானதாக இதைக் கட்டமைத்திருக்கிறார் ஜெயமோகன். புனைவில் அவ்வாறு இருக்கலாம் என்பதை ஒப்புக்கொண்டாலும், மரபில் உள்ள ஒன்று மரபுக்கு எதிரானது என்று புனையப்படும்போது கதைப்போக்கு மற்றும் ஆசிரிய கூற்றுக்கு அப்பால் அத்தகைய வாதத்துக்கான நியாயம் கதையில் நிறுவப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இயல்பானதே.

மேலும் முக்கியமாக, ஜரையினால் ஒன்றாக்கப்பட்டதானாலேயே ஜராசந்தனுக்கு ஒரு அரக்கப் பின்னணியை அளித்திருப்பதும் அவனது வரலாறும் கேள்விக்குரியவை. ஜராசந்தன் பிள்ளையில்லாமல் தவித்துத் தவமியற்றிய பிருஹத்ரதனின் மனைவிகளுக்கு  இருபாதிகளாகப் பிறந்தவன் என்பதும், ஜரை என்ற அரக்கியினால்  ஒன்றாக்கப்பட்டு ப்ருஹத்ரதனிடம் மீட்டளிக்கப்பட்டவன் என்பது நாம் அறிந்தது. ஆனால் இங்கு அந்தக் கதையிலிருந்து ஒரு படி மேலே சென்று, ஜரையை ஜராசந்தனின்  வளர்ப்பு அன்னை என்றும் அவளது முலைப்பால் உண்டு அவளிடமே சில காலம் வளர்ந்ததால் அவன் பாதி அரக்கன் என்றுமே புனைவைக் கட்டுகிறார் ஆசிரியர். இது போதாதென்று, தன் சகோதரர்களைக் கொன்று தன்  தந்தையையும் அன்னையரையும் நாடு கடத்திய பின்னர்  நாடாண்டவன் ஜராசந்தன் என்றும் இந்நாவலில் சொல்லப்படுகிறது. சாம்ராட் அசோகன் மற்றும், சுல்தானிய கதைகளை எதிரொலிக்கும் இக்கதைக்கான அடிப்படை பாரதத்தில் உண்டா என்ற கேள்வியைக் கூட புனைவுச் சுதந்திரத்தின் அடிப்படையில்  விட்டுவிடலாம். ஆனால், ஜராசந்தன் ப்ரஹத்ரதன் தவமிருந்து பெற்ற ஒரே மகனா, அல்லது அவனுக்கு முன் ப்ருஹத்ரதனுக்கு மகன் உண்டா, அவனுக்கு அடுத்தும் மகன்கள் உண்டா  என்பதிலெல்லாமே கூட இந்தப் பிரதியில் தெளிவு இல்லை. ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொன்று சொல்லப்படுகிறது.
வெய்யோன் நாவலின் 54ம் பகுதியில் ஜராசந்தன் தனக்கு முன் தன் தந்தைக்கு ஒரு மகன் இருந்து இளவயதில் இறந்ததாகக் கூறுகிறான். தனக்குப் பின் தன் அன்னையர் தந்தைக்குப் பிறந்த தன் சகோதரர்களைக் கொல்வதாகவும் வருகிறது. ஆனால், ப்ருஹத்ரதர் பிள்ளையில்லாக் குறையினால் தவம் புரிந்து, மிகவும் முதிர்ந்த வயதில்,  சண்ட கௌசிக ரிஷியிடம் வரம் பெற்று அதனால் ஜராசந்தன் அவர் பெற்ற ஒரே மகனாகப் பிறந்ததாகவும் வருகிறது. இதை பகுதி 9ல் பார்க்கலாம். ப்ருஹத்ரதரும் இவ்வாறே புலம்புகிறார்.
