அங்கீகரிக்கப்பட்ட கதைகள்
எழுத்தாளர் ஷாராஜின் “ மிஸ் கிழக்கு வீதி ” என்கிற இந்தப் புத்தகம் இரண்டு பகுதிகளை உள்ளடக்கியது. முதலாவது பகுதி 13 சிறுகதைகள் அடங்கின சிறுகதைத் தொகுப்பு. இரண்டாவது பகுதி 3 குறுநாவல்களின் தொகுப்பு. இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள படைப்புகள் கணையாழி , தினமணிக் கதிர் , செம்மலர் , கலைமகள் , புதிய பார்வை , கல்கி , பெண்ணே நீ , வார மலர் , வாசகசாலை , யுகமாயினி முதலிய இதழ்களில் பிரசுரம் பெற்றவை.
மேலும், நெய்வேலி புத்தகக் கண்காட்சி சிறுகதைப் போட்டி , கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி , சு. சமுத்திரம் நினைவு சிறுகதைப் போட்டி , கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவு சிறுகதைப் போட்டி , ஹைனுன் பீவி நினைவு சிறுகதைப் போட்டி , தனுஷ்கோடி ராமசாமி நினைவு சிறுகதைப் போட்டி , தி.ஜா. நினைவு குறுநாவல் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் முதற்பரிசு , இரண்டாம் பரிசு , ஆறுதல் பரிசு , சிறப்புப் பரிசு முதலியவற்றையும், இலக்கியச் சிந்தனை மாதாந்திர விருது, ஜோதி விநாயகம் நினைவுத் திட்டத்தின் கீழான மாதாந்திர விருது உள்ளிட்ட விருதுகளையும் பெற்றப் படைப்புகளே இந்தத் தொகுப்பில் உள்ள எல்லாப் படைப்புகளும் ஆகும். அதாவது எழுத்தாளர் ஷாராஜின் 1996 முதல் 2023 வரையிலான படைப்புகளுள் முக்கியமானவை தெரிவு செய்யப்பட்டு “ மிஸ் கிழக்கு வீதி ” என்கிற இந்த ஒற்றைத் தொகுப்பாக்கப்பட்டு கற்கைப் பதிப்பகத்தாரால் கொண்டுவரப்பட்டுள்ளது.
இத்தொகுப்பில் உள்ள சில கதைகளின் பேசுபொருளையும், ஒத்த பேசுபொருள்களைக் கொண்ட சில கதைகளைத் தொகுத்து அவை வெளிப்படுத்தும் கருப்பொருள்களைப் பற்றிய எனது புரிதல்களை , சிந்தனைகளை பகிர்ந்து கொள்வதன் வழியாகவும் இந்தப் புத்தகத்தின் மீதான எனது வாசிப்பனுவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
‘ பரட்டச்சி ’ – ஒரு சிறு அறிமுகம்
கைவிடப்பட்ட , மனப்பிறழ்வுக்கு ஆளான , சுய சுகாதாரத்தைப் பேணிக்கொள்ளத் தெரியாத நிலையில் பேருந்து அல்லது இரயில் நிலையங்களிலோ, நம் ஊர்களிலோ அல்லது நாம் வசிக்கும் வீதிகளிலோ, இப்படி ஏதோ ஒரு இடத்தில் தம் உயிரை மட்டுமே தக்கவைத்துக் கொண்டு நம்மிடையே பிழைத்துக் கிடக்கும் மனிதர்களை நாம் எல்லோரும் நம் வாழ்வில் ஒரு முறையாவது சந்தித்திருப்போம்; அப்படி இதுவரை இல்லையெனில் இனி நிச்சயம் சந்திக்க நேரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அப்படியான ஒரு பெண்ணின் கதை தான் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘ பரட்டச்சி ’ என்கிற கதை. நான் குறிப்பிட்டிருக்கும் படியான அவலத்தை வாழ்ந்து தீர்க்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் அம்மாதிரி ஒரு பெண்ணின் வாழ்வை மேலும் எந்த அளவிற்கு கொடுமையானதாக ஆக்க முடியுமோ அந்த அளவிற்கு கொடுமையானதாக்கியிருந்தனர் இந்தக் கதையில் வரும் சில முகாந்திரமற்ற நபர்கள். அவர்களைப் போல சுய சுகத்தை மட்டுமே கருத்திற்கொண்டு வேறோரு தனி மனித வாழ்வைச் சிதைக்கத் தயங்காத கொடூரர்கள் சூழ்ந்திருக்கும் இந்தச் சமூகத்தைக் குறித்தான பதற்றம் இந்தக் கதையை வாசிக்கையில் எழுந்தது. மேலும், இந்தக் கதையின் வாசிப்பு என் வாழ்வில் நான் இதுவரையில் கடந்து வந்திருந்த ‘ பரட்டச்சி ’ மாதிரி யாருமற்றவர்களின் வாழ்வு குறித்துச் சிறிது நேரம் சிந்திக்கவும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருந்தது.
