இந்த வருடம் நவம்பர் 3, அமெரிக்க அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாக இருக்கப் போகிறது. ஆம். அன்றுதான் அமெரிக்கர்கள் இடைத்தேர்தலில் வாக்களிக்கப் போகிறார்கள். அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் பெயர் வாக்குச்சீட்டில் இடம்பெறாவிட்டாலும், அவருடைய அரசின் செயல்பாடுகளையும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான அரசியல் பாதையையும் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கப் போகிறது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அதிபரின் பதவிக்காலத்தின் நடுப்பகுதியில் நடைபெறும் காங்கிரஸ் தேர்தல்கள்தான் இடைத்தேர்தல் (Midterm Election) எனப்படுகின்றன. இந்தத் தேர்தலில் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. ஆனால், காங்கிரஸில் எந்தக் கட்சிக்கு அதிக அதிகாரம் கிடைக்கும் என்பதை வாக்காளர்கள் தீர்மானிக்கிறார்கள்.
அமெரிக்க காங்கிரஸ் இரண்டு அவைகளைக் கொண்டது.
பிரதிநிதிகள் சபை (House of Representatives): இதில் மொத்தம் 435 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுவதால், 2026 தேர்தலில் 435 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
செனட் சபை (Senate): இதில் மொத்தம் 100 உறுப்பினர்கள் உள்ளனர். பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். ஒரே நேரத்தில் அனைத்து இடங்களுக்குமான செனட் தேர்தல் நடைபெறாது. 2026ல் 35 செனட் உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் நடைபெறுகின்றன.
இந்த இரண்டு சபைகளும் தான் நாட்டின் சட்டங்களை நிறைவேற்றுவது, அரசுச் செலவுகளுக்கு ஒப்புதல் அளிப்பது, அரசு நிர்வாகத்தை விசாரிப்பது, அதன் செயல்பாடுகளைக் கண்காணிப்பது போன்ற அதிகாரங்களைக் கொண்டுள்ளன. கூட்டாட்சி நீதிபதிகள் உள்ளிட்ட பல முக்கியப் பதவிகளுக்கான அதிபரின் நியமனங்களை உறுதிப்படுத்துவதிலும் செனட் சபைக்கு முக்கியப் பங்கு உண்டு.
அதனால் தான் குடியரசுக் கட்சி (Republican Party) காங்கிரஸின் கட்டுப்பாட்டைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளுமா? அல்லது ஜனநாயகக் கட்சி (Democratic Party) போதுமான இடங்களைக் கைப்பற்றி அரசியல் சமநிலையை மாற்றுமா என்பது இந்தத் தேர்தலின் மையக் கேள்வியாக இருக்கிறது.
இந்த வருடம் 36 மாநிலங்களில் மட்டும் ஆளுநர் தேர்தல்களும், 50 மாநிலங்களிலும் சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களும் நடைபெறுகின்றன. 2026 தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், செனட் சபையில் தற்பொழுது குடியரசுக் கட்சிக்கு 53ம் ஜனநாயக கட்சிக்கு 47 செனட்டர்களும் உள்ளனர்.
ஜனநாயகக் கட்சி செனட் சபையில் பெரும்பான்மை பெற, மேலும் நான்கு இடங்களைக் கைப்பற்ற வேண்டும்(47+4). பிரதிநிதிகள் சபையில் 435 இடங்களுக்கும் தேர்தல் நடைபெறுவதால், அங்கு அரசியல் சமநிலை மாறுவதற்கான வாய்ப்பு அதிகம். எல்லா மாநிலங்களிலும் வெற்றி பெறுவது எந்தக் கட்சிக்கும் அவசியமில்லை. போதுமான எண்ணிக்கையிலான தனித்தனி தொகுதிகளிலும் செனட் தேர்தல்களிலும் வெற்றி பெறுவதுதான் முக்கியம்.
