மதியம் ஆபிஸ் லஞ்ச் பிரேக் நேரம். ராஜகோபால் குட்டி டிபன் பாக்ஸ் ஒன்றைத் திறந்து லஞ்ச் முடித்துவிட்டு ஆனந்த விகடன் பழைய இதழ் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தார். நான் என் பீரோ மற்றும் டேபிள் டிராயர்களில் இருக்கும் வேண்டாத பழைய குறிப்புகள் அடங்கிய தாள்கள் மற்றும் பைல்களை கழித்துக் கொண்டிருந்தேன். பழையன கழிதல் மட்டுமே. இப்போதைக்கு ஏதும் புதியன புகும் வாய்ப்பில்லை. வரும் ஜூலை மாதம் எனக்குப் பணியிலிருந்து நிரந்தர ஓய்வு. இன்னும் இரண்டு மாதங்கள். சரியாகச் சொன்னால் 62 நாட்கள், மூன்று மணி நேரம் மட்டுமே மீதம். ராஜகோபால் தான் வேடிக்கையாக இந்த கவுண்ட் டவுன் ஆரம்பித்து வைத்தது. ஆனால் நான் அதை இறுகப் பற்றிக் கொண்டேன்.
கணேசமூர்த்தியும் எங்கள் அலுவலக கண்காணிப்பாளர் சுந்தரலிங்கமும் அவரது கேபினில் கடும் வாக்குவாதம் செய்வது காதில் விழுந்தது. “சார், என்னால மறுபடி இந்த வாரம் அங்க போக முடியாது. போன வாரம் தான் கோயம்புத்தூர் போயிட்டு வந்தேன். அதுக்குள்ள மறுபடியும்னா..”
“சார், நான் என்ன ஒரு வாரம் டூர் போக சொன்னேனா? ஒரே நாள் தான். அதிகபட்சம் ரெண்டு நாள்.. சைட்டுக்குப் போய் அக்கவுண்ட்ஸ் செக் பண்ணிட்டு ரெண்டு பக்க ரிப்போர்ட். இதுக்கு இப்படி அலட்டிக்கிறீங்க”
“சார். எனக்கு அன்னைக்கு பேமிலி பங்க்ஷன் ஒன்னு இருக்கு. வேற யாரையாவது போகச் சொல்லுங்க.”
“இப்ப இங்க இருக்கிறது நீங்க, ராஜகோபால் அப்புறம் சங்கரன். ராஜகோபாலுக்கு இங்கே ஏற்கனவே ஒரு அஸைன்மெண்ட் ஓடிட்டு இருக்கு. சங்கருக்கு ரிட்டயர்மெண்ட் தேதி ரெண்டு மாசம் கூட இல்ல. அவரை தொந்திரவு பண்ண முடியாது. நான் என்ன செய்ய” என்று கடுப்புடன் சுந்தரலிங்கம் சொல்வது காதில் விழுந்தது. “சார் நான் வேணும்னா சங்கரன் கிட்ட கேட்டுப் பார்க்கவா? அவருக்கு ஏற்கனவே பொள்ளாச்சி சைட் நல்ல பழக்கமான இடம் தான்” என்றார் கணேசமூர்த்தி.
‘பொள்ளாச்சி சைட்’ என்ற வார்த்தை காதில் விழுந்த மறுகணம் சட்டென்று திரும்பிய என் கைகளில் இருந்து ஒரு தடிமனான பைல் கீழே விழுந்து கால் சுண்டுவிரல் மீது பட்டு விண் என்று வலித்தது. நான் அங்கு போய் ஒரு பத்து வருடங்கள் ஆகியிருக்குமா என்று மனதிற்குள் வருடக்கணக்கு ஓடியது.