 “அரசனையும் அரசியரையும் முதுமை வந்தணைந்தது. அரண்மனை மருத்துவர் சூத்ரகர், “மைந்தரைப்பெறும் அகவையை தாங்கள் கடந்துவிட்டீர்கள் அரசே. அரசியரும் அவ்வெல்லையை கடந்துவிட்டனர்என்று அறிவித்தார். அன்றிரவு பிருஹத்ரதன் அரசியர் மாளிகையில் துணைவியருடன் இருக்கையில் துயர் தாளாது கண்ணீர்விட்டார். “வாழ்நாளெல்லாம் கடலோடி ஈட்டிய செல்வமனைத்தையும் கலமுடைந்து நீரில் விட்ட வணிகன் போலிருக்கிறேன். செல்வமென்பது இப்பிறப்பின் இன்பங்களையும் மறுபிறப்பின் நல்லூழையும் பெற்றுத்தரக்கூடியதென்று இளமையில் கற்றேன். என் கருவூலச் செல்வமனைத்தையும் வேள்வியறங்களுக்கு அளித்துவிட்டேன். வெறுங்கையுடன் விண்செல்லப்போகிறேன். புத் என்னும் இழியுலகுக்குச் சென்று இருளில் அமைவேன்என்றார்.”
 இங்கே அவருக்கு ஏற்கெனவே ஒரு பிள்ளையிருந்து அவன் இறந்தது போல் வரவில்லை. மேலும் மிக முதிர்ந்த வயதில் முனிவர் அருளால் ஜராசந்தனைப் பெறும் அருள் பெற்ற  அரசத் தம்பதியினர், ஜராசந்தன் ஜரையுடன் காட்டுக்குச் சென்றபின்னர், மேலும் பிள்ளைகளை பெற்றனர் என்று நம்புவதற்கான தேவை கதைபோக்கில் இல்லை, இது ஒரு முரணாக துருத்திக் கொண்டு தான் நிற்கிறது.
ஜராசந்தனுக்கு உடன்பிறந்தோர் உண்டா என்பது ஒரு கேள்வி. அதில் ஒருவர்  அவன் பிறக்கும் முன்னர் இறந்துவிட்டவரா, அவனுக்குப் பின் பிறந்த தம்பியர் அவனால் கொல்லப்பட்டனரா என்பது ஒரு கேள்வி. இத்தனையும் ஒரே படைப்பில் வரும்போது ஜராசந்தன் பாத்திரப்படைப்பில் குழப்பம் ஏற்பட்டு அவனது சித்திரம் பழுதுபடுவதுடன், சம்பவங்களின்  நம்பகத்தன்மையும் குலைகிறது .
ஜராசந்தனுக்கு ஒரு அரக்கப் பின்னணி அளித்து அவனை நால்வேத மறுப்பாளானாகக் காட்ட இது தேவைப்படலாம். ஆனால் எழுதப்பட்ட வகையில், கவனக்குறைவும் தர்க்க ரீதியிலானப் பிழைகளும், ஜராசந்தன் பாத்திரம் முழுமை அடையாமல், ஆசிரிய நோக்கத்தில் அசைக்கப்படும் வேறொரு நூலிலாடும் பாவையாய்த் தோன்ற காரணமாகின்றன.
அதே போல அவனது மகள்கள் விஷயத்திலும் இப்படியே.  ஜராசந்தன் மகள்களான அஸ்தி, பிராப்தி இருவருமே கம்சனின் மனைவியர் என்பதும் அவர்களின் கணவனான கம்சனைக் கொன்றதினாலேயே ஜராசந்தனுக்கு கிருஷ்ணன் மீது தீராப்பகை என்பதுமே பாரதத்தில்  வருவது. இங்கு இதிலும்  குழப்பம்.
ஜராசந்தன் தன்  மகள்களான அஸ்தி, பிராப்தி பற்றி வெய்யோன் பகுதி 54ல் இப்படி சொல்வதாக வருகிறது.
“மீசையை முறுக்கியபடி “தங்களுக்கு முதல் மனைவியில் இரண்டு மகளிர் அல்லவா?” என்றான் கர்ணன். “மதுராவை ஆண்ட கம்சரின் மனைவியர்.” ஜராசந்தன் “ஆம்” என்று சொன்னான். மகதத்து குலமுறைமைப்படி அவர்களை என் மகள்கள் என்று சொல்லவேண்டும். அவர்களின் அன்னை என் மனைவி அல்ல.” துரியோதனன் நோக்க ,“என் தந்தையின் முதல் மைந்தர் இளமையிலேயே போரில் இறந்தார். அவரது மனைவி என்னைவிட இருபது வயது மூத்தவர். அவரது மகள்களை நான் தந்தையென நின்று கம்சருக்கு கையளித்தேன். எனக்கு அப்போது பதினாறு வயதுஎன்றான்.”