அதிகரித்து வரும் அன்றாட வாழ்க்கைச் செலவுகள், குடியேற்றக் கொள்கை பெயரில் நடக்கும் அராஜகங்கள், மருத்துவச் செலவுகள், கல்வி, ஜனநாயகத்தின் எதிர்காலம், பொதுமக்களின் பாதுகாப்பு, வெளிநாட்டுக் கொள்கைகள் எனப் பல பிரச்சினைகள் வாக்காளர்களின் முடிவை வெவ்வேறு திசைகளில் இழுக்கின்றன. தற்போதைய அரசின் கொள்கைகளைத் தொடர்ந்து ஆதரிப்பவர்கள் ஒருபுறமும் நாட்டுக்கு வேறு அணுகுமுறை தேவை என்று கருதுபவர்கள் மறுபுறமும் இரு கட்சிகளின் மீதும் அதிருப்தி கொண்டவர்களுமாய் வாக்காளர்கள் சிதறுண்டு இருக்கிறார்கள்.
செப்டம்பர் 28, 2026 முதல் அக்டோபர் 4 வரை நடத்தப்பட்ட Pew Research Center கருத்துக்கணிப்பின்படி, 84 சதவீதப் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், காங்கிரஸ் தேர்தலில் தங்கள் வாக்கைத் தீர்மானிப்பதில் பொருளாதாரம் மிக முக்கியமானது என்று கூறியுள்ளனர். ஜனநாயகத்தின் எதிர்காலம் 73 சதவீதத்தினருக்கும், மருத்துவ வசதிகள் 68 சதவீதத்தினருக்கும், கல்வி 62 சதவீதத்தினருக்கும், குடியேற்றம் 59 சதவீதத்தினருக்கும் முக்கியமான பிரச்சினைகளாக உள்ளன. வெளிநாட்டுக் கொள்கை, எரிசக்தி, குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துதல் ஆகியவையும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளன.
பொருளாதாரம் இரு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கும் முக்கியமான பிரச்சினையாக இருந்தாலும் காரணம் என்ன, அதற்கான தீர்வு என்ன என்பதில் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு உள்ளது. வரிகளைக் குறைப்பதும் வணிக நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளைக் குறைப்பதும் முதலீடுகளையும் வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கும் என்று சிலர் நம்புகிறார்கள். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு, மலிவான மருத்துவ வசதிகள், வீட்டு வசதிகள் போன்றவை தேவை என்று வலியுறுத்துகிறார்கள்.
நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைவது என்பது ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்க்கையும் எளிதாகிவிட்டது என்று அர்த்தமல்ல. தேசிய அளவில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டாலும், தங்கள் வீட்டின் வரவு செலவுக் கணக்கையும் வைத்தே அரசை மதிப்பிடுகிறார்கள்.
அடுத்த பிரச்சினையாகப் பலராலும் பார்க்கப்படுவது அமெரிக்க அரசியலில் நீண்டகாலமாகப் பெரும் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தி இருக்கும் குடியேற்றக் கொள்கை தான்.
ஆளும் அரசின் பல ஆதரவாளர்கள், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதையும் சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதையும் முக்கியமாகக் கருதுகிறார்கள். நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பது, குடியேற்றச் சட்டங்களைச் செயல்படுத்துவது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசின் கடமை என்பது அவர்களின் வாதம்.
ஜனநாயகக் கட்சியின் பல ஆதரவாளர்களும் குடியேற்றச் சட்டங்கள் அவசியம் என்பதை ஏற்றுக்கொண்டாலும், சட்ட நடைமுறைகளில் உரிய விசாரணை, மனிதாபிமான அணுகுமுறை, குடும்பங்கள் பிரிக்கப்படாமல் இருப்பது, சட்டப்பூர்வமாகக் குடியேறுவதற்கான வழிகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.