அதிகம் கவனம் பெறாத திருநங்கைகளின் குரல்
இந்தச் சமூகத்தில் திருநங்கைகளுக்கு தற்போது இருந்துவரும் மற்றும் இனிவரும் காலங்களில் அவர்களுக்கென நாம் ஏற்படுத்தித் தர வேண்டிய நிலை குறித்து சிந்திக்கத் தூண்டுபவையாக அமைவன திருநங்கைகளின் வாழ்வியல் குறித்தான படைப்புகள். அவ்வகையில் இந்தத் தொகுப்பில்
‘ திரிபு ’ மற்றும் ‘ அணில் சேவை ’ என்கிற இரண்டு கதைகள் திருநங்கைகளை முன்னிலைப்படுத்தி எழுதப்பட்ட கதைகள். இந்த இரண்டு கதைகளும் திருநங்கைகள் பற்றிய படைப்புகளில் கொஞ்சம் முக்கியமானதாகப் படுகிறது.
ஏனெனில், சாதி , மதம் காரணமாக ஆணவக்கொலைகள் அடிக்கடி நிகழ்ந்து வருவது நாம் எல்லோரும் அறிந்த, ஆத்திரத்தையும் , குற்றவுணர்ச்சியையும் நமக்குள் ஏற்படுத்தக் கூடிய ஒரு விடயம். சாதி மதம் தவிர்த்து பால் திரிபு காரணமாகவும் அத்தகைய ஆணவக்கொலைகள் அல்லது கொலை மிரட்டல்கள் நிகழ்கின்றன என்பதை இந்தத் ‘ திரிபு ’ கதை அடையாளப்படுத்தியிருக்கிறது. சிறு வயதிலேயே வீட்டை, உறவுகளைத் துறந்து, அறுவை சிகிச்சை செய்து கொண்டு திருநங்கையாக தொலை தூரத்தில் வாழ்ந்து வரும் ஒருவரால் மானக்குலைவு, கவுரவக்குலைவு ஏற்பட்டுவிட்டதாக் கருதும் வீட்டார், அந்தப் பெண்ணை மீண்டும் ஆணாக வாழ வற்புறுத்துவதோடு அதன் தொடர்ச்சியாக கொலை முயற்சியிலும் ஈடுபடுவதே இந்தக் கதை. இந்தக் கதையில் வரக்கூடிய அந்தத் திருநங்கை பாத்திரத்தின் உணர்வுகளை மிகச் சிறப்பான முறையில் எழுத்தில் கொண்டு வந்திருந்தார் எழுத்தாளர் ஷாராஜ். இது போன்ற உண்மைச் சம்பவங்களையும் நான் கேள்வியுற்றிருக்கிறேன்; ஆனால், சாதி ஆணவக் கொலைகளைப் போல இந்தப் பாலினத்தேர்வுக்கெதிரான ஆணவக்கொலைகள் கவனம் பெறப்படவில்லை என்றே கருதுகிறேன்.