இதன்படி இருவரும் ஜராசந்தரின் மகள்களாகின்றனர்.
வெய்யோனில் அவ்வாறிருந்தால் இங்கு, பன்னிரு படைக்களத்தின் ஒரு  பகுதியில் கம்சனின் மனைவியர் பற்றி  இப்படி வருகிறது.

அவனுக்கு (கம்சனுக்கு) மகத மன்னன் பிருஹத்ரதரின் தங்கை மகளின் புதல்விகளை மணம் புரிந்து வைக்கப்போவதாக செய்தி உள்ளதுஎன்று தேவவாகர் சொன்னார். “ஆம், அது ஒரு அழியா முடிச்சு. ஆனால் அப்பெண்கள் அரசரின் நேரடிக்குருதியினர் அல்ல. பிருஹத்ரதரின் தந்தைக்கு சூத்திரப்பெண்ணில் பிறந்த மகளின் புதல்விகள். ஆஸ்தி, பிராப்தி என அவர்களுக்கு பெயர்.”

அஸ்தி பிராப்தி இருவரும், ஜராசந்தனின் தந்தையான பிருஹத்ரதரின் தந்தைக்கு சூத்திரப்பெண்ணில் பிறந்த மகளின் புதல்விகள் என்பதால் அவர்கள் பன்னிரு படைக்களத்தில் ஜராசந்தனுக்கு அத்தை மகள்கள் என்ற முறையாகின்றனர்.
ஜராசந்தனுக்கு ஒரு அரக்கப் பின்னணி அளித்து அவனை நால்வேத மறுப்பாளானாகக் காட்ட இது உதவலாம். ஆனால் இது போன்ற முரண்பாடுகள் வெறும் தகவல் பிழைகள் என்ற நிலைக்கு அப்பால், கதையை அதுவரை கொண்டு சென்ற தர்க்கத்தை உடைத்து, நடந்தது நடக்கப்போவது என்று அனைத்தையும் கேள்விக்குறியாக்குகின்றன. ஒரு கதையில் உறவுமுறைகளே மாறுவதைக் கடந்து செல்வது அவ்வளவு சுலபமல்ல. உணர்வுகளைப் பிணைக்கும் கண்ணிகள் அவை.
வெண்முரசின் பலங்களான அழகிய மொழி நடை, உவகையூட்டும் புதிய சொல்லாக்கங்கள் இந்த நாவலிலும் ஏராளமாக  உண்டு. ஜெயமோகனின் பாரத நாவல்கள் எல்லாவற்றுக்குமே  பொருந்தப் போகும் அவற்றை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே போகலாம். இதற்கு முந்தைய கட்டுரைகளில் நிறையவே சொல்லியுமிருக்கிறேன். இன்றும் அவை ஒவ்வொரு நாளும் மிக அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றன. எனவே, தற்போதைக்கு அதைப் பேசாமல், நாவலின் பொருள் குறித்தும் அமைப்பு குறித்தும் பேசுவது அவசியமாகிறது.
பன்னிருப் படைக்களத்தின் இன்னொரு சிறப்பாக,சம்பவங்கள் நடைபெறும் மாதங்களும் அவற்றின் பருவ நிலைகளும் பாத்திரங்களின் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் வெளிப்படும் அழகு என்று சொல்லலாம்.
