Site icon சொல்வனம் | இதழ் 378 | 08 நவ 2026

நுஷூ(Nushu): பெண்களுக்காக பெண்களால் உருவான எழுத்து வடிவம்

1982-ஆம் ஆண்டு. தெற்குச் சீனாவின் ஒரு கிராமத்தில் ஆய்வாளர் கோங் ஜேபிங் கையில் ஒரு நீலத்துணி அகப்படுகிறது.

அதில் மெல்லிய, சாய்ந்த எழுத்துகள் இருக்கின்றன. அவை சீன எழுத்துகள் போலத் தோன்றுகின்றன. ஆனால் சீன எழுத்துகள் அல்ல.

ஊரில் உள்ள ஆண்களிடம் படிக்கச் சொல்லிக்கேட்கிறார். யாருக்கும் வாசிக்கத் தெரியவில்லை. “அது பெண்களின் எழுத்து” என்று தோளைக் குலுக்குகிறார்கள்.

வயதான பெண்களிடம் கேட்கிறார். அவர்கள் புன்னகைக்கிறார்கள். பிறகு அந்த எழுத்துகளைப் பாட்டாகப் பாடுகிறார்கள்.

அதன் பெயர் நுஷூ (女书). “பெண் எழுத்து” என்று பொருள். பல நூற்றாண்டுகளாக, ஆண்களின் கண் முன்னாலேயே, பெண்கள் மட்டும் பயன்படுத்திய எழுத்து அது.

உலகில் பெண்களால் உருவாக்கப்பட்டு, பெண்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஒரே எழுத்துமுறை என்று இது அறியப்படுகிறது. அது ஏன் பிறந்தது? எப்படி வளர்ந்தது? ஏன் மறைந்தது? அதைப் புரிந்துகொள்ள, முதலில் சீன எழுத்தின் கதையிலிருந்து தொடங்க வேண்டும்.

சீன எழுத்து வடிவம் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்டது. அது தொடக்கத்திலிருந்தே அதிகாரத்தின் கையில் இருந்தது.

சீனர்களிடம் ஒரு பழங்கதை உண்டு. மக்கள் கயிற்றில் முடிச்சுப் போட்டுக் கணக்கு வைத்துக்கொண்டார்கள். நம் ஊரில் பாட்டி, தாத்தாக்கள் கரியில் சுவரில் கோடு போட்டு வைத்த்ருந்ததைப் போல. அப்போதைய சீன அரசரின் அரசவையில் சாங்ஜியே என்ற வரலாற்றாசிரியர் இருந்தார். புதிய எழுத்துமுறையை உருவாக்கும் பணியைச் சாங்ஜியேவிடம் கொடுத்தார்.

சாங்ஜியே ஆற்றங்கரையில் அமர்ந்தார். பறவைகளின் கால் தடங்களையும் விலங்குகளின் சுவடுகளையும் கவனித்தார். அவற்றிலிருந்து எழுத்துகளை வடித்தார். அவர் எழுத்தைக் கண்டுபிடித்த நாளில் தெய்வங்களும் பேய்களும் அழுதன, வானம் தானிய மழை பொழிந்தது என்கிறது அந்தக் கதை.

கதையில் எழுத்தைப் படைத்தவர் ஒரு ஆண். அதைக் கற்றுக்கொண்டவர்கள் மாகாணங்களின் ஆண் அதிகாரிகள். இந்தக் கதையிலேயே ஓர் உண்மை ஒளிந்திருக்கிறது. சீனாவில் எழுத்து வடிவம் என்பது ஆட்சியின் கருவி, அதிகாரத்தின் குரல்.

வரலாறு சொல்வது வேறு. சீன எழுத்தின் மிகப் பழைய சான்றுகள் “குறி சொல்லும் எலும்புகள்” (Oracle Bones). அவை ஷாங் வம்சத்தின் பிற்காலத்தைச் சேர்ந்தவை, ஏறக்குறைய கி.மு. 1250 முதல் கி.மு. 1050 வரை.சீன மொழியில் இவை சாங் வம்சத்தில் ஜியாகு என அழைக்கப்பட்டன. இறந்த மிருகங்களின் விலா எலும்புகள், ஆமை ஒட்டு ஆகிய இவை எதிர்காலத்தைப் பற்றிச் சொல்ல பயன்படுத்தப்பட்டன.

ஷாங் அரசர்கள் எதிர்காலத்தை அறிய விரும்பினார்கள். மாட்டின் தோள் எலும்பிலும் ஆமை ஓட்டிலும் கேள்விகளைச் செதுக்கினார்கள். பிறகு சூடான உலோகக் கம்பியால் சுட்டார்கள். எலும்பில் விழும் விரிசலை வைத்துப் பதில் சொன்னார்கள். மழை வருமா? போரில் வெல்வோமா? அரசிக்குப் பிறப்பது ஆண் குழந்தையா?

இத்தகைய எலும்புகளின் பெரும்பகுதி ஷாங் தலைநகரான இன்றைய ஆன்யாங் நகரில் கிடைத்தன. இதுவரை ஏறக்குறைய 5,000 தனி எழுத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இதுவரை வாசிக்கப்பட்டுள்ளன.

