2010-ல் அவர்கள் சந்தித்தது சூரத்துக்கோ பரோடாவுக்கோ மேல்! விமானம் சீராக பறந்தது. தில்லி வரை வானம் தெளிவாக இருக்குமென்று ஆருடம் சொல்லியவாறே விமானத்தைச் செலுத்தத் தொடங்கியிருந்தார் விமானி. அறிமுகமில்லாதவர்கள் ஓரிரு மணி நேரங்களுக்கு அடுத்தவரின் வாழ்க்கையில் பங்கு பெரும் தருணத்தை அந்த விமானக் கேபின் பயணிகளுக்குத் தந்திருந்தது.
அவன் அவளை கவனித்தான் — அவனுக்கும் அவளுக்கும் இடையே இருக்கை காலியாக இருந்தது. அவள் இன்ப்ளைட் மேகசினை பின்னாலிருந்து முன்னாக வாசித்துக் கொண்டிருந்தாள்.
அவள் அவனை கவனித்தாள் — போர்டிங் பாஸ் பின்னால் ஏதோ அவசரமாக எழுதிக் கொண்டிருந்தான். எதையோ மறந்துவிடுவோமோ என்ற பதற்றத்துடன் எழுதுபவனின் பாவனையை அவன் உடல் மொழி கொண்டிருந்தது.
இருவரும் மும்பையிலிருந்து தில்லிக்குச் சென்று கொண்டிருந்தார்கள். இருவரும் ஒரே துறையில் வேலை செய்பவர்கள். ஆனால் அதுவரை அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்தில்லை.
“மான்யா,” – தொழில்முறை இயல்போடு அவள் கையை நீட்டினாள்.
அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். சிறிய உரையாடல்கள் — பிராண்ட்கள், மாநாடுகள், இடையில் மிதந்துகொண்டிருக்கும் பொதுவான அறிமுகங்கள்.
அவர்கள் உணர்ந்தது ஒன்றே — ஒருவரைப் பற்றி ஒருவர் கேள்விப்பட்டிருக்கிறார்கள். ஆனால் சந்தித்ததில்லை. பேசியதில்லை. ஆனால் பெயர் பரிச்சயம். அந்த அளவுக்கு மட்டுமே அவர்களுடைய உரையாடலின் மின்சாரம் இருந்தது.
அவள் தன் கணவரைப் பற்றி சீக்கிரமே சொன்னாள் — சீக்கிரம் என்பதே அதன் விசித்திரம். விஜய் சோப்ரா. ஓர் உணவுப் பிராண்டில் வேலை. “நிலையானவர்,” என்று சொன்னாள். “மும்பையில் இருக்கிறார்.” “நான் பெங்களூரில் பிறந்து வளர்ந்த தமிழ்க்காரி, அவர் பஞ்சாப்காரர்” முதுகலை பட்டப்படிப்பை சகமாணவர்களாக படித்தவர்கள் பிறகு வாழ்க்கைக் கூட்டாளிகளாக ஆகியிருந்தார்கள். அவள் தில்லியில் வசிக்கிறாள்.
“தற்காலிகம்,” என்று அவள் சொன்னாலும், அந்த வார்த்தையில் நம்பிக்கை இல்லை.
மான்யாவின் விஜய்யின் திருமணத்தைப் பற்றிய கதைகளை பணி புரியும் தொழிற்துறை இணைப்புகள் வாயிலாக அவன் ஏற்கனவே கேட்டிருந்தான் – அந்த விமானப்பயண சந்திப்புக்கப்புறமும் கேட்கப் போகிறான் – நகரங்களுக்கு நடுவே இழுபட்டத் திருமண வாழ்க்கை. வேலை ஆசைகள் எதிரெதிர் திசைகளில் தம்பதியரை இழுத்தன. தொலைபேசியில் நடந்த வாக்குவாதங்களில், மௌனமே உறவுகளில் அதிக சேதம் விளைவிக்கும்.
ஆனால் அந்த மாலை, அவளின் திருமண வாழ்க்கை குறித்த தகவல்களுக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை. தத்தமது வேலை பற்றி பேசினார்கள் – அவசரத்தை தொழில்கள் உற்பத்தி செய்யும் விதத்தை, விரும்பாத நகரங்களில் மனிதர்கள் எப்படியோ வாழ்ந்து விடுகிறார்கள் என்பதை.
