Site icon சொல்வனம் | இதழ் 370 | 12 ஜூலை 2026

புலி வேட்டை

மத்ய ஆப்பிரிக்காவிலுள்ள ‘குஷ்புலாக்கோ’ இனத்தாரின் ‘கஷ்புலாண்டி’ நடனத்தைப்பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையைப் படித்தவர்கள் டாக்டர் ஆதிசேஷனை மறந்திருக்க முடியாது. இக்கட்டுரை தான் டாக்டர் ஆதிசேஷனுக்கு டில்லியில் வெளி உறவு இலக்காவில், மத்ய ஆப்பிரிக்கப் பொதுநலத் தொடர்பு அதிகாரி என்ற பதவியை வாங்கித்தந்தது. அவர் பதவியிலமர்ந்த பிறகு அரசாங்கம் அவரை மறந்து விட்டது. அவர் எங்கே வேலையிலிருக்கிறார் என்பது அவருக்கும் அவர் மனைவிக்கும் மட்டும் தெரிந்த ரகசியம். குஷ்புலாக்கோ இனத்துக்குக் கூடத் தெரிந்திருக்க நியாயமில்லை.

டாக்டர் ஆதிசேஷன், அரசாங்கத்தின் கருணையினால் தமக்குக் கிடைத்த குளிர் சாதனங்களுடன் கூடிய அறையில், தூங்கலாமா, வேண்டாமா என்று தீவிரமாக யோஜித்துக் கொண்டிருந்த வேளையில், அவர் மேஜையிலிருந்து டெலிபோன் ஒலித்தது. அவருக்குப் ‘போன்’ செய்யக்கூடிய நண்பர்கள் யாருமில்லை; மனைவியும் ஊருக்குப் போயிருக்கிறாள். அவர் ஆச்சரியத்துடன் அந்தக் கருவியை சில விநாடிகள் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். அதன் ஒலி அவர் தூக்கத்துக்கு இடையூறு செய்யலாம் என்ற நிலைமை உருவான பிறகு அவர் அதைக் கையிலெடுத்தார்.

”எஸ்… ஆதிசேஷன்.’ பதிலுக்கு வந்த குரலையும், அறிமுகத்தையும் கேட்டு அவர் மின்சாரத்தால் தாக்குண்டதுபோல் திடுக்கிட்டார். மேஜையின் மீது போடப்பட்டிருந்த கால்கள் தாமாகவே கீழே விழுந்தன. அவர் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

‘எஸ்… சார்… எஸ்…’ அவர் குரல் தடுமாறியது.

வெளி உறவு இலாக்கா காரியதரிசி கூப்பிடுவாரென்று அவர் எதிர்பார்க்கவில்லை.

அவரை உடனே வந்து பார்க்கும்படி கூறினார் காரியதரிசி விஷயம் என்னவாகவிருக்கும்? அவருக்கு விளங்கவில்லை.

அவர் போனபோது காரியதரிசி ஏதோ பைல்களை அவசர அவசரமாகப் புரட்டிக்கொண்டிருந்தார். டாக்டர் ஆதிசேஷன் உள்ளே நுழைந்ததும், அவரைப் பார்த்துப் புன்னகை செய்துவிட்டு, நாற்காலியில் உட்காரும்படி கையமர்த்தினார் காரியதரிசி.

‘ஆஷ்டிரே’யில் இருந்த சிகரெட் புகைக்கப்படாமல், சாம்பலாக நீண்டுகொண்டிருந்தது. அங்கு நிலவிய மெளனம் டாக்டர் ஆதிசேஷனைச் சற்றுச் சங்கடத்தில் ஆழ்த்தியது.

‘குஷ்புலாக்கோ இனத்தாரின் கஷ்புலாண்டி நடனத்தைப்பற்றி உங்கள் ஆராய்ச்சிக் கட்டுரையைப் படித்தேன். நன்றாகவிருக்கிறது’ என்றார் காரியதரிசி.

இதைப்பற்றிச் சொல்லவா இவ்வளவு அவசரமாகக் கூப்பிட்டார்? வேறு எதைப்பற்றியோ பேச இது பூர்வ பீடிகை என்று தோன்றிற்று டாக்டர் ஆதிசேஷனுக்கு.

“தாங்ஸ்… என்றார் டாக்டர் ஆதிசேஷன்.