சீன எழுத்து ஒலியைக் குறிப்பதில்லை. ஒவ்வொரு எழுத்தும் ஒரு சொல்லை அல்லது பொருளைக் குறிக்கிறது. தமிழில் 247 எழுத்துகள் கற்றால் எந்தச் சொல்லையும் எழுதலாம். சீனத்தில் ஒரு நூலை வாசிக்கவே பல ஆயிரம் எழுத்துகள் தெரிய வேண்டும்.

அதற்குப் பல ஆண்டுப் பயிற்சி தேவை. ஆசிரியர் வேண்டும். நேரம் வேண்டும். பணம் வேண்டும். அதனால் எழுத்தறிவு செல்வந்தர்களின் உடைமையானது.

பின்னர் அரசு அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கப் பேரரசுத் தேர்வுகள் நடத்தப்பட்டன. கன்பூசிய நூல்களை மனப்பாடம் செய்து தேர்வு எழுதியவர்கள் அதிகாரிகள் ஆனார்கள். அந்தத் தேர்வுகளை எழுத ஆண்களுக்கு மட்டுமே அனுமதி.

ஆக, எழுத்து என்பது அறிவு மட்டுமல்ல. அது பதவி. அது அதிகாரம். அது ஆண்களின் உலகம்.

சீனப் பெண்ணின் வாழ்க்கை பிறப்பிலிருந்து இறப்பு வரை விதிகளால் கட்டப்பட்டிருந்தது. அந்த விதிகளில் எழுத்துக்கு இடமில்லை.

கன்பூசியச் சமூகம் பெண்ணுக்கு ஒரு நெறியை வகுத்தது. அதன் பெயர் சான்சொங் சிதே (三從四德). “மூன்று கீழ்ப்படிதல்கள், நான்கு நற்பண்புகள்” என்று பொருள்.

திருமணத்துக்கு முன் தந்தைக்கும், பிறகு கணவனுக்கும் அவன் இறந்தால், மகனுக்கும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். 

அச்சம், மடம் நாணம் பயிர்ப்பு போல சீனாவிலும் நான்ன்கு நற்பண்புகள் பெண்களுக்கு இருக்க வேண்டும். அவையாவன,  ஒழுக்கம், அடக்கமான பேச்சு, அழகான தோற்றம், வீட்டு வேலைத் திறமை. இவற்றில் கல்வி இல்லை. அறிவுக் கூர்மை தேவையில்லை என்று அந்த நெறியே வெளிப்படையாகச் சொன்னது.

மிங் வம்சக் காலத்தில் (1368–1644) ஒரு பழமொழி பரவியது: நுசி வுசாய் பியான் ஷி தே (女子無才便是德). “திறமை இல்லாத பெண்ணே ஒழுக்கமுள்ள பெண்” என்பது அதன் பொருள்.

படித்த பெண் கற்பை இழப்பாள் என்று பழமைவாதிகள் அஞ்சினார்கள். அதனால் பெண்கள் எழுத்தறிவில்லாமல் இருப்பதே நல்லது என்று வாதிட்டார்கள்.

ஆனால் இதில் ஒரு நுட்பம் உண்டு. செல்வந்தக் குடும்பங்களின் பெண்கள் பலர் உண்மையில் படித்தார்கள். கவிதை எழுதினார்கள். அவர்களுக்கென்றே “பெண்களுக்கான நான்கு நூல்கள்” போன்ற அறநூல்கள் இருந்தன. கல்வி மறுக்கப்பட்டது ஏழைப் பெண்களுக்கு, குறிப்பாகக் கிராமத்து உழவர் குடும்பப் பெண்களுக்கு. நுஷூவை உருவாக்கியவர்கள் அவர்களே.

சிறுமிகளின் கால்களை இறுக்கமாகக் கட்டி, எலும்புகளை மடக்கி, சிறிய பாதங்களாக்கினார்கள். அந்த “தாமரைப் பாதம்” அழகின் அடையாளமாகவும் நல்ல மணவாழ்க்கையின் உத்தரவாதமாகவும் கருதப்பட்டது.

கால் கட்டப்பட்ட பெண் நீண்ட தூரம் நடக்க முடியாது. வயலுக்குப் போக முடியாது. சந்தைக்குப் போக முடியாது. வீட்டோடு அடைபட்டாள். நுஷூ பெரும்பாலும் கால் கட்டப்பட்ட கிராமப் பெண்களிடையே பரவியிருந்தது என்கிறார் சிங்ஹுவா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜாவோ லிமிங்.

ஜியாங்யோங் பகுதியில் திருமணமாகாத பெண்கள் வீட்டின் மாடி அறைகளில் வாழ்ந்தார்கள். அவர்கள் “மாடிப் பெண்கள்” என்று அழைக்கப்பட்டார்கள்.

அந்த அறைகளில் அவர்கள் கூட்டமாகச் சேர்ந்தார்கள். நூலால் ஆன(எம்பிராய்டரி) கைவேலைகள் செய்தார்கள். காலணி தைத்தார்கள். பாடினார்கள். அடைபட்ட அந்த அறைகள்தான் நுஷூவின் பள்ளிக்கூடங்கள் ஆயின.