விமானம் தில்லியில் தரையிறங்கியபோது மீண்டும் கைகுலுக்கினார்கள். விசிட்டிங் கார்டுகள். “மீண்டும் சந்திப்போம்” என்ற பொதுவான வாக்கியம்.
அவர்கள் மீண்டும் சந்திக்கவே இல்லை.
+++++
வாழ்க்கை தனது வேலையைச் செய்தது — நினைவுகளிடம் ஆலோசனை கேட்காமல் புவியியலை மாற்றியது. அவன் இப்போது வசிப்பது பெங்களூருவில்.
விஜய் வேலை செய்யும் நிறுவனத்தில் பணி புரிந்த ஒருவனுடனான நட்பின் வாயிலாக அவ்வப்போது விஜய் குறித்த தகவல்கள் சில வருடங்கள் முன்னால் வரை அவனை எட்டின. விஜய் மும்பையிலேயே சில வருடங்கள் இருந்தார். அவள் தில்லியிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்றாள். பின்னர் விஜய்-யும் சிங்கப்பூருக்கு பணி மாற்றம் செய்து கொண்டார். ஆறு மாதங்கள் தாம்! அவள் நிறுவனத்தை மாற்றினாள். புதிதாக வேலை சேர்ந்த நிறுவனம் மான்யாவை மும்பையில் இருக்கச் சொன்னது. அதற்குப் பிறகு, நடந்த வேலை, நகர மாற்றங்களை லிங்க்ட் இன் அவனுக்குச் சொன்னது. அவள் இப்போது இருப்பது பாங்காக்கில்.
LinkedIn அப்டேட்கள் தொடர்ந்து தகவல்களையும் வாழ்க்கையையும் பதிவு செய்தது. பணி மாறுதல்கள், அலுவலக விழாக்கள், பதவி மாற்றச் செய்திகள். அலுவலகத்தில் சேர்ந்த நாளின் ஆண்டு நிறைவுகள், மாநாட்டு வழித்தடங்களில் பெயர்கள்,……..அவன் எங்கோ அவள் எங்கோ….இருந்தார்கள்…தொடர்பில் இல்லை…அவளுக்கு அவன் பெயர் ஞாபகம் இருந்திராது…ஆனால் லிங்க்ட் இன் அவள் அறிந்திராதவனின் பெயரை மறக்கவிட்டிருக்காது.
பதினைந்து ஆண்டுகள் கடந்தன.
ஒரு மாலை, அவன் ஒரு லிங்க் பகிர்ந்தான். அவன் எழுதிய ஒரு குறுங்கதை. ஓர் இலக்கிய இதழில் வெளிவந்திருந்தது. எதிர்பார்ப்பு ஏதும் இல்லாமல் LinkedIn-ல் அந்தப் பதிவை இட்டான் — லிங்க்ட் இன்-னில் இயங்குபவர்களுக்கும் இலக்கியத்துக்கும் எந்த தொடர்பும் இருக்க வாய்ப்பில்லை என்பது அவன் எண்ணம். பணி வாழ்க்கையில் விறுவிறுவென உயரங்களைத் தொட்டுக்கொண்டே சென்று கொண்டிருப்பவர்களுக்கு இலக்கியம் தெரியாது என்ற எண்ணம் அவனுக்கு ஒரு பொய்யான ஆறுதலைத் தந்து கொண்டிருந்தது. ரொட்டி தயாரிக்கும் நிறுவனம் ஒன்றின் பொது அதிகாரி பன்னாட்டு புத்தகப் பதிப்பு நிறுவனம் வெளியிட்ட தன்னுடைய நாவல்களைப் பற்றித் தானே புகழ்ந்து எழுதிக் கொள்வார். அவரின் நிறுவனத்தில் அவர் கீழ் வேலை செய்யும் ஊழியர்கள் போட்டி போட்டுக் கொண்டு “லைக்” போடுவார்கள். ஒரு முறை அவர் எழுதிய நாவலை வாங்கினான். நான்கு பக்கங்களை அவனால் தாண்ட முடியவில்லை. “குப்பை” என்று ட்ரான்ஸ்லிட்டரேட் செய்து அவரின் கமெண்டில் எழுதினான். அதற்கும் வந்து அவர் லைக் இட்டார். இவர்களின் சமநோக்கம் பாசாங்குத்தனத்தில்தான் சேரும்! நாவல் மட்டுமல்ல இந்த சமூக வலைத்தளமே ஒரு குப்பை!
