இன்று (25 அக்டோபர்) கானகலாதரர் மதுரை மணி ஐயரின் பிறந்த நாள். நேற்று இரவு நான் அவருடைய காம்போதியில் திளைத்திருக்க — அருகில் என் மகன் 2022 உலகக் கோப்பை ஆட்டங்களையும் பின்னணிக் காட்சிகளையும் விறுவிறுப்பாகத் தொகுத்திருக்கும் வெப்சீரிஸைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
விடியற்காலையில் ஒரு கனவு. கனவுதான் என்றாலும், காட்சிகள் எங்கெங்கோ மாறினாலும், கணப்பொழுதில் கண்டம் விட்டுக் கண்டம் தாவினாலும் அத்தனையும் துல்லியமாய் நினைவில் இருக்கிறது. நாள் முழுவதும் நினைத்து நினைத்து மயிர்க்கூச்சமடைகிறேன்.
அரையிறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா வென்றதும் மெஸ்ஸியை சோபியா மார்டினெஸ் என்கிற நிருபர் பேட்டியெடுக்கிறார். பேட்டியின் கடைசியில் ஒரு நிருபராகப் பேசாமல் லட்சோப லட்சம் ரசிகர்களின் குரலாக அவள் பேசத் தொடங்குகிறாள்.
“கடைசியாய் உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல நினைக்கிறேன். இது கேள்வியல்ல; ஆனால் இதை உங்களிடம் சொல்லிவிட வேண்டும் என்று நினைக்கிறேன். நிச்சயம் உலகக் கோப்பை நம்மிடம் வரத்தான் போகிறது. நாம் வெல்வதற்காகத்தான் நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் காத்துக் கொண்டிருக்கிறோம். இருப்பினும், நான் சொல்ல வருவது வேறு. நாட்டின் ஒவ்வொரு மனிதரின் வாழ்வினுக்குள்ளும் நீங்களும் உங்கள் ஆட்டமும் ஒன்றரக் கலந்திருக்கின்றன.
நாளை என்ன நடந்தாலும் இந்த விஷயத்தை யாரும் உங்களிடமிருந்து பறித்துவிட முடியாது. நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையிடமும் உங்கள் ஜெர்சி இருக்கின்றது. அது நிஜமான ஜெர்சியோ, போலியான ஜெர்சியோ, ஆனால் ஒவ்வொரு குழந்தையிடமும் இருப்பது உண்மை. இந்த விஷயம் உலகக் கோப்பையை வெல்வதைவிட உயர்வானதென்று நான் நினைக்கிறேன். இந்தத் தருணத்தில் அதற்காக நன்றியைச் சொல்லிவிடத் துடிக்கிறேன். நான் சொல்வதை நீங்கள் உங்கள் இதயத்தில் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். எங்கள் மனத்தில் உங்களுக்கு இருக்கும் இடம் நீங்கள் உலகக் கோப்பையை வென்றால் அடையும் இடத்தைவிட உயர்வான ஒன்று. நன்றி கேப்டன்.”
இந்தக் காட்சியை நான் பல முறை பார்த்து ரசித்ததுண்டு. கனவில் இந்தக் காட்சி காலையில் அலையடித்ததில் ஒன்றும் ஆச்சர்யமில்லை.
சோபியா மார்டினெஸ் பேசிக் கொண்டிருந்தபோதே என் கனவில் கணப்பொழுதில் காட்சிகள் மாறிப் போயின.
கும்பகோணத்தில் கூட்டம் அலையடிக்கிறது. நானும் கூட்டத்தோடு கூட்டமாய் அமர்ந்திருக்கிறேன்.
“மணி ஐயருக்கு எங்க ஜாகை?”, என்று பக்கத்தில் யாரோ கேட்கிறார்கள்.
“அவர் வருவாரான்னு தெரியலைப்பா. அவர் பாடி எத்தனை நாளாச்சு? கேள்விப்படற விஷயமெல்லாம் ஒண்ணும் நல்லபடியா இல்லை. உண்மையா இல்லாம இருக்கணும்னுத்தான் வேண்டிக்க வேண்டியிருக்கு.”
மகாமகக் கச்சேரி என்றால் எள்ளு போட்டால் எள்ளு விழாத கூட்டம் யார் பாடினாலும் வரும். ‘உடம்பு சுகமில்லை’ என்று தொடங்கி ‘இனி பாடவே முடியாது’ என்று விரவி ‘மணி ஐயர் மறைந்தேவிட்டார்’ என்று பரவும் வதந்தி அலைகள் எழுவது இது முதல்முறையல்ல. இதற்கிடையில் மணி ஐயரின் பெயர் கச்சேரி அட்டவணையில் வந்தால் கூட்டத்துக்குக் குறைவாகவா இருக்கும்? மாலை 6 மணிக் கச்சேரிக்கு மதியத்திலிருந்து கூட்டம் அம்மத் தொடங்கிவிட்டது.
