Site icon சொல்வனம் | இதழ் 371 | 26 ஜூலை 2026

‘பேராண்மை’ – விதியும் விளக்கமும்

கம்பர் தமிழ்க் கவி உலகின் பேராளுமை. அவர் தம் காலத்திற்கு முன் எழுந்த தமிழின் ஆகச்சிறந்த படைப்புகளின் இலக்கியச் செழுமையை உட்கொண்டே தமது படைப்பை உருவாக்கி இருக்கிறார் என்பதைக் கம்பனை கற்கும் தோறும் நம்மால் கண்டுகொள்ள இயலும். அத்தகைய பழம்பெரும் படைப்புகளுள் திருக்குறள் கம்பரிடத்தில் வலுவான ஆளுமையைச் செலுத்தி உள்ளது என்பதை மகாவித்துவான்  ச.தண்டபாணி தேசிகர் (வள்ளுவரும் கம்பரும்),தெ.ஞானசுந்தரம் (கம்பர் போற்றிய கவிஞர்) போன்ற அறிஞர் பெருமக்கள் இவ்விரு புகழ்பூத்த இலக்கியங்களையும் ஒப்பிட்டு எழுதிய தங்கள் நூல்களின் வழி நிறுவியுள்ளனர். 

அறத்தின் குரலாய் ஒலிக்கும் திருக்குறள் வகுத்த விதிகள் பலவற்றுக்குக் கம்பராமாயணம் விளக்கம் தர முற்பட்டிருப்பதை இரு நூல்களையும் இணைத்துச் சிந்தித்தால் விளங்கிக் கொள்ள முடியும்.இன்னொரு வகையில் சொன்னால் திருக்குறள் இலக்கணம் எனில் கம்பராமாயணம் இலக்கியம் எனலாம். இந்த இலக்கண இலக்கியச் சிந்தனையை எடுத்துரைக்கும் விதமாகச் சேலத்தில் செயல்பட்டுவரும் ஸ்ரீ கிருஷ்ண சேவா சமிதி என்ற அமைப்பு மாதந்தோறும் ஒப்பீட்டுச் சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்யவுள்ளது. 

அதன் முதற் பொழிவாக வள்ளுவரின் கடவுள் வாழ்த்தையும் கம்பரையும் இணைத்து பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. வள்ளுவம் விதி கம்பராமாயணம் விளக்கம் என்பதை வெறும் வாய்ப்பந்தலாகவோ அலங்காரக் கூற்றாகவோ சொல்லிக் கடந்து விடக் கூடாது. கொடுக்கப்பட்ட தலைப்பை விளக்கிப் பேசும் முன் இந்த விதி விளக்கம் என்ற கருதுகோளைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கருதினேன். 

அதற்கான முன்னோட்டமாகப் பேராண்மை என்ற சொல் வள்ளுவரால் என்ன வகையில் ஆளப்பட்டு உள்ளது என்பதையும் கம்பர் அதை எவ்வாறு தன் கதைப்போக்கில் எடுத்துக்காட்டி வள்ளுவரின் கருத்துக்கு வலு சேர்க்கிறார் என்று எடுத்துரைப்பதாக என் உரையின் தொடக்கத்தை அமைத்துக் கொண்டேன். அதையே இங்குக் கட்டுரையாகப் பகிர்ந்து கொள்கிறேன்.

பேராண்மை என்ற சொல்லைப் பிறன்மனை நோக்காமை, கொண்ட கொள்கையில் நிலைமாறாத திண்மை,வீரம் ஆகிய மூன்று பொருள்களில் வள்ளுவர் பயன்படுத்துகிறார். 

“பிறன்மனை நோக்காப் பேராண்மை சான்றோர்க்கு 
அறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு” (குறள்: 148)

“சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர்” (குறள்: 962)

“பேராண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால் 
ஊராண்மை மற்றுஅதன் எஃகு” (குறள்: 773) ஆகியன அவரால் இச் சொல் ஆளப்பட்ட குறட்பாக்கள்.