குறுங்கதை பகிர்வைத் தொடர்ந்து சிற்றிதழ்களில் வெளிவரும் கட்டுரைகளின் தரத்தில் அவன் இடுகைகளை இடத்தொடங்கினான். அவனுக்குத் தெரியும் அவற்றுக்கு எந்த விருப்பமும் விழாதென! உதாரணத்துக்கு ஒன்று –
The Narrow Road to the Deep North (Oku no Hosomichi ) – பஷோவின் மிகப்புகழ் பெற்ற ஜப்பானிய பயண இலக்கியப் பிரதியின் தலைப்பை பயன்படுத்திக் கொண்டார் எழுத்தாளர் ரிச்சர்ட் ஃப்ளானகன். அந்த தலைப்பில் 2013 வெளிவந்த நாவலுக்கு மன்புக்கர் பரிசு அவருக்கு அளிக்கப்பட்டது. நேர்கோட்டுத் தன்மையற்ற கதை சொல்லலாக விரியும் நாவலின் அடிப்படையிலான தொடர் சோனி லைவ்-வில் ஸ்ட்ரீம் ஆகிறது. நாவலை இன்னும் வாசிக்கவில்லை. தொடரைக் காணுகையில் நாவலை விரைவில் வாசித்துவிட ஆவல் எழுகிறது. எத்தனை நாவலை தான் வாசிப்பது ? ஆவலுக்கு விவஸ்தை கிடையாது. நேரத்தின் போதாமை குறித்து அதற்கு ஏதேனும் தெரியுமா என்ன ?
பஷோ தனது பயணக் குறிப்பின் தொடக்கத்தில் இப்படி எழுதுவார்:
“நாட்களும் மாதங்களும் நித்தியத்தின் பயணிகள். கடந்து செல்லும் ஆண்டுகளும் கூட வழிப்போக்கர்களே!”
வாசிப்பதும் ஒரு நீண்ட பயணம் தான். காலத்தின் போதாமை ஒருபுறம் இருந்தாலும், பஷோ சொல்லும் அந்த ‘நித்திய வழிப்போக்கனைப்’ போல, தீராத ஆவலோடு அடுத்தடுத்த பக்கங்களுக்குள் நாம் நுழைந்து கொண்டே தான் இருக்க வேண்டியிருக்கிறது. பஷோவின் கவிதையைப் போலவே இந்த நாவலும் வாழ்வின் நிலையாமையைப் பற்றி ஏதோ ஒன்றைச் சொல்லக் காத்திருக்கிறது என்றே தோன்றுகிறது.
–
இவ்வாறு வெவ்வேறு தகவல்களை, உணர்வுகளை வெளிப்படுத்தும் போஸ்ட்-கள். பேஸ் புக்கில் இட்டால் ஐந்தாறு லைக்காவது விழலாம். அவனுக்குத் தெரியும் – லைக்குகள் விழாமல் இருக்கும் வரைதான் அவன் லிங்க்ட்இன் பயனாளர்களை நோக்கி மானசீகமாக நகைக்க முடியும்!
