மிகச் சில நேரங்களில் மட்டுமே கூடும் அமைதி அது. மடிந்திருந்த காலுக்கு கீழே கொஞ்சம் பெரிய அளவிலான கருப்பெறும்புகள் வரிசையாக சென்று கொண்டிருந்தன.ஆல இலைச்சருகுகளின் துகள்கள் சுடிதாரின் கால்பகுதிகளில் ஒட்டிக் கொண்டிருந்தன. கணுக்காலின் கருந்தடங்களில் கல்லழுந்தி மிகசன்னமான வலி இருந்தது. அவள் அங்கில்லாதபடி எங்கோ இருந்தாள்.மலையிலிருந்து யாரோ தூக்கி மேல்நோக்கி வீசியது போல்.அங்கு எதுவுமே இல்லாத வெளி ஒன்றின் நடுவே ..உடலற்று நிற்பதுபோல்.எல்லாம் புரிந்ததும் எதுவுமே புரியாதததுமானது ஒன்றில் விழுந்தது போல் இருந்தது..
கீழே எறும்புகள் இலைசருகின் மேல் ஒரு பாதை அமைத்து வரிசையாக ஊர்ந்து கொண்டிருந்தன.
முன்சென்ற எறும்பின் பின்பக்கத்தை தொட்டது மற்றொன்று, நின்று திரும்பி ஏதோ சொன்னது அது…இதன் வாயிலிருந்த சிறுதுளியில் ஒரு பக்கத்தை அதன் கால்களின் பிளவினால் பிடித்தபடி முன்னேறியது இரண்டும்.
“இப்டியே உக்காந்திருந்தா என்ன பண்றது சசி ?,” என்றான்.அவனுடைய குரல் கிணற்றின் ஆழத்திலிருந்து ஒலிப்பது போலிருந்தது அவளுக்கு.நான்கடி தூரத்தில்தான் அவன் கால்கள் இருந்தன. ‘ஆரம்பநாட்களில் அது மட்டுமே அவனாயிருந்த நேரங்களை நினைத்துக் கொண்டாள். கால்கள் வருகின்ற ஒலியும் அதன் வடிவமும் மட்டுமே அவளை ஒளி பெறச் செய்த நாட்கள். அப்படியே இருந்திருக்கலாம். எப்போதும் கனவுகள் என்பவை இனிமையானவைதான்.நாம்தான் அதில் யதார்த்தமென்னும் கசப்பை ஊற்றி கிளறி இறக்குகிறோம். பிறகு இரண்டுமற்ற ஒன்றை வாழ்நாள் முழுவதும் வைத்து வைத்து உண்கிறோம், தீரா உணவாக.
“ஏய்..பசிக்குது டி..மணி ரெண்டு.கீழ இறங்கி போனாதான் கொஞ்ச நல்ல ரெஸ்டாரன்ட் கெடைக்கும்..இங்கெல்லாம் வாயில் வைக்க முடியாது.இப்ப எழுத்துருக்க முடியுமா?முடியாதா?”
எழுந்து நின்று சுரிதாரின் பின்புற சருகுகளைத் தட்டிவிட்டாள்.சட்டென்று சாய்ந்து விழப் பார்த்தவளை முழங்கையை ப் பிடித்து நிறுத்தினான். “சடார்னு எழுந்து திரும்பறீயே!..தல சுத்தாது?”.
“அதில்லை..கால் கொஞ்சம் மரத்து போச்சு.”
“அப்ப கொஞ்சம் நேரம் அசையாம நில்லு”, பிடியை விடாமல் இருந்தான்.
சட்டென்று யதார்த்தம் இருவருக்கும் பிடிபட மலுக்கென்று அவளுக்கு கண்ணீர் திரண்டெழுந்தது. அவனும் வேறுபக்கம் திரும்பி கொண்டான்.உதட்டைகடித்து அடக்கியவன்,”இப்ப பரவாயில்லையா?”,
“ம்”.
கையை விட்டுவிட்டு அவளின் வயிற்றுப்பகுதியில் ஏறிக் கொண்டிருந்த எறும்பை தட்டி விட்டான்.