தணிக்கைத் துறையில் பணிபுரியும் நாங்கள் அரசு சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் தணிக்கை செய்யும் அதிகாரம் கொண்ட கணக்காளர்கள். அவ்வப்போது தமிழ் நாடு முழுக்க உள்ள அரசு அலுவலகங்களில் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டி பல்வேறு ஊர்களுக்கு பயணம் செய்து அங்கு சிலகாலம் தங்கியிருக்கவும் வேண்டி வரும். அப்படி நான் ஒருமுறை சென்றது தான் பொள்ளாச்சி அருகே இருந்த ஒரு அரசு அலுவலகத்தின் கணக்கு ஆய்வுக்காக. ஆனால் அங்கு ஏகப்பட்ட குளறுபடி, ஊழல் நலிந்திருந்த காரணத்தால் அங்கு நான் தனியாக தங்க நேர்ந்த கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களில் பல மறக்கமுடியாத நாள்கள்.
அன்றைக்கு பணி முடிந்து போகும் முன் கணேசமூர்த்தியிடம் சென்று பொள்ளாச்சி சைட்டுக்கு நானே சென்று வருவதாக சொன்னதும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கைகளை பற்றிக்ககொண்டு “ரொம்ப தாங்க்ஸ் சார், நானே உங்களுக்கு தேவையான டிக்கெட் ரெண்டு நாள் தங்க வசதி எல்லா ஏற்பாடும் செய்திடறேன்” என்று சொல்லி மீண்டும் தோள்களை தொட்டு நன்றி சொன்னார்.
நோஸ்டால்ஜியா என்பதற்கு தமிழில் பொருள் என்னவென்று சரியாக சொல்லத் தெரியவில்லை. எனக்கு இந்த கம்ப்யுட்டர் இண்டெர்நெட் இதெல்லாம் அறவே தெரியாது. தமிழில் இது என்னவென்று மணிகண்டன் ஒருமுறை கூகுளில் பார்த்து ‘ஏக்கம் அல்லது நினைவேக்கம்’ என்று சொன்னார். எனக்கு என்னவோ இதற்கு ஏக்கம் என்பது சரியென்று தோன்றவில்லை.
உண்மையில் அது ‘பரவசம் தரும் பழைய நாட்களின் ஏக்கமான நினைவுகள்’ என்று வேண்டுமானால் சொல்லலாம்.
பொள்ளாச்சி என்றதும் என் மனதில் தோன்றும் நோஸ்டால்ஜியா: சுற்றிலும் இருக்கும் பச்சை பசேல் என்ற மரங்கள். கண்ணுக்கட்டிய தூரத்தில் தொலைவில் தெரியும் மேகங்கள் தவழும் மலைத்தொடர்கள்; இதெல்லாம் தவிர்த்து பத்து வருடங்களுக்கு முன் பொள்ளாச்சி சைட்டில் ஆய்வுப் பணியில் இருந்த அந்தக் குறுகிய காலத்தில் பெரும்பாலும் உணவருந்திய அம்பாள் ஹோட்டல். அங்கு எனக்கு மிகவும் பிடித்தமான சர்வர் மாதேஷ். இப்போது இதெல்லாம் பார்த்து வர ஒரு வாய்ப்பு.
அங்கிருந்த போது, எல்லா சனிக்கிழமை மாலையிலும் அம்பாள் ஹோட்டலில் என் ஸ்டாண்டர்ட் டிபன்; மைசூர் போண்டா செட், முறுகல் ரவாதோசை. அப்புறம், சர்க்கரை குறைவாக ஒரு ஸ்ட்ராங்க் ஃபில்டர் காபி.
ஒரு தட்டையான ஸ்டீல் ப்ளேட்டில் வாழை இலைத் துண்டில் சட்டினி சாம்பார் சகிதம் சுடச்சுட இரண்டு உருண்டையான போண்டாக்கள். மேல்புறம் மொருமொருப்பாக, உள்பக்கம் மிருதுவாக.. ஆங்காங்கே கடிபடும் முழுமிளகு, தேங்காய் செதில்கள். இதை ரசித்துச் சாப்பிட்டு முடித்து விரல்களை ருசிக்க ஆரம்பிக்க, முறுகல் ரவாதோசை வந்துவிடும். அதற்கு கெட்டி தேங்காய் சட்னி, தக்காளி தொக்கு, சாம்பார். இதெல்லாம் பாதி கூடத் தொட்டுக்கத் தேவைப்படாது. முறுகல் ரவா தோசையை அப்படியே விண்டு சாப்பிடலாம். அது முடித்து வாஷ்பேசினில் கையைக் கழுவிவிட்டு திரும்பினால் சூடு பறக்கும் டபரா தம்ளர் காபியுடன் சிரித்த முகத்துடன் மாதேஷ் நிற்பான். மீண்டும் அடுத்த சனிக்கிழமை. ரிப்பீட்டு. இப்படியே சலிக்காமல் போனது நான் அங்கிருந்த ஒன்பது மாதங்கள்.
