Site icon சொல்வனம் | இதழ் 371 | 26 ஜூலை 2026

பித்தனோ பேதையோ!

பித்தன் எனும் சொல் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக மனத்தில் பெரிய ஈர்ப்பு ஏற்படுத்தியது. ஒரே காரணம் புதுமைப்பித்தன். அவரது இயற்பெயர் சொ. விருத்தாசலம் என்றாலும் ஈர்ப்பின் காரணமாகத்தானே அவரும் அப்பெயரைப் புனைந்திருக்க வேண்டும். என்றாலும் இனப்பகை காரணமாக சாதிக்கரி பூச முயன்றவர் உண்டு. தமிழ் நவீன இலக்கிய முற்போக்குத் திறனாய்வு வரலாற்றில். மகாகவியை சாதி காரணமாய் புறக்கணித்த, சொந்த இனக் கவிஞரைக் கொண்டாடிய வரலாறும் உண்டு காண்.

சாதிப் பித்து, இனப் பித்து, காசுப் பித்து, காமப்பித்துக் கொண்டால் தாயே போற்றி, தந்தையே போற்றி, தமையனே தம்பியே போற்றி, தாரமே போற்றி எனத் துதித்து, பேருந்து நிறுத்தங்களில் எல்லாம் அவர்தம் விக்கிரகங்கள் நிர்மாணித்து, குடமுழுக்கும் செய்து, பூச்சாட்டும் தீமிதியும் தேரோட்டமும் நடத்தி வழிபாடு செய்வார்கள் முற்போக்கு சமூகநீதி மதச் சார்பற்ற இனமான சொந்தங்கள். காரணங்கள் ஆராயப் புகுந்தால் அரசியல், சினிமா, வணிகம், சம்பாத்தியம் என்பனவாக இருக்கும்.

பித்தன் எனும் சொல்லை ஈறாகக் கொண்ட மேலும் சில இலக்கியவாதிகள் இருந்தனர். பட்டியலிடப் புகுந்தால் தன்னாள் – வேற்றாள் அவதூறுகள் பரப்பப் பெறும்.

பித்தன் எனும் சொல் எத்தனை தொன்மை வாய்ந்த சொல்லாக இருக்கும்? திருக்குறளில், சங்க இலக்கியங்களில் யாண்டும் பித்தனைக் கண்டிலேன். பித்தை என்னுமோர் சொல் உண்டு, அது தலைமயிரைக் குறித்தது.

பித்தன் என்றால் பைத்தியக்காரன், கிறுக்கன், பிராந்தன், கோட்டிக்காரன், லூசு Crazy man, Mad man Lunatic Person என்பனவே முதற்பொருள். பித்தன் எனும் சொல்லைப் பைத்தியக்காரன் எனும் பொருளில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நாலடியார் கையாண்டுள்ளது.

நாலடியார் எனும் பழந்தமிழ் நூலின் காலம், பிரிவுகளான பால், அதிகாரம், இயல் போன்ற செய்திகளும் பதிப்பு, பழைய உரை ஆகிய தகவல்களும் புதிய உரையும் ஆங்கில மொழிபெயர்ப்பும் கொண்ட பதிப்பு ஒன்றினை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மீள் பதிப்பாளர் ப. சரவணன். முதற்பதிப்பு 2004-ல் வெளிவந்துள்ளது. விலை, எதிர்கால முதலமைச்சர் நடித்துள்ள சினிமா டிக்கெட் விலையில் பத்தில் ஒரு பங்கே!

பித்தன் எனும் சொல் ஆளப்பட்ட பாடல் நாலடியாரில் 340-வது. முழுப்பாடலும் தரலாம்.

“கற்றனவும் கண் அகன்ற சாயலும் இற்பிறப்பும்
பக்கத்தார் பாராட்டப் பாடு எய்தும் தான் உரைப்பின்
மைத்துனர் பல்கி மருந்தில் தணியாத
பித்தன் என்று எள்ளப் படும்”

என்பதாகும். நாம் கற்ற கல்வியும், அதிகமான புகழும், நற்குடிப் பிறப்பும், அயலாரால் கொண்டாடப் பெறும் பெருமையும் தானே ஒருவன் உரைப்பானேயானால், பரிகாசம் செய்வோர் அதிகரித்து, அவனை மருந்தினால் குணப்படுத்த இயலாத பித்தன் என்று எண்ணுவர் என்பது பாடலின் பொருள்.