–
மூளை ஒரு விஷயத்திற்கு முடிவைத் தேடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த முடிவு கிடைக்காதபோது, அது அந்த விஷயத்தை நீக்காமல் வைத்துக்கொள்கிறது. இது ஒரு குறைபாடு அல்ல—முக்கியமான காரியங்களை முடிப்பதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு அம்சமாகும். Zeigarnik Effect என்று மனோதத்துவ வகுப்புகளில் கற்பிக்கப்படும் இந்த விளைவு, மனரீதியான முடிவு (closure) இல்லாதபோது ஏற்படும் தொடர் எண்ணங்களை விளக்கி, ஆரோக்கியமான வாழ்வுக்கு அது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது. பத்து-பனிரெண்டு வருடங்களுக்கு முன் பணி ஓய்வு பெற்ற ஒருவரை சென்ற வாரம் சந்தித்தேன். வேலை ஓய்வு பெறுவதற்கு நான்கைந்து மாதங்களுக்கு முன்னர் அவர் மேற்பார்வை செய்து கொண்டிருந்த பணியை திடீரென வேறு ஒருவருக்கு மாற்றித் தந்து விட்டார்கள். இவரைப் பொறுத்த மட்டில் அது அவர் முடிக்காமல் விட்ட பணியாக நிலைத்து விட்டது. அந்தப் பணியில் அவருடன் ஈடுபட்ட அணி உறுப்பினர்கள், அவரவர் பொறுப்புகள், அந்தப் பணியில் இருந்த சவால்கள், அந்தப் பணி வேறு ஒருவருக்கு மாற்றப்பட்ட தினத்தில் எஞ்சியிருந்த காரியங்கள் என்று அனைத்து விவரங்களையும் ஒன்றும் மறக்காமல் சொல்லிக்கொண்டிருந்தார். “அந்தப் பணியிலிருந்து என்னை எடுக்க வேண்டாம் எனத் திரும்பத்திரும்ப என் மேலதிகாரியிடம் இறைஞ்சிக்கொண்டே இருந்தேன்.” என்று சொல்லி ஒரு நீண்ட அமைதி காத்தார். அவரின் ஏக்கம் “நான் முடிக்காமல் விட்ட பாதி பணி” என்ற உணர்விலிருந்து எழுகிறது. முக்கியமான அலுவல்களை மறக்காமல் இருக்க இயல்பாகவே அது பற்றிய துல்லியமான விவரங்களை பாதுகாத்து வைக்கிறது மூளை. செய்து முடித்துவிட்ட காரியங்களை விட முடிக்காத காரியங்கள் என்று நாமெண்ணும் விஷயங்களின் ஞாபகம் அதிமுக்கியத்துவம் எய்தி விடுகிறது. Zeigarnik Effect ஏன் நிகழ்கிறது? ஒரு பணியைத் தொடங்குவது உளவியல் பதற்றத்தை உருவாக்குகிறது. குறுக்கீடு அந்தப் பதற்றத்தை உயிருடன் வைத்திருக்கிறது, தொடர்புடைய விவரங்களை அறிவாற்றல் ரீதியாக “அணுகக்கூடியதாகவும்” ஊடுருவக்கூடியதாகவும் ஆக்குகிறது. முடித்தல் பதற்றத்தை நீக்குகிறது. பதற்றம் நீங்கியவுடன் பணியின் நினைவகம் குறைவாக முக்கியத்துவம் பெறுகிறது. காதல், இழப்பு அல்லது நீடித்த வருத்தங்கள் போன்ற விஷயங்களில், இது ஒரு விடாப்பிடியான எதிரொலியைப் போல உணரப்படலாம். இறந்த ஒருவரைப் பற்றியோ, நிறைவுறாத காதலைப் பற்றியோ, ஆண்டாண்டு காலமாக அலைமோதும் நினைவுகளும் துக்கங்களும் Zeigarnik Effect-இன் பரிசுகள்! இத்தகைய சூழ்நிலைகளில் உணர்வு பூர்வ முடிவைப் பெறுவது முக்கியமாகிறது – வெளிப்படையாக இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் மனதளவிலாவது அது தேவைப்படுகிறது. உங்களுக்கு எந்த ‘முடிக்காத பணி’ மனதை அலைக்கழிக்கிறது?
–
இதற்கு யாரோ “லைக்” செய்தார்கள்! மான்யா சோப்ரா! இவள் எப்படி இங்கே இதற்கு லைக் போடுகிறாள்? குட்டி கிராப் தலையை ஒரு புறமாகத் தாழ்த்திக் கொண்டு இன்பிளைட் மேகஸினை வாசித்துக் கொண்டிருந்த காட்சி அவனுள் வந்து போனது. அப்போது அவள் அசையவே இல்லை. விமானத்தின் மெல்லிய அதிர்வுகளுக்கே அவளின் உடல் தன்னைச் சரிசெய்துகொள்ளும் விதம் இப்போது நினைவாகத் தங்கி இருந்தது. லிங்க்ட் இன் பக்கத்தில் அவள் தனது உருவப்படத்தைச் சேர்த்திருக்கவில்லை. அவளுடைய இப்போதைய உருவம் எப்படி என்பது தெரியாதது, பழைய உருவத்தை அவனின் நினைவுகளிலிருந்து எவ்வித எதிர்ப்பும் இன்றி மேலே வரவழைத்துக் கொண்டிருந்தது.