திருமணமானதும் பெண் தன் பிறந்த ஊரை விட்டுக் கணவனின் ஊருக்குப் போக வேண்டும். தாய், தோழிகள், சகோதரிகள் எல்லோரையும் இழக்க வேண்டும். அந்தப் பிரிவின் வலியே நுஷூவின் மையக் கருப்பொருளாக மாறியது.

நுஷூ எப்போது பிறந்தது என்று யாருக்கும் உறுதியாகத் தெரியாது. அதன் தோற்றத்தைப் பதிவு செய்த எந்த ஆவணமும் இல்லை.

நுஷூ பிறந்தது தெற்குச் சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள ஜியாங்யோங் மாவட்டத்தில். குறிப்பாக, அதன் வடபகுதியில் ஓடும் சியாவோ ஆறு, யோங்மிங் ஆறு ஆகியவற்றின் பள்ளத்தாக்கில்.

அந்தப் பகுதியில் ஹான் சீனர்களும் யாவ் இன மக்களும் கலந்து வாழ்ந்தார்கள். ஆனால் நுஷூ யாவ் மொழியைப் பயன்படுத்தவில்லை. உள்ளூர்ச் சீனப் பேச்சு வழக்கான சியாங்னான் தூஹுவா (湘南土話) என்ற மொழியைக்கொண்டே உருவானது.  அந்த வழக்கு, பெய்ஜிங்கின் மாண்டரின் மொழியிலிருந்து பெரிதும் மாறுபட்டது.

நுஷூவின் முன்னோடி ஆய்வாளர் கோங் ஜேபிங் ஜியாங்யோங் கிராமங்களில் வாய்மொழிக் கதைகளைச் சேகரித்தார். அவற்றில் மூன்று கதைகள் முக்கியமானவை.

ஜியாங்யோங்கைச் சேர்ந்த ஒரு அழகிய பெண் பாட்டிலும் நூல் வேலைப்பாடுகளிலும் சிறந்தவள். தன் சகோதரிகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்தாள். ஒருநாள் பேரரசரின் அரண்மனைக்குப் பணிப்பெண்ணாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாள். அரண்மனையில் தனிமையில் வாடினாள். தன் துயரத்தை வீட்டுக்குச் சொல்ல வேண்டும். ஆனால் அரண்மனைக் கடிதங்கள் படிக்கப்படும். அதனால் ஒரு புதிய எழுத்தை உருவாக்கினாள். அதில் கடிதம் எழுதி, அதை வாசிக்கும் முறையையும் சகோதரிகளுக்குக் கற்பித்தாள்.

இன்னொரு கதை, பான் சியாவோவின் கதை. தொங்ஷான் கிராமத்தைச் சேர்ந்த பான் சியாவோ திறமையான இளம்பெண். அவள் கடத்தப்பட்டாள். அடைத்து வைக்கப்பட்ட இடத்திலிருந்து தன் சகோதரிகளுக்கு ஒரு ரகசியச் செய்தி அனுப்பினாள். சகோதரிகள் அதை வாசித்து, அவள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, அவளை மீட்டார்கள்.

ஒன்பது ஜின் பெண்ணின் கதை வடிவமும் இதே போன்ற அடைபட்ட பெண்ணின் கதைதான்.

மூன்று கதைகளிலும் ஒரே வடிவம் தெரிகிறது. ஒரு பெண் அடைபடுகிறாள். தன் சகோதரிகளோடு பேச முடியவில்லை. எழுத்து, அதனால் உண்டான ஒலியும் அவளுக்கு விடுதலை தருகிறது. கதைகள் உண்மையோ இல்லையோ, நுஷூ எதற்காகப் பிறந்தது என்பதை அவை சரியாகச் சொல்கின்றன.

வரலாற்று ஆய்வாளர்களிடையே கடுமையான கருத்து வேறுபாடு உண்டு. ஜோ ஷுவாயி இது ஷாங் வம்சத்தின் எழுத்துக்கும் முந்தையது எனக் கூறினார். வேறு சிலர், நூஷு தோன்றியது கின் வம்சத்துக்கும் முந்தைய காலம் எனக் கருதுகின்றனர். இது காய்ஷு எனற வடிவில் இருந்து பிறந்தது எனவும் கூறப்படுகிறது. 

ஒரு உண்மை மட்டும் உறுதி. இன்று கிடைக்கும் நுஷூ ஆவணங்கள் எதுவும் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கு முந்தையவை அல்ல. 

நுஷூ ஒரு தனி மொழி அல்ல. அது ஒரு எழுத்துமுறை. உள்ளூர்ப் பேச்சு மொழியை எழுதும் ஒலிகூடிய எழுத்து வடிவம்.

சீன எழுத்தில் ஒவ்வொரு எழுத்தும் ஒரு சொல்லைக் குறிக்கும். நுஷூவில் ஒவ்வொரு எழுத்தும் ஒரு அசையைக் குறிக்கும். ஒரே ஒலி கொண்ட பல சொற்களுக்கு ஒரே எழுத்து போதும்.