சுருக்கமாகச் சொன்னால் தற்பெருமை பேசுபவர்களை உலகம் பித்தன் என்று எள்ளும் என்பதாகும். எனில் முகநூலில், வாட்ஸ் ஆப்பில், ரீலில், பருவ இதழ்களில் சுய விளம்பரம் செய்வோரும், செல்லுமிடமெல்லாம் – படுக்கை அறை உட்பட – புகைப்படக்காரரை உடன் கொண்டு செல்வோரையும் என்ன என்று உரைப்பீர்கள்? அவர்கள் அரசியல்காரரும் சினிமாக்காரரும் மட்டும் அல்லவே!

விவேக சிந்தாமணி என்பதோர் தொகைநூல். தொகுத்தவர் எவர் என்பது அறிகிலோம். தொகுக்கப் பெற்றது நாயக்கர் காலம் என்பர். ஆக மொத்தம் 234 பாடல்கள். அவற்றுள் ஒரு பாடலை முழுமையாகப் பார்ப்போம்.

“தன்னைத்தான் புகழ்வோனும் தன்குலமே பெரிதெனவே தான் சொல்வோனும்
பொன்னைத்தான் தேடி அறம் புரியாமல் அவை காத்துப் பொன்றினோனும்
மின்னலைப்போல் மனையாளை வீட்டில் வைத்து வேசை சுகம் விரும்புவோனும்
அன்னைபிதா பாவலரைப் பகைப்போனும் அறிவிலாக் கசடராமே”

என்பது பாடல். நாலடியார் தன்னைப் புகழ்வானைப் பித்தன் என்றது, விவேக சிந்தாமணி கசடன் என்கிறது.

பித்தன் எனும் சொல்லின் வேறு பொருள்கள் – மூடன், Idiot, Fool. மூடன் எனும் பொருளிலும் பித்தன் எனும் சொல்லை நாலடியார் ஆள்கிறது.

“நிலையாமை நோய் மூப்பு சாக்காடு என்றெண்ணித்
தலையாயார் தம் கருமம் செய்வார் – தொலைவில்லாச்
சத்தமும் சோதிடமும் என்றாங்கு இவை பிதற்றும்
பித்தரில் பேதையார் இல்”

என்பது பாடல்.

நிலையாமை, நோய், மூப்பு, சாக்காடு யாவும் தமக்கும் வரும் என்று உணர்ந்து மேலானவர்கள் தத்தம் கருமம் செய்வார்கள். அகலாத சத்தமும் ஆரவாரமும் சோதிட சாத்திரங்களில் நம்பிக்கையும் கொண்டு பிதற்றிக் கொண்டு திரியும் பித்தரைவிட பேதையர் வேறு இல்லை – என்பது பொருள்.

பித்தன் எனும் சொல்லின் மூன்றாவது பொருள் சிவபிரான். ஏழாம் திருமுறையான சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம், ‘பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் போற்றும்.

பித்தன் எனும் சொல்லின் நான்காவது பொருள் திருடன் என்கிறது அகராதி நிகண்டு. பித்தனைச் சிவன் என்று சொல்வது தனித்துவம் உடையதோர் பிரயோகம். ஆனால் இன்று பித்தனுக்குரிய பிற மூன்று பொருள்களான பைத்தியக்காரன், மூடன், திருடன் என்ற தன்மையில் வழுவாமல் வாழ்ந்து கொண்டிருப்போரையும் சமூகம் ஆரவாரத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

நமது வழக்கப்படி பித்தன் தொடர்பான சில சொற்களை ஆராயலாம்.