ஆனால் இதிலும் சில நெருடும்  பிழைகள் வந்துவிடுகின்றன. முக்கியமாக, ராஜக்ருஹத்தில் ஜராஸந்த வதம் நடப்பது ஐப்பசி மாதத்தில் என்று வருகிறது. பெருமழைக்கிடையே அந்தச் சம்பவங்கள் விவரிக்கப்படுகின்றன. ஐப்பசி மழைக்காக அஸ்தினாபுரம் ஏங்கிக் காத்திருக்கிறது என்றும் வருகிறது. ஐப்பசி மழை என்பது கடலோர ஆந்திரம், மற்றும் தமிழ்நாட்டு நிலப்பகுதிக்குரியது. வட இந்தியாவின் மழைக்காலம், ஆவணியோடு முடிவடைவது. மிஞ்சிப் போனால் புரட்டாசியின் முதல் பாதிவரையே  அங்கு மழைக்காலம். புராண காலகட்டத்தில்  எப்படியோ தெரியாது. ஆனால் இந்த பருவநிலை கிட்டத்தட்ட கடந்த பனியுகம் முடிவு பெற்றதிலிருந்தே  இப்படித்தான் உள்ளதாக அறிவியல் மற்றும் வானியல் கணிப்புகள் உள்ளன. (வெண்முரசு நடைபெறும் காலம், சிந்து சமவெளி வெளி நாகரீகத்தின் அழிவுக்குப்  பின் என்று மழைப்பாடல் நாவலில் ஒரு காட்சி உண்டு). ஆனால் ஜெயமோகன் அவரது அநேக கட்டுரைகளிலும்கூட , இந்தப்  பருவ  காலத்தை தவறாகவே எழுதுகிறார். படைப்புக்கு  நம்பகத்தன்மை அளிக்கும் பின்னணித் தகவல்கள் தவறாக அமைந்து விடும்போது  அது நம்பகத்தன்மையை இழக்கிறது. கதைதானே என்று சொல்லலாம். ஆனால் புனைவென்பதோர் அறிதுயில் கனவென்றால், இது போன்ற முரண்பாடுகள் நம்மை அதிலிருந்து வெளியே தூக்கி வீசி விடுகின்றன. வாழ்வனுபவத்தை மட்டுமல்ல, வாசிப்பனுபவத்தையும் மறந்து, கணத்துக்குக் கணம் காணும் தோற்றத்தை ஏற்கும் மனமயக்கம்தான் (புனைவுக்குத் தன்னை ஒப்புக் கொடுத்தல் ) இலக்கியப் புனைவுகளை அணுகுவதற்குரிய மனநிலை என்ற கோரிக்கை ஏற்கத்தக்கது என்று எனக்குத் தோன்றவில்லை.

பன்னிரு படைக்களம்  மிக நீண்டதொரு நாவலாகத் தோன்றுவதற்கு, அதன் உள்ளே இருக்கும் பல உச்சங்கள் ஒரு காரணம். பௌண்டரீக வாசுதேவன் வதம், ஜராஸந்த வதம், சிசுபால வதம், ராஜசூய யாகத்தின் முழுநீள விவரணைகள், அஸ்தினபுரியின் சூதாட்டக் காலத்துக்கான விரிவான விவரிப்புகள், சூதாட்டம், பின் பாண்டவர்கள் அடிமையாதல், இதையெல்லாம் தாண்டி, இந்த நாவலின் உண்மையான உச்சமாக அமைந்திருக்க வேண்டிய பாஞ்சாலி சபதம் வருவதற்குள் பல தீவிர உணர்வு நிலைகளுக்கு ஆட்படுத்தும் கட்டங்கள் வந்து விடுவதால், பாஞ்சாலி சபதம், அது ஏற்படுத்த வேண்டிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. இத்தனைக்கும் இந்தப் பகுதியில் ஜெயமோகனின்  உரையாட்சி ஓர் புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
