Site icon சொல்வனம் | இதழ் 373 | 23 ஆக 2026

இமாமும் ஷாதுலும்: நிலம் மனிதனை மிருகமாக்கும் கதை

ஒரு சில திரைப்படங்களை பார்த்துவிட்டு திரையரங்கை விட்டு வெளியே வரும் பொழுது நமது மனம் ஒரு பெரும் அமைதியை விரும்பும். ( உதாரணமாக பாலுமகேந்திரா அவர்களுடைய இயக்கத்தில் கமலஹாசன் அவர்கள் நடித்த ” மூன்றாம் பிறை ” திரைப்படம் ) அது போன்ற ஒரு அனுபவத்தை இந்த நாவலுடைய முடிவு உங்களுக்கு கட்டாயம் கொடுக்கும் என்று நான் கூறுகிறேன்.

தெலுங்கில் வெளிவந்து மற்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகளில் கேசவ ரெட்டி  அவர்கள் எழுதிய “ அவன் காட்டை வென்றான் ” என்ற நாவல் முதல் இடத்தில் இருக்கிறது . அதற்கு அடுத்த இடம் பெத்தின்ட்டி அசோக்குமார் அவர்கள் தெலுங்கில் எழுதி தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட  “கரடி” என்ற நாவல்.

90களில் பிறந்தவர்களுக்கும் அதற்கு முன்பு பிறந்தவர்களுக்கும் “ கரடி வித்தை ” என்றால் என்ன என்பது பற்றி மிகவும் பரிச்சயமாக இருக்கும். நாம் வசிக்கும் வீதிகளில் கரடிகளை தன்னுடன் அழைத்துக்கொண்டு ஒருவர் வருவார். கரடி சில சில வித்தைகளை செய்து நம்மை மகிழ்விக்கும். மேலும் கரடியிடமிருந்து “தாயத்து” வாங்கி கட்டினால் சகல வியாதிகளும் குறையும் என்ற நம்பிக்கை அப்போது இருந்தது.

என்னுடைய பால்ய நினைவுகளையெல்லாம் இந்த கரடி நாவல் நினைவில் கொண்டுவந்து நிறுத்திவிட்டது. கரடியின் மீது இருந்த அதீத ஆர்வம் கரடி வீதிக்கு வரும் நாட்களில் கரடியின்  பின்னே என்னை அலைய வைத்தது. கரடி வித்தை செய்பவரோடு  நாமும் சென்றுவிடலாம் என்ற எண்ணம் வரமால் இருந்தால் தான் அதிசியம் .

வித்தை காட்டுபவரோடு சென்றால் கரடியிடம் நன்றாக பழகி, நாம் சொல்வதை எல்லாம் செய்ய வைக்கலாம் என்கிற ஒரு பேராசையோடு திரிந்த நாட்களெல்லாம் கண்முன்னே வந்து போகின்றன.

ஒரு மொழிபெயர்ப்பு நாவலை படிப்பது போன்ற ஒரு உணர்வே ஏற்படவில்லை.நேரடியாக தமிழில் எழுதப்பட்ட ஒரு படைப்பை படிப்பது போன்ற உணர்வே ஏற்பட்டது. அவ்வளவு அற்புதமான மொழிபெயர்ப்பு பணி செய்யப்பட்டிருக்கிறது.

இந்த  நாவல் மூலமாக கரடி வித்தை செய்பவர்களுடைய பொருளாதார நிலை, சமூகத்தில் அவர்களுடைய நிலைமை சமூகம் அவர்களுக்கு அளிக்கும் அங்கீகாரம், காவல்துறை மற்றும் வனத்துறை போன்ற துறைகளிடமிருந்து கரடியையும் அவர்களையும் பாதுகாத்துக் கொண்டு தள்ளாடும் தருணங்கள், என பலவற்றை நாம் பார்த்திராத ,அனுபவித்திடாத, கேட்டிராத ஒரு கதைக்களத்தை நமக்கு இந்த நாவல் மூலமாக கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.

பொதுவாகவே வன விலங்குகளை தங்களுடைய கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வந்து தாங்கள் சொல்வது போல் செய்ய வைப்பதெல்லாம் மிகவும் வியப்பான ஒன்று.

இந்த நாவல் வாசித்து முடித்த பின் அவர்கள் எப்படி வனவிலங்குகளை பயிற்றுவிக்கிறார்கள் என்பதை நன்றாக தெரிந்து கொள்ள முடிந்தது. மேலும் அவர்களுடைய இல்லற வாழ்க்கை இந்த வனவிலங்கோடு எப்படி இருக்கிறது என்பதை நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது.