பித்தாசயம்பித்தப்பை
பித்தாதிக்கம்பித்தத்தின் ஆதிக்கம்
பித்தாதிகாரம்பித்தாதிக்கம், பித்தம் பெருகுதல் (யாழ்ப்பாண அகராதி)
பித்தாந்தலைக்கொட்டிஒரு தாவரம்
பித்திபித்தன், பைத்தியக்காரன்
பித்தீரல்பித்த நீர் சுரக்கும் உடலுறுப்பு
பித்து1. பித்த நீர் 2. வைத்தியம் 3. அறியாமை 4. மிக்க ஈடுபாடுநாகபாசப் படலத்தில் கம்பன், ‘உள்ளம்  வெம்போர்ப் பித்தேறினன் என்ன’ என்பார்.
பித்துக் கொண்டாடுதல்பைத்தியக்காரத்தனமான காரியம் செய்தல்
பித்துக் கொள்ளிபைத்தியம் பிடித்தவன் ‘பித்துக்குளி’ எனும் வழக்கு இதன் திரிபு ஆதல் வேண்டும்
பித்துப் பிடித்தல்பைத்தியம் ஆதல்
பித்துப்பைபித்தப்பை
பித்தேறிபைத்தியம் கொண்டவன்

பைத்தியம் என்ற சொல்லுக்கும் கிறுக்கு, மூடத்தனம் என்றே பொருள். பைத்தியக்காரன் என்றால் பித்துப் பிடித்தவன். பைத்திய ரோகம் என்பது பித்தக் கிறுகிறுப்பு.

கம்பன் இராமகாதையின் ஆறு காண்டங்களும் தொடங்குவதற்கு முன்பாகப் பாயிரம் எனும் பகுதியில் பதினோரு பாடல்கள் படைத்து அளித்திருக்கிறான். முதற் பாடல் கலிவிருத்தத்தில் அமைந்த கடவுள் வணக்கம். ‘உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்’ என்று தொடங்கும் பாடல். மீதிப் பத்தும் தனது எளிமையை இயலாமையைக் குறிப்புணர்த்துவதற்காக. சினிமாவுக்கு இராகத்துக்குப் பாட்டெழுதி, இசைக்கலைஞர்களால் பாடப்பெற்று, கருவி – தாள இசை மேதைகளால் வாத்தியங்கள் வாசிக்கப் பெற்று, நயாகரா நீர்வீழ்ச்சியில் அரையாடையுடன் நாயகனும் கொங்கை மொட்டுக்களும் யோனி இதழும் மட்டும் மறைத்து நாயகியும் ஆடிப்பாடும் காட்சியில் கோர்க்கப்பெற்று, புகழ்பெற்ற காரணத்தால் பாரத ரத்னா, நோபல் விருதுகளுக்குத் தகுதியானவராகத் தம்மைக் கருதுவது போலல்ல இது. ‘ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு பூசை முற்றுவும் தக்குபு புக்குகன’ என்பது கம்பனின் மனோபாவம். அவர் படைப்புக்குத்தான் சானிபீட விருது அளித்தனர் தமிழினக் காவலர்கள். காவலர் என்ற சொல்லே அண்மைக் காலத்தில் கெட்ட வார்த்தை போல் ஒலிக்கிறது.

பாயிரத்தில் எட்டாவதான கம்பனின் பாடல் –

“முத்தமிழ்த் துறையின் முறை நோக்கிய
உத்தமக் கவிஞர்க்கு ஒன்று உணர்த்துவென் –
‘பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்,
பத்தர் சொன்னவும், பன்னப் பெறுபவோ?’ ”

என்பது.

இயல் இசை நாடகம் என்று பகுக்கப்பட்ட மூன்று துறைகளில் முறையாகக் கற்றுத் துறை போகிய உத்தமக் கவிஞர்களுக்கு ஒன்றை உணர்த்துவேன் – ‘பைத்தியக்காரர்கள் சொன்ன சொற்களும், பேதையர் சொன்ன சொற்களும், பக்தர்கள் சொன்ன சொற்களும், ஆராயப்படும் தகுதி அற்றவை’ – என்பது உரை. இராமகாதையை எழுத முனைந்த தன்னை இளக்காரமாகக் காணும் பார்வை கொண்டோரிடத்து, தானொரு பித்தர் என்றும், பேதை என்றும், பக்தன் என்றும் அடவு போட்டான் கம்பன்.

பத்துப் பதினைந்து வயதில் சிலோன் ரேடியோவில் கேட்ட பாடல் ஒன்று தற்போது குறுக்குச் சால் ஓட்டுகிறது.