இந்த விவாதம் எல்லைப் பாதுகாப்புடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை. வேலை அனுமதி, புகலிடம் கோரும் உரிமை, நாடு கடத்துதல், குடும்பங்களின் நிலை, விவசாயம், கட்டுமானம், மருத்துவம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் குடியேறியவர்கள் வகிக்கும் பங்கு ஆகியவையும் இதில் அடங்குகின்றன.
Pew கருத்துக்கணிப்பில், குடியரசுக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்தவர்களில் 72 சதவீதத்தினர் குடியேற்றக் கொள்கையைத் தங்கள் வாக்கைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான பிரச்சினையாகக் கருதியுள்ளனர். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்தவர்களில் இந்த விகிதம் 53 சதவீதமாக இருந்தது. ஒரே பிரச்சினை வெவ்வேறு வாக்காளர்களிடம் வெவ்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துவதை இது காட்டுகிறது.
அதற்கு அடுத்ததாக வாக்காளர்களைப் பாதிப்பது மருத்துவக் காப்பீட்டுத் தொகை, மருந்துகளின் விலை, மருத்துவமனைக் கட்டணங்கள், மருத்துவரை அணுகுவதற்கான வசதிகள் போன்றவை. மத்திய அரசு மருத்துவ வசதிகளில் எவ்வளவு தலையிட வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மருத்துவச் செலவு என்பது ஒரு கட்சியின் ஆதரவாளர்களுக்கு மட்டுமே உரிய பிரச்சினையல்ல.
கல்வியிலும் பல விவாதங்கள் உள்ளன. பள்ளிகளுக்கான நிதி, மாணவர்களின் கல்வித் தரம், கல்லூரிக் கட்டணம், கல்விக் கடன், பாடத்திட்டம், பெற்றோரின் பங்கு ஆகியவை வாக்காளர்களின் முடிவைப் பாதிக்கின்றன. குறிப்பாக, குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படும் பெற்றோர்கள், தங்கள் மாநிலத்திலும் தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் கல்விக் கொள்கைகளை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள்.
சில வாக்காளர்களுக்கு இந்தத் தேர்தல், அரசின் செயல்பாடுகளை மதிப்பிடும் வாய்ப்பாகவும் உள்ளது. அரசியல் அமைப்புகளின் சுதந்திரம், அதிபரின் அதிகாரத்துக்கு இருக்க வேண்டிய வரம்புகள், அரசு விசாரணைகள், தேர்தல் நிர்வாகம், அதிகாரத்தில் இருப்பவர்கள் பொறுப்பேற்க வேண்டிய அவசியம் ஆகியவை அவர்களின் கவலைகளாக உள்ளன.
குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துதல், காவல்துறையின் செயல்பாடு, சமூகப் பாதுகாப்பு ஆகியவை பலருக்கு முக்கியமானவை. துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்று கருதுபவர்களுக்கும், துப்பாக்கி வன்முறையைக் குறைக்கக் கடுமையான நடவடிக்கைகள் தேவை என்று கருதுபவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது.
எரிசக்திக் கொள்கையிலும் இதேபோன்ற விவாதம் காணப்படுகிறது. அமெரிக்காவில் எண்ணெய், இயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகரிப்பது, எரிசக்தித் தன்னிறைவை மேம்படுத்துவது, விலைகளைக் குறைப்பது ஆகியவற்றுக்குச் சிலர் முக்கியத்துவம் அளிக்கிறார்கள். மற்றவர்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மாசுபாட்டைக் கட்டுப்படுத்துதல், பருவநிலை மாற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.