அப்போது மாதேஷுக்கு மிஞ்சிப் போனால் இருபது வயதிருக்கும். சிரித்த முகம். எப்போதும் குளித்து பூஜை முடித்து வந்தவன் போல திரு நீறு அணிந்து இருப்பான். பில்லுடன் டிப்ஸ் சேர்த்துக் கொடுக்க முனைந்தால் நாசூக்காக மறுத்து விடுவான். ஒரு நாள் அப்படி காசு கொடுக்க முயற்சித்தபோது “சார், நீங்க உங்கக் காசை கொடுத்து சாப்பிடறீங்க. அதை நான் கொண்டு வந்து தந்து நீங்க ரசிச்சு சாப்பிடுறத பாக்கிற சந்தோஷத்துக்கு நிகர் வேற எதுவுமில்ல சார். நாலு பேருக்கு சோறு போடற வசதியோ நிலைமையோ எனக்கில்ல. ஆனால் சம்பளத்தையும் வாங்கிட்டு அதையே செய்யுற பாக்கியம், இந்த வேலையைத் தவிர வேற எந்த வேலையிலயும் கிடைக்காது சார்” என்றான்.
பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் இறங்கி தங்குமிடம் சேர்ந்ததும் உடன் மாதேஷுக்கு போன் போட்டேன். ரிங் போனது. எடுக்கவில்லை. ஒருவேளை வேலையை விட்டுப் போய்விட்டானோ? அரை மணி நேரத்தில் எனக்கு அதே எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.
“யார் சார் பேசறிங்க? “ போனில் கேட்டது வேறு யாரோ குரல்.
“மாதேஷ் இல்லையா? நான் சங்கரன், ஏஜிஎஸ் ஆபிஸ்.”
“கொஞ்சம் இருங்க” என்ற சில நொடிகளில் மாதேஷ் லைனில் வந்தான். “சார், ஆச்சரியமா இருக்கு. நீங்களே போன் போட்டுட்டீங்க. நான் பலதடவை உங்களைக் கூப்பிட்டு இருக்கேன். ஆனா கடந்த ஐந்து வருஷமா உங்க போன் நம்பருக்கு ரிங் போகலியே. பல சந்தர்ப்பங்கள்ல உங்களை முயற்சி பண்ணியும் புடிக்க முடியலையே சார்”
“சாரி மாதேஷ். நான் தான் நம்பரை மாத்திட்டேன். நானே உன்ன காண்டாக்ட் பண்ணியிருக்கனும், அதைத்தவிர கொஞ்சம் பிசி வேற, அதான். அப்புறம் இப்ப நான் பொள்ளாச்சிக்கு வந்திருக்கேன். நாளைக்கு வேலை முடிஞ்சதும் கிளம்பிடுவேன். அதுக்கு முன்ன உன்னையும் பாத்துட்டு அப்படியே நம்ம வழக்கமான டிபனையும் சாப்பிட மனசு ஏங்குது.”
“கண்டிப்பா வாங்க சார், நாளைக்கு காலைல வர முடியுமா?”
“சாரி மாதேஷ், இங்க அசைன்மெண்ட் நினைச்சத விட ஹெவி. இங்கேயே டிபன் சாப்பாடு ஏற்பாடு பண்ணிட்டாங்க. நாளைக்கு சாயந்திரம் சென்னை கிளம்பிடுவேன். நாலு அம்பது பால்காட் எக்ஸ்பிரஸ். நாளைக்கு மதியம் ஒரு மூனரை மணி வாக்கில அங்க வரேன். அப்ப நீ இருப்பியா மாதேஷ்?”