இது தமிழுக்கு நெருக்கமான சிந்தனை. நம் எழுத்துகளும் ஒலியைக் குறிப்பவைதான். அதனால்தான் குறைந்த எழுத்துகளில் எல்லாச் சொற்களையும் எழுத முடிகிறது.

சீன எழுத்தில் ஆயிரக்கணக்கான எழுத்துகள் தேவை. நுஷூவின் அடிப்படை எழுத்துகள் ஏறக்குறைய 400 மட்டுமே. மாற்று வடிவங்களையும் சேர்த்தால் கூட 600-ஐத் தாண்டாது என்கிறது சிங்ஹுவா பல்கலைக்கழக ஆய்வு. உள்ளூர் வழக்கின் எல்லா அசைகளையும் எழுதத் தேவையானதில் ஏறக்குறைய பாதி இது. ஏனென்றால் நுஷூ தொனி வேறுபாடுகளைப் பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை.

சீன எழுத்தை இதுவரை எளிமைப்படுத்திய முயற்சிகளில் இதுவே மிகத் தீவிரமானது என்று அறிஞர்கள் வியக்கிறார்கள். அதைச் செய்தவர்கள் பள்ளிக்கே போகாத கிராமத்துப் பெண்கள்.

நுஷூ எழுத்துகள் சீன எழுத்துகளிலிருந்தே வடிக்கப்பட்டவை. ஏறக்குறைய நூறு எழுத்துகள் சீன எழுத்தை அப்படியே எடுத்துக்கொண்டன. ஆனால் சதுர வடிவத்தைச் சாய்த்து, சாய்சதுர (ரோம்பஸ்) வடிவமாக்கின. சில எழுத்துகளைக் கண்ணாடிப் பிம்பம் போலத் திருப்பின. கோடுகளின் எண்ணிக்கையைக் குறைத்தன.

இன்னும் நூறு எழுத்துகள் கோடுகளில் மாற்றப்பட்டன. ஆனால் மூல எழுத்தை இன்னும் அடையாளம் காணலாம். “பெண்” என்று பொருள்படும் 女 என்ற எழுத்து அதற்கு உதாரணம்.

நுஷூ எழுத்துகள் மெல்லியவை, நீளமானவை, சாய்ந்தவை. புள்ளிகள், வளைவுகள், சாய்கோடுகள் மட்டுமே அவற்றில் உண்டு. சீன எழுத்தின் தடித்த, சதுர வடிவத்துக்கு நேர் எதிரானவை. பார்ப்பதற்குப் பூத்தையல் வடிவம் போல இருக்கும்.

நுஷூ மேலிருந்து கீழாக எழுதப்படும். வரிகள் வலமிருந்து இடமாகச் செல்லும்.

பெரும்பாலான நுஷூ படைப்புகள் கவிதை வடிவில் இருந்தன. பெரும்பாலான வரிகளில் ஏழு எழுத்துகள் இருந்தன. ஏனென்றால் அவை வாசிப்பதற்காக மட்டுமல்ல, பாடுவதற்காக எழுதப்பட்டவை. ஒரு நுஷூ நூலை “வாசிப்பது” என்றால் அதைப் பாடுவது என்று பொருள்.

பெண்களிடம் காகிதமும் மையும் எப்போதும் இருக்கவில்லை. அதனால் கையில் கிடைத்ததிலெல்லாம் எழுதினார்கள்.காகிதம், துணியால் கட்டப்பட்ட சிறு புத்தகங்கள், விசிறிகள், கைக்குட்டைகள்,நெய்த ரிப்பன்கள், இடுப்புப் பட்டைகள், ஆடைகள் மற்றும் மதச் சடங்கு நூல்களின் ஓரங்கள் என அனைத்திலும் எழுதினார்கள்.

நுஷூவின் கடைசி வல்லுநர் யாங் ஹுவான்யி ஒரு சிறு விவரத்தை நினைவுகூர்ந்தார். மேசையில் அமர்ந்து எழுத ஆண்களுக்கு மட்டுமே உரிமை இருந்தது. அதனால் பெண்கள் தங்கள் முழங்காலில் வைத்து எழுதினார்கள்.

நுஷூ ஆண்களுக்கு எதிரான ரகசியக் குறியீடு என்று ஊடகங்கள் பரபரப்பாக எழுதின. உண்மை அதைவிட எளியது, ஆழமானது. ஆண்களுக்கு அதன் இருப்பு தெரியும். அவர்கள் அதைக் கற்க அக்கறை காட்டவில்லை, அவ்வளவுதான். பெண்களுக்கு அது ஒரு உணர்வு வடிகால். ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லும் வழி.

நுஷூவின் அடிப்படை “சபதச் சகோதரிகள்” என்ற உறவுமுறையைக் கொண்டதும் கூட. சீன மொழியில் ஜியேபாய் ஜிமெய் (結拜姊妹). இன்னொரு வகை நெருக்கமான உறவு லாவோதொங் (老同) என்று அழைக்கப்பட்டது.