திருநங்கைகள் மீது நம் எல்லோருக்கும் இருக்கக்கூடிய எதிர்மறையான விமர்சனம் அவர்கள் பிச்சை எடுப்பதும், பாலியல் தொழிலில் ஈடுபடுவதுமாகத்தான் இருக்கும். வெகு மக்கள் எதிர்கொள்ள நேரிடுவது அத்தகு தொழில்களில் ஈடுபடும் திருநங்கைகளைத்தான் என்பதும் , அப்படி நாம் சந்திக்க நேரிடும் அவர்களுள் பலர் பொதுவெளியில் நம்மீது நிகழ்த்தும் அத்துமீறல்கள்தான் அவர்களிடமிருந்து நாம் விலகி இருக்க ஒரு முக்கியக் காரணம் என்பதிலும் சந்தேகமில்லை. இந்தப் பெரும்பான்மைக்குள் சிக்காமல், அதாவது பாலியல் தொழிலையும் பிச்சை எடுப்பதையும் விடுத்து வெகு மக்கள் அன்றாடம் எதிர்கொள்ள வேண்டிய வேறு தொழில்களில் ( அதாவது சமையல் , தையல் , அழகுசார் தொழில்களை இதற்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம் ) தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள திருநங்கைகள்பலர் இருக்கவே செய்கின்றனர். அத்தகைய முனைப்புக் கொண்டுள்ள ஒரு திருநங்கையர் குழுவின், சமூகத்தில் அவர்களுக்கு கிடைக்கப்பட வேண்டிய சுயமரியாதைக்கான , மதிப்புமிகு வாழ்வுக்கான வாய்ப்புக்கான கோரிக்கைக் குரலாக ‘ அணில் சேவை ’ என்கிற கதை அமைந்திருந்தது. அளவில் சிறிய கதைதானாயினும் இந்தக் கதையை வாசித்து முடித்ததும்,
“ ஒரு திருநங்கை பிச்சை எடுப்பதையும் , பாலியல் தொழிலில் ஈடுபடுவதையும் விரும்பாத , அதையேக் காரணம் காட்டி அவர்களை நிராகரிக்கவும் செய்யும் இந்தச் சமூகம், அதே திருநங்கை தனது கையில் சமையல் கரண்டியையோ , முகம் பூசும் தூரிகையையோ , புத்தகத்தையோ அல்லது ஆண்களும் பெண்களும் ஆக்கிரமித்திருக்கிற இப்படி ஏதோவொரு தொழிலையோ தேர்ந்தெடுக்க முன்வருகையில் காட்டும் எதிர்வினை என்னவாக இருக்கிறது ? அந்த மாற்றத்தை , அவர்களுக்கான சுயமரியாதையை ஏற்படுத்தித்தரும் மனப்பக்குவம் இந்தச் சமூகத்திற்கு வாய்த்திருக்கிறதா ? ”
என்கிற அழுத்தமான , நியாயமான சிந்திக்கத் தகுந்த கேள்வி எழுந்தது. அப்படியொரு வாய்ப்பை இந்தக் கதை ஏற்படுத்தித் தந்திருந்தது.
மத நல்லிணக்கம் பேசிய கதைகள்
அடுத்ததாக பெரும்பான்மையாக மத நல்லிணக்கத்தைப் பேசும் கதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருந்தன. அவற்றுள், ‘ ஈஸ்வர அல்லா ’ மற்றும் ‘ கிறிஸ்துவ விநாயகர் ’ ஆகிய கதைகளில் தத்தம் தலையங்கத்திலேயே அந்த மத நல்லிணக்கம் அமையப்பெற்று இருப்பதை கவனிக்க முடியும். இப்படி தலையங்கத்தில் தொடங்கி முடிவு வரை வெவ்வேறு மத நம்பிக்கையாளர்களுக்குள் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டிய சகோதரத்துவத்தை வலியிறுத்தி நின்ற நல்ல கதைகள் அவை. அந்த வரிசையில் ‘ போகிற வழியும், சேர்கிற இடமும்! ’ என்கிற கதை இந்தத் தொகுப்பில் என்னைக் கவர்ந்த முக்கியமான கதைகளுள் ஒன்று. இந்தக் கதையைச் சொல்ல எழுத்தாளர் உருவாக்கித் தந்த சூழல் என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தது. ஒரு இரவில் கொலை செய்யத் துரத்திக் கொண்டிருக்கும் கும்பலிடமிருந்து ஒருவரை மீட்டு தன் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் ஒரு நபர்; தனித்து வாழ்ந்து வரும் அவரும் , அந்தப் புதிய நபரும் ஒன்றாக தங்க நேரிடும் அவ்விரவில் அவர்கள் நிகழ்த்தும் மதம் குறித்தான உரையாடல்கள்; அப்படி அவர் காப்பாற்றி கூட்டி வந்திருந்த நபர்தான் தன் ஒரே மகளின் மரணத்திற்கு காரணம் என்பது தெரிந்த பின்னரும் கூட அவர் அந்நபர் மீது காட்டும் பரிவு; இறுதியாக அந்தக் கொலையாளியின் எதிர்வினை என்பதாக ஒரு சுவாரசியமான கதையாக வந்திருந்தது. மதத்தின் பொருட்டு உயிர்களைக் கொல்லத் தயங்காத ஒரு நபருக்கும், எம்மதமும் எக்கடவுளும் தன் பெயரால் நிகழும் இக்கொலைகளை நிகழ்த்தச் சொல்வதில்லை என்கிற நம்பிக்கையுள்ள ஒரு நபரும் நிகழ்த்தும் அர்த்தமுள்ள உரையாடலாகவும் இந்தக் கதையை என்னால் அனுக முடிந்திருந்தது.