“வாங்க சார், பிரச்னை இல்ல. அப்புறம் அம்பாள் ஹோட்டல்னு தேடாதீங்க. பேர் எல்லாம் மாறிடுச்சு. அதே இடத்தில பிஎம்கேன்னு பெருசா பில்டிங் இருக்கும் பாருங்க. கண்டிப்பா வந்திடுங்க. உங்களுக்காக காத்திட்டிருப்பேன்” என்றான் மாதேஷ்.
நான் பத்து வருடங்களுக்கு முன் அம்பாள் ஹோட்டலில் முதல் வாரம் சனிக்கிழமை சாப்பிட்ட நாளில் இருந்தே எப்போதும் மாதேஷ் டேபிளுக்கு சென்று அமர்ந்து விடுவேன். என்னைப் பார்த்ததும் புன்சிரிப்புடன் “வழக்கமான ஐட்டம் தானா” என்பான். நானும் சிரித்தபடித் தலையாட்டுவேன். எப்போதாவது ஏதேனும் ஸ்பெஷல் ஐட்டம் போட்டிருந்தால் மட்டும் தெரியப்படுத்துவான்.
நான் அங்கிருந்து ஆய்வு முடித்து கிளம்ப இருந்த கடைசி மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை. மாதேஷ் என்னிடம் வந்து மறுநாள் என்னை சந்திக்க நான் தங்குமிடம் வரவா என்று கேட்டான். நானும் அவனை தாராளமாக வரச் சொன்னேன்.
மறுநாள் மதியம் வந்தான். மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் எம்பிஏ அஞ்சல் வழி சேர விண்ணப்பம் பூர்த்தி செய்ய உதவி கேட்டு வந்திருந்தான். விண்ணப்பம் பூர்த்தி செய்தபின் பணம் கட்டும் விவரங்களை இப்போது பூர்த்தி செய்ய வேண்டாம் என்றான். “என்ன மாதேஷ், கையோட அதையும் முடிச்சிட்டு அப்ளை பண்ணிடலாமே” என்றதற்கு “இந்த மாசம் கொஞ்சம் பண நெருக்கடி, கடைசி தேதி அடுத்த வாரம் தானே. அப்ப பார்த்துக்கலாம்” என்றான். நான் சம்மதிக்கவில்லை. “மாதேஷ், பணத்துக்காக இதை தள்ளி போட வேண்டாம். நான் பீஸ் கட்டிடறேன். அப்புறம் பாத்துக்கலாம்” என்றதும் கடனாக கருதி அதை திருப்பி விடலாம் என்று நினைத்து அவனும் என் வற்புறுத்தலின் பேரில் சம்மதித்தான். அதற்கடுத்த வாரம் தணிக்கைப் பணி முடிந்து நான் கிளம்பும் அன்று பணத்தோடு வந்தான். ஆனால் நான் அதை பெற்றுக் கொள்ளாமல் திட்டவட்டமாக மறுத்து விட்டேன்.
“மாதேஷ், அந்தப் பணம் நான் உன் படிப்பு செலவுக்கு தந்தது. அதை கடனா நினைச்சு என்னை கொச்சைப் படுத்திடாதே. அது நான் மனமுவந்து தந்தது. அதை திருப்பித் தரத் தேவையில்லை. கொஞ்ச காலம் நீ பரிமாறி சாப்பிட்டபோது நான் கொடுத்த டிப்ஸ் வேண்டாம்னு நீ சொன்னதை புரிஞ்சிக்கிறேன். அது வேற. ஆனால் அன்னைக்கு நான் உனக்கு தந்த பணம் உன் படிப்பு செலவுக்காக. செடி வளர கொஞ்சம் தண்ணி ஊத்தறதப் போல. அவ்வளவு தான்”
அன்றைக்கு மாதேஷ் கண்கள் பனித்ததைப் பார்த்தேன். முகத்தைத் திருப்பிக் கொண்டு கண்களை துடைத்துக் கொண்டான்.