இங்கு விவாதத்துக்குரிய இன்னொன்றையும்   முன்வைக்கிறார் ஜெயமோகன். பாஞ்சாலி துகிலுரியப்படுகையில், அதிலிருந்து அவளைக் காப்பாற்றுவது யார் என்பது பாரதம் வாசிக்கும் யாருக்கும் தெரியும். ஆனால் ஒரு நவீன வாசகனுக்கான இந்த நாவலில் அமானுஷ்ய சம்பவங்களைத் தவிர்க்கும் பொருட்டு கிருஷ்ணன் அருள் என்று அல்லாமல், அந்தத் தருணத்தில் அவனை நினைக்கும் துரியோதனனின் மகளான லக்ஷ்மணையின் தலைமையில் கௌரவர் இல்லப் பெண்கள் காப்பதாக மாற்றியிருப்பது அவ்வளவு பொருத்தமாக எனக்குத் தோன்றவில்லை. மேலும், துரியோதனன் மகளான லக்ஷ்மணை கிருஷ்ணை என்று திரௌபதியின் பெயரால் அழைக்கப்டுவதும், அவளைப் போலவே தோற்றம் கொண்டவளாகக் காட்டப்படுவதும் எல்லாம், ஒரு வாசகன் பிரதி மீது வைக்கும் எளிய நம்பிக்கையை (credulousness ) ரொம்பவே சோதிக்கிறது என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, பாஞ்சாலி சபதம் அவள் வாயால் அவையில் உரைக்கப்படாமல் அவளது அணுக்கத் தோழியான மாயையின் வாய்மொழியாக வருவதுகுறித்து என்ன சொல்வது என்று தெரியவில்லை. திரௌபதியை பேரன்னையாக உருவகித்து எழுதி வருவதால், இந்தப் பகுதியில் வஞ்சினம்கூட அவளால் உரைக்கப்படாமல் இருப்பதாகப்  பாராட்டி ஒரு நண்பர் எழுதியிருந்தார். அப்போது, எனக்கு அந்த சபதத்தையும் தோழியே முடித்து வைக்க வேண்டும் என்று அந்த நண்பர் எதிர்பார்க்கிறாரோ என்ற சந்தேகத்தை அளித்தது. வஞ்சினம் உரைத்தலே அன்னைக்கு ஊறு எனில், அவள் அதைத் தீர்த்தல் எவ்வாறு? (ஆனால் இது ஜெயமோகனின் கருத்து என்று நம்புவதற்கு, அவர் ஏதும் இது பற்றிக் கூறவில்லை. படைப்புக்கு இணக்கமான வகையில் வாசகன் தன்னை மிதமிஞ்சிய அளவில் ஒப்புக்கொடுத்தல் அவனது வாசிப்பை எங்கு கொண்டு செல்கிறது என்பதைச் சுட்டவே இதைச் சொல்கிறேன்).
 முடிவாக இப்படிதான் சொல்ல வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு அற்புதமான தருணங்கள் உள்ளனவோ அதே அளவிற்கு கேள்விக்குரிய, நம்ப முடியாத, பலவீனமான பாத்திரங்களும் சம்பவங்களும் கொண்ட படைப்புதான் பன்னிரு படைக்களம். எப்போதும் உள்ள இடையறாத விவாதங்கள் போதாதென்று கூடுதலாக, இடையறாத பயணங்களும் வேறு பல பணிகளும் ஜெயமோகனை பற்றிக்கொண்டிருக்கும் இந்நாட்களில் அவர் இந்த அளவு எழுதுகிறார் என்பதே பிரமிப்புக்குரிய ஒன்று. இதற்கு இணை என்று மட்டுமல்ல, இது போன்ற முயற்சியும்கூட பிறர் கற்பனைக்கும் சாத்தியமில்லாமல் இருக்கிறது. ஆனால் இத்தனை வசீகரங்களும் அலைக்கழிப்புகளும் கவனக்குலைப்புகளும் இல்லாத இன்னும் அமைதியான காலத்தில், இன்னும் ஓய்வும் அமைதியும் இன்னும் ஒருமையும் கூடிய உலகில் ஜெயமோகன் இருந்திருக்கக்கூடாதா என்று ஏக்கமாகவே இருக்கிறது. அப்போது அவர் எழுதியிருக்கக்கூடிய நாவல்களின் இக்குறை வடிவங்கள்தான் இப்போதைக்கு நமக்கு கிடைப்பது.

~oOo~

முந்தைய பதிவுகள்:
1. வெ.சுரேஷ்: வெய்யோன் வரை – சொல்வனம்
2. வெ.சுரேஷ்: வெண்முரசு – ஒரு பார்வை – சொல்வனம்

Exit mobile version