ஒரே கிராமத்தின் சிறுமிகள் வாழ்நாள் முழுவதும் தோழிகளாக இருப்போம் என்று சபதம் செய்தார்கள். அந்தச் சடங்கு ஏறக்குறைய திருமணச் சடங்கைப் போலவே நடந்தது. யாங் ஹுவான்யிக்கு ஏழு சபதச் சகோதரிகள் இருந்தார்கள். அவர்களோடு சமைக்கும்போதும் சுத்தம் செய்யும்போதும் தைக்கும்போதும்தான் நுஷூவைக் கற்றார்.

சகோதரிகள் ஆவதைக் கொண்டாடி எழுதிய கவிதைகளே நுஷூவின் மிக மகிழ்ச்சியான படைப்புகள். ஒரு நுஷூவால் எழுதப்பட்ட பாட்டின் ஒரு வரி “கிணற்றருகே இருப்பவளுக்குத் தாகமில்லை; சகோதரி அருகே இருப்பவளுக்கு நம்பிக்கை இழப்பில்லை” என்று சொல்கிறது..

நுஷூவின் மிகப் புகழ்பெற்ற, மிகச் சோகமான வடிவம் சான்சாவோஷூ (三朝書). “மூன்றாம் நாள் புத்தகம்” என்று பொருள்.

ஜியாங்யோங்கில் ஒரு வழக்கம் இருந்தது. திருமணமான மூன்றாம் நாள் மணப்பெண் தன் பிறந்த வீட்டுக்குத் திரும்பி வருவாள். கருவுற்ற பிறகுதான் நிரந்தரமாகக் கணவன் வீட்டுக்குப் போவாள். அந்த மூன்றாம் நாளில் அவளுக்கு ஒரு பரிசு காத்திருக்கும்.

அது துணியால் கட்டப்பட்ட ஒரு சிறு புத்தகம். அதை எழுதியவர்கள் அவள் தாயும் பெண் உறவினர்களும் சபதச் சகோதரிகளும். அதில் இருப்பவை:

அவளுடைய எதிர்கால மகிழ்ச்சிக்கான வாழ்த்துகள், அவள் திருமணமாகிச் சென்ற போது ஏற்பட்ட துயரம், அவளோடு கழித்த நாட்களின் நினைவுகள், மேலும் “நல்ல மனைவியாக இரு, பொறுமையாக இரு” போன்ற அறிவுரைகள்தான் அந்தப் புத்தகத்தில் இருந்தன.

அந்தப் புத்தகத்தின் பின்பக்கங்கள் வெற்றாக விடப்பட்டன. மணப்பெண் தன் உணர்வுகளையும் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளையும் அதில் எழுதிக்கொள்வாள். காலப்போக்கில் அது அவளுடைய நாட்குறிப்பாக மாறியது. பிறந்த வீட்டு நினைவு வரும்போதெல்லாம் அதை எடுத்துப் பாடுவாள்.

புத்தகத்தின் பக்கங்களுக்கு நடுவே பெண்கள் காகித வெட்டுச் சித்திரங்களையும் எம்பிராய்டரி நூல் வேலைப்பாட்டு வடிவங்களையும் வைத்திருந்தார்கள்.

நுஷூவில் ஒரு தனி இலக்கிய வகையே உண்டு. சு கெலியன் (訴可憐). “துயரத்தைச் சொல்லுதல்” என்று பொருள்.

விதவைகள் தங்கள் தனிமையை எழுதினார்கள். கணவனின் கொடுமையை எழுதினார்கள். குழந்தையை இழந்த தாய்மார் தங்கள் வலியை எழுதினார்கள். மாமியார் வீட்டின் சுமையை எழுதினார்கள். நம் ஒப்பாரிப் பாடல்களோடு இவற்றை ஒப்பிடலாம்.

சில பெண்கள் தங்கள் முழு வாழ்க்கைக் கதையையும் நீண்ட கவிதையாக எழுதினார்கள். வேறு சிலர்,  சீன மொழியில் இருந்த நீண்ட கதைகளை நுஷூவில் மொழிபெயர்த்து, பாடலாக்கிப் பாதுகாத்தார்கள்.

கோவில்களுக்குச் சென்று நுஷூவில் வேண்டுதல் எழுதினார்கள். ஆண் குழந்தை வேண்டியும் பிரார்த்தித்தார்கள் என்பது ஒரு கசப்பான முரண். ஜப்பானிய ஆக்கிரமிப்புக் காலத்தின் துயரங்களை நுஷூ பாடல்கள் பதிவு செய்தன. நுஷூ எழுத்தோடு இணைந்து நுகே (“பெண்களின் பாடல்”) என்ற இசை மரபு வளர்ந்தது. அதன் மெட்டுகள் மனதை உருக்கும் தாழ்ந்த சுரங்களில் அமைந்தவை.

எல்லாப் பெண்களுக்கும் நுஷூ எழுதத் தெரியாது. பலருக்கு வாசிக்கத் தெரியும். இன்னும் பலருக்குச் சில படைப்புகள் மனப்பாடமாகத் தெரியும். எழுதத் தெரிந்தவர்கள் மற்றவர்களுக்காக எழுதிக் கொடுத்தார்கள். யாங் ஹுவான்யி திருமணப் புத்தகங்களை எழுதிக் கொடுத்ததற்கு மட்டும் கட்டணம் வாங்கினார்.