அடுத்த நாள் மான்யா இன்பாக்சில் மெசேஜ் அனுப்பினாள்.
“வாழ்த்துகள். உங்கள் போஸ்ட்களை விடாது படிக்கிறேன். நீங்கள் புனைவு எழுதலாமே!”
மரியாதையான, அளவான செய்தி. அவன் நன்றி சொல்லி பதிலளித்தான். அவள் தன்னை நினைவில் வைத்திருக்கிறாள் என்று ஆச்சரியப்பட்டான். நினைவிலிருந்து அகல விடாமல், அங்கு வைத்திருந்தது சமுக தளம்தான்! டான் இந்தித் திரைப்படத்தில் வரும் வசனத்தை மறுவார்த்தைப் படுத்தலாம் – “மறப்பது கடினம் மட்டுமில்லை ; சாத்தியமில்லாததும் கூட!”
2010இல் நடந்த விமானப்பயணம் அவளுக்கு சுத்தமாக நினைவில் இல்லை. “மன்னிக்கவும், உங்களைச் சந்தித்தது நினைவில் இல்லை.” என்றாள். நினைவு எதைத் தேர்ந்தெடுக்கிறது என்பதன் உண்மை யார் அறிவார்?
அவர்கள் “பேசத்” தொடங்கினார்கள். எழுத்தைப் பற்றி. தொழில்கள் மொழியை எப்படிக் காலி செய்கின்றன என்று. உற்பத்தித்திறன் என்று வேடம் போடும் தனிமையைப் பற்றி. செவ்வாய், புதன் என உரையாடல்கள் எளிதாக ஓடின. இன்பாக்ஸ் வழியே நடந்த உரையாடலில் அவன் அனுப்பிய வரிகளை மீண்டும் மீண்டும் படித்துச் சரிபார்த்துத் தான் அனுப்பினான். ஒரு கட்டத்தில், 2010-லிருந்தே தொடர்பில் இருந்திருக்க வேண்டும் என்று எழுதினான். அவள் மென்மையாக ஏதோ பதிலளித்தாள். பதில்கள் மெதுவாக வந்தன. கவனமாக வந்தன. தூரம் உருவாக்கும் கவனம். லேசாக, பாதுகாப்பாக.அவர்கள் உரையாடலைத் தொடர்ந்தார்கள் — ஒரு காலத்தில் ஒரே விமானத்தில் பயணித்த இருவர், இப்போது நேர மண்டலங்களுக்கு அப்பால் வாக்கியங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். அவன் மான்யாவிடம் பேசும்போது, அது எவ்வளவு தூரம், எங்கே சென்று சேரும் என்பதை அவன் யோசித்ததே இல்லை.
அவள் ஏராளமாக பயணத்தில் இருந்தாள். நிறைய முறை அவன் உரையாடலைத் துவங்க “ஹலோ” என்பான். அது நாட்கணக்கில் பதிலளிக்கப்படாமலேயே இருக்கும். அவன் திரையைப் பார்த்துக் கொண்டிருப்பான். சில சந்திப்புகள் ஆசைக்காக அல்ல, ஒரு கதையாக மாறுவதற்காக மட்டுமே நடக்கும். அது போதுமானதுதான் என்று அவன் தனக்குள் சொல்லிக் கொள்வான்.