அதே போல, வெளிநாட்டுக் கொள்கையும் தேர்தலைப் பாதிக்கிறது. ராணுவ உதவி, சர்வதேசப் போர்கள், வர்த்தகம், நட்பு நாடுகளுடனான உறவுகள், பாதுகாப்புச் செலவுகள் போன்ற விஷயங்களில் அதிபரின் முடிவுகள் வாக்காளர்களின் கருத்தை மாற்றக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. இவற்றில் அதிபருக்கு முக்கியப் பங்கு இருந்தாலும், நிதி ஒதுக்கீடு, அரசு நடவடிக்கைகளைக் கண்காணித்தல் போன்றவற்றில் காங்கிரஸுக்கும் அதிகாரம் உண்டு.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தற்போதைய அரசியல் அமைப்புகளில் பெரிய மாற்றங்கள் தேவை. அவை சாதாரண மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று கருதுபவர்கள், பழைய நடைமுறைகளைச் சவாலுக்கு உட்படுத்துவதாக வாக்குறுதி அளிக்கும் தலைவர்களை ஆதரிக்கலாம்.
ஒருவர் ஒரு அரசியல் முடிவைத் தேவையான சீர்திருத்தமாகப் பார்க்கலாம். மற்றொருவர் அதே முடிவை ஜனநாயக அமைப்புகளுக்கான அச்சுறுத்தலாகக் கருதலாம். இந்த வேறுபட்ட பார்வைகளும் அமெரிக்க அரசியலில் நிலவும் பிளவுகளைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. ஆனாலும், அமெரிக்க மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்களா அல்லது தற்போதைய அரசில் திருப்தியாக இருக்கிறார்களா என்பதற்கான பதில் ஒரே மாதிரியாக இல்லை.
டொனால்ட் ட்ரம்ப்பின் அணுகுமுறையை வலுவாக ஆதரிப்பவர்களும் இருக்கிறார்கள். எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். அரசியல் கட்சி எது என்பதைவிட, தங்கள் குடும்பத்தின் செலவுகளையும் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் அதிகம் உள்ளனர். ஒரு சாதாரணக் குடும்பத்தின் அரசியல் சிந்தனை பல நேரங்களில் வெள்ளை மாளிகையிலிருந்து தொடங்குவதில்லை. உணவு, வீடு, எரிசக்தி, காப்பீடு, மருத்துவச் செலவுகள் ஆகியவை தொடர்ந்து குடும்ப வருமானத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும்போது, நாட்டின் பொருளாதாரம் வளர்கிறது என்ற அறிவிப்பு மட்டும் போதாது. வாழ்க்கைச் செலவைக் குறைக்க தற்போதைய அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று பலரும் கருதுகிறார்கள். இன்னும் சிலர் குடியேற்ற அமலாக்கம், மருத்துவக் கொள்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தும் விதம் ஆகியவற்றில் மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
அரசின் முடிவுகளை காங்கிரஸ் இன்னும் தீவிரமாக விசாரிக்க வேண்டும், அதிபரின் அதிகாரத்தைக் கண்காணிக்க வேண்டும், தேவையான இடங்களில் அரசின் கொள்கைகளுக்கு எதிராகக் கேள்வி எழுப்ப வேண்டும் என்றும் சில வாக்காளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அவர்களைப் பொறுத்தவரை, இடைத்தேர்தல் என்பது எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பது மட்டுமல்ல. அதிபருக்கும் ஆளும் கட்சிக்கும் மக்களின் அதிருப்தியைத் தெரிவிக்கும் வாய்ப்பும்கூட.
ட்ரம்ப்பையும் குடியரசுக் கட்சியையும் ஆதரிப்பவர்களுக்கு, கடுமையான எல்லைப் பாதுகாப்பு, குடியேற்றக் கட்டுப்பாடுகள், வரிக் குறைப்புகள், வணிக நிறுவனங்களுக்கான குறைந்த கட்டுப்பாடுகள், உள்நாட்டு எரிசக்தி உற்பத்தி, பழமைவாத நீதிபதிகளின் நியமனங்கள், பொதுமக்களின் பாதுகாப்பு, மத்திய அரசின் அதிகார வரம்பைக் குறைத்தல் என முன்னுரிமைகள் இருக்கலாம். அதற்கு அவர்கள் முக்கியத்துவம் அளிக்கலாம்.
அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற இன்னும் கால அவகாசம் தேவை என்று சிலர் நினைக்கிறார்கள். காங்கிரஸின் கட்டுப்பாடு ஜனநாயகக் கட்சிக்குச் சென்றுவிட்டால், தற்போதைய அரசின் திட்டங்கள் தடைப்படலாம் என்றும் கருதுகிறார்கள் ஆளுங்கட்சியினர்.
ஆகவே, ஆளும் கட்சியை ஆதரிப்பவர்கள் அதன் ஒவ்வொரு முடிவையும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று பொருள் கொள்ளக்கூடாது. அதேபோல், அதிபரை எதிர்ப்பவர்கள் அனைவரும் எதிர்க்கட்சியின் ஒவ்வொரு கொள்கையையும் ஆதரிக்கிறார்கள் என்றும் கூற முடியாது.
Pew Research Center 2026 அக்டோபரில் வெளியிட்ட கருத்துக்கணிப்பில், 44 சதவீதப் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தங்கள் காங்கிரஸ் வாக்கு ட்ரம்ப்புக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளனர். 19 சதவீதத்தினர் அவருக்கு ஆதரவான வாக்கு என்றும், 36 சதவீதத்தினர் ட்ரம்ப் தங்கள் முடிவிற்குக் காரணமல்ல என்றும் கூறியுள்ளனர்.
ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களை ஆதரிப்பவர்களில் 84 சதவீதத்தினர் தங்கள் வாக்கு ட்ரம்ப்புக்கு எதிரானது என்று கூறியுள்ளனர். குடியரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரிப்பவர்களில் 48 சதவீதத்தினர் தங்கள் வாக்கு ட்ரம்ப்புக்கு ஆதரவானது என்று தெரிவித்துள்ளனர்.
இந்தத் தகவல்கள் மூலம் அதிபரின் செயல்பாடுகள் பல வாக்காளர்களின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால், எல்லோரும் இந்தத் தேர்தலை அதிபருக்கு ஆதரவா, எதிர்ப்பா என்ற ஒரே கேள்வியின் அடிப்படையில் அணுகவில்லை. சிலருக்கு உள்ளூர் வேட்பாளர்களின் செயல்பாடுகளும் குறிப்பிட்ட கொள்கைகளுமே முக்கியம்.
மேலும், அரசின் மீது அதிருப்தி இருப்பதால் எதிர்க்கட்சி தானாகவே வெற்றி பெற்றுவிடாது. தற்போதைய அரசின் மீது நம்பிக்கை இல்லாத ஒருவர், எதிர்க்கட்சியின் மீதும் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். சிலர் வாக்களிக்காமல் இருக்கலாம். மற்றவர்கள் தேசிய அரசியலைவிடத் தங்கள் மாநிலம் அல்லது தொகுதியின் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு வாக்களிக்கலாம் என பல கோணங்களில் இடைத்தேர்தலை வாக்காளர்கள் எதிர்கொள்கிறார்கள்.
செனட் தேர்தலின் வெற்றி என்பது அந்தந்த மாநிலத்தின் அரசியல் வரலாறு, வாக்காளர்களின் மனநிலை, வேட்பாளர்களின் செல்வாக்கு, தேர்தல் பிரசார நிதி, கருத்துக்கணிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றன. 2026 அக்டோபர் நிலவரப்படி நார்த் கரோலினா, நியூ ஹாம்ப்ஷயர், கேன்சஸ், மெய்ன், ஒஹாயோ, டெக்சாஸ், அயோவா & அலாஸ்கா மாநிலங்கள் அதிக கவனத்தைப் பெற்றுள்ளன.
இரு கட்சியினருக்கும் செனட் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் பிரதிநிதிகள் சபை தேர்தலின் வெற்றி.
ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி தற்போது வைத்திருக்கும் கடுமையான போட்டி நிலவும் தொகுதிகளைக் கைப்பற்ற முயல்கிறது. குறிப்பாக, நகர்ப்புறம் மற்றும் புறநகரப் பகுதிகள் கலந்துள்ள தொகுதிகளில், அரசின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி கொண்ட வாக்காளர்களை ஈர்க்கும் வாய்ப்பு இருக்கலாம்.