சசிக்கு , கிளம்பும் நேரத்தில் அவனை மிகுந்த குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குகிறோமோ? ,என்று தோன்றியது.இனி அவன் ஊருக்கு கிளம்பும்வரை அழக்கூடாது என நினைத்துக்கொண்டே வழியும் கண்ணீரை அழுத்தித் துடைத்துக் கொண்டாள்.
வண்டியில் ஏறி அமர்ந்தவுடன், “நல்லா பிடிச்சுக்க..வளைவு அதிகம்” .என்றான்
“ம்”.
மலைப்பாதை சுழன்று சுழன்று இறங்கியது. மேலிருந்து இறங்குவது கனவிலிருந்து கால் பிடித்து இழுத்து கீழே போடுவது போலிருந்தது. அவளுக்கு மலைகள் பிடிக்கும்.அவற்றில் மட்டுமே அவளால் நிகழ்ந்திருத்தலை உணரமுடிகிறது. தேவதைகள் வசிக்கும் இடங்கள் மலைகள் என்று எப்போதும் தோன்றும். பறவைகள் மட்டுமல்ல.மரங்கள், பாறைகள், விலங்குகள் அனைத்தும் மேலிருந்து கீழே பார்ப்பவை.அங்கிருக்கும் அனைத்தும் சிறகுகள் கொண்டவை.மலைப்பகுதியின் நாய்கள் பாறை முனையில் நின்று பார்க்கின்றன.அவை அந்நிலத்தை ஆள்கின்றவை போல தோன்றும். சமநிலப்பகுதிக்கு மீள்கையில் மனித உணர்வு மீண்டுவிடுகிறது.
போனவாரம் இந்த நேரம் இருந்த மனநிலை அப்படியே வேறொன்றாக மாறி வதைக்கிறது. அடிவயிற்றில் அதன் இருப்பு இருவரையும் அதனைத் தவிர வேறொன்றையும் நினைக்க ஒட்டாது அடிக்கிறது. வரமாய் கேட்டுக் கேட்டு வந்தது ..இன்று ஏன் வந்தது எனத் தோன்றுகிறது. மனிதன் சில நேரம் தன் வாழ்வில் பின்னோக்கி சென்று மாற்றமுடியும் தருணங்களை நினைத்து ஏங்குகிறான்.
போனவாரம் இதே நாளில்தான் ஜுனியர் டாக்டர். மதுமதி அதனைக் கூறினார். அவர் சொன்னதைக் கேட்கும்போதே , பள்ளத்தில் எண்ணாமல் கால் வைத்தது போன்று நிலை தடுமாறிதான் போயிற்று. சொல்லி முடித்தவுடன், ” மேம் பேசுவாங்க..அதற்குள் ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணி தேதி சொல்லுங்க” ,என்று மறுபடி வெயிட்டிங் ரூமுக்கு அனுப்பிவிட்டார். கண்ணிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்து கொண்டிருக்கும் இவளை பார்க்க முடியாது அவன் திரும்பி கொண்டான்.சமாதானப் படுத்த சொற்களில்லை என்பதைவிட ..’எங்களுக்கு மட்டும் ஏனிப்படி?.’ என்ற கேள்வி அவனையும் குடைய ஆரம்பித்துவிட்டது.மூன்றுமாத கனவுகளையும் எதிர் நிலையில் கொண்டு நிறுத்திய அதன் பேர் என்னவாக இருக்கும்? .
சாதாரணமாக விதி என்ற வார்த்தையில் அதனை அழைத்துவிட முடியவில்லை.உலகின் மிக கொடூரமான ஒரு வார்த்தை கிடைக்கவேண்டும்.
வேண்டிப்பெற்ற ஒன்றை இன்று மொத்தமாக இல்லாமல் ஆக்கவேண்டும்.எப்போது கிடைக்கும் என ஊகத்திற்கு அப்பால் எதிர்பார்ப்பை விதைத்திருந்த அது இன்னும் இரண்டு நாளில் உருத்தெரியாமல் போகப் போகிறது.ஆயிரம் காரணங்கள் மருத்துவ உலகிலிருந்து கிடைக்கிறது. ஃபோலிக் ஆசிட் குறைபாடு, வம்சாவழி பிரச்சினைகள், உறவுகளுக்குள் திருமணம் ஒத்த குரோமோசோம்கள்..கொண்டுபோய் குப்பையில் கொட்ட வேண்டும் அனைத்தையும் என ஒரு வேகம் வந்தது அவள் மனதில்.