‘மத்ய ஆப்பிரிக்காவுக்கு நீங்கள் போயிருக்கிறீர்களா?’ என்று கேட்டார் காரியதரிசி.

போனதில்லை. மத்ய ஆப்பிரிக்காவைப் பற்றிப் புத்தகங்கள் நிறையப் படித்திருக்கிறேன்…’

‘மோஷலாமே நாட்டைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

‘மத்ய ஆப்பிரிக்காவிலுள்ளது. பிரஞ்சுக் காலனியாக இருந்து வந்தது. சமீபத்தில்தான் சுதந்திரம் கிடைத்தது. மூன்று இனங்கள் உண்டு. குஷ்புலாக்கோ, கருமிக்கோ, சுரபிஷ்டா. ஜனத்தொகை 77675, இரண்டு வருஷங்களுக்கு முன்பு எடுத்த கணக்கின்படி. அரசரின் நூறாவது மனைவிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கின்றன இரண்டு நாட்களுக்கு முன்பு!’

‘வெரிகுட். நீங்கள்தான் நாங்கள் தேடும் ஆசாமி’ என்றார் காரியதரிசி,

‘எதற்கு?…’ டாக்டர் ஆதிசேஷன் கொஞ்சம் நடுங்கினார்.

‘நீங்கள் மோஷ்லாமே நாட்டுக்குப் போகவேண்டும்…’

‘நானா?… இன்னொன்று கூற மறந்துவிட்டேன். மோஷ்லாமே நாட்டின் எல்லைப்புறத்தில் சித்திரக்குள்ள வேட்டைக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மஞ்சள் நிறமான ஊமை நாய்களுடன் இரவுக் காலங்களில் வேட்டையாடுவார்கள். அவ்வினத்துப் பெண்கள், வாயில் இரும்புத்தட்டு அணிந்திருப்பார்கள். நரி மாமிசத்தை ரஸித்துச் சாப்பிடும் பமிட்டோ போனாக்கா என்ற இனத்துக்கும் இவர்களுக்கும்…’

‘ப்ளீஸ்…’ என்று அவரை இடைமறித்தார் காரியதரிசி, ‘புத்தகத்தில் படித்தவற்றை வைத்துக் கொண்டு பயப்படாதீர்கள். உங்களுக்கும் எனக்கும்தான் இங்கு கார் கிடைப்பது கஷ்டமாக விருக்கிறது. ஆப்பிரிக்கர்கள் இன்று ‘இம்பாலாவில்’ போகிறார்கள். பெண்கள் வாயில் இரும்புத்தட்டு அணியவில்லை. ‘லிப்ஸ்டிக்’ போட்டுக்கொள்ளுகிறார்கள்.

 ‘நான் என்ன செய்யவேண்டும்?’ என்று கேட்டார் டாக்டர் ஆதிசேஷன்.

‘மோஷ்லாமே நாட்டிலுள்ள நம் பிரதிநிதியைத் தெரியுமா உங்களுக்கு?…’

“கேள்விப்பட்டிருக்கிறேன். ராஜா பிரதாப் சிங், முன்னாள் அரசர். நல்ல வேட்டைக்காரர்.’

‘அதனால்தான் வந்துள்ளது தொல்லை.’

‘எதனால்?”

‘அவர் வேட்டைக்காரர் என்பதினால். மோஷ்லாமே நாட்டின் எல்லைப்புறக் காடுகளில் ஒரு புலி இருந்தது. அதை அவர் கொன்றுவிட்டார்.’

‘அதனால் என்ன…’

‘இது ஒரு சர்வதேசப் பிரச்னையாகிவிட்டது.’

‘எனக்குப் புரியவில்லையே…’ புலிக்கும் சர்வதேசப் பிரச்னைக்கும் என்ன சம்பந்தமென்று அவருக்கு விளங்கவில்லை.