தண்ணீர் பற்றாக்குறை / வறட்சி
தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனையும், வறட்சியும் இந்தப் புத்தகத்தின் சில படைப்புகளில் பேசப்பட்டிருந்தன. குறிப்பாக இரண்டு கதைகளின் இறுதிப்பகுதிகள் மிகப் பொருத்தமாக கதைகளில் வரக்கூடிய அந்நிலப்பகுதிகளில் நிலவிவந்தத் தண்ணீர் பற்றாக்குறையையும், அதன் விளைவையும் பிரதிபலிப்பனவாக அமைந்திருந்தன.
சாகக்கிடக்கிற மனிதர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு தண்ணீர் பிடிக்க முந்தியடிக்கிற மனிதத்திரள் என்பதான முடிவைக் கொண்டிருக்கக்கூடிய ‘ வறட்சி ’ என்னும் கதை ஒரு நிலத்தின் வறட்சி அந்நிலம் சார்ந்த மனிதர்களின் மனத்திலும் வறட்சியை ஏற்படுத்த வாய்ப்பிருக்கக்கூடிய சாத்தியத்தை முன்வைப்பதாகவே என்னால் புரிந்து கொள்ளப்பட்டது.
இந்தக் கதை இப்படி என்றால் இதற்கு நேரெதிரான இன்னொரு கதை தான் ‘ ஜீவநதி ’. கண்ணுக்கெட்டிய தொலைவு வரை நீரின் சுவடுகளையேக் காட்டாமல் ஒரு நிலம் ஒரு மனிதனைச் சாக விடத் துணிந்து விட்ட பிறகு சமீபத்தில்தான் தாயான ஒரு பெண்ணுக்கும் , அவள் கணவனுக்கும் அந்த உயிரைக் காக்க வாய்ப்புக் கிடைக்கிறது. எந்த ஒரு ஆணும் , பெண்ணும் செய்யத் தயங்குகிற ஒரு விடயத்தை அவ்விடத்தில் நிகழ்த்தி, பிரிந்து கொண்டிருந்த உயிரை மீட்டெடுத்த அவர்களின் மனத்தில் சுரந்த ‘ ஜீவநதி ’ எந்த வறட்சியிலும் மனித மனங்களில் இருந்துகொண்டிருக்கும் நேயத்தை அடையாளப்படுத்தியிருந்ததை உணர முடிந்தது. இந்த இரண்டு கதைகளும் எழுத்தாளரின் படைப்பாற்றலுக்கும் சிறந்த உதாரணங்களாக இருக்கும் என்று நம்புகிறேன்.
கேரள – தமிழக எல்லைப்புற மக்களின் வாழ்வியல்
கேரளம் மற்றும் கேரள-தமிழக எல்லைப்புறப் பகுதிகளையும், அம்மக்களையும், அங்கு நிலவும் அரசியல் சூழலையும், அவர்களின் குறைந்தபட்ச வாழ்முறைகளையும் எழுத்தாளர் ஷாராஜ் இத்தொகுப்பிலுள்ள சில படைப்புகளில் காட்டியிருக்கிறார். ‘ மலையாளக் கரையோரம் ’,
‘ வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு ’ , ‘ கடக்க வேண்டிய தூரம் ’ ( குறுநாவல் ) உள்ளிட்ட படைப்புகளில் காட்டப்பட்டிருக்கும் சூழலும் , மனிதர்களும் நாம் அறிந்திராத அவ்வாழ்விற்கு ஒரு சிறு அறிமுகமாக இருக்கும்படி நல்ல முறையில் அமைந்திருந்தன.
வாசிக்கப்படுவதற்காகக் காத்திருக்கும் இரு பெண்கள்
“ காலனியின் நான்காவது வீதி ” என்கிற குறுநாவலில் ஒரு பெண் வருகிறாள். வயதான கணவருக்கு இரண்டாம் மனைவியாக வாழ்க்கைப் பட்டு போன ஒரு இளம்பெண் அவள். ஒரே ஒரு பெண்ணின் கதைதான் இது என்ற போதிலும், எவருக்கும் சொல்ல முடியாத பல போதாமைகளை சுமந்து வாழ்ந்து வரும் பல பெண்களின் பிரதிநிதியாகவே அவள் இருக்கிறாள். அந்தப் பெண்ணின் இளமையின் தவிப்பை , உடல் தேவையை , அதன் அடக்கவொண்ணா பீறிடலை ஒரு சிறுவனின் பார்வையின் வழி இந்தக் கதையில் நேர்த்தியாக நமக்குக் காட்டியிருக்கிறார் எழுத்தாளர்.