“இதபாரு சசி..லாஸ்ட் எய்ட் இயர்ஸா எனக்கு உன்னை..உன் உடம்பை தெரியும். உன்னால் இந்த குழந்தையை வளர்க்க முடியாது.பொறுமை கிடையாது உனக்கு.சரி அப்படியே வளர்த்தாலும் அது வாழ்நாள் முழுக்க இந்த உலகத்தோடு ஒட்டமுடியாமல் கஷ்டபடும்..பரவாயில்லையா?.நம்ம திருப்திக்காக அதை கஷ்டப்படுத்தனுமா? சொல்லும் மா.”. கண்ணாடியின் வழியே டாக்டர் விசாலாட்சியின் கண்கள் வட்டமாக பெரிதாக தெரிந்தன.
“இப்போது அதற்கு மூளை கூட முழுசா வளரலை. வலி தெரியாது.இவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிச்சதே நல்லதா போச்சு”.
“அதுதான் மேம்..ஐந்தாவது மாதம் ஸ்கேன் எடுத்து பார்த்து ..அப்பவும் ஸ்கல் ஃபார்ம் ஆகலன்னா பண்ணிக்கலாமா?”
கண்களில் நீரோடிருக்கும் அவளை டாக்டரின் கண்கள் ஐந்து நொடிகள் அசையாமல் பார்த்தன.
“செய்யலாம்..ஆனா இதுதான் சரியான நேரம்.. இதை தாண்டினாலும் இப்படித்தான் இருக்கும். அப்ப குழந்தையோட மற்ற உறுப்புகள் நன்றாக பெரிதாக வளர ஆரம்பிக்கும் ..அப்போது செய்வது உனக்கும் அதற்கும் சிரமமாகிவிடும்.யோசித்து சொல்”.
சிறிது சலிப்பையும் கோபத்தையும் அந்த குரலில் முதன்முதலில் கேட்டாள்.
அப்போதே முடிவாகிவிட்டது.. இந்த இருப்புக்கான இல்லாமை. மீண்டும் முளைவிடக்கூடிய நிலமா இது? இல்லை…’ வழிச்சு வாரி போட்டா இனிமே உண்டாகுமான்னு கேட்டியா?’ சின்ன மாமியின் குரல் ஃபோனைத் தாண்டி ஆங்காரமாக ஓங்கி இவள் காதுக்குள்ளும் ஒலிக்கத்தொடங்கி இன்றோடு ஒரு வாரம் முடிகிறது.
நாளை இல்லாமல் போகப்போகும் ஒன்றோடு இந்த பயணம். மூன்றுமாதமாக பாதுகாப்பாக வீடுதாண்டாமல் இருந்த விரதத்தை முடிக்க வேண்டி கிளம்பி வந்தது.
.
“இதோ இங்க சாப்டுக்கலாம் சசி.. “
கிளம்பிய இடத்திலிருந்து ஒரு ஐந்து கிலோமீட்டர்கூட தாண்டவில்லை. மலைப்பாதை இன்னும் இருபத்தைந்து கி.மீ மிச்சமிருந்தது.இதற்கா இத்தனை அவசரம். இன்னும் கொஞ்சம் அங்கேயே உட்கார்ந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டாள் சசி. எப்போதும் ஒரு இடத்தில் அமராத கால்கள் அவனுக்கு. ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். அதுதான் வாழ்க்கை, அதற்குபெயர்தான் உழைத்தல் என்பதில் மாற்றில்லாத முடிவு அவன் மனதிலுண்டு.
இறங்கி சென்று இருவரும் அமர்ந்தார்கள். பார்ப்பதற்கு சுமாராக இருந்தாலும் மிக சுத்தமாக இருந்தது அந்த ஹோட்டல். ஹோட்டல் என்பதைவிட ஒரு ஷெட் அவ்வளவுதான் .அதனை ஒட்டி ஒரு கூரை வேய்ந்த நீண்ட கூடம்போல் அமைப்பு. அதில் சமையல் ஓடிக் கொண்டிருந்தது. மொத்தமே ஐந்துபேர்தான். பெரிய ஜோடி ஒன்று நடுத்தர வயதுஜோடி ஒன்று பையன் ஒருவன். பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தனர்.