இவ்வளவு காலம் கழித்து இன்று அவனை மீண்டும் பார்க்கப் போகிறேன். பிஎம்கே ஹோட்டலைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிதாக இருந்தது. அம்பாள் ஹோட்டல் இருந்த அதே இடத்தில் பிரம்மாண்டமான கட்டிடம். நுழை வாசல் கேட் சாத்தியிருந்தது. வாட்ச் மேன் கேட்டை திறந்து என்னை உள்ளே செல்ல அனுமதித்தான். ஹோட்டல் ரெஸ்டாரண்ட் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி இருந்தது. உள்ளே ஒரு டேபிளில் தயக்கத்தோடு அமர்ந்த மறுகணம் ஓடி வந்தான் மாதேஷ்.
“சார், எப்படி இருக்கீங்க, சௌக்கியமா” என்று விசாரித்து வாஞ்சையோடு கைகளைப் பற்றிக் கொண்டான், மாதேஷ் கொஞ்சம் எடை கூடியிருந்தான். முகத்தில் லேசான தாடி. மற்றபடி அதே புன்சிரிப்பு. “நாலு வருசம் மின்ன அம்மா தவறிட்டாங்க. என் மனைவி ரெண்டு குழந்தைகளோட கோயமுத்தூர்ல இருக்காங்க” என்றான்.
“நீ மட்டும் இங்கயே செட்டில் ஆயிட்டயா, எப்பவும் ஹோட்டல் வேலை தானா?’
“சார், எனக்கு தினம் நாலு பேருக்காவது சாப்பாடு பரிமாறனும். அதுல கிடைக்குற வருமானம் இரட்டிப்பு சந்தோஷம். அதுக்கு ஹோட்டல் தான் சரிப்பட்டு வரும். அப்புறம், என்ன சாப்பிடறீங்க சார். வழக்கமானதா”
“அதற்காகத் தானே இவ்வளவு தூரம் வந்தேன்” என்றேன் ஆர்வத்துடன்.
போண்டா செட் கிட்டத்தட்ட இன்றளவும் அதே சுவை. முன்னைக்கு இப்போது கொஞ்சம் தரம் உயர்ந்திருந்தது. ரவா தோசைக்கு கூடுதலாக மசித்த உருளை மசாலா இருந்தது. கடைசியாக பத்து வருடத்திற்கு முன் பார்த்த அதே மாதேஷ். அதே பணிவு. உடல்மொழி. கையைக் கழுவிவிட்டு திரும்பியதும் டேபிளில் ஆவி பறக்கும் பில்டர் காபி ரெடியாக இருந்தது. “பில் எவ்வளவு ஆச்சு” என்றதற்கு மாதேஷ் கோபித்துக் கொண்டான். “அப்பல்லாம் நீங்க கஸ்டமர். பில் கொடுத்தேன். இப்ப நீங்க என்னைத் தேடி வந்த விருந்தாளி. எல்லாமே என் கணக்குல தான்” என்றான் உரிமையாக. என் கையில் ஒரு பார்சலை திணித்தான். “என்ன இதெல்லாம்?” என்றதுக்கு “நம்ம ஹோட்டல் ஸ்பெஷல். முந்திரி அல்வா அப்புறம் பெப்பர் காராசேவ். வீட்டுல குடுங்க சார்” என்றான்.
“ரயிலுக்கு நேரம் ஆயிடுச்சு, மாதேஷ். கிளம்புறேன்” என்றதும் என் கைகளைப் பற்றிகொண்டு அவன் கண்களில் ஒற்றிக் கொண்டான். கூச்சமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. அவனுக்கு நான் என்ன பெரிதாக செய்துவிட்டேன். முதல் செமஸ்டர் பீஸ் கட்டினேன். படிக்க உதவி செய்த பணத்தை திரும்ப வாங்கக் கூடாது என்ற என் பிடிவாதக் கொள்கையால் அவன் எவ்வளவு வற்புறுத்தியும் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டேன். அவ்வளவு தானே?