‘ராஜா பிரதாப் சிங் அனுப்பியுள்ள இந்த ரிப்போர்ட்டைப் படியுங்கள்’ என்று பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்துக்கொடுத்தார் காரியதரிசி. டாக்டர் ஆதிசேஷன் படிக்கத் தொடங்கினார். ‘மோஷ்லாமே நாட்டுக்கு வந்த கத்தோலிக்கப் பாதிரிகள் காட்டிலிருந்த இந்தப் புலியைக் கிறிஸ்துவப் புலியாக்கிப் பிராட்டஸ்டண்டுகளைச் சாப்பிடப் பழக்கி விட்டார்கள். அது சில அமெரிக்கப் பிராட்டஸ்டண்டுகளை ரஸித்துச் சாப்பிடத் தொடங்கிவிட்டது. விஷயம் தெரியாத அமெரிக்கர்கள் இது கம்யூனிஸ்ட் புலியென்று நினைத்து ரஷ்யாவுக்கு ஆட்சேபணைக் குறிப்பு அனுப்பினார்கள். காகிதப் புலி என்று தங்களை நையாண்டி செய்துவந்த சீனர்களின் தொந்தரவைப் பொறுக்க முடியாத ரஷ்யா, கம்யூனிஸ்ட் உலகத்தில் தங்கள் புகழ் மங்காமலிருக்க வேண்டுமென் பதற்காக, இது கம்யூனிஸ்ட் புலிதான் என்று ஒப்புக்கொண்டுவிட்டது. நம்முடைய கூட்டு சேராக் கொள்கையை நிலை நாட்டும் முறையில் இந்தப் புலியைக் கொன்றால் பிரச்னை தீருமென்று நான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டேன்.’

அதைப் படித்து முடித்தபிறகு காரியதரிசியை நோக்கினார் டாக் ஆதிசேஷன்.

‘இங்குதான் நீங்கள் வருகிறீர்கள்…’ என்றார் காரியதரிசி

 ‘எங்கு…? டாக்டர் வருகிறீர்கள்…’ என்றார் காரியதரிசி.

 ‘எங்கு…? டாக்டர் ஆதிசேஷனின் குரல் பலஹீனமாக ஒலித்தது.

‘நமது பிரதிநிதி மேற்கொண்ட நடவடிக்கைக்கு அமெரிக்கர்களின் தூண்டுதல் தான் காரணம் என்று ஒரு குற்றச்சாட்டு வந்திருக்கிறது . இதுபற்றிப் பார்லிமென்டில் கேள்விகள் எழலாம். நாம் முன்ஜாக்கிரதையுடன் இருக்கவேண்டும். ஆப்பிரிக்கப் புலியைக் கொல்லுவதற்கு இந்தியாவுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று பாகிஸ்தான் வேறு பிரசாரம் செய்யத் தொடங்கிவிட்டது. இதனால் கொதித்தெழுந்த மற்றைய ஆப்பிரிக்க நாடுகள் தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ள தொடங்கி விட்டன. கன்யாவில் இருந்து இந்தியர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். மோஷ்லாமே நாட்டோடு நமக்கு உணவு ஒப்பந்தமொன்று கையெழுத்தாக இருக்கிறது . “

‘மோஷ்லாமே நாட்டோடா? அதற்குச் சில மாதங்களுள் முன்புதானே சுதந்திரம் கிடைத்தது? நமக்கு உதவி செய்யக்கூடிய அளவுக்கு அது வளர்ந்துவிட்டதா?”

‘அவர்கள் போடுவதெல்லாம் இடைக்காலத் திட்டம் தானே நம்முடைய திட்டங்கள் நூறு வருஷங்கள் கழித்துப் பயனளிக்கும் அப்பொழுது நாம் உலகத்துக்கே சாப்பாடு போடலாம்…’

கனவை மானசீகமா இருவரும் சிறிது நேரம் வரை பேசவில்லை. உலகத்துக்கே விருந்தளிக்கும் எதிர்காலமாகிய நல்ல அநுபவித்தார்கள்.

‘சரி… இப்பொழுதுள்ள பிரச்னைக்கு வருவோம். நீங்க ஆப்பிரிக்காவுக்குச் சென்று இதுபற்றி விசாரிக்க வேண்டும். நம்முடை பிரதிநிதிகள் செய்கை மோஷ்லாமே நாட்டு மக்களின் உணர்ச்சிகளை எவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது என்பது பற்றியும் ஆராய வேண்டும் நீங்கள் கேட்கும் எந்தக் கேள்விக்கும் நம் பிரதிநிதி பதிலளித்தான் வேண்டுமென்ற உத்தரவு அனுப்ப இருக்கிறோம். ஆனால் கேள்விக் இந்தப் பிரச்னை பற்றியதாக இருக்க வேண்டும். இன்னும் இரண்டு நாட்களில் நீங்கள் புறப்படத் தயாராக இருங்கள்.’ ‘

“இரண்டு நாட்களிலா…?’ என்று கேட்டர் டாக்டர் ஆதிசேஷன்.