குடியரசுக் கட்சி, குடியேற்றம், வரிவிதிப்பு, அரசுக் கட்டுப்பாடுகள், பொதுமக்களின் பாதுகாப்பு போன்ற விஷயங்களில் தங்கள் கொள்கைகளை ஆதரிக்கும் வாக்காளர்களின் ஆதரவைத் தக்கவைத்துக்கொண்டு பெரும்பான்மையைப் பாதுகாக்க முயல்கிறது.
அக்டோபர் 8ம் தேதி வெளியிடப்பட்ட Pew Research Center கருத்துக்கணிப்பில், நாடு முழுவதுமான பிரதிநிதிகள் சபைத் தேர்தல் விருப்பத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு 44 சதவீதமும், குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு 36 சதவீதமும் ஆதரவு இருந்தது. இது தேசிய அளவிலான வாக்காளர் விருப்பத்தைக் காட்டும் கணிப்பு மட்டுமே. எந்தக் கட்சி எத்தனை இடங்களை வெல்லும் என்பதற்கான நேரடி கணிப்பு அல்ல.
ஒரு தொகுதியில் ஏற்கெனவே உள்ள உறுப்பினரின் செல்வாக்கு, தொகுதியின் எல்லைகள், வேட்பாளர்களின் தரம், பிரசார நிதி, உள்ளூர் பொருளாதாரம், வாக்காளர் வருகை ஆகியவை முடிவைத் தீர்மானிக்கின்றன. தொகுதி எல்லைகளை மறுவரையறை செய்வது தொடர்பான சட்ட விவகாரங்களும் சில இடங்களில் போட்டியின் தன்மையை மாற்றக்கூடும்.
குடியரசுக் கட்சி பிரதிநிதிகள் சபையிலும் செனட் சபையிலும் தனது பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொண்டால், ட்ரம்ப் அரசின் சட்டமன்றத் திட்டங்களை முன்னெடுப்பது ஒப்பீட்டளவில் எளிதாகலாம். இருப்பினும், குடியரசுக் கட்சிக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் முடிவுகளை எடுப்பதில் சிக்கல்கள் வரலாம்.
ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சபையைக் கைப்பற்றினால், அரசின் நடவடிக்கைகளை விசாரிக்கவும், கொள்கைகளைச் சவாலுக்கு உட்படுத்தவும், சில சட்ட முன்மொழிவுகளைத் தடுக்கவும் அல்லது மாற்றங்களுடன் முன்னெடுக்கவும் வாய்ப்பு கிடைக்கும். அரசுச் செலவுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் அதன் செல்வாக்கு அதிகரிக்கும்.
செனட் சபையையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றினால், சட்ட முன்மொழிவுகள், அதிபரின் முக்கிய நியமனங்கள் தொடர்பாக அதன் செல்வாக்கு அதிகரிக்கலாம். ஆனால், காங்கிரஸின் ஒரு அவையையோ இரு அவைகளையோ கைப்பற்றுவதால் மட்டும் அதிபரைப் பதவியிலிருந்து நீக்கிவிடவோ தாங்கள் விரும்பும் எல்லாச் சட்டங்களையும் தானாகவே நிறைவேற்றவோ முடியாது.
அதிபருக்கு நிர்வாக அதிகாரம் தொடர்ந்து இருக்கும். முக்கியமான சட்டங்கள் நிறைவேற இரு அவைகளின் ஒப்புதலும் அதிபரின் ஒப்புதலும் தேவைப்படலாம். அதிபர் மறுப்பை மீறுவதற்கும் குறிப்பிட்ட வாக்கு எண்ணிக்கை தேவைப்படும்.