பேராண்மைக்குரிய முதன்மை இலக்கணமாக வள்ளுவர் உரைக்கும் பிறன்மனை நோக்காமை என்பதற்கு விளக்கம் தரும் பரிமேலழகர் புறப் பகைகளை அடக்கும் ஆண்மை உடையார்க்கும் உட்பகையாகிய காமம் அடக்குதற்கு அருமையின், அதனை அடக்கிய ஆண்மையைப் பேராண்மை என்றார் என்கிறார். 

இதன் சிறப்பைக் காப்பியத் தலைவனான இராமனின் வாயிலாக 

“இந்த, இப்பிறவிக்கு இரு மாதரைச்

சிந்தையாலும்தொடேன்” (கம்பராமாயணம் 5378) 

என உடன்பாட்டு நிலையில் காட்டும் கம்பர் அதன் எதிர் நிலையைக் கொச்சையாண்மை என்ற பதத்தைப் பயன்படுத்தி இராவணனின் தன்மையாகப் புலப்படுத்துகிறார்.

ஆசையின் இயல்பினால் அயலார் மனைவியை விரும்பி (அதனால்)
எந்நாளும் பிறர் தன்னை இகழ்ந்து சிரிக்க வெட்கமற்றவனாய் பசுமையான 
உடம்பு (காமதாபத்தால்) உலரப்
பெற்று பழிப்பை அடைகின்ற
இழிவான இவ்வகை ஆண்மை சிறந்த
குணங்களில் ஒன்றாகச் சேருமா? (சேராது) என அனுமன் கூற்றாக

“இச்சைத் தன்மையினில் பிறர் இல்லினை
நச்சி, நாளும்நகை உற, நாண் இலன்,
பச்சை மேனிபுலர்ந்து, பழி படூஉம்
கொச்சை ஆண்மையும், சீர்மையில் கூடுமோ?” (கம்பராமாயணம் 5903)

என்னும் பாடல் வழி கம்பர் எடுத்துரைக்கிறார்.

பேராண்மை குறித்த இரண்டாம் குறளுக்கு விளக்கம் தரும் பரிமேலழகர் எவ்விடத்தும் நிலை குலையாத திண்மையான் உளதாதல் பற்றி பேராண்மை எனப்பட்டது என சொல்லுக்குப் பொருள் வரையறை செய்கிறார்.

தயரதனின் மறைவினாலும் இராமன் வனம் புகுந்த காரணத்தாலும் அரசன் இல்லாமல் இருக்கும் அயோத்தியை ஆளுமாறு பரதனை வசிஷ்டர் வலியுறுத்துகிறார். அவ்வாறு ஆள்வது அறத்திற்கு முரண் ஆகாது என்பதை எடுத்துரைக்கிறார். 

“உந்தையோ இறந்தனன், உம்முன் நீத்தனன் 
வந்ததும், அன்னைதன் வரத்தில், மைந்த! 
அந்தம் இல் பேர் அரசு அளித்தி,” (கம்பராமாயணம் 2254) என்பது அவர் கட்டளை.

இதைக் கேட்ட பரதன்,

“நன்னெறி என்னினும் நான், இந் நானில
மண்உயிர்பொறை சுமந்து இருந்து வாழ்கிலேன்
அன்னவன்தனைக் கொணர்ந்து, அலங்கல் 
தொன்னெறி முறைமையின் சூட்டிக் கண்டிரால்” (கம்பராமாயணம் 2260)

என மறுத்துரைக்கின்றான். 