அவனிடம் விடைபெற்று ஹோட்டலுக்கு வெளியே சிறிது தூரத்தில் ஆட்டோ பிடித்தேன். ஒரு கிலோ மீட்டர் தூரம் போனதும் ஆட்டோவை ஓரிடத்தில் நிறுத்திய ஆட்டோ டிரைவர் “சார், வண்டிய இங்க நிறுத்திக்கிறேன். ராத்திரிக்கு ரயில்ல டிபன் எதாவது சாப்பிடனும்னா இங்க பார்சல் வாங்கிக்கிடுங்க. ஆனா சுமாரான டிபன் தான்.”
“வேண்டாம்பா, இப்ப தான் பிஎம்கேல டிபன் சாப்பிட்டேன்”
“பிஎம்கேவா? அது இப்ப திறந்திருக்காதே. காலைல டிபன் பதினோறு மணிக்கு க்ளோஸ் ஆனா அப்புறம் ராத்திரி சாப்பாட்டுக்கு எட்டு மணிக்கு தான் திறக்கும். சாயந்திரம் டிபன் கிடையாது. இங்கன மட்டுமில்ல. பிஎம்கே பொள்ளாச்சில ஆறு ப்ராஞ்ச் இருக்கு. எல்லாத்திலயும் அதே டைமிங் தான். நீங்க எப்படி அங்க இப்ப சாப்பிட முடியும்?”
“ஆமா கடை கிட்டத்தட்ட மூடினாப் போலதான் இருந்தது. எனக்கு அங்க வேலையில இருக்குற ஒருத்தர் பழக்கம். அவரைப் பாக்கப்போயிருந்தேன்.”
“யாரு, ஹோட்டல் மானேஜரா?”
“இல்ல, அங்க ரொம்ப வருஷமா வேலை பார்க்கிற சர்வர். பேரு மாதேஷ்.”
“ஓ, சர்வரா? அவரு உங்களுக்குன்னு டிபன் ஸ்பெஷலா ரெடி பண்ணாரோ?ஆச்சரியம் தான்!”
ஆட்டோ டிரைவர் ஏதோ ஏளனமாகப் பேசுகிறாரோ என்று தோன்றியது. மாதேஷுக்கு தேவையில்லாமல் சிரமம் கொடுத்துவிட்டோமோ என்று வருத்தம் மிகுந்தது. ஹோட்டல் மூடின நேரத்தில் அனாவசியமாக டிபன் சாப்பிடப் போயிருக்க வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் அவனுக்கு அசாதாரணமான சங்கடமான நிலைமயை உருவாக்கி விட்டோம் என்ற எண்ணம் மேலோங்கி உடல் கூசியது.
ரயில்வே ஸ்டேஷன் வாசலில் ஆட்டோவை நிறுத்தி பணத்தைப் பெற்றுக்கொண்ட ஆட்டோ டிரைவர் வண்டியை ஸ்டார்ட் செய்த பின் “சார்” என்று கூப்பிட திரும்பினேன். “அதோ பாருங்க அந்த போஸ்டர். அதுல இருக்காரே, அவர் தான் பிஎம்கே ஹோட்டல் முதலாளி.” என்று பங்க் கடைக்கு பக்கத்தில் ஒட்டப்பட்டிருந்த பாதி கிழிந்த போஸ்டரை காட்டிவிட்டு விரைந்தார். அருகில் சென்று பார்த்தேன். அது பிஎம்கே ஹோட்டல் ஆறாவது கிளை திறப்பு விழாவின் பழைய போஸ்டர். அதில் இருந்த முதலாளி படம் மாதேஷ். கீழே பெயர் பி எம் குமார், பிஎம்கே செயின் ஆஃப் ஹோட்டல்ஸ் என்றிருந்தது. அட! அப்படின்னா இது பாரிஜாதம் மாதேஷ் குமார்.