“ஆமாம்… உங்கள் விசாரணைக்குரிய விஷயங்களின் வரையறை செயல் திட்டம் இவற்றைப் பற்றிய அதிகாரப் பூர்வமான குறிப்பு தயாராகிக்கொண்டிருக்கிறது. விரைவில் தருகிறேன். நம்முடைய கூட்டுச் சேராக் கொள்கைக்கு எந்தவிதமான பங்கமும் ஏற்படாமல் நீங்கள் நடந்துகொள்ள வேண்டும். மோஷ்லாமே மக்களைப் பற்றி நீங்கள் அறிந்தவர் என்ற காரணத்தினால் உங்களைத் தேர்ந்தெடுத்தோம். இதனால் உங்களுக்கும் ஒரு சௌகர்யமிருக்கிறது…’

‘என்ன சௌகர்யம்… ?’

‘ஆப்பிரிக்காவுக்குப் போகாமலேயே ‘கஷ்புலாண்டி’ நடனத்தைப் பற்றி எழுதிய நீங்கள், போய் வந்த பிறகு எவ்வளவு கட்டுரைகள் எழுதலாம்? ராயல்டி விஷயங்களில் அரசாங்கம் குறுக்கிடாது என்று வாக்குறுதி அளிக்கிறேன்…’

வெளிஉறவு இலாக்கா காரியதரிசி இதைக் கூறிவிட்டு அவருடன் கை குலுக்க எழுந்திருந்தார்.

டுஷ்புலாக்கோ இனத்தின் கஷ்புலாண்டி நடனத்தை இப்பொழுது வெறுத்ததுபோல் டாக்டர் ஆதிசேஷன் எப்பொழுதுமே வெறுத்த தில்லை. அதைப் பற்றி எழுதித் தொலைக்கப்போய் எப்பேர்ப்பட்ட கஷ்டத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறோம்! ராஜா பிரதாப்சிங் எத்தகைய மனிதரென்று அவருக்குத் தெரியாது. எந்தச் சூழ்நிலையில் செல்லு சிறோம், எத்தகைய வரவேற்பை எதிர்பார்க்க முடியும் என்று மட்டும் அவரால் ஊகிக்க முடிந்தது.

அரசாங்கம் அவருக்கு அளித்திருந்த குறிப்பைப் பத்தாவது தடவையாகப் படித்தார் டாக்டர் ஆதிசேஷன். 

1. ‘ராஜா பிரதாப் சிங்குக்கும் அமெரிக்காவுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?’ 

2. ‘புலி இறந்ததில் ரஷ்யாவுக்கு உண்மையாகவே வருத்த முண்டா?’ 

3. ‘கம்யூனிஸ்ட் புலி’ என்பது உண்மைதானா?’ மாஸ்கோ புலியா, பீகிங் புலியா?’ 

4. ‘அது ஆப்பிரிக்கப் புலி என்று மோஷ்லாமே மக்கள் எவ்வளவு தூரம் நம்புகிறார்கள்?’ ‘அவர்கள் உணர்ச்சி எவ்வளவு தூரம் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறது?’

5. ‘நம் கூட்டுச் சேராக் கொள்கைக்கு இதனால் பங்கம் ஏற்பட்டுள்ளதா?’ 

6. ‘மோஷ்லாமேவிலிருந்து நாம் உணவை எதிர் பார்க்க முடியுமா?’ 

7. ‘ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இதனால் ஏற்பட்டுள்ள மனத்தாங்கலைத் தீர்க்க இந்தியா எவ்வளவு தூரம் உதவ முடியும்…?”

அவர் மோஷ்லாமே நாட்டின் தலைநகராகிய மருபக்கே ஷாட்னாவேவைச் சென்றடைந்தபோது நன்றாக இருட்டிவிட்டது. விமான நிலையத்துக்கு, அவரை வரவேற்க ராஜா பிரதாப் சிங் வந்திருந்தார்.

பிரதாப் சிங் இளைஞர். முப்பது வயதுக்குள் இருக்கும். நல்ல கம்பீரமான தோற்றம். அவர் மிக உற்சாகத்துடன் தம்மை வரவேற்கக் கண்டதும், டாக்டர் ஆதிசேஷன் உள்ளம் குறுகுறுத்தது.