இந்தத் தொகுப்பின் தலையங்கமும் கடைசிக் கதையுமான “ மிஸ் கிழக்கு வீதி ” என்கிற குறுநாவலில் ஒரு பெண் இருக்கிறாள்; பெண்ணல்ல சிறுமி. பூப்பெய்துகிற பருவமடைந்து விட்ட அந்தச் சிறுமி, அந்த வயதுக்குண்டான உடல் பரிணாமத்தையும் , எதிர் பாலினத்தின் மீதான ஈர்ப்பையும் உணரத் தொடங்குகிறாள். இந்தச் சமயத்தில் அதே காலனியில் உள்ள ஒரு இளைஞனுக்கும் , அந்தச் சிறுமிக்கும் ஏற்படுகிற நெருக்கம், அவர்களுக்குள் வளர்ந்து கனியக் காத்திருக்கும் உடலின்பத்திற்கான அவா, அதற்கான முன்விளையாட்டுகள் என வாசிப்பதற்குக் கொஞ்சம் கிளுகிளுப்பாகவே நகர்கிறது கதை. இயற்கையே ஏற்படுத்தியிருக்கும்
‘ மாதவிடாய் ’ என்கிற ஒரு பெரும் வலியோடு சேர்ந்தே பெண்கள் வறுமை , உளவியல் சிக்கல்கள் உள்ளிட்ட பல பிரச்சனைகளையும் கடக்க வேண்டியிருக்கிறது என்கிற பெண் பிறவியின் எதார்த்ததின் அவலத்தை, அதிலும் குறிப்பாக வறுமையில் உள்ள பெண்களின் நிலையை குறித்த ஆழமான சிந்தனைகளை முடுக்கி விடுவதாக இந்தக் கதை முடிந்திருந்தது.
இப்படி பெண்களின் அந்தரங்கமான, ஆழமான உணர்வுகள் வெளிப்படும் கதைகளாக இந்த இரண்டு கதைகளும் அமைந்திருந்தன.
சமூக அக்கறை வெளிப்படும் கதைகள்
இந்தத் தொகுப்பின் சில கதைகள் ஒப்பீட்டளவில் தொய்வாக இருந்ததாய் உணர்ந்தேன்; மேலும், குறிப்பிட்ட புத்தகத்தில் இடம்பெறும் சில காட்சிகள் அதே பாணியில் இருக்கும் பிரபலமான திரைக் காட்சியையோ வசனத்தையோ நினைவூட்டியிந்தது; மேலும், இந்தப் புத்தகம் முழுக்க கதாபாத்திரங்கள் பேசும் கெட்ட வார்த்தைகள் தணிக்கை செய்யப்பட்டிருந்ததைக் கவனித்தேன். அதன் நோக்கம் எனக்கு விளங்கவில்லை. என் அனுபவத்தில் தணிக்கை செய்யப்பட்டிருந்த அந்தப் பகுதிகளை வாசிக்கையில் அங்கு பொருந்திப் போக சாத்தியம் இருக்கக் கூடிய எல்லாக் கெட்ட வார்த்தைகளும் என மனதில் தோன்றி மறையவே செய்திருந்தன. எனவே, இந்தத் தணிக்கை முயற்சி எனக்கு எந்த வித பலனையும் அளிக்கவில்லை மாறாக அந்தச் சூழலிருந்து ஒரு சிறு விலகலைத் தான் ஏற்படுத்திருந்ததாக உணர்ந்தேன்.
இத்தகு சின்ன சின்ன சிக்கல்கள் இருந்ததே தவிர முழுமையாக இந்தப் புத்தகம் எனக்கு ஒரு நல்ல வாசிப்பனுபவத்தை ஏற்படுத்தித் தந்திருந்தது. மேலும், இந்தத் தொகுப்பில் உள்ள நான் பகிர்ந்து கொண்டுள்ள மற்றும் பகிராத எல்லாக் கதைகளும் எழுத்தாளர் ஷாராஜுக்கு இருக்கும் சமூகத்தின் மீதான அக்கறையை வெளிப்படுத்துவனவாக அமைந்திருந்ததை உணர முடிந்தது. அவ்வகையில் “ மிஸ் கிழக்கு வீதி ” என்கிற இந்தப் புத்தகம் நாம் எல்லோரும் வாசிக்க வேண்டிய ஒரு நல்ல படைப்பு.