ஒரு சமூகம் முழுவதும் பகிர்ந்துகொண்ட எழுத்தறிவு அது. ஆனால் அதிகாரபூர்வமாக அந்தப் பெண்கள் “படிக்காதவர்கள்” என்றே பதிவு செய்யப்பட்டார்கள்.

நுஷூ எந்தப் பள்ளியிலும் கற்பிக்கப்படவில்லை. எந்த நூலகத்திலும் சேமிக்கப்படவில்லை. அது பெண்ணிடமிருந்து பெண்ணுக்கு மட்டுமே கடந்து வந்தது.

நுஷூ மூன்று முக்கிய வழிகளில் வளர்ந்தது. முதலாவது, பாட்டிகளும் தாய்மார்களும் சிறுமிகளுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். இரண்டாம் வகையில் மாடி அறைகளில். வயதான பெண்கள் வேலை செய்தபடியே பாடினார்கள். சிறுமிகள் பாட்டைக் கேட்டு, எழுத்தைப் பார்த்து, பின்பற்றி எழுதிக் கற்றார்கள். பாடல்தான் பாடநூல்.

மூன்றாவது வகையினர், வேறு ஊரிலிருந்து மணமாகி வந்த பெண்கள் புதிய ஊரில் நுஷூவைக் கற்றார்கள். ஊர் விட்டு ஊர் போன பெண்கள் அதைத் தங்களோடு எடுத்துச் சென்றார்கள்.

19-ஆம் நூற்றாண்டில் நுஷூ கவிதைகளிலும் கடிதங்களிலும் நூல் வேலைப்பாடு பரவலாகப் பயன்பட்டது. அதுவே அதன் பொற்காலம் என்று கருதப்படுகிறது.

ஒரு பெண் இறந்தால் அவளுக்குப் பிடித்த நுஷூ எழுத்துகள் அவளோடு எரிக்கப்பட்டன அல்லது புதைக்கப்பட்டன. மறுவுலகில் அவள் அவற்றை வாசிக்க வேண்டும், சகோதரிகளோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது அவர்களிடையே இருந்த நம்பிக்கை.

அதனால் ஒவ்வொரு தலைமுறையின் எழுத்தும் அந்தத் தலைமுறையோடு மறைந்தது. 2012 வரை உலகில் அறியப்பட்ட நுஷூ ஆவணங்கள் ஏறக்குறைய 500 மட்டுமே. நான்கு வரிக் கவிதைகள் முதல் நீண்ட தன்வரலாறுகள் வரை அவை.

நூஷுவின் வீழ்ச்சிக்குப் பல காரணங்கள் உண்டு. போர் ஒரு காரணம். 

1930-கள், 1940-களில் நடந்த சீன-ஜப்பானியப் போரின் குழப்பத்தில் பல ஆவணங்கள் அழிந்தன.

1949 புரட்சிக்குப் பின் புதிய திருமணச் சட்டம் வந்தது. பெண் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று சீன எழுத்தைக் கற்கத் தொடங்கினார்கள். தனி எழுத்தின் தேவை குறைந்தது. விடுதலையே நுஷூவின் மறைவுக்கு ஒரு காரணமானது.

1966–76 காலத்தில் பழைய மரபுகள் எல்லாம் “நிலப்பிரபுத்துவச் சின்னங்கள்” என்று தாக்கப்பட்டன. நுஷூ “சூனியக்காரியின் எழுத்து” என்றும் உளவுக் குறியீடு என்றும் கண்டனம் செய்யப்பட்டது. பல ஆவணங்கள் எரிக்கப்பட்டன. யாரும் அதைப் பயன்படுத்தத் துணியவில்லை.

நுஷூ, முற்றிலும் அழியாமல் காப்பாற்றியவர்களில் ஒரு ஆணும் உண்டு. அவர் பெயர் ஜோ ஷுவோயி.

அவருக்குப் பன்னிரண்டு வயது இருக்கும்போது அவர் அத்தை பக்கத்து ஊரில் மணமானார். அங்குள்ள பெண்கள் நுஷூ எழுதினார்கள். அத்தை ஒருமுறை ஒரு நுஷூ மொழிபெயர்ப்பை வீட்டுக்குக் கொண்டு வந்தார். சிறுவன் ஜோ அதில் மயங்கினான்.

1954-இல் ஜியாங்யோங் கலாச்சார அலுவலகத்தில் பணியாற்றியபோது அவர் நுஷூவை ஆராயத் தொடங்கினார். கலாச்சாரப் புரட்சியில் அவருடைய ஆய்வுக் குறிப்புகள் அனைத்தும் எரிக்கப்பட்டன. நுஷூ ஆய்வுக்காக அவர் 21 ஆண்டுகள் சிறையிலும் தொழிலாளர் முகாமிலும் கழித்தார். 1979-இல்தான் விடுதலையானார்.