ஜீப்பில் ஏறி உட்கார்ந்ததும் பிரதாப் சிங் கேட்டார்: ‘புலியை மீண்டும் உயிர்ப்பிக்க வந்திருக்கிறீர்கள், அப்படித்தானே… ?’

டாக்டர் ஆதிசேஷன் சிரித்தார், பதிலொன்றும் கூறவில்லை.

“அது கிறிஸ்துவப் புலியாகவிருந்தால் சொர்க்கத்துக்குப் போயிருக்க வேண்டும். கம்யூனிஸ்ட் புலியாக இருந்தால் மார்க்ஸிய ‘ரிவிஷனிஸ’த்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும்’ என்றார் பிரதாப் சிங்.

நல்ல மழை பெய்துகொண்டிருந்தது.

‘இங்கெல்லாம் எப்பொழுதுமே மழையோ…?’ என்று கேட்ட டாக்டர் ஆதிசேஷன்.

‘வெரிகுட்… நீங்கள் வெளி உறவு இலாகாவுக்கு ஏற்றவர்தான். புலியைப் பற்றி இன்னும் வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை…’

டாக்டர் ஆதிசேஷன் தம் கைப்பையைத் திறந்து அரசாங்கம் அவருக்குக் கொடுத்திருந்த அந்தக் குறிப்பை எடுத்து அவரிடம் தந்தா

‘இது பற்றி நாம் இப்பொழுது ஒன்றும் விவாதிக்க வேண்ட நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்களோ, சிந்தித்துப் பிறகு சொல்லலாட புத்தகங்களில் படித்துள்ள மத்ய ஆப்பிரிக்காவைப் பார்க்க வேண்டு மென்பதே என் விருப்பம்…’ என்றார் டாக்டர் ஆதிசேஷன்

அந்தக் குறிப்பை வாங்கிப் படித்தார் பிரதாப் சிங். சிறிது நேரம் கழித்து, வாய்விட்டுப் பலமாகச் சிரித்தார்.

‘இந்த மாதிரி சிரித்து மூன்று வருஷங்களாகின்றன’ என்றார் அவர்.

‘நீங்கள் வெளி உறவு இலாக்காவில் வேலைக்கு வந்து எவ்வளவு ஆண்டுகள் ஆகின்றன?’ என்றார் டாக்டர் ஆதிசேஷன்.

‘மூன்று…’ என்றார் பிரதாப் சிங்.

ஜீப் நின்றது.

‘இதுதான் நம் காரியாலயம்’ என்றார் பாரதத்தின் பிரதிநிதி.

அது ஒரு மூன்று மாடிக் கட்டிடம். வெளியே பார்ப்பதற்கும் பெரிதாகத் தோன்றாவிட்டாலும், உள்ளே போன பிறகுதான் அது எவ்வளவு பெரியது என்று உணர்ந்தார் டாக்டர் ஆதிசேஷன்.

அறைக்கு அறை அமெரிக்காவில் கிடைக்கும் அருமையான பொருள்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விசாலமான கூடத்தில், ஆப்பிரிக்கர்களுடைய பூதாகரமான இசைவாத்தியமாகிய ‘டிரம்’கள் வைக்கப்பட்டிருந்தன.

ஆதிசேஷன், ‘நீங்கள் பெரிய கலைஞர் என்று நினைக்கிறேன்’ என்றார் டாக்டர்

பிரதாப் சிங் பதில் கூறவில்லை. தோள்களைக் குலுக்கிக் கொண்டு புன்னகை செய்தார்.

‘நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள்…?’

“நானா?… நான் ஒண்டிக்கட்டைதானே! இங்கேயேதானிருக் கிறேன்…!” என்றார் பிரதாப் சிங்.

சூடான கோக்கோ வந்தது.

‘இந்த மாதிரியான கோக்கோ நீங்கள் எங்குமே சாப்பிட்டிருக்க முடியாது’ என்றார் பிரதாப் சிங்.