நிலம் என்பது ஒரு மனிதனை எப்படி மிருகமாக்கும் என்பதை இந்த நாவலில் வரக்கூடிய சில கதாபாத்திரங்கள் மூலமாக நாம் மிக அற்புதமாக புரிந்து கொள்ளலாம். சந்தர்ப்ப சூழ்நிலையால் மனிதன் மிருகம் ஆகிறான் என்பது இந்த நாவலின்  மையக்கருத்து என்று நான் நம்புகிறேன். இந்த கதையின்  மைய கதாபாத்திரங்கள் என்று பார்த்தால் ,ஒரு கிராமத்தில் விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய  அப்பா, அம்மா மற்றும் மகன் இவர்களோடு ஒரு கரடி மற்றும் சிலர் அவ்வளவே.

இந்த கரடியை வைத்து அந்த குடும்பம் பிழைப்பு நடத்திக் கொண்டு வருகிறது. சொல்லப்போனால் அந்த மூன்று மனிதர்களுக்கும் இந்த ஒரு வனவிலங்கு தான் மூன்று வேலையும்  உணவை அளித்துக் கொண்டு வருகிறது. ஒரு கட்டத்துக்கு மேல் இந்த வனவிலங்குக்கு ஒரு ஆபத்து வருகிறது. அந்த ஆபத்திலிருந்து அந்த வனவிலங்கு எப்படி தப்பிக்கிறது அல்லது கொல்லப்படுகிறது என்பதை மிக அழகாக விவரித்து இருக்கிறார் ஆசிரியர் .

அந்த குடும்பத்தினருக்கு ( இமாம் ) அரசங்கத்தால் நிலம் ஒதுக்கப்படுகிறது ஆனால் அரசாங்கம்  கரடியை வளர்க்கக்கூடாது என ஒரு நிபந்தனையை முன் வைக்கிறது. நிலமா அல்லது விலங்கா என்கிற இரு கண்ணோட்டத்தில் இந்த நாவல் விரிவடைகிறது. இறுதியில் எது வெற்றி பெற்றது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள நாவலை வாசித்து அனுபவித்து பாருங்கள்.

இமாம் என்கிற கதாபாத்திரம்தான் இந்த நாவலில் முழுக்க முழுக்க  கரடியோடு பயணிப்பவர். கரடிக்கும் அவருக்கும் இருக்கக்கூடிய பிணைப்பு என்பது அவ்வளவு உன்னதமாக இருக்கிறது.தனது மகனுக்கு எந்த அளவுக்கு செல்லமும் முன்னுரிமையும் கொடுக்கிறாரோ அதே அளவுக்கு கரடியான  ஷாதுலுக்கும் அவர் முன்னுரிமை கொடுக்கிறார்.

அந்த அளவுக்கு ஷாதுல் இமாமோடு வாழ்க்கையில் ஒன்றாக பிணைந்து இருக்கிறது.  ஷாதுல் இனி நம்முடைய இல்லத்தில் இருக்கக்கூடாது அதை வனத்திற்கு கொண்டு விட்டு வரவும் என சொன்ன பின்னும், சந்தையில் விற்றுவிட்டு வர சொன்ன பின்பும் அல்லது அதற்கு பித்து பிடித்துப் போகிற மருந்து வைத்து வனத்தில் விட்டு வர சொன்ன போதும் இமாம் ஷாதுலைக் கண்டு வருந்துகிறான். ஷாதுலின் மீதான இமாமுக்கு உண்டான கருணை என்பது விலைமதிப்பற்றது.

நாவலில் ஒரு கட்டத்துக்கு மேல் ஷாதுலுக்கு எந்த விதமான அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்கிற ஒரு உணர்வு நமக்கு ஏற்படுகிறது ஏனென்றால் அதுவும் ஒரு உயிர் தானே என்பதை நமக்கு மிக அழகாக ஆசிரியர் புரிய வைத்திருக்கிறார்.

நிலம் வரப்போகிறது என்கிற எண்ணம் தங்களோடு இத்தனை வருடம் வாழ்ந்து தங்கள் குடும்பத்திற்காக நடையாய் நடந்து வித்தைகள் செய்து, அடிமேல் அடி வாங்கி இவ்வளவு துன்பங்களையும் சகித்துக் கொண்டு வாழ்ந்த ஒரு வனவிலங்கை கொள்வதற்கு மனித மனம் துடிப்பதை நினைக்கும்போது தான் அவ்வளவு வருத்தமாக இருந்தது.

எந்தவிதமான வனவிலங்காக இருந்தாலும் நமது வீட்டில் வளர்ந்து ஒரு குடும்ப உறுப்பினராகவே உருமாறிய பின்பு  அதனுடைய பிரிவு என்பது தாங்கிக்கொள்ள முடியாத ஒன்று.