கூட்டமென்று ஒன்றும் அதிகமில்லை. இவர்களை தவிர இரண்டு ஜோடிகள்.அத்துடன் நான்கு ஆண்கள் அவ்வளவுதான்.அனைவரும் காத்துக் கொண்டிருந்தார்கள் எனப் பட்டது.அந்த பெரியவர் அருகில் வந்து ‘கொஞ்சம் நேரம் பொறுங்க. ஆயிட்டே இருக்கு’ என்றார். தலையாட்டியவன் அவர் சென்றவுடன் ‘கிளம்பலாமா.. வேற எங்கயாவது சாப்டுக்கலாம். லேட்டாகும் போலருக்கு. இருட்டறதகுள்ள எறங்கனும்’ என்றான்.
“மணி 1:30 தான ஆகுது. அதுக்குள்ள எப்படி இருட்டும்? சாப்ட்டே போலாம்”.
“எனக்கு நாளைலருந்து நிறைய வேலருக்கு சசி. நாளைக்கு உன்ன ஹாஸ்பிடல்ல சேக்கனும், அப்புறம் அடுத்த வாரம் கிளம்ப கரண்சி மாத்திவய்க்கனும். பேக்கிங் வேல, அப்றம் கம்பெனி டீலர்ஸ் அக்ரிமெண்ட் ன்னு நிறைய வேல. இங்க உக்காந்துருக்க நேரத்துல போய்ட்டே இருக்கலாம்னு பாக்கறேன்.’ மேலே இவனிடம் பேச முடியாது. முடிவு செய்துவிட்டான்.
அவள் எழுந்திருக்கும்போது சரியாக இலையுடன் வந்தார் பெரியவர். இலையை போட்டு தண்ணீர் வைத்துவிட்டு சென்றார். அந்த அம்மாள் ஒரு சிறுநுனி வாழையிலையில் சமைத்த அனைத்தையும் வைத்து அங்கிருந்த அன்னபூரணியின் படத்துக்கு கீழே வைத்து கற்பூர ஆரத்தி காட்டினாள். ஐந்துபேரும் கண்மூடி நின்றுகும்பிட்டனர். ஒரு இரண்டுநிமிடம் மலையின் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. இவன் எரிச்சலாவது நன்றாகவே தெரிந்தது.
அடுத்து ஒரு இலையை வெளியே மேட்டுப்பாறையில் எடுத்து சென்று வைத்துவிட்டு நின்று “த்சொ..த்சொ” என்று கூப்பிட்டாள்.
ஒரு பெட்டை நாய் எங்கிருந்தோ ஓடிவந்தது. நகரத்தில் உள்ளதுபோல் அல்லாமல் அந்த பசுமையின் செழிப்பு அதன் உடலிலும் இருந்தது. வயிறு காம்புகள் சுரந்து ஆறுதுளை துருத்தி போல் பெருத்திருந்தது. இலையில் இருந்ததை மிக ஆவேசமாக சாப்பிட ஆரம்பித்தது. சசிக்கு அது சோற்றை மொத்தமாக கடித்துப் பிய்த்து சாப்பிடுவது போல் தோன்றியது. அது சாப்பிட ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே நான்கு குட்டிகள் கொழுக் மொழுக் என்று ஓடி வந்தன.வந்த வேகத்தில் அதன் மடியில் வாய் வைக்க ஓடின.சாப்பிடும் அதே ஆவேசத்துடன் திரும்பி “வள்’ ளென்று குலைந்தது.சிதறி பறந்தன நான்கும்.மறுபடி நாய் சாப்பிட ஆரம்பித்தது. அதில் ஒன்று மட்டும் அதனை உற்று பார்த்துக்கொண்டே நெருங்கி வந்தது. வரும்போது முக்கால் வாசி சோற்றை முடித்து கடைசி இலையில் படிந்த சாப்பாடு நக்கும் அளவிற்கு குறைந்திருந்தது.உர்ரென்று ஒரு உறுமலுடன் அது நக்கி சாப்பிட்டுகொண்டிரருந்தது. அதை கவனித்துக் கொண்டே நெருங்கி வாய்வைத்து சப்ப ஆரம்பித்திருந்தது அந்த குட்டி. உர்ரென்ற சப்தத்துடன் அதனை ஓர கண்ணால் பார்த்துக்கொண்டே இலையை நக்கி கொண்டிருந்தது நாய். பிறகு மற்ற மூன்றும் வந்து குடிக்க ஆரம்பித்தன.அப்படியே சாய்ந்து மேட்டில் ஒருக்களித்து படுத்து நாய். அப்போதுதான் ஐந்தாவதாக ஒரு குட்டி எங்கிருந்தோ மெல்ல வந்தது.