யார் பேசுவதையும் கேட்கப் பிடிக்காமல் மணி ஐயர் வந்துவிட வேண்டுமே என்று தவித்தபடி மகாமகக் கூட்டத்தில் நானும் அமர்ந்திருக்கிறேன். நொடிகள் மெதுவாய் நகர்கின்றன. எழுந்து கொஞ்சம் நடந்தால் பரவாயில்லை என்று தோன்றுகிறது. இருக்கிற இடத்தைவிட்டுவிட்டால் இன்னும் கூட்டம் வந்து நெரிசலாகி மணி ஐயரைக் காணமுடியாமல் போய்விடுமோ என்றும் தோன்றுகிறது. அங்கலாய்ப்புக் குரல்களை எல்லாம் பொருட்படுத்தாமல் மணி ஐயரின் சங்கீதத்தை மனத்துள் ஓடவிட்டுப் பார்க்கிறேன். கச்சேரி செட் ரிக்கார்டுகளை ஒவ்வொன்றாய் சுழலவிடுகிறேன். கல்யாணி ராகம் தானம் பல்லவி முடிந்து, ‘மாதர் பிறைக் கண்ணியானை’ ஒலிக்கிறது. ‘கண்டேன் அவர் திருப்பாதம்’ வரும் போது பக்கத்தில் பெரும் ஆரவாரமெழுகிறது. மணி ஐயர் தோன்றியே விட்டார். ‘கண்டறியாதன கண்டேன்’ என்று வாய்விட்டுப் பாடுகிறேன். என் கண்கள் கலங்குகின்றன.
அவர் அமர்ந்து கச்சேரி தொடங்கி எத்தனை நேரம் போனது என்று தெரியவில்லை. ஸ்மரணையே இல்லாமல் ‘கண்டறியாதன கண்டேன்’ என்று அவரைப் பார்த்து உச்சாடனம் செய்துகொண்டே இருக்கிறேன்.
அவர் காம்போதி எடுத்ததுமே ஒரு ‘இன்ப அலை’ மகாமகக் கூட்டத்தில் சுற்றி வருகிறது. “இதைக் கேட்கத்தானே தவம் கிடந்தோம்” என்பதை ஆஹாகாரமாய், பெருமூச்சாய், விசும்பலாய், அழுகையாய், சிரிப்பாய், சிரக்கம்பமாய் அந்த அலை வெளிப்படுத்திச் சுழன்றது.
“ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே”
அவர் பாடப் பாட என் உள்ளம் வேறொரு பொழிப்புரையை எழுதிக் கொண்டே வருகிறது. மணி ஐயரின் பெயரும் சுப்ரமண்யர்தானே! “சுப்ரமண்யரே — உங்களுக்கு என் நமஸ்காரங்கள்” என்று அவர் பாடும் வரியைக் கொண்டே அவருடன் உரையாடுகிறேன்.
“மனஸிஜ கோடி கோடி லாவண்யாய”
பின்ன? கோடி கோடி மன்மதன் வந்தாலும் உங்கள் ஷட்ஜத்தின் லாவண்யத்துக்கு ஈடாகுமா?
அந்த வரிகளில் சவுக்கம், மத்யமம், துரிதம் என்று திரிகாலம் நடக்கிறது.
“அந்த சௌந்தரியத்தைக் கொண்டாட ஒருகாலம் போதுமா என்ன?”, என்று அவரை நோக்கிக் கேட்கிறேன்.
“தீன சரண்யாய”
ஆமாமாம்! வாழ்க்கையே கஷ்டம்தானே — உம்ம பகுதாரியும் நளினகாந்தியும்தானே இந்தத் தீனனுக்குச் சரண்?
பாடல் அனுபல்லவியைக் கடந்து சரணத்துக்குச் செல்கிறது. மனத்தை யாரோ துலக்கிவிட்டது போல அமைதி பெருகுகிறது.
“வாஸவாதி ஸகலதேவ வந்திதாய”
அவரை நோக்கி ஏதோ சொல்ல எழுகிறேன். என் உள்ளிலிருந்தே ஒரு குரல், “சும்மா இரு!”, என்று என்னைக் கடிந்துகொள்கிறது.
அடுத்த வரிக்குச் செல்லாமல் அவர் அதே வரிகளில் நிரவத் தொடங்குகிறார். வார்த்தைகள் என் கண் முன்னே கரைந்து உருகி காணாமல் வடிகின்றன.