அதைப் பருகிய டாக்டர் ஆதிசேஷன் கூறினார். ‘நீங்கள் சொன்னது மிகையில்லை…

டாக்டர் ஆதிசேஷனுக்கு மோஷ்லாமேவைச் சுற்றிப் பார்ப்பதிலேயே மூன்று நாட்கள் கழிந்தன. போன இடங்களைப் பற்றியெல்லாம் குறிப்புக்கள் எடுத்துக்கொண்டார். அவர் ஆராய்ச்சி செய்த கஷ்புலாண்டி நடனம் மோஷ்லாமேவில் இப்பொழுது ஆடப்படுவதில்லையென்றும் நியூயார்க்கில் ‘நைட் கிளப்பில்’தான் ஆடப்படுகின்றதென்பதை அறிந்தார்.

நூறு மனைவிகளை மணந்திருந்தும் மோஷ்லாமாவின் அரசர் முக்ருமா மிகுந்த உற்சாகத்தோடு காணப்பட்டார். அவருடைய நூறாவது மனைவி கலிபோர்னியாவைச் சேர்ந்த மாஜனி, அழகு ராணி. அவளுடைய ஆப்பிரிக்க உடையணிந்த புகைப்படங்கள் பத்திரிகை களில் தினந்தோறும் வந்தன. இரட்டைப் பிரசவம் அவளுடைய அந்தஸ்தை சமூகத்தில் இன்னும் உயர்த்திக் காட்டியது.

வந்த விவகாரத்தை மறந்து மத்ய ஆப்ரிக்காவைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த டாக்டர் ஆதிசேஷனிடம், ராஜா பிரதாப் சிங் ஒரு நாள் கூறினார். ‘நீங்கள் என்னிடம் அன்று கொடுத்தீர்களே அரசாங்கக் குறிப்பு, அதுபற்றிப் பேச வேண்டாமா?’

‘நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டார் டாக்டர் ஆதிசேஷன்.

‘அமெரிக்காவுக்கும் எனக்கும் என்ன தொடர்பு என்பது முதல் பிரச்னை… அப்படித்தானே?…

‘அமெரிக்கா, அந்தப் புலியைக் கொல்லுமாறு உங்களைத் தூண்டிற்றா?… இதுதான் அந்தக் கேள்வியின் அர்த்தம்…’என்றார் டாக்டர் ஆதிசேஷன்.

‘அமெரிக்காதான் தூண்டிற்று…’ என்றார் பிரதாப் சிங்.

டாக்டர் ஆதிசேஷன் திடுக்கிட்டார். ‘அப்படியே தான் சொல்லப் போகின்றீர்களா?…’

‘ஆமாம்…’

‘இது விசாரணையே இல்லை. நேரடியாக நீங்கள் உண்மையை ஒப்புக்கொண்டு விட்டால், கேள்வி கேட்டு உங்களை மடக்கும் என் சாமர்த்தியம் என்றாவது?…’

‘இதோ பாருங்கள்…’ என்று கையிலிருந்த ஒரு பத்திரிகையில் காணப்பட்ட செய்தியைச் சுட்டிக் காண்பித்தார் பிரதாப் சிங்.

அது அமெரிக்கப் பத்திரிகை.

வண்ணம் கம்யூனிஸ்ட் புலியைச் சுட்ட பாரதத்தின் பிரதிநிதி 11181 ‘சுதந்திர உலகத்தின் (free world) அபிலாஷையைத் தெரிவிக்கும் பிரதாப் சிங்கின் மீது பாரத சர்க்கார் நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்திருப்பதாகச் செய்தி வந்துள்ளது, இதுபற்றி அபிப்பிராயம் தெரிவித்த ரிபப்ளிகன் செனட்டர் மக்கார்த்தி, பாரதத்துக்கு உணவு உதன் செய்வதை அமெரிக்க அதிபர் உடனே நிறுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார். உணவு மசோதாவை அதிபர் தம் விருப்பப்படி நிறைவேற்ற முடியாது என்பதற்கான அறிகுறிகள் தோன்றுகின்றன.

‘விஷயம் என்ன இப்படி முற்றிவிட்டது…?’

