Site icon சொல்வனம் | இதழ் 374 | 13 செப் 2026

நானெனும் நான் (சிலந்தீ) 

நான் 
ஒன்றிலிருந்து 
மற்றொன்றாக மாறிக்கொண்டிருக்கும்
சிலவற்றின் தாய்
சிலவற்றின் மகள்
சிலவற்றின் மேகம்
காக்கை அமர்ந்து
கவிழ்ந்த
கமண்டல நீர்
தனயன் கையால் 
துண்டுபட்ட 
கலயத்தலை
மற்றுமொரு நிலத்தில்
மற்றுமொரு காலத்தில் 
சிறுவீடு 
பின்னும்
சிலந்தி.


குருதிப்பண்

இருளின் குளிர்மையில் சுருண்டு கொண்டிருக்கிறேன்..
ஈரவாசனையொடிருக்கும் இருப்பில் 
உள்நெருப்பின் கணப்பு இணைதாளமாய்.
பாலையின் வெம்மையோடு நீ உன் சிவந்த கரங்களால்
எலும்பை உருவி யாழிழைத்து
என் கூந்தலிழையின்
நுனிப்பற்றி சுருட்டி 
இழுத்து நாணாக்குகிறாய்
என் ஓடா குருதியின் கரையிலமர்ந்து
கூடா வார்த்தைகளின்
பண் இசைக்கிறாய்..
நெளியும் இசையில்
நான் 
இருந்தும்
மறைந்தும் 
இல்லாமலும்
இருக்கிறேன்.


அதோ தெரிகிறது பார்
பெருமலரொன்று
இல்லை அவை இரு
பட்டாம்பூச்சிகள்
எனில்
உனக்கு ஒரு
பெருமலர்
எனக்கு இரு
பட்டாம்பூச்சிகள்.

Exit mobile version