இடுப்பில் கைவைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் ஓட்டல் அம்மா.அவளை அப்படி பார்க்கையில் ஊரின் பெரிய தேரடிக்கு பக்கத்து முக்கில் நிற்கும் உடைந்த சின்ன தேர் போல இருந்தாள்.
*தோ வருது பாரு சோனி” என்றாள் அந்த அம்மாள்.. “எல்லாம் உறிஞ்சி முடிச்சு ஏதாவதிருந்தா சப்பிட்டு கெடக்க..”
அவள் சொன்னது போலவே எல்லாம் நெருக்கியடித்து குடித்துக் கொண்டிருந்தன. இது மட்டும் உள் செல்வதும் வெளி தள்ளப்படுவதுமாக தள்ளாடியது.
“சாப்பாடு வந்துடுச்சு சசி ” என்றான் .
இலையை தண்ணீர் தெளித்து சுத்தப்படுத்தினாள்.கோஸ் பொரியலும் உருளைகிழங்கு வறுவலுமாக எப்போதும் உள்ள ஹோட்டல் மெனு தான்.. அப்போதுதான் எவ்வளவு பசியுடன் இருந்தோம் எனத் தோன்றியது அவளுக்கு.நல்ல மணமாக இருந்த ருசிக்கு சாப்பிட ஆரம்பித்தாள்.. முடியும் வரை எந்த எண்ணமும் இல்லாமல் சாப்பிட்டு கொண்டிருந்தாள்..முதல்முறையாக .
“இலையை நீங்கதான் எடுக்கணும்” என்றார் அந்த பெரியவர்.
இலையை குப்பை கூடையில் போட்டுவிட்டு வரும்போது அவள் அவனை நினைத்துக்கொண்டே வந்தாள். இந்நேரம் பில்லை கொடுத்து முடித்திருப்பான் என நினைத்துத் தனக்குள் சிரித்தாள்.
அவன் அவர்களின் டேபிளில் அமர்ந்திருந்தான்.. அதிசயம்தான் என நினைத்துக் கொண்டாள். நாய்க்குட்டிகளுள் ஒன்று பால் குடித்தகளைப்பில் தள்ளாடி அவன் காலுக்கு கீழ் வந்தமர்ந்து இருந்தது..கிட்டதட்ட உண்ட மயக்கம்..அதனிடம் ஏதோ சத்தம் கொடுத்துக் கொண்டிருந்தான்.
அசட்டையாக அது பாதி கண்களை செருகிக் கொண்டு படுத்திருந்தது. மற்றவை எங்கே எனத் தேடினாள். மூன்று குட்டிகள் அருகருகில் நிழலில் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டு படுத்திருந்தன. பெரிய நாய் நிழலில் படுத்திருந்தது. கடைசிகுட்டி அதன் காம்பில் வாய்வைத்து குடித்து கொண்டிருந்தது..இல்லை தூங்கிக் கொண்டிருந்தது. தூக்கத்தினூடே அவ்வப்போது உறிஞ்சியது.
அதை பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள். மலைக்காற்று மரங்களினூடே சலசலத்தது.
“உட்காரேன்”..என்றான் அவன். திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தவள். கைக்கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்துவிட்டு “கிளம்பலாம்,.நேரமாகிறது..”, என்று வண்டியை நோக்கி போனாள்.