சட்டென்று பத்து வருடத்திற்கு முந்தைய அந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது. மாதேஷ் பூர்த்தி செய்த மதுரை காமரஜர் பல்கலைகழக விண்ணப்பம். அதில் தந்தை பெயருக்கு எதிரே பாரிஜாதம் என்று இருந்தது. “இது உன் அப்பா பெயரா” என்று ஆச்சரியத்துடன் வினவினேன். “இல்ல சார். என் அம்மா பெயர். நினைவு தெரிஞ்ச முதலா அம்மா தான். அப்பாவை பார்த்ததில்ல. வளர்த்த்தது, படிக்க வெச்சது, எல்லாம் அம்மா தான். பூ கட்டி, பத்து பாத்திரம் துலக்கி கஷ்டப்பட்டு என்னய ஆளாக்கினாங்க. அதான் ஃபார்ம்ல அப்பா பேருக்கு பதிலா அம்மா பேர எழுதியிருக்கேன்.” விளக்கம் தந்தான்.
போஸ்டரில் மாதேஷ் படத்தைப் பார்த்தபின் திகைப்பும் குழப்புமும் பயமும் சேர்ந்த கலவையான உணர்வுகள் தோன்றின. மாதேஷ் தான் அந்த ஹோட்டலுக்கே முதலாளியா! பிஎம்கே குரூப் ஹோட்டல்ஸ் அதிபதியா? அதைச் சொல்லாமல் அவன் இன்று எனக்காக சர்வராக நடிக்க வேண்டிய அவசியம் என்ன?
ஒருநாள் என்னுடைய நோஸ்டால்ஜிக் நினைவுகளை உயிர்ப்பித்த மாதேஷின் நோக்கம் என்ன? தன் அந்தஸ்து, நிலை அத்தனையும் விட்டு என்னை மகிழ்ச்சிப்படுத்த சர்வராக சேவை செய்திருக்கிறான்.
இப்போது புரிந்தது. மாதேஷ் விஷயத்தில் நான் பல தவறுகள் செய்து விட்டேன். முதல் தவறு பத்து வருடங்களுக்கு முன்னர் பார்த்த மாதேஷ் இன்னும் அப்படியே சர்வராகவே இருப்பான் என்று தன்னிச்சையாக அனுமானித்துக் கொண்டது. தொழில் நிர்வாகம் படித்துக் கொண்டிருந்த மாதேஷ் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியிருப்பான் என்று ஒரு துளியாவது நம்பியிருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் அதை அவனிடமே விசாரித்து இருக்கலாம். அவனைப் பற்றி பொத்தாம் பொதுவாக விசாரித்துவிட்டு நோஸ்டால்ஜிக் என்ற முகமூடி அணிந்துகொண்டு போண்டாவையும் ரவாதோசையும் விழுங்கியவன் கொஞ்சம் அவனைப் பற்றியும் கூடுதல் விவரம் கேட்டிருக்கவேண்டும். பெரும் தவறு செய்துவிட்டேன். அவனது படிப்புக்காக செய்த பண உதவியை நான் கடனாக ஏற்க மறுத்ததில் அவனுக்கு என்மேல் அளவுகடந்த மதிப்பு இருந்திருக்கிறது. அதனால் நான் அங்கு வருகிறேன் என்றதும் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எனக்கு பழைய மாதேஷாக உணவு அளித்து உபசரிததிருக்கிறான். கிட்டத்தட்ட நான் செய்த செயலுக்கு ஒரு கைம்மாறு போல.
இதனால் ஒருவேளை அவனது பத்து வருட மன பாரம் இறங்கியிருக்கலாம். நான் போன் போட்டு பேசி விஷயம் தெரிந்ததாகக் காட்டிக் கொண்டால் அவனுக்கு அது தர்மசங்கடமாகலாம். அவன் செய்த கைம்மாறு அவன் மனதளவிலே நீர்த்தும் போகலாம். அதனால் இதை இப்படியே விடுவதே சரி.
ரயிலில் சைட்அப்பர் பர்த்தில் ஆயாசத்துடன் ஏறி அமர்ந்தேன். லக்கேஜ் தூக்கிக்கொண்டு வந்த கைவலி இப்போது கொஞ்சம் குறைந்திருந்தது. பத்துவருடங்களுக்கு முந்தைய பொள்ளாச்சி பயணம் ஒரு நோஸ்டால்ஜியா ஏக்கத்தை தந்தது. இந்தமுறை பயணமோ ஒரு இனம்புரியாத துக்கத்தை என் மனதில் பாரமாக ஏற்றி வைத்துவிட்டது.