எனவே, காங்கிரஸின் கட்டுப்பாடு மாறினால் பேச்சுவார்த்தைகள் அதிகரிக்கலாம். அதே நேரத்தில் அரசியல் முட்டுக்கட்டைகளும் உருவாகலாம். குறிப்பாக, அரசின் செலவுகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், கூட்டாட்சி அரசின் செயல்பாடுகளே பாதிக்கப்படக்கூடும்.
இந்தத் தேர்தலின் வெற்றியைத் தீர்மானிக்கப் பல காரணிகள் இருந்தாலும் பொருளாதாரம், வாக்காளர் பங்கேற்பு, சுயேச்சை வாக்காளர்கள், வேட்பாளர்களின் தரம், தேசிய அரசியல் மனநிலை, உள்ளூர் பிரச்சினைகள், பிரசார நிதி & தொகுதி எல்லைகள் அதிமுக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன.
கருத்துக்கணிப்புகள் தேர்தல் போக்குகளைப் புரிந்துகொள்ள ஓரளவு உதவுகின்றன. ஆனால் அவை இறுதி முடிவுகள் அல்ல. ஒவ்வொரு கருத்துக்கணிப்புக்கும் பிழை வரம்பு உண்டு. அது நடத்தப்பட்ட காலத்தின் வாக்காளர் மனநிலையையே பிரதிபலிக்கிறது. ஒரு கருத்துக்கணிப்பில் முன்னிலையில் இருப்பவர் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என்று கூற முடியாது.
இந்தத் தேர்தலின் முடிவுகள் 2027 ஜனவரியில் தொடங்கும் 120வது காங்கிரஸின் உறுப்பினர்களைத் தீர்மானிக்கும். பிரதிநிதிகள் சபையைக் கட்டுப்படுத்தும் கட்சி சபாநாயகரைத் தேர்ந்தெடுத்து முக்கியக் குழுக்களை வழிநடத்தும். செனட் சபையிலும் பெரும்பான்மைக் கட்சி தனது தலைமைப் பொறுப்புகளையும் குழுக்களின் தலைமையையும் தீர்மானிக்கும்.
அரசியல் கட்டுப்பாடு மாறினால், புதிய பெரும்பான்மைக் கட்சி சட்டமன்ற முன்னுரிமைகளை மாற்றவும், அரசு நடவடிக்கைகளை விசாரிக்கவும், நிதி ஒதுக்கீடு தொடர்பான முடிவுகளில் செல்வாக்கு செலுத்தவும் முடியும்.
குடியரசுக் கட்சி தனது கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொண்டால், ட்ரம்ப் அரசு தற்போதைய சட்டமன்றத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும். ஆனால் எந்த முடிவாக இருந்தாலும், கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகளும் அரசியல் பேச்சுவார்த்தைகளும் முக்கியப் பங்கு வகிக்கும்.
இந்தத் தேர்தல் 2028 அதிபர் தேர்தலுக்கு முன்பாக அமெரிக்க மக்களின் மனநிலையை வெளிப்படுத்தும் ஒரு முக்கியக் குறியீடாகவும் இருக்கும். 2028 தேர்தலின் முடிவை இது தீர்மானிக்காது. ஆனால் வாக்காளர்களின் ஆதரவு எந்தத் திசையில் மாறுகிறது என்பதை அரசியல் தலைவர்களும் வேட்பாளர்களும் ஆராய்வார்கள்.
2026 அமெரிக்க இடைத்தேர்தல் என்பது குடியரசுக் கட்சிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் இடையிலான போட்டி மட்டுமல்ல, நாட்டின் அரசியல் பாதையை மாற்றக்கூடிய மக்களின் குரல் எவ்வளவு வலிமையானது என்பதை உலகுக்குக் காட்டும் ஒரு முக்கியமான ஜனநாயகத் தருணம்.
வாக்களிக்க மறந்து விடாதீர்கள்! (அமெரிக்கக் குடிமக்களுக்கு மட்டும் சொல்லப்பட்டது.) 🙂