அவர்களின் உரையாடல் நின்றுபோன ஐந்தாறு மாதம் கழித்து எதிர்பாராமல் அவனுக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அவன் முக்கால்வாசி எழுதி முடிக்காமலேயே வைத்திருக்கும் நாவலை விரைவில் எழுதி முடித்து அனுப்பிவைக்க முடியுமா என்று கேட்டது அந்த மின்னஞ்சல். மின்னஞ்சலுக்கு ஒப்பம் இட்டவரின் பெயரைப் படித்த போது அதிர்ந்தான். விஜய் சோப்ரா. பெயர்களை எப்படி மறப்பது? தன்னுடைய நாவலின் சில சம்பவங்களை, கருவை மான்யாவிடம் விவரித்தது…இப்போது அதன் விளைவை உண்டு பண்ணியிருக்கிறது! விஜய் சோப்ராவின் லிங்க்ட்இன் பக்கம் முன்னர் குறிப்பிட்ட பன்னாட்டு புத்தகப்பதிப்பு நிறுவனத்தின் ஆசிய பிராந்தியத்தின் இப்போதைய தலைவர் அவர் என்பதைக் குறிப்பிட்டது. இடமாற்றமும் நிகழ்ந்திருக்கிறது. அவர் இப்போது இருப்பது ஜகார்த்தாவில். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு விமானப் பயணத்தில் மான்யா ‘நிலையானவர்’ என்று யாரைச் சொன்னாளோ, அதே மனிதர் இன்று அவனுடைய நாவலின் தலைவிதியைத் தீர்மானிக்கிறார்.
எந்த ‘கார்ப்பரேட் இலக்கியங்களை’ அவன் குப்பை என்று எள்ளி நகையாடினானோ, அதே குப்பைக் கூடையில் தானும் ஓர் அங்கமாகிவிட்டதைப் போல உணர்ந்தான். ரொட்டி நிறுவன அதிகாரியின் நாவலுக்குக் கீழே விழுந்த அதே பாசாங்குத்தனமான ‘லைக்’குகள், நாளை இவன் நாவலுக்கு விழச் சாத்தியமில்லை. சில வருடங்களாக வேலையின்மையிலிருந்து மீள முடியாதவனாக இருக்கிறான். சக-ஊழியர்கள் இல்லாதவனுக்கு ஏது “லைக்”?. தப்பித் தவறி ஓரிரு “லைக்” விழுந்துவிட்டால் – அது இவன் திறமைக்காக இருக்காது! விஜய் சோப்ரா என்னும் ஒரு நிறுவன அதிகாரி மீதான விசுவாசத்திற்காக இருக்கும்!
இலக்கியம் தெரியாதவர்கள் என்று அவன் யாரைப் பார்த்துச் சிரித்தானோ, அவர்கள்தான் இன்று அவன் எழுதியதை அச்சிடப் போகிறார்கள். வேலையில்லாதவனின் விரக்திக்கும், அடையாளமற்றவனின் படைப்புக்கும் ஒரு ‘வணிக மதிப்பு’ கூடி வந்திருக்கிறது. லிங்க்ட்இன் அதன் வேலையைச் செம்மையாகச் செய்துவிட்டது. மனிதர்களை இணைக்கிறதோ இல்லையோ, பழைய உறவுகளின் எச்சங்களைக் கொண்டு ஒரு புதிய சந்தையை உருவாக்கிவிடுகிறது.
ஜைகர்னிக் எஃபெக்ட் (Zeigarnik Effect) பற்றி அவன் எழுதியது அவனுக்கே இப்போது வசதியாகத் திரும்பியிருந்தது. சில கதைகள் முடிவடையாமல் இருப்பதே அந்தப் படைப்புக்குக் கிடைக்கும் கௌரவம். விஜய் சோப்ராவின் மின்னஞ்சலுக்குப் பதில் போடுவதும், அந்தப் பதிப்பகத்தின் வழியாகப் புகழடைவதும் அவன் இத்தனை காலம் காத்து வந்த ‘மானசீக எள்ளலுக்கு’ அவனே வைக்கும் கொள்ளி.
வேலை தேடும் நோக்கத்துடன் அடிக்கடி திறந்து பார்த்துக்கொண்டிருந்த லிங்க்ட்இன், அவனது கடந்த காலத்தையும் நிகழ்கால வறுமையையும் ஒரு புள்ளியில் இணைத்து ஒரு விளையாட்டை விளையாடி முடித்திருந்தது. இங்கிருந்து வெளியேறுவதுதான் இந்த முரணுக்கு அவன் தரும் ஆகச்சிறந்த முடிவு. ‘Close account’ பொத்தானை அழுத்தினான். பதினைந்து ஆண்டுகால டிஜிட்டல் தொடர்புகளும், மான்யாவின் ஞாபக எச்சங்களும் ஒரு சொடுக்கில் மறைந்தன. அவன் இப்போது உண்மையிலேயே தொடர்பற்று வலைக்கு வெளியே இருந்தான்.