விடுதலையான பின்னும் அவர் நிறுத்தவில்லை. 2003-இல் முதல் நுஷூ அகராதியை வெளியிட்டார்.

1982-இல் ஜோ ஷுவோயி அந்தப் பகுதியின் கலாச்சாரம் பற்றி ஒரு நூல் எழுதினார். அதில் நுஷூ பற்றி ஒரு பகுதி இருந்தது. ஹூனான் மாகாண அரசு அதை வெளியிட்டது. அதே காலத்தில் ஆய்வாளர் கோங் ஜேபிங் களப்பணியில் இருந்தபோது, எதேச்சையாக நுஷூ எழுதிய துணியைக் கண்டெடுத்தார்.

வூஹான், பெய்ஜிங் நகரங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் அறிஞர்கள் ஜியாங்யோங்குக்கு வரத் தொடங்கினார்கள். ஆனால் அதற்குள் நுஷூ மறைவின் விளிம்பில் இருந்தது. வாசிக்கவும் எழுதவும் தெரிந்த பெண்கள் ஏறக்குறைய ஒரு டஜன் பேர் மட்டுமே எஞ்சியிருந்தார்கள்.

கடைசியாக நூஷு முழுதுமாக அறிந்திருந்த கௌ யின்சியான் 1990-இல் மறைந்தார். அவருடைய படைப்புகளில் 334 அடிப்படை எழுத்துகளும் 62,100 மொத்த எழுத்துகளும் இருந்ததாகச் சிங்ஹுவா ஆய்வு கணக்கிட்டது.

யாங் ஹுவான்யி ஏறக்குறைய 1909-இல் பிறந்தார். சீன எழுத்து முற்றிலும் தெரியாதவர். நுஷூவில் வல்லுநர். அவர் தந்தை ஒரு கிராம மருத்துவர். நுஷூ கற்றவர்கள் பண்பட்டவர்கள் என்று நம்பி மகளை ஊக்குவித்தார். முதல் கணவர் இரண்டு ஆண்டுகளில் பாம்புக்கடியால் இறந்தார். இரண்டாம் கணவர் சூதாடி. எட்டுக் குழந்தைகள். குடும்பச் சுமையாலும் சகோதரிகளின் மறைவாலும் பல பத்தாண்டுகள் நுஷூவை விட்டிருந்தார். 1990-இல் ஒரு அறிஞர் தூண்டியதும் மீண்டும் எழுதினார். 2004 ஜனவரியில் சிங்ஹுவா அறிஞர்களின் உதவியோடு அவருடைய படைப்புகளின் முழுத் தொகுப்பு வெளியானது. அதே ஆண்டு செப்டம்பர் 20 அன்று மறைந்தார். அவருடைய பிள்ளைகளிலோ பேரப்பிள்ளைகளிலோ யாரும் நுஷூவைக் கற்கவில்லை.

ஹீ யான்சின் 1939-இல் பிறந்தார். பாட்டியிடம் நுஷூ கற்றார். பாட்டி இறந்த பின் நீண்ட காலம் அதைவிட்டு விலகியிருந்தார். கணவன் நோயுற்றபோது மீண்டும் நுஷூவில் ஆறுதல் கண்டார். ஒரு ஜப்பானிய அறிஞரின் தூண்டுதலால் நினைவிலிருந்து எழுதத் தொடங்கினார். குடும்பத்துக்குள் பரம்பரையாகக் கற்ற கடைசி “இயற்கை வாரிசு” அவரே. 2025 அக்டோபர் 23 அன்று, 86 வயதில் மறைந்தார். ஒரு தலைமுறையின் மரபு அவரோடு முடிந்தது.

இன்று நுஷூ மீண்டும் உயிர் பெறுகிறது, ஆனால் வேறு வடிவில்.

பூவெய் கிராமத்தில், தொங்கு பாலம் வழியே செல்லும் ஒரு தீவில், நுஷூ அருங்காட்சியகம் கட்டப்பட்டது. அங்கே வகுப்புகள் நடக்கின்றன.

சீன அரசு நுஷூவைத் தேசிய அருவப் பண்பாட்டுப் பாரம்பரியமாக அறிவித்தது. கடுமையான தேர்வுகளுக்குப் பின் “வாரிசுகள்” என்ற அதிகாரபூர்வ நிலை வழங்கப்படுகிறது. அதற்குச் சிறு உதவித்தொகையும் உண்டு. கௌ யின்சியானின் பேத்தி ஹூ மெய்யுவே, 1988-இல் பிறந்த ஹூ சின் போன்றோர் இந்த வாரிசுகளில் அடங்குவர்.

2017 ஜூனில் வெளியான யூனிகோட் 10.0 பதிப்பில் 396 நுஷூ எழுத்துகள் சேர்க்கப்பட்டன. இனி நுஷூவைக் கணினியிலும் கைப்பேசியிலும் எழுதலாம்.

லிசா சீ 2005-இல் Snow Flower and the Secret Fan என்ற நாவலை எழுதினார். 2022-இல் Hidden Letters என்ற ஆவணப்படம் வெளியானது. இசையமைப்பாளர் டான் டுன் நுஷூ பாடல்களை இசை நிகழ்ச்சியாக்கினார்.