‘பித்தம் தெளிய மருந்தொன்று இருக்குது

பேரின்ப மன்றுக்குள்ளே’

என்று சி.எஸ். ஜெயராமன் பாடிய பாடல். அவர் குரலுக்கு இணையான இன்னோர் குரல் கேட்டல் அரிது. ஒரு தகவலுக்காகப் பகிர்கிறேன். சி.எஸ். ஜெயராமன் என்ற அந்த இசைமேதை மு. கருணாநிதி அவர்களின் மூத்த மனைவியின் சகோதரர். பாடல் இடம்பெற்ற சினிமாவின் பெயர் புதுமைப்பித்தன். நடித்தவர்கள் எம்.ஜி. இராமச்சந்திரன், டி.ஆர். ராஜகுமாரி முதலானோர். இசையமைத்தவர் ஜி. ராமநாதன். பாடலாசிரியர் தஞ்சை ராமையாதாஸ். படம் வெளியான ஆண்டு 1957.

பைத்தியம் என்ற சொல் ஆண்பாலுக்கும் பெண்பாலுக்குமான பொதுப்பெயர், புலவர், கவிஞர் என்பன போல. பித்தன் எனும் சொல்லின் பெண்பால் அறிய விருப்பம் உண்டு. அரசின் சன்மான ஓய்வூதியம் பெறும் அகவை முதிர்ந்த தமிழறிஞர் ஆயிரத்துக்கும் மேலுண்டு! அவர்கள் அருள் புரியவும்!

பைத்தியக்காரனின் பெண்பால் பைத்தியக்காரி என்பர். அவ்விதம் பித்தனின் பெண்பால் பித்தி என்று இல்லை. புலவனின் பெண்பால் புலவி இல்லை. செய்யுள், பாடல், பாட்டு என்பதைக் குறித்த வடசொல் கவி. ‘சான்றோர் கவி எனக்கிடந்த கோதாவரி’ என்பான் கம்பன். கவி கவிதை ஆகி, கவி எழுதுபவன் கவிஞர் ஆனார். இமாலயக் கவி, நயாகரா கவி என்மனார் வேறு இனம். கவிதாயினி எனும் சொல் புனையப்பட்டு இருபது ஆண்டுகள் இருக்கலாம்.

பிச்சன் என்றொரு சொல்லும் உண்டு பேரகராதியில். பொருள் – பைத்தியக்காரன், மருண்டவன், சிவன். திருவாசகம் சிவனைப் பிச்சன் என்கிறது. மாணிக்கவாசகர் பல பாடல்களில் பித்த, பித்தர், பித்தன், பித்தனே, பித்து எனப் பேசுவார். ஒரு பாடலில் ‘பிச்சன் ஆக்கினான்’ என்கிறார். திருவாசகம் நீத்தல் விண்ணப்பம் பகுதியில் ஒரு பாடலில், ‘வெங்கரியின் உரிப் பிச்சன்’, ‘தோலுடைப் பிச்சன்’, ‘நஞ்சூண் பிச்சன்’, ‘ஊர்ச் சுடுகாட்டு எரிப் பிச்சன்’, ‘என்னை ஆளுடைப் பிச்சன் என்று ஏசுவனே’ என்கிறார்.

பிச்சி என்றும் சொல்லுண்டு. எமக்கோ பிச்சி என்றால் தோவாளைப் பிச்சிப்பூ.  பிச்சிப்பூ இல்லாமல் அம்மன் கோயில் கொடை இல்லை, நிச்சயதார்த்தமும் கல்யாணமும் மறுவீடும் முதலிரவும் இல்லை. பிச்சிக்கு மாற்றுச் சொற்கள் பித்திகை, பித்திகம், செம்மல், சாதிமல்லி. பேரகராதியும் பிச்சி எனும் சொல்லுக்குத் தரும் பொருள்கள் பல.

  1. பித்திகை, சாதிமல்லி
  2. முல்லை (பிங்கல நிகண்டு)
  3. சிறு செண்பகம் (மலையாளம்)
  4. பிச்சனின் பெண்பால்
  5. பித்துப் பிடித்தவன்
  6. பெண்  பேய்
  7. சர்க்கரைக் கொம்மட்டி, Watermelon மராத்தியில் இதனைக் கலிங்கர் என்பர். பழந்தமிழ்ப் பாடல் ஒன்று கலிங்கம் என்னும்.