தார ஸ்தாயியில் நிலைபெற்று நின்று காம்போதி ஆரோகணிக்கிறது. அதுவரை அவரை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த கண்கள் தாமாகவே மூடிக் கொள்கின்றன. ‘தேவ’ என்ற ஒரு நீண்ட கார்வை தார ஸ்தாயி காந்தாரத்தில் நிலைக்கிறது. அதுவரை மேடைக்குக் கீழே இருந்த என்னை அந்தக் கார்வை மேடைக்கே இழுத்துச் சென்றுவிட்டது. நான் கழுத்தைத் தூக்கிப் பாடிக் கொண்டிருக்கிறேன்.
பாடுவது நானா? மணி ஐயரா?
இரண்டும் வேறு வேறா என்ன?
பஞ்சமத்தை எட்டித் தொடும் போது அதற்கு ஈடுகொடுக்க என் உடல் ஒருமுறைத் தூக்கிப் போடுகிறது. என் உடல் எனக்கு ஸ்மரிக்கிறது.
நான் சுற்றிப் பார்க்கிறேன். நான் காண்பவரெல்லாம் இதுவரை இங்கு என்ன நடந்ததென்று புரிந்தும் புரியாமலும் தரையில் கால்பாவாமல் மிதந்து கீழிறங்குவதைக் காண்கிறேன்.
ஒரு மனிதனின் குரல் இத்தனை மனிதர்களின் உள்ளுக்குள்ளேயும் நேராகச் சென்று கலப்பதென்பது என்ன மாயம்?
இந்த மணி ஐயருக்கு நாம் என்ன செய்ய முடியு…
என்ற எண்ண அலை அடிக்கும் போதே காட்சிகள் மாறுகின்றன.
சோபியா மெஸ்ஸியுடன் உரையாடிய சூழல் மீண்டும் வருகிறது.
ஆனால் அங்கு மெஸ்ஸி அமர்ந்திருக்கவில்லை. மணி ஐயர் அமர்ந்து கொண்டு, கோடானு கோடி ரசிகர்களின் அன்பின் கதகதப்பைப் பெறும் மெஸ்ஸியைப் போலவே, புன்னகைத்துக் கொண்டிருக்கிறார். சோபியாவின் இடத்தில் நானிருக்கிறேன்.
என் வாய் சோபியா மார்டினெஸ் சொன்ன வார்த்தைகளையே சொல்லத் தொடங்குகின்றன.
“நாளை என்ன நடந்தாலும் இந்த விஷயத்தை உங்களிடமிருந்து யாரும் பறித்துவிட முடியாது.”
இன்று வித்வான் மணி ஐயரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்.
மதுரை மணி ஐயர் (இயற்பெயர்: சுப்பிரமணியன்) 1912 அக்டோபர் 25 அன்று மதுரையில் ஸ்ரீ ராமசுவாமி ஐயர், திருமதி சுப்புலட்சுமி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை ஸ்ரீ எம். எஸ். ராமசுவாமி ஐயர், சார்பு நீதிமன்றத்தில் எழுத்தராகப் பணியாற்றியவர். இருபதாம் நூற்றாண்டின் முதல் இரண்டு பத்தாண்டுகளில் இசை வானில் எரிகல்லைப் போலத் தோன்றி ஒளிர்ந்து மறைந்த புகழ்பெற்ற வித்வான் புஷ்பவனத்தின் சகோதரர் இவர்.
கர்நாடக இசையில் ஆழ்ந்த ரசனையும் புலமையும் கொண்டிருந்த ஸ்ரீ எம். எஸ். ராமசுவாமி ஐயர், தமது ஒரே மகனான மணியும் ஸ்ரீ புஷ்பவனத்தின் இசை மரபைத் தொடர்ந்து வளர்க்க வேண்டும் என்று விரும்பினார். புகழும் பெருமையும் பெற்றிருந்த புஷ்பவனம், 1916ஆம் ஆண்டு தமது 32ஆவது வயதிலேயே காலமானார்.
மணியின் இசைப் பயிற்சி அவருடைய ஒன்பதாவது வயதிலேயே தொடங்கியது. அவரது முதல் குரு ஸ்ரீ ராஜம் பாகவதர் (எட்டயபுரம் ராமச்சந்திர பாகவதரின் சீடர்). ஸ்ரீ ராஜம் பாகவதர், ராமசுவாமி ஐயரின் அண்டை வீட்டில் வசித்தவர் என்பதால், மணியின் இசைப் பயிற்சி குருகுல வாசத்தைப் போன்றே அமைந்தது. ஸ்ரீ புஷ்பவனமும் எட்டயபுரம் ராமச்சந்திர பாகவதரிடம் இசை பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