ஆனால் அந்த வனவிலங்குக்கு நிகராகவோ அல்லது அதற்கு அதிகமாகவோ ஏதேனும் பொருளோ அல்லது பணமோ கிடைத்தால் அந்த வனவிலங்கையே நாம் ஒழித்துக் கட்டுவதற்கு மனிதனாக எந்த ஒரு விதத்திலும் தயங்குவதில்லை என்பதை நினைக்கும் போதுதான் மனிதனாக இருப்பதற்கும் மிருகமாக இருப்பதற்கும் இடையே இருக்கக்கூடிய வேற்றுமையை உணர்ந்து கொள்ள முடிகிறது.

இமாம் ஷாதுலை அழைத்துக் கொண்டு கிராமம் கிராமமாக சென்று வித்தைகள் செய்து அதன் மூலம் தானியத்தையும் பொருளாதார பயனையும் அடைவதை எல்லாம் படித்து தெரிந்து கொள்ளும்போது இப்படி கஷ்டப்பட்டு கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இந்த மாதிரியான மக்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

மேலும் கரடி வனத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்றும்  வீட்டில் மனிதர்களோடு வாழ்ந்து அவர்களுடைய பழக்கங்களை பின்பற்றிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும் என்றும் போன்ற வேறுபாடுகளை இங்கு உணர்ந்து கொள்ள முடிகிறது.

கரடியினுடைய தனிப்பட்ட குணாதிசயங்களை பற்றியும் ஒரு கரடி வளர்ப்பவராக தன் அனுபவங்களை இமாம் முன்வைக்கிறார். அந்த தகவல்கள் எல்லாம் சற்று புதுமையாக இருந்தது. ஒரு மனிதருக்கும் கரடியான ஷாதுலுக்கும் இடையே மல்யுத்த சண்டை ஏற்படும். அந்த மல்யுத்த சண்டையில் ஷாதுல் அவ்வளவு அற்புதமாக சண்டையிடும் அந்த காட்சியை, வாசிக்கும்  நாம், கற்பனை செய்து பார்க்கும் பொழுது அவ்வளவு அற்புதமாக இருக்கிறது.

மேலும் இந்த மல்யுத்த சண்டையில் அந்த மனிதனை கரடி வென்ற பின் அது அந்த மனிதனையும்  வென்றிருக்கும் நம் மனதையும் வென்றிருக்கும்.

நிலம் என்ற ஒரு காரணி மனிதர்களை எந்தவிதமான தவறான முடிவுகளுக்கும் அடிபணிய வைக்கும் என்பதற்கு சிறந்த உதாரணமாக இந்த நாவலில் வரக்கூடிய சில கதாபாத்திரங்கள் விளங்குகிறார்கள்.

இந்த நாவலில்  நான் நொறுங்கி உடைந்த இடம் ஷாதுலுடைய இறுதி பயணம்தான். அது வனத்திற்கு செல்லக்கூடிய இறுதிப் பயணத்தை நான் வாசித்து முடித்த பின்பு அதை என்னால் மனதில் வைத்துக் கொள்ள முடியவில்லை.

என் நெருங்கிய வட்டாரத்தில் எத்தனையோ நபர்களிடம் சொல்லி என்னுடைய போதாமையை தீர்த்துக் கொண்டேன்.

நிலம் என்பது நமக்கு அத்தியாவசியமான ஒன்றுதான் ஆனால் அதற்கு ஈடாக ஒரு வனவிலங்காக இருந்தாலும் அதனுடைய உயிரை நாம்  பறிகொடுக்க துணியக் கூடாது.

இந்த அரை வருடத்திலேயே நான் வாசித்து மிகவும் நெகிழ்ந்து போன ஒரு நாவல் என்றால்  அது இந்த நாவல்தான்.

இறுதி பக்கத்தில் நான் என்னை திருப்திப்படுத்திக் கொள்வதற்கு எனக்கு நானே நாவலின்  முடிவை மாற்றி வைத்துக்கொண்டேன். இதுவே நாவலின் வெற்றி என்றே கருதுகிறேன் .

விலங்குகளும் உயிரை தான் கொண்டிருக்கிறது என்றும் அந்த உயிர்  விலைமதிப்பற்றது  என்றும் மிக அருமையான ஒரு கருத்தை நமக்கு இந்த நாவல் எடுத்துரைத்திருக்கிறது.

புத்தகம் : கரடி
ஆசிரியர் : பெத்தின்ட்டி அசோக்குமார் ( தமிழில் தெப்பல ஸ்ரீனிவாஸ் )
வகை : மொழிபெயர்ப்பு நாவல்

Exit mobile version