நீச் எனும் வடசொற்கிளவியின் பொருள் – நீசன், கீழ்மை, இழிவு. நீச் பாஷா, நீச் ஜாத், நீச் மனுஷ், நீச் ஆத்மி என்பர் வடவர். நீசன் எனும் சொல்லுக்குப் பெண்பால் உண்டா? கயவனுக்கு உண்டா? காமுகன் – காமுகி, தோழன் – தோழி, பரத்தன் – பரத்தை, உழவன் – உழத்தி, வாத்தியார் – வாத்திச்சி என்பதறிவோம். பேராசிரியரும் பட்டிமன்றப் பெருமுதலாளியும் ஆன ஒருவர் படைப்பாளி என்று நான் பேசியதைப் பெண்பாலா என்று கேட்டார்.

திருவள்ளுவர், ‘நண்ணேன் பரத்த நின் மார்பு’ எனத் தலைவி தலைவனைப் பழிப்பதாகப் பாடினார், இன்பத்துப் பாலில். புலவி நுணுக்கம் அதிகாரத்தின் முதல் குறட்பா –

“பெண்ணியலார் எல்லாரும் கண்ணில் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு”

என்பது குறள்.

நானறிய திருவள்ளுவர் யாண்டும் பரத்தை எனும் சொல் ஆளவில்லை. திருக்குறளில் விலைமகள் இல்லை, விலை முலையாட்டி இல்லை, வரைவின் மகளிர் என்பது 92-வது அதிகாரம், பொருட்பெண்டிர் வருகிறார். இருமனப் பெண்டிர் இருக்கிறார்.

“பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்

ஏதில் பிணம் தழீஇ அற்று”

என்பது குறள்.

“இருமனப் பெண்டிரும் கள்ளும கவறும்

திரு நீக்கப் பட்டார் தொடர்பு”

மற்றொரு குறள். கள் எனில் மது, தேறல், சரக்கு, தண்ணி, கவறு எனில் சூது வேறொரு குறளில் மாய மகளிர் என்கிறார்.

தொழிலாளி, கயவாளி, நெசவாளி, மலையாளி, வில்லாளி, போராளி, உழைப்பாளி என்பன  பொதுப்பால் சொற்களே! ஆசிரியை எனும் பெண்பாற் சொல் பிந்திய வழக்கு.

சின்னவீடு என இன்று வெகுவாகப் புழங்கப் பெறும் சொல்லின் பழைய மாற்று வைப்பாட்டி. ‘ஒரு பொண்டாட்டி மூணு வைப்பாட்டி’ என்பர் ஊர்ப்புறத்தில். கூத்தியாள் என்றொரு சொல்லும் உண்டு. ஏற்கனவே குறித்தது போல் வைப்பாட்டன் இல்லை, கூத்தியான் இல்லை.

கம்பனின் சொல்லான ஆட்சியர் என்பது இன்று நமக்கு மாவட்ட ஆட்சித் தலைவருக்குப் பொருத்தமான பயன்பாடு. ஆட்சியர் போலவே அமைச்சர், ஆளுநர், உறுப்பினர், காவலர், தணிக்கையாளர், வழக்கறிஞர், ஓட்டுநர், நடத்துநர், கணக்கர், ஊழியர் போன்ற சொற்கள் வழங்குகின்றன. ஆசிரியர் – ஆசிரியை ஆனதுபோல், கவிஞர் – கவிதாயினி ஆனதுபோல் இவர்கள் எல்லாம் ஆவதெப்போ? மாமணி, செம்மணி, நன்மணி, தமிழ்மணி அறிஞர்கள் முயல்வாராக இருத்தல் கூடும்!

இந்தியில் கர்வாலா – கர்வாலி, தூத்வாலா – தூத்வாலி,  சோப்டா வாலா – சோப்டா வாலி, தாருவாலா – தாருவாலி எனப் புழங்குவதைப் போன்றே நமக்குள்ளும் உண்டு. சமையல்காரன் – சமையல்காரி, பால்காரன் – பால்காரி, மீன்காரன் – மீன்காரி என. எனினும் பல தொழிற் பெயர்களுக்குப் பெண்பால் சொல் அறியேன். கொல்லர், தச்சன் போன்று. வன்சொல் அஞ்சி இனப் பெயர்களுக்குள் நுழைய எனக்குச் சம்மதம் இல்லை.