இன்று சீனாவின் இளம் பெண்கள் நுஷூ வகுப்புகளில் சேர்கிறார்கள். சில ஆண்களும் கற்க வருகிறார்கள். ஒரு காலத்தில் நினைத்தே பார்க்க முடியாத மாற்றம் இது.

ஆனால் இந்த மீட்புக்கு ஒரு விலை உண்டு.

நுஷூ இன்று சுற்றுலாப் பொருளாகவும் நினைவுப் பரிசாகவும் விற்கப்படுகிறது. ஒருகாலத்தில் ரகசியமான, தனிப்பட்ட துயரத்தின் எழுத்து இன்று காதணிகளிலும் சால்வைகளிலும் அச்சிடப்படுகிறது.

Hidden Letters ஆவணப்படம் ஒரு கசப்பான காட்சியைக் காட்டுகிறது. அருங்காட்சியகத்தின் ஆண் இயக்குநர் நுஷூவைக் “கீழ்ப்படிதல், பொறுமை” போன்ற பெண் நற்பண்புகளின் அடையாளம் என்கிறார். அடக்குமுறைக்கு எதிராகப் பிறந்த எழுத்து, அதே அடக்குமுறையின் விழுமியங்களைப் பரப்பப் பயன்படுத்தப்படுகிறது.

இன்னொரு இழப்பும் உண்டு. தங்கள் எழுத்தை யார் பார்க்கிறார்கள், எப்படிக் காட்டப்படுகிறது என்பதை இன்று பெண்கள் தீர்மானிப்பதில்லை. அருங்காட்சியக வகுப்பில் கற்கும் நுஷூ, மாடி அறையில் சகோதரிகளோடு பாடிக் கற்ற நுஷூ அல்ல.

நுஷூ ஒரு எழுத்தின் கதை மட்டுமல்ல. அது மறுக்கப்பட்டவர்கள் தங்களுக்கான பாதையை உருவாக்கிய கதை.

ஜப்பானின் ஹெய்யான் அரண்மனையில் பெண்கள் “பெண்களின் எழுத்தான” கானாவில் புதினங்கள் எழுதினார்கள். ஜியாங்யோங்கின் உழவர் பெண்கள் நுஷூவில் தங்கள் வாழ்க்கையைப் பாடினார்கள். ஒருவர் அரண்மனையில். மற்றவர் மாடி அறையில். இருவருக்கும் “ஆண்களின் எழுத்து” மறுக்கப்பட்டது. இருவரும் தங்களுக்கான எழுத்தில் ஒரு உலகைப் படைத்தார்கள்.

ஜப்பானிய அறிஞர் ஒருவர் நுஷூவையும் ஜப்பானிய ஹிரகானாவையும் கொரிய ஹங்குலையும் ஒப்பிட்டு ஆய்வு செய்திருக்கிறார். மூன்றும் சீன எழுத்தின் நிழலில் பிறந்த எளிய ஒலி எழுத்துகள். மூன்றிலும் பெண்களின் பங்கு உண்டு.

நூஷு நமக்குச் சொல்வது என்ன? எழுத்தறிவு என்பது யார் வரையறுப்பது? அரசுப் பதிவேடுகளில் ஜியாங்யோங் பெண்கள் “எழுத்தறிவற்றவர்கள்”எனக் குறிப்பிடப்பட்டார்கள். ஆனால் அவர்கள் கவிதை எழுதினார்கள், கடிதம் எழுதினார்கள், சுயசரிதைகள் எழுதினார்கள். அதிகாரம் அங்கீகரிக்காத அறிவு, அறிவு இல்லை என்று ஆகிவிடாது.

நுஷூ ஒரு தனி மனிதரின் கண்டுபிடிப்பு அல்ல. அது ஒரு சமூகத்தின் உழைப்பு. பெண்கள் ஒருவருக்கொருவர் துணை நின்றதால்தான் அது பிறந்தது, வளர்ந்தது, நிலைத்தது.

நுஷூவின் பெரும்பகுதி எரிக்கப்பட்டது. ஒரு ஜோ ஷுவோயியும் ஒரு யாங் ஹுவான்யியும் இல்லையென்றால் இன்று நமக்கு எதுவும் தெரிந்திருக்காது. நம் பாட்டிகளின் ஒப்பாரிகளையும் தாலாட்டுகளையும் யார் பதிவு செய்கிறார்கள் என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டும்.

பெண்கள் பள்ளிக்குப் போனதும் அவர்களுக்குத் தனி எழுத்து தேவைப்படவில்லை.

ஒரு வகையில் இது நுஷூவின் வெற்றி. அது ஒரு கூண்டுக்குள் பிறந்த பறவை. கூண்டு திறந்ததும் பறந்துவிட்டது. அது விட்டுச் சென்ற பாடல்கள் மட்டும் இன்னும் காற்றில் ஒலிக்கின்றன.

ஆதாரங்கள்

மெளனத்தில் ஒலித்த குரல்

மெளனத்தில் ஒலித்த குரல்
Exit mobile version