அதாவது தான் முடி ஏற்பது அறத்திற்கு உட்பட்டதாகவே இருந்தாலும் கூட இராமனை மீண்டும் அழைத்து வந்து தங்கள் குல வழக்கப்படி பட்டம் கட்டுவதையே தன் நோக்கமாக பரதன் பேசுகிறான். அறத்தின் பெயரால் பரதனின் உறுதியை மாற்ற வசிஷ்டர் முனைந்தாலும் அந்நிலையில் இருந்து மாறாத பேராண்மையை பரதன் இங்கு வெளிப்படுத்துகிறான்.புகழ் செய்யும் இடத்தும் தம் குடிமைக்கு ஒவ்வாத இளிவரவுகளைச் செய்யார் எனப் பரிமேலழகர் இக் குறளுரையில் பேசும் கருத்து பரதனிடத்தில் முழுமையாகப் பொருந்தி நிற்கிறது.

பேராண்மைக்குரிய மூன்றாவது விளக்கத்தைத் தறுகண் அதாவது வீரம் என்று வள்ளுவர் நேரடியாகவே குறளில் தெரிவித்து விடுகிறார். ஆனால் அவ் வீரத்திற்குப் புகழ் சேர்க்கும் ஊரான்மையைக் குறித்தும் வள்ளுவர் இக்குறளில் குறிப்பிடுகிறார். ஊராண்மையாவது உபகாரியாம் தன்மை எனச் சுருக்கமாக விளக்கும் பரிமேலழகர் அத்தன்மைக்குச் சான்றாக இலங்கையர் வேந்தன்  போரிடைத் தன் தானை முழுதும்படத் தமியனாய் அகப்பட்டானது நிலையை நோக்கி அயோத்தியர் இறைமேல் செல்லாது “இன்று போய் நாளை நின் தானையோடு வா” என விட்டால் போல்வது என இராமாயண நிகழ்வு ஒன்றை எடுத்துக்காட்டுகிறார். முதல் நாள் போரில் வீரத்தையும் களத்தில் போட்டு வெறுங்கையோடு நின்ற இராவணனை நோக்கி இராமபிரான்

“ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு
நாளை வா’ என நல்கினன்-நாகு இளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்.”

(கம்பராமாயணம் 7271) எனப் பேசுவதே இங்குச் சுட்டுப்படுகிறது.

இதேப் போல் இறுதிப் போரில் இராம பாணத்தால் தாக்கப்பட்ட இராவணன் தன்னுணர்வு இழந்து கிடக்க, அச்சமயத்தில் அவனைக் கொல்லும் படி இராமனின் தேரோட்டியான மாதலி 

“ஊறுதான் உற்றபோது உயிர்தனை நூறுவாய்” (கம்பராமாயணம் 9875) 

என இராமனைத் தூண்டினான்.

அதைக் கேட்ட இராமன்

“படை துறந்து, மயங்கிய பண்பினான் இடை பெறும் துயர் பார்த்து, இகல் நீதியின் 
நடை துறந்து, உயிர் கோடலும் நன்மையோ? 
கடை துறந்தது போர், என் கருத்து”.(கம்பராமாயணம் 9876)

எனக் கூறினான். 

அதாவது எதிரி தன் ஆயுதமிழந்து விழுந்து கிடக்கும் காலத்தில் போர் ஒழுக்கமாகிய நடை துறந்து அவனைக் கொல்வது வீரம் அல்ல என்பது இராமனின் கருத்து.

இராமபிரானின் ‘பகைவனுக்கு அருளிய’ இப்பண்பே வள்ளுவர் வகுத்த விதிக்கு விளக்கமாகி நிற்கிறது. ஆக வள்ளுவர் ‘பேராண்மை’ என்ற ஒரேச் சொல்லை உடலால் காட்டும் வீரம் (773), மனத்தால் காட்டும் ஒழுக்கம் (148), கொள்கையால் காட்டும் குடிப்பெருமை (962) என மூன்று வெவ்வேறு தளங்களில் பயன்படுத்தியிருப்பதைக் கம்பரும் தம் காப்பிய மாந்தர்கள் வழி காட்சிப்படுத்திச் சுவை கூட்டியுள்ளார்.

Exit mobile version