மறுபடியும் பித்தனுக்கு வருவோம். திருத்தொண்டர் புராணம் எனும் பெரிய புராணம் 4286 பாடல்களில் பாடிய சேக்கிழார், பைத்தியம் எனும் சொல் பயன்படுத்தவில்லை. மாறாக பித்தன், பித்தனும், பித்தனே, பித்தா, பித்து எனும் சொற்களைப் பத்துப் பாடல்களில் பதிவிட்டுள்ளார்.

பித்து, பித்தன் எனும் சொல்லைவிட இன்று பைத்தியம் எனும் சொல்லின் ஆட்சி அதிகம். ‘உமக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?’ என்று கேட்காத நாளெல்லாம் எமக்குப் பிறவா நாளே! அதுபோல் பிரபலமான சில சொற்றொடர்களும், சொலவங்களும்:

  1. அது ஒரு பயித்தியம் புடிச்ச நாயில்லா? (இங்கு நாய் என்பது நாயல்ல!)
  2. பைத்தியத்துக்கு வைத்தியம் செய்வாருண்டா?
  3. அவன் பைத்தியம் பிடிச்சில்லா திரியான்!
  4. பசிக்குப் பனம்பழம் தின்றால் பித்தம் பட்ட பாடு படட்டும்! (இங்கு பித்தம் என்பது வாதம் – கபம் – பித்தம் எனும் மூன்றில் வருவது)
  5. சக்கரை திண்ணு பித்தம் முறியும்ணா கசப்பான கசாயம் எதுக்குக் குடிக்கணும்?

இங்கும் பித்தம் என்பது மேற்சொன்னதே!

பைத்தியத்துக்கான இன்னொரு சொல் கிறுக்கு! ‘கிறுக்குப்பய’, ‘அவன் ஒரு கிறுக்கன்லா!’, ‘உனக்குக் கிறுக்குப் புடிச்சிற்றோ?’, ‘கிறுக்குப் பய போறான், விடு’, ‘கிறுக்குப் பய வாறான், பேசினா குறுக்க மறுக்கப் பேசாதே என்னா!’ என்பன சர்வ சாதாரணமாகப் புழங்கும் சொற்றொடர்கள்.

பித்து, பைத்தியம், கிறுக்கு சில பிரதேசங்களில் கோட்டி என வழங்கப் பெறும். கோட்டிக்காரன், கோட்டிக்காரி என்பர். ‘உனக்கென்ன கோட்டியா?’ என்றும், ‘கோட்டி புடிச்சிருக்கோ?’ என்றும் வினவுவதுண்டு. கர்ப்பமுற்ற பெண்டிரின் மசக்கைத் தன்மையைக் குறிக்க சாக்கோட்டி என்பது மாற்றுச்சொல். ‘ஏட்டி, இந்த வருக்கைச் சக்கைப் பழத்திலே ஒரு துண்டு பக்கத்து வீட்டு பங்கசத்துக்குக் குடுத்து விடு என்னா! பாவம் சாக்கோட்டிக்காரி!’ என்பர் தாயர்.

பிராந்து என்றொரு சொல் உண்டு என் கைவசம். பொருள் . பித்து, பைத்தியம், கிறுக்கு, கோட்டி, லூசு… நான் எழுதி, 1997 டிசம்பர் மாதம் ‘புதிய பார்வை’ மாத இதழில் வெளியான சிறுகதையின் தலைப்பு ‘பிராந்து’. அதையும் உள்ளடக்கிய 18 கதைகள் கொண்ட, 2002-ம் ஆண்டு கோவை விஜயா பதிப்பகம் வெளியிட்ட எனது ஐந்தாவது சிறுகதைத் தொகுப்பின் தலைப்பே ‘பிராந்து’தான்.