‘இது என் தவறு இல்லை. பார்லிமென்டில் இதுபற்றிக் கேள்வி எழுந்தபோது பாரதப் பிரதிநிதி மீது நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகின்றது என்று மந்திரி கூறிவிட்டார். கேள்வி கேட்டவர் ஒரு கம்யூனிஸ்ட். ரஷ்யாவின் ஒத்துழைப்போடு ஒரு கனரகத் தொழிற்சாலை நிறுவுவதற்காகப் பேச்சு வார்த்தைகள் நம்நாட்டில் நிகழ்ந்து வந்தன. மந்திரியின் இந்த அறிக்கைக்குப் பிறகு ஒப்பந்தம் உடனே கையெழுத்தாகிவிட்டது. இந்த அறிக்கையைப் படித்த அமெரிக்கர்கள், குறிப்பாக மக்கார்த்திகள் இப்பொழுது கூச்சல்போட ஆரம்பித்துவிட்டார்கள்…”

‘இப்பொழுது நீங்கள் அமெரிக்காவின் தூண்டுதலின் காரணமாகப் புலியைக் கொன்றேன் என்று ஒப்புக்கொண்டீர்களானால்… உங்களு டைய எதிர்காலத்தைப் பற்றிக் கவலையில்லையா?…’

“பாரதத்துக்கு உணவு கிடைக்கவேண்டுமானால் நான் ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும். நீங்கள் உங்களுடைய கடமையாகிய விஜாரணையை நடத்தித்தான் ஆகவேண்டும். பிறகு எனக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பு இருக்கின்றது என்று சந்தேகப்படுவதற்கான காரணங்கள் இருக்கின்றன என்று கூறவேண்டும். உங்களுடைய விஜாரணையின் அடிப்படையில் பாரத அரசாங்கம் என் மீது நடவடிக்கை எடுக்கும்…’

‘நீங்கள் சொல்வது புரியவில்லையே, இதனால் நமக்கு உணவு எப்படிக் கிடைக்கும்?’

‘உங்களுடைய நிர்தாட்சண்யமான விஜாரணை பற்றிப் பலமான பிரசாரம் செய்யப்படும். மத்ய ஆப்பிரிக்காவின் கலாச்சார சரித்திரத்தில் உங்களுக்குள்ள அக்கறைபற்றி அரசாங்க ஆதரவுடன் பலர் கட்டுரையை இருக்கும்படி அரசாக்க ட் பதிவு ால உங்களையே இங்கு பிரதிநிதியாக உத்தரவு வரும்…’

‘நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?…’

‘நடக்கப் போவதை… புலி விவகாரத்தை ரஷ்யா மறந்துவிடும். ஆப்பிரிக்காவின் தேசியம் காப்பாற்றப்படும். அரசாங்கம் என்னை பாரதத்துக்குத் திருப்பி அழைத்துக்கொள்ளும்…’

‘அமெரிக்காவின் உணவு உதவி எப்படிக் கிடைக்கும் என்று நீங்கள் சொல்லவில்லையே…’

‘அமெரிக்காவுக்குப் பாரதத்தின் பிரதிநிதியாக நான் செல்வேன்… கம்யூனிஸ்ட் புலியைச் சுட்ட வீரனல்லவா?’ என்றார் ராஜா பிரதாப் சிங் புன் முறுவலுடன்.

‘என்ன?… ஜோஸ்யமா இது?…’ என்று கேட்டார் டாக்டர்

ஆதிசேஷன்.

‘இது அரசாங்கம் மேற்கொண்டுள்ள முடிவு. பாரதத்தின் கூட்டு சேராக் கொள்கை காப்பாற்றப்பட வேண்டுமென்றால், பாரதத்துக்கு உணவு உதவி கிடைக்க வேண்டுமென்றால்… இப்படித்தான் செய்ய வேண்டும். இது என் திட்டம். அரசாங்கம் அங்கீகரித்து விட்டது… கன ரசுத் தொழிற்சாலைக்கான ஒப்பந்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது. இனி வேண்டுவது உணவுதானே!’

டாக்டர் ஆதிசேஷன் தம் கையிலிருந்த அரசாங்கக் குறிப்பைக் கிழித்தெறிந்தார். அவர் முகத்தில் குறுநகை நிழலாடியது.

‘நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்று சொல்லட்டுமா?…” என்றார்… பிரதாப் சிங்.

‘சொல்லுங்கள்.’

‘எவ்வளவு புத்தகங்கள் எழுதலாம். எவ்வளவு ராயல்டி கிடைக்குமென்று…

‘யூ ஆர் எ டெவில்… ‘ என்றார் டாக்டர் ஆதிசேஷன் மகிழ்ச்சிப் பெருக்குடன்.

Exit mobile version