நாஞ்சில் நாட்டில் இன்றும் புழக்கத்தில் இருக்கும் சொல் பிராந்து. ‘என்னா பிராந்து புடிச்சிற்றா?’ என்றும், ‘ஏய்! அவன் ஒரு பிராந்தன்பா!’ என்றும் வழக்காறு உண்டு.

பிராந்து நான் கூறிய பொருளில் இன்றும் மலையாளத்தில் வாழும் சொல். ‘அயாள்க்கு பிராந்தாணு!’ என்றும், ‘அயாள் ஒரு பிராந்தனாணு!’ என்றும் தினசரி சம்சாரிக்கும் போழ் கேட்காம்!

கருடனை, கலுழனை, காய்சினப் பறவையை, Eagle எனும் புள்ளைப் பருந்து என்றும் மொழிவார். ‘கிருஷ்ணப் பருந்து’ என்பது ஒரு தமிழ் நாவல் தலைப்பு. எழுதியவர் திருவனந்தபுரத்தில் வாழ்ந்து மறைந்த ஆ. மாதவன். அதுபற்றி நமக்கென்ன? ஆல்ப்ஸ் மலைச் சிகர நடிகையின் காதலர்கள் எத்தனை என்ற கணக்குத் தெரிந்தால் போதாதா? நான் காதலர் கணக்கைத்தான் குறித்தேன், கலவிக் கணக்கை அல்ல!

பருந்து என்ற சொல் திரிந்து மக்கள் வழக்கில் பிராந்து என உச்சரிக்கப்படும். புரட்சி எனும் சொல் திரிந்து பொறுக்கி என ஆனதைப் போல. ‘கள்ளப் பிராந்து’ என்பர் கோழிக்குஞ்சுகளைக் கவர்ந்து போகும் கருடனை. செந்தலைக் கருடன் என்றொரு சிறப்பும் பெயரும் உண்டு கள்ளப் பிராந்துக்கு.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் ஒரு மகளிர் பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை பயிலும் நாலாயிரம் மாணவியருக்கு உரையாற்றிக் கொண்டிருந்தேன். சம்பாதி – சடாயு எனப் பெயரிய இரண்டு அண்ணன் – தம்பி கழுகுகள் பற்றிக் குறிப்பிட்டேன். உரை முடிந்து, கேள்வி நேரத்தில் ஒரு மாணவி கேட்டாள் – ‘‘ஐயா கருடன் வேறு கழுகு வேறா?’’ என்று. பொறுமையுடன் விளக்கினேன். ஏனெனில் நமது பாடத்திட்டங்களில் அவை இடம்பெற மாட்டாது என்பதனால்.

‘இரந்தும் பிராந்துக்கு இடு’ என்பதோர் சொலவம். இங்கும் பிராந்து என்பது பருந்துதான். ‘ஆகாசத்தைப் பருந்து எடுத்துக் கொண்டு போகுமா?’ என்பது மற்றுமோர் சொலவம்.

பிராந்து எனக் குறிக்கப்பெறும் பருந்து வேறு, பைத்தியம் எனப் பொருள் தரும் பிராந்து வேறு என்பதறிக!

பைத்தியம் எனும் சொல்லைப் பின்னொட்டாகக் கொண்டு குறிக்கப்பெறும் வெகுமதியுள்ள சொற்களுண்டு நம் மொழியில். பணப் பைத்தியம், பதவிப் பைத்தியம், சினிமாப் பைத்தியம், சாமிப் பைத்தியம், இசைப் பைத்தியம், பெண் பைத்தியம், காதல் பைத்தியம், பக்திப் பைத்தியம், பிரியாணிப் பைத்தியம், புரோட்டாப் பைத்தியம், ஊர்ப் பைத்தியம், கட்சிப் பைத்தியம் எனவாங்கு!

இதைப்போல் பணக்கிறுக்கு, பதவிக் கிறுக்கு, பொம்பளைக் கிறுக்கு, சினிமாக் கிறுக்கு, துணிக் கிறுக்கு, உருப்படிக் கிறுக்கு, சாப்பாட்டுக் கிறுக்கு, சாமிக் கிறுக்கு, பாட்டுக் கிறுக்கு எனப் பல!

யாவுமே ஒருவகைப் பித்தே போலும்! எனது இந்தச் சொல் தேட்டமும் சேர்த்து.

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்?

Exit mobile version